10 Nov 2020

மாமா பையனின் குறும்படம்

மாமா பையனின் குறும்படம்

            மாமா பையன் ஒருவன் குறும்படம் எடுத்து விட்டதாகப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வருங்காலத்தில் ஷங்கர் அளவுக்கோ, மணிரத்தினம் அளவுக்கோ வர வாய்ப்புள்ளதாக அளந்து கொண்டிருந்தார்கள். இப்படிச் சொன்னால் அந்தக் குறும்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா? பார்த்தால் அரதப் பழசான கதை. படித்த காரணத்தால் அப்பாவின் குலத்தொழிலை செய்யாமல் மகன் வீம்பு பிடிக்கிறான். குடும்பத்தின் பசி, பட்டினி மற்றும் அப்பாவின் மரணத்தைப் பார்த்து அதையே செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது மகனுக்கு. அதைச் செய்வதுதான் சரியானது என்று கதையை டைட்டில் கார்டு போட்டு முடித்திருந்தான் மாமா பையன். படம் பத்தொன்பது நிமிடங்களுக்கு ஓடியது. நான் பார்த்ததில் யூடியூப்பில் பார்வை ஒன்று கூடியிருக்கும். மொத்தம் நான் பார்த்த வரையில் நானூற்று எழுபத்து ஆறு பார்வைகளும் முந்நூற்று ஐந்து பிடித்தங்களும் அப்போது பதிவாகியிருந்தன. பார்த்தவர்கள் அனைவரும் உறவினர்களாகவும் பிடித்தத்தைப் பதிவு செய்திருந்தவர்களும் உறவினர்களாகவும் இருந்திருக்க வேண்டும். பிடித்தமின்மை எதுவும் பதிவாகவில்லை. இப்போது எல்லார் கையிலும் கைபேசி இருக்கிறது. யார் வேண்டுமானாலும் குறும்படம் எடுக்கலாம். யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய முடிகிறது. உறவினராகப் போய் விடுவதால் வாட்ஸப்பில் வரும் அதன் இணைப்பைப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. அதற்குக் கருத்தும் இட வேண்டியதாக இருக்கிறது. இல்லாவிடில் உறவு முறிந்து விடுகிறது. முதல் குறும்படத்திலேயே ஒருவரைப் பற்றி முழுமையாக முடிவு கட்டி விட முடியாது. எனவே நான் அடுத்த குறும்படத்தை விரைவில் எதிர்பார்ப்பதாக நான் கருத்திட்டேன். இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மறு சம்பவம் எதுவும் நடக்கவில்லை. மாமா பையன் மறு குறும்படம் எதுவும் எடுக்கவில்லை. அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கும் மும்மரத்தில் தற்போது இருக்கிறோம். மாமா பையன் மார்க்கெட்டிங்கில் பிஸியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மாதா மாதம் கைச்செலவுக்கு மாமாதான் காசு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...