3 Nov 2020

தைரியமே துணை!

தைரியமே துணை!

செய்யு - 614

            கோவில்பெருமாள் போனது செய்யுவுக்குப் பல விசயத்துல மனசு தெளிவுக்கு உதவிப் பண்ணுச்சு. சியாமளா அத்தாச்சி அடிக்கடி தாராசுரத்துலேந்து கோவில்பெருமாளுக்கு வந்து செய்யுவோட மனசெ தேத்துறாப்புல பேசிக்கிட்டு இருந்துச்சு. மனசு சம்பந்தப்பட்ட பெரச்சனைக்குப் பேச்சுத்தாம் மருந்து. பேச பேசத்தாம் மனசு கொணப்பாட காணும். அதுக்காக சியாமளா அத்தாச்சி செய்யுவ சில நாளு அங்கேயும் அழைச்சிக்கிட்டுப் போயி வெச்சி ஆறுதல் சொல்லிட்டு இருந்துச்சு. அது கூட பேச பேச செய்யு கொஞ்சம் கொஞ்சமா தெளிவு ஆயிட்டே வந்தா. அதோட அடுத்தக் கட்டமா செய்யுவே எதாச்சிம் ஒரு விசயத்துல மனசெ கொண்டுப் போயிடணும்ன்னு, "வூட்டுலேயே இருக்குற வரைக்கும் மனசு அப்பிடியேத்தாம் இருக்கும். வெளியில கெளம்பிட்டுப் போயி வூட்டுக்கு வந்தீன்னாத்தாம் மனசு தெளிவா இருக்கும்!"ன்னு சியாமளா அத்தாச்சி மனச தேத்துறாப்புல பேச ஆரம்பிச்சிது. 

            அதெ கேட்டுட்டு, "வூட்ட வுட்டு வெளியில போயி எதாச்சும் பண்ணணும்ன்னுத்தாம் தோணுது. ஆன்னா வூட்ட வுட்டு வெளியில போறதுக்குப் பயமாவும் இருக்கு! என்னத்தெ பண்ணுறதுன்னு யோஜனையாவும் இருக்கு!"ன்னா செய்யு ரெட்ட மனசா.

            "நாம்ம மனநோய்ல வுழுந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷமா ஆனுச்சு அதுலேந்து தேறி வர்ற. அந்த நோய் என்னான்னு புரியாம அதுலயே கெடந்தேம். என்னா ஏதுன்னு வெளங்கிக்கிட்டு தெகிரியமா ஆவுறதுக்கு நமக்கு அம்புட்டு காலம் ஆயிப் போச்சுது. கொஞ்சம் படிச்சப் பொண்ணா இருந்திருந்தா தெளிவு கெடைச்சிருக்குமோ என்னவோ! ஏழாப்புலயே படிக்கப் பிடிக்கலன்னு பூப்பறிக்கப் போயிட்டேம். அந்த வயசுல காலாங்காத்தால பூக்காட்டுக்குக் போயி பூவப் பறிக்கிறதும், அதுக்குக் காசிய வாங்கிட்டு அதெ வெச்சி சிலவெ பண்ணிட்டு இருக்குறதும் சந்தோஷமா இருந்துச்சு. இப்போ நெனைக்கிறப்பத்தானே படிச்சிருந்தா எம்புட்டு உபயோகமா இருந்திருக்குங்றதெ தெரிஞ்சிக்க முடியுது. ஏழாப்புல்லாம் ன்னா படிப்பு? நம்ம படிப்புக்குல்லாம் எவ்வேம் வேல கொடுப்பாம் சொல்லு? அப்பிடிப் பாத்தா நாம்ம படிக்காதப் பொண்ணுத்தாம். நீயிப் படிச்சப் பொண்ணு. இன்னிக்குப் போயி நின்னாலும் எதாச்சும் ஒரு வேலைய கொடுப்பாம். தனியா ஒங் கால்ல சொந்தமா ஒம்மால நிக்க முடியும். நீயெல்லாம் எம்புட்டுத் தெகிரியமா இருக்கணும்?"ன்னுச்சு சியாமளா அத்தாச்சி தெகிரியத்தெ கொடுக்குறாப்புல.

            "நீஞ்ஞ சொல்றதெல்லாம் நமக்கே நல்லா புரியது யத்தாச்சி! ஆன்னா இந்த மனசு அதெ புரிஞ்சிக்கிட்டும் அதெ நோக்கிப் போவ வுட மாட்டேங்குது. போட்டு நம்மள அப்பிடியே அமுத்துது. செய்யணும்ன்னு நெனைக்கிறப்போ ஒரே அடியா பொங்கிட்டு எழும்புது. செரி செய்யலாம்ன்னுப் பாத்தா அப்பிடியே சோந்துப் போயி வுழுவுது. செய்யணும்ன்னு ஒண்ணுத்தெ நெனைக்கிற அடுத்த கணமே செய்ய வாணாம்ன்னும் தோணுது. நீஞ்ஞளே சொல்லுங்க இப்பிடி மனசு திடுதிப்புன்னு மாறி மாறி யிருந்தா நாம்ம என்னத்தெ செய்யுறது?"ன்னா செய்யு கொழம்பிப் போனாப்புல.

            "நாம்ம எதாச்சும் ஒண்ணுத்துல கொஞ்சம் செருமப்பட்டு மனசெ செலுத்துற வரைக்கும் அப்பிடித்தாம் இருக்கும். மனசு எதாச்சும் ஒண்ணுல நெலைப்பட்டுப் போச்சுன்னா மனசு பாட்டுக்கு பின்னாடி ஓடி வர்ற நாயெப் போல ஆயிடும். அது வரைக்கும் மனசுங்குறது மின்னாடி நின்னுகிட்டு வள்வள்ளுன்னு கொரைக்குற நாயைப் போலத்தாம் இருக்கும். நாம்ம நம்மளோட அனுபவத்தெ வெச்சிச் சொல்றேம். கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம். நெனைச்சிப்பாரு எம்மாம் காலம் அது. அவ்வளவு வருஷத்தெ பாழாப் போன மனநோய்லயே கெடந்து வீணாக்குறாப்புல ஆயிடுச்சு. நீயி எதுக்கு அம்புட்டுக் காலத்தெ வீணாக்கிக்கிட்டு? அனுபவப்பட்டவங்க சொல்றப்ப அதெ எடுத்துக்கிட வேண்டித்தானே? நாம்ம நெருப்பத் தொட்டுப் பாத்துட்டேம். கையச் சுடும்ன்னு சூடு பட்டெ தெரிஞ்சிக்கிட்டெம். அதெ நாம்ம சொல்லுறப்போ அதெ நீயி ஏம் எடுத்துக்கிட கூடாது? நீயும் நெருப்புல கைய வெச்சி, சுட்டுக்கிட்டு, அதுலேந்து கொணப்பாடு கண்ட பெற்பாடுதாம் அதெ எடுத்துப்பீயா ன்னா?"ன்னுச்சு சியாமளா அத்தாச்சி அதெ தெளிவு பண்டுறாப்புல.

            "அதுக்கில்ல அத்தாச்சி! மனசுக்குள்ள எந்நேரத்துக்கும் ஒரு பயமா இருக்கு. எதெ செஞ்சாலும் தப்பா போயிடுமேங்ற மாதிரிக்கிப் பயமா இருக்கு. நம்மால முடியுமான்னு யோஜனையா இருக்கு. ஒரு சின்ன தப்பெ கூட தாங்க முடியல. பெரிய தப்பப் போல தெரியுது. எதெ செஞ்சாலும் அதெ நாம்ம தப்பா பண்ணுறாப்புலயும், அதெ சுத்தி நாலு பேத்து உக்காந்துகிட்டு கெக்கெலி கொட்டிச் சிரிக்குறாப்புலயும் இருக்குது அத்தாச்சி! சுத்தி யாரும்லாம் யில்ல, யாரும்லா சிரிக்கல அத்துப் புரியுது. ஆன்னா சிரிக்கிறாப்புலயே தெரியுது!"ன்னா செய்யு தன்னோட மன உலகத்தப் பத்தி.

            "நம்ம கோவில்பெருமாள்லயே நாலு தெரு தள்ளி ஒரு பொண்ணுக்கு அப்பிடித்தாம், ஒமக்கு நேந்தாப்புல நடந்துச்சு. கிட்டதட்ட ஒங் கதெதாம். டாக்கடர்ன்னு ஒருத்தெம் வந்து நகெ நட்டு பணங்காசின்னு எதுவும் வாணாம்ன்னு வந்து கட்டிட்டுப் போனாம். இருந்தாலும் அவுங்க வூட்டுலேந்து நெறைய நகெ நட்டு பணங்காசில்லாம் கொடுத்துத்தாம் கலியாணத்தெ பண்ணி வெச்சாங்க. டாக்கடர்ன்னு சொன்னதும் என்ன ஏதுன்னு பெரிசா வெசாரிக்காம பண்ணிக் கொடுத்துப்புட்டாஙக். இந்தப் பொண்ணு அவ்வேங் கூட போயி குடித்தனம் நடத்துனா, வாரத்துல ரண்டு நாளு இவ்வே கூட இருந்தா மிச்ச அஞ்சு நாளு எஞ்ஞ இருப்பான்னே தெரியாம போக்கக் காட்டிட்டு இருந்திருக்காம். ஒரு நாளு அந்தப் பொண்ணு இவனுக்குத் தெரியாம இவ்வேம் பின்னாடியே போற எடமெல்லாம் போயி ஒவ்வொண்ணா கண்டுபிடிச்சிடுச்சு. அந்தப் பயெ உண்மையான டாக்கடரும் கெடையாது போலி டாக்கடருங்றது. அத்தோட அந்தப் பயலுக்கு ஏற்கனவே கலியாணம் ஆயி கொழந்தெ குட்டியோட குடும்பம் இருக்குறதையும் கண்டுபிடிச்சிடுச்சு. இந்தப் பொண்ண அவ்வேம் ஒரு வைப்பாட்டியாத்தாம் கட்டிட்டுப் போயிருக்காம். அத்து தெரிஞ்சதும் அந்தப் பொண்ணு ச்சும்மா இருக்கல. அந்தப் பொண்ணு தெகிரியமான போண்ணு பாத்துக்கோ. அவ்வேங்கிட்டெ சண்டெ வெச்சி, இஞ்ஞ வூட்டுக்கு வந்து தகவலச் சொல்லி கெராமத்துலேந்து எல்லா சனமும் கெளம்பிப் போயி அவ்வேங்கிட்டெ யிருந்த நகெ நட்டையெல்லாம் கொண்டாந்து அவ்வேம் மூஞ்சில தாலியக் கழட்டி தூக்கி எறிஞ்சிப்பிடுச்சு!"ன்னுச்சு சியாமாள அத்தாச்சி செய்யுவோட மன உலகத்துலேந்து வெளியில வர்றாப்புல ஒரு உண்மெ சம்பவத்தெ.

            "யிப்போ அந்தப் பொண்ணு இஞ்ஞத்தாம் இருக்கா?"ன்னா செய்யு ஆச்சரியமா.

            "அந்தப் பொண்ணு இஞ்ஞ ஏம் இருக்கு? கும்பகோணத்துல ஏதோ படிப்பு சென்டரு இருக்காம்ல. அஞ்ஞப் போயி படிச்சிக்கிட்டுக் கெடந்துச்சு. வீயேவோ பரீட்சன்னு ஒரு பரீட்செ வந்து அதெ எழுதி வீயேவோ ஆயிப்புடுச்சு. அந்தப் பொண்ணு வீயேவோ ஆனதும் நாம்ம கட்டிக்கிறேம், நீயி கட்டிக்கிடுறேம்ன்னு ஆயிரத்தெட்டு மாப்புள்ளைக வூட்டுக்கு மின்னாடி வந்து நிக்க ஆரம்பிச்சாம். ஆம்மா பாத்துக்கோ ஏற்கனவே கல்லாணம் ஆன பொண்ணுன்னுல்லாம் பாக்கல. கட்டிக்கிடறதுக்கு அப்பிடி ஒரு போட்டி. அப்பிடி வந்து நின்னதுல ஒரு பையனப் பாத்துக் கலியாணத்தப் பண்ணிக்கிட்டுப் போயிடுச்சு. யிப்போ அத்து புருஷங்காரனோட விக்கிரவாண்டியில இருக்கு. கட்டுன புருஷனும் கவர்மெண்டு வேலக்காரரு. ரெண்டுச் சம்பளமா ஆயிடுச்சுல்லா. காரு கீருல்லாம் வாங்கி வெச்சிக்கிட்டு ஒரு ஆம்பளப் பயலயும், ஒரு பொட்டக் குட்டியையும் பெத்துக்கிட்டு ஊருக்கு வந்துட்டுப் போவுது. எப்பவாச்சும் ஊருப் பக்கம் வரும். வர்றப்போ ஒமக்குக் காட்டி வுடுறேம் பாரு!"ன்னுச்சு சியாமளா அத்தாச்சி செய்யுவுக்குத் தெம்பு கொடுக்குறாப்புல.

            "நெசமாத்தாம் சொல்லுதீயா அத்தாச்சி?"ன்னா செய்யு அதெ நம்ப முடியாதவளப் போல.

            "ஆம்மா இட்டுக் கட்டி கதெ சொல்லுற அளவுக்கும், பொய்யி புழுவுற அளவுக்குமா நாம்ம படிச்சிருக்கேம்? அதெல்லாம் படிச்சவுகப் பண்டுற வேல. ஏழாப்பு வரைக்கும் படிச்சாலும் நமக்குப் படிப்புன்னு ஒண்ணும் ஏறல. ஏத்தோ படிச்சிட்டுப் போனேம். ஏத்தோ கொஞ்சம் எழுதுவேம், படிப்பேம். அவ்வளவுதாங் நம்ம மூளைக்கு எட்டுனுச்சு. அதெ வெச்சிக்கிட்டு நாம்ம எந்தக் கதெயே படிச்சேம்? நாம்ம சொல்றதெல்லாம் நடைமொறையில பாத்ததும் கண்டதும்தாம். வேணும்ன்னா பக்கத்துப் பக்கத்துல போயி வெசாரிச்சி அத்தாச்சி இந்த மாதிரிக்கிச் சொன்னுச்சே நெசமான்னு கேட்டுப் பாரேம். அதெ வுட்டுப்புட்டு ச்சும்மா வூட்டுக்குள்ளயே அடைஞ்சிக் கெடந்துக்கிட்டு? நீயி எந்த வூட்டுல வாணும்ன்னாலும் வெசாரிடி கண்ணு. எதுத்தாப்புல இருக்குல்ல பாவாடெ ஆச்சாரி வூடு, அஞ்ஞ மட்டும் வெசாரிச்சி வெச்சிப்புடாதே!"ன்னுச்சு சியாமளா அத்தாச்சி எச்சரிக்கிறாப்புல.

            "அத்து ஏம் அத்தாச்சி?"ன்னா செய்யு.

            "அத்து ஒரு கதெ. பெற சாதிக்கார பயலுவோ எப்பிடின்னா பெற சாதிகிட்டெ சண்டெயே வெச்சிக்கிட்டு தஞ் சாதிக்குள்ள ஒத்துமையா இருப்பானுவோ. இந்த ஆச்சாரிப் பயலுவோ கெடக்குறானுவோளே, இவுனுக எப்பிடின்னா பெற சாதிகிட்டெ ஒத்துமையா இருந்துகிட்டு தஞ் சாதிக்குள்ள சண்டெய வெச்சிட்டுக் கெடப்பானுவோ. நீயி எந்த ஊர்ல வாணாலும் பாரு, இந்தச் சாதிக்காரப் பயலுவோ மட்டும் ஒத்துமையாவே இருக்க மாட்டானுவோ. ஒருத்தனெ ஒருத்தெம் எப்பிடிக் கவுத்து வுடுறதுன்னே நிப்பானுவோ. அதுலயும் எதிர்வூட்டு பாவாடெ ஆச்சாரியும், அவ்வேம் பொண்டாட்டியும் இருக்கே! மனுஷர்ர உசுரோட கொன்னு எரிச்சிப்புடும்ங்க!"ன்னுச்சு அத்தாச்சி சன்னமான கொரல்ல.

            "அவுங்க வூட்டுலேந்து நல்லாத்தானே அத்தாச்சி நம்மகிட்டெல்லாம் பேசுதாங்க. அத்தெகிட்டெயும் பேசுதாங்க!"ன்னா செய்யுவும் சன்னமான கொரல்ல.

            "கொஞ்சி வெளையாடுற பாம்பு கொஞ்ச நாளைக்கு வாலாலக் கொஞ்சித்தாம் வெளையாடுமாம். கொஞ்ச நாளு போன பெற்பாடுதாம் பல்லால கடிச்சி வெளையாடுமாம்! அப்பிடித்தாம் சொல்லுவாக இஞ்ஞ கெராமத்துல தெரியுமா? பாம்பு பல்லால கடிச்சிக் கொஞ்சி வெளையாண்டா மனுஷரோட நெலமெ என்னாவுறது சொல்லு? அதுக்கு வெளையாட்டு, மனுஷருக்கு கதெ முடிஞ்சிடும். பாம்புகத்தாம் அந்தக் குடும்பத்துச் சனங்க! நெசத்தெ சொன்னாத்தாம் நெலமெ ஒமக்குப் புரியும்!"ன்னு சியாமளா அத்தாச்சி அந்தக் கதெயெ சொல்ல ஆரம்பிச்சது.

            "நாமளே மனநோய்லக் கெடந்து வெவஸ்தெ கெட்ட தனமா கெடந்தேம். யம்மா ன்னா பண்ணும்ன்னா வூட்டுலயே போட்டு அடைச்சி வெச்சிக்கிடக் கூடாதுன்னு வெளியில அப்பிடி இப்பிடின்னு ரண்டு மூணு வூட்டுக்குக் கொண்டுப் போயி வெச்சி பேசிட்டு இருந்துட்டு வரும். நம்மச் சாதி சனமா இருக்கேன்னும், எதுத்தாப்புல வூடு இருக்கேன்னும் பாவடெ ஆச்சாரி வூட்டுக்கு அடிக்கடிக் கொண்டு போயி வெச்சிப் பேசிட்டு இருக்கும். அந்தச் சனமும் ஆரம்பத்துல நல்லாத்தாம் பேசுனுச்சுங்க. வூட்டுக்குப் போயிட்டா டீத்ண்ணி, காப்பித் தண்ணின்னு போட்டுக் கொடுத்து ரொம்ப ஆறுதல்லாம் சொன்னிச்சுங்க. இப்படிப்பட்ட சனங்க இருக்குறப்போ ன்னா கவலென்னு யம்மாவே நெனைக்க ஆரம்பிச்சிது. அப்பத்தாம் ஒரு சம்பவம் நடந்துப் போச்சு. அவுங்க வூட்டுல இருந்த தங்கச் சங்கிலி காணாமப் போயிடுச்சு. அன்னிக்குன்னுப் போயி யம்மா நம்மள வெச்சி பேசிக்கிட்டு வந்துச்சு. அதெ வெச்சுக்கிட்டு அந்தச் சனங்க அடிச்ச கூத்து இருக்கே. பொண்ண பைத்தியக்காரிச்சிப் போல கொண்டாந்து வெச்சி சங்கிலியக் கெளப்பிட்டுப் போயிட்டான்னு ஊரு பூரா தமுக்கு அடிச்சிப்புடுச்சிங்க!"ன்னு சொல்லி நிறுத்துனுச்சு சியாமளா அத்தாச்சி.

            "பெறவு?"ன்னா செய்யு கண்ணு முழி ரண்டும் தெரண்டு வர.

            "இப்பிடி கதெ கேக்குறதுன்னா ந்நல்லா கேளு! அத்தாச்சி சொல்லுதே அதுல ஒரு வெசயம் இருக்கும்ங்றதெ மட்டும் நம்பாதே!"ன்னு சொல்லிட்டு மேக்கொண்டு சொல்ல ஆரம்பிச்சது சியாமளா அத்தாச்சி.

            "சங்கலிய எடுக்கலன்னா பிரசண்டசாமி கோயில்ல கற்பூரத்தெ அணைச்சி சத்தியத்தெப் பண்ணச் சொல்லுன்னு சொல்லிப்புடுச்சிங்க. அப்போ நாமளே மனநோய்ல கெடந்து செருமப்பட்டு சங்கடப்பட்டா, இதுக கொயில்ல கொண்டுப் போயி வெச்சி தட்டு நெறைய கற்பூரத்தெ கோளுத்தி அணைக்கச் சொன்னா, நம்ம கையெல்லாம் சூடுபட்டு வெந்துப் போயிடுச்சு. செரித்தாம் கற்பூரத்தெ அணைச்சாச்சு சோலி முடிஞ்சதுன்னு நெனைச்சா, மந்திரவாதி, தந்திரவாதின்னு நம்மளெ அழைச்சிட்டுப் போவ ஆரம்பிச்சிடுச்சுங்க. அந்த மந்திரவாதியும் நாம்மத்தாம் எடுத்தேம்ன்னு அடிச்சிச் சொல்லி நம்மள விளார்லப் போட்டு அடிச்சித் தொவைக்குறாம். நம்மளப் பேயி பிடிச்சிருக்கிறதாவும், அந்தப் பேயித்தாம் இந்த வேலையக் காட்டுறதாவும், அந்தப் பேயிக்கிட்டெ பேசித்தாம் சங்கிலிய எடுக்கணும்ன்னு கண்டமேனிக்கு அடிக்கிறாம். அடின்னா அடி அம்மா அடியையும் வாங்கிட்டு வந்தா கோயிலு கோயிலா நம்மள ஏத்தி எறக்கிக் கற்பூரத்தெ வேற அணைக்கச் சொல்லுதுங்க. யம்மா இருக்கே அதாங் ஒந் யத்தெ, அது ஒரு லூசு. அதுவும் அவுங்க சொன்னபடிக்கெல்லாம் ஆடுனா ஆட்டம் இருக்கே. இதுங்க பண்ண டார்ச்சர்ல நமக்கு மனநோயே போயிடும் போலருக்கு. நாம்ம கொஞ்சம் யப்போ தெளிஞ்சி வர்றதுக்கு இந்தச் சித்தரவதையும் கொஞ்சம் ஒதவியாத்தாம் இருந்துச்சோ என்னவோ தெரியல்ல. ஒரு தடவே பாத்தேம் சின்னமாரியம்மன் கோயில்ல வெச்சும் இதெ வேலையப் பண்ணுச்சுங்க. அப்பிடியே துன்னூரு குமிச்சி வெச்ச தட்டுல கற்பூரத்தெ கொட்டி வெச்சி கொளுத்தி வுட்டு கைய அமத்தச் சொன்னுச்சுப் பாரு, தட்டெ அப்பிடியே தூக்கி அதுங்க மூஞ்சுல வீசுனேம். சனங்க ஒவ்வொண்ணும் அலறியடிச்சிக்கிட்டு ஓடுனுச்சுங்க. நெசமாலுமே நமக்குப் பேயி பிடிச்சிட்டதா ஒவ்வொண்ணும் அரண்டு மெரண்டு ஓடுனுச்சுங்க. நமக்கும் இதாங் சாக்குன்னு நெனைச்சிக்கிட்டு கையில கெடைச்சதையெல்லாம் அதுங்க மேல வீசுனேம். பாவாடெ ஆச்சாரியப் பாக்கறப்ப கவனி. அவ்வேம் வலது கண்ணுக்கு மேல ஒரு தழும்பு ஒண்ணு இருக்கும். அத்து நம்ம வுட்டெறிஞ்ச தாம்பளம் பண்ணுன வேல. அன்னிலேந்து யாரு வந்து எந்தக் கோயிலுக்குக் கூப்புட்டாலும் செரித்தாம் கையில கெடைச்ச கட்டையையும் கழியையும் தூக்கி எறிஞ்சி அடிக்க ஆரம்பிச்சேம். ஒரு பயெ கிட்ட நெருங்கலையே. அப்பத்தாம் முடிவெ பண்ணுனேம். இந்த ஒலகத்துல நாம்ம தெகிரியமா இருந்தாத்தாம் ச்சும்மா இருப்பானுவோன்னு. அன்னிக்கு ஆரம்பிச்ச துணிவுதாம். என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு எதுவா இருந்தாலும் தூக்கி அடிக்கிறதுன்னு ஆயிடுச்சு. சமயத்துல நம்ம வூட்டுக்காரரையும் தூக்கி அடிச்சிடுறதுதாங். அவரு ஒரு அப்பாவி. பாவப்பட்டுக்கிட்டு விட்டப்புடறது இப்பல்லாம்!"ன்னு சொல்லிச் சிரிச்சிது சியாமளா அத்தாச்சி.

            "சங்கிலி காணாம போனது போனதுதானா?"ன்னா செய்யு அப்பாவியா.

            "இதெல்லாம் நல்ல வெவரமாத்தாம் கேக்குறே? அந்தக் கதெயே விட்டுப்புட்டேம் பாரு, நம்ம கதெய மட்டும் சொல்லிட்டு. அந்தக் கதெயும் நல்ல வேளையா கேட்டுத் தொலைச்சியே! அதெயும் சொல்லுறாம் பாரு!"ன்னு அந்தக் கதையைச் சொன்னுச்சு சியாமாள அத்தாச்சி.

            "சங்கிலி எங்கப் போச்சுன்னா, அடவுக் கடைக்கு போயிடுச்சு. அத்து எப்பிடி அடவுக் கடைக்குப் போச்சான்னா, நம்ம பாவாடெ ஆச்சாரித்தாம் குடிக்கிறதுக்குக் காசில்லன்னு அதெ அடவு வெச்சி ஒவ்வொரு நாளா குவார்ட்டர்ரக் கவுத்திக்கிட்டு இருந்தாம். விசயம் வெளியில தெரிஞ்சா பொண்டாட்டி பொலி போட்டுப்புடுவாளேன்னு, அத்துத் திருட்டுப் பலியாயி நம்ம மேல வுழுந்ததும் ஆளு கமுக்கமா ஆயிட்டாம். பொண்டாட்டி ஆடுன நாடவத்துக்கும், பாடுன பாட்டுக்கும் பக்க வாத்தியமா இருந்துக்கிட்டாம். ஒரு வருஷம் கழிச்சி அடவு வெச்ச நகெக்கு வட்டியக்கட்டு இல்லாட்டி, நகெ அடமானத்துலப் போயிடும்ன்னு அடவுக்கடெகார்ரேம் காயிதத்தெப் போட்டு வுட்டாம். அந்தக் காயிதத்தெப் பாத்த பெற்பாடுதாம் உண்மெ தெரிஞ்சி பாவாடெ ஆச்சாரியோட பொண்டாட்டி அவனெ வெளக்கமாத்தாலயே நடுரோட்டு வுட்டு வெளுத்து வாங்குனுச்சு. சங்கிலி காங்காமா போன சம்பவத்துல நம்மள கற்பூரம் காட்டி அணைக்கச் சொல்லி அதால கோயில்ல வெச்சு அந்தச் சனங்கள கண்டமேனிக்குச் சாமாஞ்செட்டுகளால் அடிச்சதுலேந்து இந்தக் காயிதம் வர்ற வரைக்கும் நம்ம குடும்பத்தோட அப்போ பேச்சுக் கெடையாது. பெறவு கொஞ்ச நாள்ல அதுவா வந்து பேச ஆரம்பிச்சிடுச்சு. இதெல்லாம் எதுக்குச் சொல்றேம்ன்ன நாம்ம தெகிரியமா ல்லன்னா எவனெவனோ பண்டுற தப்பையெல்லாம் நம்ம மேல போட்டு அதுக்கு நம்மள பலிகடா ஆக்கிப்புடுவானுவோ! இந்த ஊரு ஒலகமெ அப்பாவி எவ்வேம் இருக்காம், அவ்வேம் மேல பலியத் தூக்கிப் போட்டுப்புடுவேம்ன்னு காத்துகிட்டுக் கெடக்குது. அதுக்கு நாம்ம எடம் கொடுக்காம தெகிரியமா இருக்கணும். எதா இருந்தாலும் தெகிரியமா இருந்துப் பாரு, வர்ற பெரச்சனெ பேதியில போவும், ல்லன்னா நாம்மத்தாம் பேதியா போயிட்டுக் கெடக்க வேண்டிருக்கும்!"ன்னுச்சு சியாமளா அத்தாச்சி சிரிச்சிக்கிட்டெ.

            "அதெ கேட்டுப்புட்டு செரித்தாம் அத்தாச்சி. எங் கதெயும் அப்பிடித்தாம் ஆயிடுச்சு. துணிஞ்சி ஒரு கேள்வியக் கேட்டிருந்தா கூட போதும் அடங்கியிருப்பானுவோ. அந்தத் தெகிரியம் இல்லாம்மா எல்லா பயலும் எஞ்ஞ குடும்பத்து மேலயே ஏறி மொட்டெ அடிக்கப் பாத்துப்புட்டானுவோ! கடெசீயா யண்ணந்தாம் கோவப்பட்டுக் கத்துன பெற்பாடுதாம் ஒவ்வொரு பயலும் நமக்குத் தெரியாது, ஒமக்குத் தெரியாதுன்னு தலெ தெறிக்க ஓடுனானுவோ!"ன்னா செய்யுவும் சிரிச்சிக்கிட்டு. 

            “இதெல்லாம் சிரிப்பாணிக்குச் சொல்லல. இதெ வாழ்க்கெயில்ல எடுத்துக்கிடணும். யப்பத்தாம் பெரயோஜனப்படும் ஆம்மா!”ன்னுச்சு சியாமளா அத்தாச்சி செய்யுவுக்கு மனசுல ஒரைக்குறாப்புல.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...