2 Nov 2020

இடமாற்றத்தால உண்டாவும் மனமாற்றம்

இடமாற்றத்தால உண்டாவும் மனமாற்றம்

செய்யு - 613

            மொட்ட கடுதாசி அனுப்புனது, சரசு ஆத்தா வந்துட்டுப் போனதுன்னு ஒவ்வொரு விசயமும் செய்யுவ மனசளவுல திரும்பவும் கொஞ்ச கொஞ்சமா ரொம்ப பாதிக்க ஆரம்பிச்சது. சாண் ஏறுனா மொழம் சறுக்குறாப்புல கொஞ்சம் கொணப்பாடு கண்டு அவ்வே நல்லா பேசிட்டு இருந்தா, ஒடனே அவளோட கொணப்பாட கொறைக்குறாப்புல எதாச்சும் ஒரு சம்பவம் மாத்தி மாத்தி நடந்துகிட்டு இருந்துச்சு. இந்தப் பெரச்சனை சம்பந்தமா சமாதானம் பேசுறதா யாராச்சும் வூட்டுக்கு வந்துட்டு இருந்தாங்க. அப்படி யாராச்சும் வந்துட்டுப் போவுற ராத்திரியில செய்யுவெ வெச்சு வூட்டுல சமாளிக்க முடியல. வாயிக்கு வந்தப்படி கண்டபடி பேச ஆரம்பிச்சா. அப்பிடி வர்றவங்கள ஏம் வூட்டுல வுட்டுக்கிட்டு அடிக்கல ஒதைக்கலன்னு கேக்க ஆரம்பிச்சா. சுப்பு வாத்தியாரையும், விகடுவையும்ப பாத்து, "ஒஞ்ஞளுக்கு அடிக்கவோ, ஒதைக்கவோ பயமா இருந்தா நாமளே வந்து ஒதைக்குறோம்!"ன்னு ஒடம்பெல்லாம் முறுக்கு ஏறுனாப்புல வேற வந்து நிக்க ஆரம்பிச்சா.

            ஊர்ல இருந்த சனமும் சும்மா இல்லாம ஆறுதல் சொல்றதா நெனைச்சிக்கிட்டுப் பழசெ கிண்டி விட்டுக்கிட்டுப் போறது வர வர செய்யுவோட மனசெ ரொம்பவே பாதிச்சிது. அவுங்கள வேறப் பாத்து, "ஏம்டி வெக்கங்கெட்ட நாய்களா எம்மட வூட்டுப் பக்கம் வாறீயே?"ன்னு‍ செய்யு கேக்க ஆரம்பிச்சது ரொம்ப தர்மசங்கடமா போவ ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல தானொரு வாழாவெட்டியா இருக்குற நெனைப்பு செய்யுவுக்கு வர்ற ஆரம்பிச்சிது. இப்பிடியோர் எண்ணம் அவளுக்கு வர்றத்துக்குக் காரணம் வூட்டுக்கு வந்துட்டுப் போறவங்க பேசிட்டுப் போற அந்தப் பேச்சுதாம். அதுக்கேத்தாப்புல வடவாதியில யிருந்த முருகு மாமாவும், சித்துவீரனும் சேந்துகிட்டு சொந்த பந்தங்களுக்கு மத்தியில அப்பிடி வாழாவெட்டியா கொஞ்ச நாளு கெடந்த்தாம் புத்தி வரும்ன்னு சொன்னது வேற செய்யுவோட காதுக்கு வந்துக்கிட்டு இருந்துச்சு. சில நாள்கள்ல அவளோட படிச்ச தோழிங்க கலியாணப் பத்திரிகெ வைக்க வர்றப்போ மொகத்த காட்டாம வூட்டுக்குள்ள ஓடி ஒளிஞ்சிக்க ஆரம்பிச்சா. யாராச்சும் அவளெப் பத்தி வெசாரிச்சிக்கிட்டு வூட்டுக்கு வந்தா வூட்டுல இல்லேன்னு சொல்லி அனுப்பிடச் சொல்லி அழுவ ஆரம்பிச்சா.

            தெருவுல ஒரு நல்லது கெட்டது நடந்தா வெங்குவும் செரி, செய்யுவும் செரி அந்தாண்ட இந்தாண்ட அடியெடுத்து வைக்கிறது இல்ல. அதுக்கு வர்ற யாராச்சும் வூட்டுக்கு வந்து எதாச்சும் வெசாரிப்பாங்களோங்ற பயத்துல வூட்டெ பூட்டி வைக்குறாப்புல வெளியில பூட்டிட்டு உள்ளார இருக்க ஆரம்பிச்சிதுங்க. கொஞ்சம் கொஞ்சமா வெங்குவோட நடவடிக்கையும், செய்யுவோட நடவடிக்கையும் வித்தியாசமா மாற ஆரம்பிச்சது.

            எந்நேரமும் வூட்டுக்குக் கடெசியில இருந்த ரூமுக்குள்ள முடங்கிக் கெடக்குறதெ வேலையாக் கெடந்தா செய்யு. கண்ணபிரான் டாக்கடர்ரு எழுதித் தந்த மருந்து மாத்திரைக அவளெ கடுமையா தூங்க வெச்சிது. ஒடம்பும் கொஞ்சம் கொஞ்சமா ஊத ஆரம்பிச்சிது. வெளியாட்கள கண்டா பயப்படுற மனோநோயும் அவளெ பிடிச்சிக்கிட்டு. அந்த மனநோயிக் கொஞ்சம் கொஞ்சமா வளந்து வூட்டுல இருக்குறவங்களப் பாத்தாலும் பயந்து ஒதுங்குற அளவுக்குக் கொண்டுப் போயி விட்டப்போ சுப்பு வாத்தியாரு பயந்துப் போனாரு. ஏற்கனவே அவருக்கு கோவில்பெருமாள்ல இருக்குற தங்காச்சி வூட்டுல கொண்டுப் போயி கொஞ்ச காலம் வைக்குலாங்ற யோசனையும், நெனைப்பும் இருந்துச்சு. செய்யுவும் திருவாரூரு, ஆர்குடின்னு பக்கமா யில்லாம தூரமா கும்பகோணம், திருச்சிப் பக்கந்தாம் போவேம்ன்னு பிடிவாதமா இருந்தா. கண்ணபிரான் டாக்கடரும் பொண்ணோட விருப்பப்படி வுட்டா மருந்து மாத்திரைக்கான தேவையே கெடையாதுன்னும், மனசுக்கு மருந்தே அவுங்க மனம் போல நடந்துக்கிறதுதான்னும் அடிச்சிச் சொன்னாரு.

            ஒரு மாத்தமா இருக்கட்டும்ன்னு அப்பிடித்தாம் சுப்பு வாத்தியாரு செய்யுவ அழைச்சிக்கிட்டுக் கோவில்பெருமாள் தங்காச்சி வூட்டுலப் போயித் தங்குனாரு. செய்யுவும் அங்கத்தாம் போவோம்ன்னு நின்னா. அவரு செய்யுவ அங்க அழைச்சிட்டுப் போறதுக்கு இன்னொரு வலுவான காரணமும் இருந்துச்சு.

            அது ஒரு பத்து வருஷத்துக்கு மின்னாடி கோவில்பெருமாள்ல நாகு அத்தெ வூட்டுல நடந்த ஒரு மோசமான கதெ. வேலங்குடி பெரியவரு உசுரோட இருந்த காலகட்டத்துல நடந்த கதெ. நாது அத்தையோட பொண்ணு சியாமளாவுக்குக் கலியாண வயசு வந்ததும் பல எடங்கள்ல நாது அத்தெ மாப்புளயப் பாத்துட்டுக் கெடந்துச்சு. வேலங்குடி பெரியவரு, சின்னவரு, சுப்பு வாத்தியாருன்னு அவுங்களும் ஆளுக்கொரு பக்கம் மாப்புள்ளயப் பாத்துட்டுக் கெடந்தாங்க. சியாமளா அத்தாச்சி பாக்குறதுக்கு வடிவாவும், அழகாவும் இருந்துச்சு. சாதகத்துல செவ்வாய் தோஷம் இருந்ததால மாப்புள்ள சரியா அமையாம தள்ளிப் போயிட்டே இருந்துச்சு. அதுக்காக வேலங்குடி பெரியவரு வுடல. தம்மோட பொண்ணு புள்ளீயோளுக்குப் பாக்குறதெ வுட கடுமையா அலைஞ்சி முடிகொண்டான் ஐயருகிட்டெப் போயி மாப்புள இருக்குற தெசைய அறிஞ்சிக்கிட்டெல்லாம் தேடிட்டுத்தாம் கெடந்தாரு.

            சியாமளாவுக்கு மாப்புள்ள தேட ஆரம்பிச்சி ரண்டு மூணு வருஷம் அது பாட்டுக்கு ஓடிட்டே கெடந்துச்சு. நாது மாமா அதெப் பத்தி பெரிசா அலட்டிக்கிடல. இனுமேலா பொண்ணுக்குன்னு ஒரு மாப்புள பொறக்கப் போறாம்? அவ்வேம் எஞ்ஞயோ பொறந்துக் கெடக்காம்! கண்டுபிடிக்கத்தாம் முடியலன்னு அலட்சியமாச் சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருந்துச்சு. நாது மாமா எப்பவுமே அப்பிடித்தாம். நாகு அத்தையால அதெ அதெ அப்பிடி எடுத்துக்கிட முடியல. அதால அதெ அவ்வளவு சுலுவா மனசுக்குள்ள ஏத்துக்கிட முடியல. அது ரொம்ப வேகமாவும், வீரியமாவும் மாப்புள்ளயத் தேடுனதுல கும்பகோணத்துல  நகெ வேல செய்யுற பத்தரு மாப்புள்ளயப் பிடிச்சி, அதெ பத்தின சேதிய வேலங்குடி பெரியவரு, சுப்பு வாத்தியாருக்குச் சொல்லி வுட்டுச்சு. மாப்புள்ளையல்லாம் பாத்தாச்சு, கலியாணத்தெ வந்து முடிச்சி வுட்டாப் போதும்ன்னு ரொம்ப தெனாவெட்டாவே நாகு அத்தெ சொன்னிச்சு. பொண்ணுக்கு மாப்புள்ள அமையாம தள்ளிப் போவுதேங்ற ஆத்தாமையில் பேசுனப் பேச்சு அது.

            தகவலெ தெரிஞ்சிக்கிட்டு வேலங்குடி பெரியவரும், சுப்பு வாத்தியாரும் மாப்புள்ளப் பையனெப் பாக்கப் போயி அவனெப் பத்தி வெசாரிச்சா ஆளு பலே போக்கிரிப் பயலா இருந்தாம். வயசு முப்பத்தஞ்சுக்கு மேல இருந்துச்சு. நகெ வேலையிலயும் தகிடுதித்தமா நடந்துக்கிட்டு போலீஸூ கேஸூ வரைக்கும் போயி, மார்கெட்டுலயே ஒரு தொடுப்பு ஒண்ணுத்தெ வேற வெச்சிருந்தாம் அந்தப் பயெ. நாகு அத்தெ சொல்லி விட்டதுல இருந்த ஒரே நல்ல விசயம் என்னான்னா சியாமாளவுக்கும் அந்தப் பயலுக்கும் சாதகம் பொருந்திப் போனதுதாம். சாதகம் பொருந்திப் போயிருந்தாலும், மாப்புள்ளயப் பத்தி வெசாரிக்க வெவகாரம் எதுவும் சரியில்லாமப் ஏடா கூடாம தகிடுதித்தமாப் போனதால அந்த எடம் வேணாம்ன்னு அறுத்துக் கட்டுனாப்புல சொல்லிட்டு வந்தாரு வேலங்குடி பெரியவரு. வேற ஒரு நல்ல மாப்புள்ளையப் பாத்து வெரசாவே கலியாணத்தெ முடிச்சிடுறதாவும் வாக்குக் கொடுத்துட்டுத்தாம் வந்தாரு. வந்தவரு வந்தவருதாம். அதுக்குப் பெறவு வாதம் வந்து இழுத்துக்கிட்டு அவர்ரக் கொண்டுப் போயி சென்னைப் பட்டணத்துல வெச்சதுல அவரால மேக்கொண்டு நாது அத்தெ பொண்ணு வெசயத்துல மெனக்கெட முடியாமப் போச்சுது. அதாங் நேரங்கிறதோ என்னவோ!

            வேலங்குடி பெரியவருக்கும் சின்னவருக்கும் ஒத்துப் போகாம சண்டெயா கெடந்த நேரம் அது. ஆனா என்னவோ நாகு அத்தெ பாத்து வெச்ச மாப்புள்ள பயெ வாணாங்ற விசயத்துல ரண்டு பேரும் பிடிவாதமா ஒத்துப் போயிருந்தாங்க. அதால வேலங்குடி சின்னவரும் இந்த விசயத்துல விடாம கோவில்பெருமாள் ஒரு நாளு மெனக்கெட்டுப் போயி அந்த எடத்தெ வாணாம்ன்னு அடிச்சிச் சொல்லிட்டு வந்தாரு. வேலங்குடி பெரியவரும், சின்னவரும் ஒண்ணா ஒரு முடிவுக்கு வந்ததுன்னா இந்த ஒரு விசயத்துலத்தாம். அத்து என்னவோ நாகு அத்தைக்கு யாரு சொன்னதும் மூளையில போயி ஏற மாட்டேன்னுட்டு.

            நாகு அத்தெ சாதகந்தாம் பொருந்திப் போவுதுன்னே நெனைச்சிக்கிட்டெ, அது பாட்டுக்கு மாப்புள்ள வூட்டுக்குப் போயி சம்பந்தத்தப் பேசி மூர்த்தோலைய எழுதப் போறதா சேதிய சொல்லி விட்டதுல சுப்பு வாத்தியாரு, வேலங்குடி சின்னவரு உட்பட எல்லாரும் அதிர்ந்துப் போனாங்க. ஒடனே கெளம்பிப் போயி கோவில்பெருமாள்ல சண்டெ வெச்சி அதெ நிறுத்தப் பாத்தா, நாகு அத்தெ வயசுக்கு வந்தப் பொண்ண எத்தனெ நாளு வூட்டுல வெச்சிக்கிடுறதுன்னும், சியாமளாவோட படிச்சப் பொண்ணுவ எல்லாம் கலியாணம் ஆயி கொழந்தெ குட்டிகளோட இருக்குறதையும் சொல்லி ஒப்பாரி வெச்சிது. அத்தோட வுடாம, "ஒஞ்ஞளாலயும் பாத்து ஒரு மாப்புள்ளயக் கொண்டார முடிலய! நாம்ம பாத்து வெச்ச மாப்புள்ளயப் பத்தியும் நொட்டாரம் சொன்னா ன்னா அர்த்தம்? எம்மடப் பொண்ணு வெசயத்தப் பாத்து வுட நமக்குத் தெரியும்! நீஞ்ஞ அநாவசியமா பூந்து கலைச்சி வுடுற வேலையப் பாக்காதீயே! ஒஞ்ஞ ஒஞ்ஞ புள்ளீயோளுக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணு புள்ளைய கட்டி வையுங்க! எம்மட பொண்ணு விசயத்துல தேவையில்லாம அநாவசியமா ஏம் தலையிடுறீயே?"ன்னு அது கேட்ட கேள்வியில ஆளாளுக்குக் கப்சிப்புன்னு ஆயி என்ன வாணாலும் நடந்துட்டுப் போவட்டும்ன்னு விட்டுப்புட்டாங்க. பாழுங் கெணறுன்னு தெரிஞ்சும் கண்ணெ வேணுமின்னே கட்டிக்கிட்டு அதுல வுழுற கதெயா போயிடுச்சு. நாகு அத்தெ பேசுன வார்த்தைக அப்பிடி. அதுக்கு மேல வாணாம்ன்னு சொல்லி யாருக்கும் வாங்கிக் கட்டிக்கிட மனசில்ல. ஆளாளுக்கு நம்மட கடமெயெ செஞ்சிட்டு விதிப்படி நடக்குறது நடக்கட்டும்ன்னு விட்டுப்புட்டாங்க. 

            சியாமளா அத்தாச்சிக் கலியாணத்துக்கு ஆளாளுக்கு ஒரு பவுனு, ரண்டு பவுனுன்னு அவுங்கவங்களால முடிஞ்சதெ சுப்பு வாத்தியாரு, சந்தானம் அத்தான், மாரி அத்தான், ராமு அத்தான்னு, வேலங்குடி சின்னவருன்னு செஞ்சி வுட்டாங்க. கோவில்பெருமாள்ல ஒரு கோயில்ல வெச்சிக் கலியாணம் நடந்துச்சு. அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் சினிமாவுல பாக்குற திடீரு திருப்பம் போல இருந்துச்சு. கலியாணம் நடந்த அன்னிக்கு ராத்திரியே மாப்புள்ளக்கார்ரேம் போட்டிருந்த நகெயெ எடுத்துக்கிட்டு ஆளு எங்கயோ காங்காம போயிட்டாம். பொழுது விடிஞ்சிக் கலியாணத்துக்கு வந்திருந்த சனங்க எல்லாம் நாலா தெசையிலயும் மாப்புள்ள எஞ்ஞன்னு தேடி அலையுதுங்கோ. நாலு நாளு வரைக்கும் புயலு காலத்துல தோணியில மீன் பிடிக்கப் போனவ்வேம் கதெயா மாப்புள்ள பத்தின எந்தத் தகவலும் யில்ல.  நாலு நாளு கழிச்சி அவனா அவ்வேம் திரும்ப வந்தப்போ சியாமளா பைத்தியம் பிடிச்சாப்புல ஆயிடுச்சு. தலைமுடியப் பிய்ச்சுக்கிட்டு, உடுப்புகளக் கிழிச்சிக்கிட்டு நிக்க ஆரம்பிச்சது. இப்போ நெலமெ என்னாச்சின்னா கலியாணத்தப் பண்ணி வெச்சி மாப்புள்ள வூட்டுல விட்டுப்புட்டு வர்ற முடியாம திரும்பவும் கோவில்பெருமாளுக்கே சியாமளாவக் கொண்டு வர்றாப்புல ஆயிடுச்சு.

            அப்போ கோவில்பெருமாளுக்கும், திட்டைக்கும் சுப்பு வாத்தியாருதாம் ஓடியாடிட்டுக் கெடந்தாரு. சந்தானம் அத்தான் மாப்புள வூட்டுக்காரனுங்ககிட்டெ சண்டெ வெச்சிப் பாத்தது. பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிப் போனது மாப்புள வூட்டுக்காரனுங்களுக்கு ரொம்ப வசதியாப் போயிடுச்சு. அவனுவோ மாப்புள்ளப் பயெ திருட்டுப் பயலப் போல நகெயெ சுருட்டிக்கிட்டு ஓடுனதெ வுட்டுப்புட்டு பொண்ணு பைத்தியமான சங்கதியப் பிடிச்சிக்கிட்டானுவோ. பைத்தியக்கார பொண்ணெ வெச்சிக்கிட்டு நாம்ம என்னத்தெ பண்டுறதுன்னு நெலையா நின்னானுவோ. பொண்ண யிப்ப வூட்டோ வெச்சிக்கிடறதே தவுர வேற வழியில்லாமப் போயிடுச்சு. பொண்ணெ கொணப்பாடு காண வெச்சத்தாம் அடுத்து எதாச்சும் பண்ட முடியுங்ற நெலமெ. சுப்பு வாத்தியாரு எவ்வளவோ சொல்லி ஒரு மனநல மருத்துவரப் பாக்கச் சொன்னாரு நாகு அத்தைக்கிட்டெ. அவரே அழைச்சிட்டுப் போவவும் தயாரா இருந்தாரு. நாகு அத்தெ அதுக்கு ஒத்துக்கிடல. பைத்தியக்கார டாக்கடர்கிட்டெ காட்டுனா எம் பொண்ண ஊர்ல பைத்தியம்ன்னு சொல்லிப்புடுவாங்கன்னு ஒப்பாரிய வெச்சு, மந்திர தந்திரம் மாந்திரீகம்ன்னு எறங்கி சாமியாரு சாமியார்ராப் பாத்துட்டு அலைஞ்சிக்கிட்டுக் கெடந்துச்சு. சுப்பு வாத்தியாரும் ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம எல்லாம் தலையெழுத்துன்னு நெனைச்சிக்கிட்டு, அப்பப்போ போனதுக்கு உபகாரமா கையில இருந்த காசியக் கொடுத்துட்டு வந்துக்கிட்டு இருந்தாரு.

            அந்தப் படிக்கே ஒரு வருஷம் ஓடிப் போனுச்சு. பொண்ண கட்டிக் கொடுத்தும் புகுந்த எடத்துல வுட முடியாம, பொறந்த எடத்துலயே வெச்சிக்கிட்டு அலைஞ்சிக்கிட்டும், அல்லாடிகிட்டும் கெடந்துச்சு நாகு அத்தை. அதுக்கு எடையில ஏற்கனவெ ஒரு தடவெ சண்டெ வெச்சதோட வுடாம சந்தானம் அத்தானும், ராமு அத்தானும் வந்து கும்பகோணத்துல வெசாரிச்சா மாப்புள்ளக்கார்ர பயெ அவ்வேம் பாட்டுக்குப் போட்டிருந்த நகெ நட்டு, சீர்வரிசெ சாமானுங்க அத்தனையையும் வித்துப்புட்டு செலவழிச்சிக்கிட்டு அவ்வேம் கலியாணத்துக்கு மின்னாடியே வெச்சிருந்த தொடுப்போட குடித்தனம் நடத்திக்கிட்டு இருந்தாம். என்னாட இப்பிடிப் பண்ணுறீயே படுவான்னு சந்தானம் அத்தான் அந்த மாப்புள்ளக்காரனெ கேட்டதுக்கு, பொண்ணோட பைத்தியத்தெ கொணப்படுத்தி என்னிக்குக் கொண்டாந்தாலும் குடித்தனம் நடத்துறதாவும், அது வரைக்கும் பொம்பளெ யில்லாம சோறு தண்ணிக்கு என்னத்தெ பண்ணுறதுன்னும் மேக்கரிச்சாப்புல பேசுனாம் அந்தப் பயெ. அதுக்கு மேல என்னத்தெ பண்ட முடியும்ன்னு ஒண்ணும் சொல்ல முடியாம சந்தானம் அத்தானும், ராமு அத்தானும் அவனெ பேருக்கு ஒரு மெரட்டு மெரட்டிப்புட்டு வந்து நாகு அத்தைய திட்டுனுச்சுங்க. அதுக்கப்புறந்தாம் நாகு அத்தெ மனுஷங்க பேசுற பேச்ச கேக்குற படிமானத்துக்கு வந்துச்சு.

            உடனடியா சந்தானம் அத்தானும், ராமு அத்தானும் சுப்பு வாத்தியாரைக் கோவில்பெருமாளுக்கு வாரச் சொல்லி சியாமளாவக் கும்பகோணத்துல இருந்த மனநல மருத்துவர்கிட்டெ வம்படியா நின்னு கார் கொண்டுப் போயிக் காட்டுனுச்சுங்க. அவரு சியாமளாவப் பாத்துப்புட்ட பொண்ணுக்கு ஹிஸ்டீரியான்னு சொல்லி மருந்து மாத்திரைகள எழுதிக் கொடுத்து அனுப்பி வெச்சாரு. கிட்டதட்ட மூணு வருஷத்துக்கு மேல ஆனுச்சு சியாமளாவுக்கு ஹிஸ்டீரியா முழுமையா கொணம் காண. அது வரைக்கும் மருந்து மாத்திரைகளச் சாப்புடுறதும், ஒறங்குறதுமாவே காலம் ஓடிட்டுக் கெடந்துச்சு. அதுக்குக் கொணப்பாடு கண்ட பெறவு, இனுமே அதுக்கு எல்லாம் நல்ல காலந்தாம்ன்னு மாப்புள்ளைக்காரனெ தேடிப் போனா அவ்வேம் பொம்பளச் சீக்கு வந்து சாவுற நெலையில கெடந்தாம். இனுமே அவங்கிட்டெ போயி என்னத்தெ குடும்பத்தெ நடத்தச் சொல்றதுன்னு சியாமளாவ அழைச்சாந்து திரும்பவும் கோவில்பெருமாள்லயே வைக்குறாப்புல ஆயிடுச்சு.

            புருஷங்கார்ரேம் செத்ததுலேந்து சியாமளாவும் இன்னும் நல்லா தெளிவுகண்டுச்சு. அப்பிடியே நாலைஞ்சு வருஷம் ஓடி முடிஞ்சது. அதுக்கு இடையிலயே சியாமாளவுக்கு மறுகலியாணத்துக்கு மாப்புள பாக்க ஆரம்பிச்சி தாராசுரத்துல செல செய்யுற ஸ்தபதி பையெம் ஒருத்தெம் நாப்பது வயசுக்கு மேல இருந்தவேம் கலியாணம் பண்ணிக்கிடுறதா வந்து நின்னாம். அவனெப் பத்தி வெசாரிச்ச வகையில ஏழ்மைன்னாலும் நல்ல மனுஷங்ற வெவரம் தெரிய அவனுக்கே திரும்ப சுப்பு வாத்தியாரு, சந்தானம் அத்தான், ராமு அத்தான் எல்லாம் கூடி நின்னு ஒண்ணா சேந்து மறுகலியாணத்தெ முடிச்சி வெச்சி தாராசுரத்துலக் கொண்டு போயி குடியையும் வெச்சதுங்க.

            மாமங்காரரான சுப்பு வாத்தியாரான மவளுக்கு கிட்டதட்ட தங் கதெயப் போல ஆனதுல சியாமளா அடிக்கடி சுப்பு வாத்தியாருக்கும், செய்யுவுக்குப் போனு அடிச்சி ஆறுதலெ சொல்லிட்டு இருந்துச்சு. வேற யாரு சொல்லுற ஆறுதலெ வுடவும் சியாமளா சொல்லுற ஆறுதலுதாம் செய்யுவோட மனசுல பட்டுன்னுப் போயி பட்டுச்சு யப்போ. அனுபவப்பட்ட ஆளு சொல்ற ஆறுதலுக்கு மின்னாடி மித்த ஆளுங்க சொல்ற ஆறுதலு எம்மாத்திரம்? நாளாவ நாளாவ செய்யுவோட மனசு யாரு பேச்சுக்கும் கட்டுப்படாம போனாலும், சியாமளாவோட பேச்சுக்குக் கட்டுப்பட ஆரம்பிச்சிது. சியாமளாதாம் அடிக்கடி சுப்பு வாத்தியாருக்குப் போன போட்டு செய்யுவெ கொண்டாந்து கோவில்பெருமாள்ல வுட்டா நல்லா ஆறுதல் பண்ணி செரியா கொண்டுப்புடுறதா சொன்னிச்சு.

            இந்த எடத்துலத்தாம் சுப்பு வாத்தியாரு ஊரோட நெலமெ, வூட்டோட நெலமெ, மவளோட நெலமென்னு எல்லாத்தையும் யோசிச்சுப் பாத்து, பொண்ணு எப்பிடியோ மனசு தேறி வந்தா போதும்ன்னு நெனைச்சிக்கிட்டு, அதுக்குத் தோதா கோவில்பெருமாள் பக்கத்துல தாராசுரத்துல சியாமளா இருக்குறதால கோவில்பெருமாள்லக் கொண்டுப் போயி வைக்கிறது சரியா இருக்குங்ற முடிவுக்கு வந்து பொண்ணோட அங்கப் போயிச் சேந்தாரு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...