12 Nov 2020

குடிகார மகான்கள்

குடிகார மகான்கள்

            பொதுவாக மனிதர்களுக்கு ஒரு குணாதிசயம் இருக்கிறது. தான் யாருக்கும் உதவியாக இல்லா விட்டாலும், எல்லாரும் தனக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னும் குரூரமாக யாராவது ஒரு மனிதர் தன்னை எரித்துக் கொண்டு தனக்கு வெளிச்சம் தர மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்குத் தியாகம் என்று வேறு பெயர் சூட்டி வைத்திருக்கிறார்கள். குடும்பமே பட்டினியில் கிடக்கும் போது தான் குடிப்பதற்கு பத்து ரூபாய் யாராவது கொடுக்க மாட்டார்களா என்று அலைபவரின் மனநிலையைப் பற்றி வேறென்ன சொல்வது? அந்த ஒற்றைக் குடிகார மனிதரின் அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு மொத்தக் குடும்பமும் அவரைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதை விட பெரிய தியாகத்தை யாரும் செய்து விட முடியாது. காலம் முழுவதும் நன்னயம் செய்தல் என்பது இதுதான். அதாவது

                        “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

                        நன்னயம் செய்து விடல்”                                       (குறள். 314)

            ஆனால் அந்தக் குடிகார கொடூர மனிதர் அந்த நன்னயத்தை உணர்ந்து நாணவோ, குடும்பத்தைப் பேணவோ மாட்டார். ஏன் நாண மாட்டார் என்பதற்கான விளக்கத்தையும் திருவள்ளுவரே சொல்கிறார்

                        “நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

                        பேணாப் பெருங்குற்றத் தார்க்கு”                                    (குறள். 924)

            உலகில் சில கொடுமைகளுக்கு முடிவே கிடையாது. அத்தகைய கொடுமைகளுள் இதுவும் ஒன்று. அத்துடன் ஆகப் பெரிய குடும்ப வன்முறைகளுள் முதன்மையானதும் இது.

*****

பெருமை தருவது எது?

            எல்லா செயல்களும் நேர்த்தியை அதாவது Perfection ஐ நோக்கிய ஒரு முயற்சிதான். எடுத்த உடனே ஒரு செயலில் நேர்த்தியைக் காண முடியாது. படிப்படியாக நேர்த்தியை அடையக் கூடிய வகையிலே பெரும்பாலான செயல்கள் இருக்கின்றன. படிப்படியாக ஒரு செயலில் நேர்த்தியை அடையும் வரை பொறுமையாக முயல்பவரை நோக்கியே பெருமை வந்து சேர்கிறது. அத்தகைய ஒரு நேர்த்தியை நோக்கித்தான் மனித மனம் இடைவிடாது முயற்சி எனும் நூலைப் பிடித்தபடி ஓடிக் கொண்டு இருக்கிறது. மனித முயற்சியில் உண்டான உலக அதியசங்கள் எனப்படுபவை அத்தகைய ஒரு நேர்த்தியை நோக்கிய முயற்சிகள்தான். திருவள்ளுவர் இதை மிக அருமையாக இப்படிச் சொல்கிறார்

                        “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

                        பெருமை முயற்சி தரும்”                                                   (குறள். 611)

நடைமுறை வாழ்க்கையில் இப்படி அனுபவப்பட்டு அறியும் பல செய்திகளைத் திருக்குறள் அசால்ட்டாக சொல்வது அதற்கே உள்ள தனிச்சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...