11 Nov 2020

புதிய தலைமுறை

புதிய தலைமுறை

            ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநாள் என்று ரொம்ப காலம் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த ஞாயிற்றுக் கிழமையில்தான் கறிகடை பாய் அதிகமாக உழைக்கிறார். பாய் கடையிலிருந்து வாங்கி வந்த கறிக்காக வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலறையில் அதிகமாகப் பாடுபடுகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை போனால்தான் வீட்டில் இருக்கும் எல்லாரையும் பார்த்து ஏழெட்டு சாமான் செட்டுகளைத் தள்ளி விட முடியும் என்று கிளம்புகிறான் சேல்ஸ் ரெப்பாய் இருக்கும் நண்பன். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கும் என்பதால் ஞாயிறும் கடையைத் திறந்து வைத்திருந்தால் நாலு காசு பார்க்க முடியும் என்கிறார் மினி ஸ்டோர் வைத்திருக்கும் முக்குக்கடை தாத்தா. பொதுவாகப் பார்க்கும் போது ஞாயிறு என்பது விடுமுறை நாள் கிடையாது. நாமாக ஓய்வு எடுத்துக் கொள்ளும் ஒரு நாள்தான் ஞாயிறு. அது பெரும்பாலும் வருவதே இல்லை. ஞாயிறு என்று ஒரு நாள் ஓய்வு கிடைத்தாலும் அந்த நாளில்தான் வீட்டைத் தூய்மை செய்வது, அழுக்குத் துணிகளைத் துவைப்பது, கலைந்து கிடக்கும் கோப்புகளை ஒழுங்குப்படுத்துவது, கணக்கு வழக்குகளைப் பார்ப்பது என்று எதாவது வேலை நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

*****

            உறவினரின் மகளொருத்தியை எழுதச் சொன்ன போது ஐந்து, ஐயா, ஐப்பசி என வரும் இடங்களில் எல்லாம் ஜந்து, ஜயா, ஜப்பசி என்று எழுதியிருந்தாள். அவளை ஜப்பான், ஜமுக்காளம், ஜவஹர் என்று எழுதச் சொல்லியிருந்தால் எப்படி எழுதியிருப்பாளோ? குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ‘ஐ’ ‘ஜ’வில் ஒரு குழப்பம் வந்து விடுகிறது. பெரியவர்களும் அநேகமாக அதே குழப்பத்தில் தவிப்பதை எனக்கு வந்தக் கடிதம் ஒன்றில் ‘ஜம்பதாயிரம் பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது’ என்று எழுதியிருப்பதிலிருந்து தெரிந்து கொண்டேன். ‘ஐ’க்கும் ‘ஜ’வுக்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை உருவாகிக் கொண்டு இருக்கிறது. இதில் தமிழ் மொழிக்கும் வடமொழிக்குமான ஒரு மொழிப்போரே நடந்திருக்கிறது என்பது வரலாறு. இருவேறு மொழிகளின் ஒலிப்புகளில் குழப்பம் ஏற்படும் அளவுக்கு இப்படி ஒரு பிரச்சனை பிற்காலத்தில் நேரிடும் என்பதைத் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

*****

            இந்தக் கொரோனா சூழலில் நாட்டில் இன்னும் திறக்கப்படாமல் இருப்பவை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திரையரங்கங்கள்தான். தியேட்டர்கள் திறக்கப்படுவதற்குக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுமா என தெரியவில்லை. பள்ளித் திறப்புக்குக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மதுபானக் கடைகளின் திறப்புக்குக் கருத்தே கேட்கப்படவில்லை. கொரோனா என்ன கருத்துக் கேட்பை வைத்துக் கொண்டா வருகிறது? போகிறது? என்று அலட்சியமாக நினைக்கலாம். பெற்றோர்களின் கருத்தைக் கேட்பது அவர்களது ஜனநாயக உணர்வுக்கு மதிப்பளிக்கும் உயரிய செயல். இதே போன்ற ஒரு கருத்துக் கேட்பை நீட் தேர்வு போன்ற நிகழ்வுகளிலும் செய்திருக்கலாம்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...