தங்கைக்கொரு எம்பில் சீட்டு!
செய்யு - 616
விடா முயற்சி வெற்றி தரும்ன்னாலும் கவர்மெண்டு
வேலைக்குன்னு எழுதிட்டு இருந்த எல்லா பரீட்சையிலயும் செய்யு தோத்துக்கிட்டுதாம் இருந்தா.
அது ஒரு மனச்சோர்வ வேற அவளோட மனசுக்குள்ள உண்டாக்கிக்கிட்டெ இருந்துச்சு. ஒரு கட்டத்துல
இந்தப் பரீட்சையெல்லாம் தனக்கு ஒத்து வாராதுன்னோ கூட நெனைக்க ஆரம்பிச்சா. ஒரு நேரத்துல
மனசு தொவண்டுப் போயிக் கெடந்தப்போ, இந்தப் பரீட்சைக்குப் படிச்சதுதாம் தேத்திக்
கொண்டாந்துச்சு. இப்போ அந்த பரீட்சைகள்ல தோக்குறதெ நெனைக்குறப்போ, அதாச்சி வேலைக்கு
தேர்வாகாம போறதெ நெனைக்குறப்போ அதுவே மனசெ தொவள வைக்குதுன்னா, இந்த கவர்மெண்டு வேலைக்கான
பரீட்சைக்குப படிக்குறதெல்லாம் தனக்கு ஒத்து வாராதோன்னு நெனைச்சி அதையே சொல்லிப்
பொலம்பிக்கிட்டு இருக்க ஆரம்பிச்சா. கெராமத்துல சொல்லுவாங்களே, புள்ளையாரு புடிக்கப்
போயி கொரங்கு பிடிச்ச கதையா. அந்தக் கதையா ஆயிட புடக் கூடாதுன்னு அதெ கேட்டுப்புட்டு
சுப்பு வாத்தியாரு, "ஒம் மனசுக்குப் பிடிச்சாப்புல என்னாத்த செய்யணும்ன்னு நெனைக்குதீயோ,
அதெ செய்யு!"ன்னுட்டாரு. இதுக்குப் பெறவு தம்மோட மனசுல என்னத்தாம் ஆசெ இருக்கு?
எதெ படிக்க விருப்பம் இருக்கு? அப்பிடின்னு யோஜனைய பண்ண ஆரம்பிச்சா செய்யு.
கலியாண காலத்துக்கு மிந்தி எம்பில் படிக்கணும்ன்னு
ஆசையில இருந்து, அதுக்காக அப்போ ரொம்ப போராடி, பெறவு நடந்த சம்பவங்களால இப்போ எல்லாம்
தெசைமாறிப் போயிட்டதா அவளோட மனசுல எண்ணம் உண்டாவ ஆரம்பிச்சது. இதெப் பத்தி சுப்பு
வாத்தியாருகிட்டெயும், விகடுகிட்டெயும் வெளிப்படையாவே சொன்னா, "நமக்குல்லாம்
கவர்மெண்டு பரீட்சை எழுதி வேலைக்குப் போறதெல்லாம் செட்டாவாதுன்னு நெனைக்குறேம். அப்பிடி
ஒரு நம்பிக்கையும் நமக்கு யில்ல. வேலைக்குப் போவ முடியும்ன்னு தோணல. படிச்சதையே படிச்சுப்
பரீட்சையில ஒரு மார்க் ரண்டு மார்க்குல வேலைக்குத் தேர்வாகாம போயி, நமக்கு இதுல ஆசெயே
போச்சு. ஆன்னா எம்பில் பண்ணிட்டு, அப்பிடியே டாக்டர்ரேட் பண்ணி ஒரே லைன்ல போவ முடியும்ங்ற
நம்பிக்கெ மட்டும் இருக்குது! அதுலத்தாம் நம்மட ஆர்வம் ஆசெ யெல்லாம்!"ன்னு சொன்னா.
ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வழியிருக்கும்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ண பிடிச்சிருக்கும். அவுகளுக்குப் பிடிச்ச வழியில் போனாத்தாம்
அவுங்களால நெனைச்சதெ சாதிக்க முடியும். அத்தோட அவுங்களுக்கும் திருப்தியா இருக்கும்.
அந்த வகையில ஆர்வமா ஏதோ தனக்குப் பிடிச்ச ஒரு வழியிலப் போனா சரித்தாம்ன்னு சுப்பு
வாத்தியாரு செய்யு சொன்னதுக்குச் சரின்னு சொல்லிப்புட்டாரு. சியார்ஐ அகாடமியல சேர்றதுக்காக
விகடு பாஞ்சாயிரம் ரூவாயக் கட்டியிருந்தாம். அதெ தவணெ மொறையில கூட கட்டியிருக்கலாம்
அவ்வேம். தங்காச்சி படிக்கப் போறேன்னு கெளம்பிட்டதால அந்த ஆர்வ கோளாறுல முழு பணத்தையும்
கடன ஒடன வாங்கிச் சேத்துக் கட்டி வெச்சிருந்தாம். இப்போ எம்பில் சீட்டு கெடைச்சி படிக்கப்
போனா கட்டுன பணம் வீணாத்தாம் ஆவும். அதெ ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாத்தவேம், தங்காச்சியோட
மனநெலையில இன்னொரு நிமிஷம் யோசிச்சுப் பாத்தாம். முடிவா விகடு பணம் போனாலும் போவட்டும்,
தங்காச்சி விருப்பப்படியே வுடுறதுதாம் செரின்னு இருந்துட்டாம். சியார்ஐ அகாடமியோட படிப்ப
அப்பிடியே விட்டுப்புட்டுச் செய்யுவ எம்பில் படிக்க வைக்குறதுக்கான ஏற்பாட்டுல விகடுவும்
சுப்பு வாத்தியாரும் எறங்குனாங்க.
எம்பில் படிக்கிறதுக்காகக் கும்பகோணத்துல
மூணு காலேஜ்லயும், பாபநாசத்துலேந்து பக்கத்துல இருக்குற திருப்பூண்டி ரிஷ்பம் காலேஜ்லயும்,
தஞ்சாவூர்ல மூணு காலேஜ்லயும் ஆக மொத்தம் ஏழு காலேஜ்ல அப்ளிகேஷனப் செய்யு போட்டிருந்தா.
ஏழு காலேஜ்லேந்தும் நுழைவுத் தேர்வு வந்து எழுதச் சொன்னாங்க. செய்யுவும் போயி எழுதுனா.
எழுதுன எல்லா எடத்துலயும் நல்லா பண்ணிருக்கிறதாத்தாம் சொன்னா. நுழைவுத் தேர்வ எழுதி
ரொம்ப நாளாகியும் காலேஜ்களேந்து தகவல் ஒண்ணும் வாராததால ஒவ்வொரு காலேஜ்ஜா நேர்ல போயி
வெசாரிக்க வேண்டிதா இருந்துச்சு. கும்பகோணத்துல இருந்த மூணு காலேஜ்லயும் வெசாரிச்சப்போ
மூணுலயும் சேர்க்கை முடிஞ்சிட்டதா சொன்னதுல கொஞ்சம் மனசு நெலகொலைஞ்சிப் போன செய்யு.
திருப்பூண்டி ரிஷ்பம் காலேஜ்ல வெசாரிச்சப்போ
அந்தக் காலேஜ நடத்துற ஆண்டையாரோட சிபாரிசோ அல்லது காலேஜ்ல இருக்குற யாரோட சிபாரிசோ
யில்லாம்ம காலேஜ்ல சேர முடியாதுன்னு பேசிக்கிட்டாங்க. அந்த வெசயத்த தெரிஞ்சிக்கிட்டு
எப்பிடி உள்ளார போவலாம்ன்னு பாத்தா செய்யு. கும்பகோணத்துக் காலேஜ்கள்ல சேர்க்கைய வுட்டது
போல இதுலயும் வுட்டுப்புடக் கூடாதுன்ன அவளுக்குள்ள ஒரு தவிப்பு. இதுக்காக ஆண்டையார்ரப்
பாக்க காலாங்காத்தாலயே போயிக் காத்துக் கெடந்தா. அங்கப் பாக்கப் போனப்பத்தாம் ஒரு
விசயம் தெரிஞ்சிது நெதமும் முப்பது நாப்பது பேரு காலேஜூல சேர்றதுக்காக அவர்ரப் பாக்க
வந்துக் கெடக்கறது. அவரு நெதமும் அஞ்சு பேரையோ, பத்துப் பேரையோ பாத்துப்புட்டு அவரு
பாட்டுக்குக் கார்ல கெளம்பிப் போயிட்டு இருந்தாரு. மூணு நாலு நாளு அப்படிப் போயியும்
செய்யுவால அவர்ர பாக்க முடியுற பத்து பேருக்குள்ள ஒரு ஆளா வர்ற முடியல. அப்பிடி ஆண்டையார்ர
பாக்க முடியாத ஆளுங்களெ வளைச்சிப் போட்டு பணத்தெ பிடுங்றதுக்குன்னே ஒரு கூட்டமும்
அங்க நின்னுகிட்டு இருந்துச்சு.
அந்தக் கூட்டத்துல ஒரு ஆளுதாம் செய்யுவப்
பாத்து, "ஏம்மா நீயி தேவையில்லாம ஆண்டையார்ரப் பாக்க அலைஞ்சிட்டுக் கெடக்கே? அவர்ரப்
பாத்தா இருவதினாயிரம்! நம்மளப் பாத்தா ரண்டு சேத்து இருவத்தி ரண்டாயிரத்தக் கொடுத்தீன்னா
வேல முடிஞ்சிடும். ஒமக்குச் சீட்டெ வாங்கித் தந்துப்புடுறேம். இப்பிடி நெதமும் வந்து
நின்னு ஆண்டையார்ரப் பாக்க முடியாம போயிட்டுன்னா வெச்சிக்கோ, பெறவு இந்த வருஷ படிப்பும்
பாழாயிடும். அடுத்த வருஷமும் கெடைக்கும்ன்னும் நிச்சயமில்லே!"ன்னதும் செய்யு ஒடனே
விகடுவுக்குப் போன அடிச்சா. அவ்வே வெவரத்தச் சொன்னதும், "சீட்டு கொடுப்பாங்கன்னா
தாராளமா பணத்தெ கொடுத்துப்புடலாம்!"ன்னு சொன்னாம். “காசியக் கொடுத்தா கண்டிப்பா
அட்மிஷன் பண்ணிப்புடுவாங்க”ன்னு செய்யு சொன்னதெ நம்பி மறுக்கா அங்க இங்கன்னு கடன வாங்கி
இருவத்தி ரண்டாயிரம் பணத்தெ தேத்திக் கொண்டுப் போயி அவ்வே சொன்ன ஆளுகிட்டெ கொடுத்தாம்
விகடு. பணத்தெ வாங்கிட்டு தன்னோட செல்போனு நம்பர்ரக் கொடுத்து, பேர்ரச் சொல்லி,
"ஒரு வாரத்துல எம்பில்லுல்ல சேருங்கன்னு சொல்லி லட்டரு வரும். அதெ எடுத்துக்கிட்டு
வந்து அட்மிஷனுக்கான பணத்தெ கட்டிட்டுச் சேந்துப்புடுங்க! பயப்படாமப் போயிட்டு வாங்க!"ன்னு
அனுப்பிச்சாம் அந்த ஆளு.
அந்த ஆளு சொன்னதெ நம்பி ஒரு வாரம் வரைக்கும்
காத்திருந்தும் காலேஜ்லேந்து எந்த லட்டரும் வர்ராமப் போவ அந்த ஆளுக்குப் போன அடிச்சா,
அந்த நம்பருக்கு அழைப்பே போவ மாட்டேங்குது. செரித்தாம் நேர்லப் போயித்தாம் வெசாரிக்கணும்ன்னு
அந்த ஆளோட பேர்ரச் சொல்லி வெசாரிச்சா அவனுக்கும் மேதமடிக்ஸ் டிபார்ட்மெண்டுக்கும்
சம்பந்தம் இல்லன்னும், அவ்வேம் தமிழ் டிபார்ட்மெண்டுக்கார்ர ஆளுன்னும், அதுவும் அந்த
ஆளு ஒரு எடுபிடி வேலைக்காரன்னும், அவ்வேங்கிட்டெ போயி எவ்வேம்டா முட்டாப் பயெ கணக்கா
இருவத்தித் ரண்டாயிரம் பணத்தெ கொடுப்பாம்ன்னு கேள்வியக் கேக்குறாங்க.
பணத்தெ கொடுத்தது கொடுத்தாச்சு. அந்த
ஆளு எந்த டிபார்ட்மெண்டுக்கார்ரனா இருந்தா என்னா? அவனெப் பிடிச்சி சீட்டெ வாங்கிப்புடணும்ன்னு
பாத்தா அந்த ஆளு ப்ளாஸ்க்குல டீயெ வாங்கிட்டு தமிழ் டிபார்ட்மெண்டுக்குள்ள போறதப்
பாத்தாம் விகடு. எங்க தன்னயப் பாத்தா ஓடிப் போயிடுவானோன்னுங்ற பயத்துல விகடு அவ்வேம்
அறியாமப் போயி அவ்வேம் மின்னாடி நின்னாம் பாருங்க. ஆளு அப்பிடியே வெலவெலத்துப் போயிட்டாம்.
"ஏம் சாரே! நீஞ்ஞ இம்மாம் தூரம் அலைஞ்சிட்டுக் கெடக்குதீயே? ஒஞ்ஞ வேல சம்மந்தமாத்தாம்
மெனக்கெட்டுட்டு இருக்கேம்! கொஞ்சம் பாருங்க சாரே! ஆண்டயார்ரு கால்ல வுழுந்தாச்சும்
சீட்டெ வாங்கிக் கொடுத்திடுறேம். பணத்தெ வாங்கிட்டு ஏமாத்துறவேம் யில்ல சாரே இந்த
சத்தியமூர்த்தி?"ங்றாம் அந்த ஆளு.
"சித்தெ யிப்பிடி உக்காருங்க! இந்த
டீயெ மட்டும் கொடுத்துட்டு வந்து ஒஞ்ஞ வேலையப் பாத்து வுடுறேம்!"ன்னு சொல்லிட்டு
தமிழ் டிபார்ட்மெண்டுக்குள்ள போனவம் போனவந்தாம். விகடு அங்கேயே வருவாம் வருவாம்ன்னு
சாயுங்காலம் அஞ்சு மணி வரைக்கும் காத்துக் கெடக்குறாம். அதுக்கு மேல காத்திருக்க முடியாதுன்னு
தமிழ் டிபார்ட்மெண்டுக்குள்ளப் போயி வெசாரிச்சா, அந்த ஆளு தஞ்சாவூர்ல ஏதோ துக்கம்ன்னு
லீவு அடிச்சிட்டு மத்தியானமே போயிட்டதா சொல்றாங்க. விகடு தாம் ஏமாந்த கதையெ சொல்லி
அவுங்ககிட்டெ உதவி கேட்டாக்க அவுங்க எல்லாம் சிரிக்கிறாங்க. "ஏஞ் சார்! சாமி வரம்
கொடுக்குறப்போ எதுக்குப் பூஜாரிகிட்டெ கொடுத்து ஏமாறுதீயே? இந்தப் பயலே ஆண்டையாரு
கையி கால்ல வுழுந்து வேலைக்கு வந்தப் பயெ. இவ்வேம் போயி சீட்டு கீட்டுன்னு நின்னா
ஆண்டையாரு சீட்டெ கிழிச்சிப்புடுவாரு பாருங்க!"ன்னு.
விகடுவுக்கு என்னத்தெ சொல்றதுன்னு தெரியல.
இருக்குற செருமத்துல இருவத்தி ரண்டாயிரத்தெ இழந்தது கூட பெரிசா தெரியல. வாழ்க்கையில
ஏமாந்து நிக்குற செய்யுவுக்கு ஒரு எம்பில் சீட்டெ வாங்கிக் கொடுக்க முடியலங்ற ஏக்கம்
அதிகமாயிடுச்சு. தனக்குத் தெரிஞ்ச நண்பர்ககிட்டெல்லாம் போன அடிச்சி ஒதவிக் கேக்குறாம்.
ஒதவிக்குக் கேக்குற ஆளுங்க எல்லாம் அதையேத்தாம் சொல்லுறாங்க. மொதல்ல இதெ கேக்காம,
யிப்போ வந்துக் கேட்டாக்க என்னத்தெ பண்ண முடியும்ன்னும், இந்நேரத்துக்கு எல்லா சீட்டையும்
வித்துக் காசாக்கியிருப்பானுவோன்னும். எப்பிடியாச்சும் தங்காச்சிக்கு எங்கேயாச்சும்
அலைஞ்சு சீட்டெ வாங்கிப்புடணும்ன்னு வுடாம அதுக்குப் பெற்பாடும் மூணு நாளு லீவ அடிச்சிட்டு
திருப்பூண்டி ரிஷ்பம் காலேஜே கதின்னுக் கெடந்தாம் விகடு.
விகடு பணத்தெ கொடுத்து ஆளு இவனெப் பாத்ததும்
நழுவி நழுவி ஒளிஞ்சி ஒளிஞ்சிப் போவ ஆரம்பிச்சாம். அவனெப் பத்தி யாருகிட்டெ புகாரு
சொன்னாலும் அந்தக் காலேஜ்ல அதெ யாரும் பெரிசா கண்டுக்கிடல. இதெ பிரின்சிபாலப் பாத்து
வெசயத்தச் சொல்லிப்புடணும்ன்னு மூணு நாளும் அவரோட ஆபீஸூக்கு மின்னாடி காத்துக் கெடந்தாம்
விகடு. அத்து என்னவோ அந்த காலேஜ்ல பிரின்சிபால பாக்குறதுன்னா பண்ணையாளு ஒருத்தெம்
பண்ணையார்ரப் பாக்க தவம் கெடக்கறதுப் போல காத்துக் கெடக்க வேண்டியதா இருந்துச்சு.
அப்பிடியே மூணு நாளு முழுக்க பிரின்சிபால் ரூமுக்கு மின்னாடி காத்து நின்னு, மூணாவது
நாளுத்தாம் சாயுங்கால நேரத்துல பிரின்சிபால பாக்க முடிஞ்சிது விகடுவால.
அவர்ரப் பாத்து அந்தப் புகார்ர சொன்னதுக்கு
பிரின்சிபாலு விகடுவே வாயிக்கு வந்தப்படி, "படிச்ச நீயே பணத்தெ கொடுத்து ஏமாந்து
நின்னா யார்ர என்னத்தெ பண்ணுறது? அவனெ கூப்புட்டுக் கேட்டாக்கா காசியே வாங்கலன்னு கற்பூரத்த
அணைச்சி சத்தியம் பண்ணுவாம். ஒங்கிட்டத்தாம் காசிய கொடுத்ததுக்கு ன்னா ஆதாரம் இருக்கு?
ஒரு மசுரும் இருக்காது. இப்பிடித்தாம் ஒரு நாளுக்குப் பாத்து பேரு வந்து நிக்குறாம்
பணத்தெ கொடுத்துப்புட்டேம், ஏமாந்துப்புட்டேம்ன்னு. ஏம் பணத்தெ கொடுக்குறதுக்கு மின்னாடி
நாஞ்ஞல்லாம் காலேஜ்ல வேல பாக்குறோங்ற நெனைப்பு வாராதா? கொடுக்குற பணத்தெ எஞ்ஞ மாதிரி
ஆளுககிட்டெ பாத்துக் கொடுத்தா கொறைஞ்சா போயிடுவீயோ? இப்பிடியே நின்னுகிட்டு இருக்காம
அடுத்த வருஷமாவது நம்மளையாவது, ஆண்டையாரையாவாது வந்து நேர்ல வந்துப் பாத்து பணத்தெ
கொடு! எடுபிடிககிட்டெ பணத்தெ கொடுத்து ஏமாந்துகிட்டு நிக்காதே!"ன்னு திட்டி
அனுப்புனாரு.
அடுத்தடுத்த நாள்கள்ல விகடுவுக்கு என்ன
பண்ணுறதுன்னு புரியாம காலேஜூக்குக் காலங்காத்தாலயே ஏழு மணிக்கெல்லாம் நின்னுப்புடுவாம்.
அவ்வேம் பணத்தெ கொடுத்த ஆளு கண்ணுல தட்டுப்படுறானான்னு அலைஞ்சி திரிஞ்சித் தேடிட்டுக்
கெடந்தாம். அந்த ஆளு பலே டேக்கா கொடுக்குற ஆளா இருந்ததால ரொம்ப சுலுவா டிமிக்கிக்
கொடுத்துட்டு கண்ணுல படாம ஒளிஞ்சிக்கிட்டுக் கெடந்தாம். வேற ஒரு வழியா அந்த ஆளோட
வூட்டு வெலாசத்தெ தெரிஞ்சிக்கிட்டு அங்கப் போயி நின்னப்போ அவ்வேம் வூடே, பரிதாபகரமா
இருந்துச்சு. வூடு சாதாரண கூரை வூடு. கீத்துப் போட்டு அஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும்
போலருக்கு. கூரையிலேந்து வட்டம் வட்டமா சூரியன் தலையில விழுந்துக் கெடந்துச்சு. பொம்பளைப்
புள்ளைக நாலைஞ்சு கண்ணுல பட்டுச்சு. எல்லாம் பாக்குறதுக்குக் கலியாணம் ஆவாம பஞ்சக்
கோலத்துல நின்னுச்சுங்க. அவனோட அக்காவுக்கு கேன்சர்ன்னும் அதுக்கு தஞ்சாவூரு மெடிக்கல்
காலேஜ்ல வெச்சித்தாம் வைத்தியம் பாக்குறான்னும், அதுக்கு பணமில்லாமத்தாம் ஆளு அலைஞ்சிட்டுக்
கெடக்குறதாவும் சொன்னிச்சுங்க அந்த வூட்டுல இருந்த சனங்க. அதெ பாத்ததும் ஒண்ணும் சொல்லாம்
அந்த எடத்தெ வுட்டு வந்தவந்தாம் விகடு.
அடுத்த ரண்டு நாளு மேலும் லீவ அடிச்சிக்கிட்டுத்
தஞ்சாவூர்ல செய்யு சேர்றதுக்கு விண்ணப்பம் பண்ணி நொழைவுத் தேர்வு எழுதியிருந்த காலேஜூலப்
போயிக் கெடந்து அங்க எதாச்சும் வாய்ப்புக் கெடைக்குதான்னு தானே நேர்ல களத்துல எறங்கிப்
பாத்தாம். பாக்குக்கோட்டை பைபாஸ் ரோட்டுல இருந்த சேவியர் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட்
சயின்ஸ்ல காலேஜ்ல மட்டுந்தாம் அவனால பிரின்சிபாலா இருந்த சிஸ்டர்ர பாக்க முடிஞ்சிது.
இங்க எப்பிடியாச்சும் ஒரு எம்பில்லு சீட்ட தங்காச்சிக்காக வாங்கிப்புடணும்ன்னு வெறித்தனமா
நின்னாம் விகடு. அவுங்களப் பாக்குறதுக்கு மின்னாடி எதுவா இருந்தாலும் அதெ காயிதத்துல
எழுதிக் கொடுத்துட்டுப் போன்னு விகடுகிட்டெ சொல்லி அனுப்பத்தாம் பாத்தாங்க. விகடுதாம்
பிடிவாதமா நின்னு காயிதத்துலயும் எழுதித் தர்றேம், நேர்லயும் பாத்துட்டுப் போயிடுறேம்ன்னு
வம்படியா நின்னு, அவுங்க மின்னாடிப் போயி உக்காந்து விகடு, தங் குடும்பத்து கதெயெ
அரை மணி நேரத்துக்கு மேல சொல்லிருப்பாம். அதெ மேக்கொண்டு கேக்க முடியாதாலயோ என்னவோ
சிஸ்டர் அவனெப் பாத்து, "கர்த்தர் ஒங் குடும்பத்தையும் ஒன்னையும் காப்பாராக!"ன்னாங்க
அந்தக் கதைய நிறுத்துறாப்புல. அதுக்கு, "கர்த்தர் என் சிஸ்டர்ருக்கு ஒரு எம்பில்
சீட்டு கொடுப்பாரா சிஸ்டர்?"ன்னாம் பதிலுக்கு விகடு. சிஸ்டர் தன்னையும் அறியாம
சிரிச்சிட்டாங்க. சிரிச்சவங்க, "காட் பிளஸ் யு மை சன்! போயிட்டு வா! நல்ல சேதிய
கர்த்தர் உனக்கு அனுப்புவாரு!"ன்னு மட்டும் சொன்னாங்க.
விகடு கெளம்புனப்போ அவ்வேம் தங்காச்சியோட
பேர்ர ஒரு தாள்ல கேட்டுக் குறிச்சிக்கிட்டாங்க. விகடு வூடு வந்து சேர்ந்த ஒரு வாரத்துல
தஞ்சாவூரு சேவியரு காலேஜ்லேந்து அட்மிஷன் போட்டுக்குச் சொல்லி ஒரு கடுதாசி வந்திருச்சு.
அத்து சேவியர் காலேஜ்லேந்து வாரல. தஞ்சாவூரு டவுன் மத்தியில இருந்த டிரினிட்டி காலேஜ்லேந்து
வந்துச்சு. எந்த முயற்சியும் பண்ணாம அந்தக் காலேஜ்லேந்து சேரச் சொல்லி கடுதாசி வந்திருச்சு.
கொஞ்சம் காத்திருந்தா எல்லாமும் தானாவே நடந்திருக்கும் போல. எங்க எடம் கும்பகோணத்துக்
காலேஜ்ல நடந்தது போல எடம் கெடைக்காமப் போயிடுமோங்ற பயத்துல களத்துல எறங்கிப் பண்ணுன
அத்தனையுத் தண்டமா போனதோட பண வெரயத்தையும் உண்டு பண்ணிடுச்சு. இந்த எம்பில் அட்மிஷன
மட்டும் எல்லா காலேஜ்லேயும் ஒரே நேரத்துல பண்டுறதில்ல. கொஞ்ச முன்ன பின்னத்தாம் பண்ணுதுங்க.
கும்பகோணத்துக் காலேஜ்கள்ல சீக்கிரமே அட்மிஷன் வேல முடிஞ்சிடுச்சு. அதுக்குப் பெறவுதாம்
மித்த காலேஜ்க அதெ செய்ய ஆரம்பிச்சிருக்கும் போல. செரித்தாம் எப்பிடியோ எம்பில் சீட்டுக்
கெடைச்சா போதும்ன்னு டிரினிட்டு காலேஜ்ல கெடைக்குற எடத்தெ பிடிச்சிப்பேம்ன்னு அந்தக்
காலேஜ்லேந்து வந்த கடுதாசியைக் கையோட கொண்டுப் போயி அத்தோட அந்தக் காலேஜ்ல சேர்றதுக்கான
பணத்தையும் திரும்ப அங்க இங்கன்னு கடன வாங்கித் தெரட்டிக்கிட்டுத் திட்டையிலேந்து டிவியெஸ்
பிப்டியிலேயே கோவில்பெருமாளுக்குக் கொண்டு போயிக் கொடுத்துப்புட்டு வந்தாம் விகடு.
விகடு கொடுத்ததையெல்லாம் எடுத்துக்கிட்டுச் சுப்பு வாத்தியாரும், செய்யுவும் டிரினிட்டி
காலேஜ்ல அட்மிஷன் போட பணத்தோட போயி நிக்குறப்போ, செய்யுவோட நம்பருக்குச் சேவியர்
காலேஜ்லேந்து போன் வந்துச்சு, ஒடனே வந்து அட்மிஷனப் போட்டுக்கிடுங்கன்னு. ஒடனே செய்யு
இந்த வெவரத்தச் சொல்லி விகடுவுக்குப் போன அடிச்சா. விகடு கண்ணு மூடிட்டுச் சொன்னாம்,
டிரினிட்டிய வுட்டு எறங்கி சேவியருக்குப் போங்கன்னு. அதுபடியே சுப்பு வாத்தியாரும்,
செய்யுவும் சேவியர் காலேஜூக்குப் போனாங்க.
சேவியரு காலேஜூக்குப் போயி நின்னவங்க,
அங்க அட்மிஷன் பீஸூ பத்தாயிரம் கூடன்னதும், கையில அம்மாம் காசில்லன்னு ஒடனே போன அடிச்சி
திரும்ப டிரினிட்டிக்கே போயிடுவான்னாங்க செய்யுவும் சுப்பு வாத்தியாரும். வாணாம்ன்னு
சொன்ன விகடு திரும்ப பள்ளியோடத்துக்கு லீவ அடிச்சிட்டு டிவியெஸ் பிப்டியில ஆர்குடி
வந்து தனக்குத் தெரிஞ்ச வாத்தியார்கிட்டெ ரொம்ப ரொம்ப அவ்சரம்ன்னு பத்தாயிரம் பணத்தெ
கடனா வாங்கிட்டு பஸ்ல கூட ஏறாம அதே டிவியெஸ்ஸூ
பிப்டியிலயே தஞ்சாவூருக்குப் போனாம். அங்கப் போயி பணத்தெ கொடுத்து அட்மிஷனப் போட
வெச்சிட்டு ரொம்ப நேரம் காத்திருந்து சிஸ்டர்ரப் பாத்து நன்றி சொன்னாம். சிஸ்டர் கர்த்தருக்கு
நன்றிச் சொல்ல சொன்னாங்க. "நாம்ம அவர்ரப் பாத்ததில்ல. நீஞ்ஞப் பாத்தீங்கன்னா
கண்டிப்பா நம்மளோட நன்றியச் சொல்லிப்புடுங்க. தப்பா நெனைச்சிக்கிடாதீங்க சிஸ்டர்!
கர்த்தர்ர பாக்குற அளவுக்கு நாம்ம பெரிய ஆளு யில்ல. நம்மாள ஒஞ்ஞளத்தாம் பாக்க முடியுது.
அதாங் ஒஞ்ஞளுக்கு எம்மட நன்றிக!"ன்னு சொல்லிட்டு வந்தாம்.
எப்பிடியோ காசி பணம் கண்டமேனிக்கு வெரயம்
ஆனாலும் கடெசியா செய்யுவுக்கு எம்பில் சீட்டுக் கெடைச்சதுல எல்லாத்துக்கும் சந்தோஷம்.
இதுல ஒரே ஒரு அசௌகரியம்ன்னு பாத்தா செய்யுவுக்குக் கும்பகோணத்துலயே எம்பில் சீட்டுக்
கெடைச்சிருந்தா செளகரியாம இருந்திருக்கும். தஞ்சாவூரு சேவியர் காலேஜ்ல கெடைச்சதால அவ்வே
கும்பகோணம் போயி அங்கயிருந்து நெதமும் தஞ்சாவூருக்குப் பஸ்ஸப் பிடிச்சிப் போயி எம்பில்ல
படிக்க வேண்டியதா இருந்துச்சு.
*****
No comments:
Post a Comment