13 Nov 2020

ஓட்டப்பம் உசுரைச் சுடும்!

ஓட்டப்பம் உசுரைச் சுடும்!

செய்யு - 624

            கோர்ட்டு, வக்கீலு மாதிரியான விசயங்கள்ல அனுபவப்பட்ட ஆளுங்ககிட்ட யோசனெ கேட்டு அதுப்படி செய்யுறதுதாம் நல்லதுன்னு பட்டுச்சு சுப்பு வாத்தியாருக்கு. அது மாதிரியான விசயங்கள்ல அடிபட்ட ஆளுங்கன்னுப் பாத்தா வடவாதியில வீயெம் மாமா, முருகு மாமா, லாலு மாமா, பஞ்சு மாமாவோட மவ்வேன் சங்குதான். அவுங்க எல்லாம் எப்பவோ சுப்பு வாத்தியாருக்கு எதிர் தெசையில போயிட்டதால அவுங்ககிட்டப் போயி யோசனைக் கலந்துக்க முடியாத நெலையில இருந்தாரு சுப்பு வாத்தியாரு. அவுங்ககிட்டெப் போயி யோசனெ கலந்துக்க முடியாதுன்னா, வேற யாருகிட்டெப் போயி கலந்துக்கிறதுன்னு அவரு நெனைச்சப்போ அவரோட ஞாபவத்துல வந்த ஆளுதாம் ஓகையூரு கைப்புள்ள. ஓகையூர்ல சுப்பு வாத்தியாரு இருந்த வகையிலயும், ஓகையூர்ல ‍வெவசாயம் பண்ணப் போறப்ப பழக்கமான வகையிலயும் அறிஞ்ச ஆளு அவரு. அத்தோட சுப்பு வாத்தியாரு வகையறாவுல வரக்கூடிய ஆளும் கூட. அவருக்கு இந்த மாதிரியான விசயங்கள்ல அடிபட்ட அனுபவம் இருந்துச்சு.

            கைப்புள்ள தன்னோட தொழில்பாட்டுக்காகக் கலவையான வேலைகளப் பாத்துக்கிட்டு இருந்தாரு. ஒரு காலத்துல மளிகைக் கடைய வெச்சிக்கிட்டு, மாந்திரீகத்தப் பாத்துட்டு இருந்தவரு இப்போ வெவசாயம் பாக்குறது, கோயிலுக்குப் பூசெ வைக்கிறது, தன்னோட சாதி வகையறாவுக்குக் கலியாணங் காட்சின்னா வாத்தியார்ரா நின்னு கலியாணத்த முடிச்சிக் கொடுக்குறதுன்னு மாறி இருந்தாரு. அவரு ஏம் மளிகைக் கடையையும், மாந்திரீகத்தையும் விட்டார்ங்றது ஒரு தனி கதெ. கைப்புள்ள அவரோட அப்பாகிட்டேயிருந்த மாந்திரீகத்தெ கத்து வெச்சிருந்தாரு. அவரோட மாந்திரீகத்துக்குக் கிராமமே கட்டுப்பட்டுக் கெடந்த காலம் இருந்துச்சு. இவரு காலத்துலயும் அதுக்கு எந்தக் கொறைச்சலும் இல்லன்னாலும் கைப்புள்ளயே அதெ கைவுடுறாப்புல ஒரு சம்பவம் அமைஞ்சிப் போச்சு. அந்தச் சம்பவத்துக்குப் பெறவு அவரு அதெ விட்டிருக்க வேண்டிய அவசியம் ஒண்ணும் வாரல. ஆன்னா என்னவோ மனசுக்குப் பட்டதால அதுல இனுமே எறங்குறது இல்லன்னு முடிவெ பண்ணிப்புட்டாரு.

            இருவதஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஓகையூர்ல மளிகெக் கடைன்னா அத்து கைப்புள்ள கடையும், அவரோட கடைக்குப் பக்கத்துல நாலு வூடு தள்ளி இருந்த ஆராகுட்டி மளிகெ கடையுந்தாம். ஊருக்கே ரண்டு மளிகெ கடைன்னாலும் ஓட்டம் என்னவோ கைப்புள்ள கடைக்குத்தாம். மளிகெ கடையை வெச்சி சம்பாத்தியத்துல நெறைய காசுபணத்தெ பாத்துட்டு இருந்தாரு கைப்புள்ள. அப்போ இருந்த ரண்டு மளிகெ கடையும் கீத்துக் கொட்டகைக் கடைங்கத்தாம். வழக்கமா கடையில இருக்குற சரக்கெ வுட தீவாளி சமயத்துல பண்டிகைக்கு ஏத்தாப்புல சரக்கெ அதிகமா வாங்கி வெச்சி யேவாரம் பாப்பாங்க மளிகெக் கடெ வெச்சிருக்கிறவங்க. அதுக்கேத்தாப்புல தீவாளி நெருங்குன சமயத்துல திருவாரூருக்கு மாட்டு வண்டியக் கட்டிக்கிட்டு சரக்க நெறைய எடுத்துக் கொண்டாந்து வெச்சிட்டு ராத்திரி ஆனதும் கடையக் கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு கைப்புள்ள. நடுராத்திரி ஒரு மணி வாக்குல கடை பத்திட்டு எரியுதுன்னு சனங்க எல்லாம் இவர்ர வந்து எழுப்புனா அவருப் போயி பாக்குறதுக்குள்ள கடையில இருந்த அத்தனெ சரக்கும் தீயில எரிஞ்சிக் கரியாப் போயிக் கெடந்துச்சு. கடெ எப்பிடி எரிஞ்சிது, கடைக்கு யாராச்சும் தீ வெச்சாங்களான்னு ஒரு தகவலும் தெரியல.

            கடையும் போயி, கடையில இருந்த சரக்கும் போனதுல ரொம்பவே நொந்துப் போயிட்டாரு கைப்புள்ள. ஊருக்கே மாந்திரீகம் வைக்குற ஆளுக்கு இப்படிச் சம்பவமான்னு ஆளாளுக்கு இதெப் பத்தி பேச, கைப்புள்ளைக்குப் பத்திக்கிட்டு வந்துச்சு. அந்த வேகத்துல ஆத்திரம் அடங்காம தென்னை மரத்துல இவரே பச்சைப் பாளைய வெட்டியாந்து எரிஞ்சிக் கெடந்த கடைக்கு மின்னாடி நட்டு வெச்சாரு. இதென்னடா கடெ எரிஞ்சு கரிக்கட்டையா கெடக்குது, அதுக்கு மின்னாடி பச்செ பாளைய இப்பிடி நட்டு வைக்குறானே கைப்புள்ளன்னு ஊரே அதெ வித்தியாசமா பாத்தது. அதெ நட்டு வெச்சுப்புட்டு இந்தப் பாளை கருவுறதுக்குள்ள கடைக்குத் தீய வெச்சவம் குடும்பத்துல ஒத்த ஆம்பளெ இல்லாம எல்லா பயலும் செத்துப் போயிடுவாம்ன்னு வாக்கு வுட்டுப்புட்டு வந்துப்புட்டாரு கைப்புள்ள. இந்தச் சேதி அவரோட கடையில பத்திக்கிட்டு எரிஞ்ச தீயெ வுட வேகமா ஊரு ஒலகமே பரவிப் போயி ஓகையூர்ல எவ்வேம் மண்டெயப் போடப் போறாம்ன்னு சனங்க ஒவ்வொண்ணும் அதிர்ச்சியாவும் ஆவலாதியாவும் பாத்துக்கிட்டுக் கெடந்துச்சுங்க. கைப்புள்ள கடைக்குத் தீய வெச்சது யாருன்ன தெரியாத வகையில, கைப்புள்ள கடைக்குத் தீய வெச்சவேம் யாருன்னு தெரிஞ்சிக்க முடியாம வேற சனங்க மண்டையப் பிய்ச்சுக்கிட்டுக் கெடந்துச்சுங்க. அந்த வகையில ஓகையூர்ல மொதல்ல மண்டையப் போடுறவந்தாம் தீய வெச்சவன்னும் தெரிஞ்சிக்கிடலாம்ன்னு அப்பிடி ஒரு நெனைப்புலயும் சனங்க ஊர்ல ஒரு சாவ எதிர்பாத்துட்டுக் கெடந்துச்சுங்க.

            பச்சப் பாளைய நட்டு வெச்சு பத்து நாளு ஆன பெற்பாடும் ஊர்ல சாவு ஒண்ணும் வுழுவுல. பாளை கொஞ்சம் கொஞ்சமா வாடி கருக ஆரம்பிச்சிருந்துச்சு. முழுசா கருகி முடிக்கிறதுக்குள்ள ஊருல பொணம் வுழுவாம இருக்காதுன்னு கைப்புள்ள அடிச்சிச் சொல்லிக்கிட்டு இருந்தாரு. அவரு சொன்னபடியே இருவத்தஞ்சு நாளுக்குப் பெற்பாடு ஆராகுட்டி குடும்பத்துல அவரோட தம்பிக்காரரு சொராக்குட்டி மண்டெயப் போட்டாரு. ஊரு சனத்துக்கே ஆச்சரியம் தாங்க முடியல. தம்பிக்கார்ரேம் மண்டையப் போட்ட சேதி தெரிஞ்சி ஆராகுட்டி சாவு வுழுந்த வூட்டக்குப் போவாம நேரா வந்து கைப்புள்ளக் கால்ல வுழுந்தாரு.

            "யய்யோ யய்யய்யோ கைப்புள்ள! மன்னிச்சிப் போடு கைப்புள்ள! இப்பிடி ஆவும்ன்னு நாம்ம எதிர்பாக்கல. நாமளும் தம்பியுமா சேந்துதாம் நட்ட நடுராத்திரியல ஊரு சனங்க எல்லாம் தூங்குன நேரமா பாத்து கடைக்குக் கங்கு வெச்சிட்டு ஒண்ணும் தெரியாத ஆளுங்க மாதிரி வூட்டுலப் போயிப் படுத்துட்டேம்! யாரும் கண்டுபிடிக்க முடியாதுன்னுத்தாம் நெனைச்சேம். நீயி மாந்திரீகம் வேல தெரிஞ்ச ஆளுன்னு ஊர்ல டூப்பு வுட்டுப்புட்டு அலையுதேன்னு நெனைச்சிப்புட்டு அலட்சியமா இருந்துப்புட்டேம். கடைக்குப் போயி கங்கு வெச்ச எம்மட தம்பி சொராகுட்டி மண்டையப் போட்டுப்புட்டாம். பின்னாடியே போயி கங்க கையில வெச்சி அவ்வேங்கிட்டெ கொடுத்த நாம்ம என்னிக்கு மண்டெயப் போடப் போறேம்ன்னு தெரியலயே! எம்மட குடும்பத்துலயும் செரி, அவ்வேங் குடும்பத்துலயும் செரி அஞ்சு ஆம்பளை புள்ளீயோ வேற கெடக்குது. தப்புப் பண்ணியாச்சு கைப்புள்ள. தயவு பண்ணி பண்ண மாந்திரீகத்தெ எடுத்துப்புடு!"ன்னு கால்ல வுழுந்து கெஞ்சிக் கதற ஆரம்பிச்சட்டாரு ஆராகுட்டி.

            கைப்புள்ள அதுக்கு, "தெனை வெதைச்சவம் தெனைய அறுப்பாம். வெனை வெதைச்சவேம் வெனைய அறுப்பாம். நாம்ம ஒண்ணும் பண்ணுறதுக்கில்லே!"ன்னு சொல்லிப்புட்டாரு. சொராக்குட்டி பொணத்த எடுத்துப் போட்டப்புட்டு, ஆராக்குட்டி அன்னிக்கு ராத்திரியே ஊரு பஞ்சாயத்தக் கூப்புட்டுப்புட்டாரு. பொதுவா ஊரு பஞ்சாயத்தக் கடெ எரிஞ்சிப் போயிப் பாதிக்கப்பட்ட கைப்புள்ள கூட்டுறதுதாம் மொறை. அது அப்பிடியே தலைகீழா நடந்துச்சு. கடைக்குத் தீய வெச்ச ஆராக்குட்டி கூட்டியிருந்தாரு. பஞ்சாயத்தாருக்கே இத்து வியப்பான சம்பவந்தாம். அதுல பஞ்சாயத்து எப்பிடிப் போச்சுன்னா, "கடெக்கு வெச்ச கங்குக்கு உண்டான எழப்புக்குக் காசிய ரண்டு பங்காம நாம்ம கொடுத்துப்புடுறேம். எரிஞ்சிப் போன கடைக்கு மின்னாடி நட்டு வெச்சிருக்குற பச்சப் பாளைய கைப்புள்ள ஒடனே புடுங்கியாவணும்!"ன்னு ஞாயத்தெ வெச்சாரு ஆராக்குட்டி.

            கடைய தீய வெச்சு எரிச்சவனே தாம்தாம் எரிச்சேன்னு ஒத்துக்கிட்டு, பஞ்சாயத்தக் கூட்டிக்கிட்டு, அதுக்குத் தீர்ப்பயும் அவனே கூறிக்கிட்டு நடந்த பஞ்சாயத்துன்னா ஒலகப் பஞ்சாயத்து வரலாற்றுலயே அதுதாம் மொத மொறையா இருந்திருக்கும். பஞ்சாயத்தாருங்கப் பாத்தாங்க, செரித்தாம்ன்னு கைப்புள்ளயக் கூப்புட்டு சமாதானத்தப் பண்ணி வுட்டு, புதுசா மளிகெ கடெ கட்டித் தர்றதோட, தீயில போன சரக்கு அத்தனையும் வாங்கி வைக்கிறதோட, இழப்புக்கு உண்டான ரூவாயா ரண்டு பங்கா வசூலிச்சுத் தர்றதா சொன்னாங்க. செரித்தாம்ன்னு அதுக்கு ஒத்துக்கிட்டு எரிஞ்ச கடைக்கு மின்னாடி நட்டு வெச்சிருந்து பாதி வாடிப் போயிக் கருகிப் போயிருந்த பாளையப் புடுங்கி அந்தாண்ட தூக்கிப் போட்டுட்டாரு கைப்புள்ள.

            கைப்புள்ளயோட நேரமோ என்னவோ அவரு நட்டு வெச்சப் பாளையப் புடுங்கி, மாந்தீரிகத்தெ எடுத்து விட்டுப்புட்டதா சொன்ன பெறவும் ஒரு வாரத்துல ஆராக்குட்டி ரத்தம் கக்கிச் செத்துப் போனாரு. அதுக்கு அடுத்து பத்து நாள்ல ஆராக்குட்டியோட மூத்த மவ்வேம் வயக்காட்டுல பாம்பு கடிச்சி வாயில்ல நொரை தள்ளிச் செத்துப் போனாம். ஒரு மாச காலத்துக்குள்ள மூணு சாவப் பாத்ததுல ஓகையூரு கிராமமே மெரண்டுப் போயிக் கெடந்துச்சு. மூலங்கட்டளெ கம்பு வாத்தியாரு வரைக்கும் போயி மறுஞாயம் பேசுறாப்புல ஆயிடுச்சு. பஞ்சாயத்துப் பேசி முடிச்ச பெறவும் கைப்புள்ள எப்பிடி மாந்திரீகத்தெ எடுக்காம வுட்டாருன்னு அவரு மேல குத்தமாயிப் போச்சுது. கைப்புள்ள எவ்வளோ மன்றாடிச் சொல்லிப் பாத்தாரு.

            "அய்யா! பஞ்சாத்தார்களே! எம்மட அப்பங்கார்ரேம் அளவுக்குல்லாம் நமக்கு மாந்திரீகம் தெரியாதுங்க. அவரு அளவுக்கு நமக்குச் சக்தியும் கெடையாதுங்க. ஏத்தோ அவரு பண்ணதப் பாத்து அதெ மாதிரிக்கி சோடிச்சு வுட்டேம். அத்தோட மந்திரம் கூட நமக்குத் தெரியாது. அவருகிட்டெ நாம்ம அதெ கத்துக்கிடவும் இல்ல. கடெ எரிஞ்சிப் போச்சுங்ற வேதயைில பச்சப் பாளைய கொண்டுப் போயி நட்டு வெச்சேம். அத்து இப்பிடி மூணு உசுர்ர காவு வாங்கும்ன்னு நமக்குத் தெரியாமப் போச்சுது. சத்தியமா சொல்றேம் பச்சப் பாளைய வெட்டி வெச்சா அத்து இப்பிடி உசுரு காவு வாங்கும்ங்றது நமக்குத் தெரியாது. ஒரு ஆத்திரத்துலயும் ஆத்தாமையிலயும் பண்ணுதெ பஞ்சாயத்தாருங்க மன்னிக்கணும்!"ன்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு கைப்புள்ள. நடந்து முடிச்ச சாவுலேந்த தப்பிக்கத்தாம் கைப்புள்ள இப்பிடிச் சொல்லுறதா நெனைச்ச பஞ்சாயத்தாருங்க அதெ ஒத்துக்கிடல. கடைக்குத் தீய வெச்சு இழப்பாவுறதும், குடும்பத்துல உசுரு பலியாயி இழப்பாவுறதும் ஒண்ணு கெடையாதுன்னு சொல்லி, மேக்கொண்டு ஆராக்குட்டிக் குடும்பத்துல சாவு எது நடந்தாலும் அதுக்கு கைப்புள்ளத்தாம் பொறுப்புன்னும், அப்பிடி நடந்துச்சுன்னா கைப்புள்ள மளிகெ கடையில யாரும் சாமாஞ் செட்டுக வாங்கக் கூடாதுன்னும் ஞாயம் பண்ணிப்புட்டாங்க.

            பஞ்சாயத்தாருங்க நெனைச்சது இந்த ஞாயத்துக்குப் பயந்து கைப்புள்ள மாந்திரீகம் வெச்சிருந்தாலும் அதெ எடுத்துப்புடுவார்ன்னுத்தாம். அவருக்கு அந்த அளவுக்கு மாந்திரீகம் தெரியாதுங்றதெ அவுங்களும் புரிஞ்சிக்கிடல. சாவு பயம் எல்லாரோட மனசுலயும் அப்பிக் கெடந்ததால கைப்புள்ள உண்மெயெ சொன்னாலும் அத்து எடுபடல. சில நேர காலம் பாத்தீங்கன்னா மனுஷனுக்கு ரொம்ப வித்தியாசமா அமைஞ்சிப் போயிடுறது உண்டு. கைப்புள்ளயோட கெட்டகாலமோ என்னவோ சொராக்குட்டிக் குடும்பத்துல ரண்டாவது ஆம்பளெ புள்ள அந்த வருஷம் வெள்ளையாத்துல தண்ணி வந்தப்போ பாலத்துலேந்து சொருவு குத்தலு வுடுறேம்ன்னு நீச்சல் அடிச்சி வெளையாண்டதுல சொழல்ல சிக்கி பொணமா மெதந்துப் போயி ஊட்டியாணியில கரை ஒதுங்குனாம். கைப்புள்ளைக்கு ஆரம்பிச்சிது அடுத்த சனிங்றாப்புல அவரோட மளிகெ கடையில யாரும் சாமாஞ்செட்டுக வாங்குறதெ நிப்பாட்டிப்புட்டாங்க. மூலங்கட்டளெ கம்பு வாத்தியார்ரப் பாத்து, கொத்தூரு சங்குசுப்பிரமணியத்தயும் பிடிச்சிக் கேரளாவுலேந்து ஒரு மாந்திரீகனெ கொண்டாந்து கைப்புள்ள வெச்சதா நம்பிக்கிட்டு இருந்த மாந்திரீகத்தெ எடுத்ததா நெனைச்சிக்கிட்டாங்க ஓகையூர்ல பஞ்சாயத்தாருங்க. அந்த மாந்திரீகனெ அழைச்சிட்டு வர்றதுக்கான காசி, மாந்திரீகத்தெ எடுக்குறதுக்கான காசின்னு பெருங்காசிய கைப்புள்ளெகிட்டெயிருந்து வசூலும் பண்ணிப்புட்டாங்க. அதுல மாந்திரீகம்ன்னா மனசு வெறுத்துப் போனவருதாம் கைப்புள்ள.

            இந்தச் சம்பவத்துக்குப் பெறவு பல ஊர்கள்லேந்து தெரண்டு வந்து அவரு கால்ல கட்டுக் கட்டா காசிய வெச்சி மாந்திரீகம் பண்ணி வுடுங்கன்னு ஆளுங்க தவமிருக்க ஆரம்பிச்சாங்க. கைப்புள்ள மொதல்ல பணங்காசிய எடுத்துட்டு அந்தாண்டப் போங்கடான்னு ருத்ர தாண்டவம் ஆடுனாரு. அதுல அவனவனும் தல தெறிக்க வூட்ட வுட்டு ஓடுனாம். அவருகிட்டெ இப்பிடி ஆளுங்க நெதமும் வந்து கெஞ்சுன்னா, அவரு கிராமத்து சனங்க ஒவ்வொருத்தரா போயி தன்னோட கடையில சாமாஞ் செட்டுகள வாங்குங்கன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. சனங்களோ மாந்திரீகம் வைக்குற ஆளு கடையில சாமாஞ் செட்ட வாங்கி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா அதுக்குக் கேரளாப் போயி மாந்திரீகனெ கூப்புட்டு வர்ற அளவுக்கு நமக்குத் தெம்பும் இல்ல, நம்மடகிட்ட அம்மாம் காசியும் இல்லன்னு ஒதுங்க ஆரம்பிச்சிட்டுங்க. வாங்கி வெச்சிருந்த கடைச்சரக்குகள அப்பிடியே வீட்டு மளிகைக்குக் கொண்டாந்துப் போட்டுப்புட்டு கடைய இழுத்து மூடுனாரு கைப்புள்ள. அவருக்கு தெரியாத மாந்திரீகத்துக்கு அன்னிலேந்து முழுக்குப் போடுறதாவும் ஊருக்கு மின்னாடி முச்சந்தியில நின்னு தரையில கையல அடிச்சிச் சத்தியம் பண்ணி வாக்குக் கொடுத்தாரு.

            அன்னிக்குப் பெறவு அதுலேந்து வெவசாயம்ன்னு எறங்க ஆரம்பிச்சவருதாம். வெவசாயத்துல என்னத்தெ வருமானம் இருக்குதுன்னு அத்தோட கோயிலுக்குப் பூசை வைக்குறதுன்னு போவ ஆரம்பிச்சாரு. அத்தோட அவரோட வகையறாவுல கலியாணங் காட்சின்னா கலியாணத்த நடத்திக் கொடுக்குற வாத்தியார்ராவும் ஆயிட்டாரு. மளிகெ கடெ இருந்தப்போ இருந்த சம்பாத்தியம் இல்லன்னாலும், அமாவாச நாள்ல கெளம்பி ரண்டு மூணு ஆளெ தொணைக்கு வெச்சிக்கிட்டு ராமேஸ்வரத்துக்குப் போனார்ன்னா அங்க தர்ப்பணம் பண்ண வர்ற ஆளுங்களுக்கு ஆச்சாரமா பூசையப் பண்ணிக் கொடுத்தார்ன்னா ரண்டு மூணு மாசத்துக்குத் தேவையான மளிகெ சாமாஞ் செட்டுகளோட பணங்காசியையும் சம்பாதிச்சிட்டு வந்துப்புடுவாரு. அதால விசேஷ நாள்லத்தாம் அவர்ரப் பிடிக்க முடியாது. மித்த நாள்கள்ல ஆளு ஹாயா வூட்டுலத்தாம் கெடப்பாரு. அப்பிடியே வயக்காட்ட சுத்திச் சுத்தி வந்துகிட்டு இருப்பாரு. இப்பிடி பல ஊருக்குப் போயி பல ஊரு தண்ணியக் குடிச்ச ஆளுங்றதால அவருக்கு ஒரு மதிப்பு உண்டாயி ஒறவு மொறையில உண்டாவுற சண்டெயத் தீத்து வைக்குற பஞ்சாயத்து வேலையையும் அவரு அப்பப்போ பண்ணுவாரு. அதுக்கும் ஆளுங்க அவர்ர வந்து வண்டியில வெச்சிக் கொண்டுப்புட்டு போவும். இப்படித்தாம் அவரோட பொழைப்பு இப்போ ஓடிட்டு இருந்துச்சு.

            ஆளு பேச்சுல பிடிச்சார்ன்னா எதுர்ல யாரும் ஞாயம் வெச்சிப் பேச முடியாத அளவுக்குப் பேச்சுத் தெறமையையும் வளத்திருந்தாரு. முன் மண்டையில முடியைய செரைச்சிக்கிட்டு, பின்னாடி குடுமியை வெச்சிக்கிட்டு ஆளும் பாக்குறதுக்கு ஐயருமாருக மாதிரியே இருந்ததுல வூடு குடி போறதுலேந்து, கோயிலு கும்பாபிஷேகம் வரைக்கும் அவர்ர கொண்டுட்டுப் போறதுல அவருக்கு மவுசு கூடியிருந்துச்சு. பழக்க வழக்கமும் எக்கசக்கமாயி பல எடங்கள்ல தொடர்பையும் வெச்சிருந்தாரு. யாரு எந்தப் பிரச்சனைன்னு போனாலும் அவுங்களுக்குத் தக்காப்புல ஆளுகள கோத்து வுடுறதுலயும் அவரு கில்லாடியாயிருந்தாரு. அவர்ரப் பாத்துதாங் வந்திருக்கிற வக்கீல் நோட்டிசுக்கு ஏத்தாப்புல அடுத்த கட்டமா செய்ய வேண்டியதெ முடிவு பண்ணி செய்யணும்ன்னுச் சுப்பு வாத்தியாரு மவனெ அழைச்சிக்கிட்டு பாக்கறதுக்குக் கெளம்புனாரு.

*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...