4 Nov 2020

பெண்களைக் கொடுமை பண்ணத்தாம் ஆம்பளையா?

பெண்களைக் கொடுமை பண்ணத்தாம் ஆம்பளையா?

செய்யு - 615

            "எதாச்சும் கவர்மெண்டு பரீட்செ எழுதிப் பாஸானியன்னா வேலைக்குப் போயிடலாம். வேலைக்கு மட்டும் போயிட்டீன்னா கட்டிக்க நான் நீயின்னு போட்டுப் போட்டுட்டு வருவானுவோ! படிப்புத் தொணையா இருக்குறவங்க எதுக்கும் பயப்பட வேண்டியதில்லா!"ன்னு சியாமளா அத்தாச்சி சொன்ன வாசகம் செய்யுவோட நல்லா பதிஞ்சுப் போனுச்சு. கவர்மெண்டுப் பரீட்சைக்குப் படிக்குறதப் பத்தி அவளோட மனசு திரும்புனுச்சு.

            கலைஞ்சிக் கெடக்குற மனசு சின்ன சின்ன கலை வேலைப்பாடுகள செய்யுறப்போ சரியாயிடும். சியாமளா அத்தாச்சியோட புருஷங்காரரு ஸ்பதிங்றதால அவரு சின்ன சின்ன கலை வேலைபாடுகளல செய்யுறதுல தெறமையான ஆளா இருந்தாரு. அவரு சின்ன சின்ன கைவேலைப்பாடுகளெ செய்யுறதச் செய்யுவுக்குக் கத்துக் கொடுத்தாரு. வளையலு, தோடுல்ல கலர் கலர் நூல வாங்கிச் சுத்தி அதெ வேற ஒரு டிசைன்ல மாத்திப்புடுற கைவேல. சாதாரண வளையலை வாங்கி அப்பிடிக் கலர் கலரா நூல கலந்து சுத்துறப்போ, அந்த வளையலப் பாக்குறதுக்கு ரொம்ப விசேசமா இருக்கும். தோடுலயும் அப்பிடித்தாம் வேலைப்பாடு செஞ்சா பெரமாதமா இருக்கும். அதெ செய்ய செய்ய அவளுக்கு ஆர்வம் உண்டாவ ஆரம்பிச்சிது. அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா கழுத்துலப் போடுற மணிக, காதுல போடுற தோடுகன்னு வெத வெதமா செய்யுறது அவளோட மனசெ மாத்த ஆரம்பிச்சது. கொஞ்ச காலம் அப்பிடித்தாம் செய்யு வெத வெதமா எதையோ செஞ்சிட்டுக் கெடந்தா. எதுலயோ மனசு கொஞ்சம் மாறி திருந்தி வந்தா சரித்தாம்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு.

            பாஞ்சு நாளுக்கு ஒரு மொறை கோவில்பெருமாள்லேந்து திருவாரூரு வந்து கண்ணபிரான் டாக்கடர்ட்டெ கொண்டுப் போயி காட்டுறதும், மாசத்துக்கு ஒரு மொறை மாறியிருந்துச்சு. நெதமும் போட்டுக்கிட்டு இருந்த மாத்திரைய ஒரு நாளு வுட்டு ஒரு நாளுன்னு போட ஆரம்பிச்சா. அப்பிடியே ஒரு நாளு இடைவெளிங்றது ரண்டு நாளாயி, மூணு நாளாயி படிப்படியா மனசு சரியில்லாம இருக்குறப்ப மட்டும் போட்டுக்குற அளவுக்கு அவளோட நெலமையில முன்னேத்தம் உண்டாவ ஆரம்பிச்சது. கோவில்பெருமாள்ல இருக்குற தெரு சனங்களோட கொஞ்சம் கொஞ்சமா பழகவும் ஆரம்பிச்சா. இவ்வே படிச்சவங்கறதால தெருவுல இருக்குற சனங்களும் எதாச்சும் காயிதம் போடணும்ன்னாவோ, படிவங்கள நெரப்புணும்னாவோ செய்யுகிட்டெ வர்ற ஆரம்பிச்சிதுங்க. பள்ளியோடத்துல படிக்கிற புள்ளீயோ பாடத்துல சந்தேகம்ன்னா அதுக்கும் செய்யுகிட்டெ வர்ற ஆரம்பிச்சதுங்க. மின்ன மாதிரிக்கி அவளால பேயாம வூட்டுல மூலையில முடங்கிக் கெடக்க முடியல. யாராச்சும் வந்து எதையாச்சும் கேக்குறப்போ அதுக்காகவாவது பேச வேண்டிய நெலமெ உண்டானுச்சு. மனுஷங்களோட பேசப் பேச அவளோட மனசுலேந்து போவ வழியில்லாம அடைஞ்சிக் கெடந்த இறுக்கமும், அழுத்தமும் பல வழிக கெடைச்சாப்புல தெறிச்சி ஓட ஆரம்பிச்சது. மனசு கொஞ்சம் மாறி வந்தாலும் மனசுல நம்பிக்கையும், தெகிரியமும் கொறைவாத்தாம் இருந்துச்சு அவளுக்கு. பல நேரங்கள்ல உற்சாகாம இருக்க ஆரம்பிச்சா. இருந்தாலும் சில நேரங்கள்ல சோந்து படுத்துடவும் செஞ்சா. எப்பிடிப் பாத்தாலும் மின்ன இருந்த நெலமைக்கு மின்னேற்றந்தாங்றதெ மறுக்க முடியாது.

            தாராசுரத்துல இருந்த சியாமளா அத்தாச்சியோட புருஷங்காரரு ஐம்பொன் செல செய்யுறதுல பெரிய வேலக்காரரு. ஐம்பொன் சிலையோ, செப்புச் சிலையோ எந்த வெதமான உலோகச் சிலை செய்யுறதா இருந்தாலும் அந்த வடிவத்துக்கு மெழுகல வடிவத்தெ செஞ்சித்தாம் செய்யுவாங்க தாராசுரத்துல. மெழுகுல வடிச்ச அந்த வடிவத்தெ மண்ணுல சுத்தி பாடத்தெ பண்ணி, மெழுக உருகி எடுத்துப்புட்டா உள்கூடா எந்த உருவத்தெ வடிச்சோமோ அந்த வடிவம் கிடைச்சிடும். அந்த வடிவத்துக்குள்ளத்தாம் எந்த உலோகத்துல வடிவம் வேணுமோ அந்த உலோகத்த காய்ச்சி ஊத்துவாங்க. அப்பிடி ஊத்துறதுக்கு ஏதுவா மண்ணெ வெச்சி பாடம் பண்ணுறப்பவே ஓட்டையும் போட்டுருப்பாங்க. உருக்குன உலோகம் உள்ள போயி உறைஞ்ச பெறவு சுத்திலும் பாடம் பண்ண மண்ண ஒடைச்சி வுட்டா சிலை தயாராயிடும். அதெ நல்ல வெலைக்கு வாங்க ஆளுங்க நெறைய பேரு இருந்தாங்க. யாரும் வாங்காட்டியும் இதெ விக்குற கடையில கொடுத்தும் காசு பண்ணிக்கிடலாம். செல பேரு மெனக்கெட்டு தேடி வந்து அவுங்களுக்கு வேண்டுன வடிவத்தெ சொல்லி செஞ்சு வாங்கிட்டுப் போவாங்க.

            சியாமளா அத்தாச்சியோட புருஷங்காரரு எந்நேரத்துக்கும் மெழுகெ வெச்சி வடிவத்தெ வடிச்சிக்கிட்டெ இருப்பாரு. காலநேரம் பாக்காம அப்படி செஞ்சாத்தாம் வடிக்க நெனைச்ச வடிவத்தெ கொண்டார முடியும். தாராசுரத்துலேந்து கோவில்பெருமாள் வந்தாலும் சும்மா உக்காந்திருக்காம மெழுக வடிச்சிக்கிட்டு இருப்பாரு அவரு. சியாமளா அத்தாச்சியும் கூட மாட அதுல ஒத்தாச பண்ணும். புள்ளையாரோ, லட்சுமியோ, தெட்சிணாமூர்த்தியோ பெரும்படியா மெழுக செதுக்கிக் கொடுத்துப்புட்டா சியாமளா அத்தாச்சியோட புருஷங்காரரு நுட்பமா அந்த வடிவத்தெ கொண்டாந்துடுவாரு. அந்த வேலையையும் கோவில்பெருமாள் வர்றப்பல்லாம் செய்யுவுக்குச் சொல்லிக் கொடுத்தாரு சியாமள அத்தாச்சியோட புருஷங்காரரு. அதெ செய்யுறது அவளுக்கு ஒரு பொழுதுபோக்காப் போயிடுச்சு. எந்நேரமும் வெறுமெனே உக்காந்துக் கெடந்தவளுக்கு, அதெ செய்ய ஆரம்பிச்சதும் நம்மாளயும் எதாச்சும் செய்ய முடியுங்ற நம்பிக்கெ உண்டாவ ஆரம்பிச்சிது. அப்படி உண்டான நம்பிக்கெ கும்பகோணத்துல எதாச்சும் படிப்பு மையத்துல சேந்து படிச்சாத்தாம் என்னாங்ற எண்ணம் உண்டானுச்சு.

            மவளுக்கு இப்படி ஓர் எண்ணம் உண்டானதும் ஒடனே சுப்பு வாத்தியாரு காரியத்துல எறங்குனாரு. கும்பகோணம் போயிட்டு வர்றதுக்கு வசதியா பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துலயே யிருக்குறாப்புல படிப்பு மையம் ஒண்ணு இருந்துச்சு சியார்ஐ அகாடமின்னு. போட்டித் தேர்வுக்கு முழு நேரமா படிக்கிறவங்களுக்கு ஏத்தாப்புலயும், வேலைக்குப் போறவங்க சாயுங்கால நேரமா வந்து படிக்கிறாப்புலயும் அங்க பல பேரு பணத்தெ கட்டிச் சேர்ந்து படிச்சாங்க. அதுல சேத்து வுட்டு சுப்பு வாத்தியாரு தொணைக்கு ஒரு வார காலத்துக்குப் போயி உக்காந்துட்டு வந்தாரு. கொஞ்சம் கொஞ்சமா தானா போயிட்டு தானா வர்ற அளவுக்குத் தேறுனதும் அவ்வே பாட்டுக்குப் போயிட்டு வர்ற ஆரம்பிச்சா செய்யு. அங்கப் போனதுல நெறைய மாற்றங்க அவ்வேகிட்டெ உண்டானுச்சு. அந்த படிப்பு மையத்துல வீயேவோ, டின்பியெஸ்ஸி குரூப் 4, குரூப் 2, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான டெட், ஐயேயெஸ், பேங்கு வேலைக்கான பரீட்சைக்கெல்லாம் பயிற்சிக் கொடுத்துட்டு இருந்தாங்க. அதுல சேந்துகிட்டு கவர்மெண்டுல அறிவிக்கிற எல்லா பரீட்சைகளையும் எழுதிப் பாக்க ஆரம்பிச்சா செய்யு. மொத மொறையா ரொம்ப காலத்துக்குப் பெறவு நடந்த நல்ல மாத்தம்ன்னா அதாங்.

            எல்லா வெதமான பரீட்சைகள எழுதிப் பாத்தாலும் வேலைக்குச் சேர்றதுக்கான மார்க்குல ஒண்ணு ரண்டு கொறைஞ்சி தட்டிக்கிட்டே போனுச்சே. தன்னால முன்னாடி போல படிக்க முடியலங்றதெ ஒரு கொறையா சொல்லிட்டு இருந்தா. அடிக்கடி தலைய வலிக்குதுன்னு வேற சொல்லிட்டு இருந்ததுல, சுப்பு வாத்தியாரு கண்ணு டாக்கடர்ரப் பாக்க வெச்சி கண்ணாடியப் போட்டு வுட்டாரு. அதுக்குப் பெறவுதாம் படிக்கிறப்ப உண்டாவுற தலைவலி கொறைய ஆரம்பிச்சது. பரீட்சைக்கு எழுதி வேலைக்குப் போவ முடியலங்றது மனசுல ஒரு கொறையா இருந்தாலும், அவ்வே கூட படிச்ச பல பேரு தேர்வாயி வேலைக்குப் போயிட்டு இருந்தது அவளுக்கு தெம்ப கொடுத்துட்டே இருந்துச்சு. அந்த பொண்டுகள்ல பல பேரு இவளெப் போல நெலமையில இருந்ததெ அறிஞ்சப்போ, செய்யுவும் கொஞ்சம் கொஞ்சமா சகஜ நெலைக்குத் திரும்ப ஆரம்பிச்சா.

            சியார்ஐ அகாடமியில படிச்ச நூத்துக்கு மேல இருந்த பொண்ணுங்கள்ல பாதி பேருக்கு மேல இவள ஒத்த நெலமையிலத்தாம் புருஷங்காரனால பாதிக்கப்பட்டவங்களா இருந்தாங்க. வாழ்க்கையில ரொம்ப பாதிக்கப்பட்ட பொண்ணுங்க இத்து மாதிரி ஒரு படிப்பு மையத்துல சேர்ந்து கவர்மெண்ட் பரீட்சை எழுதி எப்படியாச்சும் பாஸாயி ஒரு வேலைக்குப் போயிடணும்ன்ன வெறியா படிச்சாங்க. அங்க பாரதி, மாலதி, ரித்திகா, சந்திரான்னு பல பேரு செய்யுவுக்குச் சிநேகிதியாவும் ஆனாங்க. இவுங்க எல்லாரோட வாழ்க்கையும் புருஷங்காரனால பாதிக்கப்பட்டதாத்தாம் இருந்துச்சு. பாரதி பொண்ணோட நெலமெ கிட்டதட்ட செய்யுவோட நெலமையப் போலத்தாம் இருந்துச்சு. நெருங்குன சொந்தம்ன்னு அத்தெ மவனுக்குக் கட்டிக் கொடுத்தா, அவ்வேம் இந்தப் பொண்ணையும் கட்டிக்கிட்டு இன்னொரு பொண்ணையும் தொடுப்பா வெச்சிருந்தாம். அதெ தெரிஞ்சிக்கிட்டுக் கோவிச்சிக்கிட்டு வந்த பாரதி அதுக்குப் பெறவு அவ்வேம் கூட வாழ முடியாதுன்னு அப்பங்காரரு வூட்டுலயே தங்கியிருந்து இங்க வந்து படிச்சி ஒரு வேலைக்குப் போயிடுணும்ன்னு தீவிரமா இருந்துச்சு.

            மாலதி பொண்ணோட நெலமெ இன்னும் வித்தியாமா இருந்துச்சு. நாகர்கோயில்லப் பாத்து ஒரு பையனெ கட்டிக் கொடுத்திருந்தாங்க அவுங்க அப்பா அம்மா. அங்கப் போயி இந்தப் பொண்ணு குடித்தனம் நடத்துன கொஞ்ச நாள்லயே புருஷங்கார்ரேம் பண நகையோட காணாமப் போயிட்டாம். கையில பைசா காசு கூட யில்லாம அங்க இங்கன்னு தன்னோட நெலமையச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடி ஊரு வந்து சேர்ற அளவுக்குக் காசிய வாங்கிட்டு நாகர்கோயில்லேந்து கும்பகோணத்துக்குப் பஸ்ஸப் பிடிச்சி வந்துச் சேந்திருக்கு அந்தப் பொண்ணு.

            ரித்திகா பொண்ணோட கதெ அதெ வுட வேதனையா இருந்துச்சு. கலியாணங் கட்டி அஞ்சு வருஷம் நல்ல வெதமா போயிட்டு இருந்த வாழ்க்கெ திடீர்ன்னு தெச மாறிப் போவ ஆரம்பிச்சது. கொழந்தையெல்லாம் பொறந்த பிற்பாடு ரித்திகாவோட புருஷங்கார்ரேன் இன்னொரு பொண்ணோட வாழ ஆரம்பிச்சிட்டாம். வாழ ஆரம்பிச்சதோட இல்லாம, ரித்திகாகிட்டெ வந்து அடிச்சி ஒதைச்சி விவாகரத்து பண்ணுறதா காயிதத்துல கையெழுத்தையும் வாங்கிட்டாம். வாங்கிட்டுக் குடியிருந்து வூட்டுலேந்து கொழந்தையோட அடிச்சித் தொரத்தியும் விட்டுப்புட்டாம். ரித்திகா கொழந்தையோட அப்பங்காரரு வூட்டுல போயி நின்னா, அவுங்களால இதெ வெச்சி சமாளிக்க முடியாத அளவுக்கு வறுமைன்னா வறுமெ அப்பிடி ஒரு வறுமெ. அப்பங்காரருக்குப் பாரமா இருக்க நெனைக்காத ரித்திகா ஒரு கடையில வேலைக்குச் சேந்துக்கிட்டு, கையோட வெச்சுப் புள்ளையையும் வளத்துக்கிட்டு, அந்த படிப்பு மையத்துல சாயுங்கால நேரத்துல மட்டும் வந்து பணத்தெ கட்டி படிச்சிகிட்டு இருந்துச்சு. இத்தனைக்கு அந்தப் பொண்ணு பத்தாவது வரைக்கும்தாம் படிச்சிருந்துச்சு. அதெ வெச்சி வீயேவோ பரீட்சைக்குத் தயார் ஆவுறதா தெகிரியமா சொன்னுச்சு. அத்தோட ப்ளஸ்டூ படிப்புக்குத் தனியா படிச்சிட்டு இருக்குறதாவும், அந்தப் பரீட்சையயும் எழுதி பாஸாயி, அஞ்சல் வழியா பட்டப்படிப்பையும் படிச்சுப் பெரிய வேலைக்குப் போயி தன்னே ஏமாத்துன புருஷங்கார்ரேம் மின்னாடி தலைநிமுந்து வாழ்ந்து காட்டுவேன்னு தெகிரியமா வேற சொன்னுச்சு.

            சந்திராவோட கதெ அது ஒரு வெதமா இருந்துச்சு. கலியாணத்தக் கட்டி ரண்டு கொழந்தெ ஆன பெறவு ஒரு நாளு புருஷங்கார்ரேம் காணாம போனவந்தாம். ஒரு வருஷ காலமா ஆளெ கண்டுபிடிக்க முடியல. புருஷங்காரன தேடாத எடமில்லே. போலீஸ்லயும் காங்கலங்ற புகார்ரக் கொடுத்தும் கண்டுபிடிக்க முடியல. அந்த ஒரு வருஷக் காலமும் சந்திரா துடிச்சிப் போயி பைத்தியம் பிடிச்சாப்புல ஆயிடுச்சு. ஒரு வருஷ காலத்துக்குப் பெறவுதாம் புருஷங்கார்ரேம் ஓசூர்ல இருக்குறதாவும், அங்க ஒரு பொண்ணோட குடும்பத்தெ நடத்துறதாவும் தகவல் கெடைச்சி அங்கப் போயி ரண்டு கொழந்தைகளோடும் சந்திரா பாத்தப்போ, அவ்வேம் புருஷங்கார்ரேம் வெவரம் தெரிஞ்சி அங்கேயிருந்து தப்பி வேற எங்கயோ போயிட்டாம். சந்திராவுக்கு அப்பிடியே ஒலகமே வெறுத்துப் போயிடுச்சு. செத்துப் போயிடலாமான்னு கூட தோணிருக்கு. ரெண்டு பக்கமும் ரண்டு கையையும் பிடிச்சிட்டு நின்ன புள்ளீயோத்தாம் சாவக் கூடாதுங்ற தெகிரியத்தையும், புள்ளீயோளுக்காக வாழணுங்ற வைராக்கியத்தையும் கொடுக்க, செரித்தாம் போடான்னு புருஷங்காரனேப் பத்தின நெனைப்ப மனசுலேந்து தூக்கி எறிஞ்சிட்டு கும்பகோணத்துக்கே திரும்பி, ஒரு தனியாரு பள்ளியோடத்துல வேலையத் தேடிக்கிட்டு, புள்ளீயோள அங்கயே படிக்க வெச்சிக்கிட்டு, இந்த படிப்பு மையத்துல சாயுங்கால நேரத்துல வந்து படிச்சிக்கிட்டுக் கெடந்துச்சு.

            அவுங்க கதைக ஒவ்வொண்ணையும் கேக்க கேக்க ஆம்பளைங்க ஒவ்வொருத்தனும் பொம்பளைங்கள ஏமாத்தவும், குடி கெடுக்கவுந்தாம் பொறந்திருப்பானுங்களா நெனைப்பு உண்டாவாம இருக்காது. ஆண்டவனப் பாக்குற சந்தர்ப்பம் அமைஞ்சா, ஏம்டா ஆண்டவா பொம்பளைங்கள ஏமாத்தத்தாம் ஆம்பளைகளப் படைச்சியான்னு தோள்ல துண்டப் போட்டு கேள்விக் கேக்குணுங்ற ஆவேசம் வந்துப்புடும். ஆன்னா அவுங்க யாருமே ஆம்பளைங்கள வெறுக்கல. ஆனா ஆம்பளைங்க மின்னாடி வைராக்கியமா வாழ்ந்து காட்டணுங்ற நெனைப்போடத்தாம் இருந்தாங்க. விகடு அங்கப் போனப்போ அண்ணா அண்ணான்னு உசுரையே வுட்டாங்க. சுப்பு வாத்தியார்ரப் பாத்தப்போ அப்பா அப்பான்னு பாசத்தெ கொட்டுனாங்க. அவுங்க ஒவ்வொருத்தரும் கெளரவமாவும், தெகிரியமாவும் இருக்குறதெப் பாத்தாலே போதும் மனசுக்குள்ள தெம்பும் தெகிரியமும் ஓடியாந்துடும்.

            அந்த ஒவ்வொரு பொண்ணுங்களோட சுறுசுறுப்பையும், ஓட்டத்தையும் வார்த்தையால சொல்லிட முடியாது. வூட்டு வேலைக அத்தனையையும் பாத்துக்கிட்டு, கொழந்தைங்க இருந்தா அதையும் பாத்துக்கிட்டு, பள்ளியோடம் அனுப்பி வெச்சிக்கிட்டு, வருமானத்துக்கு ஒரு வேலையையும் பாத்துக்கிட்டு, இந்த படிக்குற வேலையையும் அதுக்கு இடையில விட்டுக்கிடாம பாத்துக்கிட்டு அப்பப்பா பம்பரமா, எந்திரமாத்தாம் ஒவ்வொண்ணும் சொழண்டுகிட்டுக் கெடந்துச்சுங்க. வாழ்க்கை அவுங்கிட்டெயிருந்து ஆம்பளெ தொணையா இல்லாம்ம செஞ்சிருந்தாலும், மனசுல இருந்த வைராக்கியத்தையும், வேகத்தையும் வாழ்க்கெயால அவுங்கிட்டெயிருந்து பிரிக்க முடியல.

            அங்க படிச்சிட்டு இருந்த பெரும்பாலான பொண்ணுங்க குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்டவங்களாத்தாம் இருந்தாங்க. கோர்ட்ல கேஸூங்களையும் அந்தப் பொண்ணுங்க எதிர்கொண்டுட்டு இருந்தாங்க. பொண்ணுங்க ஏம் வெறி கொண்டு படிக்கிறாங்க, வேலையில அதிகமா அவுங்களெ ஆம்பளைங்கள விட பாஸாயி வர்றாங்களேன்னு கேட்டா அதுக்கான காரணத்தெ அந்த சியார்ஐ அகாடமியில பாக்க முடிஞ்சிது.

            அந்த ஒவ்வொரு பொண்ணுங்களும் சொல்றப்போ, "ஒரு வேலைக்குப் போவாத வரைக்குந்தாம் நம்மளப் பத்தி கேவலாமா பேசுவாய்ங்க. படிச்சி ஒரு கவர்மெண்டு உத்தியோகத்துக்குப் போயிட்டா ரொம்ப மதிப்பாப் பாப்பாங்க. அதுக்குப் பெறவு கொறை சொன்ன வாயிங்க ஒவ்வொண்ணும் எதாச்சும் கொஞ்சம் ஒதவிப் பண்ணு, கொஞ்சம் பணத்தெ கொடுன்னு வூடு தேடி வந்து நிக்குமுங்க. இந்த ஒலகத்துல பொண்ணுக்கு புருஷனோ, புள்ளையோ தொணை கெடையாது. வேலைத்தாம் தொணை. வேலைத்தாம் எல்லாம்! அத்து இருந்தா ஆம்பளைங்களும் பொம்பளைகிட்டெ அடக்க ஒடுக்கமா இருப்பானுவோ! சம்பாதிக்குறங்ற திமிருத்தாம் கட்டி வெச்சதுப் பத்தாதுன்னு கூத்தியாளாயும், வைப்பாட்டியையும் தேடச் சொல்லுது! நாமளும் சம்பாதிச்சா ஏம்டா எடுபட்ட நாயே, நான்னுத்தாம் சம்பாதிக்கிறேம், இன்னொரு ஆம்பளைய தொணைக்கு வெச்சிக்கிவான்னு நாக்கெ புடுங்ற மாதிரிக்கிக் கேள்வியக் கேக்கலாம்!"ன்னு ரொம்ப ஆவேசமாத்தாம் சொன்னுச்சுங்க.

            இந்த ஒலத்துலயே நாம்ம ஒருத்தருதாம் பாதிக்கப்பட்டு இருக்கோம்ன்னு நெனைக்குறதுதாம் நம்மோட மனவெயாதிக்கு முக்கியமான காரணமே. நாம்ம மட்டுமில்ல ஒலகத்துல கணிசமான பேரு நம்மள மாதிரித்தாம் பாதிக்கப்பட்டு இருக்காங்றதெ தெரிஞ்சிக்கிறப்போ அந்த மனவெயாதி கொணமாவுறதோட, பாதிக்கப்பட்டவங்க எப்பிடி திமிராவும், தெகிரியமாவும், நம்பிக்கையாவும் மின்னேறி வர்றாங்கன்னு பாக்குறப்போ மனசுக்கு புதுத் தெம்பும் உற்சாகமும் உண்டாயிடுது. அப்பிடித்தாம் செய்யுவுக்குக் கும்பகோணம் போனது புது ரத்தம் பாஞ்சாப்புல இருந்துச்சு. பழைய நெலமையிலேந்து கொஞ்சம் கொஞ்சமா கொணம் காண ஆரம்பிச்சா. நம்மாளயும் படிக்க முடியும், படிச்சி தலைநிமுந்து நிக்க முடியுங்ற நம்பிக்கெ அவ்வேகிட்டெ உண்டாவ ஆரம்பிச்சிது. அவளோட கவலைகளுக்கும், சோகத்துக்கும் வடிகால் கெடைச்சாப்புல அதெல்லாம் வழிஞ்சோட ஆரம்பிச்சிது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...