23 Nov 2020

தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்!

தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்!

செய்யு - 634

            மகளிர் காவல் நிலையத்துல மறுக்கா அவுங்க சொன்ன நாள்ல மறுவாரத்துலப் போயி நின்னா வழக்கம் போல பாக்குக்கோட்டெ சனங்க யாரும் வாரல. இத்தோட மூணு வாரம் போனது தெரியாமப் போயிடுச்சு. ஒவ்வொரு வாரமும் இதெ கதெதாங். ஏதோ ஒரு வகையில காத்துக் கெடக்க வேண்டியதா இருக்கு. "இந்த மாவட்டத்துக்குள்ளன்னா அவனெ தூக்கிடுவேம். அவ்வேம் குடும்பம் வேற ஒரு மாவட்டத்துல இருக்கு, அவ்வேம் என்னான்ன்னா மெட்ராஸ்ல கெடக்காம். நேர்ல அரெஸ்ட் பண்ணணும்ன்னு போனா ரண்டு நாளு ஆயிடும். இஞ்ஞ வேல அம்புட்டுக் கெடக்கு. அதாங் பாக்குறேம். நாமளும் என்னென்னவோத்தாம் பண்ணிப் பாக்குறேம். பயெ மசிஞ்சிக் கொடுக்க மாட்டேங்றானே?"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா எரிச்சலா.

            அன்னிக்கு நாள் பூரா அனைத்து மகளிர் காவல் நிலையத்துலயே உக்காந்திருந்து சாயுங்காலத்துக்கு மேல வழக்கம் போல கெளம்புறாப்புல ஆனுச்சு. ஆனா இந்த மொறை இன்ஸ்பெக்டர் அம்மா ரொம்ப கடுப்புல இருந்தாங்க. "குடும்பப் பெரச்சனையா இருக்கேன்னுப் பாக்குறேம். எடுத்த எடுப்புலயே தடாலடியா பேச மாட்டேம். அனுபவத்துல கத்துக்கிட்டது இது. எதுவா இருந்தாலும் எம்மாம் பொறுமையா போவ முடியுமோ அம்மாம் பொறுமையா போயி, எதுக்கும் ஒத்து வர்லங்ற கட்டத்துக்குத்தாம் மெரட்டல்லாம். இந்த மாப்புள்ள கவர்மெண்ட்ல டாக்கடர்ரா இருக்கானே அதிரடியா ஏதாச்சும் செஞ்சா வேலைக்குப் பங்கமா போயிடுமேன்னு பாத்தா பயெ ரொம்பத்தாம் வாலாட்டுறாம்!"ன்னு சொல்லிட்டு அவுங்களே பாக்குக்கோட்டை சனங்க ஒவ்வொண்ணுத்துக்கா போன அடிச்சி என்னா ஏதுன்னு வெவரத்தெ வெசாரிச்சாங்க. வழக்கமா சொல்ற அதெ காரணங்களத்தாம் போன எடுத்த சனம் ஒவ்வொண்ணும் சொன்னுச்சு. இன்ஸ்பெக்டர் அம்மாவும் வுடாமத்தாம் கேட்டாங்க. "அதென்ன ஒஞ்ஞளுக்கு வாரா வாரம் ஒடம்புக்கு முடியாம போயிடுறது. ல்லாட்டி வாரா வாரத்துககு ஒறவுல செத்துப் போயிடுறாங்க! ஒண்ணும் நம்புறாப்புல இல்லீயே? லாஸ்ட் அன்ட் பைனல் வார்னிங். அடுத்த வாரம் வெள்ளிக் கெழம ஸ்டேசன்ல எல்லாம் இருக்கணும். இல்லன்னா எல்லாத்துக்கும் பிடிவாரண்ட்தாம் பாத்துக்கோ!"ன்னு மெரட்டி வுட்டாங்க.

            இதுல பாலாமணிக்குப் போன் அடிச்சதுல இன்ஸ்பெக்டர் அம்மா டென்ஷனோட உச்சிக்கேப் போயிட்டாங்க. மொதல்ல அவுங்க பதிவிசாத்தாம் பேசுனாங்க. அவ்வேம் என்னவோ உலக மகா பெரிய டாக்கடர்ங்ற மாதிரியும், அவ்வேங்கிட்டெ ட்ரீட்மெண்ட் பாக்க மினிஸ்டர்லேந்து கலெக்டர் வரைக்கும் க்யூவுல நிக்குறதால வர முடியலன்னும் வேணும்ன்னா மினிஸ்டரோட பியெவ வுட்டு போன அடிக்கச் சொல்லட்டுமான்னு தெனாவெட்டா கேக்க ஆரம்பிச்சாம். அதுவரைக்கும் மருவாதியா பேசிட்டு இருந்த இன்ஸ்பெக்டர் அம்மா அப்பத்தாம் ஒருமையில அவ்வேங்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க. "நீயி யாரா வாணா இருந்துட்டுப் போடா! வெசாரணைன்னு கூப்புட்டா வந்துட்டுப் போவணும். நீயி பாட்டுக்கு அஞ்ஞ உக்காந்துட்டு பெரிய பீத்தகள மாதிரிப் பேசிட்டு இருந்தா ன்னா அர்த்தம்? ஒனக்கு மட்டுந்தாம் மினிஸ்டர்ர தெரியுமா? நமக்குந்தாம் மினிஸ்டர்ர தெரியும்! இப்பிடி எத்தனெ பேருடா கெளம்பியிருக்கீங்க நாட்டுல. வாடான்னா வந்துட்டுப் போடா நாயே!"ன்னு டென்ஷன்ல சத்தம் போட்டுட்டாங்க.

            பாலாமணியும் வுடல. அவனும் ஒருமையில எறங்கி அடிச்சாம்.  "நாம்ம ன்னா ஒஞ்ஞ வூட்டுக்காரன்னு நெனைச்சீயளா? கூப்டப்பல்லாம் வார? ஒங் கூட ஒண்டிக்க? கவர்மெண்ட் டாக்கடரு தெரிஞ்சிதா? கவர்மெண்ட டாக்கடர்ர பணி செய்ய வுடாம தடுத்ததா ஒம் மேல கேஸப் போடுவேம்! போலீஸ்ன்னா ன்னா வணாலும் பண்ணுவீயா? நாளைக்கே போலீஸ் அராஜகம்ன்னு டாக்கடர்ஸ் அசோசியேஷன்னே போராட்டத்துல எறங்கும். ஒழுங்கா இருந்துக்கோடி!"ன்னு இன்ஸ்பெக்டர் அம்மாகிட்டெயே எகுறுனாம்.

            "ன்னாடா பெரிய யோக்கிய மசுரு மாதிரிப் பேசுறே? ஒரு பொண்ண ஒழுங்கா வெச்சி குடும்பம் நடத்த முடியல. என்னவோ பெரிய டாக்கடரு மசுருன்னுகிட்டு. பொண்ண சூசைட் அட்டெம்ட் பண்ண வெச்சிருக்கேன்னு பொண்ணே கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கு. உள்ளத் தூக்கிப் போட்டேன்னா வெச்சுக்கோ மவனெ சென்மத்துக்கு வெளியில வார முடியாதுடா!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா.

            "ஒரு கவர்மெண்ட் டாக்கடர்ர உள்ளார தூக்கி வைக்குற அளவுக்க தெனாவட்டு வந்துடுச்சா ஒனக்கு? அதுக்கு யார்கிட்டெ பெர்மிஷன் வாங்கணும்ன்னு தெரியுமா? அவ்ளோ ஈஸியாப் போயிடுச்சா ஒனக்கு? ஒம் பேரு ன்னா சொல்லு. மினிஸ்டர்கிட்டெ சொல்லி எங்காச்சிம் தண்ணியில்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர்ர பண்ணி வுட்டாத்தாம் அடங்குவே போலருக்குடி!"ன்னாம் பாலாமணி.

            இன்ஸ்பெக்டர் அம்மாவுக்குத் தாங்க முடியாத அளவுக்குக் கோவம் வந்துப்புடுச்சு. "இப்பிடில்லாம் கூப்ட்டா நீயி வார மாட்டே! அரெஸ்ட் வாரண்டடோட ஒம் மின்னாடி வந்து நின்னாத்தாம் சரிபட்டு வருவே!  எப்.ஐ.ஆர். போட்டு ஒன் நைட்ல அரெஸ்ட் பண்ணி உள்ளார வெச்சேம்ன்னா போதும் வேல போயிடும் பாத்துக்கோ! ஒழுங்கு மருவாதியா அடுத்த வாரம் வெள்ளிக் கெழம திருவாரூரு அனைத்து மகளிர் ஸ்டேசன்ல இருக்கணும் பாத்துக்கோடா! இல்லாட்டி கன்பார்ம் அரெஸ்ட்தாம். நீயி எஞ்ஞ இருந்தாலும் செரித்தாம் தேடி வந்து பிடிப்பேம்டா! ஏன்னா நீயி இப்பிடிச் சொன்ன வரைக்கும் வெள்ளிக் கெழமையும் வருவீயா இல்லையாங்றது சந்தேகமாத்தாம் இருக்கு. நீயி அன்னிக்கு வந்தாலும் செரித்தாம் வாராட்டியும் செரித்தாம்டா ஒனக்குப் பிடி வாரண்ட் கன்பார்ம்டா. இந்த வாரத்துல ஒனக்கு பிடி வாரண்ட்ட போட்டு வாங்குறேம்டா. நம்மளயே டிரான்ஸ்பர் பண்ணுவீயா? பண்ணுடா முடிஞ்சா பண்ணு. நாமளே எப்போ டிரான்ஸ்பர் டிரான்ஸ்பர்ன்னுத்தாம் நின்னுகிட்டு இருக்கேம். அதுக்கு மின்னாடி ஒரு நாளாச்சும் ஒன்னய ஜெயில்ல தூக்கிப் போட்டு அழகுப் பாக்க வுட மாட்டேம்டா நாயே!"ன்னு சொல்லிட்டுப் போன டக்குன்ன வெச்சிட்டாங்க.

            வெச்சதும் செய்யவுப் பாத்துக் கேட்டாங்க, "எப்பிடிம்மா இவ்வேங்கிட்டெ ரண்டு மாசம் குடும்பம் நடத்துனே? சரியான மண்டெ கனம் பிடிச்ச பெயலா இருக்கானே? போலீஸ்ன்னு தெரிஞ்சிம் இன்னா எகிறு எகிறுறானே. ஒங்கிட்டெ ன்னா வேலயக் காட்டிருப்பாம். ன்னா இத்தனெ தடவெ அலைய வுடுறாங்களேன்னு நெனைச்சிக்கிடாதே. நீயி அப்பிடி ஒரு கிரிமினல்லப் போயி கலியாணத்தப் பண்ணிருக்கே. அவனுக்கு இன்னும் ஒரு வாரந்தாம் டைம் இருக்கு. இப்ப நாம்ம பேசுனதுக்கே வவுத்தால மட்டுமில்ல, வாயாலயும் கழிஞ்சிக்கிட்டுத்தாம் இருப்பாம். வெளியிலத்தாம் அப்படி பேசிருக்காம். இவனெ மாதிரி எத்தனெ பேர்ர நாம்ம பாத்திருக்கேம். நாம்ம இவ்வேம் சம்பந்தமா பேசுறவங்ககிட்டெ பேசி அவனோட பேக்ரெளண்டையும் தெரிஞ்சிக்கிடுறேம். என்னவோ மினிஸ்டர்ரத் தெரியும், மினிஸ்டர்ரத் தெரியுங்றான்னே? மினிஸ்டருக்கு இவனெத் தெரியுமா? இவ்வேம் யிப்பிடி பேசுறது மினிஸ்டருக்குத் தெரியுமா? எந்த மினிஸ்டர்ர இவ்வேம் சொல்றாங்ற வெவரம் எல்லாத்தையும் பிடிச்சாத்தாம் செரிபட்டு வரும். அடுத்து ஒரு வாரந்தாம். வருத்தப்படாம வந்துட்டுப் போ! அதுக்கு மட்டும் அவ்வேம் வர்றாம இருந்தா அவனுக்குச் சங்குத்தாம்! மவனே ன்னா பேச்சுப் பேசுறாம்? இன்ஸ்பெக்டர்ன்னு தெரிஞ்சும் வாடி போடிங்றாம். வாரட்டும் வெச்சிருக்கிறேம்! போலீஸ்ன்னா அம்மாம் எளக்காரமா போயிடுச்சா?"ன்னு ஆக்ரோஷத்தோட சொல்லி அனுப்பி வெச்சாங்க இன்ஸ்பெக்டர் அம்மா.

            செய்யுவுக்கு அதையெல்லாம் கேட்டதும் போலீஸாரோட அழைப்பை அப்பிடியெல்லாம் நிராகரிக்க முடியுமான்னு ஆச்சரியமா இருந்துச்சு. மனுஷருக்குக் காத்திருக்க காத்திருக்க பொறுமைப் போயிடுது. எதாச்சும் நடக்கும்ங்ற நம்பிக்கையும் போயிடுது. அப்பிடித்தாம் இப்போ நம்பிக்கை இழந்தவளப் போல இருந்தா செய்யு. அதெ வுட முக்கியமா தனக்காக அப்பங்காரரும், அண்ணங்காரனும், கைப்புள்ளயும் எவ்வளவோ சோலிகள அப்பிடியேப் போட்டுட்டு நாள் பூரா வந்து உக்காந்திருக்க வேண்டியதா இருக்கேன்னு நெனைச்சி ரொம்பவே மனசு குமுறுனா. மூணு தடவெ வந்தும் ஒண்ணும் காரியம் ஆகலங்றதுல அவ்வே ரொம்பவே விரக்தியா இருந்தா. இந்தச் சமுதாயத்துல தானோ, தன்னைச் சார்ந்தவங்களோ ஒரு பெரும்புள்ளியா இல்லேயேங்றதுக்காக வருத்தப்பட ஆரம்பிச்சா. அவளுக்கு தன் மேலயே எரிச்சல் வந்துச்சு.

            பாலாமணிய பத்தி பயத்தால மனசுல அவனெ பயங்கர பிரமாண்டமா நெனைச்சிருந்த நெனைப்பு கொறைஞ்சிருந்தது யிப்போ மறுபடியும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிச்சது. இன்ஸ்பெக்டரையே இப்பிடி வெளுத்து வாங்குறவேம் எப்படியும் அடுத்த அழைப்புக்கும் வர்ற மாட்டாம், இப்பிடித் தண்டமா வந்து உக்காந்துத்தாம் போவணும்ன்னு அவ்வே நெனைச்சா. தண்டமா வந்து உக்காந்துட்டுப் போறதுக்கு எதுக்கு வாரணும்? வராமலேயே இருக்கலாமேன்னும் அவ்வே யோசிக்க ஆரம்பிச்சிட்டா. அதெ வெளிப்படையாவும் சொன்னா. "அடுத்த வெள்ளிக் கெழம யாரும் வர்ற வாணாம். நாம்ம மட்டும் வந்துட்டுப் போறேம்ப்பா. அதாங் ஒண்ணும் நடக்காதுன்னு தெரிஞ்சிப் போச்சே! ஒஞ்ஞள எல்லாத்தையும் போட்டு செருமப்படுத்த விரும்பல."ன்னா விரக்தியா.

            அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாரு மனசொடிஞ்சிப் போயிட்டாரு. கைப்புள்ளைக்கும் அதெ கேக்குறது கஷ்டமாத்தாம் இருந்துச்சு. "ஸ்டேஷன், கோர்ட்டுன்னு போறப்போ பொறுமையா இருந்தாத்தாம் முடியும். எல்லாம் நன்மைக்கேன்னு நெனைச்சிக்கோ. இதுலயும் எதாச்சிம் ஒரு நன்மெ இருக்கும்! பொறுமெ! பொறுமெ! அதாங் முக்கியம்!"ன்னாரு கைப்புள்ள ஆத்துப்படுத்துறாப்புல.

            "எல்லா கெடுதலும் நடந்துடுச்சு. இனுமே ன்னா நன்மெ நடக்கப் போகுது போங்க! நடக்குறதெல்லாம் இப்பிடித்தாம் நடக்கும்! இஞ்ஞ வர்ற ஆரம்பிச்சி‍துலேந்து நம்மாள எதுலயும் மனசெ செலுத்த முடியல. வேற எதெப் பத்தியும் சிந்திக்க முடியல. எப்ப பாத்தாலும் இதெ நெனைப்புதாங். எம்பில் புராஜக்ட்ல கூட ஆர்வமா மனசெ செலுத்த முடியல. மின்னாடியில்லாம் படிப்புன்னா மனசு எம்மாம் ஆர்வமா இருக்கும் தெரியுமா? யிப்போ அதெல்லாம் போச்சு. போயே போச்சு. ஒரே அடியாப் போச்சு!"ன்னா விரக்தியா புலம்புனா செய்யு.

            "பொறுமெ! பொறுமெ! இவ்வளவு காலம் பொறுமெயா இருந்தது முக்கியமில்ல. இனுமே பொறுமெயா இருக்குறதுதாங் முக்கியம்!"ன்னாரு கைப்புள்ள மறுக்கா மனசெ தேத்துறாப்புல. பெறவு சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "வக்கீல்கிட்டெ போனப் போட்டு சொல்லிட்டுக் கெளம்புவமா?"ன்னாரு.

            "வக்கீல் ஆபீஸ்ல இருந்தா பாத்துப்புட்டே போயிடுவேமே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு இப்போ இருக்குற நெலமையில.

            "இப்பயா? அவருகிட்டெ போனா ஒரு மணி நேரத்துக்கு மேலல்ல கதெயெ வைப்பாரு!"ன்னாரு கைப்புள்ள அலுத்தாப்புல.

            "வைக்கட்டும். வெச்சத்தாம் மவளோட மனசுக்கு அத்துக் கொஞ்சம் சரிபட்டு வாரும். இந்த மனசுக்குக்காத்தாம் நாம்ம மின்னாடியே ஸ்டேஷன்லாம் போவாம இருந்தது. ஸ்டேஷன் போவணும்ன்னு தலையில இருக்குறப்ப நாம்ம என்னத்தெ பண்ணுறது? போற வழியில அப்பிடியே வக்கீலப் பாத்துட்டுக் கெளம்புவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விடாப்பிடியா. “அப்பிடின்னா போயிப் பாத்துப்புடுவேம். எவ்வளவோ பாத்தாச்சு. இதுல ன்னா இருக்கு?”ன்னாரு கைப்புள்ள அதெ ஆமோதிக்கிறாப்புல.

வண்டிங்க ரண்டும் நேரா வக்கீல் ஆபீஸ நோக்கிப் போனுச்சு. விளமல்ல இருக்குற வக்கீலோட ஆபீசுக்குப் போனப்ப அவரு ஒரு கேஸ்ஸப் பத்தி வந்திருந்தவங்கிட்டெ விவாதிச்சிக்கிட்டு இருந்தாரு. அரை மணி நேரம் வரைக்கும் காத்திருந்துதாம் அவருகிட்டெ பேச முடிஞ்சது. எல்லா கதையையும் பொறுமையா கேட்டுக்கிட்டவரு, கொரல ஒசத்திப் பேச ஆரம்ப்பிச்சாரு.

            "ஒண்ணும் கவலெப்படாதே. இன்ஸ்பெக்டரையே டென்ஷன் பண்ணிருக்காம். நல்ல காரியம் நடந்திருக்கு. சந்தோஷப்பட வேண்டிய சம்பவம்ன்னா இதுதாங். இதெத்தாம் நாம்ம எதிர்பாத்தது. வர்ற வெள்ளிக்கெழம அவ்வேம் வாரணும்ன்னு நெனைக்குறீயா? வாரக் கூடாதுன்னு நெனைக்கிறீயா?"ன்னு செய்யுவப் பாத்து கேட்டாரு திருநீலகண்டன் வக்கீல்.

            "வாரணும்ன்னுத்தாம்ங்கயா நெனைக்குறேம்!"ன்னா செய்யு பரிதாபமான கொரல்ல.

            "ஏம் அப்பிடி நெனைக்குறே? வாரக் கூடாதுன்னு நெனை!"ன்னாரு வக்கீலு அழுத்தம் திருத்தமா.

            "வந்தாத்தானய்யா பேசி முடிக்கலாம். நாமளும் வேற வேலையப் பாக்கலாம்!"ன்னா செய்யு. அவ்வே மொகம் திருதிருன்னு ஒண்ணும் புரியாததப் போல போயிடுச்சு.

            "வர்றதெ வுட, வர்றாம இருக்குறதுலாத்தாம் நமக்கு அனுகூலம் இருக்கு. அந்தக் கோணத்துல யோசிச்சப் பாத்தீயா? அந்த இன்ஸ்பெக்டர் அம்மாவப் பத்தி நமக்குத் தெரியும். எப்பிடியும் இந்த வாரத்துல அவனுக்குப் பிடிவாரண்டப் போட்டுடும். போட்டு அவனெ அரெஸ்ட் பண்ணத்தாம் நல்லது. அப்பிடி அரெஸ்ட் பண்ணா அவ்வேங்கிட்டேயிருந்து இருவது லட்சம் பணம் ன்னா? முப்பது லட்சமே வாங்கித் தர்றேம்! எதுக்குக் கவலெப்படுறே?"ன்னாரு வக்கீல செய்யுவ அமைதிப்படுத்துறாப்புல.

            "அவ்வேம் காசில்லாம் நமக்கு வாணாங்கய்யா! நம்மகிட்டெருந்து வாங்குன காசிய மட்டும் கொடுத்தா போதும்! கொடுத்தா வாங்கிட்டு நாம்ம பாட்டுக்கு அதெ வாங்கி யப்பா கையில கொடுத்துட்டு நம்ம வழியில போயிட்டே இருப்பேம்!"ன்னா செய்யு தீர்க்கமா ஒரு முடிவுக்கு வந்தவளப் போல.

            "அப்போ கூடுதலா பணத்தெ வாங்கிக் கொடுத்தா ஒங் காசு போக மிச்சத்தெ எவ்வளவு இருந்தாலும் நாம்ம எடுத்துக்கிடலாம். அப்பிடித்தானே மிஸஸ் செய்யு பாலாமணி?"ன்னு அழுத்தமா கேட்டாரு வக்கீலு சிரிச்சிக்கிட்டெ.

            "அந்தப் பயெ பேர்ர சேத்து ஏம்ங்கய்யா நம்மள கூப்புடுறீங்க? அவ்வேம் கட்டுன தாலியக் கழட்டி எறிஞ்சி நாளாச்சு. அந்த அளவுக்கு வெறுத்துப் போச்சு. எங்கக் காசிப் போக எம்மாம் கூடுதலா வாங்குனாலும் செரித்தாம், கோடி ரூவா வாங்குனாத்தாம் செரித்தாம் அந்தப் பாவப்பட்ட காசி எஞ்ஞளுக்கு வாணாம். அதெ நீஞ்ஞளே வெச்சிக்கிட்டு அழுங்கய்யா!"ன்னா செய்யு விரக்தியா.

            "இதெல்லாம் தெளிவாத்தாம் பேசுறே! இதெல்லாம் ஜஸ்ட் பார்மாலிட்டிஸ்தாம். அதுக்கா இதெ நாம்ம கண்டுக்காம வுட்டுப்புட்டதா நெனைச்சிடப்படாது. இன்ஸ்பெக்டர்ர இது சம்பந்தமா பாலோ பண்ணிட்டுத்தாம் இருக்கேம். இதுல நிறைய விசயங்க நடக்காம இருக்குறது நல்லதுங்றதெ புரிஞ்சிக்கோ. இங்கங்கல்லாம் போனோம். போயும் காரியம் நடக்கல. ஆக அப்படி நடக்கலன்னு சொல்லி கேஸப் போட்டாத்தாம் கேஸ்ஸூ ஸ்டராங்க நிக்கும். மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன், நடக்கல. சமூக நீதி மையத்துல புகார் கொடுத்தேன் நடக்கல. டிஸ்ட்ரிக்ட் கலக்டர், டியெஸ்பின்னு புகார் கொடுத்தேன் அங்கயும் நடக்கல. முதலமைச்சர் தனிப்பிரிவு வரைக்கும் புகார் கொடுத்தாச்சு. கதெ ஆகுறாப்புல தெரியலன்னு அத்தனையையும் சொல்றப்பத்தாம் கேஸூக்கு ஒரு பவரே கெடைக்கும். அதெத்தாம் நாம்ம எதிர்பாத்துட்டுக் காத்துகிட்டு இருக்கேம். இதெயெல்லாம் மனசுல ஏத்திக்காதே. பாரத்த நம்ம மேல போட்டுட்டு பேஷா இரு! என்ன கொறைச்சல் நோக்கு?"ன்னாரு வக்கீல் மறுக்கா ஒரு அசட்டுச் சிரிப்ப சிரிச்சிக்கிட்டு.

            "எப்பிடிங்கய்யா இதெ மனசுல ஏத்திக்கிட முடியும்? பேஷா இருக்க முடியும்? ஒரு பொண்ணோட மனநெலையிலேந்து பாத்தாத்தாம் புரியும்!"ன்னா செய்யு அழுவுற நெலைக்கு வந்தாப்புல.

            "ஒம் ஆம்படையான் கட்டம் கட்டப்படுகிறான். ஒண்ணு அவன் அரஸ்ட் ஆவான். இல்ல கேஸ்ல சிக்குவான்!"ன்னாரு ரொம்ப அழுத்தமா வக்கீல்.

            "ஒஞ்ஞளாலல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுங்கய்யா! அவ்வேம் அப்பேர்பட்ட ஆளு!"ன்னா செய்யு கொரலு ஒடைஞ்சுப் போயி.

            "அதையுந்தாம் பாப்பேமே! அவன் எவ்ளோ பெரிய பருப்புன்னு?"ன்னாரு வக்கீல். இப்போ அவரு சொல்றது பிடிக்காம செய்யு தலையத் திருப்பிக்கிட்டா.

            "ஒனக்குக் கூடிய சீக்கிரமே பல நல்ல சேதிகள சொல்றேம். இப்போ அவரசப்பட வாணாம். சோஷியல் வெல்பேர்லேந்து எதாச்சும் ஒனக்கு வந்திருக்கணுமே? வந்துச்சா?"ன்னாரு வக்கீல்.

            "யில்லங்கய்யா!"ன்னா செய்யு எல்லாத்துலயும் வெறுத்துப் போனாப்புல அலட்சியமா.

            "இன்னிக்கு வந்திருக்கும் பாரு. ஏன்னா நாம்ம அதெயும் பாலோ பண்ணிட்டுத்தாம் இருக்கேம்! ஸ்டேசுன் கோர்ட்டுன்னா இப்பிடி அலைஞ்சித்தாம் ஆவணும்மா! பல வருஷங்க கோர்ட்டு கேஸூக்குன்னு அலையுற ஆளுங்க எல்லாம் இருக்கானுங்க. ஒரு நாளு ப்ரியா இருந்தா கோர்ட்டுக்கு வாயேம். அந்த ஆளுங்கள எல்லாத்தையும் காட்டுறேம்!"ன்னாரு சிரிச்சிக்கிட்டெ வக்கீல்.

            "வக்கீலா இருக்குறவங்க கோர்ட்டு, கேஸூன்னு அலைஞ்சிக்கிட்டுத்தாம் இருப்பாங்கய்யா! யிப்போ நீஞ்ஞ அலையலயா? இதெ கோர்ட்டுக்கு வந்துதாம் பாக்கணுமா?"ன்னா செய்யு அவர்ர வெடைக்குறாப்புல.

            "ஓ! நீ அந்த பாய்ண்ட் ஆப் வியூல்ல வர்றீயா? பட் வெரி இன்ட்ரஸ்டிங்க. இட்ஸ் எ குட் ஜோக் யு நோ? ஒங்கிட்டெ நல்ல ஹியுமரஸ் சென்ஸ் இருக்கு. டெவலப் பண்ணிக்கோ. இட்ஸ் எ காட்ஸ் கிப்ட்!"ன்னாரு வக்கீல் சிரிப்ப கொறைச்சிக்கிடாம. அப்பத்தாம் செய்யுவோட மொகத்துல கொஞ்சம் சிரிப்ப பாக்க முடிஞ்சிது. இதுக்கு மேல பேச வேற ஏதாச்சும் ஏடாகூடாம ஆயிடுமோன்னு, “பெறவு நாஞ்ஞ கௌம்புறோம்!”ன்னு கௌம்புறதுக்கு அடியெடுத்து வெச்சு எல்லாத்தையும் கௌம்புறாப்புல பண்ணிப்புட்டாரு சுப்பு வாத்தியிரு. அப்பாடியோ இதுவே போதும்ன்னு எல்லாரும் கெளம்பி வெளியில வந்தப்போ, சுப்பு வாத்தியாரு செய்யுகிட்டெ சொன்னாரு, "ஒரு வக்கீல்கிட்டெ இப்பிடியா எடுத்தெறிஞ்சிப் பேசுறது?"ன்னு வருத்தமா.

            "நம்ம வக்கீல்தானே! ஒண்ணும் நெனைச்சிக்கிட மாட்டாரு. வேற வக்கீல்கிட்டயல்லாம் இப்பிடிப் பேச முடியாது. நாலு வார்த்தெ பேசுனாலும் ஐநூத்து ரூவாயக் காசிய எடுத்து வெச்சிட்டுப்புட்டு போடாம்பாம். நல்லா இருக்கீங்களா சார்ன்னு கேட்டாலும் அதுக்கு இருக்கேன்னு பெரமாதமான பதிலச் சொல்லிப்புட்டாத காசு கேக்குற வக்கீலும் இருக்காம்ன்னா பாத்துக்கோ!"ன்னாரு கைப்புள்ள நெலமைய வௌக்குறாப்புல.

            "செரி ஆனாது ஆயிப் போச்சு. மனசுல உள்ளதெ கொட்டுன வரைக்கும் அதுவும் ஒரு வகையில் நல்லதுதாம். இதுக்கு மேல பேசுனா நேரந்தாம் ஆவும்! கௌம்பி வூடு போற வழியப் பாப்பேம்!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்ல எல்லாம் வண்டியக் கெளப்பிக்கிட்டு வூடு வந்து சேர்ந்தா வக்கீல சொன்னது போல சமூக நீதி மையத்துலேந்து அழைப்பாணை வந்திருந்துச்சு அதுக்கு வாரச் சொல்லி.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...