7 Nov 2020

பாக்காமப் போனா செத்துடுவா!


 பாக்காமப் போனா செத்துடுவா!

செய்யு - 618

            பஞ்சாயத்தெல்லாம் நடந்து அதால ரொம்ப பாதிக்கப்பட்டவே சுப்பு வாத்தியாரு ஒரு சேதியைச் செய்யுகிட்டெயும், விகடுகிட்டெயும் சொல்லியிருந்தாரு, பாக்குக்கோட்டையிலேந்து யாரு போனப் பண்ணாலும் அதெ எடுக்க வாணாம்ன்னு. விகடு அது படிக்கு போன எடுக்காம இருந்தாம். செய்யு அப்பிடியில்ல. அவ்வே யாரு போன பண்ணாலும் எடுத்து அதுக்குப் பதிலச் சொல்றதுதாம் ஞாயம்ன்னு மனசுல ஒரு முடிவுல இருந்தா. இதுக்காகவே சுப்பு வாத்தியாரு எப்ப போன பண்ணாலும்,  "பாக்குக்கோட்டையிலேந்து யாரு போன் பண்ணாலும் எடுக்க வாணாம். படிக்கிறதுல மட்டும் கவனத்தெ வெச்சிக்கோ. அந்தச் சனங்க அநாவசியமா போனப் பண்ணி மனசெ கெடுத்து வுட்டுப்புடும்!"ன்னு சொல்லிட்டெ கெடந்தாரு. சுப்பு வாத்தியாரு அவ்வளவு சொல்லியும் அத்து அவளோட மனசுக்குள்ள ஏறல. செல பேரு அப்பிடித்தாம். எவ்வளவுதாங் எதார்த்தச் சொன்னாலும் அவுங்களோட மனசுக்குள்ள நெனைச்சிருக்கிறதுதாங் சரின்னும் அதுப்படித்தாம் நடக்கணும்ன்னும் நடந்துப்பாங்க. அவுங்க மனசுல சொல்லு புத்தி ஏறாது. ஆனா அதெ கேட்டு நடந்துக்கிறாப்புல தலைய மட்டும் பூம்பூம் மாடு கணக்கா ஆட்டிப்பாங்க. அவுங்க தலைய ஆட்டுற ஆட்டத்தைப் பாத்து சரிதாங் நாம்ம சொல்ற புத்தி நல்லாவே ஏறிடுச்சுன்னு புத்தி சொல்றவங்களும் நெனைச்சிப்பாங்க. 

            பாக்குக்கோட்டையிலேந்து யாரு போன் பண்ணுலாம் செரித்தாம், போன் பண்ணுறப்ப இவ்வே போன எடுத்ததால ராசாமணி தாத்தாவும், பாலாமணியும் செய்யுவுக்கு அடிக்கடிப் போன் பண்ணுறதெ ஒரு வழக்கமா வெச்சிருந்துச்சுங்க. போன எடுத்துப் பேசுனாலும் டக்குன்னு பேசுனோம், பதிலச் சொன்னோம்ன்னு வைக்குறதில்லே. அவ்வே பாட்டுக்கு அவுங்க கேக்குறதுக்குல்லாம் அரை மணி நேரம், ஒரு மணி நேரம்ன்னு வெளக்கத்த வெச்சிட்டு இருந்தா. அப்பிடி அவுங்களுக்கு ஒரு வெளக்கத்தச் சொல்லி, அவுங்கள நெத்தியடி அடிச்சி வுட்டாத்தாம் மனசு கொஞ்சம் ஆறுறதா ஒரு வெளக்கத்தெ வேற சொல்லிக்கிட்டா. மொத்தத்துல பாக்குக்கோட்டையிலேந்து போன பண்ணா எடுக்க வாணாங்ற சேதி மட்டும் அவளோட மனசுல ஏறுனாப்புல தெரியல.

            ராசாமணி தாத்தா போன் பண்ணுறப்பயெல்லாம், "நீயி வூட்டுல யில்லாம வூடெ சரியில்லாம கெடக்குது. ஆத்தாவுக்கு வேற ஒடம்பு சரியில்லாம கெடக்குது. நீயி வந்து ஒரு பார்வெ பாத்தீன்னா கொணப்பாடு கண்டுப்புடும். நீயி வர்றதா மட்டும் சொல்லு! நாமளே வந்து அழைச்சிட்டு வர்றேம்!"ன்னு பேசும். இதெ விசயத்தைத்தாம் கொஞ்சம் கூட மாறாம ஒவ்வொரு தவாவும் அத்து போன் பண்ணுறப்பெல்லாம் பேசும். அதுக்கு செய்யுவும், "ஊர்ல இருந்தப்பல்லாம் ஏம் இப்பிடி அழைக்க வர்றாம பஞ்சாயத்தெ வைச்சீங்க? ஊர வுட்டு எங்கயே ஊரு பேரு தெரியா அனாதியா கெடக்குற யிப்போ மட்டும் அழைச்சிட்டுப் போவ ன்னா காரணம் வந்துச்சு?"ன்னு கேட்டுக்கிட்டு இருந்தா. இதெ கேள்வியத்தாம் அவளும் ஒரே மாதிரியா ஒவ்வொரு தவாவும் எதிர்கேள்வியா சொல்லிட்டு இருந்தா. ஆன்னா ஒவ்வொரு தவாவும் அவ்வே பெரமாதமா மடக்கிப் பதிலச் சொல்றதா மனசுக்குள்ள ஒரு நெனைப்ப நெனைச்சிக்கிட்டா. உண்மையில போன்ல பாக்குக்கோட்டை சனங்க பேசுறதெல்லாம் பொய்யின்னு புரிஞ்சிக்க முடியாத மனமயக்கத்துல செய்யு கெடந்ததெ எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரிய வைக்க முடியல. தன்னோட பேச்சாலயும் செய்மொறையாலயும் ஞாயப்படி நடந்து அவுங்கள மனசு குறுக வைக்கணும்ன்னு நெனைச்சா. அதெல்லாம் மனசு இருக்குறவங்ககிட்டத்தாம் செல்லுபடியாவுங்றதும் மனசே இல்லாதவங்கிட்டெ பைசா காசிக்குப் பிரயோஜனப்படாதுங்றதும் அவளுக்கு என்னவோ புரியவே மாட்டுனுச்சு.

            செய்யு இப்படியா ஒரு கேள்வியக் கேட்டா அதுக்கு ஒடனே ராசாமணி தாத்தா தப்புப் பண்ணிப்புட்டாப்புள, "அப்பிடில்லாம் ஆவும்ன்னு நாம்ம நெனைக்கல! என்னவோ ஆயிடுச்சு! யிப்போ நெனைச்சிப் பாக்குறப்பத்தாம் தப்புன்னு புரியுது. தப்பு செஞ்சவேம் திருந்தக் கூடாதா? யிப்போ யாத்தா மட்டும் ஒன்னயப் பாக்கலன்னா செத்தே போயிடும். நீயி எஞ்ஞ இருக்குறன்னு தெரியாத காரணத்தால நம்மால வந்துப் பாக்க முடியல! நீயி எஞ்ஞ இருக்கேன்னு நாம்ம கேக்காத ஆளில்லெ. தேடாம இடமில்லெ. ஒன்னயப் பாக்காம நமக்கும் நெனைப்பு சரியில்லெ. மொகத்தப் பாக்கணும் போல இருக்கு! நம்மள கூட வுடு. ஆம்பள. வெளியில போறேம் வர்றேம். ஒரு நேரம் இல்லன்னாலும் இன்னொரு நேரம் மனசு அப்பிடி இப்பிடின்னு கொஞ்சம் மாறிக்கிது. ஒம்மட யாத்தாவோட நெலய நெனைச்சிப் பாரு! வூட்டுலயே அடைஞ்சிக் கெடக்குறவே! எந்நேரமும் ஒம்மட நெனைப்பாத்தாம் கெடக்குறா! நீயி அவளெ வந்து பாக்கலன்னாலும் செரித்தாம், அவ்வே ஒன்னய வந்துப் பாக்கலன்னாலும் செரித்தாம் அவ்வே ஒடம்புல உசுரு தங்காதுங்றது மட்டும் சொல்லிக்கிடுறேம்!"ன்னு உருகி வழியும். அதுல கொஞ்சம் கெரங்கிப் போயிடுவா செய்யு.

            அப்பிடி ஒரு மொறை பேசுறப்ப தான் இருக்குற எடத்தோட ஊரு பேரைத்தாம் சொன்னா செய்யு. ஒடனே அதெ வெச்சி வெசாரிச்சிக்கிட்டு, அவ்வே சொன்ன மறுநாளே சரசு ஆத்தா தொணைக்கு ஒரு ஒறவுக்கார பொண்ண அழைச்சிக்கிட்டு கோவில்பெருமாளு நாது மாமா வூட்டுக்கு மின்னாடி வந்து நின்னுச்சு. ராசாமணி தாத்தா சொன்னாப்புல ஒடம்பு சரியில்லாத நோய்ப்பாடு கண்ட ஆளா அத்து தெரியல. நல்லா குத்துக்கல்லாட்டம் ஒடம்பெல்லாம் பெருத்துதாங் இருந்துச்சு. அவுங்கள வூட்டுக்கு மின்னாடிப் பாத்ததுல வெங்குவுக்கு அதிர்ச்சியாப் போயிடுச்சு. அப்போ நாகு அத்தை வூட்டுல இருந்துச்சு. சரசு ஆத்தாவ வூட்டுக்குள்ள கூப்புடுறதா என்னாங்ற கொழப்பத்துலயும், கோவத்துலயும் நின்ன வெங்குவைச் செய்யு கண்டுக்கிடாம, "வா யாத்தா! உள்ள வந்து உக்காரு!"ன்னு சொல்லிப்புட்டா. நாகு அத்தையும் செய்யு அப்பிடிச் சொன்னதெ பாத்துப்புட்டு, வெங்குவப் பாத்து, "வூடு தேடி வந்தவங்கள வாரக் கூடாதுங்ற மாதிரி பாக்கக் கூடாது. உள்ளார வந்து உக்காரச் சொல்லு!"ன்னு சொல்லிப்புட்டு அதுவும் உள்ள வாங்கன்னு கூப்புட்டுச்சு.

            உள்ளார வந்து உக்காந்து சரசு ஆத்தா பாட்டுக்கு ஒப்பாரிய வெச்சு, கதையெ அவுத்து வுட ஆரம்பிச்சிது. "ஏம்டி தங்கம்! இப்பிடிப் பண்ணிப் போட்டீயே? யப்பம் ஆயி வுடலன்னாலும் நீயாச்சும் நாம்ம இஞ்ஞ இருக்க மாட்டேம்ன்னு கெளம்பி வாரக் கூடாதா? செரி ஒம்மாலத்தாம் வார முடியல. ஒரு போன அடிச்சி நாம்ம இந்த மாதிரிக்கி இஞ்ஞ இருக்கேம்ன்னு சொன்னீன்னா நாமளாச்சும் வந்து அழைச்சிட்டு வார்ற மாட்டேமா? நம்மள வுடு. ஒம் புருஷங்கார்ரங்கிட்டெ சொன்னா ஒரு பாய்ச்சலா வந்து அழைச்சிக்கிட்டுப் போவ மாட்டானா? ஏம்டி இப்பிடி பண்ணுனே? வாடி தங்கம்! இன்னிக்கே கையோட ஒன்ன அழைச்சிட்டுப் போறேம். நீயி இஞ்ஞ கெடந்து கஷ்டப்பட வாணாம். ஒன்னயக் கெளப்பிட்டுப் போறதுக்குத்தாம் நாம்ம இஞ்ஞ வந்திருக்கேம்!  ஒன்னயப் பாக்காம ஒம் புருஷன் ஒடைஞ்சிப் போயிட்டாம்! தாத்தா நெலகொழைங்சிப் போயிட்டாரு. நம்மளயுந்தாம் பார்ரேம். அந்த ஏக்கத்துலயே எப்பிடி எளைச்சிப் போயி கெடக்கேம்?"ன்னுச்சு சரசு ஆத்தா. ஆன்னா சரசு ஆத்தா மின்னைக்கு நல்லா ஒடம்பு போட்டு கெழங்காட்டந்தாம் இருந்துச்சு.

            "இந்தப் பாசம்லாம் கலியாணம் பண்ண நாள்லேந்து இப்போ வரைக்கும் எஞ்ஞப் போயிருந்துச்சு யாத்தா?"ங்ற கேள்வியச் செய்யு கேக்காம வுடல.

            "அட யம்மாடி! எம்மட பேத்தியா என்னமா கேள்வியக் கேக்குறா! இந்த தெகிரியத்தத்தாம்டி நாம்ம எதிர்பார்த்தேம். இப்பிடி ஒரு தெகிரியம் ஒமக்கு வாரணும்ன்னுத்தாம் ஆண்டவனாப் பாத்து இன்ன மாதிரிக்கிப் பண்ணிருக்காம் போலருக்கு. இத்துப் போதும்டி தங்கம். இனுமே ஒன்னய யாரும் ஒண்ணுத்தையும் பண்ண முடியாது. நாம்ம கும்புட்ட தெய்வம் நம்மள கைவுடல. ஆவுடையாரு, தொரக்குடி அம்மன், வடவாதி பொன்னியம்மன், பாஞ்சாலம்மன், பெரியாச்சி, ஒஞ்ஞ ஊரு மாரியம்மன்னு ஒண்ணு வுடாம எல்லாத்துக்கும் காசிய முடிஞ்சி வெச்சிருக்கேம். மொத வேலையா ஒன்னயும் கூட ‍அழைச்சிக்கிட்டு அந்தக் காசியக் கொண்டுப் போயி உண்டியில்லப் போட்டுட்டுத்தாம் மறுவேல பாப்பேம்! ஒடனே கெளம்பு!"ன்னு நெலையா நின்னுச்சு சரசு ஆத்தா.

            "யில்ல யாத்தா! யிப்ப நம்மாள வார முடியாது. யப்பா வேற யில்ல. அவுங்களக் கேக்காம வார முடியாது. நாம்ம யிப்போ மேக்கொண்டு படிச்சிட்டு இருக்கேம்! அதெ வுட்டுப்புட்டு ஒங் கூட வார முடியாது!"ன்னா செய்யு அழுத்தமா.

            "ஏந் தங்கம் படிச்சிக்கிட்டா இருக்குது? நல்லா படிடி தங்கம்! அஞ்ஞ பாக்குக்கோட்டைக்கு வா! நல்ல வெதமா வெச்சிப் படிக்க வைக்கிறேம்! படிக்குறத நிப்பாட்டிப்புடல்லாம் வாணாம். தீவாளி வேற வர்றப் போவுதுல்லா. இந்த வருஷம் ஒமக்குத் தல தீவாளி வேற. நீயி நம்ம வூட்டுலத்தாம் இருக்கணும். அதாங் ஒன்னய வந்துக் கூப்புட்டுப் போயிடுறதுன்னு, காலாங்காத்தாலயே எல்லாத்தையும் வெசாரிச்சிட்டு வந்து நிக்குதேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா அப்பிடியே உருகி வழிஞ்சாப்புல.

            "தயவு பண்ணி தப்பா நெனைச்சுக்காதே யாத்தா! எதா யிருந்தாலும் நாம்ம யப்பா, யண்ணங்கிட்டெ கலந்துக்கிட்டுத்தாம் வாரதும், வாராம இருக்குறதும்! நம்மளப் போட்டு கஷ்டப்படுத்தாதே!"ன்னா செய்யு பட்டுன்னு மொகத்துல அடிச்சாப்புல.

            "என்னடி தங்கம்! யிப்பிடிச் சொல்லிப்புட்டே? நாம்ம எம்மாம் ஆசெ ஆசெயா கெளம்பி வந்தேம். யிப்பிடிச் சொல்லுதீயே?"ன்னுச்சு சரசு ஆத்தா ஏமாந்துப் போனாப்புல.

            "அதாங் யாத்தா முடிவு!"ன்னு உறுதியா நின்னா செய்யு.

            "செரிடி தங்கம்! ஒம் முடிவுப்படியே இருக்கட்டும். அதாங் நீயி இருக்குற எடந்தாம் தெரிஞ்சிடுச்சே! இனுமே நாம்ம ஏம் கவலெப்படுறேம். ஒம் புருஷங்காரனும் நீயி இருக்குற எடம் தெரியாம தவிச்சிக்கிட்டுக் கெடந்தாம். இனுமே அந்தத் தவிப்பு இருக்காது பாரு. ஒடனே அவ்வேங்கிட்டெ தகவலச் சொல்லி வந்துப் பாக்க வைக்கிறேம்!"ன்னு சொல்லிட்டு கெளம்ப நெனைச்ச சரசு ஆத்தாவே செய்யு இருக்கச் சொல்லி காலைச் சாப்பாட்ட சாப்புட வெச்சி, இவளும் அன்னிக்குக் காலேஜூ போறதெ நிறுத்திப்புட்டு, கூடவே இருந்து மத்தியானச் சாப்பாட்ட சமைச்சி சாப்புட வெச்சா. இதெ பாக்க வெங்குவுக்குத் தாங்க முடியா கடுப்புன்னாலும் ஒண்ணும் சொல்ல முடியல. மின்ன மாதிரி பேசுறதுக்கான மனநெல கொழைஞ்சு இப்பத்தாம் கோவில்பெருமாள்ல கொஞ்சம் தெளிஞ்சதால அதுக்கு என்ன பண்டுறதுன்னே புரியாம கொழம்பிப் போயி நின்னுச்சு.

            மத்தியானச் சாப்பாட்ட முடிச்ச சரசு ஆத்தா, "இந்த ஊரு எடமே நமக்குப் புரிய மாட்டேங்குதே! கும்பகோணம் வரைக்கும் வந்து பஸ்ஸ ஏத்தி வுட்டீன்னா தேவலாம்!"ன்னு நைச்சியமா சொன்னதுக்கு அதுக்கும் கூட கெளம்பிட்டா செய்யு. அதெ பாத்துப்புட்டு, மவ்வே என்னா இந்த மாதிரிக்கிக் கெளம்புறாளேன்னு வெங்கு செய்யுவ தனியா அழைச்சித் தடுத்துப் பாத்துச்சு. "வர்றத் தெரியுறவங்களுக்குப் போவ தெரியாதா? வழி தெரியாட்டியும் எஞ்ஞயாவது போயித் தொலையட்டும்!"ன்னு சொல்லிப் பாத்துச்சு. செய்யு அதெ கேக்குறாப்புல யில்ல. "கும்பகோணம் போயி பஸ்ஸப் பிடிச்சி ஏத்தி வுடுறதுல என்னாத்தா கொறைஞ்சிப் போயிடப் போறேம்! வூட்டுக்கு வந்தவங்கள அப்பிடில்லாம் நிர்கதியா அனுப்பிச்சி வுடக் கூடாது!"ன்னு சொல்லி கெளம்பிப் போவ ஆரம்பிச்சிட்டா செய்யு. அதெ பாத்ததும் வெங்குவும், நாகு அத்தையும் கூடவே கெளம்பிட்டுங்க, செய்யு பாட்டுக்கு கும்பகோணம் போறேன்னு பாக்குக்கோட்டைக்கே போயிடுவாளோன்னு. அவுங்க அப்பிடி நெனைச்சதும் தப்பில்லங்ற மாதிரிக்கித்தாம் அடுத்தடுத்த சம்பவம் நடந்துச்சு.

            கோவில்பெருமாள்லேந்து பஸ்ஸப் பிடிச்சிக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுல எறங்குனா, சரசு ஆத்தா சொல்லுது, "ஏம்டி தங்கம்! இம்மாம் தூரம் வந்துப்புட்டெ. அப்பிடியே ஒரு எட்டு வெச்சீன்னா பாக்குக்கோட்டை வந்துப்புட்டு ஒம் மொகத்த தாத்தாவுக்குக் காட்டிப்புட்டுத் திரும்பிட்டீன்னா போதும், அவரு மொகத்துல சவக்கலைப் போயி சந்தோஷக் கலை வந்துப்புடும்!"ன்னு.

            அப்பத்தாம் அதுவரைக்கும் ஒண்ணும் பேசாம மொறைச்சிப் பாத்துக்கிட்டுக் கெடந்த வெங்கு பேசுனுச்சு. "இந்தாரு ஒன்னய யாரு இஞ்ஞ வாரச் சொன்னா? எப்பிடி நாஞ்ஞ இருக்குற எடம் தெரியும் ஒமக்கு? வந்ததுமில்லாம நைச்சியமா இஞ்ஞக் கொண்டாந்து ஊருக்குக் கொண்டுப் போவ பாக்குதீயா? பஸ் ஸ்டாண்டுன்னு பாக்க மாட்டேம். சத்தம் போட்டு எம் பொண்ண கடத்திட்டுப் போவ பாக்குறேன்னு சத்தம் போடுவேம் பாத்துக்கோ! மருவாதியா வந்த வழியப் பாத்துப் போவப் பாரு! இந்த நடிப்பையெல்லாம் நம்மகிட்டெ வெச்சிக்கிடாதே! நாமளும் பாக்குறேம் பாக்குறேம் ரொம்ப அதிகமாத்தாம் போயிட்டே இருக்கே!"ன்னு சத்தம் வெச்சுச்சு.

            "எந் பெரிய தங்கத்துக்கு இன்னும் கோவம் போவல போலருக்கு!"ன்னு மொகத்த நெட்டி முறிக்க வந்துச்சு சரசு ஆத்தா. ஒடனே அதோட கையப் பிடிச்சி தட்டி விட்டுச்சு வெங்கு. "இந்த வேசத்தையும், வெசத்தையும் வேற யாருகிட்டயாச்சும் வெச்சுக்கோ!"ன்னுச்சு வெங்கு.

            "பெரியவ்வ நாம்ம! சின்னப் புள்ளீயோத்தானே நீஞ்ஞ! நாம்மத்தாம் பொறுத்துப் பொறுமையாப் போவணும். நீயி நெனைக்குறாப்புல ஒண்ணும் நடந்துடலடி தங்கம்! எல்லாம் மனசுதாம் காரணம். ஊரு ஒலகத்துல நடக்காதக் கதையா நடந்துப்புட்டு? ஒவ்வொரு வூட்டுலயும் நடக்காத சண்டையா நடந்துப்புட்டு? என்னவோ அடிச்சிக்குதுங்க! ஏம் வெட்டிக்கிதுங்க! பெறவு சேந்துக்குதுங்க! ஒறவுல இதெல்லாம் சகஜந்தாம்ப்டி!"ன்னுச்சு சரசு ஆத்தா ஞாயம் வைக்குறாப்புல.

            "செரித்தாம் நீயி சொல்றது! ல்லன்னு சொல்லல. அடிச்சிக்குதுங்கத்தாம். வெட்டிக்கிடுதுங்கத்தாம். எதுவும் பஞ்சாயத்துன்னு போயி நிக்கலையே. அததுக்குள்ளத்தான தீத்துக்குது. நீயி அப்பிடியில்லையே. பஞ்சாயத்துன்னு போயி நின்னு அசிங்கம் பண்ணுன. எம் பொண்ணு தூக்கே மாட்டிக்கிட்டபயும் செரித்தாம், அவ்வே உசுருக்கு ஆஸ்பிட்டல்ல போராடிட்டு இருந்தப்பவும் செரித்தாம் நாம்ம போலீஸ் ஸ்டேசனுக்குக் கூட போவலீயே? ஆன்னா அப்பவும் நீயி எம் பொண்ண வந்து எட்டி பாக்கலையே. யிப்போ என்னவோ பாக்காததப் பாக்குறாப்புல கௌம்பி வர்றே? நீயில்லாம் ஒரு பொம்பளன்னு ஒங்கிட்டெ நின்னும் இம்மாம் நேரம் பேசிட்டு இருக்கேம் பாரு! எல்லாம் ஒன்னயச் சொல்லிக் குத்தமில்ல. நாம்ம வயித்துல பெத்தேம் பாரு ஒரு குத்துக்கல்ல. அதால யிப்பிடி அனுபவிக்குறாப்புல ஆவுது! ச்சையே நாயே! கெளம்புடி மொதல்ல!"ன்னு வெங்கு மவ்வே பக்கம் திரும்பிச் செய்யுவோட பொடணியில பிடிச்சி தள்ளிக்கிட்டு கோவில்பெருமாள் வந்து‍ சேந்துச்சு நாகு அத்தையோட. சரசு ஆத்தா மேக்கொண்டு என்ன பேசுறது, பண்டுறதுன்னு புரியாம வெறிக்கப் பாத்துச்சு. எதாச்சும் இதுக்கு மேல பேசுனா வெங்கு பாய்ஞ்சு அடிச்சாலும் அடிச்சிப்புடும்ன்னு அதுக்குப் புரிஞ்சதும் அது பாத்துக்கிட்டு நிக்க செய்யுவ பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்துச்சு வெங்கு.

            வந்ததும் வாரதுமா மொத வேலையா விகடுவுக்குப் போன அடிச்சி தகவலச் சொன்னுச்சு வெங்கு. இந்தத் தகவலெ அவ்வேம் சுப்பு வாத்தியாருக்குச் சொல்ல, "எப்போ சேதியச் சொல்லுது பாருடாம்பீ! வந்த ஒடனேயே சொல்லாம, விருந்துல்லாம் வெச்சி அனுப்பி வுட்டுப்புட்டுச் சொல்லுது பாரு! எல்லாம் புத்திக் கெட்டுப் போயித்தாம் நிக்குதுங்க. அவ்வே பாட்டுக்கு அழைச்சிட்டுப் போயி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனா, என்னத்தடாம்பீ பண்ணுறது? இதுகள வெச்சிக்கிட்டுல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது! நாம்ம போனத்தாம் செரிபட்டு வரும்!"ன்னு அவரு நடுங்கிப் போயி ஒடனே பஸ்ல கூட கௌம்பாம டிவியெஸ்ஸூ பிப்டிய எடுத்துக்கிட்டு பொழுது மசங்குற அந்த நேரத்துலயும் கோவில்பெருமாள் கெளம்பிட்டாரு. 

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...