11 Nov 2020

முகம் முறிஞ்சிப் போன உறவு!

முகம் முறிஞ்சிப் போன உறவு!

செய்யு - 622

            சாயுங்காலமா ஆறரை மணிக்கு மேல சுப்பு வாத்தியாரும், நாது மாமாவும் வூடு திரும்பனப்போ திண்ணை அலங்கோலமா கிடந்து நாகு அத்தையும், வெங்குவும் சுத்தம் பண்ணிக்கிட்டுக் கெடந்துச்சுங்க. செய்யு வூட்டுக்குள்ளார உக்காந்து தேங்கித் தேங்கி, தேம்பித் தேம்பி அழுதுகிட்டு இருந்தா. நடந்த விசயங்க தெரிஞ்சதும் சுப்பு வாத்தியாரு மனசு ஒடைஞ்சுப் போயிட்டாரு.

            "நீயி ஒண்ணும் கவலெப்படாத மச்சாம்! அவ்வேம் அப்பிடித்தாம் மோடு முட்டிப் பயெ. அவனாவே மனசு தெளிஞ்சு கொஞ்ச நேரத்துல வந்துப்புடுவாம்!"ன்னுச்சு நாது மாமா சமாதானம் பண்ணுறாப்புல.

            "மனசுக்குள்ள நமக்கும் மவளெ அவனுக்குக் கட்டி வெச்சிப்புடலாம்ன்னு ஒரு நெனைப்பு ஓரத்துல இருந்துச்சுத்தாம். பொண்ணு மனசுக்குத் திருப்திப்படாம நாம்ம எதுவும் பண்ண முடியாது பாத்துக்கோங்க. அவளெ மனசு ஒடைஞ்சிப் போயி இஞ்ஞ வந்தா, இஞ்ஞ அதுக்கு மேல மனசு ஒடையுறாப்புல சம்பவங்க நடந்தா நாம்ம என்னத்தெப் பண்ணுறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெறுத்துப் போனாப்புல.

            "இந்தாரு மச்சாம்! அந்தக் கவலெயே வுடு. இந்த வூடு நம்மளோட வூடு. நாம்ம செத்தப் பெறவுதாம் அவனுகளுக்கு அதுல பாகம். உசுரோட நாம்ம இருக்குற வரைக்கும் இத்து எம்மட வூடுதாம். இத்து எம்மட வூடுன்னு அத்து ஒம்மட வூடுதாம். மவளோட படிப்பு முடியுற வரைக்கும் இஞ்ஞத்தாம் இருக்கே நீயி. நீயி ஒம் மவ்வளே எம் மவனுக்குக் கட்டி வைக்காட்டியும் செரித்தாம், ஒம் மவளுக்கு எம் மவனெ பிடிக்காட்டியும் செரித்தாம். அடைக்கலம்ன்னு வந்த நீஞ்ஞ. எந்தக் காரணத்துக்காக இஞ்ஞ வந்தீயளோ அதெ நிறைவேத்தாம நாம்ம இஞ்ஞயிருந்து அனுப்ப மாட்டேம். வாரட்டும் அந்தப் பெய. ஒழுங்கா இருந்தா வூட்டுல இருக்கட்டும். இல்லாட்டி வூட்ட வுட்டெ வெரட்டி அடிச்சிப்புடுறேம். பெரியவங்க நாம்மல்லாம் வூட்டுல இருக்கேம்ங்ற நெனைப்பு இருக்கா அவனுக்கு? அவ்வேம் பாட்டுக்கு எதாச்சும் பண்ணி வெச்சா ன்னா அர்த்தம்?"ன்னுச்சு நாது மாமா கோவமா.

            அவுங்க இப்பிடி பேசிட்டு இருக்குறப்பவே எட்டு மணி வாக்குல சரவணன் ஸ்ப்ளண்டர்ல வந்து எறங்குனாம். அவ்வேம் வந்துப் பாத்தபோ வூடு சுத்தமாயிட்டாலும், நெலையில தொங்குன பூந்தோரணம், சொவத்துல மாட்டியிருந்த பாடங்க, மொகம் பாக்குற கண்ணாடியெல்லாம் இல்லாம இருந்ததெப் பாத்துட்டு என்னா நடந்ததுங்றதெ அவனும் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டாம். "மாமாவும் செரித்தாம், மாமா பொண்ணும் செரித்தாம் மனசு எம்மாம் நொம்பலப்பட்டு இஞ்ஞ வந்திருக்குங்றது புரியாம யண்ணம் பாட்டுக்கு ஏம் இந்த வேலையப் பாக்குதே. வாரட்டும் நாமளும் கேக்குறேம்! இப்பிடி வூட்டப் போட்டு சின்னாபின்னம் பண்ணிட்டுப் போயிருக்கானே? அவனா இதெ எடுத்து வெச்சிச் சரி பண்ணாம்? சரி பண்ணி வூட்ட வூடா ஆக்குனது மாமாதானே?"ன்னாம் சரவணன் ஆறுதலா. அவுங்க பெற்பாடு கொஞ்சம் நேரம் நடந்ததெப் பத்தி ஒருத்தருக்கொருத்தரு பேசிட்டு இருந்தாங்க. யாருக்கும் எதுவும் சாப்புடுற மனசு இல்ல. சாயுங்காலமா போட்டு வெச்சிருந்த டீத்தண்ணி ஆறிப் போயி கெடந்துச்சு. செஞ்சு வெச்சிருந்த பலவாரமும் அப்பிடியே கெடந்துச்சு.

            ஒம்போது மணிக்கு மேல சற்குணம் வந்தப்போ அவ்வேம் நல்லா குடிச்சிருந்தாம். போதையில அவனால வண்டியக் கொண்டாந்து நிப்பாட்டி ஸ்டாண்டு கூட போட முடியல. தடுமாறி வண்டியோட வுழுந்தாம். அவ்வேம் கீழ கெடந்தாம். அவ்வேம் மேல டிவியெஸ் எக்செல்லு கெடந்துச்சு. சரவணன்தான் ஓடிப் போயி அவனெ எழுப்பி, விழுந்து கெடந்த வண்டிய எடுத்து நிப்பாட்டி ஸ்டாண்டப் போட்டாம்.

            "போதையில பேசுறேம்ன்னு மட்டும் நெனைச்சுப்புடாதீயே! நெசமாத்தாம் பேசுறேம்! போதையில ல்லன்னாலும் இதெத்தாம் பேசுவேம்! குடிச்சிட்டு எந்தப் பயலும் பொய்ய பேச மாட்டாம் பாத்துக்கோ! எத்தனையோ நாளு நிப்பாட்டுன்ன இந்தக் குடிய இன்னிக்கு கையில எடுத்துட்டுக் குடிச்சிட்டு வந்திருக்கேம்ன்னா அதுல காரணம் இருக்கு! அதெ இன்னிக்குக் கேக்காம வுட மாட்டேம்!"ன்னு கொழறுனாப்புல பேசுனாம் சற்குணம்.

            "ஒண்ணும் பேசாம போயி தச்சுக் கொட்டாயில படுத்துடு! நாஞ்ஞ ஞயாம் வைக்குறதுக்கு மின்னாடி நீயி ஞாயம் வைக்குதீயா? வந்தேம்ன்னா என்னத்தெ பண்ணுவேம்ன்னு தெரியாது! கொன்னே போட்டுடுவேம்!"ன்னுச்சு அதெப் பாத்துட்டு நாது மாமா.

            "நாம்ம ன்னா ஊருல இருக்குற எவளோ ஒருத்திக்காப் போயி பொடவெ எடுத்துக் கொடுத்தேம்? நமக்கு மொறை இருக்கு எடுத்துக் கொடுத்தேம். என்னவோ அதெ வாங்கிடாம அண்ணன் மொறெ அத்து இத்துன்னு பசப்புன்னா நாம்ம ச்சும்மா இருந்துப்புடுவோமா? ன்னா நெனைச்சிக்கிட்டு இருக்குறா அவ்வே? புருஷங்கார்ரேம் பொடவெ கொண்டாந்து கொடுத்தாலும் வாங்கிக்கிட மாட்டேங்றா? நாம்ம வாங்கியாந்து கொடுத்தாலும் வாங்கிக்கிட மாட்டேங்றா? பெறவு யாரு வந்து வாங்கிக் கொடுத்தா வாங்கிப்பாளாம்? ஐயேயெஸ்ஸூ கலக்டர்ரா இருக்குறவேம் வந்து வாங்கிக் கொடுத்தாத்தாம் வாங்கிப்பாளாமா? படிக்குற திமிரு அவளுக்கு! மொதல்ல படிப்ப நிப்பாட்டச் சொல்லு. அடக்கத்துக்கு வந்துப்புடுவா? மொத புருஷன் டாக்கர்ரா வந்தா, ரண்டாவது புருஷன் கலக்டர்ரா வந்து நிக்கணும்ன்னு எதிர்பாக்கறாளோ? எஞ்ஞளயெல்லாம் பாத்தா ஆம்புளையா தெரியலையோ? கதெயெல்லாம் நாமளும் கேட்டேந்தாம். அதாம்படி ஒனக்குப் பொடவையச் சுத்திக்கிற பொட்டப் பயெ மொத புருஷனா வந்தாம். இப்பிடியே இருந்தீன்னா வெச்சுக்கோ ஒம்போதுதாம் ஒன்னயக் கட்டிக்கிட நிப்பாம் பாத்துக்கோ!"ன்னாம் சற்குணம் சிரிப்பாணியா.

            "வாய மூடலன்னா வெச்சக்கோ, ரீப்பேர்ராலாயே போட்டுப் பொளந்துப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னுச்சு நாது மாமா கொட்டாயி ஓரத்துல கெடந்த ஒரு ரீப்பர்ர கையில் எடுத்துக்கிட்டு.

            "ன்னா பொண்ண பெத்தவனே ச்சும்மா நிக்குறாம்! நீயி வள்ளு வள்ளுன்னு கொழைச்சிக்கின்னு நிக்குறே? எடுப்பா நீயி? ஏம் பொண்ண பெத்தவம் பேச மாட்டானாமா? உள்ளார இருக்குறாளே அவ்வே வெளியில வந்துப் பேச மாட்டாளாமா?"ன்னாம் சற்குணம் போதையில தூபத்தப் போடுறாப்புல.

            "ண்ணே! மாமாண்ணே அத்து! மருவாதி யில்லாமப் பேசாதே!"ன்னாம் சரணவன் பொசுக்குன்னு.

            "ன்னா பெரிய மசுராம்? மாமனாம் மாமம். பொண்ணப் பெத்து வளத்துருக்காம் பாரு. ஒரு எடத்துல ஒழுங்கா குடித்தனம் நடத்தத் தெரியாமா? ஊரு ஊர்ரா பொண்ண கூட்டிக்கிட்டு அலையுறாம்? அறிவு கெடையாது அவனுக்கு? ரண்டு வாலிபமான ஆம்பளெ பசங்க இருக்குற வூட்டுல கொண்டாந்து பொண்ண வெச்சிக்கிட்டு இருக்கேம்ன்னு? இவனெல்லாம் ஒரு வாத்தியார்ரா? இந்தப் பயெ புள்ளீயோளுக்கு என்னத்தெ பாடத்தெ சொல்லிக் கொடுத்திருப்பான்னு நெனைக்குறே?"ன்னாம் சற்குணம் இளிப்ப காட்டிக்கிட்டு.

            சுப்பு வாத்தியாருக்குக் கோவம் வந்துடுச்சு. "ந்தாருடா எம் பொண்ண ஒமக்குக் கட்டிக் கொடுக்கலாம்ன்னு மனசுல ஒரு நெனைப்பு இருந்தது உண்மெதாம். இப்போ சொல்றேம் கேட்டுக்கோ! ஒமக்கு எம் பொண்ணும் கெடையாது. ஒண்ணும் கெடையாது. போடா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கோவத்த அடக்க முடியாம.

            "யாரு வூட்டுல இருந்துகிட்டு யார்ர போடாங்றே? ஒண்ட வந்த பெடாரி ஊரு பெடாரிய வெரட்டுச்சாம். ஏம் வூட்டுல இருந்துகிட்டு எம்மடயே போடாங்றீயா? ஏம்டா வாத்திப் பயலே! நீயெல்லாம் மாமாவாடா? பொண்ண வண்டியில பின்னாடி வெச்சி அழைச்சிட்டுப் போறப்ப மட்டும் உக்காந்து சோடியாப் போறதெ கண்ணு குளிர பாக்குறே! இப்போ பொண்ண கேட்டா மட்டும் கொடுக்க மாட்டேன்னா ன்னடா அர்த்தம்? ஒன்னயெல்லாம் கட்டி வெச்சி ஒதைக்கணும்டா! ஒன்னய மாதிரி ஆளால்லத்தாம் எஞ்ஞள மாதிரி ஆம்பளைங்கல்லாம் குடிச்சிட்டுப் பைத்தியம் பிடிச்சாப்புல அலையுறேம். நம்மள சாதாரணமா நெனைச்சிக்காதே. பொண்ண மட்டும் கொடுக்காலன்னா வெச்சுக்கோ அடிச்சே கொன்னோ புடுவேம். போதையில சொல்றதா நெனைச்சிக்கிடாதே. இப்பயே ஒன்னய அடிச்சிக் கொல்லுறேம் பாரு!"ன்னு தச்சுக் கொட்டாய்லேந்து ஒரு பெரிய ரீப்பரா உருவிக்கிட்டு சுப்பு வாத்தியார்ர அடிக்கப் பாய்ஞ்சாம் சற்குணம்.

            சுப்பு வாத்தியாரு இந்த அளவுக்கு நெலமை தலைகீழா மாறி விபரீதமா போவுமுன்னு நெனைக்கல. ஒரு நொடி அதிர்ந்துப் போனாலும் ஒடனே சுதாரிச்சிக்கிட்டு இவரும் பக்கத்துல கெடந்த வெறவுக் கழிய எடுத்துக்கிட்டு, "வாடா! பாப்பேம்!"ன்னு அவரும் களத்துல குதிச்சிட்டாரு. இதென்னடா ஒருத்தருக்கொருத்தரு மல்லுக்கு நின்னு அசிங்கமானா என்னத்தெ பண்டுறதுன்னு நாது தங் கையில இருந்த ரீப்பர்ர கீழே போட்டுட்டு நெலமெய சரிபண்ணணும்ன்னு பாத்துச்சு. ஒடனே நாது மாமாவும், சரணவனனும் ஓடிப் போயி சற்குணத்தெப் பிடிச்சி, அவ்வேம் கையில இருந்த ரீப்பேர்ரர பிடுங்கி அந்தாண்டப் போட்டு அவனெ தள்ளிக் கொண்டுட்டுப் போயி எதுத்தாப்புல இருந்த பாவாட ஆச்சாரி வூட்டுல இருந்த ரூம்ல போட்டுப்  பூட்டிப்புட்டு வந்துச்சுங்க.

            சுப்பு வாத்தியாரு வெறவுக் கட்டையோட அப்பிடியே குந்துன ஆளுதாம். ரொம்ப மனசு ஒடிஞ்சிப் போயிருந்தாரு. வெசயத்தெ கேள்விப்பட்டு பாவாடெ ஆச்சாரியும் வந்தாரு. எல்லாரும் ஆளாளுக்குச் சுப்பு வாத்தியாருக்கு ஆறுதலச் சொன்னாங்க. அவரோட மனசு அடங்காம கொதிச்சிக்கிட்டெதாம் இருந்துச்சு. அன்னிக்கு ராத்திரி யாரும் தூங்கவே யில்ல. தூங்குன ஒரே ஆளு போதையில மட்டையாயிருந்த சற்குணம் மட்டுந்தாம். செய்யு ராத்திரி முழுக்க அழுதுகிட்டெ இருந்தா. ராத்திரி யாரும் சாப்புடவும் இல்ல. வெங்குவும் ஒண்ணும் சொல்ல முடியாம அழுதுகிட்டெ இருந்துச்சு. அழுது அழுது எல்லாத்தோட கண்ணும் வீங்கிப் போயிருந்துச்சு.

            விடிஞ்சும் விடியாம சுப்பு வாத்தியாரு பொண்டாட்டிப் பொண்ணோட பொட்டிப் படுக்கைய எடுத்துக்கிட்டு ஊர்ர நோக்கிக் கெளம்ப பஸ்ஸப் பிடிச்சாரு. நாது மாமா, நாகு அத்தெ, சரவணன், பாவாடெ ஆச்சாரின்னு எவ்வளவோ பேரு தடுத்துப் பாத்தாங்க. வெசயம் கேள்விப்பட்டு சியாமளா அத்தாச்சியும், அதோட புருஷங்காரரும் ராவோட ராவா டிவியெஸ்ஸூ வண்டிய ஒண்ணுத்தெ பக்கத்துல இரவல் வாங்கிட்டு வந்துச் சேந்திருந்தாங்க. அவங்களும் எவ்வளவோ தடுத்துப் பாத்தாங்க. கெளம்புறங்க முடிவுல வைராக்கியமா இருந்த சுப்பு வாத்தியாரு யாருகிட்டெயும் எதுவும் பேசாம ஊரு வந்துச் சேந்தாரு.

            திடுதிப்புன்னு வூடு வந்து சேந்த அப்பா, அம்மா, தங்காச்சியப் பாத்ததும் விகடுவு ஒண்ணும் புரியல. ஆயியிக்கும் ஒண்ணும் புரியல. சுப்பு வாத்தியாரு மொகத்த பஸ்ல வர்றப்போ மாத்தியிருந்தாரு. யாரும் சண்டெ நடந்ததெப் பத்தி எதுவும் சொல்லக் கூடாதுன்னும் சொல்லிருந்தாரு. அதுக்குத் தகுந்தாப்புல எல்லாம் உள்ளுக்குள்ள அழுதுகிட்டு இருந்தாலும் வெளியில சிரிச்சிக்கிட்டு இருந்ததால விகடுவாலும், ஆயியாலும் எதையும் கண்டுபிக்க முடியல.

            திடுதிப்புன்னு கெளம்பி வந்ததுக்குத் தகுந்தாப்புல சுப்பு வாத்தியாரு வெளக்கத்தையும் அவரா இட்டுக் கட்டிச் சொன்னாரு, "தங்காச்சிக்குக் காலேஜூ முடிஞ்சிடுச்சுடாம்பீ! எம்பில்லு ப்ராஜெக்ட் மட்டுந்தாம் பாக்கி. அதெ தயாரு பண்ணிட்டு கைடு வர்றச் சொல்றப்போ போயி பாத்தா போதும்ன்னு சொல்லிப்புட்டாங்க. அதுவும் யில்லாம அந்தப் பாக்குக்கோட்டெ சிறுக்கியும், அந்தப் பாக்குக்கொட்டே பயலும் வேற எப்ப வருவாங்க, போவாங்கன்னு தெரியல. அதுக வர்றத நெனைச்சா பயமா வேற இருக்கு. பொண்ணுக்கு அஞ்ஞ பாதுகாப்பு ல்லடாம்பீ. இஞ்ஞ நம்ம ஊருன்னா சமாளிச்சிப்புடலாம். நம்ம ஊரு சனங்க வெவரம் தெரிஞ்சவங்க. வேத்தூர்ல வெச்சிக்கிட்டு இதெயெல்லாம் வெளக்கிக்கிட்டுக் கெடக்க முடியுமா? அதாங் யோஜிச்சுப் பாத்து நல்லதோ, கெட்டதோ சொந்த ஊர்ல கெடந்து சின்னா பின்னா படுறதுதாங் செரின்னு வந்துப்புட்டேம்!"ன்னாரு யிப்போ சுப்பு வாத்தியாரு. ஆன்னா உண்மெயான நடந்த வெவரத்தெ பெறவு பல நாளு கழிச்ச பிற்பாடுதாம் சுப்பு வாத்தியாரு விகடுகிட்டெயும், ஆயிகிட்டெயும் சொன்னாரு.

            அவரோட மொகத்துல ஒரு வாட்டம் மறுநாள்லேந்து நெரந்தரமா குடி கொள்ள ஆரம்பிச்சது. செயல்லயும் ஒரு வெதமான சொணக்கம் உண்டாவ ஆரம்பிச்சிது. எங்கக் கொண்டுப் போயி வெச்சாலும் அந்த எடம் பொண்ணுக்குப் பொருந்த மாட்டேங்குதுன்னே எதிர்மாறா யோசிக்க ஆரம்பிச்சாரு. சுப்பு வாத்தியாரு இங்க ஊருக்கு வந்தப் பெற்பாடு அங்க கோவில்பெருமாள்ல நாகு அத்தைக்கு ஒடம்பு சரியில்லாமப் போயி படுத்தப் படுக்கையா மனசொடிஞ்சிப் போயிக் கெடந்துச்சு. கோவில்பெருமாள்லேந்து பல மொறை போன் பண்ணிப் பாத்தாங்க. சுப்பு வாத்தியாரு மவனுக்கு விசயம் எதுவும் தெரிஞ்சிப்புடப் படாதுன்னு பேருக்கு ஏதோ பேசுறாப்புல பேசிப்புட்டு ஒடனே போன விகடுகிட்டெ கொடுத்துப்புடுவாரு. மனசளவுல சுப்பு வாத்தியாரு கோவில்பெருமாள் நாகு அத்‍தெ குடும்பத்தோட இருந்த ஒறவு அத்துக்கிட்டாப்புல ஒதுங்கிக்க நெனைச்சாரு. 

            ஒலகமே தனக்கு எதிரா திரும்பிட்டதெ போல நடக்க ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. வூட்டுல எங்காயச்சும் ஒதுங்கி உக்கார்றதுமா, எதுத்தக் கொல்லையில போயி உக்காந்திருக்கிறதுமா அவரோட போக்க ரொம்ப நாளைக்குப் புரிஞ்சிக்க முடியல. அதுக்கு இடையில ரண்டு மூணு தடவே நாது மாமா திட்டைக்கு வந்துட்டுப் போனுச்சு என்ன ஏதுன்னு பாத்துட்டுப் போவ. அதுவும் எந்த விசயத்தப் பத்தியும் சொல்லல. நாகு அத்தெ ஒடம்புக்கு முடியாம கெடக்குறதெ மட்டும் சொல்லிட்டுப் போனேதாட செரி. நாது மாமா கெளம்புறப்ப மட்டும் சுப்பு வாத்தியாரு ஐநூத்து ரூவா பணத்தெ கொடுத்தாரு. நேர்லப் போயிப் பாக்கல. ஒரு ஞாயித்துக் கெழமெயில விகடுவும், ஆயியும் ஒடம்பு முடியாம கெடக்குற அத்தையப் பாத்துட்டு வந்ததோட செரி. அப்பயும் நாது மாமாவோ, நாகு அத்தையோ யாரும் நடந்த சம்பவத்தப் பத்தி எதுவும் சொல்லல. அதெ சொல்றதப் பத்தி அசிங்கமா அவுங்க நெனைச்சிருப்பாங்களோ என்னவோ தெரியல. அதுக்குப் பெறவு போயிட்ட வர்ற, பேச்சு வார்த்தெ நடக்குறாப்புல சோலி எதுவும் அமையல.

            சுப்பு வாத்தியாரு மட்டும் அடிக்கடி, "எஞ்ஞ யப்பம் அப்பவே சொன்னாரு. கும்பகோணம் சரிபட்டு வாராது, கோணிகிட்டுப் போயிடும்ன்னு. அப்பிடித்தாம் ஆச்சுது. கும்பகோணத்து ஆளுதானே அவரு. அத்துப் பிடிக்காமத்தான்னே விருத்தியூர்ல வந்து வூட்டக் கட்டிக்கிட்டு நெலைச்சாரு. நாமளும் நெலைச்ச எடத்தெ வுட்டுப்புட்டு எந்தச் செருமம் வந்தாலும் அந்தாண்ட இந்தாண்ட போயிருக்கக் கூடாது!"ன்னு மனசுக்குள்ள நெனைச்சி நெனைச்சிப் புழுங்கிக்கிட்டெ இருந்தாரு.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...