9 Nov 2020

நாட்டு நடப்புகள்

நாட்டு நடப்புகள்

            கூடிய விரைவில் தனியார் ரயில்களைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். பேருந்துகளில் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் என்ற வேறுபாடு இருப்பது போல பிறகு ரயில்களிலும் வேறுபாடு வந்து விடும். அதன் பிறகு மக்கள் அநேகமாகத் தனியார் பேருந்துகளை அதிகம் நாடுவதைப் போல தனியார் ரயில்களை நாடுவார்கள். அரசாங்க ரயில்கள் போல சிக்கு புக்கு சத்தத்தோடு அல்லாமல் இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் பாடல்களோடு தனியார் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு பேருந்துக்கு இரண்டு நடத்துநர்களையெல்லாம் தனியார் பேருந்துகளில்தான் பார்க்கலாம். அதே போல ஒரு ரயில் பெட்டிக்கு ஒரு பயணச்சீட்டுப் பரிசோதகரைத் தனியார் ரயில்கள் வந்தால் பார்க்கலாம். ஒரு தண்டவாளத்தில் ஒரு ரயில் மட்டும்தான் ஓட முடியும் என்பதால் தனியார் ரயில்கள் அரசாங்க ரயில்களை முந்திக் கொண்டு செல்ல வாய்ப்பில்லை. சாலைகளில் பெரும்பாலும் அதுதான் நடக்கிறது, அரசாங்கப் பேருந்துகளை முந்திக் கொண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருக்கின்றன. இது போல் இன்னும் நிறைய நடக்கலாம். தனியார் ரயில்கள் ஓடத் துவங்கிய பிறகு அதைப் பார்க்கலாம்.

 

*****

 

            புதிதாக என்னைப் பார்க்கும் அனைவரும் என்னைப் பற்றித் தெரிந்து கொண்டதும் முன் வைக்கும் முதல் கேள்வி, “புத்தகம் போடலாமே?”என்பதுதான். போடலாம்தான். பத்து பேர் வாங்கிப் படிப்பதற்கெல்லாம் புத்தகம் போட முடியுமா? புத்தகத்தில் போடுவதை அப்படியே இணையதளத்தில் போடுவதால் நூறு அல்லது நூற்றைம்பது பேர் வரை படிக்கிறார்கள். புத்தகம் போடும் செலவும் மிச்சமாகிறது. அதில் நான்கு புத்தகங்களை வாங்கிப் படிக்க முடிகிறது. இப்போது பி.டி.எப்., இபப், கிண்டில் என்று வந்து விட்ட பிறகு யாரும் அதிகமாகப் புத்தகங்களை வாங்குவதில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பவர்களும், போட்டித் தேர்வுகளுக்காகப் படிப்பவர்களும் வேறு வழியில்லாமல் புத்தகங்களை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  கூடிய சீக்கிரம் அவர்களும் மின்னூல் வடிவத்துக்கு மாறி விடுவார்கள். பை நிறைய மூட்டையைப் போல புத்தகங்களைச் சுமக்கும் நிலை ஏற்படாது. குழந்தைகளும் பள்ளிகளுக்குப் பளு தூக்கும் வீரர்களைப் போன்று புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

 

*****

 

            நாட்டில் செய்தித்தாள்கள் வாங்காமல் போனால் எடைக்குப் போடும் பழைய செய்தித்தாள்களின் விலை இவ்வளவு விலை அதிகரிக்கும் என்று நான் நினைக்கவில்லை. பழைய தமிழ் செய்தித்தாள்கள் என்றால் கிலோ விலை முப்பது ரூபாய். அதுவே ஆங்கில பழைய செய்தித்தாள்கள் என்றால் கிலோ விலை நாற்பத்தைந்து. தமிழை விட ஆங்கிலம் பதினைந்து விலை கூடுதல். எல்லாவற்றிற்கும் கொரோனாவைக் காரணம் சொல்கிறார்கள். இதென்னவோ வெங்காய விலையேற்றத்தைப் போல ஒரு மோசமான விலையேற்றமாகப் படுகிறது. இப்போது அன்றாட செய்தித்தாள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. வாங்கிப் படிப்பவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். வாட்ஸப்பிலும், டெலிகிராமிலும் செய்தித்தாள்கள் பி.டி.எப்.ஆக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. அதைப் பதிவிறக்கம் செய்து தங்களுக்குப் பிடித்தமான அல்லது தேவையான செய்திகளைப் படித்துக் கொண்டு அப்படியே அழித்து விடுகிறார்கள். செய்தித்தாள்களைப் படித்து விட்டு அதை எடைக்குப் போட பத்திரமாக எடுத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. தங்களுக்குத் தேவையான முக்கியமான விசயங்களை அப்படியே ஒரு Screen Shot. அவ்வளவுதான் விசயம் முடிந்து விட்டது. அப்படி ஒவ்வொருவரின் கைபேசியிலும் ஏகப்பட்ட Screen Shotகள் இருக்கும். செய்தித்தாள் என்றால் வெட்டி ஒட்டி சேகரம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

 

*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...