19 Nov 2020

வரிசைக் கட்டி அடிப்போம் ஆப்பை!

வரிசைக் கட்டி அடிப்போம் ஆப்பை!

செய்யு - 630

            சுப்பு வாத்தியாரு ஓகையூரு கைப்புள்ளைய அழைச்சிக்கிட்டுத் திருநீலகண்டன் வக்கீலப் போயிப் பாத்தாரு. வீயெம் மாமாகிட்டெயும் பழைய பரமசிவத்துக்கிட்டெயும் சுப்பு வாத்தியாரு தெடமா பேசிட்டாலும் அவுங்க வந்துட்டுப் போன பெறவு அவரோட மனசு ரொம்ப அலைபாய ஆரம்பிச்சது. இந்த வெவரத்தைச் சொல்றதுக்காகத்தாம் அவரு வக்கீலப் போயி திடுதிப்புன்னு கைப்புள்ளையோட போயிப் பாத்தாரு. கொடுக்குற பண நகெ, காசிய வாங்கிட்டு ஒதுங்கிப் போயிடணும்ன்னு மெரட்டுனாப்புல அவுங்க பேசுனது உட்பட அத்தனையையும் ஒரு வார்த்தை மாறாம அப்பிடியே சொன்னாரு. அதெ கேட்டதும் வக்கீல் திருநீலகண்டனுக்குக் கோவம் வந்து ஆக்ரோஷத்துல வெடிக்குறாப்புல பேசுனாரு. "இப்பிடித்தாம் சார் பண்ணுவானுங்கோ! வக்கீல் நோட்டீஸையும் அனுப்பிட்டு எடையில பூந்து அவனவனும் உள்வேலையப் பாப்பானுங்கோ! சமரசம் பண்ணி வைக்குற ஒவ்வொருத்தனுக்கும் இதுல கமிஷன் உண்டு. எவனும் சும்மா வாரதா நெனைச்சிப்புடுதீங்கோ! இவனுங்களுக்குச் சரியான பாடத்தை கத்துக் கொடுத்துதாம் ஆவணும். நல்லா வெச்சிச் செஞ்சாத்தாம் சரிபட்டு வருவானுங்கோ!"ன்னாரு திருநீலகண்டன் வக்கீல்.

            "நமக்குக் கொடுக்க வேண்டிய நகெ நட்டு, பணங்காசியக் கொடுத்துப்புட்டா போங்கடா கழுதென்னு வுட்டுப்புடலாம். அவனுங்கள ஒண்ணும் நாம்ம பழி வாங்க வேண்டிதில்லா. அவனுங்களே போயி குழியிலத்தாம் வுழப் போறானுக!"ன்னாரு அதுக்குச் சுப்பு வாத்தியாரு.

            "சார்! ஒங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? மயிலே! மயிலே! இறகு போடுன்னா எந்த மயிலும் இறகு போடுறதில்லே. போடவும் போடாது. அதெ போட வைக்கணும். அவனுங்க பண்ணுறதெ புரிஞ்சிக்கோங்க சார்! கால்வாசியக் கொடுத்துட்டு கமுக்கமா முடிச்சிக்க முடியுமான்னு பாக்குறானுங்கோ! அதுக்கு அப்பிடியெல்லாம் சொன்னாத்தாம் வழிக்கு வருவீங்கன்னு பாக்குறானுங்கோ! இந்த திருநீலகண்டன்கிட்டெ வர்றதுக்கு முன்னாடி அது ரைட். வந்த பிறகு அது ராங் சார்! தப்பான வழியில போறானுங்கோ! அதுக்கான அடுத்த கட்ட சுளுக்கு எடுக்குற சமாச்சாராங்கள் எல்லாம் நம்மகிட்டெ இருக்கு. ஒண்ணும் கவலைப்படாதீங்கோ! செய்ய வேண்டியத செஞ்சா மயில் பாட்டுக்கு இறகைப் போட்டுட்டுப் போயிக்கிட்டெ இருக்கப் போகுது!"ன்னாரு திருநீலகண்டன் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் எறங்கப் போறாப்புல.

            "நம்மாள எந்தப் பாதிப்பும் அவனுங்களுக்கு வாணாம் பாத்துக்குங்க. நாம்ம நெனைச்சாலும் அரசாங்க வேலைய வாங்கிக் கொடுத்துப்புட முடியாது. என்னவோ நமக்குப் புடிக்காம போயிட்டாங்றதால அதுல கைய வெச்சிப்புடுறாப்புல ஒண்ணுத்தையும் பண்ணிப்புட வாணாம். நம்ம பணங்காசி, நகெ நட்ட வாங்கணும். அதுக்கு தகுந்தாப்புல செய்ய வேண்டியதெ மட்டும் செய்யுங்க போதும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலோட பேச்சு வேகத்தப் பாத்து.

            "இதாம் சார் தப்பு! ஒங்கள மாதிரி ஆளுங்களாலத்தாம் அந்த மாதிரி ஆளுங்க உருவாகுறானுங்க. அந்த நோட்டீஸ்ல தெளிவா நம்ம போன் நம்பர்ர கொடுத்திருக்கோம். ஆபீஸ் அட்ரஸ்ஸ கொடுத்திருக்கோம். ஒண்ணு போன் பண்ணி நம்மகிட்டெ பேசலாம். அப்பிடி இல்லையா, நேர்ரா ஆபீஸூக்கு வந்து நம்மகிட்டெ பேசலாம். ரண்டும் இல்லாம கத்துக்குட்டியையும், தொத்துக்குட்டியையும் வெச்சி பேச்சு வார்த்தெ நடத்துனா, நம்மள வக்கீல்ன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கானா? என்னத்தெ நெனைச்சிக்கிட்டு இருக்காம் அந்த பயெ? அதுவும் சரியான ஒரு ஆம்பளைன்னா நேருக்கு நேரு மோதிப்புடுவேம். பொட்டப் பயலா வேற இருக்காம்ன்னு யோசனைப் பண்ணிட்டு இருக்கேம். பொண்ணுன்னா பேயும் எறங்கும்பாங்க. இவன் ஆம்பளைங்க லிஸ்டலயும் வர்ற மாட்டாம். பொம்முனாட்டிங்ற லிஸ்டலயும் வர்ற மாட்டாம். ரண்டும் கலந்த லிஸ்ட்லதாம் வருவாம். இவனுக்குல்லாம் இரக்கப்படுதுல அர்த்தமே இல்ல. வேஸ்ட் ஆப் டைம்தாம்!"ன்னாரு திருநீலகண்டன் சரமா இருக்குற பட்டாசப் பத்த வெச்சதெ போல.

            "எதெப் பண்ணுறதா இருந்தாலும் ரொம்ப போட்டு பீடிகயைப் பண்ணாம சுருக்கா பண்ணி, மீட்க வேண்டிய சாமாஞ் செட்டுகள மீட்டுக் கொடுத்துப்புட்டு அடுத்த கட்ட வேலையப் பாருங்க. வாத்தியார்ரப் போட்டு ரொம்ப அலைய விடாதீயே! அலைக்கழிக்காதீங்க!"ன்னாரு கைப்புள்ள இப்போ ஊடால பூந்து.

            "இனி நடக்குறதப் பாக்கத்தானே போறீங்க! நாளைக்கு கோர்ட்ல பெரிசா வேல இல்ல. பதினோரு மணிக்கு மேல கோர்ட்டுக்கு பொண்ண கொண்டாந்துட்டுப் போன அடிங்க! நாளைக்கு பட்டாஸ வெடிக்க வுட்டு, புஸ்வானத்தெ போட்டு விடுவோம். அப்பத்தாம் பயெ அரளுவாம்!"ன்னாரு திருநீலகண்டன் பெரட்டி எடுக்கப் போறாப்புல.

            "அப்போ நாளைக்கிப் பொண்ணு கட்டாயம் வாரணும் வேலையக் காட்ட?"ன்னாரு கைப்புள்ள சந்தேகமா கேக்குறாப்புல.

            "கட்டாயமா. நிச்சயமா. நீங்களும் கட்டாயம் வேணும். அப்பத்தாம் நடக்குற கூத்தையும், பண்ணப் போற வேடிக்கையையும் நீங்களும் பாத்து ரசிக்க முடியும்!"ன்னாரு திருநீலகண்டன் வக்கீல் ஒரு பெருஞ்சிரிப்ப சிரிச்சிக்கிட்டு. அதெ கேட்டுக்கிட்டு அன்னிக்கு என்னிக்கும் இல்லாத சந்தோஷத்தோடு வந்தாரு சுப்பு வாத்தியாரு. இந்தப் பேச்சுச் சம்பவத்துக்குப் பெறவுதான் நமக்குன்னு நல்லது செய்யவும் காரியத்த செய்யவும் ஆளிருக்காங்கன்னு அவரோட மனசுல ஒரு தெம்பும் தெளிவும் வந்தாப்புல இருந்துச்சு. அதெ வெளிப்படையா கைப்புள்ளைகிட்டயும் சொன்னாரு சுப்பு வாத்தியாரு, "ரொம்ப நாளைக்கிப் பின்னாடி இன்னிக்குத்தாம் மனசுக்குக் கொஞ்சம் தெம்பாவும் தெகிரியமாவும் இருக்கு. இப்பிடி ஒரு ஆளு இருக்காங்றதெ போதும். இவ்வேம் கேஸ்ஸ எடுத்து செயிச்சாலும் செரித்தாம் செயிக்காட்டியும் செரித்தாம். அதெப் பத்தி நமக்குக் கவலெயில்ல. அவனுங்கள நாலா தெசைக்கும் தெறிக்க விட்டா போதும்! படுவாக்க படுத்துன பாட்டுக்கு அதெ கூட அனுபவிக்கிலன்னா எப்பூடி?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இப்பத்தானே வக்கீலே கோவப்பட்டு ஆரம்பிச்சிக்கிறாரு. போவப் போவ பாக்கத்தானே போறீங்க. தெறிக்க வுட்டுப்புட்டுத்தாம் மறுவேல பாப்பாப்புல. நாளைக்கிப் பொண்ண அழைச்சிட்டுப் போயி மிச்சத்தெ பாப்போம்!"ன்னாரு கைப்புள்ளயும் தெம்ப கொடுக்குறாப்புல.

            “ஆமாமாம்! வக்கீலு சொன்னபடிக்கு அவரு போக்குலயே பண்ணுங்கன்னு இந்தக் காரியத்தெ சுருக்கா பண்ணித்தாம் ஆவணும். அப்பத்தாம் அவனுங்களும் சந்தையில பேரத்த பேசுறாப்புல ஆள அனுப்புறதையும் பேரத்த படிய வைக்குறாப்புல மெரட்டுறதையும் நிப்பாட்டுவானுங்க!”ன்னாரு சுப்பு வாத்தியாரும் தெகிரியத்த உணர்ந்தாப்புல.

            அன்னிக்கு ராத்திரியே சுப்பு வாத்தியாரு கௌம்புறதுக்கான திட்டத்தெ வகுத்துக்கிட்டாரு. வக்கீலு சொன்னபடிக்கு மறுநாளு சுப்பு வாத்தியாரு பொண்ண அழைச்சிக்கிட்டுக் கெளம்புனாரு. விகடுவையும் லீவு அடிக்கச் சொல்லி கைப்புள்ளையோட வண்டியில கெளப்பிக்கிட்டாரு.

இவுங்கப் போயி சேர்ந்த பதினோரு மணிக்கெல்லாம் திருவாரூரு கோர்ட்ட வுட்டு வெளியில நின்னுகிட்டு இருந்தாரு திருநீலகண்டன்.  இவங்க வண்டியில வர்றதப் பாத்துட்டு தூரத்துலயே கையக் காட்டி கூப்புட்டவரு, நேர்ரா கோர்ட் கேண்டினுக்குக் கொண்டுட்டுப் போனாரு. மொதல்ல எல்லாரையும் சூடா போண்டாவ வாங்கி வாயிலப் போடச் சொன்னாரு. அதுக்குப் பெறவு டீத்தண்ணிய ஊத்துனதும், செய்யுவ எதுத்தாப்புல உக்கார வெச்சி கதெ முழுக்க ஆரம்பத்துலேந்து கடெசீ வரைக்கும் கேட்டுக்கிட்டாரு. கேட்டு முடிச்சதும், "பைனலா ஒரு கேள்விய மட்டும் கேக்குறேம்!"ன்னு கொஞ்சம் இடைவெளி வுட்டாரு திருநீலகண்டன்.

            என்னத்தெ கேக்கப் போறார்ன்னு எல்லாரும் அவரோட மொகத்தையேப் பாத்துட்டு இருந்தப்போ, அவரு கேட்டாரு, "இங்க அப்பா, அண்ணன், உற்றார் இருக்குறதையெல்லாம் பார்க்க வாண்டாம். ஒங் கருத்து என்னவோ, இந்த நிமிஷத்துல ஒன்னுடைய நெனைப்பு எதுவோ அதெ சொல்லணும். அதெ வெச்சித்தாம் உன்னோட வழக்க எப்பிடிக் கொண்டு போறதங்றத நாம்ம முடிவு பண்ண முடியும்! அதுக்கு ஒரே கேள்வித்தாம். ஆம்படையானோட சேர்ந்து வாழப் போறீயா? வெட்டி வுட்டுப்புட்டு வேற ஒரு வாழ்க்கைக்குத் தயாரு ஆகப் போறீயா?அதெ மட்டும் நெத்தியடியா, வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுங்ற மாதிரிக்கிச் சொல்லு பாக்கலாம்!"ன்னாரு திருநீலகண்டன் ரொம்ப ஓர்மையா.

            "யில்லங்கய்யா! இனுமே நம்மாள வாழ முடியாது. உடைமைக்கு உத்திரவாதம் இல்லாம போனா சம்பாதிச்சிப்புடலாம், ஒடம்பைத் தேத்திக் கொண்டாந்துப் புடலாம். உசுருக்கு உத்திரவாதம் இல்லாமப் போயிட்டா போனது போனதுதாம். அவ்வேங் கூட சேர்ந்து வாழப் போனா நாம்ம பாடையிலத் திரும்ப வேண்டியதுதாம்!"ன்னா செய்யு பட்டுன்னு எதையும் யோசிக்காம.

            "நல்லா யோசிச்சுத்தாம் சொல்றே யில்லே? பின்னாடி பல்டி கில்டி அடிக்க மாட்டே யில்லே. அடிச்சேன்னா எம் பாடு திண்டாட்டம். ஒம் ஆம்படையானோட பாடு கொண்டாட்டம்!"ன்னாரு திருநீலகண்டன் செய்யுவப் பாத்து சிரிச்சபடிக்கு.

            "ஒரு நாளு, ரண்டு நாளு யோசிச்சு எடுத்து முடிவு யில்லங்கய்யா! ஒவ்வொரு தடவெ பண்ணுன சித்திரவதெ தாங்க முடியாம எடுத்து முடிவு. எத்தனையோ நாளு, எத்தனையோ மொறை எடுத்த முடிவு. எந்த ஒரு தடவெ எடுக்கறப்பயும் மாத்திக்கிடணும்ன்னு தோணல. நெதானமா யோசிச்சாலும் அதுதாங் சரின்னு தோணும். ஆத்திரத்துல யோசிச்சாலும் அதுதாங் சரின்னு தோணுது. வூட்டுல யோசிச்சப்புயம் அதுதாங் தோணுனுச்சு. யிப்போ இஞ்ஞ வெச்சு நீஞ்ஞ கேக்குறப்பயும் அப்பிடித்தாம் தோணுனுச்சு. ஒண்ணும் மாத்தமில்ல. சாவணும்ன்னு நெனைச்சா அவனோட சேர்ந்து வாழலாம். உசுரு வாழணும்ன்னு நெனைச்சா அவனெ வுட்டு பிரிஞ்சி வாழ்ந்தாத்தாம் வாழலாம். அடிச்சிக் கொல்லுறது, வெசம் வெச்சுக் கொல்லுறது ஒரு வகையின்னா இந்தப் பயெ பைத்தியங்கூலி மாதிரிக்கி நடந்தெ மனுஷர பைத்தியமாக்கிக் கொன்னுப்புடுவாம். கத்தியில்லாம, ரத்தமில்லாம் கொன்னுப்புட்டு அவ்வேம் பாட்டுக்கு அப்பாவி மாதிரிக்கிப் போயிட்டே இருப்பாம்! செரியான சைக்கோ பயெ!"ன்னா செய்யு ரொம்ப தெளிவா.

            "பொண்ணு தெளிவாத்தாம் இருக்கு. பரவாயில்ல. ஏம் திரும்ப திரும்பக் கேட்டேன்னா ஒரு வக்கீலுக்கு கட்சிக்காரங்களோட மனநிலை முக்கியம். அவுங்க எப்பிடிப்பட்ட மனநிலையில இருக்காங்களோ அதுக்கேத்தப்படி வழக்கைக் கொண்டுட்டுப் போனா இந்த மாதிரி வழக்குல ஜெயிச்சிடலாம்ன்னு சொல்லுவாங்க. பிரிக்கிறதுன்னாலும் பிரிப்பேம். சேக்குறதுன்னாலும் சேர்ப்பேம். ரண்டையும் செய்வாம் இந்த திருநீலகண்டன். இப்போ இந்த வழக்குல ஒங்கள சேக்குற மாதிரிக் கொண்டுப் போயித்தாம், அய்யோ சாமி இந்தப் பொண்ண வுட்டு வெலகுனா போதும்ன்னு அவனெ ஓட ஓட வெரட்டியடிப்பேம். என்ன சொல்றேன்னு புரியுதோ? சேக்குறாப்புல கொண்டுப் போயி பிரிச்சி அடிப்பேம். இதெ நல்லா புரிஞ்சிக்கோணும். அப்பத்தாம் நாம்ம இந்தக் கேஸ எப்பிடிக் கொண்டுட்டுப் போறேங்றது புரியும். இதெ எதுக்கு சொல்றேன்னா கேஸூ எப்பிடிப் போவுதுங்றது கட்சிக்காரங்களுக்குத் தெரியுறப்பத்தாம் அவுங்களோட கான்பிடன்ஸ் அதிகமாகவும். அதுதாம் வழக்குக்குப் பலம். இந்த ஒரு பாய்ண்ட்ட எப்பவும் மறந்துப்புடக் கூடாது. அதாவது சேர்க்குறாப்புல கொண்டுப் போயி பிரிக்கிறங்றதெ. ஏன் அப்பிடின்னா சட்டத்துல அப்பிடித்தாம் போயி ஆகணும். எடுத்து எடுப்புலயே பிரிஞ்சிப் போறேம்ன்னு சொன்னா, நாம்ம சேர்ந்து வாழ நிக்குறேம், அந்தப் பொண்ணுத்தாம் பிரிஞ்சிப் போக நெனைக்குது. அதால அந்தப் பொண்ணு மேலத்தாம் கொறைன்னுக் கொண்டுப் போயிடுவாங்க. இதுல அப்பிடி சில சிக்கல்கள் இருக்கு. அதுக்காகத்தாம் இப்பிடி கொண்டு போறது! புரிஞ்சிதோ?"ன்னாரு திருநீலகண்டன்.

            புரிஞ்சிதுங்ற மாதிரி தலைய ஆட்டுனா செய்யு. "பொண்ண மட்டும் கேக்கல! எல்லாரையுந்தாம் கேக்குறேம் புரிஞ்சிதோ?"ன்னாரு மறுக்கா திருநீலகண்டன்.

            "கேஸ்ஸ ஒஞ்ஞ மொறைப்படி, சட்டப்படி கொண்டுட்டுப் போங்க. அதுல எஞ்ஞளுக்கு என்னத்தெ தெரியும் சொல்லுங்க. அதுல நாஞ்ஞ தலையிடவும் முடியாது. எஞ்ஞளுக்கு என்ன வேணுங்றதெ தெளிவா சொல்லிட்டேம். அதெ மட்டும் செஞ்சிட்டா போதும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "மித்த வக்கீல்க மாதிரி கெடையாது நாம்ம. கேஸ்ஸ எப்பிடிக் கொண்டு போறேங்றதெ கிரிஸ்டல் கிளியரா சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெளிவு பண்ணிடுவேம். அதால நம்ம ஆர்கியுமெண்ட்ல பாத்தீங்கன்னா கிளையண்ட் கொழம்பவே மாட்டாங்க. கிராஸ்ல நம்ம கிளையண்ட்ஸ் சொதப்புனதா சரித்திரமே ‍கெடையாது. நம்மகிட்டெ பொருத்த வரைக்கும் பாத்தீங்கன்னா கிளையண்டா உள்ளார வருவாங்க. வக்கீலா வெளியிலப் போவாங்க. இந்த வழக்கு முடியறச்சே ஒங்க பொண்ணு பெண்கள் சம்பந்தமான அத்தனெ சட்டப் பிரிவுகளையும் கடகடன்ன ஒப்புவிக்கிறாளா இல்லையான்னு பாருங்கோ! அதாங் இந்த திருநீலகண்டனோட ஸ்பெஷாலிட்டின்னும் சொல்லலாம்!"ன்னாரு திருநீலகண்டன் அழுத்தம் திருத்தமா.

            "எதோ போதாத நேரம் இப்பிடி கோர்ட்டு கேஸ்ன்னு அலையுறாப்புல இருக்கு. அதெ அத்தோட வுட்டுப்புடணும். சட்டத்தெ ஞாபவம் வெச்சிக்கிட்டு திரும்ப திரும்ப இதெ ஞாபவம் பண்ணிக்கிட்டுக் கெடக்கக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உணர்ச்சிவசப் பட்டாப்புல.

            "வாத்தியார்ரே! வக்கீலு ஒஞ்ஞள தெடம் பண்ணுறதுக்காக சொல்றதெல்லாம் இத்து. இதுக்குல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது!"ன்னாரு கைப்புள்ள சுப்பு வாத்தியார்ர நெதானம் பண்ணுறாப்புல.

            "இப்போ என்ன செய்யப் போறேங்றதெ சொல்லிடுறேம்! பொண்ண கை ஒடிக்க காகிதங்கள எழுதப் சொல்லப் போறேம். இதெ டைப் பண்ணக் கூடாது. பாதிக்கப்பட்ட நபர் கையால எழுதி அனுப்புறப்பத்தாம் இதுக்கான பவர் அதிகம்! யார் யார்க்குன்னா மொதல்ல முதலமைச்சரோட தனிப்பிரிவுக்கு எழுதப் போறேம். அப்பத்தாம் மாப்புள மெரண்டுப் போவாம். அடுத்ததா மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் எழுதப் போறேம். அதுக்கு மாப்புள அரண்டுத்தாம் போவணும். அதுக்கு அடுத்ததா அனைத்து மகளிர் காவல் நிலையம், உள்ளூரு காவல் நிலையம்ன்னு எழுதிட்டு, கடைசியா மாவட்ட சமூக நீதி மையத்துக்கும் எழுதப் போறேம். எல்லாத்துக்கும் ஒரே சேதித்தாம். பெறுநர் விலாசம் மட்டுந்தாம் மாத்தம். இதெ இன்னிக்கே எழுதி மதியானத்துக்குள்ள டாண் டாண்ன்னு ரிஜிஸ்டர் போஸ்ட் வித் அக்னாலெட்ஜ்மெண்டோட அனுப்பி வைக்கப் போறேம். அதெ அனுப்புன ஒரு வாரத்துக்குள்ள கூடுதலா போனா பத்து நாளுக்குள்ள காகிதம் போயிச் சேந்துச்சுன்னு அக்னாலேட்ஜ்மெண்ட் அட்டைக அது பாட்டுக்கு வந்துக் கொட்டிக்கிட்டெ இருக்கு. அதெ பத்திரமா வெச்சிருந்து நம்மகிட்டெ கொண்டாந்துக் கொடுத்துப்புடுவீங்களாம். அதெ வெச்சித்தாம் நாம்ம கேஸ்ஸ போடுவேமாம். எப்பிடின்னா இவ்ளோ எடங்கள்ல கொடுத்தும் மாப்புள மசிஞ்சி வர்றாப்புல தெரியல. அதால நீதிமன்றத்துலயாவது நீதி கிடைக்கணும்ன்னு வந்திருக்கிறதா வழக்கப் போட்டா அவனெ உள்ள அள்ளிப் போட்டுப்புடலாம். இப்ப நான் சொன்னதுல இதுல எதாவது சந்தேகம் இருக்கோ?"ன்னு திருநீலகண்டன் கண்கள உருட்டி மெரட்டி எல்லாரையும் ஒரு பார்வெ பாத்தாரு.

            "இதெல்லாம் எஞ்ஞளுக்கு என்னத்தெ தெரியும். நீஞ்ஞ சொல்லுங்க. பொண்ணு பாட்டுக்கு எழுதுவா. அந்த அளவுக்கு பொண்ண படிக்க வெச்சிருக்கு. இப்பக் கூட டிபிஎல்லோ, பிபிஎல்லோ எதோ படிக்குது. பொண்ணுக்கு இம்மாம் படிப்பு வேண்டியதில்லன்னு சொல்லியாச்சு. வாத்தியாரு கேக்குறாப்புல இல்ல!"ன்னாரு கைப்புள்ள வக்கீலப் பாத்து.

            "எம்பில் படிக்கிறேங்கய்யா!"ன்னா செய்யு கைப்புள்ள சொன்னதெ கேட்டு.

            "காலேஜ் அளவுல பாடம் நடத்துற அளவுக்குப் படிச்சிக்கிட்டு இருக்கீங்க. அப்போ பொண்ணும் குரு பரம்பரையிலத்தாம் வர்றாங்க. அப்புறமென்ன. நமக்கு வேலை மிச்சம். பல பரீட்சைகள கை ஒடிய எழுதிருப்பாங்கறதால இப்போ நாம்ம எழுதச் சொல்லி கைய ஒடைச்சிட்டதா யாரும் நெனைச்சிடக் கூடாது!"ன்னு சொல்லி, கையில வெச்சிருந்த கட்டுலேந்து சரசரன்னு தாளுகள உருவி பேனாவக் கொடுத்து செய்யுகிட்டெ சொல்ல சொல்ல எழுதச் சொன்னாரு திருநீலகண்டன்.

            ‍"சொல்லுங்கய்யா! எவ்வளவு வேகமா சொன்னாலும் எழுதுறேம்!"ன்னா செய்யு.

            "இந்த வேகந்தாம் நாம்ம எதிர்பாக்குறது. எள்ளுன்னா எண்ணெய்ன்னு நிக்குறதெல்லாம் எல்லாருக்கும் வாராது. ஒன்னயப் போல ஒரு பொண்ண வுட்டுப்புட்டு அந்தப் பயெ எவளெ கட்டிக்கிட்டு என்னத்தெ பண்ணப் போறாம்? நாட்டுல அவனவனும் இந்த மாதிரி பொண்ணு கெடைக்கலன்னு நிக்குறானுவோ! இவனுக்குக் கொழுப்பு. மகாலட்சுமி மாதிரிப் பொண்ண கால்ல விழுந்து நமஸ்கரிச்சிக்கிட்டெ நெதமும் வாழ்க்கைய ஓட்டலாம். அவ்வேம் கொடுத்து வெச்சது அவ்ளதோம். எதுக்கும் கடவுளோட அனுக்கிரகம் வேணுமோ இல்லியோ? அந்தப் பயலுக்கு அது இல்ல. அதுக்கு நாம்ம என்ன பண்ண முடியும்? அத்து அவ்வேன் தலயெழுத்து. செரி யிப்போ சொல்றதெ எழுதுப் பாப்போம். அந்தப் பெயலுக்கு வரிசெ கட்டி ஆப்பை அடிப்போம்!"ன்னாரு திருநீலகண்டன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...