20 Nov 2020

பலமுனைத் தாக்குதல்

பலமுனைத் தாக்குதல்

செய்யு - 631

            திருநீலகண்டன் சொல்ல ஆரம்பிச்சாரு. செய்யு எழுத ஆரம்பிச்சா. மித்த அத்தனெ பேரும் அதெ உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சாங்க. கோர்ட் கேண்டீன்லத்தாம் இவ்ளோ வேலையும் நடந்தாலும், இந்த வக்கீலுக்கு இதாங் வேலங்றது மாதிரி யாரும் எதையும் கண்டுக்கிடல. வக்கீல் கோர்ட்டுல எப்பிடி ஏற்ற எறக்கத்தோட குரல ஒசத்தியும் எறக்கியும் வாதாடுவாரோ அதெ பாங்குலத்தாம் காயிதத்துக்கான சேதிகளச் சொன்னாரு.

            "மொதல்ல அப்பிடியே அனுப்புதல் வெலாசத்தப் போட்டு ஒன்னோட செல்போன் நம்பர்ர எழுது. இந்தக் காயிதம் போயிச் சேந்தவுடனே ஒன்னோட நம்பருக்கு கால் மேல காலா வந்துக்கிட்டே இருக்கும். நின்னு பேசுறதுக்கு நேரமிருக்காது. யாரு எதெப் பேசுனாலும் செரித்தாம் யிப்போ காயிதத்துல இருக்குப் பாரு சங்கதி, அதெ அப்பிடியே வாந்தி எடுத்தாப்புல ஒப்பிச்சிடணும். ஒரு வார்த்தெ வாக்கியம் பெசகக் கூடாது பாத்துக்கோ. காலேஜ்ல போயி பாடத்தெ நடத்தப் போற பொண்ணுக்கு அதெப் பத்தியெல்லாம் நம்மால வெவரமா சொல்லிட்டு இருக்க முடியாது பாத்துக்கோ!"ன்னாரு வக்கீலு.

            அனுப்புநர் வெலாசத்த, "எழுதிட்டேம்ங்கய்யா!"ன்னு செய்யு சொன்னதும் அடுத்ததா வக்கீல் சொல்ல ஆரம்பிச்சாரு.

            "பெறுதல்ன்னு போட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னைன்னு எழுது!"ன்னாரு திருநீலகண்டன்.

            செய்யு எழுதிட்டேன்னு சொன்னதும், "மதிப்பிற்குரிய அம்மான்னு எழுதி கமா போட்டு அடுத்ததா பொருள்ன்னு போட்டு, என் கணவர் மீதும் என் மாமியார், மாமனார், நாத்தனார்கள் கொடுமைப்படுத்துவதைத் தண்டிக்கவும் கண்டிக்கவும் வேண்டின்னு எழுதி நிறுத்து!"ன்னு நெத்தியச் சுருக்கி யோசிச்சாரு திருநீலகண்டன். பிறகு கார்ப்பரேஷன் பைப்புலேந்து தண்ணிக் கொட்டுறாப்புல நிறுத்தி நிறுத்தி, கடகடன்னு பல வெதமா சொல்ல ஆரம்பிச்சாரு.

            "நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கும் என் கணவரான பாலாமணிக்கும் 02-11- 2014 இல் பாக்குக்கோட்டை மாடடிக்குமுளை வைரம் திருமண மஹாலில் பெரியோர்களால் நிச்சயத்த வண்ணம் நடைபெற்ற திருமணத்தில் பாலாமணியின் நிர்ப்பந்தத்தின் படி நான்கு சக்கர வாகனம் (கார்) வாங்க, ரூ. 20,00,000/- (ரூபாய் இருபது லட்சம்), திருமணச் செலவுக்காக ரூ. 15,00,000/- (ரூபாய் பதினைந்து லட்சம்) திருமணத்திற்கு முன்பாக எனது பெற்றோரால் கொடுக்கப்பட்டது. எனது கணவரின் தாயாரான சரசுவின் நிர்ப்பந்தத்தின் பெயரில் 200 சவரன் நகை மற்றும் மாப்பிள்ளை சீராக ஐந்து சவரன் கைச்செயினும், ஆறு சவரன் கழுத்துச் செயினும், இரண்டு சவரன் மோதிரமும், மாப்பிள்ளைக்கான ஆடைகள் வாங்க ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) என் ‍பெற்றோர்களால் மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கப்பட்டது. தங்களின் கெளரவம் குறையக்கூடாது என்பதற்காகவும், திருமணம் விமரிசையாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் கட்டாயப்படுத்தியன் பெயரில் திருமண சீர்வரிசையாக பிரிட்ஜ், எல்யீடி டி.வி., வாஷிங்மெஷின், தேக்குமரக்கட்டில், தேக்கு மரப்பீரோல், தேக்குமர டைனிங் டேபிள் மற்றும் நாற்காலிகள், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், வெள்ளிப் பாத்திரங்கள் 50 கிலோவும், பித்தளைப் பாத்திரங்கள் 200 கிலோவும், அத்துடன் விலையுயர்ந்த பட்டு ஆடைகள் உட்பட பலவற்றையும் எனது பெற்றோர்கள் பல இடங்களில் கடன்பட்டும், சொத்துகளை விற்றும் செய்வித்தனர். இவை அனைத்தையும் எனது பெற்றோர்கள் தங்களது சக்திக்கு மீறிய வகையில் செய்வித்துத் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினர். தனது மகள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று இவற்றையெல்லாம் செய்தப் பெற்றோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடையும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் எனக்குச் செய்த வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னை எனது மாமனார், மாமியார், நாத்தனார் உட்பட அனைவரும் சாப்பிட விடாமலும், தூங்க விடாமலும் சித்திரவதை செய்தார்கள். என் கணவர் என்னுடன் வீணாக சண்டையிட்டுத் திட்டியும், அடித்தும், துன்புறுத்தியும் மனமகிழ்வுக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டார். என் மாமியார் மேலும் நகைகள் வேண்டுமென்று துன்புறுத்தி என் தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டார். மேலும் எனது கைபேசியில் எண்ணுக்கு அடிக்கடித் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசிப் புண்படுத்தியும், என்னை என் கணவருடன் சேர்ந்து வாழ வைக்க விட மாட்டேன் என்று கூறியும் என்னை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்குக் கொடுமைபடுத்தினார்கள். தற்போதும் நேரிலும், கைபேசியிலும் தொடர்பு கொண்டு எனக்கு அன்றாடம் கொலை மிரட்டல் விடுத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். என்னை தொடர்ந்து சித்திரவதைகளும், வன்கொடுமைகளும் புரிந்து வரும் எனது மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டுமாறு மதிப்பிற்குரிய தங்கள் சமூகத்தை சிரம் தாழ்ந்து கேட்டுக்கோள்கிறேன்."ன்னு சொல்லி முடிச்சி, "போதும்மா! இதுக்கே அரண்டுப் போயி நடவடிக்கெ எடுப்பானுவோ! பின்னே நம்மகிட்டெ வந்து ஆம்படையான காப்பாத்துங்கோ, ஆம்படையனோட குடும்பத்தெ காப்பாத்துங்கோன்னா நம்மாள ஒண்ணும் பண்ண முடியாது. அம்பு எய்தாச்சு. இனுமே அது பாயுறதெ தடுக்க முடியாது!"ன்னு சொல்லி நிறுத்துனாரு திருநீலகண்டன்.

            அதெ கேட்டதும், "அப்பிடில்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கய்யா!"ன்னா செய்யு.

            "ஏம்ன்னா நம்ம அனுபவம் அப்பிடி. இதெ போல ஒரு கேஸூத்தாம். மகளிர் காவல் நிலையத்துல வெச்சி மாப்புள்ளைய வெளுத்து எடுக்க போறப்போ அதெ தாங்க முடியாம பொண்ணு அழுதுட்டா, அவர்ரே அடிக்காதீங்கோ, அடிக்காதீங்கோன்னு. இன்ஸ்பெக்டர்ரு அந்தப் பொண்ணு எழுதுன காயிதத்தெ மூஞ்சுலயே தூக்கியெறிஞ்சி இதெ நீயி எழுதுனீயா, இந்த வக்கீலு சொல்லச் சொல்ல எழுதுனியான்னு நம்ம மானத்தெ வாங்கிட்டாங்கோ. அப்பிடியும் நமக்கு நெலமை ஆகியிருக்கு. அதாலாத்தாம் சொல்றோம்ங்கோ!"ன்னாரு திருநீலகண்டன் தன்னோட முன் அனுபவத்தெ.

            "அப்பிடில்லாம் ஒஞ்ஞள சிக்கிட வுட மாட்டேங்யா!"ன்னா செய்யு அழுத்தம் திருத்தமா.

            "எழுதுறது முடியல. என் கணவர்ன்னு போட்டு அந்த நாயோட பேரு, விலாசம், செல்போன் நம்பரு அத்தனையைும் எழுது. அதுக்குக் கீழே என் மாமனார்ன்னு அந்த நாயோட போட்டு பேரு, விலாசம், செல்போன் நம்பரு அத்தனையும் எழுது. அதுக்குக் கீழே என் மாமியார்ன்னு போட்டு அந்த நாயோட பேரு, விலாசம், செல்போன் நம்பரு அத்தனையையும் எழுது. அதுக்குக் கீழே என் நாத்தனார்கள்ன்னு போட்டு அந்த நாய்கள் ஒவ்வொண்ணுத்தோட பேரு, விலாசம், செல்போன் நம்பர்கள்ல வரிசைக் கட்டி எழுது!"ன்னாரு திருநீலகண்டன் அலட்சியமா. அவரு சொல்ல சொல்ல ஒவ்வொண்ணா எழுதுனா செய்யு.

            "கீழே எடதுப் பக்கம் ஸ்டேஷன் டேட் போட்டு வலதுப் பக்கம் கையெழுத்தப் போட்டு அதுக்குக் கீழே முன் நகல்ன்னு போட்டு முதலமைச்சர் தனிப்பிரிவோட விலாசத்தை எழுது. அதுக்குக் கீழே நகல்ன்னு போட்டு மாவட்ட ஆட்சியரகம், காவல்துறைக் கண்காணிப்பாளர், சமூக நீதி மையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், வடவாதி காவல் நிலையம்ன்னு ஒண்ணு விடாம அந்த ‍வெவரத்த எழுதி டக்குன்னு முடி பாப்பேம்!"ன்னாரு திருநீலகண்டன்.

            "எழுதி முடிச்சிட்டேம்!"ன்னு செய்யு சொன்னதும், அதெ வாங்கி ஒரு பார்வைய வுட்டாரு திருநீலகண்டன். "பேஷா எழுதிருக்கே கொழந்தே! அப்பிடியே இதெ மாதிரிக்கிப் பெறுதல் விலாசத்த மட்டும் மாத்தி மாவட்ட ஆட்சியருக்கு ஒண்ணு, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு ஒண்ணு, சமூக நீதி மையத்துக்கு ஒண்ணு, அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒண்ணு, வடவாதி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குன்னு எழுதி முடிப் பாக்கலாம்! இதெத்தாம் நாம்ம கையி முறிஞ்சிப் போற வேலன்னு சொன்னேம்!"ன்னு சொல்லிட்டு சிரிச்சாரு திருநீலகண்டன். வக்கீல் சொன்னபடியே ஒவ்வொரு வெலாசத்துக்கும் வேகு வேகுன்னு எழுதி முடிச்சா செய்யு. அவ்வே எழுதி முடிக்கிற வரைக்கும் அவரு சந்திச்ச பல வெதமான கேஸ்களப் பத்தி சிரிப்பாணிக் காட்டிச் சொல்லிக்கிட்டே இருந்தாரு திருநீலகண்டன். "ஒவ்வொரு வழக்கும் ஆரம்பிக்கிறப்பத்தாம் சார் சீரியஸாப் போவும். போவப் போவ டிராஜடியா மாறி கடைசியில காமெடியா முடியும்! எவ்ளோ காலம் ஒரு மனுஷாள் சீரியஸா போவ முடியும் சொல்லுங்கோ. கடெசீயில பாத்தீங்கோன்னா எல்லாம் காமெடியில வந்துதத்தாம் முடிங்சாவணும். வேற வழி?"ன்னும் சொன்னாரு வக்கீலு.

            செய்யு வக்கீல் சொன்னபடி எழுதி முடிச்சதும் ஒவ்வொரு மனுவிலயும் கோர்ட்டு பாக்கெட்டுலேந்து கைய வுட்டு எடுத்து ரண்டு ரூபாய்க்கான கோர்ட் ஸ்டாம்பை ஒட்டச் சொன்னாரு. அதெ ஒட்டி முடிச்சதும் ஒவ்வொண்ணுத்துலயும் ரண்டு செராக்ஸ்ப் போடச் சொல்லி ஒண்ணுத்தெ செய்யுவையும், இன்னொண்ணுத்த தங்கிட்டெயும் கொடுக்கச் சொன்னாரு. அந்த வேல முடிஞ்சதும் ஒவ்வொண்ணுத்தையும் உறையிலப் போட்டு, கலெக்டர் ஆபீஸ்ல் இருக்குற போஸ்ட் ஆபீஸ்லயே ரீஸ்தரு போஸ்ட் வித் அக்நாலேட்ஜ்மெண்டோட அவரே மின்னாடி நின்னு டக்கு டக்குன்னு பண்ணி விட்டாரு.

            எல்லா வேலையும் முடிஞ்ச பிற்பாடு திருநீலகண்டன் சொன்னாரு, "இனுமே ஒம் ஆம்படையானுக்குத் தூக்கம் இருக்காது. நீயும் பிசியாடுவே அடிக்கிற போனுக்கு பதிலச் சொல்லி! ரெண்டு மூணு நாள்லேந்து கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆயிடும். அதுக்குப் பிறகு டெய்லி நமக்கு கமெண்ட்ரி போட்டுக்கிட்டெ இருடா பொண்ணே!"ன்னாரு ஒரு வெடிச்சிரிப்பெ போட்டுக்கிட்டு.

            "எத்தனையோ ராத்திரி நம்மள நிம்மதியில்லாமப் பண்ணுனவேம், ஒரு ராத்திரி நிம்மதியில்லாம கெடந்தா கூட போதும்ங்கய்யா. நாம்ம ஜெயிச்ச மாதிரித்தாம்!"ன்னா செய்யு ஆத்தாமைய தாங்க முடியாம.

            "இனுமே அவனுக்கு ஒவ்வொரு ராத்திரியும் சிவராத்திரிதாம். எந்த ராத்திரியும் இனுமே அவனால தூங்க முடியாது. தூங்கலாம்ன்னு நெனைச்சாலும் நீயி கைப்பட எழுதுன இந்த மனு எல்லாம் அவ்வேம் தூக்கத்துல ஓடிட்டே இருக்கும். இன்னிலேந்த அவனுக்கு ஏழரைச் சனி ஆரம்பமாயிடுச்சுங்றேம். ஒரு பதில் நோட்டீஸ் அனுப்புனா எங்கிட்டெ பேசுறதுக்கு அவனுக்கு அவ்வளவு ஸ்டேட்டஸ் பாக்கத் தோணுதோ? ஆளையா மெரட்டிப் பாக்க ஒங்ககிட்டெ தூது விடுறாம் போக்கத்தப் பயெ. அதுக்குத்தாம் செஞ்சிருக்கேம் இப்படி பல மொனையில தாக்குதல்ல. இனுமே நீங்க நிம்மதியா போயி வூட்டுல தூங்கலாம். அவனால தூங்க முடியாது இனுமே!"ன்னாரு திருநீலகண்டன். அதெ கேக்க கேக்க சுப்பு வாத்தியாரு சந்தோஷமா அன்னிக்கு எல்லாத்துக்கும் செல்வீஸ் ஒட்டல்ல அழைச்சாந்து மத்தியானச் சாப்பாட்ட பண்ணி வுட்டு, திருநீலகண்டன் கையில ஆயிரம் ரூவாயத் திணிச்சாரு. அதெ வாங்கக்கிட்ட வக்கீல், "இன்னும் ஒங்ககிட்டெ நெறைய வாங்குறாப்புல இருக்கும்!"ன்னு சொல்லிச் சிரிச்சாரு.

            "அதுக்கென்னங்கய்யா! உதவுறவங்களுக்கு அதுக்காக ஒழைக்கிறவங்களுக்குக் கேக்குறதெ கொடுக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரும், கைப்புள்ளையும்.

            அன்னிக்கு வூடு வந்துச் சேந்தப்போ எல்லாத்துக்கும் மனசு நெறைவா இருந்துச்சு. வீயெம் மாமாவும், பாக்குக்கோட்டை பழைய பரமசிவமும் வந்துப் பேசிட்டுப் போனது மனசுல அந்த அளவுக்கு எரிச்சல உண்டு பண்ணியிருந்துச்சு. கோர்ட்டு கேஸூன்னுப் போயி அசிங்கப்பட வாணாம்ன்னு அவுங்க சொல்ல சொல்ல, எவ்வளவோ அசிங்கப்பட்டாச்சு அங்கயும் போயி அசிங்கப்படுறதுல தப்பில்ங்ற மாதிரியான மனநெலையத்தாம் உண்டு பண்ணுச்சு. கிராமத்துச் சனங்களுக்கு ஊருதாம் ஒலகம். பஞ்சாயத்து வெச்சு அத்து ஊருக்குத் தெரிஞ்சா ஒலகத்துக்கே தெரிஞ்சதெ போலத்தாம் நெனைப்பாங்க கிராமத்துல இருக்குற சனங்க. அந்த வகையில ஊரு ஒலகம் தெரிஞ்ச ஒண்ணு கோர்ட்டுல தெரிஞ்சிக்கிறதால ஒண்ணும் ஆயிடப் போறதில்ல. அங்கயுந்தாம் போயிச் சொல்லிப் பாப்பேம், கதெ ஆனாலும் செரித்தாம், ஆகாட்டியும் செரித்தாம்ங்ற முடிவுக்கு இப்போ சுப்பு வாத்தியாரு வந்திருந்தாரு. ஒரு நாலு எடத்துல சொல்றப்போ ஆறுதல் கெடைக்கும்ன்னா அதெ சொல்றதுல தப்பேயில்லன்னு விகடுவும் நெனைச்சாம். வக்கீலப் போயிப் பாத்து வந்ததுல, அவரோட பேச்சக் கேட்டு வந்ததுல இப்படி ஒரு மனநெலை மாத்தம் அதுவா உண்டாயிருந்துச்சு.

            ரொம்ப நாளைக்குப் பெறவு செய்யுவோட மொகத்துல ஒரு தெளிவு வந்துச்சுன்னா அத்து இன்னிக்குத்தாம். எதையோ ஜெயிச்சிட்டதா ஒரு நம்பிக்கை அவளுக்குள்ள உண்டானதயும் பாக்க முடிஞ்சிது. சிரிப்பெ பாக்காத அவ்வே மொகத்துல கொஞ்சம் சிரிப்பும் இப்பத்தாம் வந்து ஒட்டிக்கிடுச்சு. இப்பிடி ஒரு மனமாத்தமே போதும், நகெ நட்டும் பணங்காசியும் கெடைச்சாலும் பரவாயில்ல, கெடைக்காட்டியும் பரவாயில்லன்னு நெனைக்கிற அளவுக்கு ஒரு மாத்தம் இப்படி நடந்தையே ரொம்ப திருப்தியா நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. மனசளவுல சந்தோசமாவும், நிறைவாவும் இருக்குறதெ வாழ்க்கைக்குப் போதும், வாழ்க்கையில அதுக்கு மிஞ்சுனது எதுவுமில்லங்ற நெனைப்புல விகடுவும் இந்த மாத்தமே போதும்ன்னு எடுத்துக்கிட்டாம். செய்யுவப் பொருத்தமட்டுல மனசளவுல தொவண்டுதுதாம் அவளோட பெரிய பெரச்சனையா இருந்ததால, இப்போ இந்த அளவுக்கு மனசு தெளிவா நடந்துகிட்டதெக் கேள்விப்பட்டு வெங்குவுக்கும், ஆயிக்கும் கூட சந்தோஷந்தாம்.

            வூட்டுக்கு வந்ததுலேந்து, "இனுமே எத்து நடந்தாத்தாம் என்ன? தெகிரியமா இருந்துப்புட்டா போதும். அதெ அந்த வக்கீலு பண்ணிப்புட்டாம். நாலு பேத்துக்கு மின்னாடி நாக்கெ பிடுங்குறாப்புல ஒரு கேள்வியக் கேட்டுப்புட்டா போதும். கொடுமைக்குப் பயந்து அப்பிடியே போய்ட்டாங்ற பேச்சு நாளைக்கு இருக்காது பாரு. அதுக்குத் தோதான கேள்விய காயிதத்துல கேட்டு அரசாங்கம் வரைக்கும் அனுப்பியாச்சு. கைப்புள்ள நல்ல வக்கீலத்தாம் பாத்து வுட்டுருக்காரு!"ன்னு இதெப் பத்தி சுப்பு வாத்தியாரு சொன்னாரு தெடமா.

            "அவ்வனெ நம்மால ஜெயிக்க முடியாதுன்னு நெனைச்சதோட, இனுமே நாம்ம வாழவே முடியாதுன்னே நெனைச்சிருந்தேம். அந்த நெனைப்புல மாத்தம் வந்தாப்புல இருக்கு. இப்பிடியெல்லாம் புகாரு பண்ணலாங்றதெ நமக்குத் தெரியாம இருந்துச்சு. இத்து தெரியாம என்னத்தெப் படிச்சி என்னத்தெ புண்ணியம்? நமக்கு நடந்திருக்கிறது கொடுமெங்றதெ அந்தப் புகார்ர கைப்பட எழுத எழுத்ததாம் புரிஞ்சிது. இந்தக் கொடுமைக்கு எதிர்ப்பா வாழ்ந்து காட்டணுங்ற உணர்ச்சியே இப்பத்தாம் வந்திருக்கு. நாலு பேத்தப் பாத்து நாலு வெதமா பேசுறப்பத்தாம் நமக்கு ன்னா நடக்குதுங்றதெ புரியுது. அத்துப் புரியாம வூட்டுக்குள்ளயே அடைஞ்சிக் கெடக்குறப்பத்தாம் நமக்கு நம்ம மேலயே ஆத்திரமாவும், குத்த உணர்ச்சியாவும் வருது. இப்போ அதெல்லாம் இல்ல. இனுமே நாம்ம தெளிவா இருப்பேப்பா!"ன்னு அதெ உறுதிப்படுத்துன்னாப்பல செய்யுவும் சொன்னது எல்லாத்துக்கும் பெரிய ஆறுதலாவும் தேறுதலாவும் இருந்துச்சு. 

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...