வக்கீல் நோட்டீஸ்
செய்யு - 623
கொஞ்ச நஞ்சம் இருக்குற நம்பிக்கைகளும்
உதிர்ந்துப் போனாப்புல காணப்பட்டாரு சுப்பு வாத்தியாரு. மவளோட மனசு ஊசலாட்டமா இருக்குங்றதெ
அவரு புரிஞ்சிகிட்டாரு. தொடந்தாப்புல மவளோட எதிர்காலத்தப் பத்தி ஒரு முடிவுக்கு வர்ற
முடியாத தடுமாற்றம் இப்போ அவரோட மனச ஆட்கொள்ள ஆரம்பிச்சது. பாலாமணியால தொந்தரவுன்னு
கங்காணாத எடத்துக்குப் போயி ஒளிஞ்சாலும் கங்காணாத எடத்துலயும் கங்காணாத பெரச்சனெ எப்பிடியோ
வந்துடுதேன்னு கலக்கமாக இருந்தாரு சுப்பு வாத்தியாரு. ஒண்ணு பாலாமணி சம்பந்தமா பெரச்சனெ
வருது, இல்லாட்டி சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பெரச்சனெ வருதேன்னு யோசிச்சாரு. எங்க
எந்தப் பெரச்சனெ இருந்தாலும் சொந்த எடத்துல இருந்து சமாளிக்கிறதுதாம் நல்லதுன்னு நெனைச்சாரு.
ஆன்னா அவரு அப்பிடி நெனைக்குறாப்புல யிப்போ சொந்த எடத்துல சமாளிக்குறாப்புல அடுத்த
பெரச்சனெயும் ஒடனே வந்துடும்ன்னு நெனைச்சிருக்க மாட்டாரு.
அப்படி ஒரு பெரச்சனெ ரெண்டாயிரத்து பதினாறாவது
வருஷம் ஏப்ரல் மாசத்து நடுவுல செய்யு பேருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வடிவத்துல வந்துச்சு.
பாலாமணிதாம் வக்கீல வெச்சி அனுப்பியிருந்தாம். இதெ சுப்பு வாத்தியாரு அந்த நேரத்துல
எதிர்பாக்கல. அதுவும் அந்த வக்கீல் நோட்டீஸ்ல இருந்த வாசங்கள் அவரோட மனசெ ரொம்ப
காயப்படுத்துறாப்புல இருந்துச்சு. அந்த வக்கீல் நோட்டீஸ் இப்படி இருந்துச்சு.
அனுப்புநர்
:
சி. சாமித்துரை எம்.எஸ்ஸி., பி.எல்.,
வழக்கறிஞர்,
பாக்குக்கோட்டை நீதிமன்ற வளாகம்,
வழக்கறிஞர் சங்கம்,
பாக்குக்கோட்டை.
பெறுநர்
:
சு. செய்யு,
த / பெ, சா. சுப்பு வாத்தியார்,
திட்டை, வடவாதி (அஞ்சல்),
திருவாரூர் மாவட்டம்.
அறிவிப்பு
தஞ்சை மாவட்டம், பாக்குக்கோட்டை, சாமிப்பாளையம்,
கதவு எண் - 999 இல் வசித்து வரும் ஜோதிட சிகாமணி சிவஸ்ரீ ராசாமணியனார் குமாரரும் அரசாங்கத்து
ஆயுர்வேத மருத்துவருமான பாலாமணியனார் அவர்களிடமிருந்து தகவல் பெற்று தங்களுக்கு கொடுக்கும்
அறிவிப்பாவது,
எனது கட்சிக்காரர் பாலாமணியனார் கடந்த
2014 வருஷத்து நவம்பர் மாதத்து 11 வது நாளது தங்களை பாக்குக்கோட்டை, மாடடிக்குமுளையில்
இருக்கும் வைரம் திருமண மஹாலில் வைத்து பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் இந்து மத
தர்மப்படி சகதர்ம பத்தினியாகக் கல்யாணம் செய்துள்ளார். கல்யாணம் செய்து குடும்ப வாழ்வில்
அன்போடும், பண்போடும் தங்களிடம் நடந்து கொண்டுள்ளார். ஆனால் தாங்களோ தங்களின் பெற்றோர்
மற்றும் உற்றோரின் விஷமத்தனமான பேச்சுக்குச் செவி கொடுத்து குடும்ப வாழ்வில் பிணக்கும்
சச்சரவும் சண்டைகளும் செய்துள்ளீர்கள். பலமுறை எனது கட்சிக்காரரைத் திட்டுவதும், அவமதிப்பதும்,
அடிப்பதுமான அநாகரிமான காரியங்களில் ஈடுபட்டுள்ளீர்கள். தாங்கள் எவ்வளவோ கொடுமைகள்
செய்து எனது கட்சிக்காரரை மனம் நோகச் செய்த போதும், இந்து மதத் தர்மப்படி தங்களைச்
சகதர்மபத்தினியாய் ஏற்றுக் கொண்டு விட்ட காரணத்தினால் தங்கள் மேல் அக்கறையோடும் தாங்கள்
செய்த அடாவடிகள் மற்றும் கொடுமைகளைப் பொருட்படுத்தாது பொறுமையோடும் எனது கட்சிக்காரர்
குடித்தனத்தை நடத்தி வந்துள்ளார். இருந்தபோதிலும் தாங்கள் திருந்தவில்லை. தவறுகளுக்காக
மனம் வருந்தவில்லை. அடவடித்தனத்தின் உச்சமாக உறவின்முறை ஆடவர்களை வீட்டுக்கு வரவழைத்து
சல்லாபம் செய்துள்ளீர்கள். இதுகுறித்தும் ஆத்திரப்படாமல் எனது கட்சிக்காரர் தங்களுக்கு
பொறுமையோடும் அமைதியோடும் தகுந்த புத்திமதிகளைக் கூறியுள்ளார். எனது கட்சிக்காரர்
எவ்வளவோ நல்லவிதமான புத்திமதிகள் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் தாங்கள் வைத்ததே
சட்டம் என்பது போல தவறான முன்னுதாரணத்தைச் சமூகத்துக்கு வழங்கும் குடும்ப வாழ்வைத்
தொடர்ந்துள்ளீர்கள். இது குறித்த எனது கட்சிக்காரரின் தந்தையார், தாயார் மற்றும் தங்கைமார்கள்
தங்களுக்கு அறிவுரை கூறித் திருத்த முயலும் வகையில் சுட்டிக் காட்டிய போது, அவர்களைத்
தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களை அடித்துத் துன்புறுத்தும் நோக்கோடு தாக்குதலிலும்
ஈடுபட்டு அவர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். தாங்கள் எத்தகைய அராஜகங்களைச்
செய்த போதிலும் தங்கள் குடும்பத்தின் மருமகளாக நீங்கள் இருப்பதால் அனைத்தையும் பொறுத்துக்
கொண்டு எனது கட்சிக்காரரின் குடும்பத்தினரும், உறவுனர்களும் இருந்துள்ளார்கள். அவர்கள்
அப்பிடி அடங்கிப் போவதைத் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகவும், வரப்பிரசாதமாகவும்
நினைத்துக் கொண்டு மேலும் மேலும் அராஜகத்தின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு எனது
கட்சிக்காரரையும், எனது கட்சிக்காரரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் கொடுமைப்படுத்தி
அதில் இன்பம் காணும் மனநிலையில் இருந்துள்ளீர்கள். இந்தக் கொடுமைகளுக்கு மேல் கொடுமையாக
திருமண நிச்சயத்தின் போது போட்ட ஏழரை சவரன் தங்கச் சங்கிலி, ஒன்றரை சவரன் தோடு,
ஒரு சவரன் மோதிரம் ஆகியவற்றோடு திருமணத்துக்காக எனது கட்சிக்காரர் தங்களுக்குப் போட்ட
சுமார் நூறு சவரன் நகை, வீட்டில் இருந்த ரொக்கம் பத்து லட்சம் பணம் ஆகியவற்றோடு பீரோலில்
இருந்த விலைமதிப்பு மிக்க பட்டுபுடவைகளையும் தங்களின் தகப்பனார் மற்றும் தமையனார் துணையோடு
யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு, எனது கட்சிக்காரருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ
எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோவித்துக் கொண்டு செல்வதைப் போல ஒரு நாடகத்தை நடத்திக்
கொண்டு தங்களின் தகப்பனார் வீட்டுக்குச் சென்றுள்ளீர்கள். குற்ற நடவடிக்கையைத் தங்கள்
மீது எடுக்கும் அளவிற்கான ஒரு காரியத்தைத் தாங்கள் செய்த போதும் தான் தாலி கட்டிய
இந்து மதத்துச் சகதர்ம பத்தினி என்பதால் எனது கட்சிக்காரர் தங்களைப் பற்றியோ, தங்களது
குடும்பத்தினர் பற்றியோ காவல் நிலையத்தில் எவ்வித புகாரும் செய்யாது பொறுமை காத்துள்ளார்.
கொடுமைக்காரி ஆனாலும் வீட்டுக்காரி, களவுக்காரி ஆனாலும் குடும்ப ஸ்திரி என்று நினைத்த
எனது கட்சிக்காரர் தங்களோடு சேர்ந்து வாழ நேரிலும், உறவினர்கள் மூலமாகவும், நண்பர்கள்
மூலமாகவும் பலகட்டமாக தங்களோடு சமாதானப் பேச்சுகளைத் தொடர்ந்து நடத்தி தங்களைக் குடித்தனம்
செய்ய அழைத்துள்ளார். தாங்கள் அது எதையும் பொருட்படுத்தாமல் சமாதானம் செய்ய முயன்ற
ஒவ்வொரு முறையும் எனது கட்சிக்காரரையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும்
நண்பர்களை அவமானப்படுத்துவதை மட்டும் குறியாகக் கொண்டு அநாகரிகமான முறையில் நடந்துள்ளீர்கள்.
எனது கட்சிக்காரரின் சாத்வீதமான மேன்மையான சமாதான முறைகள் எதையும் பொருட்படுத்தாத
தாங்கள் அவரை மென்மேலும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தங்கள் கிராமப் பஞ்சாயத்தார்களை
வளைத்தும் கையில் போட்டுக் கொண்டும் தங்கள் கிராமத்தில் பஞ்சாயத்து வைத்து எனது கட்சிக்காரரையும்
அவரு குடும்பத்தினர் மற்றும் உறவினர் நண்பர்களைத் தகாத வார்த்கைளால் பேசவும், அடிக்கவும்
முயன்றுள்ளீர்கள். இதற்கென ஆட்களைப் பணம் கொடுத்தும் மது மற்றும் போதைப் பொருட்களை
வழங்கியும் ஏற்பாடு செய்து மிரட்டியும், கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியும் உள்ளீர்கள்.
அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து தங்களோட இந்து மதத் தர்மத்தோடு குடும்பம்
நடத்த முயன்ற போது, தாங்கள் கோவில்பெருமாளில் உள்ள தங்களது மாமன் மகனோடு எவ்வித
முறையான விவாகரத்தும் பெறாமல் இந்துமதக் குடும்பச் சட்டங்களை மீறும் வகையில் குடித்தனம்
நடத்தி கும்மாளம் அடித்துள்ளீர்கள். எவ்வளவோ கொடுமைகள் செய்தும் அடாவடியில் இறங்கியும்
இந்து மதத் தர்மத்தை மீறியும் நடந்த தங்களோடு மறுபடியும் சமாதானமாகவும் இணக்கமாவும்
குடும்பம் நடத்த எனது கட்சிக்காரர் தயாராகவே உள்ளார் என்பதால் இந்த அறிவிப்பு கண்ட
பதினைந்து நாட்களுள் எனது கட்சிக்காரரிடமிருந்து எடுத்துச் சென்ற நூற்றுப் பத்து சவரன்
தங்க நகைகள், பத்து லட்சம் ரொக்கம், விலையுயர்ந்த பட்டுப்புடவைகளோடு வழக்கறிஞராகிய
என்னிடமோ அல்லது அவரது குடும்பத்தாரிடமோ உரிய மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து குடித்தனம்
நடத்த சேர்ந்து வாழ வருவதோ அல்லது இவ்வறிப்புக்கு உரிய பதிலறிப்பு அளிக்க வேண்டியதோ
செய்யாது போனால் தங்கள் மேல் பாக்குக்கோட்டை காவல்நிலைய வரம்பில் வரும் காவல் நிலையத்தில்
குற்ற வழக்குப் பதிவு செய்வதோடு, அது தொடர்பாகப் பாக்குக்கோட்டை நீதிமன்றத்தை நாடி
உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கலாகிறது.
சி.
சாமித்துரை எம்.எஸ்ஸி., பி.எல்,
இடம்
: பாக்குக்கோட்டை வழக்கறிஞர்
தேதி
: 15 / 04 / 2016 சீனியர்
அட்வகேட்,
பாக்குக்கோட்டை
நீதிமன்ற வளாகம்.
இந்த வக்கீல் நோட்டீஸைப் படித்ததும் சுப்பு
வாத்தியாருக்கு வயிறெல்லாம் குமட்டிக்கிட்டு வர்றாப்புல ஆயிடுச்சு. பண்ணுற தப்பையெல்லாம்
அவனுவோ பண்ணிப்புட்டு அதெ அப்பிடியே நம்ம மேல பண்ணுனதா திருப்பிப் போட்டுப்புட்டானுவோளேன்னு
என்னவோ இப்பத்தாம் புதுசா கப்பல் கவுந்தாப்புல தலையில கைய வெச்சிக்கிட்டு உக்காந்துட்டாரு.
சாயுங்காலம் மவ்வேம் பள்ளியோடம் விட்டு வந்தப்போ அதெ சுரத்தே யில்லாம எடுத்துக் காட்டுனாரு.
அந்த நோட்டீஸ செய்யு ஆயிரம் மொறைக்கு மேல படிச்சிப் பாத்திருப்பா போலருக்கு. அதுல
இருந்த அத்தனெ வாசகங்களும் அவளுக்கு மனப்பாடம் ஆயிருந்திருந்துச்சு. அதுல உள்ள ஒவ்வொரு
வாசகத்தையும் சொல்லி "அப்பிடியான்னே நாம்மா?"ன்னு திரும்ப திரும்ப விகடுவெ
கேட்டுக்கிட்டுக் கெடந்தா. அதெ கேட்ட சுப்பு வாத்தியாருக்குக் கோவம் வந்திடுச்சு.
"அதாங் மிங்கூட்டியே எத்தனெ மொறை
நாம்ம சொன்னேம்? அந்தப் பயெ கூடயோ, அவ்வேம் குடும்பத்துக் கூடயோ போன் வந்தா எடுக்காதேன்னு?
எடுத்துப் பேசிப்புட்டு, அந்தப் பயலையும் அஞ்ஞ வரவழைச்சிப்புட்டு யிப்போ நாம்ம அப்பிடியா
நாம்மன்னா? கோவில்பெருமாள் கதெயும் சேத்து எப்பிடி கோர்த்து எழுதிருக்காம் பாரு!
இதுல வேற அவனெ அன்னிக்கு அடிச்சி ஒதைச்சிப்புடலாம்ன்னு போன நம்மள வேற தடுத்து... ன்னா
வேல பண்ணுனே நீயி? அப்பிடி அடிச்சிருந்தாலும் இன்னிக்கு வந்திருக்குற நோட்டீஸ்ல அத்து
ஒண்ணுனாச்சும் உண்மென்னு நெனைச்சி ஆறுதல் பட்டிருக்கலாம். செரித்தாம் பொண்ணோட வாழ்க்கையச்
சீரழிச்சவனெ நாலு அடியாவது போட்டேம்ன்னு மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாச்சும் இருந்திருக்கும்.
எல்லாத்தையும் கோட்டெ வுட்டுப்புட்டு நீயி பண்ணி வெச்சக் காரியம் இருக்கே? இதுல வேற
அவ்வேம் ஆயாளுக்கு நீயி சோத்த சமைச்சிப் போட்டு, வழி தெரியாத பப்பான்னு கொண்டுப்
போயி கும்பகோணத்துப் பஸ்ல ஏத்தி வுட்டு பாக்குக்கோட்டை வரைக்கும் போவ நின்னிருக்கே?
இப்போ தெரியுதா அந்தப் பயலுவோ எதுக்கும் அஞ்சாத கொலைபாதகப் பயலுவோன்னு?"ன்னு
சத்தம் போட்டாரு சுப்பு வாத்தியாரு.
"நமக்கு ன்னாப்பா தெரியும் அவனுவோ
இந்த அளவுக்கு எறங்குவானுவோன்னு?"ன்னா செய்யு பரிதாபமா.
"ஒமக்குத் தெரியாதுதாம்! ல்லேன்னு
சொல்லல. பெரியவங்க அனுபவப்பட்டவங்க சொல்றப்ப அதாச்சும் கேக்கணுமில்ல. அதையும் கேக்கல.
சொந்தப் புத்தியாச்சும் சுய புத்தியாச்சும் இருக்கணும். அதுவும் இல்ல. மனசு போன போக்குல
எதாச்சும் பண்ணிட்டு இருந்தா இப்பிடித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விரக்தியா.
"யப்பா! யிப்போ நமக்குள்ள சண்டெ
வெச்சிக்கிட்டு நமக்கு நாமே வக்கீலு நோட்டீஸ அனுப்பிக்கிடுறதா? எதிரி வெளியில இருக்காம்!
வூட்டுல நமக்கு நாமே எதிரியப் போல நடந்துக்கிட்டா, அந்தப் பயலுவோளுக்கு குஷியால்ல
போயிடும்! ஆனது ஆச்சு, நடந்தது நடந்துச்சு. மேக்கொண்டு இதுக்கு என்னத்தெ பண்டுறதுன்னுத்தாம்
பாக்கணும்! அவ்வேம் வேற பாஞ்சு நாளுக்குள்ள முடிவு தெரியாட்டியும் கிரிமினல் நடவடிக்கை
எடுப்பேம்ன்னு மெரட்டிருக்காம். போறப் போக்கப் பாத்தா சிவில் கேஸ்ஸ கிரிமினல் கேஸ்ஸா
கொண்டுப் போயி கொல பண்ணதுக்கு முயற்சிப் பண்ணதெப் போல ஆதாரத்து உருவாக்கித் தாக்கல்
பண்ணிப்புடுவானுவோ போலருக்கே?"ன்னாம் விகடு.
"செஞ்சாலும் செய்வானுவோ அந்தப்படுபாவிப்
பயலுவோ! இதுக்கு வக்கீல கலந்துகிட்டாத்தாம் ஞாயம் பொறக்கும்! என்னிக்குப் பஞ்சாயத்து
வெச்சானோ அன்னிக்கும் ஒட்டும் இல்ல, ஒறவும் இல்லன்னு ஆயிடுச்சு. இன்னிக்கு வக்கீல்
நோட்டீசு அனுப்புன பெறவு எதிரின்னு பேசுறதுக்குக் கூட ஒண்ணுமில்ல, எதா இருந்தாலும்
கோர்ட்ல வெச்சித்தாம் பேசணும்ன்னு ஆயிடுச்சு. இதுக்கு மேல நாம்ம ச்சும்மா இருந்தோம்ன்னா
நம்ம தலெ மேல கத்தியத் தொங்க வுட்டுப்புடுவானுவோட யம்பீ! கலியாணம் பண்ணி வைக்குறதா
இருந்தக் காசியெல்லாம் போயி, கடனெ வேற வாங்கி கடங்காரனாப் போயி, யிப்போ வக்கீலு,
கோர்ட்டுன்னு காசியக் கொடுக்குறதுன்னா எங்கடா போறதுடாம்பீ? ஒரு தவா வக்கீலப் பாக்குறதுன்னாலும்
ஆயிரம், ஐநூறுன்னு இல்லாம எப்பிடாம்பீப் போறது? இருக்கற நெலையில இதெ எப்பிடிச் சமாளிக்குறதுன்னுத்தாம்
புரியாம தவிக்குறேம்டாம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெ யோசிக்க யிப்போ நேரமில்லப்பா!
தலைக்கு மேல வெள்ளம் போறப்போ சாண் ஏறுறதையோ, மொழம் ஏறுறதையோ பாக்க முடியாது. ஆவ வேண்டியதெ
பாத்தாவணும்! இதுலேந்து எப்படியாச்சும் தப்பியாவணும்!"ன்னாம் விகடு.
"நாம்ம முந்தியிருந்துக்கணும். அவனுவோ
இப்பிடி நோட்டீஸ் அனுப்பி முந்திக்கிட்டானுவோடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இதுவும் நல்லதுதாம்ப்பா! நாம்ம மொதல்ல
பஞ்சாயத்துலப் போயி நிக்கல. நாம்ம மொதல்ல மொகத்த முறிச்சி வுடல! நாம்ம மொதல்ல வக்கீலு
நோட்டீஸ அனுப்பி வுடல! தங்காச்சி தூக்குல தொங்கிக் காப்பாத்துன பெறவும் சேந்து வாழட்டணும்ன்னு
சவுங்கத் தனமா அவ்வேம் மின்னாடிப் போயிக் கால்ல வுழுவாத கொறையாச் சொல்லிட்டு வந்தேம்.
சொன்னபடி ஒரு வாய்ப்பக் கொடுக்குறாப்புல வாழத்தாம் வெச்சேம்! அவ்வேம் அப்பவே முடிவெ
பண்ணிட்டாம்ப்பா! ஒண்ணு தங்காச்சி பிரிஞ்சிப் போவணும். போவாட்டி வெச்சி என்னத்தெ
பண்ணணுமோ அதெ பண்ணிப்புடணும்ன்னு!"ன்னாம் விகடு.
"நமக்கு எந்த வக்கீலத் தெரியும்?
எந்தக் கோர்ட்ட தெரியும்? கோர்ட்டு வாசல்ல காலு வைக்கக் கூடாதுன்னு நெனைக்கிற ஆளு
நாம்ம. நமக்கொரு கேடு காலம் இப்பிடி வாரணுமா? போலீஸ் ஸ்டேசன்னு, கோர்ட்டுன்னுப்
போயி நிக்கோ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தொவண்டுப் போயி!
இப்பிடித்தாம் வக்கீல் நோட்டீஸ்ங்றது
மனுஷன மனசளவுல பாதிக் கொன்னுப்புடும். மீதி உசுர மனசளவுல கோர்ட்டுலப் போயி நிக்குறப்ப
கொன்னுப்புடும். அந்த வெதத்துல இந்த மாதிரியான குடும்ப விசயங்கள்ல கோர்ட்டுப் படியேறி
ஜெயிச்சாலும் தோத்தது மாதிரித்தாம். தோத்தா உசுரோட இருக்குறப்பவே மனுஷன் நடைபிணம்
ஆனது மாதிரித்தாம்.
*****
No comments:
Post a Comment