10 Nov 2020

பின்னாடி உக்காந்து ஏன் வந்தே?


 பின்னாடி உக்காந்து ஏன் வந்தே?

செய்யு - 621

            கும்பகோணம் பஸ் ரூட்ல கோவில்பெருமாள் முக்கியமான ஊருன்னாலும் பெரும்பாலான பஸ்ஸூக அங்க நின்னுப் போறது கெடையாது. பஸ் ஸ்டாப்புக்குப் போறதுக்கு ரயில்வே கேட்ட கடந்துப் போயி அந்தாண்டப் போவணும். சில நாள்கள்ல கேட்ட போட்டுட்டா ரயிலு போயி முடிக்கிற வரைக்கும் இந்தாண்டயே நிக்குறாப்புல ஆயிடும். அதுக்குள்ள நிற்குற ஒண்ணு ரண்டு பஸ்களையும் பிடிக்க முடியாமப் போயிடும். சனங்களும் பஸ்ஸூ நிக்காமப் போறதெ பெரிசு பண்ணாம ஆளாளுக்கு டூவீலர்ர வாங்கி வெச்சிக்கிட்டுப் போயிகிட்டுக் கெடந்துச்சுங்க. ஒரு தெருவுக்கு பத்து வூட்டுக்கு மேலயாவது டாட்டா ஏஸ் கெடந்துச்சு. கோவில்பெருமாள்லேந்து காய்கறிகளும், வாழை எலைகளும், பூக்களும் கும்பகோணத்து மார்கெட்டுக்கும், தாராசுரம் மார்க்கெட்டுக்கும் அடிக்கடிப் போவும். பெரும்பாலான சனங்க அப்பிடி போற வண்டியில ஏறிப் போயிக்கிட்டு அதுலயே வந்துக்கிடும். ஆன்னா அந்த வண்டிங்க எல்லாம் பொழுது விடியுறதுக்கு மின்னாடியே போயி பத்து பதினோரு மணி வாக்குல ஊருக்குத் திரும்பிட்டு இருக்கும். இதெத் தாண்டி ஊருக்குள்ள ஒரு மினி பஸ்ஸூம் ஓடிக்கிட்டுக் கெடந்துச்சு. பெரும்பாலும் அந்த மினிபஸ்ஸப் பிடிச்சி கும்பகோணம் போறதத்தாம் செய்யு வழக்கமா வெச்சிருந்தா.

            ஒரு சில நாள்கள்ல செய்யுவால அந்தப் பஸ்ஸப் பிடிக்க முடியாமப் போயிடும். ஒரு சில நாள்கள்ல அந்தப் பஸ்ஸூ வராமலும் போயிடும். அப்படி சில நாள்கள்ல பஸ்ஸப் பிடிக்க முடியாமப் போனாலோ, பஸ்ஸூ வராமப் போனாலோ வூட்டுக்குத் திரும்பி வந்துடுவா செய்யு. அது மாதிரியான நாள்கள்ல  நாது மாமாவோட மூத்தப் பையனான சற்குணந்தாம் அவனோட டிவியெஸ்ஸூ எக்செல்ல செய்யுவப் பின்னாடி வெச்சி அழைச்சிக்கிட்டுப் போயி கும்பகோணத்துல வுட்டுட்டு வருவாம். சில நாள்கள்ல கும்பகோணம் போற வேல இருக்குறதா சொல்லி போறப்ப அழைச்சிட்டும் போவாம். சற்குணம் மட்டுமில்லாம நாது மாமாவோட ரண்டாவது பையனான சரவணனும் கும்பகோணம் போறதா இருந்தா அழைச்சிட்டுத்தாம் போவாம். அவ்வேம் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வெச்சிருந்தாம். காலேஜூ விட்டு வர்றப்போ கும்பகோணத்துல செய்யுவ ரண்டுல யாரு பாத்தாலும் அழைச்சிட்டு வந்துப்புடுவானுவோ.

            சற்குணத்துக்கு வயசு முப்பத்து ரண்டுக்கு மேல. சரவணனுக்கு வயசு இருவத்தெட்டுக்கு மேல. அக்காக்காரியான சியாமளாவுக்குக் கலியாணம் ஆயி சரியில்லாமப் போயி குடும்பமே நெலைகொலைஞ்சிப் போனதுல நாது மாமா ஒரு பக்கம் குடிச்சிட்டு எங்காச்சிம் வுழுந்து கெடந்துச்சுன்னா, இந்த ரண்டு பயலுவோளும் குடிச்சிட்டு வூட்டுல வுழுந்துக் கெடந்தானுவோ. அத்து ஒண்ணு மட்டுந்தாம் அப்பங்காரனுக்கும் புள்ளைங்களுக்கும் இருந்த வித்தியாசம். நாகு அத்தையும் மனசு சரியில்லாமப் போயி சமைக்காம கொள்ளாம, ஓட்டல்ல வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு எப்பிடியோ காலத்தெ ஓட்டிக்கிட்டுக் கெடந்துச்சு. ஓட்டல்ல வாங்கியாந்த சாப்பாட்ட என்னத்தெ வூட்டுல உக்காந்து சாப்புடுறதுன்னு அந்த ரண்டு பயலுகளும் பேருக்குக் கொஞ்சம் காசிய அம்மாக்காரிகிட்டெ கொடுத்துப்புட்டு, மிஞ்சுன காசுல சரக்க அடிச்சிக்கிட்டும், ஓட்டல்ல சாப்புட்டுக்கிட்டும் கெடந்தானுவோ. சற்குணமும், சரவணனும் இப்பிடிப் பொறுப்பில்லாம இருந்ததெப் பாத்துட்டு ஊர்லயும், நெருங்குன சொந்தத்துலயும் சரி ஒரு பயலும் பொண்ணு கொடுக்க முடியாதுன்னு ஒதுங்கிப் போவ ஆரம்பிச்சாங்க.

            சுப்பு வாத்தியாரு கோவில்பெருமாளுக்குச் செய்யுவோட போன பெறவுதாம் நாகு அத்தையோட வூடு வூடா மாற ஆரம்பிச்சிது. சுப்பு வாத்தியாரு சும்மா இல்லாம போயித் தங்குறாப்புல ஆயிடுச்சேன்னு வூட்ட எடுத்து நல்ல வெதமா கட்டி வெச்சாரு. கூரை வூடுதான் அத்து. ஆன்னா அத்து அவ்வளவு மோசமா கெடந்துச்சு. வூட்டுக்குக் கூரையப் போட்டுக் கொடுத்து, மண்ணு தரைய சிமிட்டுத் தரையா மாத்திக் கொடுத்து, டாய்லெட்டு வரைக்கும் கட்டி வெச்சாரு. ஒறவுல தங்குற எடத்துக்கு வாடவென்னு ஒண்ண கொடுக்க முடியாது. அதுக்குப் பதில இப்படி செஞ்சிப்புடணும்னு சுப்பு வாத்தியாரு செஞ்சது அது. சுப்பு வாத்தியாரும் தங்கி இருக்குறப்போ சும்மா கெடக்காம அவரால முடிஞ்ச மரவேலையச் செஞ்சிக் கொடுத்து அதுல வர்ற சம்பாத்தியத்தெ நாகு அத்தைகிட்டெ கொடுத்துட்டு இருந்தாரு. செய்யு வந்தப் பெறவு நாகு அத்தையோட வூடு துலக்கமா மாற ஆரம்பிச்சிது. வெங்குவும் போயிச் சேந்தப் பெற்பாடு நாது மாமாவோட பயலுக ரண்டு பேரையும் ஓட்டல்ல சாப்புட்டுட்டுக் கெடந்ததெ வூட்டுல சாப்புடுறாப்புல மாத்தி, வேலைக்குப் போற அவனுகளுக்கு மத்தியானத்துக்கான சாப்பாட்டையும் எடுத்துக் கொடுத்து எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி வுட்டுச்சு.

            பாலாமணி வந்துட்டுப் போன பெறவு சற்குணத்தோட பழக்க வழக்கங்களும் மாற ஆரம்பிச்சிது. மின்ன மாதிரி ரொம்ப குடிக்கிறதில்ல. வூட்டுக்கு வெளியில இருந்த தச்சுக் கொட்டையில குடிச்சிட்டு விழுந்தடிச்சுக் கெடந்த நெலமெ மாறி திண்ணையில வந்து படுக்க ஆரம்பிச்சாம். சரவணனோட நடத்தையும் நல்ல மாறுதலு உண்டாயிருந்துச்சு. பயலுக ரண்டு பேரும் பொறுப்பான பயலுகளா மாறிட்டு இருக்குறதா ஊரு சனங்களும் பாத்துப் பாத்து பேச ஆரம்பிச்சதுங்க.

            சற்குணத்துக்கு மாமா பொண்ணுக்குக் கலியாணம் கட்டி வெச்சி அத்து இப்பிடி வந்துக் கெடக்குதுன்னே மனசுக்குள்ள ஒரு நெனைப்பு வர்ற ஆரம்பிச்சிது. செய்யுவ யாரும் கட்டிக்கிடலன்னா நாம்மத்தாம் கட்டிக்கிட்டு அதெ நல்ல வெதமா வெச்சிக்கிடணும்ன்னு நெனைக்க ஆரம்பிச்சாம். ஊருலயும் அரசல் பொரசால அதெப் பத்திப் பேச ஆரம்பிச்சாங்க. கட்டி வெச்ச எடம் சரியில்லன்னா, கையிலயே மொறைப்பயெ இருக்குறப்போ ஏம் தவிக்கணும், கட்டுன அந்தப் பயலெ வெலக்கி வெச்சுப்புட்டுக் கட்டிக் கொடுத்துட வேண்டியதுத்தானேன்னு. வெங்குவுக்கும் பாலாமணியச் சுத்தமா பிடிக்காமப் போனதுல, பஞ்சாயத்தெல்லாம் வெச்சு அந்தப் பயெ ஒத்து வரலன்னு ஆனதும், பொண்ணுக்கு சற்குணத்தெ பிடிச்சிக் கட்டி வெச்சிப்புடணும்ன்னு ஒரு நெனைப்பு வர்ற ஆரம்பிச்சது.

            நாது மாமாவுக்கு பாலாமணி வந்த அன்னிக்கு அத்து பேசுனப் பேச்சு அடிக்கடி மனசுல வந்துப் போச்சுது. தன்னோட பையனுங்க மட்டும் நல்ல வெதமா படிச்சிருந்தா மச்சாம் பொண்ண தன்னோட பயலுகள்ல ஒருத்தனுக்குக் கட்டி வெச்சிருப்பேன்னு அத்து சொன்னதையும், இப்பவும் கதெ ஒண்ணும் கெட்டுப் போயிடல, மச்சாங் ஒத்துக்கிட்டா ரண்டாவதா கட்டி வைக்கவும் சம்மதம்ன்னும் அத்து சொன்னப்போ சுப்பு வாத்தியாரு அதுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாம இருந்ததெ அடிக்கடி நெனைச்சுப் பாத்தது. அந்த வெதத்துல மச்சாங்காரரான சுப்பு வாத்தியாரு மட்டும் வந்து பையனெ கொடுன்னு கேட்டா ஒடனே கலியாணத்தெ முடிச்சிப்புடுற யோசனையில இருந்துச்சு நாது மாமா. ஆன்னா சுப்பு வாத்தியாரு அந்தத் திக்குல எந்த வார்த்தையையும் ரொம்ப நாளு வரைக்கும் பேசாமல மெளனமா இருந்தாரு. வெங்கு மட்டும் இலைமறைக் காயா அதெப் பத்தி பேசிக்கிட்டுக் கெடக்கும்.

            ஊர்லயும் பேச்சு உண்டாயி, நாது மாமா மனசுலயும் அப்பிடி ஒரு எண்ணம் உண்டான பெற்பாடு ஒரு நாளு அதுவாவே சுப்பு வாத்தியாருகிட்டெ பேச ஆரம்பிச்சது. "அதுக்கென்ன பொண்ணோட படிப்பு முடியட்டும். அதுக்கும் அப்பிடி ஒரு நெனைப்பு இருந்தா பண்ணிக்கிடலாம். அதுக்கு மின்னாடி அந்தப் பாக்குக்கோட்டைப் பயலெ பத்தி அதுக்கு மனசுல ன்னா நெனைப்பு இருக்குதுங்றதையும் முழுசா தெரிஞ்சிக்கிடணும். ஏன்னா அதோட மனசு அப்பிடி இப்பிடின்னு ரண்டு வெதமாவும் அலை பாயுது. எப்பிடி இருந்தாலும் இனுமே அந்தப் பயெகிட்டெ இனுமே அனுப்ப முடியாது. அனுப்புன்னாலும் கொன்னுப்புட்டுத்தாம் மறு‍வேல பாப்பாம். நாம்ம நெனைக்குறாப்புல அத்து முடிவா அந்தப் பயல வாணாம்ன்னு சொல்லிப்புட்டாலும் சட்டப்பூர்வமா ரண்டு பேரும் பிரியறதுக்கான வேலைக நெறைய செஞ்சாவணும். அவ்வேங்கிட்டெ அடைபட்டுப் போயிக் கெடக்கற நகெ நட்டு, பணங்காசிய மீட்டாவணும். நெறைய வேலக் கெடக்கு! ஆம்மா எப்பிடிப் பாத்தாலும் படிப்பும் முடியணும். ஒடம்பும் மனசும் இன்னும் கொஞ்சம் சரியாவணும். எல்லாத்துக்கும் மேல எதாச்சும் ஒரு ‍வேலைக்கு அனுப்பிப்புட்டுத்தாம் கலியாணங் காட்சிய பண்ணணும்!"ன்னு அதுக்கு ஒரு பதிலச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு.

            எப்பிடிப் பாத்தாலும் மச்சங்காரரு முடியாதுன்னு சொல்லாம, அப்பிடி நடக்குங்ற மாதிரி சுத்தி வளைச்சு பண்ணிப்புடலாம்ன்னத்தானே சொல்றாருன்னு நாது மாமாவுக்கு மனசுல சந்தோஷம். செய்யுவோட மனசு சரியில்லாத நெலமையும், படிச்சிக்கிட்டு இருக்குற நெலமையையும் நாது மாமாவும் யோசனெப் பண்ணிப் பாத்துச்சு. இப்போ எதாச்சும் அதிகப்படியா சொல்லி மனசெ கலைச்சிப் புட்டா படிக்குற படிப்பும் வீணாப் போயி, ஒரு வேள நமக்குப் பிடிக்கலன்னு சொல்லிப்புட்டா என்னாவுறதுன்னும் யோசனெப் பண்ணிக்கிட்டு இதெப் பத்தி சுப்பு வாத்தியாருகிட்டெ பேசுனதோட நிறுத்திக்கிட்டு நாது மாமா.

            இதெ விசயத்தெப் பத்தி நாகு அத்தையும், வெங்குவும் பல வெதமா பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க. "நமக்கென்ன யண்ணி! ஒம் பொண்ண மருமவளா கொண்டாந்து வெச்சிக்க தங்கம் மாதிரி சம்மதந்தாம். அவ்வே வந்த பெற்பாடுதாங் இஞ்ஞ வூடு வூடா ஆயிருக்கு. பயலுகளும் வூடு தங்கிச் சாப்புடுறானுவோ. நாம்ம அதோட மொத கல்யாணத்தப் பத்தில்லாம் ஒண்ணும் நெனைக்கல. நீயி கட்டி வெச்சின்னா நாம்ம அதெ மொத கலியாணமாத்தாம் பாப்பேம்! நல்ல வெதமா வெச்சிப்பேம். எங்கயோ பொண்ண எடுத்து  வர்றப் பொண்ணு எஞ்ஞளுக்கு சோத்தோ போடுமோ போடாதோன்னோ சந்தேகப்பட்டுக் கெடக்கறதுக்கு யண்ணம் பொண்ணக் கட்டுறதுக்கு கசக்குதா நமக்கு?"ன்னுச்சு நாகு அத்தை.

            செய்யுவ பிடிச்சி சற்குணத்துக்குக் கொடுக்குற பேச்சு பாட்டுக்கு அது ஒரு பக்கத்துல ரகசியமா வளந்துக்கிட்டுக் கெடந்துச்சு. சற்குணத்தோட மனசுல ஆசெ கரை பொரண்டோட ஆரம்பிச்சது. அதெ மாதிரியான ஆசெ சரவணனோட மனசுலயும் உண்டாவ ஆரம்பிச்சது. ரண்டு பேருமெ குடிக்கிறதெ சுத்தமா வுட்டுப்புட்டு ஒழுங்கா வேலைக்குப் போறதும், வூட்டுக்கு வர்றதுமா, செய்யுவக் கொண்டுப் போயி காலேஜூக்குப் பஸ்ல வுடுறதுலயும் போட்டிப் போட்டுக்கிட்டுக் கெடந்தானுவோ. கொஞ்ச நாள்லயே அண்ணங்காரனுக்கு தம்பிக்காரனோட ஆசெ புரிஞ்சிப் போச்சுது. தம்பிக்காரனுக்கு அண்ணங்காரனோட ஆசெ புரிஞ்சிப் போச்சுது. இந்த ரண்டு பேத்தோட ஆசையையும் புரிஞ்சிக்கிட முடியாம எதார்த்தமா காலேஜூ போறதும், எம்பில்லுக்கான பாடத்தெ படிக்கிறதுமா இருந்தா செய்யு. அவ்வே இருந்த மனநெலையில இப்பிடி ஒரு ஆசெ இவனுக ரண்டு பேரு மனசுல எழுந்ததெப் பத்தி எதையும் யோசிக்க முடியல. எம்பில்லுக்கான பாடத்தெ படிக்கிறதும், புராஜக்ட்டுக்கான வேலைகளப் பாக்குறதுமா அவளோட ‍நேரம் அதிகமா செலவாவ ஆரம்பிச்சிது. மனசு முழுக்க கொஞ்சம் கொஞ்சமா மாறி அதுல போனதுல அவளால வேற எதெப் பத்தியும் சரியா சிந்திக்க முடியல.

            சற்குணத்துக்கு ஒரு நெனைப்பு உண்டானுச்சு. தம்பிக்கார்ரேம் முந்திக்கிறதுக்கு மின்னாடி நாம்ம மிந்திக்கணும்ன்னு. எப்பிடிப் பாத்தாலும் அண்ணங்காரனுக்கு கலியாணத்தெ முடிக்காம தம்பிக்காரனுக்குக் கலியாணத்தெ முடிக்க மாட்டாங்கங்ற நம்பிக்கெ அவனுக்கு இருந்தாலும் செய்யுவுக்குத் தம்பிக்காரனா பிடிச்சிப் போயிட்டா பெறவு ஒண்ணும் சொல்ல முடியாம ஒதுங்கிக்கிடுற மாதிரி ஆயிடும்ன்னு சற்குணம் ஒரு வேலையப் பண்ணாம். ஒருநாளு கும்பகோணத்துல காலேஜூ முடிச்சி செய்யு வந்து எறங்குற நேரத்துக்காக பஸ் ஸ்டாண்டுலயேக் காத்துக் கெடந்து, அவளெ அழைச்சிட்டு வூட்டுக்கு வந்தாம். பஸ் ஸ்டாண்டுல காத்துக் கெடந்தவேம் சும்மா காத்துக் கெடக்கல, ஆயிரம் ரூவாயிக்குக் கடை கடையா ஏறி எறங்கி அவனுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பொடவைய வேற எடுத்து வெச்சிருந்தாம். வூடு வந்துச் சேந்ததும் சேராததுமா திடுதிப்புன்னு அந்தப் பொடவைய செய்யுகிட்டெ கொடுத்து, இந்தப் பொடவையத்தாம் நாளைக்கி காலேஜூக்குக் கட்டிட்டுப் போவணும்ன்னாம்.

            செய்யு அந்தப் பொடவைய வாங்க மறுத்துட்டா. அதெல்லாம் வாணாங்ற மாதிரி நாசுக்கா சொல்லி ஒதுங்கப் பாத்தா. ஏம் பொடவைய வாங்க மறுக்குறேன்னு சற்குணம் சண்டெய வைக்க ஆரம்பிச்சிட்டாம். அதுக்குச் செய்யு, "நமக்குப் பொடவெ எடுத்துக் கொடுக்கணும்ன்னா பெரியவங்க எடுத்துக் கொடுக்கணும். அப்பா, யண்ணன், மாமான்னு யாராச்சும்தாம் எடுத்துக் கொடுக்கணும். நீஞ்ஞ எடுத்துக் கொடுக்குறதெ எல்லாம் வாங்கிக்க முடியாது!"ன்னுட்டா ரொம்ப தெளிவா.

            இதெ பாத்துக்கிட்டு இருந்த நாகு அத்தெ, "ஒன்னயக் கட்டிக்கப் போறவேம் பொடவெ எடுத்துக் கொடுக்காம வேற யாரு எடுத்துக் கொடுப்பாம்?"ன்னுச்சுப் பாருங்க, செய்யுவுக்குக் கோவம் வந்துடுச்சு. "இப்பத்தாம் நம்மள ஒருத்தெம் கட்டிக்கிட்டு சித்தரவதெ பண்ணி முடிச்சாம். அதுக்குள்ள அடுத்த சித்தரவதெயல்லாம் நம்மாள தாங்க முடியா!"ன்னா செய்யு பட்டுன்னு வெடிச்சாப்புல.

            "பெறவு என்னவோ நம்மளோட வண்டியில வர்றே, போறே? ஆசெ யில்லாமலயா வர்றே போறே?"ன்னாம் சற்குணம் ஓரண்ட இழுக்குறாப்புல.

            "அப்பிடில்லாம் நெனைச்சி நாம்ம ஒஞ்ஞ கூட வாரல. யண்ணனப் போல நெனைச்சித்தாங் வந்தேம் போனேம். அண்ணம் தானத்துலத்தாம் ஒஞ்ஞள வெச்சிப் பாக்குறேம்!"ன்னு செய்யு படக்குன்னு வெள்ளந்தியா சொன்னதெ சற்குணத்தால தாங்க முடியல. அவனோட நெனைப்பு எந்தத் திக்குல போனதோ தெரியல. பட்டுன்னு அப்போ அவனுக்குன்னு சாயுங்கால நேரத்துல கொண்டாந்து வெச்சிருத்த டீத்தண்ணியையும், பலவாரத்தையும் தூக்கி சொவத்துல அடிச்சாம். அதெ பாக்குறப்பவே பகீர்ன்னு இருந்துச்சு. அதோட வுடல. திண்ணையில மாட்டியிருந்த மொகம் பாக்குற கண்ணாடியை தூக்கிப் படார்ன்னு தரையில ஓங்கி ஒடைச்சாம். திண்ணையில இருந்த பவுடரு டப்பா, எண்ணெ பாட்டிலு, நெலையில மாட்டியிருந்த பூத்தோரணம், சொவத்துல மாட்டியிருந்த படங்களையெல்லாம்ன்னு ஒண்ணு வுடாம தூக்கி அவ்வேம் பாட்டுக்குப் பித்துப் பிடிச்சாப்புல அடிச்சிக்கிட்டெ இருந்தாம். திடுதிப்புன்னு அவ்வேம் இப்பிடிப் பண்ணுற எப்பிடிச் சமாளிக்குறதுங்றதெ புரியாம நாகு அத்தெ, வெங்கு, செய்யுன்னு சனங்க எல்லாம் உள்ளார ஓடி கதவெ உள்ளார அவ்வேம் வர முடியாத அளவுக்குக் கதவெ சாத்திப்புட்டுங்க. ஒருவேள திண்ணையில் ஒடைக்க ஆரம்பிச்சவேம் அப்பிடியே உள்ளார போயிருந்தான்னா உள்ளார இருந்த டிவிப்பொட்டி, சாமாஞ் செட்டுக ஒண்ணு தேறியிருக்காது. திண்ணையில இருந்த எல்லாத்தையும் ஒடைச்சி எறிஞ்சிப்புட்டு உள்ளாரப் போவக் கதவையும் எட்டி ஒதைச்சுப் பாத்தாம். கதவெச் சாத்திக்கிட்டு கதவெ ஒட்டிப் பிடிச்சாப்புல எல்லாரும் நின்னதால கதவெ அடிச்சி ஒதைச்சி அவனால தொறக்க முடியல. கதவெ தொறக்க முடியலன்னு அத்து வேற கோவமும் ஆத்தாமையும் அவனுக்கு. அந்தக் கோவத்த எப்படிக் காட்டுறதுன்னு அந்த ஆத்தாமையில டிவியெஸ்ஸூ எக்செல்ல எடுத்துட்டு வெளியில கெளம்புனவேம் ராத்திரி ஒம்போது மணி ஆவுற வரைக்கும் வூடு திரும்பல.   

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...