எது நடந்தாலும் தைரியமா இருந்துக்கோ!
செய்யு - 633
அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப்
போயிட்ட வந்த அடுத்த வாரத்துல ஒரு நாளு மறுபடியும் விசாரணைக்கு வாரச் சொல்லி போன்ல
கூப்புட்டு விட்டாங்க. இந்த முறை புகார்ல இருக்குற அத்தனெ பேருக்கும் போன போட்டு
கட்டாயமா வாரணும்ன்னு சொல்லிருக்கிறதால கண்டிப்பா வந்துப்புடுங்கன்னு அழுத்தம் திருத்தமா
சொன்னாங்க. அதால இந்த தடவெ எப்பிடியும் வெசாரணை நடந்துப்புடும்ங்ற நம்பிக்கெ எல்லாருக்கும்
வந்திருந்துச்சு. போன தடவெ போனதெப் போல இந்த தடவெயும் சுப்பு வாத்தியாரு, விகடு,
கைப்புள்ள, செய்யுன்னு நாலு பேரும் கெளம்புறதுக்குத் தயாரானாங்க. போன தடவெ போன அனுபவத்துல
இந்தத் தடவெ கட்டுச்சோறு, ப்ளாஸ்க்ல டீத்தண்ணி, நாலு தண்ணி பாட்டில்ல தண்ணின்னு எடுத்துக்கிட்டு
எதுக்கும் தயாராவே கெளம்ப ஆயத்தமானாங்க.
"போன தடவெ போன் அடிச்சி ஸ்டேசன்லேந்து
சொல்லிருக்காங்க. அவனுங்க வர்றதா சொல்லி வாராம இருந்திருக்கானுங்க. அதாங் அன்னிக்குப்
போன அடிச்சதும் நம்பர்ர பாத்துட்டு ஒருத்தனும் எடுக்காம இருந்திருக்கானுங்க. அதெ இந்த
மொறை சரி பண்ணிருப்பானுங்க. அதால இந்த மொறை அவனுங்க வந்துத்தாம் ஆவணும். ஸ்டேசன்ல
இனுமே சும்மா வுட்டுப்புட்டு தேட மாட்டாங்க. இன்னிக்கு ரண்டுல ஒண்ணுப் பாத்துப்புடுவேம்.
ஒண்ணும் பயப்பட வேண்டியதில்ல. சேந்து வாழணும்ன்னு சொன்னா எப்பிடியும் சமாதானத்தப்
பண்ணியோ, உருட்டி மெரட்டியோ சேத்து வெச்சிப்புடுவாங்க. இஷ்டம் இல்லன்னா சாமாஞ் செட்டுகள
வாங்கிக் கொடுத்து எழுதி வாங்கிக்கிட்டு கோர்ட்லப் போயி வெவாகரத்தெ போட்டுப்புடுங்கன்னு
அனுப்பிப்புடுவாங். நமக்கு வேல சுலுவாப் போயிடும் பாருங்க!"ன்னாரு கைப்புள்ள
ரொம்ப நம்பிக்கையோட.
"அப்பிடி இந்த ஸ்டேஷனோட கதெ இத்தோட
முடிஞ்சாலும் செரித்தாம். அதுக்காகத்தாம் நாலு தடவெ அலையுறதப் பாக்கக் கூடாது. அலைஞ்சிக்
கிலைஞ்சித்தாம் காரியத்தெ முடிச்சாவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நெலமைய புரிஞ்சிக்கிட்டாப்புல.
"செரி கெளம்புங்க. இதாங் கடெசீ அலைச்சல்ன்னு
நெனைச்சிக்கிட்டுப் போயிக் காரியத்தெ முடிப்பேம். இதுக்கு மேலயும் ஆண்டவனும் நம்மள
அலைய வுட மாட்டாம்ன்னு மனசுக்குள்ள பட்சி சொல்லுது!"ன்னாரு கைப்புள்ள குறி பாத்துச்
சொல்லுறாப்புல தெடமா. அந்தத் தெடத்தோடயே நாலு பேருமா ரண்டு வண்டியில கெளம்பிப் போனாங்க.
போன தடவைக்கு இருந்த அளவுக்கு இப்போ கூட்டம்
ரொம்ப இல்ல. ஆன்னா ஸ்டேசனுக்கு மின்னாடி ஏகப்பட்ட காருங்க இருந்துச்சு. எல்லா கார்களும்
கட்சிக்காரங்களோட காருங்றதெ ஒவ்வொரு காரு மின்னாடியும் பறந்த கட்சிக்கொடிங்க காட்டுனுச்சு.
நெறையக் காரு கிடக்கிறதப் பாத்துட்டு ஸ்டேஷனுக்கு வந்தவங்க இன்னிக்கு ஒண்ணும் பெரிசா
வேல ஆவாதுன்னு நடையக் கட்டிட்டுக் கெளம்ப ஆரம்பிச்சது தெரிஞ்சது. கைப்புள்ள கெளம்பிக்கிட்டு
இருந்த ஒரு ஆளெ நிறுத்தி வெசாரணையப் போட்டாரு. "நீங்க பாட்டுக்கு வந்துப்புட்டு
கெளம்பிப் போனா ன்னா அர்த்தம்? ஏம் ஸ்டேசன்ல இன்னிக்கு வேல ஆவாதா?"ன்னு. அதுக்கு
அந்த ஆளு சொன்னாரு, "இந்தக் கட்சிக்காரனுங்க வந்தாலே ஸ்டேஷன்ல வேல ஓடாதுங்க.
போலீஸப் போட்டு அலைக்கழிச்சிப்புடுவானுங்க. அவுங்க அங்க இங்க ஓடுறதுன்னு நிப்பாங்களே
தவுர நமக்கு ஒண்ணும் வேல ஆவாதுங்க. அதாங் ஸ்டேசன்ல சொல்லிட்டுக் கெளம்புறோம்ங்க!"ன்னு.
"அப்போ நாமளும் கேட்டுக்கிட்டுக்
கெளம்புவமா?"ன்னா செய்யு பட்டுன்னு.
"வந்த ஒடனே கெளம்புவோம்ங்றீயா? வந்தது
வந்தாச்சு. இருந்து என்னா ஏதுன்னுத்தாம் பாப்பமே. அப்பிடி ன்னா வெசாரணை நடக்குதுன்னு?
இதெல்லாம் வூட்டுல இருந்த பாக்க முடியுமா? இப்பிடி வந்தாத்தாம் பாக்க முடியும். பாத்துக்கோ.
பெரிய எடுத்து கதெகளெ இப்பிடித்தாம் இருக்குது. எல்லா எடத்துலயும் நடக்குறதுதாங் இதெல்லாங்றதெ
நீயிப் புரிஞ்சிக்கிணும். ஏதோ ஒனக்கு மட்டும் நடக்குறதா நெனைச்சிக்கிட்டுப் புழுங்கிக்கிட்டு
இருக்கக் கூடாது! இந்த மாதிரிக்கி நாலு எடத்துக்கு வந்து நாலு அனுபவத்தப் பாத்தாத்தாம்
மனசு சுலுவாகித் தெளிவாகித் தெடமாகும்!"ன்னாரு கைப்புள்ள. அதெ சொல்லிப்புட்டு
ஸ்டேசனுக்குள்ள போனாரு. ஸ்டேசன்ல இன்ஸ்பெக்டரு அம்மா உட்பட யாரும் இல்ல. ஒரே ஒரு போலீஸ்கார
அம்மா மட்டுந்தாம் உக்காந்து எழுதிக்கிட்டு இருந்துச்சு. அதுகிட்டெ விசாரிச்சப்போ
வெளியில கிடக்குற கட்சிக்காரவுங்க சம்பந்தமா வெசாரிக்கத்தாம் கார்ர எடுத்துட்டுப் போயிறக்கிறதாவும்,
ஒடனே வந்துப்புடுவாங்கன்னும் அந்தப் போலீஸ்கார அம்மா சொன்னுச்சு.
வெளியில ஒரு டீத்தண்ணி விக்குறவருதாம்
இருந்தாரு. கூட்டம் ரொம்ப இல்லாததால இன்னொரு டீத்தண்ணி விக்குறவர காங்கல. சுப்பு
வாத்தியாரும், கைப்புள்ளயும் ஸ்டேசன வுட்டு வெளியில வந்ததெப் பாத்து, "டீ வேணுமா
சார்! சூடான சுக்கு டீ சார்! ஒடம்புக்கு நல்லது சார்!"ன்னாரு டீ விக்குறவரு.
"வூட்டுலயே கெளம்புறப்பவே டீத்தண்ணியில்லாம் எடுத்து வந்தாச்சுப்பா!"ன்னாரு
கைப்புள்ள. "இந்தக் கட்சிக்காரப் பயலுவோ ஸ்டேசனுக்கு வந்தாவே கூட்டம் போயிடுது
சார்! நம்ம பொழப்பும் போயிடுது சார்! வேற எடத்தெ பாக்க வேண்டியதுதாம்!"ன்னு
சலிச்சிக்கிட்டெ டீ விக்குற ஆளு சைக்கிளத் தள்ள ஆரம்பிச்சாரு.
கைப்புள்ள கார்லேந்து வெளியில எறங்கி நின்ன
ஆளுங்ககிட்டெ போயி பேச்ச கொடுத்து வெசாரணையப் போட ஆரம்பிச்சாரு. அவரு பேச, அந்த ஆளுங்கப்
பேச ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தவரு அதெ முடிச்சிக்கிட்டு எல்லா வெவரத்தையும் கறந்துகிட்டு
இப்போ பக்கத்துல வந்தாரு.
"பெரிய எடமா இருந்தாலும் பொண்ண கட்டிக்
கொடுத்தா பெரச்சனைதாம் போலருக்கு!"ன்னாரு கைப்புள்ள உதட்டைப் பிதுக்குனாப்புல.
"என்ன வெசயம்?"ன்னாரு சுப்பு
வாத்தியாரு ஆவலாதியா.
"நம்ம கதெய வுட மோசமா இருக்கு. ஏற்கனவே
கலியாணம் ஆயி அந்தப் பயலுக்குப் பொண்ணு இருந்திருக்கு. அத்து தெரியாம பெரிய எடம்ன்னு
கொண்டுப் போயிக் கொடுத்திருக்காங்க. எரநூறு சவரன் நகையாம், இருவது லட்சம் பணமாம்,
பெறவு சீரு சனத்தின்னு ஒரு கொறையில்லாம கட்டிக் கொடுத்திருக்காங்க. அந்தப் பயெ இந்தப்
பொண்ணையும் கட்டிக்கிட்டு இன்னொரு பொண்ண வேற இழுத்தாந்து வெச்சி மூணு பேத்தோட குடும்பம்
நடத்துறானாம். இவுங்கப் பொண்ணு அதெ பாத்துட்டு கெளம்பி வந்துட்டாம். மொறையாப் போவும்ன்னு
ஸ்டேசன் வழியா வந்தா இது வரைக்கும் ரண்டு தடவே வந்தும் எதிர்பார்ட்டியிலேந்து யாரும்
வரலியாம். அவ்வேம் ரொம்ப பெரிய எடத்து ஆளா இருப்பாம் போலருக்கு. ஒப்பனுக்கும் பே,
ஒங்க தாத்தனுக்கும் பேன்னு பெப்பே காட்டிட்டு இருக்காம். அதாம் இவுங்கப் பாத்திருக்காங்க.
கூட்டத்தெ கொண்டாந்து நிப்பாட்டிப்புட்டாங்க. இவுங்களும் கட்சியில பெரிய ஆளாம். இன்னிக்குக்
கூட்டத்தெ கொண்டாந்து நிப்பாட்டுன்ன பெறவுத்தாம் இன்ஸ்பெக்டரு அம்மாவெ கெளம்பிருக்காங்களாம்.
அவுங்க வந்தாத்தாம் நெலவரம் தெரியும்!"ன்னாரு கைப்புள்ள ஒரு பகட்டுச் சிரிப்பு
சிரிச்சாப்புல.
"எல்லா எடத்துலயும் இப்பிடின்னா என்னத்தாம்
பண்ணுறது? நாம்ம கட்டிக் கொடுத்த பயலுக்கு இப்பிடி மொத கலியாணம், ரண்டாவது கலியாணம்ன்னு
எதாச்சும் இருக்குமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரும் சிரிச்சிக்கிட்டே.
"ம்ஹூக்கும்! அவுங்க கதெயில அவுங்க
சொல்றதப் பாக்குறப்போ அவ்வேம் ஆம்பளங்க. இன்னும் பத்துக் கலியாணம் கூட பண்ணுவாம்.
நீங்க சரியான பொட்டப் பயலுக்குக் கட்டிக் கொடுத்துப்புட்டு அப்பிடில்லாம் கனவுல கூட
நெனைச்சிப் பாக்காதீயே. அவ்வந்தாம் இந்த ஒரு கலியாணத்துக்கே முக்குறானே! அவ்வேம் எஞ்ஞ
இன்னொண்ண கட்டுறது? அந்தப் பயெ வாராம இருக்குறதுக்கு அத்து ஒரு காரணம். போலீஸ் ஸ்டேசன்ல
அதெ வெச்சி வெசாரிப்பாங்றது தெரியும். அதுக்கு யோசனெ பண்ணிட்டுத்தாம் வர்றாம இருக்குறதுக்கு
என்ன வேலயல்லாம் பண்ணணுமோ அதெ பண்ணுறாம்! பாப்பேம் நாமாளும் இந்தத் தடவெ கதெ ஆவலன்னா
அடுத்த தடவே இதெத்தாம் பண்ணணும்!"ன்னாரு கைப்புள்ள ஒரு நமுட்டுச் சிரிப்போட.
"நாம்ம இருக்குற நெலைக்கு நாம்ம எஞ்ஞ
கட்சிக்காரங்கள கொண்டாரது? நமக்குத் தெரிஞ்சது ரகுநாதம் ஒரு ஆளுதாம். அவருன்னா இதெ
பஞ்சாயத்துலயே வெச்சி சரிபண்ணிருப்பாரு. அவருந்தாம் மாரடைப்பு வந்துப் போயிச் சேந்துப்புட்டாரு.
நல்ல மனுஷன்லாம் நாட்டுல ரொம்ப நாளைக்கு எவ்வேம் இருக்காம்? இருக்குறவேம்ல்லாம் கேடு
கெட்ட பயலுவோத்தாம் இருக்கானுவோ! நம்ம நேரம் அப்படி யாரும் ஒதவிக்கு யாரும் வார முடியாத
அளவுக்கு இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னெ நொந்துகிட்டாப்புல.
"என்னத்தெ பண்ணுறது? கேடு கெட்ட அவனுங்களுக்குத்தாம்
நாட்டுல மதிப்பு இருக்குது. அவனுங்க வந்தாத்தாம் கதெ நடக்குது!"ன்னாரு கைப்புள்ள
விரக்தியா.
"இந்த தடவெ கதெ முடிஞ்சிடறதா பட்சி
சொல்றதா சொன்னீயளே?"ன்னா செய்யு கைப்புள்ளயப் பாத்து மொகத்தத் தொங்கப் போட்டுட்டு.
"சொன்னேந்தாம். பட்சிக் கணக்கு தப்பா
போயிடுச்சு. இஞ்ஞ வந்துப் பாத்த பெறவுதானே தெரியுது. நாம்ம வந்திருக்கோம். அவனுங்க
தரப்புலேந்து ஒரு மண்டயாச்சும் தெரியுதான்னு பாரு! இல்லியே. இன்னிக்கு வார மாட்டானுங்கன்னுத்தாம்
நெனைக்கிறேம்! என்னப்பா விகடு! தங்காச்சியக் கட்டிக் கொடுத்துப்புட்டு இப்பிடி ஸ்டேசன்
ஸ்டேசனா அலைய வேண்டிக் கெடக்குன்னு நெனைக்குதீயா?"ன்னாரு கைப்புள்ள விடுகவெப்
பாத்து.
"தப்பான எடத்துல கொடுத்தாச்சு. அதுலேந்து
வெளியில வந்துத்தானே ஆவணும்! அதெயே நெனைச்சிகிட்டு இருக்க முடியுமா?"ன்னாம் விகடு
அழுத்தமா.
"அதாங் செரி! முள்ளு மேல வுழுந்த
சேலத்தாம். பாத்துப் பதனமாத்தாம் எடுக்கணும். அவ்சரப்பட்டா முள்ளுக்குச் சேதாரமில்ல.
பொடவைக்குச் சேதாரமாப் போயிடும்!"ன்னாரு கைப்புள்ள பக்குவமா சொல்லுறாப்புல.
அப்பிடியேப் பேசிப் பேசி மத்தியானத்தெ
வரவழைச்சிப்புட்டாங்க நாலு பேரும். சாப்பாட்ட கொண்டாந்தது நல்லதாப் போச்சுன்னு அதெ
உக்காந்துச் சாப்புட்டு முடிச்சிருப்பாங்க. இன்ஸ்பெக்டரு அம்மா ஜீப்புல வந்து எறங்குனாங்க.
செய்யு ஒடனே வேப்பமரத்தடியிலேந்து ஸ்டேசன் பக்கம் போறதுக்கு தன்னெ அறியாம எழும்புனா.
கைப்புள்ள பட்டுன்னு நிறுத்துனாரு. "ஒடனே போவக் கூடாது. போன எடத்துல வெவகாரம்
எப்பிடின்னு தெரியல. மனசு எப்பிடி இருக்கும்ன்னு தெரியாது. அவுங்க சித்தெ உக்காந்து
ஆசுவாசம் ஆவட்டும். மத்தியானம் சாப்புட்ருக்காங்களோ என்னவோ தெரியல. நீயி மின்னாடிப்
போயி நிக்காதே. பொறுத்ததுப் பொறுத்தாச்சி. ஆக்க பொறுத்த பின்னாடி ஆறப் பொறுக்குறதுல
தப்புல்ல. சித்தெ இரு. கொஞ்சம் அவுங்களும் அசமடங்கட்டும். பத்து நிமிஷம் கழிச்சிப்
போவலாம்! இப்பிடில்லாம் சில விசயங்க இருக்கு ஒருத்தரப் பாக்குறதுல."ன்னாரு கைப்புள்ள
செய்யுவ சித்தெ அசமடக்குறாப்புல.
கைப்புள்ள சொன்னது சரித்தாம். பல வெசயங்கள்ல
அனுபவப்பட்ட ஆளு இல்லையா அவரு. இன்ஸ்பெக்டர் வந்ததும் வராததுமா ஸ்டேசன்குள்ள கட்சிக்கார
ஆளுங்க புகுந்தாங்க. கார சாரமா உள்ளார பேச்சு நடக்குறது வெளியில வரைக்கும் கேட்டுச்சு.
"நடவடிக்கெ எடுக்க முடியும்ன்னா சொல்லுங்க.
இல்லன்னா நாம்ம வேற மொறையிலப் பாத்துக்கிடுறேம்!"ன்னு சத்தம் போட்டாங்க உள்ளாரப்
போன கட்சிக்காரவுங்க.
"சட்டத்துக்கு வுட்பட்ட மொறையிலத்தாம்
எதையும் செய்ய முடியும். வெசாரிக்கலாம். சாமாதானத்தப் பண்ணி வுடலாம். அதுக்கு மேலன்னா
கேஸ்ஸப் போட்டு கோர்ட்லத்தாம் பாத்தாவணும். அவ்வேம் என்னான்னா எல்லாத்தையும் தாண்டி
ஜகஜ்ஜால கில்லாடியா இருக்காம். நாலு வக்கீல்ல வூட்டுக்கு மின்னாடியே குத்த வெச்சிருக்காம்.
முன்ஜாமீன்லாம் வாங்கி கையில ரெடியா வெச்சிருக்காம். எங்கள என்னத்தெ பண்ணச் சொல்றீங்க.
இதுல பெரிய எடம் வரைக்கும் ரெகமெண்டேசன் வேற. ஒரு பத்து நிமிஷத்துக்கு மேல நின்னா மானநஷ்ட
வழக்குப் போடுவேன்னு போலீஸையே மெரட்டுறாம்! என்னத்தெ பண்டச் சொல்றீங்க. கொஞ்சம் மெரட்டலாம்ன்னு
பாத்தா அவ்வேம் நம்மள மெரட்டுறாம். போலீஸ் அராஜகம்ன்னு பத்திரிகெ வரைக்கும் போடுவேம்ன்னு
நாலு பத்திரிகெ கார ஆளுங்களயும் பக்கத்துலயே வெச்சிருக்காம் போட்டோல்லாம் பிடிக்குறாப்புல!"ன்னாங்க
இன்ஸ்பெக்டர் அம்மாவும் சத்தமா.
"அப்டின்னா நாஞ்ஞ எஞ்ஞ வழியிலயே பாத்துக்கிடுறேம்.
நாளைக்கி ஒரு பெரச்சனன்னா எஞ்ஞகிட்டெ வர்றாம்ம எப்பிடி நேரடியா காரியத்துல எறங்குனீங்கன்னு
ஒஞ்ஞ டிபார்ட்மெண்ட்லேந்து ஒரு பேச்சு வந்துப்புடக் கூடாதுங்றதுக்குத்தாம் மொறையா
வந்தேம். இப்பத்தாம் அத்து தப்புன்ன புரியுது!"ன்னு சொல்லிட்டு பேசிக்கிட்டு
இருந்த கட்சிக்கார ஆளுங்க பொசுக்குன்னு வேக வேகமா வந்து கார்ர எடுத்துட்டுக் கெளம்புனாங்க.
ஸ்டேசன் வாசப்படி இப்போ உலக அதிசயத்துல காணாத ஒண்ணா வெறிச்சோடி கெடந்துச்சு. கைப்புள்ள
உள்ளார எட்டிப் பாத்தாரு. இன்ஸ்பெக்டரு அம்மா எந்த விதச் சம்பவமும் நடக்காததப் போல
சாப்புட உக்காந்தாங்க. அவுங்க சாப்புட்டு முடிக்கிற வரைக்கும் காத்திருந்து அதுக்குப்
பெறவும் ஒரு பத்து நிமிஷம் ஆன பின்னாடி கைப்புள்ள மறுக்கா உள்ளார ஒருமொறை எட்டிப் பாத்துட்டு
எல்லாரையும் அழைச்சிக்கிட்டு உள்ளார போனாரு.
இன்ஸ்பெக்டர் அம்மா தலைய அப்படியும், இப்படியும்ன்னு
ஆட்டி தலைய சுத்திச் சுத்தி நெட்டி முறிக்கிறாப்புல பண்ணிக்கிட்டு அவுங்களாவே பேச ஆரம்பிச்சாங்க.
"போலீஸ்ன்னு சொல்றாங்க. ரண்டு பக்கத்துலயும் நெருக்கடி. ரண்டு பேருமே கட்சியில
பெரிய ஆளுங்க. ரண்டு பயலுங்களும் வேற வேற கட்சின்னாலும் எதாச்சும் பண்ணலாம். இதுல ரண்டு
பயலுங்களும் ஒரே கட்சி வேற. இவ்வளவு வெவரமா பேசுறவனுங்க மாப்புள்ளையப் பத்தி வெசாரிக்கிறதில்ல?
அதுல பாருங்க வெசாரணையப் பண்ணுன்னு ஒரு பக்கம். வெசாரணையப் பண்ணாதேன்னு இன்னொரு பக்கம்.
முடியாதவங்க ஸ்டேசனுக்கு வர்றாங்க. இவனுங்க ஸ்டேசனுக்கு வந்து ஸ்டேசனையே முடியாமப்
பண்ணிப்புடுறானுங்க. டியெஸ்பிக்குப் போன போடுறது, ஏடியெஸ்பிக்குப் போன போடுறதுன்னு,
அவுங்க நமக்குப் போன போடுறதுன்னு இந்தப் போன அட்டெண்ட் பண்ணி முடிச்சி ஒரு பதிலச்
சொல்றதக்குள்ளாரயே உசுருப் போயி உசுரு வந்துப்புடுது. பேசாம இந்த ஸ்டேசன வுட்டு வேற
ஒரு ஸ்டேசனுக்குப் போயிடலாம்ன்னுப் பாக்குறேம். முடிய மாட்டேங்குது! இந்த ஒரு கேஸாலயே
ஏகப்பட்ட கேஸ்ங்கள வெசாரிக்க முடியாம ஒரு வாரமா வேலைய ஓட மாட்டேங்குது. இத்தோட வர்றாம
ஒழிஞ்சா தேவல. எதாச்சும் பண்டித் தொலையட்டும். மறுபடி வந்து நின்னு ஆவ வேண்டிய வேலையையும்
ஆவ வுடாம பண்ணிப்புடுவானுவோன்னு பயமா இருக்கு!"ன்னாங்க ரொம்ப சலிச்சிப் போனாப்புல.
அதெ சொல்லிட்டு அப்பிடியே உள்ளார இருந்த
போலீஸ்கார அம்மாகிட்டெ சத்தத்தெ கொடுத்து, "இனுமே இதெ வெசாரிக்க வாணாம். ஒரு
எப்.ஐ.ஆர்ரப் போட்டு கோர்ட்டுக்குத் தட்டி வுடுங்க. சமாதானமா பேசி வுடுறாப்புல இல்ல.
கோர்ட்டுக்குப் போனத்தாம் இதெல்லாம் சரிபட்டு வரும்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா
பட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாப்புல.
"அப்பிடியே பண்ணிப்புடலாம்மா!"ன்னு
உள்ளார இருந்து சத்தம் வந்துச்சு.
"அப்போ கோர்ட்டுக்குப் போறதா?
வாணாமா?"ன்னாரு கைப்புள்ள சிரிச்சிக்கிட்டெ இன்ஸ்பெக்டர் அம்மாகிட்டெ கேட்டாரு
ஊடால பூந்து.
"சேர்ந்து வாழ்றதுன்னா புகார்ர மட்டும்
வெச்சிக்கிட்டு சமாதானம் பண்ணி வுடுவோம். பிரிஞ்சிப் போறதுன்னா சாமாஞ் செட்டுகள வாங்கிக்
கொடுத்து செட்டில்மெண்டு பண்ணி வுட்டு எழுதி வாங்கிக்கிட்டு, கோர்ட்டுக்குப் போயி
மியூட்சுவலா வெவகாரத்தப் போட்டுக்கிட்டுப் பிரிஞ்சிப் போயிடுங்கன்னு அனுப்பிச்சிடுவேம்.
நம்ம அனுபவத்துல நமக்குத் தெரிஞ்சதுல இத்து ரண்டுத்தாம் சரியான வழிங்க. இதுக்கு மேல
இஞ்ஞ தீர்க்க முடியாம கோர்ட்டுக்குன்னு போனா வெசாரணைங்றது வருஷக் கணக்குலத்தாம் நடக்கும்.
ஒரு சின்ன விசயத்தெ கோர்ட்ல நிரூபிக்குறதுங்றது சாமானியமில்ல. வெசாரணைன்கு வருஷங்க
அது பாட்டுக்குப் போயிட்டே இருக்குமே தவுர வேற எந்த புண்ணியமும் இருக்கப் போறதில்ல!
வறட்டு கௌரவத்துக்கு மோதிக்கிட்டு நிக்கலாம். இவனுங்க அப்பிடி நின்னாத்தாம் அடிபட்டு
அடங்குவானுங்க! சொன்னா புரியாது!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா.
"நம்மப் பொண்ணோட கேஸையும் கோர்ட்
கீர்ட்டுன்னு அலைய வுடாம அம்மாவே முடிச்சிக் கொடுத்துப்புட்டா தேவலாம்!"ன்னாரு
கைப்புள்ள சாமர்த்தியமா வந்த வெசயத்தெ சொல்லுறாப்புல.
"அதாங் நீங்களே பாக்குறீங்களே? இன்னிக்கு
இருக்குற பயலுங்க எல்லாம் போலீஸத் தாண்டி யோசிக்கிறானுங்க. பெரிய கிரிமினல்லா போயிட்டானுங்க.
எங்கிட்டெயே சட்டம் பேசுறானுங்க. சட்டத்துல இருக்குற அத்தனெ ஓட்டையையும் தெரிஞ்சி வெச்சிக்கிறானுங்க.
எங்களால சட்டத்தெ மீறி என்ன பண்ண முடியுது? கடசீயா எதாச்சும் பண்ணலாம்ன்னா ஒத்து வந்தாத்தாம்
முடிச்சி வைக்கலாம். ஒத்து வர்றதாப்போ கோர்ட்டுலத்தாம் எல்லாம். ஒரு எல்லையத் தாண்டி
எதாச்சும் பண்ணுனா நாஞ்ஞப் போயி கோர்ட்ல நிக்குறாப்புல ஆயிடும். புரோமோஷன், இங்கிரிமெண்ட்டுன்னு
எல்லாம் புட்டுக்கிட்டுப் போயிடும்! ரிட்டையர்டு ஆயி பென்ஷன்ன வாங்குறதுக்குள்ள நாக்குத்
தள்ளிப் போயிடும்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா ரொம்ப அடிபட்டவங்கப் போல.
"அம்மா நெனைச்சா முடிக்கலாம்!"ன்னாரு
கைப்புள்ள வந்த சோலிய வசமா முடிக்குறாப்புல.
"இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டி
கேஸ்கள வெசாரிச்சி வெசாரிச்சி ராத்திரி படுத்தா நிம்மதியான தூக்கமே வர்ற மாட்டேங்குது
நமக்கு. என்னத்தெ பண்ணுறது தாலி கட்டியாச்சு, பொண்டாட்டி ஆயாச்சுன்னா பலதெ பொண்ணுங்க
சகிச்சிக்கிட்டுத்தாம் போயி ஆவ வேண்டியதா இருக்கு. நம்ம கதெயெ எடுத்துக்கிடுங்க. அனைத்து
மகளிர் காவல் நிலையத்துல இன்ஸ்பெக்டர்ன்னுத்தாம் பேரு. மாமான் பையன்னு நெனைச்சுக் கலியாணம்
பண்ணது. குடிச்சிட்டான்னா நெலமெ புரியாது. ஒதெ பின்னி எடுத்துடுறாம். தோளுக்கு மேல
ரண்டு புள்ளைங்க ஆயிடுச்சு. நமக்கே இந்தக் கதித்தாம். கொடுமெ கொடுமென்னு கோயிலுக்குப்
போனா அஞ்ஞ ஒரு கொடுமெ தலைவிரிச்சி ஆடுற கதெதாம். நாம்ம எஞ்ஞப் போயி புகார்ரப் பண்ணுறது
சொல்லுங்க. சகிச்சாத்தாம் வாழ்க்கெ. இல்லன்னா கலியாணத்தப் பண்ணாம இருந்துக்கிடணும்
பொம்பளைங்க. வேற வழியில்ல. ஆம்பளன்னா கொம்பு மொளைச்சிக்கிறதா நெனைச்சிக்கிடுறானுங்க
பேதியில போறவனுங்க!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா விரக்தியா.
"என்னத்தெ பண்ணுறது? வூட்டுக்கு வூடு
வாசப்படித்தானேம்மா!"ன்னாரு கைப்புள்ள அவுங்கள ஆறுதல் பண்ணுறாப்புல.
"இந்த வேலைக்கு வந்திருக்கக் கூடாது.
புள்ளெ குட்டியோள பத்து நிமிஷம் பாத்து பேச முடிய மாட்டேங்குது. எந்நேரத்துக்கும்
போன்தாம். இந்தப் போன எவ்வேம் கண்டுபிச்சானுவோளோ? அதுவும் செல்போன் வந்த பெறவு
ஒரு ரண்டு நிமிஷம் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தா போதும் பொறுக்காது. ஒடனே போன்தாம்.
மாட்டு யூனிபார்ம்மான்னு வந்து இஞ்ஞ வந்து கெடக்க வேண்டித்தாம். இப்பிடித்தாம் ஓடிட்டு
இருக்கு நம்ம பொழப்பு. அத்துச் செரி எங் கதெயெ சொல்லி ஒஞ்ஞள டார்ச்சர் பண்ணிட்டு
இருக்கேம் பாருங்க. இந்த பொண்ணோடதெ எடுத்துட்டு வாஞ்ஞ!"ன்னு உள்ளாரப் பாத்து
கொரல கொடுத்தாங்க இன்ஸ்பெக்டர் அம்மா.
உள்ளார இருந்த கேஸ் கட்ட எடுத்துட்டு ஒரு
போலீஸ்கார அம்மா வந்தாங்க. அவுங்களப் பாத்து, "எதிர் பார்ட்டி வாரலையா?"ன்னாங்க
இன்ஸ்பெக்டர் அம்மா கொரல ஒசத்தி.
"இத்து ரண்டாவது மொறைம்மா. போன்ன
போட்டு கண்டிஷன்னா சொல்லியாச்சு. வர்றேன்னுத்தாம் சொன்னாங்க. இப்போ பண்ணிக் கேக்குறதுக்கு
ஒருத்தரு ஒடம்புக்கு முடியலங்றாரு. ஒருத்தரு துக்கம் வந்துட்டதா அதுக்குப் போயிட்டதா
சொல்றாரு. யாரு சொல்றதும் நம்புறாப்புல இல்லம்மா!"ன்னாங்க அந்த போலீஸ்கார அம்மா
ரொம்ப பணிவா.
"மருவாதியாப் போன்ல கூப்புட்டு வெச்சி
கெளரவமா முடிச்சி வுடலாம்ன்னு பாத்தா முடியாது போலருக்கு. எல்லாத்துக்கும் வெசாரணைக்கு
வந்தாவணும்ன்னு காயிதத்தெப் போட்டு வுடு. அடுத்த வாரம் வெயாழக் கெழம எல்லாம் இஞ்ஞ
வந்தாவணும். இம்மிடீயேட்டா பண்ணு. அப்பிடியே பாக்குக்கோட்டை ஸ்டேஷனுக்கும் போன போட்டு
வெசயம் இந்த மாதிரின்னு சேதியப் போட்டு வுட்டு என்னா நெலவரங்றதெ கேட்டு வையி!"ன்னு
அந்தப் போலீஸ்கார அம்மாகிட்டெ சொன்னவங்க செய்யுவப் பக்கத்துல கூப்புட்டாங்க.
"அடுத்த தடவெ கண்டிப்பா வந்துத்தாம்
ஆவணும். அன்னிக்கு யாருக்கும் நோ எக்ஸ்கியூஸ். ரண்டு தடவெ அலைஞ்சிட்டுப் போறதா நெனைக்கதடா
கண்ணு. கலங்காம போடா கண்ணு. அடுத்ததுக்கு வாரலன்னா அரஸ்ட் வாரண்ட்தாம்!"ன்னு
நம்பிக்கையோட சொல்லி அனுப்புனாங்க அந்த இன்ஸ்பெக்டர் அம்மா.
"இத்துப் போதும்மா! எஞ்ஞ பொண்ணுக்கு
ஞாயம் கெடைக்குதோ ல்லியோ ஒங்கள மாதிரி தெகிரிய லட்சுமியா இருந்தா போதும். ஒஞ்ஞள
பாக்குறதுக்குன்னேத்தாம் கூப்புட்டு வந்தேம். ஒஞ்ஞளப் பாக்குறதுக்குன்னே இன்னும் எத்தனெ
தடவன்னாலும் அழைச்சிட்டு வர்றேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கைப்புள்ள பேசுறதெப்
போல. அதெ கேட்டதும் கைப்புள்ள மனசுக்குள்ள ஒரு சிரிப்ப சிரிச்சிக்கிட்டாரு, “பரவாயில்ல
வாத்தியாரு நாலு எடத்துக்கு வந்துப் பேச்சுல நல்லாவே தேறிட்டாரு!”ன்னு.
"வேற என்னங்கய்யா நாம்ம பண்ண முடியும்.
இந்த ஒலகத்துலப் பொறந்தாச்சு. தெகிரியமா இருக்குறதெ தவுர வேற வழியில்ல. கவலப்பட்டு
ஒண்ணும் ஆவப் போறதில்ல. அத்து தேவையில்லாத மனசங்கடம். சில விசயங்க நடக்குதோ இல்லியோ
அதெ பத்தி நெனைக்க வாணாம். தெகிரியமா இருக்குறத மட்டும் வுட்டுப்புட வாணாம்!"ன்னாங்க
இன்ஸ்பெக்டர் அம்மா. அவுங்க சொன்னதெ கேட்டுக்கிட்டு வக்கீல் திருநீலகண்டன்கிட்ட போனப்
போட்டு தகவலச் சொல்லிட்டு ரண்டாவது மொறையும் மகளிர் காவல் நிலையத்துக்குப் போயிக்
காரியம் ஒண்ணும் ஆவாம வூட்டுக்குக் கெளம்பி வர்றாப்புல ஆயிடுச்சு.
*****
No comments:
Post a Comment