17 Nov 2020

கொடுக்கறதெ வாங்கிக்கிட்டு கதைய முடிச்சுக்கோ!

கொடுக்கறதெ வாங்கிக்கிட்டு கதைய முடிச்சுக்கோ!

செய்யு - 628

            வெவாகரத்தப் போட்டு கதெயெ முடிச்சிப்புடுறதுன்னு வீயெம் மாமா சொன்னதும் சுப்பு வாத்தியாரு கலியாணத்துக்குன்னு செஞ்ச நகெ நட்டு, பணங்காசியப் பத்தி வீயெம் மாமாகிட்டெ கேக்க ஆரம்பிச்சாரு.

            "கலியாணத்தப்ப பண்ண நூறு சவரன் நகெ என்னாவுறது? காருக்குன்னு கொடுத்த பத்து லட்ச ரூவா என்னாவுறது? பெறவு சீர்சனத்தி இருக்கு! கலியாணம் நடத்துறதுக்குன்னே எட்டு லட்சத்தெ நெருக்கிப் பணத்தெ கொடுத்திருக்கு. அதோட கதி ன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பரிதாபமா.

            "கலியாணத்துக்குன்னு கொடுத்தக் காசிய வுடுங்க யத்தாம்! ஒஞ்ஞ தரப்புலேந்தும் நாலு பேத்து கூட சாப்புட்டுருப்பாம். அவ்வேம் தரப்புலேந்து பத்து பேத்து கூட சாப்புட்டுருப்பாம். அத்து ஒரு விசயம் கெடையாது!"ன்னுச்சு வீயெம் மாமா.

            "எட்டு லட்ச சொச்சத்துக்கு எவ்வேம் சாப்புட்டாம்? அத்துவும் ஒருத்தனுக்கு மூணு வேளச் சாப்பாட்டத் தாண்டாது! அப்பிடி எட்டு லட்சத்துக்கு என்னத்தெ சாப்பாட்ட போட்டானுவோ? கலியாணத்துக்கு வந்த பாதி பேத்துக்குச் சாப்பாட்டே யில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெ பத்தி பேச வாணாம். கூடவோ கொறைச்சலோ சாப்பாட்ட போட்டானுவோளோ இல்லியோ கலியாணச் சிலவுக்குக் கொடுத்தக் காசிய அப்பிடியே வுடுங்க. அதெ நோண்ட வாணாம். முக்கியமான வெசயத்து வாஞ்ஞ. அவனுக தரப்புலேந்து முப்பது பவுனு நகெயெத் தர்ற தயாரா இருக்கானுவோ. மூணு லட்சம் பணத்தையும் கையிலக் கொடுக்கக் காத்துக்கிட்டுக் கெடக்கறானுவோ. மித்தபடி பீரோ, கட்டிலு, பாத்திரம் பண்டங்கள அப்பிடியே தந்துடுறதா சொல்லுறானுவோ. கெடைச்ச வரைக்கும் லாவம்ன்னு அதெ வாங்கிக்கிட்டு வெட்டிப்புட்டுப்புட்டு, பொண்ணுக்கு இன்னொரு கலியாணத்த முடிச்சிட்டுப் போங்க! அதாங் யத்தாம் புத்தியுள்ளவேம் பண்ணுற வேல!"ன்னுச்சு வீயெம் மாமா. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாரு அதிர்ந்துப் போயிட்டாரு.

            "அத்து என்னாம்பீ போட்ட பவுன்ல பாதி அம்பது கூட கெடையாதுங்றீயே. காருக்குன்னு கொடுத்த பணம் பத்து லட்சத்துலயும் பாதிக் கூட தேறல. மூணு லட்சங்றீயே! ஒஞ்ஞ கணக்குப்படியே வர்றேம். கலியாணச் சிலவெ வுட்டுப்புடுங்க. போயித் தொலையட்டும். எஞ்ஞ கெட்ட நேரம் காசிப் போச்சுன்னு நெனைச்சிக்கிறேம். போட்ட நூறு சவரன் நகெ என்னாச்சுங்றேம்? அதெ பசிக்குல்லாம் தின்னுப்புட முடியாது. காருக்குன்னு கொடுத்த பத்து லட்சம் பணம் எங்கேங்றேம்? அதெ குண்டியத் தொடைச்சிக்கிட்டுத் தூக்கியெல்லாம் போட்டுற முடியாது. காரும் வாங்கல ஒரு மண்ணுத்தையும் வாங்கலன்னா அந்தப் பணம் முழுசும் அவனுக கையிலத்தாம் இருக்கணும். அதெ கொடுக்குறதுல என்னத்தெ கொறைஞ்சிப் போயிடப் போறானுவோ? என்னவோ அவ்வேம் கையிக் காசியக் கொடுக்குறாப்புலல்ல பணத்துல மூணும், பவுன்ல முப்பதும் தர்றேன்னும் கறாரா பேசுறானுவோ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு யிப்போ கொஞ்சம் காட்டமா.

            "ஒலகம் புரியாம பேயக் கூடாது யத்தாம்! அதாங் ஒஞ்ஞகிட்டெ நமக்குப் பிடிக்காதது. இப்பிடிச் சுமூகமா முடிச்சிக்கிட்டாச்சுன்னா இதாச்சும் கெடைக்கும். கோர்ட்டு கேஸூன்னு நின்னா பைசா தேராது பாத்துக்கோங்க. பெறவு உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு நிக்க வேண்டியதா இருக்கும். பிற்காலத்துல மச்சாங்கார்ரேம் வந்துச் சொன்னுச்சு. நாம்மத்தாம் கேக்காம காசிய வுட்டுப்புட்டேம்ன்னு பொலம்பிக்கிட்டுக் கெடக்க வேண்டிருக்கும்!"ன்னுச்சு வீயெம் மாமா மொகத்துல அடிச்சாப்புல.

            "கொடுத்த காசியும், நகெயும் எங்கப் போச்சுன்னு கூட கேக்கக் கூடாதுங்றீயளா? அந்த அளவுக்கா சவுங்கையாப் போயி நிக்கணும்ங்றீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெகுண்டாப்புல.

            "யத்தாம்! அவனுக அத்தனையையும் சிலவு பண்ணி முடிச்சிட்டானுவோ. அந்தப் பாக்குக்கோட்டைப் பயெ ரண்டாவது தங்காச்சிய லாலு மாமா மவனுக்குக் கலியாணம் முடிச்சதுல ஏகப்பட்ட கடனாயிப் போயிடுச்சு யத்தாம். அந்தக் கடம் பூராத்தியும் ஒஞ்ஞ காசிய வாங்கித்தாம் சாமர்த்தியமா அடைச்சிருக்கானுவோ. விசயம் ஒண்ணாச்சா. இன்னொன்னு இவ்வேம் கலியாணம் நடக்குற நேரத்துல சுந்தரிப் போயி கண்ணக் கசக்கிக்கிட்டு நின்னிருக்கு வவுத்துல புள்ள உண்டாயி. அத்து வவுத்துல யாரு புள்ளெ வளரும்ன்னுத்தாம் ஒறவறிஞ்ச விசயமாயிச்சே. இவ்வேம் சித்துவீரனும் முறுக்கிக்கிட்டு நின்னுருக்காம், சுந்தரியோட தொடுப்புக்கு நின்னுட்டு இருக்கற பயலப் போட்டுத் தள்ளணும்ன்னு. சுந்தரி தொடுப்பு வெச்சிட்டு இருந்த பயல காடுவெட்டியில கூலிப்படெ ஆளுகள வெச்சிப் போட்டுத் தள்ளிருக்கானுவோ. அதுக்கு ஆளுங்க, ஸ்டேசன்னு, கேஸூன்னு காசிய கூத்துக்கட்டி அடிச்சி வெளையாண்டிருக்கானுவோ. ஒஞ்ஞளுக்கு இத்து போல நெறைய வெசயங்க தெரியாது. சொன்னாலும் புரியாது. கலியாணத்தெ வேற மினிஸ்டரு வூட்டுக் கலியாணத்தப் போல பண்ணதுல அவனுங்க கையில இருக்குற மிச்சக் காசியே இவ்வளவுதாங். இதெயும் இப்பவே வாங்கினாத்தாம். கொஞ்ச நாளு தள்ளுனீயேன்னா வெச்சுக்கோங்க இதுலயும் காசிக் கொறையும், நகெயும் கொறையும். எப்பூடி வசதின்னு நீஞ்ஞத்தாம் சொல்லணும்?"ன்னுச்சு வீயெம் மாமா நக்கலா கேக்குறாப்புல.

            "இத்தென்னாம்பீ அநியாயமா இருக்கு? எவ்வேம் வூட்டுக் காசிய வாங்கி எதுக்குச் சிலவெ பண்ணுறது? எம் பொண்ணுக்குன்னு பண்ணதெ எடுத்து அவ்வேம் பொண்ணுக்குன்னு பண்ணிக்கிட்டானுவோ செரி. அதுல ஒரு கோல பாவம் வேற நம்மளச் சேர்றாப்புல நம்மட காசிய எடுத்துப் பண்ணிருக்கானுவோ. படுபாவியோ பண்ணதெ பண்ணிப்புட்டானுவோ தொலைஞ்சிப் போறானுவோ. நகெ நட்டுல என்னத்தெ கைய வெச்சானுவோ? யில்ல கேக்குறேம், நம்மடப் பொண்ண வெச்சி நல்ல வெதமா வாழ்றதுல என்னத்தெ கொறைஞ்சிடப் போவப் போறானுவோ? அவனுக்குச் செஞ்ச  செய்மொறைக இத்தோட நிக்கப் போவுதா ன்னா? இன்னும் காலத்துக்கும் செய்யத்தாம் போறேம்! ஏம் இப்பிடிப் பண்ணுறானுவோ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆத்தாமையத் தாங்க முடியாம.

            "நீஞ்ஞ அப்பயும் செரித்தாம், இப்பயும் செரித்தாம் வெசயம் புரியாத ஆளுத்தாம். அவனெ மாப்புள்ளப் பாக்கப் போறப்ப நம்மகிட்டெ ஒரு வார்த்தெ சொல்லிருந்தீயன்னா சொல்லிருக்க மாட்டேனா? அவ்வேம் ஒரு சாமியாருப் பயலுன்னு. வூட்டுல இருக்குறப்ப பாவாடெ, சாக்கெட்டு, பொடவைன்னு கட்டிக்கிட்டுக் கெடக்குற பயத்தாம் அவ்வேம். சின்ன வயசுலயே பொம்பளப் புள்ளைகப் போடுற பாவடெ சட்டையப் போட்டுகிட்டு திரிஞ்ச பயெ அவ்வேம். யப்போ ஏதோ சின்ன வயசுல செய்யுறான்னு எல்லாரும் பேசிக்கிறது. அவ்வேம்கிட்டெ போயிப் பொண்ணக் கொடுத்துப்புட்டு குடும்பம் நடத்தலன்னா எப்பூடி நடத்துவாம்? இன்னொரு ஆம்பளப் புள்ளையப் பெத்திருந்தீயன்னா அவனெ கட்டிக் கொடுத்தீயன்னா அந்தப் பயெ ஒரு பொட்டச்சியப் போல குடும்பத்தெ நடத்திட்டுக் கெடப்பாம்! அவ்வேங்கிட்டெ பொண்ணக் கொடுத்தா எப்பிடி நடத்துவாம்?"ன்னுச்சு வீயெம் மாமா வெடுக்குன்னு.

            "இந்தச் சங்கதியல்லாம் லாலு வாத்திக்கு, முருகு பயலுக்குல்லாம் தெரியுமா?"ன்னு கேட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "தெரியாமா பின்னே! முருகோட பேத்தித்தாம் ஒண்ணு கலியாண வயசுல நிக்குதுல்ல. ஏம் அதெ கொடுக்கல. இந்தப் பயலுக்கு ஒறவுல எவனும் விசயம் தெரிஞ்சிப் பொண்ணு கொடுக்க தயாரு யில்ல. வெளியில பாத்தப்பவும் விசயம் கசிஞ்சிப் போயி மூர்த்தோல வரைக்கும்லாம் வந்து நின்னுப் போயிருக்கு. வெசயம் தெரியாத ஆளு நீஞ்ஞ ஒருத்தருதாம். அதாங் சாமர்த்தியமா ஒஞ்ஞ தலையில வெச்சிக் கட்டி வுட்டுப்புட்டானுவோ. நாம்ம கலியாணத்துக்கு மின்னாடியே சொல்லலாம்ன்னு நெனைப்புத்தாம். எதுக்கு நம்மால ஒரு கலியாணம் நிக்கணும்ன்னு நெனைச்சேம்? இந்த மாதிரிப் பயலுவோ கலியாணத்துக்குப் பெறவு திருந்துறதும் உண்டு. அப்பிடித் திருந்திப்புடுவாம்ன்னு நெனைச்சேம். நீஞ்ஞ வேற அந்த நேரத்துல நம்மோட மொறைச்சாப்புல நடந்துக்கிட்டீயளா? சொன்னாலும் பொல்லாப்புத்தாம்ன்னு வுட்டுப்புட்டேம்! அத்து இந்தக் கதியில வந்து நிக்கும்ன்ன நெனைக்கல. பெரியவங் குமரு கூட கலியாணத்துக்கே வாரல பாருங்க. வெசயம் இதுதாங் யத்தாம்!"ன்னுச்சு வீயெம் மாமா.

            "அடப் பாவீயோளா! எல்லாரும் வெசயம் தெரிஞ்சித்தாம் எந் தலையில மண்ணள்ளிப் போட்டுப்புட்டீயளா? எங் கழுத்தறுக்க வேடிக்கெ பாத்துப்புட்டு நின்னீயளா? யிப்பயும் வேடிக்கே பாக்க வேண்டித்தானே? ஏம் வூட்டுப்படி ஏறி வந்தே?"ன்னு சுப்பு வாத்தியாரு தலையில அடிச்சிக்கிட்டாரு.

            "ச்சைய்! நிறுத்துங்க யத்தாம்! கலியாணம் பண்ணிக் கொடுக்குறதுக்கு மின்னாடி வெசாரிக்கிறது கெடையாது. வெசாரிக்காம ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிக் கொடுத்துப்புட வேண்டிது. பெறவு தலையில அடிச்சிக்கிட்டா ஆச்சா? இப்பயும் ஒண்ணுமில்ல. குடித்தனம் வெச்சி பொண்ணோட இருக்கவும் சம்மந்தாம்ன்னு நிக்குறானுவோ. அப்பிடி யில்லன்னா நாம்ம சொன்னபடிக்கு வெட்டி வுட்டுப்புட்டுப் போவவும் தயார நிக்கறானுவோ. இத்து ரண்டும் யில்ல, கேஸ்ஸ நடத்துறாப்புல இருந்தாலும் அவனுக தயாராத்தாம் இருக்கானுவோ. ஏன்னா அவனுக கையிக் காசி ஒண்ணும் சிலவு ஆவப் போறதில்ல. ஒஞ்ஞளுக்குக் கொடுக்கன்னு இருக்குற பணத்தையும், நகெயயும் வெச்சி கேஸ்ஸ முடிச்சிட்டுப் போயிட்டே இருப்பானுவோ. பைசா காசி நட்டமில்ல அவனுகளுக்கு. ஆன்னா ஒஞ்ஞளுக்கு அப்பிடியில்ல! கலியாணத்துக்குன்னு பெருங்காசிப் போயிருக்கு, நகெ நட்டுப் போயிருக்கு, பாத்திரம் பண்டம் போயிருக்கு, சீர்வரிசெ சாமாஞ் செட்டுகப் போயிருக்கு. கேஸூன்னுப் போனா மேலும் கைக்காசித்தாம் போவும். தெரியாம பணங்காசியக் கலியாணத்துல வுட்டுப்புட்டீயே. அத்து தெரியாம நடந்தது. இப்போ தெரிஞ்சே பணங்காசியக் கொண்டுப் போயி கேஸ்ல வுட்டுப்புட்டு நிக்க வேண்டிதில்லே!"ன்னுச்சு வீயெம் மாமா கொஞ்சம் அக்கறையா பேசுற மாதிரிக்கி மெரட்டுறாப்புல.

            "வக்கீலு நோட்டீஸ வுட்டதோட இத்து பெரிய மெரட்டலா இருக்கே?"ன்னு ஏங்கிப் போயி கேட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "வக்கீலு நோட்டீஸ்லாம் ச்சும்மா ஒரு மெரட்டலுக்குத்தாம். அதுக்குப் போயி நீஞ்ஞ காசியக் கொடுத்து ஒரு வக்கீல தயாரு பண்ணி தண்டம் பண்ணிட்டு ஒரு நோட்டீஸ அனுப்பியிருக்கீயே? இதெப் போல எத்தனெ நோட்டீஸப் பாத்தப் பயலுவோ அவனுவோ! செரியான பனங்காட்டு நரியுவோ யத்தாம் அவனுவோ! இந்தப் பாச்சால்லாம் அவனுககிட்டெ பலிக்காது!"ன்னுச்சு வீயெம் மாமா அசமடக்குறாப்புல.

            "யிப்ப ன்னடாம்பீ பண்ணுறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவ்வேம் பக்கம் திரும்பி.

            "வக்கீல் நோட்டீஸ்ன்னு வுட்டது வுட்டாச்சு. எப்போ வக்கீல் நோட்டீஸ்ன்னு ஒண்ணு வந்துச்சோ அதுக்கு மேல சமாதானம்லாம் கெடையாது. கோர்ட்ல வெச்சிப் பாத்துக்கிறதுதாங் செரியா இருக்கும்!"ன்னாம் விகடு.

            வீயெம் மாமா விகடுவெ மொறைச்சிப் பாத்துச்சு. "எள ரத்தம். அப்பிடித்தாம் பேசும். நாம்ம ஒண்ணும் குத்தம் சொல்ல விரும்பல. நடமொறைன்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு நாமளே ஒரு உதாரணம். கோர்ட்டு கேஸூன்னுப் பாத்துட்டு நிக்குறவேம். நம்ம ரண்டாங் கலியாணத்துக் கேஸூ திருவாரூரு கோர்ட்டுலத்தாம் நடந்துக்கிட்டு இருக்கு. கேஸூ இன்னும் டிரயலுக்கே வாரலன்னா நம்புவீயா நீயி? வக்கீலுங்க வாய்தா மேல வாய்தா வாங்கி டிரையலுக்கே வர்ற வுடாம அடிச்சிக் காசியப் பிடுங்கிட்டே இருப்பாம். ஒவ்வொரு தவாவும் காசியக் கொட்டி அழுதுகிட்டெ இருப்பீயளா? இப்பவே காசிப் போயிடுச்சு. இன்னும் காசிப்‍ போவணும்ன்னா நெனைச்சா தாராளமா பண்ணுங்க!"ன்னுச்சு வீயெம் மாமா மொரட்டுத்தனமா எச்சரிக்கிறாப்புல.

            "இனுமே ஒண்ணும் காசிப் புதுசா போவணும்ன்னு யில்ல மாமா! கைய விட்டுப் போன காசி, கைக்குத் தானா திரும்பும். இந்தப் பணங்காசிய, நகெ நட்டா ஒழைச்சா பாடுபட்டா சம்பாதிச்சிப் புடலாம். தங்காச்சியோட உசுர்ரக் காப்பாத்துனோம் பாருங்க. அதாங் திரும்ப பண்ண முடியாது. திரும்ப பண்ண முடியாத ஒரு விசயத்தெயப் பண்ணிட்டப் பெறவு திரும்ப பண்ண முடியுற விசயத்தப் பத்திக் கவலெ யில்ல. என்ன ஆனாலும் பரவாயில்லன்னுத்தாம் நாம்ம நெனைக்கிறேம்!"ன்னாம் விகடு ரொம்ப பிடிமானமா.

            "மறுக்கா மறுக்கா சொல்றேம்ன்னு நெனைக்காதீயே! கோர்ட்டு கேஸூன்னு போனா பைசா காசித் தேறாது. ஒஞ்ஞ காசிய வெச்சி கேஸ்ஸ நடத்தி முடிச்சிட்டு அவ்வேம் பாட்டுக்குப் போயிட்டே இருப்பாம். எப்பிடியும் அஞ்சாறு வருஷமாவும் கேஸ்ஸூ முடிய. அதுவரைக்கும் தங்காச்சிய வூட்டுல வெச்சிட்டு இருப்பீயாடா மடப்பயலே?"ன்னுச்சு வீயெம் மாமா விகடுவெப் பாத்து கோவமா.

            "இல்லம்பீ! அவனுககிட்டெ இந்த மூணு லட்சத்தையும், முப்பது பவுனையும் வாங்குறதும் ஒண்ணுத்தாம், கேஸ்ஸ நடத்தி ஒண்ணும் இல்லாமப் போறதும் ஒண்ணுத்தாம். நீஞ்ஞ சொல்றது சரித்தாம். கேஸ்ஸ நடத்தி ஆவப் போறது ஒண்ணுமில்லத்தாம். இருந்தாலும் பாருங்க மனசுல முடிஞ்ச வரைக்கும் போராடிப் பாத்தேம்ங்ற திரும்பியாச்சும் மிஞ்சும். அதாங் முடிவு!"ன்னாரு இப்போ சுப்பு வாத்தியாரு வீயெம் மாமாவப் பாத்து அழுத்தமா. வீயெம் மாமா ஒரு நிமிஷம் நெத்திய சுருக்கி யோசிச்சது. இப்போ இதுக்குத் தகுந்தாப்புல பேசுறதுதாங் மொறைங்றது போல நெனைச்சிருக்கும் போல. அதுக்குத் தகுந்தாப்புல பேச ஆரம்பிச்சது.

            "அப்பிடின்னா நம்மகிட்டெ வக்கீலு இருக்காரு. தங்கப்பழம்ன்னு பேரு. சொல்லுங்க. வூட்டுல வந்துப் பாத்துட்டுக் கேஸ்ஸ எடுக்கச் சொல்றேம். அந்த ஆளுதாம் இந்த மாதிரிக்கிக் கேஸ்ஸ எடுத்து செயிக்க முடியும். வேற எவனெ வெச்சாலும் கேஸ்ஸூ மண்ணக் கவ்விக்கும்! இப்பவே சொன்னா போன அடிச்சி வுடுறேம். சாயுங்காலம் வூட்டுல வந்து நிப்பாரு நம்மட வக்கீலு!"ன்னுச்சு வீயெம் மாமா அடுத்த கட்டமா.

            "வாணாம்பீ! வக்கீலு ஓகையூரு கைப்புள்ள மூலியமா பாத்தவருதாம். அதாச்சி இப்போ பதில் நோட்டீசு கொடுத்தவருதாம். அதுல மாத்தமில்ல. ஆன்னா நீஞ்ஞளும் அந்தப் பயலப் பத்தி வெசயத்த தெரிஞ்சிக்கிட்டுக் கலியாணத்துக்கு மின்னாடி ஒரு வார்த்தெ சொல்லாம, எம்மட முதுகுல குத்துனீங்க பாருங்க! அந்த வலியத்தாம் நம்மால தாங்க முடியல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வீயெம் மாமாவப் பாத்து.

            "அப்போ கஷ்டப்படப் போறதுன்னு முடிவெ பண்ணிப்புட்டீங்க. அதுக்கு நாம்ம என்ன பண்ட முடியும்? வெட்டி வுடுறது, கோர்ட்டுல நிக்குறதுன்னு முடிவெ பண்ணிப்புட்டீங்கன்னா தாராளமா போயி நில்லுங்க. அத்து ஒஞ்ஞ தலவிதி. எக்கேடு கேட்டோ போஞ்ஞ!"ன்னுச்சு வீயெம் மாமா.

            "இத்தெ ன்னாடா நீயிச் சொல்றது? எம் பொண்ணு தூக்குல தொங்கிக் காப்பாத்துன்ன மறுநாளே அந்தச் சுந்தரிச் சிறுக்கி வந்து இதத்தாம்டா சொன்னா அத்து வுட்டுப்புடுவேம்ன்னு. அப்பவே அவனுக முடிவெக் கட்டிப்புட்டானுவோடா! இருந்தாலும் அவனுகளா வெலகுனதா இருக்கக் கூடாது, நாமளா வெலகுனதா இருக்கணும்ன்னுத்தாம் இம்புட்டு வேலையப் பாத்துக்கிட்டுக் கெடந்தது! என்னவோ நாஞ்ஞ திக்குத் தெரியாம நின்னப்பவல்லாம் வந்து பாத்ததாட்டம்லா பேசுறே? நாஞ்ஞ கஷ்டப்பட்டுப் போயி நிக்குறப்பல்லாம் வந்து தாங்குறவனாட்டம்லா பேசுறே?"ன்னுச்சு வெங்கு வீயெம் மாமாவப் பாத்து ஆக்ரோஷமா.

            "நீயும் ஒரு ஒலகம் புரியாத பூச்சித்தாம். அவனுககிட்டெ மாட்டிக்கிட்டு எப்பிடிச் சமாளிக்கப் போறீயளோ தெரியல. நாமளா ஒரு ஆளெப் பாத்து வுடறன்னாலும் வாணாங்றீயே! அதுக்கு மேல நாம்ம ன்னா பண்ணுறது? தலயெழுத்துப் போலத்தாம் நடக்கும்! ஆண்டவேம் ஒஞ்ஞள காப்பாத்தட்டும். அத்துச் செரி! நாமளே ஒஞ்ஞள காப்பாத்த முடியலன்னா ஆண்டவேம் என்னத்தெ காப்பாத்துறது?"ன்னு விருட்டுன்னு எழும்புனுச்சு வீயெம் மாமா.

            கெளம்புறப்போ, "ரண்டுப் பக்கமும் அடிச்சிக்கிட்டு நிக்காதீயே!"ன்னு பெரிய மனுஷனப் போல புத்தியையும் சொன்னுச்சு வீயெம் மாமா.

            “என்னவோ அடிச்சிக்கிட்டு நின்னா குறுக்கப் பூந்து தடுத்து வுடுறவனெப் போல பேசுறே? ஒஞ்ஞ யத்தான பஞ்சாயத்துல அடிக்க வந்தானுவோளே? நீயி வந்து கேட்டீயா ன்னா? வெசயம் தெரிஞ்ச மறுநாளாச்சும் அவனுகளப் போயி பேருக்காச்சும் மெரட்டுனீயா ன்னா?”ன்னுச்சு வெங்கு தம்பிக்காரனெ பொரட்டி எடுக்குறாப்புல.

            "நம்ம வூட்டுப் பொண்ணு. நம்ம வூட்டுல உசுரோட இருக்குறதுல குத்தம் ஒண்ணுமில்லையே மாமா?"ன்னாம் விகடுவும் கௌம்புற வீயெம் மாமாவப் பாத்து.

            "செரித்தாம்டாம்பீ! என்னென்னவோ பேசியாச்சு. இருந்தாலும் மனசுல தோணுற ஒண்ணுத்தெ சொல்றேம். இத்து மனசோட ஆழத்துலேந்து வர்றது. இந்தப் பொண்ணு எஞ்ஞ இருக்கோ அந்தக் குடும்பந்தாம்டா உருப்புடும். பொண்ணு பாவத்தெ கொட்டிக்கிட்டு எவனும் நல்லா இருக்க முடியாதுன்னுத்தாம் நாட்டுல சொல்லுறானுவோ. அந்த வகையில பாத்தா இந்தக் குடும்பத்துல பொண்ணு இருந்தா அவனுவோ அழிஞ்சானுவோ. அவனுவோ பக்கம் பொண்ணுப் போயிட்டா அத்து அப்பிடியே மாறி நடந்துப்புடும்! அதுல மாத்தமில்ல!"ன்னு ஒரு மகானப் போல மின்னாடி பேசுனதுக்கும், யிப்போ பேசுறதுக்கும் சம்பந்தம் இல்லாம சொல்லிட்டு அது பாட்டுக்குக் கெளம்பி வூட்டு வாசலுக்குப் போயி பழுப்பு நிற ஹோண்டா ஆக்டிவாவ எடுத்துச்சு வீயெம் மாமா. யாரும் வீயெம் மாமாவ வழியனுப்ப வெளியிலப் போகல. எல்லாத்துக்கும் வீயெம் மாமா மெல செமத்தியான கடுப்பு இருந்துச்சு. இருந்தாலும் வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டுக் கெளம்புறப்போ, "பாத்து யோஜனெப் பண்ணிக்கோங்க! சொல்றதெ சொல்லியாச்சு!"ன்னு தெருவுலேந்து வூட்டுல கேக்குறாப்புல ஒரு சத்தத்தெ வுட்டு, சுர்ருன்னு சத்தம் கேக்குறாப்புல வண்டியில போயிக்கிட்டெ இருந்துச்சு வீயெம் மாமா.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...