பேசியது நான்தான்! குரல் என்னுடையதல்ல!
செய்யு - 625
கைப்புள்ள பங்காளி வகையறாவுல ஒரு பொண்ணு.
நல்ல வெதமா கலியாணங் கட்டிக் கொடுத்த பொண்ணுதாம். ஒரு நாளு திடுதிப்புன்னு பொறந்த
வூட்டுக்குக் கண்ணீரும் கம்பலையுமா வந்து நின்னுச்சு. புருஷங்கார்ரேம் இன்னோரு பொண்ண
தொடுப்பா வெச்சிக்கிட்டு இந்தப் பொண்ண ஓடுடி ஒம் அப்பம் வூட்டுக்குன்னு தொரத்தி
வுட்டுப்புட்டாம். தொரத்தி வுட்டவேம், "அப்பம் வூட்டுல போயி பவுனு நகெயோட,
பணங்காசியையும் வாங்கிட்டு வந்தா வா! ல்லன்னா அத்தோட போயிடு! நாம்ம இவளெ மறுகலியாணம்
கட்டிக்கிட்டு சொகமா இருந்துக்கிறேம்!"ன்னுட்டாம். கட்டிக் கொடுத்த பொண்ணு
இப்பிடி வந்து நின்னா அதெ போறந்த வூட்டுல எப்பிடி தாங்க முடியும்? ஓகையூரு கைப்புள்ளைக்குத்
தகவலெ கொடுத்து அந்தப் பொண்ண கட்டிக் கொடுத்தவங்கிட்டெ போயி ஞாயம் பேசுனா, அவ்வேம்
என்னவோ ஜில்லா கலக்டரு மாதிரிக்கி ஆய் ஊய்ன்னு பேசப் போனவங்ககிட்டெ உத்தரவு போடுறாம்.
"சொன்ன மாதிரிக்கி நகெ நட்டு, காசிப்
பணத்தோட பொண்ணக் கொண்டாந்து வுட்டா வுடுங்க! ல்லாட்டி இந்தாங்க காயிதம். இதெ கொண்டுப்
போயி பொண்ணுகிட்டெ கொடுத்து ஒரு கையெழுத்த வாங்கிக் கொடுத்துப்புட்டு வெட்டிக்கிட்டுப்
போயிகிட்டெ இருங்க! இதெ மீறி பொண்ணக் கொண்டாந்து வெச்சி குடித்தனம் வைக்க நெனைச்சா,
பொண்ணுக்கு அவ்சாரிப் பட்டத்தெ கட்டி பொண்ண நாயடி பேயடி அடிச்சிக் கொண்டாந்து ஊருல
வுடுவேம்!"ன்னிருக்காம் அந்தப் பயெ. இப்பிடிப்பட்ட பயலுகிட்டெ போயி மேக்கொண்டு
என்னத்தெ ஞாயம் வைக்குறதுன்னு கெளம்பி வந்தப்போத்தாம், கைப்புள்ள ஒரு யோசனையா பொண்ணு
வூட்டுக்கார பங்காளி வகையறாவுக்கு அந்த யோசனையச் சொன்னாரு. "போலீஸ் ஸ்டேஷன்னுப்
போயி நிக்கறதெ வுட, சாமர்த்தியமா இவங்கிட்டேயிருந்து கழண்டுக்கிறதுதாங் நல்லது. பயலுக்குப்
பல பேத்தோட தொடுப்பு இருக்குறதா விசாரிச்சிப்புட்டேம். இந்தப் பயலல்லாம் பொம்பளச்
சீக்கு வந்து சாவப் போறவேம். இவ்வேங்கிட்டெ பொண்ணக் கொண்டுப் போயி வுட்டு, காசி
பணத்தையும் கொடுத்து சீரழியறதெ வுட, அவ்வேம் சொன்னாம் பாருங்க காயிதத்தெ கொடுத்து
கையெழுத்து வாங்கிட்டு வான்னு அதுக்குச் சரியான பதிலடி கொடுக்குறாப்புல ஒரு வக்கீலு
நோட்டீஸ வுட்டா என்னா?"ன்னு.
மாப்புள்ளக்கார பயெ பேசுனதுல ஆத்திரத்துல
இருந்த பொண்ணு வூட்டுக்கார பங்காளி ஆளுங்க, "எம்மாம் காசி செலவானும் பரவாயில்ல!
வெக்காலி சொத்தே அழிஞ்சாலும் பரவாயில்ல! இருக்குறதுலயே ஒசத்தியான ஒரு வக்கீலப் பாத்து
வுட்றா கைப்புள்ள நோட்டீஸ!"ன்னுட்டாங்க. ஒடனே செயல்ல எறங்குறாப்புல அப்போ மாப்புள்ள
பயலெ திருப்திப் பண்ணி கையில ஒரு முப்பத்தாயிரத்தெ கொடுக்கலாம்ன்னு எடுத்துட்டுப்
போன காசியில பத்தாயிரத்தெ எடுத்து கைப்புள்ளகிட்டெ கொடுத்து இருக்காங்க. கைப்புள்ள
அந்தப் பத்தாயிரத்துலேந்து ஐநூத்து ரூவாய மட்டும் உருவி எடுத்துக்கிட்டு, "இத்துப்
போதும். இதுல முந்நூத்து ருவா வக்கீலுக்கு. எரநூத்து ரூவா நாம்ம நாம்ம வண்டியில பெட்ரோல்ல
போட்டு அலையுறதுக்கு! ஒரு பத்தே நாளு பொறுங்க! அவனெ என்னப் பண்ணணுமோ அதெ பண்டிப்புடலாம்!"ன்னு
கெளம்புனவருதாம். இனி அடுத்த கதெ ஒண்ணு சொன்னாத்தாம் கைப்புள்ள பண்டுன காரியம் வௌங்கும்.
வக்கீலு திருநீலகண்டனோட கைப்புள்ளைக்குத்
தொடர்பு ஏற்பட்ட கதெ ஒரு சின்ன கதெ. ராமேஸ்வரத்துக்கு அமாவாசையப்போ தர்ப்பணம் கொடுக்குற
ஆளுகளுக்காக பூசை வைக்கப் போறப்போ நடந்த கதெ அது. ரமேஸ்வரத்துல வக்கீலு திருநீலகண்டனோட
பணங்காசி, சாமாஞ் செட்டுக அனைத்தையும் களவாணிப் பயலுவோ ஆட்டையப் போட்டதுல தர்ப்பணம்
கொடுக்கப் போன ஆளு, அனாதியா நின்னிருக்காரு. கூட வயசான தாயார வேற அழைச்சிக்கிட்டு
வந்ததுல தவிச்சிப் போயி நின்னிருக்காரு. எதேச்சையா கைப்புள்ள திருநீலகண்டனப் பாக்க,
திருநீலகண்டன் கைப்புள்ளையப் பாக்க, "ன்னா ஊரு? ன்னா பண்ணணும்?"ன்னு கைப்புள்ள
கேக்க, திருநீலகண்டன், "திருவாரூரு!"ன்னு கையப் பெசைஞ்சிக்கிட்டு நின்னதும்,
"அட நம்ம ஊர்ரா?"ன்னு பிடிச்சிக்கிட்டாரு கைப்புள்ள. திருநீலகண்டன் அம்போன்னு
நிக்குற கதெயெச் சொன்னதும், இவரே தங் கைகாசியில அவரு செய்ய வேண்டிய அத்தனெயையும்
பண்ணி முடிச்சிட்டு, கையோடு காசியச் செலவு பண்ணி திருவாரூரு வரைக்கும் கொண்டாந்ததோடு,
வூடு வரைக்கும் ஆட்டோ வெச்சிக் கொண்டுப் போயி விட்டுப்புட்டு வந்தாரு. அதிலேந்து
திருநீலகண்டனுக்கும் கைப்புள்ளைக்கும் பழக்கமாயி ரொம்ப நெருக்கமாப் போயிடுச்சு. அந்தத்
தொடர்பெ வெச்சிக்கிட்டு திருநீலகண்டங்கிட்டெப் போயி நின்னாரு கைப்புள்ள.
திருநீலகண்டன் கைப்புள்ளையப் போல ஆளு
உசரம், தாட்டிகம், சிவப்பு எல்லாம். ஐயரு குடும்பத்து ஆளுன்னாலும் சகஜமா பழகுற ஆளு.
நம்ம கைப்புள்ள அவரோட ஆபீஸ்ல் போயி நின்னதும், "கோவில்ல நிக்க வேண்டிய ஆளுக்கு
கோர்ட்டுல ன்னா வேல?"ன்னுத்தாம் சிரிச்சிக்கிட்டெ கேட்டுருக்காரு திருநீலகண்டன்.
கைப்புள்ள விசயம் இன்ன மாதிரின்னு சொன்னதும், திருநீலகண்டன் அந்தப் பயலோட அட்ரஸ மட்டும்
வாங்கிக்கிட்டு மூணே நாள்ல ஒரு வக்கீலு நோட்டீஸ தாட்டி வுட்டாரு. கைப்புள்ள நோட்டீஸ
தட்டி வுடுறதுக்குக் கொடுத்த முந்நூத்து ரூவாயையும் திருநீலகண்டன் வாங்கிக்கிடல. பணத்தெ
வேற வகையில வாங்கிக்கிறேம்ன்னு அனுப்பிச்சி விட்டுப்புட்டாரு.
சரியா எண்ணி அஞ்சாவது நாளு பொண்ணுவூட்டுக்காரனுவோ அலறியடிச்சிக்கிட்டு கைப்புள்ள வூட்டு மின்னாடி
நின்னானுவோ. இதென்னடா வக்கீலு நோட்டீசு அனுப்புனதுல மாப்புள்ள வூட்டுக்காரனுவோ அலறியடிச்சுட்டு
வந்தா அதுல ஒரு ஞாயம் இருக்கு, இங்க என்னான்னா பொண்ணு வூட்டுக்காரனுவோல்லா அலறியடிச்சிட்டு
வந்திருக்கானுவோ, திருநீலகண்டம் வக்கீலு அனுப்புற நோட்டீஸ்ஸ பொண்ணு வூட்டுக்கு மாத்தி
அனுப்பிப்புட்டாரான்னு கைப்புள்ளைக்குச் சந்தேகமாப் போயிடுச்சு. பெறவுதான் வெசயம் தெரியுது.
திருநீலகண்டன் அனுப்புன வக்கீல் நோட்டீஸ்ல மாப்புள்ளக்காரப் பயெ மருந்துக் குடிச்சிப்புட்டதா
சேதி வந்ததும் அரண்டுப் போயிட்டானுவோ பொண்ணு வூட்டுக்கார ஆளுங்க நம்ம மேல எதாச்சும்
கேஸூ வந்துப்புடுமோன்னு. அதே நேரத்துல மனசுக்குள்ள சந்தோஷமும் தாங்கல. மனசுல சந்தோஷம்ன்னாலும்
கேஸ்ல மாட்டுன்னா துக்கமா போயிடுமேன்னு கைப்புள்ளையப் பாக்க ஓடோடி வந்துட்டாவோ. “இதுக்கு
நீஞ்ஞ ஏம்யா பயப்படுதீயே? அப்பிடிக் கேஸான்னா நோட்டீசு வுட்ட வக்கீலு மேலத்தாம் கேஸாவும்.
கோர்ட்டுல கேஸ்ஸ நடத்துற வக்கீலு மேல கேஸான அதுவும் அவருக்கு கேஸாப் போச்சுதுன்னு அந்த
ஆளு ஜக ஜோரா அதெ பாத்துப்பாம்! அன்னா தெனாவெட்டா அன்னிக்குப் பேசுன பயெ இன்னிக்கு இன்னா
நெலயில வுழுந்துட்டான்னா அதுக்குக் காரணம் அந்த நோட்டீசுதாம்யா, அதெ வுட்ட வக்கீலுதாம்யா.
அவனெ வாஞ்ஞய்யா கொண்டாடிப் போடுவோம்!”ன்னாரு கைப்புள்ள. ஒடனே ஒரு கார்ரப் பிடிச்சி
கோர்ட்ல இருந்த திருநீலகண்டன பிடிச்சாந்து ஓட்டல் செல்வீஸ்ல வெச்சி ஒரு பார்ட்டியக்
கொடுத்துக் கொண்டாடித் தீத்தானுவோ. அன்னிக்கு மட்டுமே பத்தாயிரத்தக் கரைச்சிக் காலி
பண்ணானுவோ பொண்ணு வூட்டுக்கார பங்காளி வகையறா.
மருந்த குடிச்ச மாப்புள்ளக்கார்ரன எப்பிடியோ
ஆஸ்பத்திரியில சேத்து அவ்வேம் தேறி வந்த பாஞ்சாவது நாளுக்குள்ள திருநீலகண்டன் தன்னோட
ஆபீஸ்லயே பொண்ணு வூட்டுக்கார்ரேம், மாப்புள்ள வூட்டுக்கார்ரேம் ரண்டு தரப்பையும் வர
வெச்சி பஞ்சாயத்தப் பண்ணி, பொண்ணுக்குன்னு பொண்ணு வூட்டுல போட்டு வுட்ட நகெ நட்டு,
சீர்வரிசெ சாமாஞ்செட்டுன்னு அத்தனையையும் தன்னோட ஆபீஸூக்குக் கொண்டு வர வெச்சி அதெ
அப்பிடியே பொண்ணோட தகப்பங்கார்ரேம் கையில ஒப்படைச்சி வுட்டு, அதுலேந்து அஞ்சு பவுனு
நகைய மட்டும் தன்னோட பீஸா எடுத்துக்கிட்டதுதாம். வேற இந்த வெவகாரத்துக்காக பைசா காசி
வாங்க்கிடல. அதுலயே வெவகாரத்து கேஸையும் போட்டு முடிச்சி வுட்டு, பொண்ணுக்கு இன்னொரு
எடத்துல மாப்புள்ளையப் பாக்க வெச்சி, வெவகாரத்து கேஸூ நடந்துக்கிட்டு இருக்கிறப்பவே
“பண்ணுங்க கல்யாணத்த ஜோரா. என்ன பெரச்சனெ வந்தாலும் பாத்துடுறேம்!”ன்னு கலியாணத்தையும்
மின்னாடி நின்னு முடிச்சி வுட்டவருதாம் திருநீலகண்டன்.
இந்தச் சேதியத்தாம் தன்னைப் பாக்க வந்த
சுப்பு வாத்தியார்கிட்டெ மொத தகவலா சொன்னாரு கைப்புள்ள. அதெ சுவாரசியமாக் கேட்டுக்கிட்டு
இருந்த சுப்பு வாத்தியாரு, "மாப்புள்ளக்கார்ரேம் மருந்தெ குடிக்குறாப்புல அப்பிடி
ன்னா நோட்டீஸ அனுப்புனாம் அந்த வக்கீலு?"ன்னு கைப்புள்ளையப் பாத்துக் கேட்டாரு.
"சரியான கிராதகமுங்க அந்த வக்கீலு!
ஒரு நோட்டீஸ்ல அந்தப் பயலோட அக்காக்காரி, தங்காச்சிக்காரி, அவ்வேம் வெச்சிருந்த தொடுப்புக்காரின்னு
அத்தனெ பேரையும் இழுத்துப்புட்டு, அவ்வே இவனெ வெச்சிருக்காம், இவ்வேம் அவனெ வெச்சிருக்கான்னு
எல்லாத்தையும் பத்தி வெவரத்தெ கலக்ட் பண்ணிக் கோத்து எழுதிப்புட்டாம். பூராவும் இவ்வேம்
அடிச்ச கதெதாம். இருந்தாலும் இப்போ ஒஞ்ஞளுக்கு வந்த நோட்டீஸப் பாத்து நீஞ்ஞ எப்பிடி
மெரண்டுப் போயிருக்கீங்க? அந்தப் பயெ நாம்ம இந்த அளவுக்கு எறங்குவோம்ன்னு எதிர்பாக்காம
இருந்துட்டாம்! எறங்குனதும் அவ்வேம் இதெ எதிர்பாக்கல. அவ்வேம் ஆளு கவர்மண்டு வேலக்கார்ரேம்.
அவனெப் போயி விபச்சார கேஸ்ல உள்ள பிடிச்சிப் போட்டு வேலைய வுட்டுத் தூக்கிப் புடுவேம்ன்னு
நோட்டீஸப் போட்டா ஆளு பீதியில பேதியாயி, மருந்தெ குடிச்சிப்புட்டாம். நம்ம வக்கீலு
ஆளு எம்மாம் கிராதகம்ன்னா அவனோட வுடாம அவ்வேம் அக்காக்ககாரி, தங்காச்சிக்காரின்னு
பூரா பேத்துக்கும் ஒரு நோட்டீஸ வஞ்சகம் யில்லாம தட்டி வுட்டுருக்காம். அதுல மெரண்டப்
பயத்தாம் மருந்தெ குடிச்சிப்புட்டாம். இதெப் பத்தி வக்கீலே பெறவு சொல்லிட்டுச் சிரிச்சாம்
பாருங்க, ‘நம்ம நோட்டீஸூ இந்த அளவுக்குப் போவும்ன்னு எதிர்பாக்கல, இந்தக் கோல பாவத்துக்குல்லாம்
எதாச்சிம் பரிகாரம் இருந்தா சொல்லிப்புடுங்க!’ன்னு. நமக்குத் தெகைப்பாப் போயிட்டு.
ஒஞ்ஞளுக்கு அனுப்பியிருக்கிற நோட்டீஸூக்கு இவ்வேந்தாம் சரியான ஆளு. எப்பிடி பண்ணிக்கலாம்
நீஞ்ஞளே சொல்லுங்க?"ன்னாரு கைப்புள்ள சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
"ஒரு வேள இத்து கேஸான்னா வெச்சுக்கோங்க!
கேஸ்ல ஜெயிக்குற அளவுக்கு அனுபவம்லாம் எப்பிடி?"ன்னாம் விகடு இப்போ கைப்புள்ளயப்
பாத்து.
"என்னாம்பீ இப்பிடிக் கேட்டுப்புட்டீங்க?
ஆளு அவ்வேம் மந்திரிக்கி எதுரான கேஸையே ஜெயிச்சவேம். ஆளெப் பாத்தா வெவரமான ஆளு தெரிய
மாட்டாம். கோர்ட்ல எறங்கிட்டாம்ன்னா கெளரவம் படத்துல சிவாஜி கணேசன் வக்கீலா நடிச்சிருப்பாப்புலல்ல
அந்த மாதிரிக்கி வேஷம் கட்டிட்டு ருத்ர தாண்டவத்தெ ஆடிட்டுத்தாம் நிப்பாம். அந்தக்
கதெயச் சொல்றேம் பாருங்களேம்!"ன்னு ஆரம்பிச்சாரு கைப்புள்ள.
"நாகப்பட்டணத்துல ஒரு மந்திரி இருக்காப்புலல்ல.
ஆத்துல மணலு அள்ளுறதுல அந்த மந்திரிக்கும், எதிர்பார்ட்டி ஆளுக்கும் பெரச்சன ஆயிடுது.
அந்தப் பெரச்சனையில எதிர்பார்ட்டி ஆளு இருக்காம் பாருங்க அவ்வேம் ஒரு வேகத்துல கொன்னோபுடுவேம்ன்னு
நேர்லயே பேசிப்புட்டாம். மந்திரி உஷாராயிட்டாரு. அத்தோட வுடாம ‘இதுல தலையிட்டீன்னா?
மந்திரின்னா ன்னா கொம்பாடா மொளைச்சிருக்கு? உசுருன்னா மந்திரிக்கிம் ஒண்ணுத்தாம்டா?
சாதாரண மனுஷனுக்கும் ஒண்ணுதாடா? ஒரு தடவே போனா போனாத்தாம். உசுரு இருக்குற வரைக்கும்தாம்டா
நீயி மந்திரி’ன்னு போன்ல வேற பேசிப்புட்டாம்.
இதெ மந்திரி அப்பிடியே போன்ல ரெகார்ட்ட பண்ணிருந்திருக்காம். அதெ அப்பிடியே
போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ்ஸாப் போட்டு எதிர்பார்ட்டி ஆளெ கைது பண்ணி ஜெயில்லப் போட்டாச்சு.
கோர்ட்டுல வெசாரணை வருது. வெசாரணை வருதுன்னா ஒரு வக்கீலும் ஆஜராவ மாட்டேங்றாம். மந்திரியப்
பகைச்சுக்கிட்டு எவ்வேம் ஆஜராவாம்? அப்போ நம்ம ஆளு ஜூனியர்ர முடிச்சிட்டு தொழிலு
பண்ண நிக்குறாம். சரியான கேஸூக அமையாம துக்கடா கேஸ்கள எடுத்துக்கிட்டு பொழைப்புக்கே
ரொம்ப செருமம். வாடவைக்குப் போட்ட ஆபீஸையே வாடவ கொடுக்க முடியாம மூடிட்டு வூட்டுலேந்து
பாத்துட்டு இருந்தாம்ன்னா பாத்துக்கோங்க. அப்போ நம்ம வக்கீலு அவனாப் போயி இந்தக்
கேஸ்ஸ எடுத்து வாதாடுனாம் பாருங்க. ஸ்ட்ராங்கான்ன எவிடென்ஸ் இருக்குற இந்தக் கேஸ்ஸ
எடுக்குறது தற்கொலைக்குச் சமம்ன்னு எல்லா வக்கீலும் நம்ம வக்கீலுக்குப் புத்திச் சொல்லுறாங்க.
நம்ம வக்கீலு கேக்குறாப்புல இல்ல. போன்ல நெசமா அவ்வேம் பேசி ரிகார்டு ஆயி கோர்ட்டுல
தாக்கலாயிருந்த எவிடென்ஸ ஒடைச்சாம் பாருங்க. எப்பிடி ஒடைச்சாம்ங்றீயே! ஒரு சிம்பிள்
ஆர்கியூமெண்டுதாங்க. கலைஞரு பேசுறாப்புல தொண்டைய கரகரப்பா வெச்சிக்கிட்டு அப்பிடியே
அச்சு அசலா “தமிழுக்கு மூணெழுத்து, வீரத்துக்கு மூணெழுத்து, காதலுக்கு மூணெழுத்து’ன்னு
பேசி நிறுத்திப்புட்டு, இதெ பேசுனது நாமளா? கலைஞரா?ன்னு ஒரு கேள்விய ஜட்ஜப் பாத்துக்
கேட்டாம் பாருங்க. ஜட்ஜூ சொன்னாரு ‘பேசுனது நீயி, ஆன்னா கலைஞரோட கொரலு’ன்னாரு. அந்த
எடத்துல பிடிச்சாம் பாருங்க நம்ம வக்கீலு, அதெ மாதிரிக்கித்தாம் போன் ரிகார்ட்டுல
பேசுனது எவனோ, ஆன்னா எங் கட்சிக்காரரோட கொரலுலன்னு. ஜட்ஜ் ஒடனே எழுதுனாரு பாருங்க
தீர்ப்ப. எதிர்பார்ட்டிக்கார ஆளு விடுதலெ ஆயிட்டாம். பர்ஸ்ட் கேஸூங்கரேம். எல்லா பயலும்
எடுக்க பயந்துகிட்டு இருந்த கேஸூங்கங்ரேம். தெகிரியமா எடுத்து மொத கேஸ்லய ஜெயிச்சிப்புட்டாம்.
அதுவும் மந்திரிக்கு எதிரான கேசுங்றேம். இப்போ கோர்ட்ல போயி வெசாரிச்சாலும் மந்திரியோட
கேஸ எடுத்து ஜெயிச்ச ஆளுன்னுத்தாம் சொல்லுவாங்க. அந்த வக்கீலுதாம் பதிலு நோட்டீஸூ
வுடவும் சரியான ஆளு, கேஸூன்னு ஆனாலும் ஜெயிக்க தோதான ஆளு! போதுமா வக்கீலப் பத்தி.
இன்னும் சேதி ஏதுவும் வாணுமா?"ன்னாரு கைப்புள்ள.
அதெ நல்லா கேட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
கேட்டுக்கிட்டு கடெசீயா ஒண்ணுத்த மட்டும் கேட்டாரு, "யிப்போ இருக்குற நெலமைக்குப்
பணங்காசின்னு வக்கீலுக்குக் கொடுக்கல்லாம் ஒண்ணுமில்லே. ஆன்னா பணங்காசின்னு கைக்கு
வந்தா கொடுக்குறதுல ஒண்ணும் தாட்சண்யம் இல்ல! அதால வக்கீலுக்குப் பணங்காசின்னு எம்மாம்
கொடுக்கணுங்றதயும் அறுத்துக் கட்டுனாப்புல பேசிப்புடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெப் பத்தி ஒண்ணும் கவலையே வாணாம்.
வகெ தொகெ அறிஞ்சி வாங்குற ஆளு. பணமே கொடுக்க வாணாம். கொடுக்கணும்ன்னு நெனைச்சா நூத்து
ரூவா, அம்பது ரூவான்னு கொடுத்தா போதும். அதெயும் கேக்க மாட்டாம் ஆளு. ஆன்னா எஞ்ஞப்
பாத்தாலும் டீயி, காப்பி, டிபன்னு, சாப்பாடுன்னு ஓட்டல்ல பண்ணிப்புடணும். ஆளு சாப்புட
ஆரம்பிச்சாம்ன்னா அப்பிடிச் சாப்புடுவாம். வேறொண்ணும் சிலவு வைக்க மாட்டாம். நகெ நட்டெ,
பணங்காசிய மாப்புள்ளக்கார்ரேங்கிட்டெயிருந்து வாங்குறப்ப அதெ நம்ம கையிலக் கொடுத்துப்புட்டு,
ஒடனே அவ்வேம் கூலி எம்புட்டோ அதெ மொத்தமா
எடுத்துப்பாம். அதால வழக்கு முடியுற வரைக்கும் ஒஞ்ஞளுக்குப் பைசா காசி செலவில்ல. எதாச்சும்
டைப்படிக்கிறது, சிராக்ஸ் எடுக்குறதுன்னா அதெ ஒஞ்ஞள வுட்டத்தாம் பண்ணிட்டு வரச் சொல்லுவாம்.
அதுக்கு உண்டான காசித்தாம். வேறொண்ணும் காசிச் சிலவு கெடையாது!"ன்னாரு கைப்புள்ள.
"அப்பிடின்னா இந்த வக்கீலுதாம் நமக்குத்
தோதுபட்டு வருவாரு! அவரே என்னிக்குப் போயிப் பாக்கலாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இருங்க போன அடிச்சிக் கேட்டுப்புடுறேம்?"ன்னு
போன அடிச்சாரு கைப்புள்ள வக்கீலு திருநீலகண்டனுக்கு. கேட்டுப்புட்டு ஒடனே சொன்னாரு,
"வர்ற ஞாயித்துக் கெழமெ. காலையில பத்து மணிக்கு ஆபீஸூலப் போயிப் பாத்துப்புடுவேம்!"ன்னாரு
கைப்புள்ள.
“உங்கள நம்பித்தாம் காரியத்துல எறங்குறேம்.
நீஞ்ஞத்தாம் கடெசீ வரைக்கும் இதுல தொணை நிக்கணும்!”ன்னு சுப்பு வாத்தியாரு சொல்லிட்டுக்
கௌம்புறப்போ கைப்புள்ள பையில இருநூத்து ரூவாய திணிச்சாரு.
கைப்புள்ள சிரிச்சிக்கிட்டெ அதெ திருப்பி சுப்பு வாத்தியாரு பையில திணிச்சாரு.
“ஒஞ்ஞளுக்காக அலையுறப்ப நாமளே பெட்ரோல் காசின்னு கேட்டு வாங்கிப்பேம்”ன்னாரு.
*****
No comments:
Post a Comment