28 Nov 2020

உங்கப் பொண்ணுன்னா அனுப்புவீங்களா?

உங்கப் பொண்ணுன்னா அனுப்புவீங்களா?

செய்யு - 639

            வெசாரணை அதிகாரியான அம்மா எல்லாரையும் ப்ளாஸ்டிக் நாற்காலிகள்ல உக்காரச் சொன்னாங்க. "அவுங்க தரப்புலேந்து வக்கீல் இருக்கலாமா? ஏதும் ஆட்பேசபனை இருக்கா?"ன்னாங்க சுப்பு வாத்தியார்ரப் பாத்து. அதுக்குக் கைப்புள்ள பதிலச் சொன்னாரு. "எல்லாரும் சேர்ந்து பேசுறப்போ யாரு வாணாலும் இருக்கலாம். அதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் யில்ல. ஒவ்வொருத்தரையும் தனித்தனியா வெசாரிக்கிறப்போ அந்தத் தரப்புலேந்து ஒருத்தரு, அதுவும் வக்கீலு இருக்குறது மொறை கெடையாதுன்னுத்தாம் சொன்னேம். அப்படி அது ஞாயம்ன்னா அவுங்க தரப்புல அவுங்கள வெசாரிக்கிறப்போ எஞ்ஞ தரப்புலேந்து எஞ்ஞ வக்கீலோ யில்ல எஞ்ஞள்ல ஒருத்தரோ இருக்கணுமா யில்லையா? யிப்போ அவரு இருக்குறதப் பத்தி எங்களுக்கு ஒண்ணும் பெரச்சனெ யில்ல!"ன்னாரு.

            "நீஞ்ஞ ஒண்ணும் தப்பா நெனைச்சிக்கிட வாணாம். பெரச்சனையோட கோணம் தனக்குப் புரியலன்னும், ஒவ்வொருத்தரும் பேசுறதெ கேட்டா அதெ புரிஞ்சிக்கிட்டுச் சேத்து வைக்குறதுக்கு உண்டான முயற்சியப் பண்ணலாம்ன்னு வக்கீல் சார் சொன்னதால, ஒரு நல்ல வெசயந்தானேன்னு நெனைச்சி வக்கீல சார்ர உள்ளார உக்காரச் சொன்னேம். வேற ஒண்ணும் இதுல உள்நோக்கமெல்லாம் யில்ல!"ன்னாங்க அந்த அம்மா கைப்புள்ளைக்கு ஒரு வௌக்கத்தக் கொடுக்குறாப்புல.

            "சேத்து வைக்குற ஒரு பெரச்சனைக்கு வக்கீலே வர்றக் கூடாது. நாஞ்ஞ எஞ்ஞப் பக்கத்துக்குன்னு வக்கீலக் கொண்டாந்திருக்கமா? இத்தனைக்கும் இந்தா பக்கத்துல எதுத்தாப்புல இருக்குற கோர்ட்டுக் கட்டடத்துலத்தாம் எஞ்ஞ வக்கீலு இருக்காரு. ஒரு போன அடிச்சாப் போதும். பாஞ்சு வந்துப்புடுவாரு! ஆன்னா செய்யலப் பாருங்க!"ன்னாரு கைப்புள்ளயும் அந்த அம்மாவுக்கு பதிலுக்குப் பதிலு வௌக்கத்தக் கொடுக்குறாப்புல.

            "செரி! இதுக்கு மேல பெரச்சனைய வளத்த வாணாம். சில கசப்பான விசயங்க நடந்திருக்கு. இல்லன்னு சொல்றதுக்கில்ல. நெருடலான ஒரு சில விசயங்களும் இருக்கு. அதையும் இல்லன்னு சொல்லல. பேசுனா சரி பண்ண முடியாத விசயம்ன்னு எதுவும் கெடையாது. அந்த நம்பிக்கையிலத்தாம் சொல்றேம். நடந்தது நடந்துப் போச்சு. அதெ பேசணும்ன்ன ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம். அந்தத் தெசையில எதெப் பத்தியும் பேச வாணாம்ன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுறேம். நாம்ம பேசப் போறது ரண்டு தரப்புக்கும் கொஞ்சமாச்சும் உபயோகமா இருக்கணும். அதெ மனசுல வெச்சிட்டு பேசணுங்றதெ ஒரு அன்பான கண்டிஷனாவே முங்கூட்டியே சொல்லிடுறேம். யிப்போ மாப்புள்ளப் பையேம் பொண்ண அழைச்சிட்டுப் போவ தயாரா இருக்காரு. ஒத்தக் கால்ல நிக்குறாருன்னும் சொல்லலாம். பொண்ண அனுப்புறதுல சார் ஒஞ்ஞளுக்கு எதாச்சும் தாங்கல் இருக்கா? இருந்தா சொல்லுங்க!"ன்னாங்க அந்த அம்மா சுப்பு வாத்தியாரைப் பாத்து.

            "நாம்ம ஒங்ககிட்டெ மின்னாடி சொன்னதுதாம். அதெ செஞ்சிட்டா பாக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒடனே அந்த அம்மாவுக்கு ஒரு பதிலெச் சொல்றாப்புல.

            "அத்து நீஞ்ஞ தனியா சொன்னது. அதெ நாம்ம குறிச்சிக்கிட்டெம். யிப்போ எல்லார் மின்னாடியும் அதெப் பத்திச் சொல்லுங்க! அப்பத்தானே அவுங்களுக்கு வௌங்கும்!"ன்னாங்க அந்த அம்மா.

            "அதாம்ங்க! காரு வாங்கன்னு கொடுத்த பத்து லட்சத்துக் காசிக்குக் காரு வாங்கலங்றதால அந்தப் பணத்த எம் பொண்ணு பேர்ல பாங்கியில டிபாசிட்டு பண்ணிடணும். கலியாணத்துக்குன்னு எம் பொண்ணுக்கு நூத்துச் சவரன் செஞ்சிருக்கேம். அதெ போட்டுத்தாம் பொண்ண அழைச்சிட்டுப் போவணும். அத்தோட அந்த நகெயெ வெச்சிக்கிட எம் பொண்ணு பேர்ல பாங்கியில லாக்கரு ஓப்பன் பண்ணிக் கொடுத்துடணும். எம் பொண்ணுக்குன்னுப் போட்ட நகெயெ எம் பொண்ணுத்தாம் வெச்சிக்கும், எடுத்துக்கும். இதுக்குச் சம்மதம்ன்னா பொண்ண அனுப்புறதுல அட்டியில்ல!"ன்னு முன்னாடி சொன்னதையே திரும்பவும் இப்போ எல்லார் முன்னாடியும் சொன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யப்போ இவருக்குப் பொண்ணு மேல அக்கறயில்ல. பணங்காசி, நகெநட்டு மேலத்தாம் அக்கறெ?"ன்னாரு பழைய பரமசிவம் பட்டுன்னு சுப்பு வாத்தியார்ரப் போட்டுத் தாக்குறாப்புல.

            "அதெ பேசாதீயே! அவுங்கப் பக்கத்து டிமாண்ட்ட அவுங்க சொல்றாங்க. அதெ செய்ய முடியுமா? முடியாதான்னு மட்டும் பேசுங்க!"ன்னாங்க அந்த அம்மா பட்டுன்னு.

            "அப்பிடிச் சொல்லாதீயே. செலதெ பேசித்தாம் ஆவணும். பொண்ண கட்டிக் கொடுத்துட்டாரு. பணங்காசியக் கொடுத்துட்டாரு, நகெ நெட்ட செஞ்சிட்டார்ன்னா அத்தோட வுட்டுப்புடணும். அதெ இப்பிடித்தாம் பண்ணணும், அப்பிடித்தாம் பண்ணணும்ன்னா அதெல்லாம் நடை‍மொறைக்கு ஒத்து வாராதும்மா! அப்பிடி உள்ளவரு அதுக்குத் தகுந்தாப்புல வூட்டொட மாப்புள்ளப் பாத்து வெச்சிருக்கணும்!"ன்னாரு பழைய பரமசிவம் சண்டெய நிமுண்டி விடுறாப்புல.

            "அதுலத்தாம்யா சந்தேகமே எஞ்ஞளுக்கு. கொடுத்த பணங்காசி ஒஞ்ஞகிட்டெ யில்ல. நகெ நட்டும் யில்ல. அதுலயே எஞ்ஞளுக்குச் சந்தேகமா இருக்கு. கொடுத்த நகெநட்டு, பணங்காசியப் பாதுகாப்பா வெச்சிருக்கிருக்கத் தெரியாதவம் நாளைக்கிப் பொண்ண அனுப்புனா அதெ எப்பிடிச் சரியா வெச்சிப்பாம்? இப்பிடிப் பண்ணுனா இதுக்காச்சும் பொண்ண பத்திரமா வெச்சிருப்பாம் பாரு! அதுக்குத்தாம் இப்பிடிக் கேக்குறது புரியுதா?"ன்னாரு கைப்புள்ள பழைய பரமசிவத்தப் பாத்து அவரு கேட்டதுக்கு ஒரு பதில பொட்டுல அறைஞ்சாப்புல சொல்லுற மாதிரி.

            "ஏம்யா நீஞ்ஞ பணமே கொடுக்கல. நகெ நட்டெ பண்ணலன்னு சொன்னா ன்னா பண்ணுவீயே?"ன்னாரு பழைய பரமசிவம் இப்போ எடக்கு மடக்கா. அதெ கேட்டதும் கொதிச்சுப் போயி ப்ளாஸ்டிக் நாற்காலியிலேந்து எழும்புன கைப்புள்ளையக் கைய காட்டி உக்கார வெச்சாங்க வெசாரணை அதிகாரி அம்மா. கைப்புள்ளையும் ஒண்ணும் சொல்லாம உக்காந்தாரு.

            "இந்தாருங்க அதெப் பேசாதீயே! அவுங்க அந்த அளவுக்குப் பணங்காசியக் கொடுத்தது, நகெநட்டெ செஞ்சது எல்லாம் உண்மென்னு ஒஞ்ஞ மாப்புள்ளப் பையேம் எங்கிட்ட தனிப்பட்ட மொறையில வெசாரிச்சப்ப ஒத்திருக்காரு. ச்சும்மா போழுதுப் போவாம நாம்ம ஒவ்வொருத்தர்ரா கூப்ட்டு வெசாரிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கல. ஒரு சில விசயங்கல பொதுவுல சொல்ல முடியாது, சங்கோஜமா இருக்கும்ன்னுத்தாம் தனியா வெசாரிக்கிறது. அந்தப் படிக்கு வெசாரிச்சதுல நெறைய விசயங்கள குறிச்சும் வெச்சிருக்கும். கோர்ட்டுக்குப் போனாலும் நாம்ம குறிச்சி வெச்சது ஒரு வாக்குமூலமா செல்லும் பாத்துக்குங்க!"ன்னாங்க அந்த அம்மா பழைய பரமசிவத்த அசமடக்குறாப்புல.

            "பெறவு ன்னா? அம்மாவே சொல்லிப்புட்டாங்க. செஞ்சது உண்மெத்தான்னு. நாஞ்ஞ கேக்குறதெப் பண்ணி வுட்டுப்புட்டு அழைச்சிட்டுப் போங்க!"ன்னாரு கைப்புள்ள பட்டுன்னு நாற்காலியிலேந்து எழும்பி.

            "நீஞ்ஞ மொதல்ல பொண்ண கேளுங்க மேடம்! பொண்ணு ஒண்ணும் மைனரில்ல, மேஜரு. குடும்பம் நடத்த வர்றதா சொன்னா மேட்டர் முடிஞ்சிது. இவுங்ககிட்டெ ன்னா பேசிக்கிட்டு? பொண்ணு வர்றேன்னு சொல்றப்போ இவுங்க மறுத்தா இவுங்களப் பிடிச்சி உள்ளாரப் போட வேண்டியதுத்தாம்!"ன்னாரு அவுங்க தரப்பு வக்கீலும் பட்டுன்னு நாற்காலியிலேந்து எழும்பி.

            "சார்! வக்கீல் நீஞ்ஞ. அதுக்குத் தகுந்தாப்புல பேசுங்க. இப்பிடி உள்ளாரப் பிடிச்சிப் போடுறது அத்து இத்துன்னா அவுங்களுக்குப் பயம் வாராது! சித்தெ யாரும் சம்பந்தம் இல்லாம எடையில பேசாதீயே! நாம்ம கேக்குறதுக்கு மட்டும் பதிலச் சொல்லுங்க! இதென்ன சண்டெ வளக்குற எடமா யில்ல லாவணி கச்சேரி நடக்குற கூடமா? ஒரு ஆபிசர்ன்னா அதுக்கு இருக்குற மருவாதிய கொடுங்க. ஆளாளுக்கு எழும்பிப் பேசுனா ன்னா அர்த்தம்? தயவுசெஞ்சு இனுமே அநாவசியமா யாரும் பேசாதீயே. எம்மாடி பொண்ணு ஒங் கருத்து ன்னா? அதெச் சொல்லு!"ன்னாங்க அந்த அம்மா எழும்பி நின்னவங்கள ஒரு மொறைப்பு மொறைச்சிக்கிட்டு.

            "எம் உசுருக்கு உத்தரவாதம் வேணும்மா!"ன்னு செய்யு சொல்லி முடிச்சிருக்க மாட்டா, ஒடனே பாலாமணி நாற்காலியிலேந்து எழும்பி, "எம் உசுருக்கும் உத்தரவாதம் வேணும்!"ன்னாம் பட்டுன்னு.

            "ச்சும்மா வெளையாட்டுப் பண்ணிட்டு இருக்கக் கூடாது. அழைச்சிட்டுப் போறது நீதானப்பா! பெறவென்ன ஒம்மட உசுருக்குப் பாதுகாப்பு. அப்பிடி பயப்படுற நீயி எதுக்குப் பொண்ணோட சேந்து வாழணும்? இதுல பொண்ண வேற பாத்து சேத்து வெச்சி அனுப்பி வுடுங்கறே? அப்பிடியே உருவி வழிஞ்சு கெஞ்சுறே?"ன்னாங்க அந்த அம்மா பாலாமணியப் பாத்து கடுப்படிக்குறாப்புல.

            "பொண்ண அழைச்சிட்டுப் போறேம்! சமைச்சிப் போடுறேன்னு வெசத்தெ ஊத்தி வெச்சா யாருக்குத் தெரியும்? நேரடியா மொரட்டு வெசமா வைக்காம ஸ்லோ பாய்சனா வெச்சிக்கிட்டெ இருக்குதுன்னு வெச்சுக்கோங்க யாருக்கு என்னாங்க தெரியும்? மாப்புள்ள வெளையாட்டா பேசுறதால்லாம் நெனைக்காதீயே! எத்தனெ கேஸூ இத்து மாதிரி நடக்குது. தெனசரி பேப்பர்ர பாக்குறீயளே! பொண்ணு உசுருக்கு உத்தரவாதத்தக் கேட்டா, மாப்புள்ளையும் கேக்கத்தாம் செய்வாம்!"ன்னாரு ஒடனே வக்கீல் எழும்பி ஆர்கியுமெண்ட பண்றாப்புல.

            "அப்பிடில்லாம் நம்பிக்கையில்லாம எஞ்ஞப் பொண்ண யாரும் அழைச்சிட்டுப் போவ வாணாம்ங்க. அந்தக் கூட்டத்துக்குக்கு உசுர்ர எடுத்துல்லாம் பழக்கம். எஞ்ஞளுக்குல்லாம் உசுர்ர கொடுத்துத்தாம் பழக்கம். ஒரு சபெயில அதென்ன கொலகாரிங்ற மாதிரிக்கி சர்வ சாதாரணமா பேசலாம்? அந்தப் பயெத்தாம் எஞ்ஞ பொண்ண தூக்குல தொங்குறாப்புல பண்ணுனாம். அப்ப யாரு கொலக்கார்ரேம்?"ன்னாரு கைப்புள்ளயும் எழும்பி ஆர்கியுமெண்ட வைக்குறாப்புல.

            "செல தப்பப் பண்ணத இப்பத்தாம் உணர்றேம்! பெரிய மனுஷங்கள இருக்கீயேளே! நல்ல வெதமா ரண்டுப் பக்கமும் சேந்து வுட பேசி வுடுவீங்கன்னுப் பாத்தா நீஞ்ஞளே போதும் பிரிச்சி வுட. தயவுபண்ணி வக்கீல் சார் கெளம்பிப் போங்க வெளியில. எதுவும் தப்பா நெனைச்சுக்காதீயே. அதெப் போல பொண்ணு மாப்புள்ளையோட ரத்த ஒறவுங்கத் தவுர யாரு இருந்தாலும் வெளியில கெளம்பிடுங்க. ஏன்னா முடிவு எடுக்க வேண்டியது அவுங்கத்தாம். அவுங்கள வெச்சி நாம்ம பேசிக்கிறேம்!"ன்னு அந்த அம்மா நாற்காலியிலேந்து எழும்பி நின்னு பட்டுன்னு கையெடுத்துக் கும்பிட்டாங்க. அவுங்க அப்பிடிக் கும்பிட்டதும் வக்கீலு, பழைய பரமசிவம், பாலாமணியோட வந்திருந்த ரண்டு ஒறவுக்காரவுங்க, கைப்புள்ளன்னு எல்லாரும் எழும்பி வெளியலப் போனாங்க. இப்போ அறையில இருந்தது அந்த அம்மா, சுப்பு வாத்தியாரு, செய்யு, விகடு, பாலாமணி, ராசாமணி தாத்தா மட்டுந்தாம்.

            "சமரசம் பண்ணுற எடத்தெ கோர்ட்டு மாதிரி ஆக்கிக்கிட்டு. பொதுவா நாஞ்ஞ வக்கீல அலோ பண்ணுறதெ கெடையாது. ஏத்தோ நல்லவரு மாதிரிக்கிப் பேசுனாரேன்னுப் பாத்தா இந்த ஒரு ஆளெ போதும் இஞ்ஞயே டிவோர்ஸ்ஸப் பண்ணி அனுப்பி வுட்டுப்புடுவாரு போலருக்கு. நல்லா வந்ததெ கெடுத்துட்டுப் போறாரு! ஏம் சார் இவரையெல்லாம் அழைச்சிட்டு வாறீங்க?"ன்னாங்க அந்த அம்மா பாலாமணியப் பாத்து.

            பாலாமணி அதுக்கு ஒண்ணும் சொல்லாம இப்போத்தாம் வாழ்க்கையிலயே மொத மொறையா தலையக் குனிஞ்சிக்கிட்டாம் என்னவோ தப்பெ பண்ணிட்டவேம் போல.

            "ரண்டுப் பக்கத்துக்குக்கும் சொல்லிக்கிறேம். வாதத்துக்குத்தாம் மருந்திருக்கு. விதாண்டாவாதத்துக்கு எல்லாம் மருந்தில்லே. பரஸ்பர நம்பிக்கத்தாம் முக்கியம். ஒஞ்ஞ ரண்டு பேரு பொண்ணு மாப்புள்ளயப் பாக்குறப்ப அவுங்க பேசுனாப்புல நமக்குப் படல. படிச்சவங்க ரண்டு பேரும். பேசுறதெ யோசிச்சு நெதானமாப் பேசணும்! வார்த்தைய வுட்டு வாழ்க்கைய வுட்டேம்ங்ற பேரு இருக்கக் கூடாது! எந்த எடத்துல இந்தப் பெரச்சனெ முட்டிக்கிட்டு இருக்குறதோ அதெ மட்டும் சரி பண்ணிக்கிடுறாப்புலப் பேசணும். பணம்காசிய பாங்கியில டிபாசிட் பண்ணணும், நகெநட்டுக்கு லாக்கர்ரத் தயாரு பண்ணணும். அதெ செஞ்சாச்சுன்னு வெச்சிப்போம். உசுருக்குல்லாம் ஒண்ணும் பயப்பட வாணாம். ரண்டு பேத்துமே அந்த மாதிரிக்கிச் செய்யுற ஆளு மாரில்லாம் நமக்குத் தெரியலங்றதால சொல்றேம். மேக்கொண்டு என்ன பண்ணலாம்ங்றதெ நீஞ்ஞ சொல்லுங்க சார் பொண்ண பெத்தவங்களே!"ன்னாங்க அந்த அம்மா.

            "பணங்காசிக்கும், நகெநட்டுக்கும் யாரு ஒப்புக்கிறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு திரும்பவும் மொதல்லேந்து ஆரம்பிச்சு உத்திரவாதம் கேக்குறாப்புல.

            "அய்யோ சார்! அந்த எடத்தெ வுடுங்க. அதுக்கு நாம்ம ஒத்துக்கிறேம்ன்னே வெச்சுக்குங்க! அடுத்ததெப் பத்திச் சொல்லுங்க. எப்ப அனுப்பலாம், எப்பிடி அனுப்பலாங்ற அடுத்த விசயத்துக்குத் தயவு பண்ணி வாங்க!"ன்னாங்க அந்த அம்மா.

            "அத்து முடியாதும்மா! டிபாசிட்டப் பண்ணி அந்தப் பத்திரத்தக் காட்டணும். லாக்கர்ர ஓப்பன் பண்ணி சாவிய எம் பொண்ணு கையில ஒப்படைக்கணும்! அதுக்குப் பெறவுதாம் நாம்ம பொண்ண அனுப்புவேம்! அதுல எந்த மாத்ததும் கெடையாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரே வார்த்தையா பிடிவாதமா.

            "பணத்தெ டிபாசிட் பண்ணுறதுன்னா எஞ்ஞ? லாக்கர்ர ஓப்பன் பண்ணுறதுன்னா எஞ்ஞ? அதெ தெளிவா சொல்லணுமா இல்லியா?"ன்னாங்க அந்த அம்மா.

            "அத்து அவுங்களுக்கு வசதிப்பட்டாப்புல பாக்குக்கோட்டையில பண்ணாலும் செரித்தாம், சென்னைப் பட்டணத்துல பண்ணிக்கிட்டாலும் செரித்தாம். பண்ணுறது கவர்மெண்ட் பாங்கியிலத்தாம் பண்ணணும். தனியாரு பாங்கியிலப் பண்ணிடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட நெலைப்பாட தெளிவா.

            "செரி பொண்ணு வூட்டுத் தரப்புல சொல்லிப்புட்டாங்க. ஏம்பா டாக்கடரு மாப்புள அதுல செய்யுறதுல ஒஞ்ஞளுக்கு எந்தச் சிரமமும் இருக்காதுன்னு நெனைக்குறேம். அதெ பண்ணிட்டு என்னிக்கு அவுங்க கேக்குற மாதிரிக்கி பத்திரத்தோடயும், லாக்கரோடயும் வார்றீயே? அதெச் சொல்லுங்க மொதல்ல!"ன்னாங்க அந்த அம்மா.

            "மேடம் வாயிக்கு வக்கனையா யாரு வாணாலும் எப்பிடி வாணாலும் பேசலாம். சொன்னபடி நடப்பாங்களா?"ன்னாம் பாலாமணி இப்போ எழும்பி நின்னு.

            "அதுக்கு நாம்ம பொறுப்பு. நீஞ்ஞ நம்பலாம். அவுங்க சார்பா அதுக்கு நாம்ம உத்தரவாதம் தர்ற தயாரா இருக்கேம்!"ன்னாங்க அந்த அம்மா எல்லாத்துக்கும் பொறுப்ப ஏத்துக்கிறாப்புல.

            "பத்திரத்தையும் லாக்கரையும் கையில வாங்கிட்டு டிவோர்ஸ் கேஸ்ஸப் போட்டு நம்மையும் நம்மட பொண்டாட்டியையும் பிரிச்சிட மாட்டாங்கறதுக்கு ன்னா உத்திரவாதம்? அதெ சொல்லுங்க!"ன்னு தடார்ன்னு மேசையத் தட்டுனாம் பாலாமணி. அவ்வேம் அப்பிடி படார்ன்னு தட்டுனதுல அந்த அம்மாவே ஒரு நிமிஷம் அதிர்ந்துதாம் போனாங்க.

            "ன்னப்பா இவ்ளோ நேரமா ஒரு மாதிரியாப் பேசிட்டு, யிப்போ வேற மாதிரியா பேசுறே?"ன்னாங்க அந்த அம்மா அதிர்ச்சியானாப்புல.

            "அவுங்க நிக்குறதெ பணங்காசியையும், நகெநட்டையும் வாங்கிட்டு நம்மள வெத்தாள வுடறதுக்குத்தாம் மேடம். அத்து அவுங்க கைக்குப் போயிட்டா நம்மள அம்போன்னு வுட்டுப்புட்டுப் போயிட்டே இருப்பாங்க அவுங்கப் பாட்டுக்கு எம் பொண்டாட்டிய அழைச்சிக்கிட்டு. பெறவு காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்தி வந்தவன் தள்ளிக்கிட்டுப் போனாப்புல இன்னொரு கலியாணத்தையும் பொண்ணுக்குப் பண்ணி வெச்சிப்புடுவாங்க. நல்லா தெளிவா திட்டம் பண்ணிட்டு வந்து உக்காந்துக்கிட்டுப் பேசிட்டு இருக்காங்க. நல்லா புரிஞ்சிக்கோங்க மேடம்! அவுங்க பிரிச்சி வுடணும்ன்னு நிக்குறாங்க. நாம்ம சேந்து வாழணும்ன்னு நிக்குறேம்! ஊரான் வூட்டு நெய்யேன்னானாம், எம் பொண்டாட்டிக் கையேனானாம்!"ன்னாம் பாலாமணி நின்ன நெலையிலயே.

            "சேர்ந்து வாழ வர்றதுன்னா பணங்காசி, நகெநட்டு எல்லாத்தையும் பண்ணிடறதுல ஒஞ்ஞளுக்கு வேற ஒண்ணும் மாத்துக் கருத்தில்லியே?"ன்னாங்க அந்த அம்மா மனசுல இருந்த கோவத்தக் காட்டிக்கிடாம சமாதானம் பண்ணுறாப்புல.

            "சேந்து வாழ வர்றேன்னு சொல்லட்டும். நூத்து சவரன் ன்னா? எரநூத்து சவரனெ போட்டு அழைச்சிட்டுப் போறேம்! பத்து லட்சம் ன்னா, இருவது லட்சத்தெ டிபாசிட் பண்ணிட்டு அழைச்சிட்டுப் போறேம்! பொண்டாட்டியப் பிரிஞ்சித் தவியா தவிச்சு நிக்குறேம் மேடம் நாம். வூட்டுச் சாப்பாட்ட சாப்புட்டு பல மாசங்களாச்சு. சென்னையில ஓட்டல் சாப்பாட்ட சாப்புட்டுப்புட்டு வவுறு வெந்துக் கேடக்குறேம் மேடம். நாம்ம சேந்து வாழணும் எம் பொண்டாட்டிக் கூட. அத்து ஒண்ணுதாம் எம்மட ஒரே லட்சியம்! அதுக்காகத்தாம் இன்னிக்கு ஒஞ்ஞ மின்னாடி வந்து நிக்குறேம். சென்னைப் பட்டணத்துல இந்த தமிழ்நாட்டுல நாம்ம எவ்ளோ பெரிய டாக்கடருங்றதெ வெசாரிச்சிப் பாருங்க தெரியும். அதயெல்லாம் ச்சீய்ப் போன்னு தூக்கி எறிஞ்சிட்டு பொண்டாட்டி வேணும்ன்னு இஞ்ஞ வந்து வெக்கம் கெட்டு நிக்குறேம். சேந்து வாழணும்ன்னு தவிக்கிறேம்! அவ்வளவுதாம் சொல்லுவேம் மேடம்!"ன்னாம் பாலாமணி ஆத்திரப்பட்டவனெப் போல.

            அதே கேக்க ஒடனே வேகப்பட்டு விகடு எழுந்திரிச்சாம், "சேந்து வாழணும்ன்னு தவியா தவிக்குறவங்கத்தாம் தூக்க மாட்டிக்க விடுவாரா? பஞ்சாயத்தெ வெச்சி பைத்தியம் பிடிச்சி அலையட்டும்ன்னு பண்ணுவாரா? வக்கீல் நோட்டீஸ அனுப்பி, போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் கொண்டுப் போயி நிறுத்தி, இப்போ இஞ்ஞ வரைக்கும் நிறுத்துவாரா?"ன்னாம்.

            "பழசெப் பேசாதீயேன்னு சொல்லித்தாம் ஆரம்பிச்சேம். அதெ மறந்துப்புடக் கூடாது. இப்போ பேசுறதோட மொத முக்கியமான விதிப்பாடே அதுதாங்!"ன்னாங்க அந்த அம்மா விகடுவெ கண்டிப்பான பார்வையப் பாத்துக்கிட்டு.

            "அதெ வுடுங்க மேடம்! எம் மச்சாம்தான்னே பேசுறதுக்கு உரிமெ இருக்கு. என்ன வாணாலும் பேசட்டும். நாலு அடி வாணாலும் அடிக்கட்டும். அதெ வாங்கிக்கிறேம். அந்த அளவுக்குத் தப்ப பண்ணிருக்கிறதெயும் ஒத்துக்கிடுறேம்!"ன்னாம் பெரிய மனுஷனப் போல பாலாமணி அதுக்கு.

            வெசாரணை அதிகாரி அம்மா ஒரு நிமிஷம் போட்டிருந்த மூக்குக் கண்ணாடிய கழட்டிக்கிட்டு ஒரு பெருமூச்ச விட்டுக்கிட்டாங்க. "பணம் நகெய வாங்கித் தர்றது எம் பொறுப்பு. உசுருக்கு உத்தரவாதம் பண்ணுறதும் எம் பொறுப்பு. இப்பச் சொல்லுங்க பொண்ண பெத்த பெரியவரே!"ன்னாங்க அந்த அம்மா சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            "நாம்ம கண்ணால டிபாசிட்டுப் பத்திரத்தையும், லாக்கரு சாவியையும் பாத்தாத்தாம் நம்புவேம். பொண்ண அனுப்புவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதே பழைய பல்லவியப் பாடுறாப்புல.

            ஒடனே அந்த அம்மா சுப்பு வாத்தியார்ரப் பாக்குறத விட்டுப்புட்டு விகடுவெப் பாத்து, "அப்பா வயசானவரு. சில விசயங்கள்ல பிடிவாதமா நிக்குறவரு. அந்தக் காலத்து ஆளும் கூட. அதெ நாம்ம புரிஞ்சிக்கிறேம். நீஞ்ஞ இந்தக் காலத்துப் பையேம். தங்காச்சிய அனுப்பி வுடுறதுல சம்மதமா?"ன்னாங்க.

            "ஒஞ்ஞளுக்கு எத்தனெ பொண்ணு புள்ளீயோ?"ன்னாம் விகடு.

            "அதெ ஏம் கேக்குறீயே?"ன்னாங்க அந்த அம்மா ஒண்ணும் புரியாம.

            "அதெ சொன்னாத்தாம் எந் தங்காச்சிய அனுப்புறதா வாணாமான்னு சொல்லுவேம்!"ன்னாம் விகடு பிடிவாதமா.

            "ரண்டு. ரண்டும் பொண்ணுதாம்!"ன்னாங்க அந்த அம்மா.

            "கலியாணம் ஆயிட்டா?"ன்னாம் விகடு.

            "அதெ ஏம் கேக்குதீயே சம்பந்தம் இல்லாமா?"ன்னாங்க அந்த அம்மா எரிச்சலா.

            "நீஞ்ஞ பதிலச் சொன்னாத்தாம் நாமளும் பதிலச் சொல்லுவேம்!"ன்னாம் விகடு பிடிவாதமா நிக்குறாப்புல.

            "படிச்சிட்டு இருக்குதுங்க காலேஜ்ல! நாம்ம லேட் மேரேஜ்ப்பா. இல்ன்னா இந்நேரம் கலியாணத்தப் பண்ணி பேரப் புள்ளீயோளப் பாத்திருப்பேம்!"ன்னாங்க அந்த அம்மா மறுக்கா ஒரு பெருமூச்ச விட்டுக்கிட்டு.

            "ஒஞ்ஞப் பொண்ணுன்னா இந்த மாதிரி நெலமெ வந்து அனுப்புவீயன்னா நாம்மளும் தாராளமா அனுப்பச் சம்மதிக்கிறேம்! ஒருவேள இந்த மாதிரி நெலமையில அனுப்ப மாட்டேம்ன்னு நெனைச்சீயன்னா நாமளும் அனுப்ப மாட்டேம்மா! அதாங் நம்மளோட பதிலு!"ன்னாம் விகடு அந்த அம்மாவப் பாத்து.

            அந்த அம்மாவுக்கு மொகத்துல தாங்க முடியாத எரிச்சலும், அதிர்ச்சியும் உண்டாயிடுச்சு. அவுங்க மொகம் கோவத்துல கடுகடுக்க ஆரம்பிச்சிடுச்சு.

            "எம் குடும்பத்தெ இழுத்து, எம் பொண்ணுகள இழுத்து இதுல ஏம் பேசுதீயே? ஏம் பேசுதீயேன்னு கேக்குறேம்? ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி பஞ்சாயத்துகளப் பண்ணி வுட்டுப்புட்டு ராத்திரி போயி படுக்குறப்போ எம் பொண்ணுகள எப்பிடி கலியாணத்தப் பண்ணிக் கொடுக்கப் போறேம், கலியாணத்துக்குப் பெறவு என்னா பெரச்சனெ வர்றப் போவதுன்னு தூங்க முடியாம தவிக்கிறேம் தெரியுமா? நீஞ்ஞ நம்மள டென்ஷன் பண்ணிட்டீயே! சித்தெ நேரம் எல்லாம் போங்க வெளியில! ஒங் குடும்பத்துப் பெரச்சனையா பேசுனா எதுக்குப்பா நீயி எங் குடும்பத்தெ இழுக்குறே? போப்போ மொதல்ல வெளியில!"ன்னு தலையில கைய வெச்சிக்கிட்டு அந்த அம்மா உக்காந்துட்டாங்க. அதெ பாத்த எல்லாருக்கும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. எல்லாரும் எழுந்திரிச்சி வெளியில வர்றாப்புல ஆயிடுச்சு.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...