29 Nov 2020

சிவாஜிக்குச் சித்தப்பன்கள்!


 சிவாஜிக்குச் சித்தப்பன்கள்!

செய்யு - 640

            வெசாரணை அதிகாரியான அம்மா கொஞ்சம் டென்ஷன் கொறைஞ்சி உள்ளாரக் கூப்புட்டதும் சுப்பு வாத்தியாரு, "நாம்ம உள்ளார வாரல! நீயே போயி தங்காச்சிய அழைச்சிக்கிட்டுக் கேட்டுக்கிட்டு வா!"ன்னாரு விகடுவெப் பாத்து. விகடுவும் செய்யுவும் உள்ளாரப் போனாங்க. பின்னாலேயே பாலாமணியும், ராசாமணி தாத்தாவும் வந்தாங்க. யாரும் ஒருத்தரு ஒருத்தர்கிட்டெ பேசிக்கிடல.

            அந்த அம்மாவோட மொகம் சஞ்சலமா இருந்துச்சு. தலைமுடியெல்லாம் கலைஞ்சாப்புலயும் இருந்துச்சு. மொகத்த அலம்பியிருப்பாங்க போல. அதெ சரியா தொடைக்காம மொகத்துல அங்கங்க தண்ணித் துளியாவும் இருந்துச்சு. தண்ணிப் பாட்டில்லேந்து குடிச்ச தண்ணி அவுங்க மேல ஊத்தியிருந்ததும் தெரிஞ்சிது.

            "தப்பா பேசிருந்தா பொறுத்துக்கணும்!"ன்னாம் விகடு.

            "இட்ஸ் ஆல் ரைட்! பரவாயில்ல! உக்காருங்க! எதெ பேசுறதெ இருந்தாலும் கொஞ்சம் நெதானமா யோசிச்சுப் பேசுப்பா!"ன்னாங்க அந்த அம்மா.

             ரண்டு நிமிஷம் வரைக்கும் யாரும் எதுவும் பேசல. பெறவு அந்த அம்மாவே பேசுனாங்க. "திரும்ப பழசுலேந்து ஆரம்பிக்காம முடிவா யிப்போ ன்னா முடிவெப் பண்ணிருக்கீங்க?"ன்னாங்க ரண்டுப் பக்கமும் பொதுவாப் பாத்து.

            "அம்மா எந்த முடிவெப் பண்ணாலும் அதெ ஏத்துக்கிறேம்!"ன்னாம் விகடு இப்போ பட்டுன்னு. அவ்வேம் இப்படிச் சொன்னதெ கனிவா பாக்குறாப்புல பாத்தாங்க அந்த அம்மா.

            "ப்ளீஸ் பிரதர்! எஞ்ஞ குடும்பதையல்லாம் இழுத்துப் பேசாதீங்க! ரொம்ப டார்ச்சரா இருக்கு. ஏம்டா இந்த வேலைக்கு வந்தேம்ன்னு இன்னிக்கு நம்மள நெனைக்க வெச்சீட்டிங்க. இந்த வேலைக்கு வந்து நாம்ம நிம்மதியா தூங்குன ராத்திரிய வெரல்ல வுட்டு எண்ணிப்புடலாம். இங்க கேக்குற பெரச்சனையெல்லாம் எம் குடும்பத்துல நடக்குறாப்புலயேத்தாம் தெனமும் கனவு வருது. அதுல முழிச்சேன்னா அத்தோட தூக்கம் போயிடும். மறுக்கா தூங்கணும்ன்னா தூக்க மாத்திரையப் போட்டாத்தாம் தூக்கம் வரும். ஒடம்பப் பாருங்க நமக்கு. தூக்க மாத்திரையப் போட்டுப் போட்டே உப்பிப் போயிக் கெடக்குது. சமயத்துல சைக்கியாரிஸ்ட்டுகிட்டெ போயி கன்சல்ட்டும் பண்ணிக்கிறேம். இதெ ஏம் ஒஞ்ஞகிட்டெ சொல்றேம்ன்னா, இந்தப் பொறுப்புல இருக்குறதால நம்மள பெரிசா நெனைச்சிட வாணாம். நானும் ஒஞ்ஞளுப் போல ஒரு மனுஷ வகைத்தாம். பொழைப்புக்குத்தாம் இந்த வேலைக்கு வந்திருக்கேம். இதுல வாங்கிட்டுப் போற காசிய வெச்சித்தாம் குடும்பத்தெ ஓட்ட வேண்டிருக்கு. நாஞ்ஞளும் மனுஷங்கப்பத்தாம். வேத்துக் கிரகத்துலேந்து குதிச்சிடல்ல. ஒரு வெதத்துல பாவம் செஞ்ச சன்மங்கய்யா நாங்க!"ன்னு அதெ சொல்றப்ப அந்த அம்மாவுக்குக் கண்ணு கலங்கியிருந்துச்சு.

            "பொண்ண இப்ப அழைச்சிட்டுப் போறதுன்னாலும் தயார்ரா கார்ர எடுத்துட்டுத்தாம் வந்திருக்கேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா தம்மோட தரப்ப பதிலச் சொல்றாப்புல.

            "நமக்கு எம் பொண்டாட்டி வேணும். சேந்துத்தாம் வாழ்வேம்!"ன்னாம் பாலாமணியும் ஒடனே சின்னபுள்ளே அடம் பிடிக்கிறாப்புல.

            "அவுங்க நம்மள நம்பிச் சொல்றாங்க. ஆன்னா மனசுல சில விசயங்க அவுங்களுக்கு இருக்கு. அத்து நமக்குத் தெரியுது. அத்தெ தெளிவுப் பண்ணி வுடாம பொண்ண நாம்ம அனுப்பி வுட மாட்டேம். இதெ வேலையா மட்டும் செய்யல. நாம்ம சமாதானம் பண்ணி இஞ்ஞயிருந்து போவுற எந்தப் பொண்ணும், புள்ளையும் நல்லதா வாழ்ற சேதித்தாம் நமக்கும் எப்பவும் கெடைச்சிட்டு இருக்கு. இந்த விசயத்துலயும் அப்பிடித்தாம் நடக்கணும். பொழைப்புக்குத்தாம் இந்த வேலன்னு சொன்னாலும் இதுல என்னோட ஜாப் சேட்டிஸ்பிக்சன் நமக்கும் முக்கியம்ன்னு நெனைக்கிறேம். இன்னும் ரண்டு சிட்டிங் போடுவேம். பேசுவேம். அவுங்களும் மனசு ஒத்து அவுங்க வாயாலேயே அனுப்புறேம்ன்னு சொல்லட்டும். அப்பிடி அனுப்பி வுட்டாத்தாம் நாம்ம சரியா சமரசம் பண்ணிருக்கேம்ன்னு அர்த்தம். அதுக்குக் கொஞ்சம் நாளாவும். ஆவட்டுமே. ரண்டு மாசம் மூணு மாசம் ஆவட்டுமே. மியூட்சுவலா சேந்தீங்கன்னா ஒஞ்ஞ ப்யூச்சர்ல எந்தச் சிக்கலும் வாராது. பொண்ணோட மட்டுமில்ல அவுங்க குடும்பத்தோடயும் டாக்கடர்ரு நீஞ்ஞ நல்ல ரிலேஷன்சிப்ல இருக்கணும்ன்னு நாம்ம நெனைக்கிறேம். பொண்ண அனுப்ப அவுங்க சம்மதம்ன்னாலும் நாட் ஹண்டரட் பெர்சன்ட் அவுங்க பக்கம் இப்போ ஓக்கே இல்லங்றதுதாம் உண்மெ. ஒரு பர்சன்ட் அவுங்களுக்குள்ள தயக்கம் இருக்கு. அதெயும் சரிபண்ணி வுட்டுப்புடுவேம்! இன்னும் ஒரு ரண்டு மூணு சிட்டிங்கப் போடுறேம். கஷ்டம் பாக்காம டாக்கடர்ரு வந்துட்டுப் போயிடலாமா?"ன்னு அந்த அம்மா பாலாமணியையும், ராசாமணித் தாத்தாவையும் பாத்துக் கேட்டாங்க.

            "தாராளமா மேடம்! ரண்டு மூணு சிட்டிங் ன்னா? இருவது முப்பது வாணும்ன்னாலும் போடுங்க. நெதமும் போட்டாலும் செரித்தாம் திருவாரூர்லயே ரூம் போட்டுத் தங்கி வந்து கலந்துக்கிடுறேம். அவுங்க அனுப்ப சம்மதம்ன்னு சொன்னதெ போதும். நீங்களும் நல்ல வெதமா சமாதானம் பண்ணி அனுப்பி விடுறதுதாம் மொறைன்னு சொல்றதும் செரித்தாம். அடுத்த சிட்டிங் எப்பன்னு சொல்லுங்க மேடம்!"ன்னாம் பாலாமணி ரொம்ப ஆவலாதியா.

            "மனசுல்லாம் அவுங்க தரப்புல கொஞ்சம் மாறணும். ஒரு பாஞ்சு நாளு போகட்டும். அவுங்களும் இன்னிக்கு நடந்ததெ ஆர அமர யோசனெ பண்ணிட்டு வாரட்டும். அதால ஒரு ரண்டு வாரம் கழிச்சி...!"ன்னு சொல்லிக் காலண்டர்ரப் பாத்து, "இருவத்து ரண்டாம் தேதி ஓக்கேவா?"ன்னாங்க அந்த அம்மா.

            "டபுள் ஓக்கே மேடம்! நாம்ம கும்புடுற தெய்வம் நம்மள கைவுடல மேடம்! நாம்ம கோயில்ல இருக்குற தெய்வத்த மட்டும் சொல்லல, ஒஞ்ஞளையும் சேத்துத்தாம் சொல்றேம்! இருவத்து ரண்டுல நாம்ம இஞ்ஞ இருப்பேம். அவுங்க அன்னிக்குன்னுப் பாத்து ஓடிப் போயிடாம இஞ்ஞ இருக்கணும்! அதுக்கும் சேர்த்து ஒஞ்ஞளையும் ஆண்டவனையும் வேண்டிக்கிடுறேம்!"ன்னாம் பாலாமணி.

            "இருவத்து ரண்டு ஒஞ்ஞளுக்கு ஓக்கேவா?"ன்னாங்க அந்த அம்மா விகடுவையும் செய்யுவையும் பாத்து.

            "என்னா வேல கெடந்தாலும் அதெப் போட்டுட்டு அன்னிக்கு இஞ்ஞ ஒஞ்ஞ மின்னாடி இருக்கேம்மா!"ன்னாம் விகடு.

            "செரி கெளம்புங்க! நாமளும் கெளம்புறேம்! இதுக்கு மேல இன்னிக்கு முடியாது!"ன்னு சொல்லிட்டு எல்லாரையும் கெளப்பிட்டு அந்த அம்மாவும் கெளம்புனாங்க. அவுங்க கெளம்புறப்போ மணி சாயுங்காலம் நாலு மணிக்கு மேல இருக்கும். அவ்வளவு நேரம் அந்த வெசாரணை ஓடுனுச்சு. மத்தியானம் யாரும் சாப்புட்ட மாதிரி தெரியல.

            வெளியில வந்த விகடுவையும் செய்யுவையும் பாத்து கைப்புள்ள, "அம்மா என்னத்தெ சொன்னாங்க? சொல்லிட்டு எஞ்ஞ வெரசா கெளம்பிப் போறாங்க?"ன்னாரு சிரிச்சிக்கிட்டே.

            "இருவத்து ரண்டு வர்றச் சொல்லிருக்காங்க! பேசுனதுல கொஞ்சம் மனசு கொஞ்சம் பாதிச்சிருக்கும் போல கெளம்பிட்டாங்க!"ன்னாம் விகடு வருத்தமா.

            "யப்பா சொன்னுச்சு நீயி கேட்ட கேள்விய? செரியான கேள்வித்தாம். அவனுங்களப் பத்தி அந்தம்மா தெரியாமப் பேசுது? பாவம் அத்து ன்னா பண்ணும்? சேத்து வைக்கணும்ன்னு நெனைக்குது, இந்தப் பயலுவோ கொலக்கார பாவியோன்னு தெரியாமா? அவனுவோ காசிப் பணத்துக்கும், நகெ நட்டுக்கும் குறி வெச்சிக்கிட்டு ஆட்டத்தெ காட்டுறானுவோங்றது அந்த அம்மாவுக்குப் புரிய மாட்டேங்குது. போவப் போவப் புரிஞ்சிக்கும். ஆன்னா ஒண்ணுப்பா இன்னிக்கு வந்ததுல வாங்குன நகெ நட்டையும், பணங் காசியையும் கொடுக்குறேம்ன்னு என்னத்தத்தாம் மனசு வந்து ஒத்துக்கிட்டானுவோளோ தெரியல!"ன்னாரு கைப்புள்ள மறுபடியும் ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டு.

            அந்த நேரமாப் பாத்து பழைய பரமசிவம் வந்து கைப்புள்ள, சுப்பு வாத்தியாரு, விகடு எல்லாருக்கும் கையக் கொடுத்தாரு. "அடுத்த தடவெ சந்திக்கிறப்போ நமக்குள்ள ஒறவு இன்னும் ஆழப்பட்டிருக்கணும். பேசுனதெ கேள்விப்பட்டேம். நல்லதே நடக்கட்டும். அடுத்த மொறை வர்றப்போ நீஞ்ஞத்தாம் நம்ம எல்லாத்துக்கும் சாப்பாடு பண்ணணும் பாத்துக்கோங்க!"ன்னு சொல்லிட்டு வேகு வேகுன்னு கெளம்பிப் போனாரு.

            "இவ்வேம் ன்னடா ஆவாதக் கதைக்கு ஆத்தெ கட்டி எறைப்பாம் போலருக்கு? மொதல்ல பேசுறப்ப ஒரு மாதிரிக்கிப் பேசுனாம். பெறவு ஒக்காந்துப் பேசுறப்போ அந்தப் பேச்ச பேசுறாம். இஞ்ஞ வர்றப்போ இப்பிடி பேசுறாம். சரியான பச்சோந்திப் பயலுவோளா இருப்பானுவோ போலருக்கு. இன்ன நடிப்ப நடிக்குறானுவோ! சிவாஜித் தோத்துப் போவ வேண்டியதுத்தாம். சிவாஜிக்குச் சித்தப்பன்ஙகளா இருப்பானுங்கப் போலருக்கு. இவனுங்கல்லாம் ஏம் இப்பிடி அலைஞ்சிட்டுக் கெடக்குறானுவோ? பேயாம சினிமாவுல சான்ஸ் வாங்கிட்டு வில்லனா நடிச்சி காசிப் பணத்த பாக்க வேண்டித்தானே? கெளம்பி வர்றானுவோ பாருடாம்பீ வெகடு?"ன்னாரு கைப்புள்ள கௌம்பிப் போயிட்டு இருந்த அவுங்களப் பாத்து நமுட்டுச் சிரிப்ப சிரிச்சிக்கிட்டு.

            "அதெ வுடுங்க! நாம்மப் பக்கம் பேச வேண்டியதெ செரியா பேசியாச்சு. அத்துப் போதும். மித்தபடி என்ன வாணாலும் நடக்கட்டும். மத்தியானம் வேற சாப்புடல. எஞ்ஞ சாப்புடுவோம் சொல்லுங்க?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பேச்ச மாத்தி.

            "இனுமே என்னத்தெ சாப்புடுறது? ஒரு பட்சணத்த அமுக்கிக்கிட்டு, டீத்தண்ணியக் குடிச்சிட்டு வூட்டுக்குப் போயி ராத்திரிச் சாப்பாடுதாம். ஒரு டீக்கடையப் பாருங்க!"ன்னாரு கைப்புள்ள.

            சுப்பு வாத்தியாரு அங்கயிருந்து எல்லாத்தையும் கௌப்பிக்கிட்டு வந்து சுத்திலும் பார்வைய சொழல வுட்டாரு. கலக்டர் ஆபீஸூக்குப் பின்னாடி இருக்குற மகளிர் சுய உதவிக் குழுவால நடத்தப்படுற டீக்கடைக்கு கண்ணுல பட, அங்க போவலாமான்னு கண்ணாலயே கேட்டாரு. கைப்புள்ளையும் கண்ணாலயே சம்மதம் காட்டுனாரு. சுப்பு வாத்தியாரு எல்லாத்தையும் அங்க அழைச்சிட்டுப் போனாரு. அங்க சுடச் சுட வடை சுட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுல ஆளுக்கு ரண்டு வாங்கிக் கொடுத்து டீத்தண்ணியையும் வாங்கிக் கொடுத்தாரு. அதெ சாப்புட்டுக்கிட்டெ கைப்புள்ள சொன்னாரு, "ஒலகமே பணத்தெ நோக்கித்தாம் ஓடுறாப்புல இருக்குது. அதுல யோக்கியன் பட்டமும் தேவையா இருக்குது. அதுக்காக என்னென்ன வேஷத்தப் போடுறானுவோ? பணத்த பாங்கியிலப் போட்டுட்டு லாக்கர்ர ஓப்பன் பண்ணிட்டு வாடான்னா அதுக்கு ன்னா கதைய இழுக்குறாம்? நாம்ம டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிடுவேங்றாம், ஏமாத்திப் புடுவோம்ங்றாம். அவ்வேம் பரம்பரை பரம்பரையா ஏமாத்திட்டுக் கெடந்தப் பயலுவோ. நெனைப்பு அப்பிடித்தாம் போவும். அவனுகளப் போலத்தாம் நம்மளையும் பாப்பானுவோ. இதுல வேற நாம்ம கொடுத்த பணங்காசியே அவனுக கையில இல்லியாம், நகெ நட்டும் இல்லியாம், அதெயும் தாண்டி அதுல டபுள் பங்கா செஞ்சி வேற அழைச்சிட்டுப் போவுதாங். மொசப் புடிக்கிற நாயிக்கு மூஞ்செ பாத்தாலே தெரியாது? லவுட்டிக்கிட்டுக் கெடக்குறப் பயலுவோளுக்கு ன்னா பேச்சு? என்னவோ பத்தர மாத்துத் தங்கத்தெப் போலல்லா!"ன்னாரு கைப்புள்ள சுடச்சுட டீத்தண்ணியையும் உள்ளார வுட்டுக்கிட்டு சுடச்சுட வார்த்தைகளையும் வுட்டுகிட்டு.

            "அது கெடக்குது வுடுங்க. அவனுங்களும் எதாச்சிம் பேசி ஆவணும். பணத்தையும் நகையையும் கொடுக்காம ஏமாத்தியாவணும். பொண்ணையும் அழைச்சிட்டுப் போயிடக் கூடாது. அப்பிடியே அழைச்சிட்டுப் போனாலும் சந்தேகம் வர்றதா அளவுக்கு வெச்சி கொன்னுப்புடணும். இதெல்லாம் தெரியாததா? மலபுடுங்கி மகாதேவனுங்களுக்கு மரமும் சிறுதுரும்புங்ற மாதிரிக்கிக் கொலக்கார பாவியோளுக்கு இந்தப் பேச்சுல்லாம் பெரிசா ன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆமாம் போங்ற மாதிரிக்கு.

            "இருவத்து ரண்டாம் தேதி வந்துத்தானே ஆவணும். அன்னிக்கும் இந்த மாதிரியே பேசிச் சமாளிச்சிப்புடவா முடியும்?"ன்னாம் விகடு.

            "அவனுவோ வந்தாத்தானே பேசிச் சமாளிக்க. இன்னிக்கு எதுக்கு வந்தோன்னுவான்னா வன்கொடுமெ சட்டத்துல அந்த அம்மா கேஸைப் போட்டு வுட்டுப்புடுமோங்ற பயத்துலத்தாம். அதுக்காகத்தாம் அவ்வேம் வக்கீலையும் கூட அழைச்சிட்டு வந்திருக்காம். இந்த சிட்டிங் வந்தா இன்னும் ரண்டு சிட்டிங் வர்றாம மூணாவது சிட்டிங்கிக்கு வந்தா போதும். இதெல்லாம் சட்டத்துல இருக்குற விசயம்ங்க. அதுக்குத்தாம் அடி போடுறாம் அந்தப் பயெ. இத்துப் புரியாம நீயா ஒண்ணுத்தப் பேசுடாம்பீ நீயி? இதெல்லாம் அவனுகளுக்கு நாடகம்டாம்பீ! சம்பவத்தப் பண்ணி வுட்டுப்புட்டு அவனுங்கப் பாட்டுக்குப் போயிட்டே இருப்பானுங்க! நாம்ம இவுனுங்கள மாதிரிக்கி எத்தனெ பேர்ர பாத்திருக்கேம்!"ன்னாரு கைப்புள்ள.

            "இன்னிக்கு இத்து பேசுனதுப் போதும். யே யப்பா ரொம்ப பேசிக் களைச்சாப்புல இருக்கு. மனுஷ பெராணனைய வுட்டுப் பேச வேண்டிதா இருக்கு. வக்கீலுக்குப் போன அடிச்சித் தகவலச் சொல்லிட்டுப் போயிட்டே இருப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெல்லாம் நம்மள அந்த அம்மா வெளியில அனுப்பனுப்பவே அடிச்சித் தகவலச் சொல்லிட்டேம். இந்த மாதிரி வந்து அசிங்கப்படுறாப்புல இருக்கும்னுத்தாம் நாம்ம வரலன்னு ரொம்ப சாமர்த்தியமாக சொல்லிட்டாரு வக்கீலு. அவ்ளோதாம் விசயம். இதுக்கு மேலன்னா நேர்லப் போயிப் பாத்துதாம் சொல்லணும்!"ன்னாரு கைப்புள்ள.

            "நேர்லல்லாம் இன்னிக்கு வாணாம். வூடுப் போயிச் சேருவோம். பெறவு வேணும்ன்னா நெதானமா ஒரு நாளு வந்துப் பாத்துப்போம்! ஒடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்புல களைப்பா யிருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அடுத்த சிட்டிங்ல ஒரு முடிவு வந்துப்புடுமா?"ன்னா செய்யு இவ்வளவையும் கேட்டும் புரியாத்தனமா. அவ்வே மனநெல அப்போ அப்பிடி இருந்துச்சு.

            "அவனுவோளும் வந்துப்புடுவானுவோ! முடிவும் வந்துப்புடும் நெனைச்சிக்கிட்டு இரு. பணமும் வணாம், நகெயும் வாணாம்ன்னு சொல்லு. இந்த நிமிஷத்துலயே எல்லாம் முடிவுக்கு வந்துப்புடும்!"ன்னாரு கைப்புள்ள சிரிச்சிக்கிட்டெ.

            "அத்து எங் காசின்னா போனா போவுதுன்னு வுட்டுப்புடுவேம். யப்பாவும் யண்ணனும் ஒரு கடையில டீத்தண்ணி குடிச்சா கூட காசி சிலவாயிடும்ன்னு பாத்துப் பாத்து சேத்த காசி! அதெ எப்பிடி வுட முடியும்?"ன்னா செய்யு கண்ணுல பொங்கி வர்ற தண்ணிய அடக்க முடியாம.

            "யப்போ பேயாம பொத்திக்கிட்டு அடுத்த சிட்டிங்குக்கு வந்து ன்னா நடக்குதுன்னு பாரு!"ன்னாரு கைப்புள்ள அழுத்தம் திருத்தமா.

            "இந்தாரு பணங்காசியப் பாத்துட்டு வாழ்க்கைய வுட்டுப்புட்டு நிக்காதே. பணங்காசிய சம்பாதிச்சுப்புடலாம். வருஷம் போனா அதெ சம்பாதிக்க முடியாது. நீயி ஒழுங்கா படிச்சி ஒரு வேலைக்குப் போற வழியப் பாரு. இதெ விட்டுப்புடு. அது போக்குக்குப் போயி அதுவாவே ஒரு முடிவுக்கு வந்துப்புடும்! இதெ பத்தி நெனைக்கவே நெனைக்காதே! ஏத்தோ வந்துட்டுப் போறதோட பேசுறதோட இதெ மறந்துப்புடணும். இதெ மனசுல சொமந்துகிட்டு ஆவ வேண்டிய காரியத்துல கவனத்தெ வுட்டுப்புடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆம்மாம்! இதுல மனசெ வெச்சிக்கிட்டு நிக்காதே! இதல்லாம் சுத்த அக்கப்போருதாம். வேலைக்கிப் போன எதையும் சம்பாதிச்சிடலாம். காலத்தத்தாம் சம்பாதிக்க முடியாது!"ன்னாம் விகடுவும் தங்காச்சியப் பாத்து அப்பங்காரரு சொன்னதெ ஆமோதிக்குறாப்புல.

            "ல்லண்ணே! நாம்ம அவனுவுகள வுடறாப்புல யில்ல. இருவத்து ரண்டாம் தேதி பார்ரேம்!"ன்னா செய்யு மனசுக்குள்ள வேகம் அடங்காதவளப் போல.

            "அத்து கொஞ்ச நாளு அப்பிடிப் பிடிவாதமா நின்னுத்தாம் மனசு அடங்கும். வுடு. ஆக்கி வெச்ச சோறு ஆறாம எஞ்ஞப் போயிடப் போவுது வுடு!"ன்னாரு கைப்புள்ள விகடுவப் பாத்து. பேச்சு அத்தோட ஒரு முடிவுக்கு வந்தது போல இருந்துச்சு. அத்தோட போதும் பேச்சுன்னு அதுக்கு மேல பேச்ச வளத்தாம வூட்ட நோக்கி வண்டிய வுட்டாங்க.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...