18 Nov 2020

சமரசத்தோடு உலாவும் மனுஷர்!

சமரசத்தோடு உலாவும் மனுஷர்!

செய்யு - 629

            வீயெம் மாமா வந்துட்டுப் போன மறுநாளு விடிஞ்சும் விடியாதுதமா இன்னொரு ஆளு வந்து நின்னாரு. பாக்குக்கோட்டையிலேந்து வந்திருப்பாரு போல. ஆளு பாக்குறதுக்கு கருப்பா தொப்பையா இருந்தாரு. முடிய எண்ணெய்ய நெறைய வுட்டு படிய வாரியிருந்தாரு. நெத்தியில எண்ணெய் வழிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நெத்தியில சந்தனப்பொட்டு வெச்சி நடுவுல சின்னதா குங்குமம் வெச்சிருந்தாரு. வெள்ளையும் சொள்ளையுமா உடுத்தியிருந்தாரு. சட்டைப்பையில சின்னதா ஓரஞ் சிதைஞ்சு கிழிஞ்சாப்புல இருந்த டைரி பிதுக்கிக்கிட்டு இருந்துச்சு. கையில ஒரு தோல்ல செய்யப்பட்ட ஹேண்ட்பேக்க வெச்சிருந்தாரு. வேட்டியைக் கட்டி அவரு போட்டிருந்த பச்சை பெல்ட்டு சட்டெ வழியா நல்லாவே வெளிய தெரிஞ்சிது. சட்டை அந்த அளவுக்கு மெல்லிசா அவரு உள்ளார போட்டிருந்த கை வெச்ச பனியன வரைக்கும் வெளியில காட்டுன்னுச்சு. வயசு நாப்பதஞ்சும் அம்பதுக்கும் இடையில இருக்கணும்.

            தன்னை ‘பழைய பரமசிவம்’ன்னு அறிமுகம் பண்ணிக்கிட்டாரு அந்த ஆளு. காலம் எம்புட்டோ மாறுனாலும் இன்னிக்கும் பழைமை மாறாம இருக்குறதால அவர்ர ‘பழைய பரமசிவம்’ன்னு சனங்க கூப்புடப் போயி அப்பிடியே பரமசிவம்ங்ற பேரோட பழையங்ற வார்த்தெ ஒட்டிக்கிட்டதா சொன்னாரு. பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவோட குடும்பம் அறிஞ்ச குடும்பம்ன்னும் கலியாணத்தப்போ சுப்பு வாத்தியாரு உட்பட குடும்பம் முழுசையும் பாத்திருக்கிறதாவும் சொன்னாரு. பாக்குக்கோட்டையில கட்சியில பெரிய ஆளுன்னும் ஒரு பெரச்சனென்னு வந்தா சமாதானம் பண்ணிப் பேசி வுடுறதுல கில்லாடின்னும் தன்னைப் பத்தித் தானே சொல்லிக்கிட்டாரு. அப்பிடியே மெதுவா விசயத்துக்கு வந்தாரு. புள்ளையக் கிள்ளி விட்டு தொட்டிய ஆட்டலாம்னு வந்தவேம் எவ்வளவு நேரம் அந்த படிக்கே நிப்பாம் சொல்லுங்க.

            "ரண்டு குடும்பமும் இப்பிடி நிக்கும்ன்னு எதிர்பாக்கலங்கய்யா! நிக்குதே! அதாங் கோலம்! ஆனது ஆயிப் போச்சு! அதுக்காக கோர்ட்லப் போயா நாமெல்லாம் நிக்குறது? அத்து நாம்ம நிக்கக் கூடிய எடங் கெடையாதுங்கய்யா! ரண்டு குடும்பத்தையும் பத்தி நமக்குத் தெரியுதுங்றதால சொல்றேம்! வேறெதும் நெனைச்சிக்கிப்படாது!"ன்னாரு பழைய பரமசிவம் பீடிகைய சோடிகையா.

            "வக்கீல் நோட்டீஸ நாஞ்ஞ அனுப்பல. அத்து வந்தப் பெறவு நாம்ம எதுவும் பண்ணாமலும் இருக்க முடியாது. பதிலுக்கு ஒரு நோட்டீஸ அனுப்பியாச்சு. அதாங் நடந்தது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அந்தப் பீடிகைக்கு நேரடியாவே பதிலச் சொல்றாப்புல.

            "வாஸ்தவந்தாம். தப்புச் சொல்ல முடியாது. வெசயத்துக்கு நேராவே வந்துப்புட்டீயே. இதுல என்னான்னா இத்தோட நிறுத்திக்கிடணும் இதெ, மெம்மேலும் அதெப் போட்டு நரகல்ல மிதிச்சி, அதெ கையில எடுத்துப் பாத்து, மூக்குல மோந்துப் பாத்து, நாக்குல வெச்சக் கதெயா ஆயிடக் கூடாது பாருங்க அதுக்குச் சொல்றேம். அதெல்லாம் அசிங்கம்ங்ய்யா! கோர்ட்டு கேஸூன்னுப் போயி அத்து நீஞ்ஞ நிக்க வேண்டிய எடமெ கெடையாது. அத்து கொலை பண்ணுனவேம், கற்பழிச்சவேம், கொள்ளையடிச்சவேம், மொள்ளமாரி, முடிச்சவிக்கின்னு நாதாரிப் பயலுவோ வந்துட்டுப் போற எடம்ங்றேம். அந்த எடம் நமக்கெதுக்கு? அஞ்ஞப் போயி அசிங்கம் பிடிச்சத் தனமா நாம்ம ஏம் நின்னுக்கிட்டுங்றேம்? நாமெல்லாம் கெளரவமான குடும்பத்தெச் சார்ந்தவங்கய்யா! அத்து நமக்குத் தெரியும். நல்லாவே தெரியும். அதுக்குத் தகுந்தாப்புல நாமெல்லாம் இருக்கிடணும்யா!"ன்னாரு பழைய பரமசிவம் சால்சாஜ்ப்பா கொண்டு போறாப்புல.

            "அப்பிடின்னா அவுங்க வக்கீல் நோட்டீஸே அனுப்பிச்சிருக்கக் கூடாது. பஞ்சாயத்தும் வெச்சிருக்கக் கூடாது. சொந்தப் பந்தத்துலயே வெச்சு பேசிக்கிட்டு கோர்ட்ல வெவாகரத்தெ போட்டதோட நிப்பாட்டிக்கிடணும்! அதெ செய்யலையே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பட்டுன்னு மொகத்துல அடிச்சாப்புல.

            "பஞ்சாயத்து, வக்கீல் நோட்டீஸ்லாம் மனசெ ரொம்ப பாதிச்சிருக்கு ஒஞ்ஞளுக்கு. அதெல்லாம் உண்மெ கெடையாது!"ன்னாரு பழைய பரமசிவம் சுப்பு வாத்தியார்ரே ஆறுதல் பண்ணித் தேத்துறாப்புல.

            "எத்து உண்மெ கெடையாது? பஞ்சாயத்தா? அதுல நின்னு அனுபவிச்சிப் பாத்தா தெரியும் ஒஞ்ஞளுக்கு. வக்கீல் நோட்டீஸா உண்மெ கெடையாது? யிப்போ எடுத்தாந்துக் காட்டவா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பழைய பரமசிவத்து அசமடங்காததப் போல.

            "அய்யா! புரிஞ்சிக்கிடாமப் பேசுதீயே? இதாங் பெரச்சனெ. நாம்ம ஆயிரம் பஞ்சாயத்தப் பாத்தவேம். இதாங் நமக்குப் பொழைப்புன்னே வெச்சிக்குங்களேம். நாம்ம அடிச்சிச் சொல்றேம் எந்தப் பஞ்சாயத்து உண்மையே கெடையாது. ஆளாளுக்கு ஒண்ணுத்தெப் பேசுவாம். நல்லா இருக்குறவனெ கெடுத்து வுட்டுப்புடுவாம். கெட்டுப் போறவனெ நல்ல வெதமா தூக்கி வுட்டுப்புடுவானுவோ. இதாங் நடக்குறது பஞ்சாயத்துல. மொத மொதலா பஞ்சாயத்தெ பாத்ததால மெரண்டு இருப்பீயே. அதெல்லாம் தூக்கி அந்தாண்டப் போடுங்க!"ன்னாரு பழைய பரமசிவம் நெத்தியடியா பேசுறுப்புல.

            "ஏம்ய்யா நீஞ்ஞ சொல்றீயேங்றதுக்காக நெதமும் பஞ்சாயத்தெப் பாத்துக்கிட்டுக் கெடக்க முடியுமா? எஞ்ஞ பொழைப்பு ன்னா ஆவுறது? யில்ல அதாங் எஞ்ஞளுக்குப் பொழப்பான்னு கேக்குறேம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பதிலுக்குப் பதில் சீறுறாப்புல.

            "ஆத்திரப்பட்டா எப்பூடி? நாம்ம என்னத்தெ சொல்ல? சித்தெ அசமடங்குங்க. எல்லாம் ஒருத்தருக்கொருத்தரு பணிஞ்சி வருவீயான்னு பாக்குறதுக்காக பண்ணுற நாடகந்தாம். பாச்சா காட்டுற வேலத்தாம். பாச்சா நாடகத்தெப் போயி நெசம்ன்னு நெனைச்சிக்கிட்டு ஏமாந்துப்புடக் கூடாது பாருங்க. இப்போ அவுங்க வக்கீல் நோட்டீஸ் அனுப்புனாங்க. அத்தனையும் உண்மையா கேக்குறேம்? வக்கீல்கிட்டெ போயி ஐநூத்து ரூவா காசியக் கொடுத்தாம் போதும். அவ்வேம் உண்மென்னும் பாக்க மாட்டாம், பொய்யின்னும் பாக்க மாட்டாம். அவ்வேம் பாட்டுக்கு ஒரு நோட்டீஸ தயாரு பண்ணி அனுப்பிச்சிட்டுப் போயிட்டே இருப்பாம். அவ்வேம் பொழப்பு அத்து. அவனெ குத்தம் சொல்ல முடியாது. நீஞ்ஞ அனுப்புன வக்கீல் நோட்டீஸையும் எடுத்துக்கிடுங்க. அத்துதாம் உண்மையா? கெடையாது. வக்கீல் நோட்டீஸ்ன்னா அப்பிடித்தாம். நோட்டீஸே இப்பிடின்னா கேஸ்ன்னு வந்தா எப்பிடி இருக்கும் பாத்துக்குங்க! இஞ்ஞ எல்லாமே டூப்புத்தாம். அதுக்குத்தாம் கெளரவத்துக்காக சிலவெ பண்ணிட்டுக் கெடக்க வேண்டியதா இருக்கு. யாரு வூட்டுக் காசிப் போவுது சொல்லுங்க? நம்ம வூட்டுக் காசித்தாம்! ஏம் இத்துன்னு கேக்குறேம்?"ன்னாரு பழைய பரமசிவம் நாசுக்கா சொல்றாப்புல.

            "நல்லா பேசுதீயே! பெறவு ஏம் நாட்டுல கோர்ட்டு, ஸ்டேசன்லாம் வெச்சிருக்காம் கேக்குறேம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பழைய பரமசிவத்த மடக்குறாப்புல.

            "அதல்லாம் இருக்குந்தாம். பிரிட்டீஷ்க்கார்ரேம் பண்ண ஏற்பாடு. பிரிட்டீஷ்காரனுக்கு மின்னாடி இப்படில்லாம் கெடையாதுங்றேம். நல்ல குடும்பத்துலப் பொறந்த நமக்கு எதுக்குங்றேம்? அவுங்க ஆம்பளப் புள்ளைய வெச்சிருக்காங்க. ஒரு பெரச்சனையும் கெடையாது. அத்து வுட்டுப்புட்டு இன்னொரு குட்டியக் கட்டி வெச்சிட்டுப் போயிட்டே இருப்பாங்க. நீஞ்ஞ பொம்பளப் புள்ளைய பெத்து வெச்சிருக்கீயே!‍ நெனைச்சிப் பாருங்க. இதுக்கு இனுமே மறுகலியாணம் பண்ணி, சாமானியா அத்து? அதாங் சொல்றேம். கமுக்கமா முடிச்சிகிட்டா கமுக்கமாவே எனாச்சும் ஒரு ஏமாந்தப் பயலப் பாத்து தலையில கட்டி வுட்டுப்புட்டுப் போயிட்டே இருக்கலாம். யில்ல கோர்ட்டு கேஸ்ன்னுப் போனா அத்து நாடறிஞ்ச விசயமாயிடும். ஒரு பயலும் கல்யாணம் கட்டிக்கன்னு வர்ற மாட்டாம். மறுபடியும் சொல்றேம், அவுங்க ஆம்பளப் புள்ளைய வெச்சிருக்காங்க. ஒரு பெரச்சனையும் கெடையாது. நீஞ்ஞ பொம்பளப் புள்ளைய வெச்சிருக்கீங்க. வயித்து நெருப்ப கட்டி வெச்சிருக்கிற மாதிரி. பெரச்சனைன்னு வந்தா நாறிடுவீங்க. நாம்ம ஒரு ஆளு ரண்டு குடும்பத்துக்கும் எடையில இருக்குற வரைக்கும் அத்து வாணாம். அதுக்குத்தாம் கெடக்குற வேல சோலிகளப் போட்டுப்புட்டு நீஞ்ஞ ஒரு தப்பான முடிவுக்குப் போயிடக் கூடாதுன்னு பொழுது விடியறதுக்கு மின்னாடி ஒஞ்ஞ வூட்டுக்கு மின்னாடி கெடக்கறேம் பாத்துக்குங்க!"ன்னாரு பழைய பரமசிவம் மெரட்டுறாப்புலயம் கொழையுறாப்புலயும்.

            திடீர்ன்னு என்னாச்சுதோ தெரியல. சுப்பு வாத்தியாரு குரலு இப்போ கம்மிட்டு. "நகெ நட்டு, பணங்காசியக் கொடுத்தா முடிச்சிக்கிடலாம்!"ன்னாரு சன்னமா ஒடைஞ்சிப் போன குரல்ல.

            "இப்பத்தாங்கய்யா வெசயத்த கப்புன்னு பிடிச்சிருக்கீங்க. வாத்தியாருங்றதெ நிரூபிச்சிருக்கீங்க. நாம்மல்லாம் அனுபவிச்சிப் பாடத்தெ கத்துக்கிடக் கூடாது. மித்தவங்க அனுபவத்துலேந்து பாடத்தெ கத்துக்கிடணும். அதான்னே வாத்தியார்ங்றது. நாம்ம சொன்ன சொல்லுலேந்து பாடத்தெ கத்துக்கிட்டீங்க பாருங்க. அதுக்கே ஒரு சபாஷ்ஷச் சொல்றேம். சந்தோஷம். அதுக்கு அவுங்க தயாராவே இருக்காங்க. நகெ ஒரு முப்பத்தஞ்சு சவரன், பணங்காசி ஒரு மூணரை லட்சத்தெ கையில எடுத்து வெச்சிக்கிட்டு எப்படா கொடுக்கலாம்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்காங்க. சொன்னீயன்னா இப்போ ஒடனே போன போட்டு அடுத்த ரண்டு மணி நேரத்துக்குள்ள கார்ல கொண்டாரச் சொல்லிடுவேம். அப்பிடியே ஒரு பத்திரத்துல வெவரத்தெ எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்துப்புட்டா வேல முடிஞ்சிடும். அவுங்கள வுட்டெ வெவாகரத்து வழக்கப் போட்டு வுடச் சொல்றேம். நீஞ்ஞ வக்கீலு கூட வெச்சிக்கிட வேண்டியதில்ல. ஒரு நாலு தடவெ மட்டும் கோர்ட்டுல கூப்புடுறப்போ வந்து நின்னு ஆமாஞ் சாமி போட்டா போதும். எந்தப் பேச்சோ, வெசாரணையோ யில்லாம நாகரிகமாக முடிச்சி வுட வேண்டியது நம்மடப் பொறுப்பு. இந்தக் காலத்துல இப்பிடி எவனும் எறங்கி வர்றது கெடையாது. அதாங் அந்தப் பக்கமும் நாகரிகமான குடும்பம், இந்தப் பக்கமும் நாகரிகமான குடும்பம்ன்னு சொல்றது நாம்ம. கலியாணத்தப் பண்ணி வெச்சீங்க. பொண்ணு புள்ளீக்குப் பிடிக்கல. அவ்வளவுதாங். நாசுக்கா ஒதுங்கிக்கிறீயே. இதெ ஒரு கெட்ட கனவா நெனைச்சி மறந்துப்புடுங்க. நீஞ்ஞளும் பொண்ணுக்கு வேற ஒரு எடத்துல பாத்து முடிச்சிக்குங்க. அவுங்களும் பையனுக்கு வேற ஒரு எடத்துல பாத்து முடிச்சிக்கிட்டும். ரண்டும் நல்ல வெதமா இருந்துட்டுப் போவட்டும். ன்னா நாம்ம சொல்றது?"ன்னாரு பழைய பரமசிவம் ரொம்ப நைச்சியமா நையம் பாடுனாப்புல.

            சுப்பு வாத்தியாரு நெத்தியச் சுருக்கி யோசிக்க ஆரம்பிச்சாரு. பதிலு எதையும் சொல்லாம்ம ஆழ்ந்த நெனைப்புல மூழ்கிப் போனாரு. சுப்பு வாத்தியாரோட மன ஓட்டத்தெப் புரிஞ்சிக்கிட்டாப்புல பழைய பரமசிவமே பேச ஆரம்பிச்சாரு. "நகெ நட்டு, பணங்காசின்னு இன்னும் கொடுக்கத்தாம் அந்தத் தரப்புல ஆசெ. சட்டியில இருந்தாத்தான்னே அகப்பையில வரும். கையில தம்புடி யில்ல. அதாங் வெசயம்!"ன்னாரு பாருங்க பழைய பரமசிவம், சுப்பு வாத்தியாருக்கு இப்போ யோசனெ கலைஞ்சிக் கோவம் வந்துப்புடுச்சு.

            "எவ்வேம் வூட்டுக் காசிய எவ்வேம் வெச்சிக்கிட்டுத் தம்புடி இல்லன்னா ன்னா அர்த்தங்றேம்? என்னவோ சொந்தக் கைக்காசிய வெச்சிக்கிட்டு பிச்செ போடுறாப்புலல்லா இருக்குது? பூரா எங் காசியில அவனுவோ பொண்ண கட்டிக் கொடுத்த கடனெ அடைச்சிப்புட்டு, இன்னொரு பொண்ணுக்காக ஒரு கொலையப் பண்ணிட்டு அதுக்குக் காசியச் செலவழிச்சிப்புட்டு, இதாங் மிச்சமிருக்கு இதெ எடுத்துக்கிட்டு ஓடிப் போயிடுன்னு சொல்றதெல்லாம் ஞாயம் கெடையாதுங்கய்யா! அதுக்குப் பேரு மெரட்டுறது. ரொம்ப சாமர்த்தியமாவும் நைச்சியமாவும் மெரட்டுறது. நூத்து சவரன் நகெயில பாதியா அம்பது கூட வாராதுன்னா, காருக்குப் பத்து, கலியாணத்துக்கு எட்டுன்னு கொடுத்து பதினெட்டு லட்சத்துல ஆறுல ஒரு பங்கா மூணரைத்தாம் வரும்ன்னா ன்னா கணக்கு இதெல்லாம்? ன்னா ஞாயம் இதெல்லாம்? இப்பிடித்தாம் பல எடங்கள்ல பஞ்சாயத்தெ பேசிட்டு ஞாயம் பண்ணி வுடுறீயளா நீஞ்ஞ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொதிச்சுப் போயி.

            அதெ கேட்டதும் பழையப் பரமசிவத்துக்கும் கோவம் வந்துப்புடுச்சு. "சமாதானம் பண்ணி வுடுறதுக்குன்னு வந்திருக்கிற நம்ம மேல கோவப்படுறதுல அர்த்தம் இல்ல. நமக்குப் பொருத்த மட்டில ரண்டு பேத்தும் பொதுவுதாம். அவுங்க சொன்னதெ நாம்ம சொல்றேம். நமக்கென்ன தெரியும் நீஞ்ஞ செஞ்சது கொண்டதெல்லாம்? எனக்கென்ன வந்துக் கெடக்கு ஒஞ்ஞகிட்டெ பேச்சு வாங்கிக் கட்டிக்கிணும், ஒஞ்ஞ வூட்டுல வந்து அசிங்கப்படணும்ன்னு? ஒத்து வந்தா சொல்லுங்க! ஒத்த வரலயா ஆளெ வுடுங்க. கெளம்புறேம்!"ன்னாரு பழைய பரமசிவம் பாச்சா காட்டுறாப்புல.

            சுப்பு வாத்தியாரு நாற்காலிய வுட்டு எழுந்திரிச்சாரு. பழைய பரமசிவத்தப் பாத்து ஒரு கும்புடப் போட்டாரு. "மொதல்ல கெளம்புங்க!"ன்னு அழுத்தமா சொல்லிட்டு அவர்ரே மொறைச்சிப் பாத்தாரு.

            ஆனா, பழைய பரமசிவம் நாற்காலிய வுட்டு எழுந்திரிக்கவும் இல்ல. இப்படி சுப்பு வாத்தியாரு பேசுவாருன்னு எதிர்பாக்கல போல. அவரு வெளியில கெளம்பவும் இல்ல. அவரோட மொகத்துல கோவம் மறைஞ்சி ஒரு சாந்தம் வந்துச்சு. "இப்பிடில்லாம் எடுத்தேம் கவுத்தோம்ன்னு பேசுனா எப்பூடீ?"ன்ன பேசி எறங்கி வர்ற ஆரம்பிச்சாரு. கொதிச்ச பரமசிவம் திடீர்ன்னு கொழைய ஆரம்பிச்சிட்டாரு. ஒரு நொடியில இந்த ஆளு எப்பிடி பச்சோந்தி மாதிரி வெதவெதமா மாறுறாம்ன்னு அந்த ஆளப் பாக்குறப்ப சுப்பு வாத்தியாருக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவரோட வார்த்தைக்கு எந்தப் பதிலையும் சொல்லாம அமைதியா நின்னாரு சுப்பு வாத்தியாரு. அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல பழைய பரமசிவமே பேசுனாரு.

            "நகெ நட்டுல இன்னும் ரண்டோ மூணோ கூடுதலாப் போட்டு, பணங்காசியிலயும் இருவதாயிரமோ, முப்பதாயிரமோ கூடப் போட்டு பண்ணி வுட்டுப்புடலாம். அதுக்கு நாம்ம கேரண்டி. பாத்து கதெய முடிச்சி வுட்டுப்புட்டுப் போயிடுங்கய்யா! வயசான காலத்துலப் போயி கோர்ட்டு கேஸ்ன்னு அலைய ஆரம்பிச்சிக்கிட்டு? அலைய ஆரம்பிச்சா அவ்வளவுதாங். அலைஞ்சிக்கிட்டெ கெடக்க வேண்டித்தாம். அலையுறது மட்டுமில்ல அசிங்கப்பட வேண்டிக் கெடக்கும். குடும்பத்தையே கோர்ட்டுல நிறுத்தி நாறடிச்சிடுவாம் டாக்கடரு பாலாமணி. அதுக்குத் தயாராத்தாம் இருக்காம் அந்தப் பயெ. நாம்மத்தாம் அவ்சரம் பண்ணக் கூடாது. ஒரு குடும்பத்தோட வவுத்தெரிச்சல கொட்டிக்கிடக் கூடாதுன்னு அவனெ சமாதானம் பண்ணிட்டு இஞ்ஞ வந்தா ஒஞ்ஞள சமாதானம் பண்ணுறது பெரிய விசயமால்ல இருக்கு. காசிப் பணமாய்யா முக்கியம்? யில்ல நகெ நட்டா முக்கியம்? கெளரவந்தாம்யா முக்கியம். கெளரவமா இருக்கணும்ன்னா கோர்ட்டு கேஸூல்லாம் வாணாம். முடிவா முடிவெச் சொல்லுங்க! அதுக்குத்தாம் நீஞ்ஞ நம்மள கெளம்புன்னு சொன்னப் பெறவும் கெளம்பாம இருக்கேம். ஏத்தோ நம்மாள முடிஞ்சிது ஒரு குடும்பத்தெ அசிங்கத்துல வுழாம தாங்கி வுடுறதெ புண்ணியமா நெனைக்கிறேம். அந்தப் புண்ணியத்துக்காக சில அசெளகரியங்களத் தாங்கிக்கிடலாம். அசிங்கமும் படலாம். தப்பில்லே! யிப்போ ஒஞ்ஞ வாயிலேந்து வர்ற வார்த்தெதாம் ஒஞ்ஞ குடும்பத்தோட கெளரவத்தெ தூக்கி நிறுத்தப் போவுது!"ன்னாரு பழைய பரமசிவம் நெலைபெரண்டாப்புலயும் சாமர்த்தியமாக மெரட்டுறாப்புலயும்.

            சுப்பு வாத்தியாரு கொஞ்சம் கூட யோசிக்காம தீர்க்கமா சொன்னாரு, "உங்கள கெளம்பச் சொல்லியாச்சு! இதுக்கு மேல முடிவுன்னா நாம்ம எஞ்ஞ வக்கீல கேட்டுத்தாம் சொல்லியாவணும்!"ன்னு.

            பழைய பரமசிவம் நாற்காலிய வுட்டு எழும்புனாரு. "வக்கீலு சுலுவுல எதையும் முடிக்க வுட மாட்டாம். நாமளே ஒரு வக்கீல்கிட்டெ குமாஸ்தாதாம். வூடு தேடி வந்த சீதேவிய வாணாம்ன்னு சொல்லிட்டுப் பின்னாடி வருத்தப்படக் கூடாது. மனசுங்றது பின்னாடி மாறும். அப்பிடி மாறுன்னா இதாங் பொன் நம்பரு. போனப் பண்டுங்க. நாம்ம ஒண்ணும் தப்பா நெனைச்சிக்கிட மாட்டேம்!"ன்னு பையில இருந்த சின்ன டைரியிலேந்து ஒரு தாள எடுத்துக் கொடுத்தாரு படக்குன்னு.

            "ஒண்ணும் வாணாம்!"ன்னு சொல்லிட்டு சுப்பு வாத்தியாரு அவரோட பதில எதிர்பாக்காம வூட்டுக்குள்ள வந்தாரு. பழைய பரமசிவம் கைய எனக்கென்னங்ற மாதிரி விரிச்சிக் காட்டிட்டு சுப்பு வாத்தியாரு வூட்டை வுட்டு வெளியில கெளம்பி நடந்தாரு.

            "வக்கீலு நோட்டீஸையும் அனுப்பிப்புட்டு ஆளையும் அடுத்தடுத்து அனுப்புறானுவோ பாரு வெக்கங் கெட்ட பயலுவோ!"ன்னாரு வூட்டுக்குள்ள வந்த சுப்பு வாத்தியாரு வெளியில போற பழைய பரமசிவத்துக் காதுக்குக் கேக்குறாப்புல.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...