21 Nov 2020

ஒரு நாள் பகல் பொழுது!

ஒரு நாள் பகல் பொழுது!

செய்யு - 632

            செய்யு புகார் மனுக்கள பல எடங்களுக்கு எழுதிப் போட்டு ஒரு வாரம் காலம் ஓடுனுச்சு. இந்த ஒரு வாரம் காலம் முழுதும் ஏதோ ஒண்ணு தனக்கு நல்லதா நடக்கும்ங்ற நம்பிக்கையில இருந்தா. அவ்வே அனுப்புன புகார்லேந்து மொத அழைப்பு திருவாரூரு அனைத்து மகளில் காவல் நிலையத்திலேந்து வந்துச்சு. ஸ்டேசன்லேந்து போன பண்ணவங்க மறுநாளே விசாரணைக்கு வரச் சொன்னாங்க. இந்த ‍வெவரத்த மொதல்ல திருநீலகண்டன் வக்கீல்கிட்ட சொன்னப்போ, ஸ்டேசன்ல போயி பாத்துட்டு வந்து தகவலச் சொல்லுங்கன்னாரு. ஏம் இப்பிடிப் பொம்பளெ புள்ளைய அழைச்சிக்கிட்டு ஸ்டேசன் வாசல்ல நிக்கணும்ன்னு யோசிச்சிக்கிட்டுத்தாம் சுப்பு வாத்தியாரு தன்னோட மவ்வே தூக்கு மாட்டிக்கிட்டப்ப கூட தயங்கி நின்னாரு. அதுக்குப் பெறவு ஒருவேள அப்பவே போயிருந்தா இது மாதிரியான சம்பவங்க நடந்திருக்காதோன்னோ கூட யோசிச்சுப் பாத்திருக்கிறாரு. சம்பவங்க இப்பிடி ஆயிட்டு இருக்குறப்ப இப்பயும் போவாம இருந்துடக் கூடாதுங்ற முடிவுலத்தாம் இருந்தாரு. ஒருவகையில நமக்கு இப்பிடில்லாம் நடந்துச்சுங்ற ஒரு பதிவாவது இருக்க இத்து அவசியம்ங்ற அளவுக்கு அவரோட நெனைப்பு இப்போ மாத்தம் கண்டிருந்துச்சு. அதுக்கான வாய்ப்ப அமைச்சுக் கொடுத்தாப்புல அமைஞ்சது வக்கீலு எழுதிப் போடச் சொன்ன புகாருங்க ஒவ்வொண்ணும்.

            செய்யுவ அழைச்சிக்கிட்டுச் சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடுன்னு நாலு பேருமா போனாங்க. திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அப்போ கீழவீதியிலேந்து கெழக்கால போற ரோட்டுல இருந்துச்சு. அந்த ரோடு முழுவதும் புதுப்புது நகர்களா உருவாயிருந்துச்சு. அங்கங்க ரோடுங்க கெளை கெளையா பிரிஞ்சதால அங்கங்க எங்க இருக்கு ஸ்டேசன்னு வெசாரிச்ச்சிக்கிட்டுத்தாம் போவ வேண்டியதா இருந்துச்சு. நெறைய ரோடுங்க எடது, வலதுன்னு அது பாட்டுக்கு கிளை விட்டுக்கிட்டெ போனுச்சு. இவ்ளோ தூரம் இதெ வெசாரிச்சிக்கிட்டு யாரு வந்திருக்கப் போறாங்கங்கற நெனைப்புலத்தாம் எல்லாரும் போனது. ஸ்டேசன்ன வெசாரிக்க வெசாரிக்க சின்ன வாண்டு கூட வழியச் சொன்னதெ நெனைச்சப்போ நெறைய பேரு வருவாங்கப் போலத்தாம் தெரிஞ்சிச்சு. ஸ்டேஷன் மின்னாடிப் போயி நின்னப்போ நாட்டுல நடக்குற அத்தனை பிரச்சனைகளும் பொம்பளைங்களுக்கே நடக்குறாப்புல ஸ்டேசன் முழுக்க கூட்டமா இருந்துச்சு. ஸ்டேஷன் ஒரு அங்க ஒரு நகர்ல வாடவெ வூட்டுலத்தாம் இருந்துச்சு. ஸ்டேஷன் கட்டுமானத்துக்கான வேலைங்க கலக்டர் ஆபீஸ் வளாகத்துல நடந்துக்கிட்டு இருக்கிறதாவும், அங்க அத்து கட்டி முடிக்கிற வரைக்கும் தற்காலிகமாக இந்த வாடவெ வூட்டுல செயல்பட்டுக்கிட்டு இருக்குறதா சொன்னாங்க.

            ஸ்டேஷன் உள்ளாரயும், மின்னாடியும் குமிஞ்சிக் கெடந்த கூட்டத்தெ பாத்ததும் இதுல நம்மள எப்போ வெசாரிச்சிப்பாங்கற மலைப்புத்தாம் மொதல்ல வந்துச்சு எல்லாத்துக்கும். அங்கப் போயிச் சேந்தப்போ மணி பதினொண்ணுக்கு மேல இருக்கும். வெயில் பொளந்து கட்டுனுச்சு. கூட்டம் கொஞ்சம் கொறைஞ்சாத்தாம் உள்ளார எட்டிப் பாக்கலாங்ற நெலமையில ஸ்டேஷனுக்கு எதுத்தாப்புல இருந்த வேப்பமரத்தடியில வண்டியப் போட்டுக்கிட்டு சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடு, செய்யுன்னு நாலு பேரும் நின்னாங்க. நெறையப் பேரு அப்பிடித்தாம் அங்கங்க இருக்குற மரநெழல்ல நின்னுகிட்டு இருந்தாங்க. உள்ள போயிருக்குற கூட்டம் வெளிய வந்ததப் பாத்தா போதும் திடுதிப்புன்னு ஓடிப் போயி ஸ்டேசன்குள்ள நொழையப் பாத்தாங்க. யாரு முந்திப் போறாங்களோ அவுங்களுக்கு உள்ளாரப் போவ வழிக் கெடைச்சது. அங்கங்க நிக்குற கூட்டத்துக்கு டீத்தண்ணியும், பட்சணத்தையும் சைக்கிள்ல வெச்சிக்கிட்டு ரண்டு பேரு யேவாரம் பண்ணிட்டு நின்னாங்க.

            காலங்காத்தால சாப்புட்டு வந்தவங்க, சாப்புடாம வந்தவங்கன்ன பல பேரு அங்க நின்னதுல யேவாரம் அது பாட்டுக்கு நடந்துக்கிட்டே இருந்துச்சு. ஒரு சில பேரு அரை மணி நேரத்துக்கு ஒரு மொறை டீத்தண்ணிய பேப்பர் கப்புல வாங்கிக் குடிச்சிக்கிட்டெ இருந்தாங்க. ஸ்டேஷன் மின்னாடி நின்னு ஒரு மணி நேரம் ஆனப் பெறவு லேசா பசிக்கிறாப்புல இருந்தப்போ சுப்பு வாத்தியாரு ஆளாளுக்கு டீத்தண்ணியும், சமோசாவும் வாங்கிக் கொடுத்தாரு. குமிஞ்சிருந்த சனங்க டீத்தண்ணியச் சாப்புடுறதும், சமோசாவ வாயிக்குள்ள அமுக்குறதும், அப்பிடியே ஒருத்தருக்கொருத்தரு என்ன வெசயமா வந்திருக்கிறதா வெசாரிக்கிறதுமா இருந்துச்சுங்க.

            டீத்தண்ணியையும் பட்சணத்தை முடிச்ச கொஞ்ச நேரத்துல சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, செய்யு, விகடுன்னு இவுங்களையும் எங்கேயிருந்து வர்றீங்க? எதுக்காக வந்திருக்கீங்க?ன்னு சுத்தியிருந்த அசாமிங்க வெசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சுப்பு வாத்தியாரு தன்னோட மவளோட கதெயெச் சொன்னா, பதிலுக்கு அவுங்களோட கதெயச் சொன்னாங்க ஒருத்தருக்கொருத்தரு பாரபட்சமில்லாம கொடுக்கல் வாங்கல் பண்ணிக்குறாப்புல. அதாச்சி என்னான்னா ஒருத்தருக்கொருத்தரு பண்டமாற்று மொறையில பண்டத்தெ மாத்திக்கிறதெப் போல கதையெ மாத்திக்கிட்டாங்க. அங்க நிக்குற பெரும்பாலான அப்பங்காரனுக பாசக்கார ஆளுகளா நின்னாங்க. பாசக்கார பொண்ணுகளப் பெத்துட்டு அப்பங்காரனுக அந்த ஸ்டேசன மிதிச்சித்தாம் ஆவுணும்ங்றது போல இருந்துச்சு அவுங்க நெலமெ. இந்தக் கதைகளெ கேட்டதுக்குப் பெறவு ஒருத்தருக்கொருத்தரு சொந்தங்காரங்களா ஆயிட்டதப் போல ஒரு சிநேகிதம் சட்டுன்னு மனசுக்குள்ள அதுபாட்டுக்குத் திடுதிப்புன்னு உருவாவுறதப் பாக்குறப்ப ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு. அதெ அடுத்த ஒரு மணி நேரத்துல டீத்தண்ணிய வாங்கிக் குடிக்கிறப்போ அப்பிடியே பக்கத்துல கதெயச் சொன்ன ஆளுங்களுக்கும் சேத்து வாங்கிக் கொடுக்குறப்ப புரிஞ்சிக்க முடிஞ்சிது.

            அதெப் பாத்துட்டு, "இப்பிடி எத்தனெ பேருக்கு வாங்கிக் கொடுப்பீயே? சம்பாதிக்கிற காசிய எல்லாம் இப்பிடி ஸ்டேசனுக்கு வந்து நிக்குற ஆளுங்களுக்கு டீத்தண்ணிய வாங்கிக் கொடுத்தே அழிச்சிடப் போறீயே?"ன்னு சிரிச்சிக்கிட்டெ கேட்டாரு கைப்புள்ள.

            அதெ கேட்டுட்டு வாங்கிக் கொடுத்தவரு சொன்னாரு, "அட போங்கய்யா ஒஞ்ஞளுக்கு ஏழு ரூவாய்க்கு டீத்தண்ணிய வாங்கிக் கொடுத்துதாங் எஞ் சொத்து அழியப் போவுது? எம் பொண்ண கட்டிக் கொடுத்து எம்மாங் சொத்தெ, காசிய அழிச்சேம் தெரியுமா? அதெ பாக்குறப்போ இத்து பீசாத்துக் காசிக்கு ஆவுமா? எவனெவனோ தின்னானுவோ கலியாணத்துல வந்துக் கொண்டாட்டாமா! இப்போ பெரச்சனைன்னு ஆவுறப்போ ஒரு பயலெ காங்கல. ஆம்மா போங்கய்யா! நீஞ்ஞளாச்சும் ஆறுதலா ரண்டு வார்தெ சொல்லுதீயே! ஒறவுக்கார பயலுவோ அதெ கூட சொல்ல மாட்டேங்றானுவோ! இந்த வார்த்தைக்கே மத்தியானச் சாப்பாட்டு வாங்கிப் போட்டாத்தாம் செரிபட்டு வாரும்!"ன்னு. அங்க நின்ன மனுஷங்க எல்லாம் நொந்து வெந்து தணிஞ்சும் தணியாமலும் நிக்குற அப்பாவி மனுஷங்க.

            ஒவ்வொரு மனுஷரும் அங்க சொன்ன கதைங்க எல்லாம் நடந்த குடும்பங்கத்தாம் வெவ்வேற. ஆன்னா பெரச்சனைக பெரும்பாலும் ஒண்ணுத்தாம். எல்லா பிரச்சனைகளும் குடும்ப வன்முறைத் தொடர்பான பிரச்சனைங்கத்தாம். பிரச்சனைன்னு புகாரு பண்ணி வந்திருந்த ஒவ்வொரு பொண்ணும் தூக்குல தொங்கியோ, விஷத்தெ குடிச்சிட்டொ சாவுக்கான ஒரு முயற்சியப் பண்ணிருந்துச்சுங்க. அதெ செய்யாத பொண்ணுங்கள நகெய வாங்கிட்டு வா, பணத்தெ வாங்கிட்டு வான்னு மாப்புள்ள வூட்டுக்காரனுவோ அடிச்சே தொரத்தி இருந்தானுவோ. அப்பிடி அடிச்சித் தொரத்தியும் போவாதப் பொண்டுகள சீமெண்ணய்யோ ஊத்திக் கொளுத்தியோ, சமையல் கேஸ்ஸ பிடுங்கி வுட்டோ பத்த வெச்சோ, தூங்கறப்ப தலவாணிய வெச்சி அமுக்கியோ ஒரு கொலை முயற்சிக்கான வேலைகள மாப்புள வூட்டுச் சனங்க பண்ணிருந்துச்சுங்க.

            "நாம்ம என்னத்ததாம் இங்கப் புகாரக் கொடுத்தாலும் வெசாரணைக்குப் பொண்ண பெத்து வெச்சிருக்கிற நாம்மத்தாம் அலைஞ்சிட்டுக் கெடப்போமே தவுர, இந்த மாப்புள்ள வூட்டுக்காரப் பயலுவோ வாரவே மாட்டேனுங்கய்யா! இவுங்களும் போனப் பண்ணி பண்ணி கூப்புடு கூப்புடுன்னு கூப்புடுவாங்க. நாலைஞ்சு தடவே கூப்புட்டுப் பாத்து, பெறவுத்தாம் வாரண்டப் போட்டு அனுப்பி வுடுவாங்க. அதுக்குப் பேருக்கு இந்த மாப்புள்ள வூட்டுக்கார பயலுவோ வக்கீலோட வந்து, இனுமே நல்லா வெச்சிக்கிறதா தலையில அடிச்சிச் சத்தியத்தெப் பண்ணிட்டு, எழுதிக் கொடுத்துப்புட்டா போதும். சமானத்தப் பண்ணி முடிச்சி வுட்டுப்புடுவாங்க. அப்பிடித்தாம் நடக்கும். அதுக்கே பல மொறை அலைஞ்சுத்தாம் ஆவணும்!"ன்னாரு அங்க நின்னிருந்த ஒருத்தரு சலிச்சுப் போயி.

            அதெ கேட்டதும் செய்யுவுக்கு ஒரு பயம் வந்துச்சு. இவ்வளவு கூட்டம், இவ்வளவு பெரச்சனைக, அதுல நம்ம பெரச்சனைய வெசாரிக்கணும், ஞாயம் பண்ணணும். அத்து அவ்வளவு சீக்கிரமா நடக்காதுங்ற யோசனெ அவளுக்குள்ள வந்துச்சு. அதெ சொல்றாப்புல, "இன்னிக்கு நம்மள வெசாரிச்சிப்புடுவாங்களப்பா?"ன்னா செய்யு.

            "நமக்கென்ன தெரியும்? நாமளும் இப்பத்தானே வந்திருக்கேம். எப்போ, எப்பிடி வெசாரிப்பாங்கங்றது இனுமேத்தாம் தெரியும். வந்தது வந்தாச்சு. இன்னிக்கு இருந்து முடிச்சிப்புட்டுத்தாம் போவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            அவுங்க இப்பிடி பேசிட்டு இருக்குறதுக்குள்ள இன்னொருத்தரு, "ஸ்டேசன்ல கொண்டாந்து நிறுத்தி அவ்வேம் மானத்த வாங்க வுட மாட்டேம்! போலீஸ்ன்னா ச்சும்மா நெனைச்சிப்புட்டானா அந்த எடுபட்ட பயெ! ஆம்பள போலீஸ்ங்க அடிச்சா அவனுக்குப் புத்தி வாராது. பொம்பள போலீஸ்ஸ வுட்டு அடிக்கணும்ன்னுத்தாம் இஞ்ஞ கொடுத்திருக்கேம் புகார்ர!"ன்னாரு மீசைய முறுக்கிக்கிட்டு. அவரு சுப்பு வாத்தியாரும், செய்யுவும் பேசிட்டு இருக்குறதெ கேட்டிருப்பாரு போல. "ஒண்ணும் கவலெப்படாதெ தாயீ! ஒன்னயச் சீரழிச்சப் பயல இஞ்ஞ கொண்டாந்து வெச்சி வயித்துல இருக்குறப் பீயெ பிதுக்கி எடுக்குறாங்களா இல்லையான்னு பாரு!"ன்னாரு மறுக்கா மீசெய முறுக்கிக்கிட்டு. அதெ கேக்குறப்போ கொஞ்சம் தெம்பு வந்தாப்புல இருந்துச்சு செய்யுவுக்கு. இப்படியா ஒருத்தரு ஒரு கதெயெ சொல்லுறப்ப ஒரு நேரத்துல மனசு சோந்து போறதும், இன்னொருத்தரு வேற ஒரு கதைய சொல்றப்ப இன்னொரு நேரத்துல மனசு தெம்பாவுறதும் மாறி மாறி நடந்துச்சு செய்யுவுக்கு. அங்க நின்னுகிட்டு இருந்த மனுஷங்க ஒவ்வொருத்தருக்கும் ஸ்டேஷனப் பத்தி வெவ்வேறு வெதமான கருத்துக இருந்துச்சு. ஒருத்தரு ஸ்டேஷன்னப் பத்திச் சலிச்சுப் போயி சொன்னா, இன்னொருத்தரு ஸ்டேஷனப் பத்தி ரொம்ப நம்பிக்கையாச் சொன்னாரு. இருந்தாலும் ஏத்தோ ஒரு நல்லது நடந்துப்புடாதாங்குற நம்பிக்கையிலத்தாம் ஒவ்வொருத்தரும் அங்க நின்னுகிட்டு இருந்ததாங்க. இப்படியா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவத்தெ கொடுக்குது இந்த ஸ்டேஷன்.

            நேரம் அது பாட்டுக்கு ஆயிட்டு இருந்தப்போ மத்தியானச் சாப்பாட்டப் போயி சாப்புட்டு வர்றதுக்கும் யோசனயா இருந்துச்சு. அதுக்குள்ள கூட்டம் கொறைஞ்சி உள்ளார போறதுக்கான வாய்ப்பு வந்தா என்னா பண்ணுறதுங்ற தயக்கத்தோட நின்னுட்டு இருக்கிறப்பவே, டீத்தண்ணியும், பட்சணமும் யேவாரம் பண்ணிட்டு இருந்த ஆளுங்க அடுத்தா மத்தியானச் சாப்பாடா எலுமிச்சம் சோறு, புளிசோறு, தயிர் சோறுன்னு அடுத்தக்கட்ட யேவாரத்த ஆரம்பிச்சிருந்தாங்க.

            அங்கங்க கெடைச்ச நிழல்லயும், மரத்தடியிலயும் நின்னுகிட்டு இருந்த சனங்க சாப்பாட்ட வாங்கிச் சாப்புட ஆரம்பிச்சதுங்க. "இதெ வாங்கிச் சாப்புட்டுப்புட்டுக் காத்துக்கிட்டுக் கெடக்க வேண்டியதுதாம்! நாம்ம ஓட்டலுக்குப் போற நேரமா பாத்து கூட்டம் கொறைஞ்சா சிக்கலாப் போயிடும் பாருங்க!"ன்னாரு கைப்புள்ள. சாப்பாட்ட வாங்கலாம்ன்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சப்பவே பக்கத்துல பேசிட்டு இருந்த ஆளு நாலு பேத்துக்குமா சேத்து புளிசோத்தையும், தயிர் சோத்தையும் வாங்கிட்டு வந்துக் கொடுத்தாரு. சுப்பு வாத்தியாரு அதெ மறுத்துப் பாத்தாரு. "இதுல என்னங்கய்யா இருக்க? வேணும்ன்னா சாயுங்காலம் வரைக்கும் ஆவப் போறது நிச்சயம். அப்போ எல்லாத்துக்கும் சேத்து டீத்தண்ணியையும் சமோசாவையும் வாங்கிக் கொடுத்துப்புடுங்க. கணக்கு நேராயிடும்!"ன்னு சொல்லிச் சிரிச்சாரு அவரு. சரித்தாம்ன்னு அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாம சுப்பு வாத்தியாரு சாப்பாட்ட வாங்கிக்கிட்டாரு.

            தண்ணிப் பாட்டில்ல எடுத்துட்டு வந்த சனங்க அதுல கைய அலம்பிக்கிட்டுச் சாப்புட ஆரம்பிச்சிதுங்க. அதெ எடுத்துட்டு வாராதச் சனங்க சாப்பாட்ட விக்குறவர்ககிட்டெயே தண்ணிப் பாக்கெட்டு ரண்ட வாங்கிக்கிட்டு அதெ வாய வெச்சி பிய்ச்சி வுட்டுக்கிட்டு கைய அலம்பிக்கிட்டுச் சாப்புட ஆரம்பிச்சதுங்க. சாப்புடுறதுக்கு எடையில அந்தத் தண்ணியையே குடிச்சிக்கிட்டு, சாப்புட்டு முடிச்சதும் அந்தத் தண்ணியிலயே கைய அலம்பிக்கிட்டுங்க. அங்க உக்காந்து சாப்புட்ட எந்தச் சனத்தோட மொகத்துலயும் சந்தோஷக் கலையே யில்ல. எல்லா மொகத்துலயும் சோகக் கலை பொங்கி வழிஞ்சது. அதுக்கு எடையிலயும் வறட்டுத்தனமா எதையெதையோ பேசிச் சிரிச்சதுங்க. சாப்பாட்டையும் என்னவோ வேண்டா வெறுப்பா வாங்கிச் சாப்புடுறாப்புலத்தாம் சாப்புட்டுச்சுங்க. எப்படியும் நூத்துக்கு மேல சாப்பாட்டு பொட்டணங்க வித்துத் தீந்திருக்கும் அந்த யேவாரிங்களுக்கு.

            மூணு மணி ஆனப்போ சுப்பு வாத்தியாருக்குச் சாப்பாட்ட வாங்கிக் கொடுத்தவரோட மவப் பேர்ர சொல்லியே ஸ்டேஷன்லேந்து உள்ளாரக் கூப்புட்டாங்க. "அப்பாடி நமக்கு அடிச்சிதுடா யோகம்!"ன்னு சொல்லிட்டு அவரு உள்ளாரப் போனாரு. அவரு பொண்ணு, புள்ளெ, பொண்டாட்டின்னு குடும்பத்தையே கொண்டாந்திருந்தாரு. உள்ளார போனவரு பத்தே நிமிஷத்துல திரும்புனாரு. "நம்ப தரப்புலேந்து வந்தாச்சு. அவனுக தரப்புலேந்து வாரல. அவனுக வந்தாத்தாம் வெசாரிக்க முடியும்ன்னு இன்னொரு தேதியக் கொடுத்திருக்காக. இத்தோட இத்து மூணாவது தடவெ. அடுத்த தடவெயாவது எதாச்சும் நல்லது நடக்கணும்!"ன்னாரு அந்த ஆளு அலுத்துச் சலிச்சாப்புல. அதெ சொல்லிட்டுக் குடும்பத்தோட கெளம்ப தயாரானாரு அவரு. சுப்பு வாத்தியாரு தடுத்து நிறுத்தி டீத்தண்ணியச் சாப்புட்டுத்தாம் போவணும்ன்னாரு. அவரு என்னவோ தளந்துப் போனாப்புல இருந்தாரு. "வேண்டாங்கய்யா! யிப்போ பஸ் ஸ்டாண்டுக்குப் போனா பஸ்ஸப் பிடிச்சி வூட்டுக்குப் போயிடலாம். இதெ வுட்டா ரண்டு மணி நேரத்துக்கு மேல பஸ்ஸூக்குக் காத்து நிக்குறாப்புல ஆயிடும். நமக்கு டவுன்லேந்து உள்கிராமம். பஸ்ஸூப் பெரச்சனெ வேற. பொண்ண வேற கொண்டாந்திருக்கேம். நேரத்தோட ஊருப் போயி சேருறேம்! பொண்ணுக்கு நடந்தெ கொடுமெய வுட இஞ்ஞ வந்து ஒவ்வொரு நாளும் காத்துக் கெடந்து ஒண்ணும் ஆவாம திரும்பிப் போறது பெருங்கொடுமயா இருக்கு!"ன்னு குடும்பத்தெ அழைச்சிக்கிட்டு வேகுவேகுன்னு நடக்க ஆரம்பிச்சாரு.

            கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் கொறைய ஆரம்பிச்சிருந்துச்சு. அதெ நேரத்துல புதுசா புதுசா ஆளுங்க வந்து சேந்துகிட்டுத்தாம் இருந்தாங்க. சாயுங்காலமா அஞ்சு மணி ஆனப்ப சுப்பு வாத்தியாரும், கைப்புள்ளையும், விகடுவும், செய்யுவும் உள்ள நொழையுறதுக்கான வழி கெடைச்சது. ரொம்ப ஆவலாதிய உள்ள நொழைஞ்சாங்க. உள்ளார இருந்த போலீஸூங்க பல பேத்த வெசாரிச்சி ரொம்ப களைச்சிப் போயித்தாம் இருந்தாங்க. இன்ஸ்பெக்டர் அம்மா முக்கியமான ஒரு வெசாரணையப் பண்ணிட்டு இருந்ததால, ஏட்டம்மாகிட்டெ வெவரத்த வெசாரிக்கச் சொன்னாங்க.

            செய்யு நடந்தெ கதெயே ஒண்ணு வுடாம ஆரம்பத்துலேந்து சொன்னா. அவுங்கக்கு அத்து மாதிரியான நெறைய கதைகளெ கேட்டு அலுத்துப் போயிருப்பாங்கப் போல. எடை எடையில கொட்டாவி வுட்டுக்கிட்டாங்க. செய்யு முழு கதையையும் சொல்லி முடிச்சதும், "ஒரு சைடு பார்ட்டித்தாம் வந்திருக்காங்க. அதர் சைடு பார்ட்டி வாரலீங்கம்மா!"ன்னு ஏட்டம்மா இன்ஸ்பெக்டர் அம்மாகிட்டெ சத்தமா சொன்னாங்க.

            "அவுங்கள இஞ்ஞ அனுப்பு!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா. அவுங்களும் சுருக்கமா நடந்த முழு வெவரத்தையும் கேட்டுக்கிட்டாங்க. செய்யு கொடுத்திருந்த புகார்ல இருந்த  போன் நம்பர்கள வெச்சி பாலாமணி, ராசாமாணி தாத்தா, சரசு ஆத்தா, சித்துவீரன், சுந்தரி, பிந்துன்னு ஒவ்வொருத்தருக்கும் போன அடிச்சாங்க. அதுல பல பேரு போன எடுக்கல. பாலாமணி சுத்தமாவே எடுக்கல. "ன்னா ஒரு பயலும் போன எடுக்க மாட்டேங்றானுவோ? நேத்திக்குப் போன அடிச்சுச் சொன்னதுல வந்துப்புடுறதா சொல்லிட்டு இன்னிக்குப் போனையே எடுக்க மாட்டேங்றானுவோ ஊஷாரா. செரி நீயி கெளம்பும்மா. அவுங்களப் போன்ல பிடிச்சிட்டுப் பெறவு என்னிக்கு நீயி ஸ்டேஷன் வாரணம்ன்னு ஒமக்குப் போனப் பண்ணிச் சொல்லுவாங்க. அன்னிக்கு எந்த வேல கெடந்தாலும் செரித்தாம் போட்டுப்புட்டு வந்துப்புடு. ஒரே நாள்ல ஒங் கதெய முடிச்சி வெச்சிடுறேம்! கவர்மெண்டு டாக்கடர்ரா இருந்துக்கிட்டு அவனுக்கு இம்மாம் தெகிரியமா? பாத்துக்கிடுறேம் அவனெ!"ன்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க.

            கெளம்புறதுக்கு மின்னாடி கைப்புள்ள வக்கீலுக்குப் போன அடிச்சி இந்த மாதிரி வெவரம்ன்னு சொன்னாரு. "அத்து அப்பிடித்தாம் போவும். அதெ பெரிசுப் பண்ணிக்கிட வாணாம். இந்த வாரத்துல ஒரு நாளு ஸ்டேஷன் போறாப்புல சோலி இருக்கு. அப்ப இன்ஸ்பெக்ட்ர்ரு அம்மாவப் பாத்து ஒரு வார்த்தெ சொல்லிட்டு வர்றேம்! வேணும்ன்னா ஆபீஸூ வந்துட்டப் போங்களேம். ஆபீஸ்லத்தாம் இருக்கேம்!"ன்னாரு வக்கீலு நீலகண்டன்.

            "வேண்டாம் வக்கீல் சார்! வந்தா நேரம் போறது தெரியாம பேச்சுலயேப் பேயிடும். பொழுதுக்குள்ள வூடுப் போயி சேர்றோம்! பொம்பளப் புள்ளையை வேற வெச்சிக்கிட்டு நிக்குறேம். இன்னொரு நாளுக்கு வந்துப் பாக்குறோம்!" சொல்லிட்டுக் கெளம்புறதுக்கான ஆயத்தத்தப் பண்ண ஆரம்பிச்சாரு கைப்புள்ள. நாலு பேருமா கெளம்பி வூடு வந்துச் சேந்தப்போ பொழுது நல்லா மசங்கி இருந்துச்சு. வெளிச்சம் கொறைஞ்சி இருட்டு பச்சக்குன்னு அப்ப ஆரம்பிச்சது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...