13 Nov 2020

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி

            “சார்! ரிட்டையர்மெண்டுக்குப் பின்னாடி ஒரு கோடி வர்றாப்புல ஒரு சூப்பர் ப்ளான் இருக்கு சார்!”

            “ரிட்டையர்மெண்டுக்குப் பின்னாடி ஒரு கோடிய வெச்சுக்கிட்டு நான் என்னடா பண்ணப் போறேன்?”

            “என்னா சார்! இப்படிச் சொல்லிட்டீங்க?”

            “வேற எப்பிடிடா சொல்லச் சொல்றீங்க? மாசா மாசம் இயெம்ஐ கட்ட வெச்சிக் கொடுமெ பண்ணுறது பத்தாதுன்னு அடுத்த கொடுமெயையும் பண்ண கௌம்பிட்டீங்களடா?”

            இந்தப் பதிலுக்குப் பிறகு அந்த நபர் எட்டி பார்ப்பதே இல்லை. பாவம் அவர்தான் என்ன செய்வார்? அவர் பிழைப்பை அவர் பார்க்கிறார். ஆனால் மற்றவர்களின் பிழைப்பை நாறடித்து விடுகிறார். பாவம் இன்றைய மனிதர்கள் மாதத் தவணை கட்ட பிறப்பெடுத்தவர்கள் போல வாழ்கிறார்கள். வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை, வாகனக் கடனுக்கான மாதத் தவணை, கடன் அட்டைக்கான மாதத் தவணை, தனிநபர் கடனுக்கான மாதத் தவணை, வீட்டு உபயோகப் பொருட்களுக்கான மாதத் தவணை, விலையுயர்ந்த கைபேசிக்கான மாதத் தவணை, ஆயுள் காப்பீட்டுக்கான மாதத் தவணை, மருத்துவக் காப்பீட்டுக்கான மாதத் தவணை என்று இந்த மாதத் தவணைகளின் பட்டியலைச் சொல்லி மாளாது.

            அதிகபட்சமாக ஒரு இந்தியரின் கனவு என்பது கடனை வாங்கி வீட்டு மனையை வாங்குவதும், வாங்கிய மனையில் மற்றொரு கடனை வாங்கி வீட்டைக் கட்டுவதும், இருக்கின்ற நகைளை அடகு வைத்துப் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதும், கடைசிக் காலத்தில் மருத்துவச் செலவுக்குக் காசில்லாமல் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு நோய் போன்ற நோய்களோடு போராடுவதுமாக இருக்கிறது. நிறைய இந்தியர்களின் நினைப்பில் ஒரு தவறான கருத்து உறைந்து கிடக்கிறது. அது என்னவென்றால் உடலைச் சரியாகப் பராமரிக்காமல் போனதால் கடைசிக் காலத்தில் இப்படி நோய்களோடு போராட வேண்டியிருக்கிறது என்று. அது முழுமையான உண்மையன்று. நாம் பராமரிக்க தவறினாலும் சரிதான், பராமரிக்க மறந்தாலும் சரிதான் உடலுக்குத் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இவ்வளவு மாதத் தவணைகள் மற்றும் கடன்களோடு ஒரு இந்தியர் போராடினால் அதனால் உண்டாகும் மனச்சுமைகளைத் தாங்க முடியாமல் ஓர் இந்தியரின் உடல் தன்னைத் தானே கைவிட்டு விடுகிறது. அதன் முழு கவனமும் கடன் மற்றும் மாதத் தவணைகளைச் சமாளிப்பதிலே போய் தன்னைப் பற்றிய பிரக்ஞையை உடல் இழந்து விடுகிறது. ஓர் இந்தியரின் உடலுக்குத் உடனடி தேவை இது போன்ற மனச்சுமைகளிலிருந்து விடுதலைதான்.

            இப்போது சொல்லுங்கள்! ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் ஒரு கோடியை வைத்துக் கொண்டு இது போன்ற நோய்களுக்கான மருத்துவத்தைச் செய்து கொண்டிருப்பீர்களா? ஒரு கோடியை வைத்து நிம்மதியாக அனுபவிப்பீர்களா?

            இத்துடன் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். ஓய்வுக் காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரு கோடி என்பது அப்போது இப்போதைய ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மதிப்பு குறைந்து போய் கிடக்கும் என்பதையும்.

            வருங்காலத்துக்குத் திட்டமிடச் சொல்லி நிகழ்காலத்தைப் பரபரப்பாக்குவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். நிகழ்காலத்தை நிதானமாக வாழ்பவர்களுக்கு வருங்காலமும் நிதானமாகவே அமைகிறது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...