பட்ட எடத்துலதாம் பக்காவா படும்!
செய்யு - 617
உடம்புல எங்க அடிபட்டாலும் அந்தப் புண்ணு
எப்பிடியோ ஆறி வந்துடும். கால்ல அடிபட்ட புண்ணுக்கு மட்டும் அது பொருந்தாது. பொருந்தாதுன்னா
அடிபட்ட எடத்துலயே திரும்ப திரும்ப அடிபட்டு புண்ணு ஆறாம புண்ணாயிட்டே இருக்கும். உடம்புல
மித்த எடங்கள்ல அடிபட்டா அடிபடாம பாத்துக்கிட முடியும். காலு அப்பிடியில்ல எங்கப் போறதுன்னாலும்
அதுதாம் அழைச்சிட்டுப் போயி ஆவணும். போற பாதெ எப்பிடி இருந்தாலும் அதுதாம் களத்துல
எறங்கியாவணும். கல்லுலயும், முள்ளுலயும் அடிபடுறதுக்கான நெலையே அது எதிர்கொண்டுதாம்
ஆவணும். கால்ல அடிபடுறாப்புலத்தாம் குடும்பத்துல பொம்பளைங்க சொகமில்லாமப் போயிடுறது.
ஆம்பளைங்க குடும்பத்துல சொகமில்லாம போனா அதெ எப்பிடியோ தாங்கி நின்னு பொண்டுக குடித்தனத்த
தூக்கி நிறுத்திப்புடும்பாங்க. பொண்டுக சொகமில்லாமப் போனா குடித்தனத்தெ தாங்கிப்
பிடிக்கிறது அவ்வளவு சுலுவு யில்ல.
செய்யுவுக்கு ஒடம்பும், மனசும் சரியில்லாமப்
போனது சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்கு ஒரு அடின்னா, அடுத்த அடி வெங்குவுக்கும்
அப்பிடி ஆனதுதாம். சுப்பு வாத்தியாரு எப்பிடியாச்சும் செய்யுவக் கோவில்பெருமாள்ள கொண்டு
வெச்சி பொண்ண சரிபண்ணிக் கொண்டு வந்துப்புடுவோம்ன்னு போனா, இங்க திட்டையில வெங்குவுக்குச்
செய்யுவுக்கு ஆனதெ போல மனசு பித்து பிடிச்சாப்புலப் போச்சு. எந்நேரத்துக்கும் பொண்ணப்
பத்தி நெனைச்சி நெனைச்சே, தன்னோட முடிவாலத்தாம் பொண்ணுக்கு அப்பிடி ஆச்சுதுன்னு நெனைச்சி
மருக ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா யாருகிட்டெயும் பேசுறது இல்லாமப் போனுச்சு. பஞ்சாயத்து
வெச்சு தங் குடும்பத்தெ தெருவுல இருக்குறவங்க அசிங்கப்படுத்திட்டதா நெனைச்சதால அது
தெருவுலயும் யாருகிட்டெயும் பேசல. யாரும் பேச வந்தாலும் அது பேசுறது கெடையாது. தெருவுல,
உறவுல ஒரு விசேசம்ன்னாலும் போறதில்ல. எல்லாத்துக்கும் விகடுவும், ஆயியும் போயிட்டுக்
கெடந்தாங்க.
வெளியாளுங்ககிட்டெ பேச்செ கொறைச்சதெப்
போல வூட்டுல இருந்த மவ்வேன், மருமவ்வே, பேத்திக்கிட்டெ கூட பேசாம அது பாட்டுக்கு ரூமுக்குள்ளயே
ஒதுங்கிக் கிடக்க ஆரம்பிச்சது. விகடுவோ, ஆயியோ எதாச்சும் பேசுனா ஒரு வார்த்தையோ,
ரண்டு வார்த்தையோ பேசுறதோட செரி. காலப்போக்குல அதுவும் கொறைஞ்சிப் போயி எதெக்
கேட்டாலும் உம்மானா மூஞ்சியப் போல உக்கார ஆரம்பிச்சிது. செரித்தாம் கொஞ்ச காலம் ஓடுனா
செரியாப் போயிடும்ன்னு நெனைச்சிக்கிட்டு விகடுவும் ஆயியும் இருந்ததுல வெங்குவுக்குக்
கூடிய சீக்கிரமே பைத்தியம் பிடிச்சாப்புல ஆயிடுச்சு.
பகல் நேரமெல்லாம் அது பாட்டுக்கு பித்துப்
பிடிச்சாப்புல உக்காந்திருந்தது, ராத்திரி ஆனாக்கா அது பாட்டுக்கு அங்கயும் இங்கயும்
நடக்க ஆரம்பிச்சது. அதுவா மூலைக்கு மூலை, சொவத்துக்குச் சொவரு நின்னு பிதத்த ஆரம்பிச்சது.
ஆரம்பத்துல விகடுவாலயோ, செய்யுவாலயோ இதெ என்னங்கறெ கண்டுபிடிக்க முடியல. போவப் போவத்தாம்
வெங்கு பகல்ல அப்பிடியே உக்காந்திருந்தாலும் பகல்லயும் தூங்குறதில்ல, ராத்திரியும்
அங்க இங்கன்னு நடந்துக்கிட்டு ராத்திரியும் தூங்கறதில்ங்றதெ கண்டுபிடிச்சாங்க. வெங்குவ
தூங்க வெச்சா நெலமெ சரியாயிடும்ன்னு நெனைச்சாங்க. எப்படியாச்சும் வெங்குவ தூங்க வைக்கணும்ன்னு
தேங்காப்பால வெச்சிக் கொடுக்குறது, நெறைய சாப்புடச் சொல்றது, செம்பருத்திப் பூவுல
சாரம் எடுத்துத் தேன் கலந்து கொடுக்குறதுன்னு எவ்வளவோ செஞ்சுப் பாத்தாங்க. வெங்குவுக்கு
தூக்கம் வருவேன்னான்னு இருந்துச்சு. ஒரு நாளு, ரண்டு நாளு தூங்கலன்னா பரவாயில்ல. பல
நாளுங்க தூங்கலன்னா மனுஷனோட கதி என்னாவுறது?
ஒரு கட்டத்துக்கு மேல நெலமெ மோசமாவ ஆரம்பிச்சது.
ராத்திரி தூங்காம அலைஞ்சிகிட்டு இருந்த வெங்கு திடீர்ன்னு தன்னைத் தானே மாருல அடிச்சிக்க
ஆரம்பிச்சிது. சொவத்துலயும் கைகளப் போட்டு படார் பாடர்ன்னு அடிக்க ஆரம்பிச்சது. அது
மாதிரியான நேரங்கள்ல விகடுவோ, ஆயியோ யாராச்சும் ஒருத்தரு ராத்திரி முழுக்க தூங்காம
இருந்து அடிச்சிக்கிற வெங்குவோட கையப் பிடிச்சிக்க வேண்டியதா இருந்துச்சு. தலையப்
பிடிச்சி சொவத்துல மோதிக்கிறப்ப இன்னும் பயங்கரமா இருந்துச்சு. "இந்த மண்டையிலத்தான
எம்மட பொண்ண பிடிச்சி அந்த பொட்ட பயலுக்குக் கட்டிக் கொடுக்கணுங்ற எண்ணம் வந்துச்சு.
இந்த மண்டெயே இருக்கக் கூடாது. ஒடைஞ்சிப் போயிடணும்!"ன்னு சொல்லிக்கிட்டு தலைய
சொவத்துலயே அது பாட்டுக்கு முட்டிக்கிட்டெ கெடக்கும். யாராச்சும் வந்து அதெ அப்பிடியே
பிடிச்சி சொவத்துக்கு அந்தாண்ட நிறுத்திக்கிடணும். அப்பிடி நிறுத்துனாலும் கையால தலையில
போட்டு அடிச்சிக்கும். ஒடனே கைகளப் பிடிச்சாவணும். சில நேரங்கள்ல விகடுவோ, ஆயியோ
ஒருத்தரால நெலமையைச் சமாளிக்க முடியாது. ரண்டு பேருமா சேந்து வெங்குவப் பிடிச்சிக்கிறாப்புல
ஆயிடும்.
செய்யுவோட தப்பான கலியாணத்துக்கு முழுக்க
முழுக்க தான்தான் காரணங்ற குற்ற உணர்ச்சி வெங்குவோட மனசுல மலையப் போல வளந்து நின்னுச்சு.
அந்தக் குற்ற உணர்ச்சியப் போவப் போவ அதால சமாளிக்க முடியல. எந்நேரமும் தப்புப் பண்ணிப்புட்டதாவும்,
பொண்ணோட வாழ்க்கையக் கெடுத்துப்புட்டதாவும் ஒரு நெனைப்பு அதுக்குத் திரும்ப திரும்ப
கடல் அலைகளப் போல வந்துகிட்டெ இருந்துச்சு. அந்த நெனைப்ப எப்பிடித் தடுத்து நிறுத்துறதுங்றது
புரியாம வெங்கு பாட்டுக்கு ஒண்ணு கெடக்க பண்ணிட்டு இருந்துச்சு. "டேய் அந்த நெனைப்பு
வருதுடா! நம்மளப் போட்டு அடிக்கச் சொல்லுதுடா! நம்மளக் கொடுமெ பண்ணிக்கிட்டத்தாம்டா
அந்த நெனைப்பு அடங்கிப் போவுது! ல்லன்னா அப்பிடியே மண்டையில எரியுற வெறகெ சொருவனாப்புல
போட்டு நம்மள அலக்கழிக்குதுடா!"ன்னு சொல்லி கத்த ஆரம்பிச்சது.
ஒரு கட்டத்துல நெலமெ கைக்கு மீறப் போவ
ஆரம்பிச்சிது. விகடுவும் ஆயியும் என்ன பண்ணுறதுன்னு புரியாம தவிச்சிப் போயி நின்னாங்க.
இந்த விசயத்தெப் பத்தி கோவில்பெருமாள்ல இருந்த சுப்பு வாத்தியார்கிட்டெ போன் பண்ணிச் சொல்லவும் அவுங்களுக்கு யோசனையா
இருந்துச்சு. செய்யுவ கொஞ்சம் கொணம் பண்ணிக் கொண்டு வர்றதாக்காகப் போயிருக்கிறவருக்கு
இந்த விசயம் தெரிஞ்சு வந்துப்புட்டா வூட்டுல ஒண்ணுக்கு ரண்டா பைத்தியப் பிடிச்சவங்க
ஆயிடுவாங்கன்னு நெனைச்சிக்கிட்டு, என்னத்தெ ஆனாலும் செரித்தாம் இந்த நெலமையே தாங்களே
சமாளிக்கிறதுன்னு முடிவெ பண்ணிக்கிட்டாங்க விகடுவும், ஆயியும். செய்யுவ அழைச்சிட்டுப்
போயிக் காட்டுன கண்ணிபிரான் டாக்கடர்கிட்டெயே ஏம் வெங்குவயும் அழைச்சிட்டுப் போயிக்
காட்டக் கூடாதுன்னு ஆயி கேட்டப்போ, அதாங் செரின்னு வெங்குவ டிவியெஸ்ஸூ பிப்டியில பின்னாடி
உக்கார வெச்சி திருவாரூரு எயெம்சி ஆஸ்பிட்டலுக்குக் கொண்டுட்டுப் போனாம் விகடு.
ஆஸ்பிட்டலுக்கு வெங்குவக் கொண்டுட்டுப்
போறதுக்குள்ள படாத பாடு பட்டுப் போயிட்டாம் விகடு. போற வழியில ஒரு கோயில வுடல.
எந்தக் கோயிலப் பாத்தாலும் அங்கயே வண்டிய நிறுத்தச் சொல்லி எறங்கி அந்தக் கோயிலச்
சுத்தி சுத்தி வர்ற ஆரம்பிச்சிது. சூடத்தெ வாங்கியா அதெ கொளுத்திப்புட்டுத்தாம் வருவேன்னு
சொல்லி அலம்பல் பண்ண ஆரம்பிச்சிடுது. வயக்காட்டுக்கு நடுவுல இருக்குற கோயிலுகிட்ட
நின்னு சூடத்தெ வாங்கிட்டு வான்னு சொன்னா விகடு என்னத்தெ பண்ணுவாம்? அவ்வேம் போறது
டாக்கடர்ரப் பாக்க! அந்த நெனைப்புல போறவனுக்குக் கையில கற்பூரத்த வெச்சிக்கிடணும்ன்னு
என்னத்தெ தோணும். அவனெ பல நாளு ராத்திரி சரியா தூங்காமல கலக்கத்துலயும், கொழப்பத்துலயும்
கெடந்தாம். இப்பிடி வயக்காட்டுக்கு நடுவுல இருக்குற கோயிலுக்கு வண்டிய வுடச் சொல்லி
கற்பூரத்தெ கேட்டா, வெங்குவ தனியா வுட்டுப்புட்டு போயி கற்பூரத்த வாங்கிட்டு வாரதா?
கூடவே அழைச்சிக்கிட்டுப் போயி வாங்கிட்டு வாரதான்னு அது வேற யோசனெ அவனுக்கு.
அம்மாக்காரி நல்ல மனநெலையில இருந்தா கோயில்ல
வுட்டுப்புட்டு வாங்கிட்டு வாரலாம். மனநெல சரியில்லாதவள வுட்டுப்புட்டு கற்பூரத்த வாங்கிட்டுப்
போறேன்னு போயி, அம்மாக்காரி பாட்டுக்கு எங்காச்சும் போயிட்டா, பெறவு தேடிக் கண்டுபிக்கிறதுன்னா
சுலுவா இருக்காதுன்னு நெனைச்சி, வெங்குவ வந்து வண்டியில ஏறச் சொன்னா அத்து ஏற மாட்டேங்கது.
கற்பூரத்தெ கொளுத்தாம கோயில வுட்டு வார மாட்டேன்னு அடம் பண்ணுது. அதெ சமாளிச்சி எப்பிடிப்
போயி கற்பூரத்தெ வாங்கிட்டு வாரதுன்னு, ஏம்டா இப்பிடி அங்கயும் இங்கயும் வயக்காட்டுலயும்
கோயிலக் கட்டி வெச்சி பெரானனைய வாங்குதீயேன்னு கோயிலக் கட்டுவனெ நெனைச்சி மனசுக்குள்ள
திட்ட ஆரம்பிச்சிட்டாம் விகடு.
அம்மாக்காரிய விட்டுப்புட்டுப் போயி கற்பூரத்தெ
வாங்கப் போறதே போல முட்டாள்தனமான காரியும் வேறல்லங்றது புரிஞ்சதும் அவ்வேம் பாட்டுக்குக்
கோயில்லயே உக்காந்துட்டாம். என்னா ஆனாலும் செரித்தாம் வெங்கு வந்தா அழைச்சிட்டுப்
போயி கற்பூரத்தெ வாங்கறது. இல்லாட்டி இங்கேயே கெடந்தாச்சும் டாக்கர்ரப் பாக்காட்டியும்
பரவாயில்ல பத்திரமா வூட்டுக்கு அழைச்சிட்டுப் போறதுங்ற முடிவுக்கு வந்துப்புட்டாம்.
கடெசீயில நெலமெ அப்பிடித்தாம் ஆனுச்சு. இருட்டு ஆனதுக்குப் பெறவு வெங்கு வாடா வூட்டுக்குப்
போவலாம்ன்னு அதுவா சொல்ல ஆரம்பிச்சிதும், அதெ கெளம்பிக்கிட்டு வூட்டுக்கு வந்தாம்.
அன்னிக்கு டாக்கடர்ரப் பாக்காம இந்தக் கதிக்குத் திரும்புறாப்புல ஆயி மறுநாளு திரும்பவும்
டாக்கர்ரப் பாக்க வெங்குவோட கெளம்புனாம். இந்தத் தடவெ யோசனையா ஒரு பை நெறைய கற்பூர
டப்பாக்காள வாங்கிப் போட்டுக்கிட்டு, ரண்டு தீப்பொட்டியையும் எடுத்துப் போட்டுக்கிட்டாம்.
ரெண்டாவது நாளு கெளம்பிப் போயி புலிவலம்
பெருமாள் கோயிலு வரைக்கும் அவனால வெங்குவ அழைச்சிட்டுப் போவ முடிஞ்சது. போற வழியில
இருந்த ஒரு கோயில வுடல. வேப்ப மரத்துக்கு துணியக் கட்டிருந்தாலும் அங்க நிப்பாட்டச்
சொல்லி கற்பூரத்தெ கொளுத்திச் சுத்தி வந்துகிட்டெ கெடந்துச்சு வெங்கு. எங்கச் சுத்துனாலும்,
"எம் மனசே எப்பிடியாச்சும் சரி பண்ணி வுட்டுப்புடு உஞ்சினி ஐயனாரே!"ன்னு
முணுமுணுத்துக்கிட்டெ கெடந்துச்சு. அதெ பாக்குறப்போ விகடுவுக்குப் பாவாமாப் போயிடுச்சு.
ஒரு மனசு மனுஷனப் போட்டு அன்ன பாடா படுத்தும்ன்னு அவ்வேம் பாட்டுக்கு விஞ்ஞானிக அளவுக்கு
யோசிக்க ஆரம்பிசிட்டாம். கெடசீயா புலிவலம் பெருமாள் கோயில்ல நின்னு கற்பூரத்தெ கொளுத்துனப்போ
ராத்திரி மணி எட்டரை. அதுக்கு மேல போயி எங்க டாக்கடர்ரப் பாக்கறதுன்னு திரும்பவும்
வூடு வந்து சேந்தாம் விகடு.
மூணாவது நாளு பள்ளியோடம் விட்டு வந்தெல்லாம்
சாயுங்காலமா கெளம்பிப் போயி டாக்கடர்ரப் பாக்க முடியாதுன்னு, மத்தியானம் பள்ளியோடத்துக்கு லீவ அடிச்சிட்டு வெங்குவ
அழைச்சிக்கிட்டு, கற்பூர டப்பாக்களோடயும், தீப்பெட்டியோடயும் டிவியெஸ்ல கெளம்பிட்டாம்.
அப்பிடிக் கெளம்பியும் டாக்கடர்ரப் பாக்கப் போறப்ப ராத்திரி ஏழு மணி ஆனுச்சு. கண்ணபிரான்
டாக்கடரு வெங்குவ தனியா வெச்சியும், விகடுவோட வெச்சும் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டாரு.
சரியான நேரத்துல கூப்புட்டுட்டு வந்ததா சொன்னவரு அவரு பாட்டுக்கு மருந்து மாத்திரைகள
எழுத ஆரம்பிச்சப்போ, "தூக்க மாத்திரைகள மட்டும் நெறைய எழுதிக் கொடுங்க. தூக்கந்தாம்
வர்ற மாட்டேங்குது!"ன்னு அதுவாவே சொன்னிச்சு வெங்கு. டாக்கடரு சிரிச்சிக்கிட்டெ
எதுவும் சொல்லாம எழுதிக் கொடுத்தாரு. கெளம்புறப்போ டாக்கரோட கால்ல வுழுந்து,
"எம் மனசெ சரிபண்ணி வுட்டுப்புடுங்க, ஒஞ்ஞளுக்கும் கற்பூரத்தெ கொளுத்துறேம்!"ன்னு
கற்பூர டப்பாவுலேந்து கற்பூரத்தெ வெளியில எடுத்து வெச்சிடுச்சு வெங்கு. விகடு எவ்வளவோ
தடுத்துப் பாத்தாம். வெங்கு கேக்குறாப்புல யில்ல. டாக்கடர்ரே அவுங்க விருப்பப்படி பண்ணட்டும்ன்னு
சொன்னதுக்குப் பெறவு அவருக்கும் சேத்து ஒரு கற்பூரத்தெ கொளுத்திப்புட்டுத்தாம் கெளம்புனுச்சு
வெங்கு. விகடுவுக்கு அதெ பாக்குறப்போ ரொம்ப சங்கடமா போயிடுச்சு. போறப்ப அவன் டாக்கர்ரப்
பாத்து கையெடுத்துக் கும்புட்டாம். "ஒண்ணும் பெரச்சனெ யில்ல! போயிட்டு வாங்க!"ன்னு
சொல்லி அவரு அனுப்பி வெச்சாரு.
மாத்திரை வாங்க வந்தப்போ, வெங்கு சொன்னுச்சு,
"எல்லா மாத்திரையையும் வாங்காதே. அதெல்லாம் பைத்தியம் பிடிச்சவங்க சாப்புடுறது.
அதையெல்லாம் வாங்கிக் காசிய கரியாக்காதே. தூக்க மாத்திரை அதுல எதுன்னு கேட்டு அதெ மட்டும்
வாங்கியா. மித்த மாத்திரைகள வாங்கியாந்தீன்னா அதையெல்லாம் சாப்புட மாட்டேம் பாத்துக்கோ.
நாம்ம ன்னா பைத்தியமா கேக்குறேம்?"ன்னு. செரித்தாம்ன்னு தூக்க மாத்திரைய மட்டும்
வாங்கியாறதா சொல்லிட்டு எல்லா மாத்திரையையும் வாங்கியாந்தாம் விகடு. அன்னிக்கு டாக்கடர்ரப்
பாத்துட்டு வூடு திரும்பனப்போ பத்தரை மணி ஆயிருந்துச்சு. வர்றப்போ பரோட்டா சாப்புடணும்ன்னு
ஆசையா இருக்குறதா வெங்கு சொன்னதெ கேட்டுக்கிட்டு அதெ பார்சல் கட்டிக்கிட்டு வந்திருந்தாம்.
வெங்கு ரொம்ப ஆசையோட பரோட்டவச் சாப்புட்டுச்சு.
ரொம்ப நாளுக்குப் பெறவு திருப்தியா சாப்புட்டது அன்னிக்குத்தாம். அந்த அளவுக்குத்
தன்னோட மனசு முழுசையும் டாக்கடர்கிட்டெ கொட்டித் தீத்துருந்துச்சு. சாப்புட்டு முடிச்சதும்
தூக்க மாத்திரைய எடுன்னதும் விகடு சுதாரிச்சிக்கிட்டு, "இந்த மாத்திரையல்லாம்
பொடி பண்ணித்தாம் டாக்கடரு சாப்புடணும்ன்னு சொல்லிருக்காரு!"ன்னு சொல்லி, வெங்குவுக்குத்
தெரியாம டாக்கடரு எழுதிக் கொடுத்திருந்த அஞ்சு மாத்திரைகளையும் தாள்ளல ஒண்ணா போட்டு
நசுக்கிப் பொடியாக்கி அதெ கொண்டுப் போயிக் கொடுத்தாம். அதெ அப்பிடியே தாளோட வாங்கி
வாயிலப் போட்டுக்கிட்டு தண்ணியக் குடிச்சிது வெங்கு. அதெ சாப்புட்டதும் அன்னிக்கு
நல்லா தூங்க ஆரம்பிச்சது. வெங்கு தூங்க ஆரம்பிச்சதும் நடந்த கதையெல்லாம் ஆயிகிட்டெ
சொல்லி மாத்திரைய மறைச்சி வெச்சி, தூக்க மாத்திரைய மட்டும் கொடுக்குறாப்புல எல்லா
மாத்திரையையும் பொடிச்சுக் கொடுக்கணுங்றதெ சொன்னாம். தனித்தனியா எல்லா மாத்திரையையும்
கொடுக்குறப்போ வெங்கு சாப்புட முடியாதுன்னு அடம் பண்ணிப்புட்டா என்ன பண்ணுறதுங்ற
பயம் அவனுக்கு இருந்துச்சு. ஆயியும் அவ்வேம் பண்ணுறதுதாம் சரின்னு சொன்னா.
வாரத்துக்கு ஒரு நாளு வெங்குவ கண்ணிபிரான்
டாக்கடர்கிட்டெ அழைச்சிட்டுப் போற நெலமே மாறி, பாஞ்சு நாளுக்கு ஒரு மொற அழைச்சிட்டுப்
போற நெலமெ வர்ற வரைக்கும் கொஞ்சம் செருமமாத்தாம் இருந்துச்சு. அதீதமான தூக்கம், அதீதமான
பொலம்பல், அதீததமான அழுகெ, அதீதமான கோவம்ன்னு வெங்குப் போட்டு பாடா படுத்திக்கிட்டுக்
கெடந்துச்சு. திடீர்ன்னு விகடு பள்ளியோடம் விட்டு வந்தாப் போதும் அதுவா ஒரு கோயிலு
பேர்ரச் சொல்லி அங்கப் போகணும்ன்னு நிக்கும். விகடுவால ஒண்ணும் சொல்ல முடியாது.
டிவியெஸ்ல வெச்சி அதெ அழைச்சிட்டுப் போவாம். அந்தக் கோயிலுக்குக் போனா அந்தக் கோயில
கணக்கு வழக்கு இல்லாம சுத்தி வந்து கற்பூரத்த கொளுத்தி முடிச்சிருக்கும். நாளாவ நாளாவ
வெங்குவ அழைச்சிக்கிட்டு கோயிலு கோயிலா சுத்துறாப்புல ஆயிடுச்சு விகடுவோட நெலமெ.
அதெப் பாத்து ஆயி கூட சிரிக்க ஆரம்பிச்சிட்டா, "இப்பிடியாடா ஆவணும் மனுஷா ஒம்
நெலமே? கடவுளு இல்லன்னு நின்னுகிட்டெ இருந்தீயே! இப்பிடி கோயிலு கோயிலா அலையுறாப்புல
ஆயிடுச்சே! கடவுளு இருக்காரு மனுஷா!"ம்பா அவ்வே.
சில நேரங்கள்ல தன்னோட சின்ன வயசுல பாத்த
கோயிலுக்குப் போவணும்ன்னு சொல்லி வெங்கு விகடுவெ அழைச்சிக்கிட்டு அது பாட்டக்குப்
போவும். அது சொல்ற எடத்துக்குப் போயி பாத்தா கோயிலும் இருக்காது, ஒரு மண்ணும் இருக்காது.
பொட்ட வெளியா இருக்கும். "இந்த எடந்தாம்டாம்பீ! நாம்ம சின்ன புள்ளையா இருந்தப்போ
கோயிலு இருந்துச்சே! யிப்போ எஞ்ஞடா காணும்?"ன்னு அப்பாவியாக் கேக்கும். அதுக்கு
பதில ஒண்ணும் சொல்ல முடியாம திரும்ப அழைச்சிட்டு வர்ற வேண்டியதா கெடக்கும்.
இப்பிடி மவனும், மருமவளும் படுற பாடு ரொம்ப
நாளு வரைக்கும் சுப்பு வாத்தியாருக்குத் தெரியாம இருந்துச்சு. ரொம்ப தெறமையா பல நாளு
வரைக்கும் அதெ ரண்டு பேரும் சமாளிச்சிக்கிட்டும் இருந்தாங்க. திடீர்ன்னு ஒரு நாளு சுப்பு
வாத்தியாரு திட்டைக்கு வர்ற வரைக்கும் அவருக்கு இங்க வூட்டுல நெலமெ சகஜமாத்தாம் இருக்குன்னெ
நெனைச்சிக்கிட்டு இருந்தாரு. அவரு வந்துப் பாத்தப்பத்தாம் வூட்டொட நெலமெ புரிஞ்சிது.
ரொம்பவே குடும்பத்தெ தவிக்க வுட்டுப்புட்டேம்ன்னு நெனைச்சி துடிச்சிப் போயிட்டாரு.
அப்போ பாதி அளவுக்கு வெங்குவுக்கு நல்லாவே கொணம் கண்டிருந்துச்சு. இருந்தாலும் மருந்து
மாத்திரைகள வுட எடமாற்றம் நல்ல மனமாற்றத்தெ கொண்டு வருங்றதெ மவளோட அனுபவத்துலேந்து
தெரிஞ்சிக்கிட்ட சுப்பு வாத்தியாரு, வெங்குவையும் அழைச்சிக்கிட்டுக் கோயில்பெருமாளுக்குப்
போனாரு. அவரு நெனைச்சது சரிதாங்ற அளவுக்கு அங்கப் போயி மவளப் பாத்ததும், சுத்தி யிருந்த
சனங்களோட சகஜமா பேசிட்டுக் கெடக்கவும் ஆரம்பிச்சப்போ வெங்குவோட நெலமெ இன்னும் நல்லா
கொணம் காண ஆரம்பிச்சிது. கொஞ்ச நாளு வெங்கு கொணப்பாடு கண்டதும் இனுமே ஒண்ணும் பெரச்சனெயில்லன்னு,
திட்டையில கொஞ்ச நாளு மவனுக்கும், மருமவளுக்கும் தொணையா இருந்துட்டு வருவோம்ன்னு
நெனைச்சு சுப்பு வாத்தியாரு இங்க வந்தாரு. கோவில்பெருமாள்ல யிப்போ மவளையும், பொண்டாட்டியையும்
பாத்துக்கோ மச்சாங்கார குடும்பமே இருக்குங்ற தெம்பும் நம்பிக்கெயும் அவரோட மனசு பூரா
இருந்ததால தெகிரியமா கௌம்பி வந்தாரு.
ஆனா, சுப்பு வாத்தியாரு திட்டைக்கு இங்க
வந்தப்போ, அங்க கோவில்பெருமாள்ல சில சம்பவங்க நடந்துச்சு. அதெ கேள்விப்பட்டதும் ஏம்டா
இங்க வந்தோம்ன்னு ஆயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கு.
*****
No comments:
Post a Comment