1 Nov 2020

பைத்தியத்தப் போல வந்து நின்ன ஆத்தா!

பைத்தியத்தப் போல வந்து நின்ன ஆத்தா!

செய்யு - 612

            ராசாமணி தாத்தா கடுதாசியப் போட்டுட்டுப் பதிலெ எதிர்பாத்துட்டுக் கெடந்திருக்கும் போல. இந்தக் கடுதாசி மூலமா நல்ல வெதமாவோ, கெட்ட வெதமோ ஏதோ ஒரு முடிவு வந்துப்புடும்ன்னும் நெனைச்சிருக்கும் போல. ராசாமணி தாத்தா அப்படி எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாத அளவுக்கு சுப்பு வாத்தியாரு ஒரு வேல செஞ்சாரு. அந்தக் கடுதாசிகளத் தூக்கித் தலவாணிக்கு அடியில போட்டு அவரு பாட்டுக்குத் தனக்கு அப்பிடி ஒரு கடுதாசியே வரலங்ற மாதிரிக்கு இருந்துட்டாரு. அதாச்சி சுப்பு வாத்தியாரு அந்தக் கடுதாசி சம்பந்தமா எந்தப் பதிலையும் கொடுக்கல. கொஞ்ச நாளு பாத்துப்புட்டு விகடுவுக்கு போன அடிச்சிப் பாத்துச்சு ராசாமணி தாத்தா. பஞ்சாயத்து வெச்ச கடுப்புல இருந்த விகடு அத்து போன அடிச்சப்பல்லாம் எடுக்காமலயே இருந்துட்டாம். கடுதாசி போட்டு ஒரு ரண்டு வார காலம் முடிஞ்சிருக்காது. சரசு ஆத்தா கையில ஒரு மஞ்சப் பையோட பரதேசிக் கோலத்துல சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு மின்னாடி வந்து நின்னுச்சு. வூட்டுல அப்போ இருந்தது வெங்கு, ஆயி, செய்யுன்னு மூணு பேத்து மட்டுந்தாம். சரசு ஆத்தா வந்த சங்கதி தெரிஞ்சு வெங்கு ரண்டு பேத்தையும் வூட்டுக்குள்ளயே இருக்க சொல்லிட்டு இது வாசப்பக்கம் இருந்த கேட்டுக்கு மின்னாடி வந்து நின்னுச்சு. சரசு ஆத்தா திடுதிப்புன்னு இப்படி வந்து வூட்டுக்கு மின்னாடி நிக்குறதப் பாத்துட்டு தெரு சனங்க கூடிட்டுங்க. வெங்கு சரசு ஆத்தாவ உள்ளார வுடல. உள்ளார வர முடியாத அளவுக்கு வெளிகேட்ட சாத்திகிட்டு உள்ளாரய நின்னுச்சு.

            சரசு ஆத்தா யாராச்சும் தன்னயக் கூப்புடுவாங்கன்னு எதிர்பார்த்துச்சு. யாரும் கூப்படலன்னு தெரிஞ்சதும், அதுவா, "எம் பேத்தியப் பாக்கணும்!"னுச்சு.

            வெங்குவுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு. அத்து ஆக்ரோஷமா பேச ஆரம்பிச்சிடுச்சு. "யாருடி ஒமக்குப் பேத்தி? ஒம் பேத்தியோ நீயி பெத்து வெச்சிருக்கீயே ஒரு தேவிடியா! அவ்வே வூட்டுல இருக்கும் போ! அதாங் ஒம் பேத்தி. இஞ்ஞ என்னவோ பேத்தின்னு ஒறவு கொண்டாடிட்டு வர்றே? அந்த ஒறவெல்லாம் அந்துப் போயி நாளாயிப் போச்சு! மொதல்ல வாசப்படியே வுட்டு அந்தாண்ட போ!"ன்னுச்சு வெங்கு.

            "யில்ல! நாம்ம நம்மடப் பேத்தியப் பாக்காம‍ போவ மாட்டேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா பிடிவாதமா.

            "இனுமே எம் பொண்ண ஒம்மட பேத்தின்னு சொல்லா‍தே! அதுக்கு என்ன அருகதெ இருக்கு ஒமக்கு? வெவஸ்தெ கெட்டவளே எம் பொண்ணு இனுமே ஒனக்குப் பேத்தியுமில்ல. நீயி இனுமே அவளுக்கு ஆத்தாக்காரியும் யில்ல. இனுமே நீயி நமக்குச் சின்னம்மாக்காரியும் யில்ல. என்ன தெகிரியத்துலடி பேத்தின்னு ஒறவக் கொண்டாடிட்டு இஞ்ஞ வந்து நிக்குறே?"ன்னுச்சு வெங்கு.

            "நாம்ம பாக்காம போவ மாட்டேம். நீயிப் பாக்க வுடலன்னா இஞ்ஞயே உக்காந்து எப்போ காட்டுறீயோ அப்போ பாத்துட்டுத்தாம் போவேம்!"ன்னு அப்பிடியே வாசப்படியில பச்சக்குன்னு உக்காந்துட்டு சரசு ஆத்தா.

            "என்னவோ அதிசயமா இப்பத்தாம் பேத்தியாளப் பாக்கணும்ன்னு கெளம்பி வந்துட்டா! இதுக்கு மின்னாடி இஞ்ஞ பேத்தியா இருந்தது தெரியாதா? மனசுக்குள்ள வஞ்சனைய வெச்சிக்கிட்டு இஞ்ஞ கொண்டாந்து வுட்டப்போ தெரியலையா பேத்தியாளக் கொண்டாந்து வுடுறேம்ங்றது? பேத்தியா குடும்பம் நடத்திப் போயி நெஞ்சிளைச்சுப் போயி வந்து நின்னப்ப தெரியலையா அவ்வேம் ஒம்மட பேத்தியான்னு? அப்போ ஒரு வார்த்தெ கேட்டு இருந்தீன்னா, கேட்டு சரி பண்ணிருந்தீன்னா நீயி அவளுக்கு ஆத்தாக்காரி. அவ்வே ஒனக்குப் பேத்தியா. அப்பல்லாம் கம்முன்னு கமுக்கமா இருந்துகிட்டு ன்னா வேல பாத்தே நீயி. அவ்வளவையும் பாத்துப்புட்டு இப்போ வந்து பேத்தியா சூத்தியான்னு நின்னா அதெ நம்பிப்புடுவோம்ன்னு நெனைச்சியாடி பசப்புக்காரி?"ன்னுச்சு வெங்கு ஆத்திரம் கொஞ்சம் கூட தணியாம.

            "நீயி என்னத்தெ வேணும்னாலும் திட்டிக்கோடி தங்கம்! நீயி என்னத்தெப் பேசுனாலும் வைஞ்சாலும் அத்து தகும். அதுக்காக நாம்ம கோவப்படப் போறதில்ல. வருத்தப்படப் போறதில்ல. எம் பேத்தியாள நாம்ம உள்ளார வந்து கூட பாக்கணும்ன்னு யில்ல. வெளியில நின்னுகிட்டு கூட மொகத்தெ பாத்தா கூட செரித்தாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "ஏம் அவ்வே உசுரோட இருக்காளா? செத்துட்டாளான்னா? தெரிஞ்சிக்க வந்துப் பாக்க நிக்குதீயா?"ன்னுச்சு வெங்கு வெடிச்சிச் சிதறுறாப்புல.

            "ஏம்டி தங்கம் இப்பிடியில்லாம் பேசுதே? நம்மளப் பாத்தா ஒமக்கு அப்பிடித்தாம் தோணுதா? நாம்ம என்னடி பாவம் செஞ்சேம்?"ன்னுச்சு சரசு ஆத்தா. அதோட கண்ணுலேந்து கண்ணுத்தண்ணி சொட்ட ஆரம்பிச்சிட்டு.

            "நீயி செய்யாத பாவமாடி வஞ்சனெ பிடிச்சவளே? யிப்போ பாக்கணும்ன்னு வந்து நிக்குதீயேடி? அன்னிக்கு எம்மட மவ்வே தூக்கப் போட்டுக்கிட்டாளே, அன்னிக்கு வந்து பாத்தீயா? அன்னிக்கு வுடு மறுநாளு, ரண்டு நாளு கழிச்சாவது வந்துப் பாத்திருப்பீயா நீயி? ஏம்டி வைக்குறப் பஞ்சாயத்தையெல்லாம் வெச்சிப்புட்டு, பஞ்சாயத்துக்கு அழைச்சிட்டு வர்றவனுக்குல்லாம் சரக்கெ வாங்கி ஊத்திக் கொடுத்து எம் புள்ளையையும், புருஷங்காரரையும் அடிக்கிறதுக்கு அத்தனெ வேலையையும் பண்ணிப்புட்டு, எம் மவ்வேளப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் ஒம் மவனெ வுட்டுச் சொல்ல சொல்லி அவ்வே அப்பிடியே நடுங்கிப் போயி ஒடம்பெல்லாம் வெட்டு வந்தாப்புல இழுத்துக்கிட்டு கெடக்க, அப்பிடியே காருல தூக்கிப் போட்டுப்புட்டு திருவாரூரு ஆஸ்பிட்டல்ல போயிக் கெடந்தோமே! அப்பவாச்சும் வந்துப் பாத்தீயா? எம் பொண்ணு அப்பிடியே பைத்தியம் பிடிச்சிப் போயிக் கெடந்தாளே? எல்லா சேதியையும் தெரிஞ்சிக்கிட்டு எவ்வே எப்பிடிப் போனான்னுத்தாம் கல்லு நெஞ்சோட கெடந்தே? யிப்போ ன்னாடி புதுசா பாசம் வந்து பொத்துக்கிட்டு அடிக்கிது?"ன்னுச்சு வெங்கு கடுகெ போட்டுத் தாளிச்சுக் கொட்டுறாப்புல.

            "தப்புதாம் தங்கம்! தப்புதாம் தங்கம்! அப்போ வந்து நாம்ம பாத்திருக்கணும்! தப்புத்தாம்டி தங்கம்! நம்மள மன்னிச்சிப் போடு!"ன்னுச்சு சரசு ஆத்தா கெஞ்சாத கொறையா.

            "அதெ வுடுடி! இந்த வழியாத்தாம் எம்மட பொண்ணு தூக்கு மாட்டிட்டுக் கெடந்த பெறவு தொரக்குடி கோயிலுக்குப் போனே? எஞ்ஞ வூட்டுக்காக மெனக்கெட்டு வார வாணாம். போற வழியில்லத்தானே இருக்கு! ஒரு எட்டு வந்துப் பாத்துட்டுப் போறதுல அப்பிடி ன்னா கொறைஞ்சிப் போயிடுவே? ஊரே வந்துச் சொல்லுது! ஒஞ் சின்னம்மாகாரி இந்த வழியாத்தாம் ஆட்டோவுல தொரக்குடிப் போயிட்டுப் போறான்னு! அப்போ எம்மட நெஞ்சு எப்பிடி இருந்திருக்கும்? எம்மட வவுறு எப்பிடி எரிஞ்சிருக்கும்? ஒம்மய நம்பித்தானடி எம் பொண்ண கட்டிக்கொடுத்தேம்! சின்னம்மாக்காரி நல்ல வெதமா வெச்சிப் பாத்துக்கிடும்ன்னு நெனைச்சுத்தானே கட்டிக் கொடுத்தேம்! அப்பிடி எம் பொண்ணு என்னத்தெ பண்ணிப்புட்டா? ஆத்தாக்காரிக்கும், தாத்தனுக்கும் சோத்தப் போடக் கூடாதுன்னு சொன்னாளா? ஒஞ்ஞளுக்கெல்லாம் பணத்தெ அனுப்பக் கூடாதுன்னு புருஷங்கார்ரேங்கிட்டெ சண்டையப் போட்டாளா? நாத்தானாருகாரிகளுக்கு எதுவும் பண்ணக் கூடாதுன்னு குறுக்கால நின்னாளா? என்னத்தெடி பண்ணா அவ்வே? ஒரு பாவமும் பண்ணாதவளே யிப்பிடி இன்னிக்கு தெருவுல நிக்க வெச்சிப்புட்டீயேடி?"ன்னு அழுகாச்சிய வெச்சி கண்ணு தண்ணி பொல பொலன்னு கொட்ட நின்னுச்சு வெங்கு.

            "யய்யோ! யய்யோ! எம் பொண்ணு நம்மளப் போட்டு யிப்பிடிக் கேக்குறாளே? அவ்வே கேக்குறதுலயும் ஒண்ணும் தப்பு யில்லையே! நாம்ம இப்பிடி நிக்குற நெலையும் ஞாயமில்லையே! நாம்ம சொன்னதெ யாரு கேட்டா? ஒரு பயலும் கேக்கலையே? அவனவனுவோளா திட்டத்தெ பண்ணிக்கிட்டு நம்மள இப்பிடிச் சந்தி சிரிக்க வுடுறானுவோளே?"ன்னு சரசு ஆத்தாவும் பதிலுக்கு ஒப்பார் வெச்சு அழுவ ஆரம்பிச்சுது.

            "அப்பிடியே நடிக்காதேடி நீயி? செரியான நக்குப்பொறுக்கி நாயீ! ஒமக்குத் தெரியாமலா ஒம் புருஷங்கார்ரேம் மொட்டக் கடுதாசியப் போட்டு வுடுறாம்? அந்தக் கடுதாசியில எம்மாம் கேவலமா எழுதிருக்காம் தெரியுமா? எம் மருமவளெ மவளப் போலத்தானே வெச்சிருக்காரு எம்மட புருஷங்கார்ரேம். அதுக்குக் களங்கம் பண்ணுறாப்புல கடுதாசிய எழுதுறானே ஒம்மட புருஷங்கார்ரேம். அப்போ அவ்வேம் மனசுல எம்மாம் குரோதம் இருக்குங்றேம்? அதெ நீயெல்லாம் பாத்துக்கிட்டுதானே இருந்தே? நல்லா இருக்குறவங்களப் பத்தி பொல்லாங்கு சொல்லக் கூடாதுன்னு ஒரு வார்த்தெ நீயி எடுத்துச் சொல்லிருந்தா இந்த நெலமெ வந்திருக்குமா? நடக்குற எல்லாத்தையும் வேடிக்கெ பாத்துக்கிட்டு யிப்போ இஞ்ஞ வந்து நீலிக்கண்ணீர்ரா வடிச்சிக்கிட்டு இருக்கே பாதகீ?"ன்னுச்சு வெங்கு மெம்மேலும் ஆத்திரம் கொண்டாப்புல.

            "நாம்ம எவ்வளவோ சொல்லிச் சொல்லிப் பாத்தேம். தலைதலையா அடிச்சிப் பாத்தேம். கேக்க மாட்டேங்றானுவோ. பண்டுறதைத்தாம் பண்டுறானுவோ. இப்பிடியில்லாம் பண்ணா, பஞ்சாயத்துல போயி நிறுத்துனா, கடுதாசியப் போட்டா எப்பிடிடா பொண்ட அனுப்புவானுவோன்னு மூஞ்சுல அடிச்சாப்புல கேட்டே பாத்துப்புட்டேம். யாருடி எம் பேச்சக் கேட்டா ஏந் தங்கம்?"ன்னு அடிவயித்தால அழுதுகிட்டெ சொன்னுச்சு சரசு ஆத்தா.

            "ஓம் பேச்சக் கேக்கலன்ன ஒடனே யிப்போ நீயி வந்தாப்புல அப்போ நீயி வந்திருந்தா ன்னா கொறைஞ்சாப் போயிருந்திருக்கும் கேக்குறேம்? யப்போ யிப்போ மாதிரி எட்டிப் பாத்தீயா எம்மட வூட்டுப் பக்கம்? யப்போ எஞ்ஞ போனே நீயி? சொல்லுடி நாதாரி நாயே! எம் பொண்ண என்னத்தெ குத்தம் பண்ணான்னு பத்தாயிரம் பணத்தெ ஒதவிப் பண்ணச் சொன்னதுக்குப் போன போட்டு அவ்வே மனசெப் போட்டு கலைச்சி வுட்டு, இனுமே ஒம் புருஷங்காரனோட எப்பிடி வாழப் போறன்னு ஒரு கேள்வியக் கேட்டு அதெ யிப்போ நெசமாலுமே ஆக்கிப்புட்டீயேடி படுபாவிச் செறுக்கீ?"ன்னுச்சு வெங்கு அடி வவுத்துல அடிச்சிக்கிட்டு.

            "யய்யோ! யய்யய்யோ! யிப்பிடில்லாம் ஆவுமேன்னு நாம்ம பேசுறப்ப நெனைக்கலையேடி? இவ்வோ இவ்வளவு அறியாப் புள்ளையா இருப்பான்னு நாம்ம நெனைக்கலையே? எதுத்து எதாச்சும் பேசிப்புடாம இருக்கணும்ன்ங்றதுக்காகப் பேசுனதுக்காகப் பேசுனதுடி அப்பிடி! இப்பிடி ஒரு பச்சமண்ணுன்னு தெரியாமப் பேசிப்புட்டேம்டி! அவ்வேதாம் யாரு பேசுனா நாம்ம ஆத்தாக்காரின்னு மல்லுக்கு நின்னா என்னத்தெ கொறைஞ்சிப் போயிருக்கப் போறா? நம்மகிட்டெ சண்டைக்கி நிக்க அவளுக்கு உரிமையா யில்ல கேக்குறேம்? அவ்வே அன்னிக்குப் பண்ண அந்தக் கூத்துதாம்டி இந்த நெலைமைக்கு வந்து நிக்குது! நாம்ம யிப்போ எல்லாத்தையும் புரிஞ்சிகிட்டெம். எம் பேத்தியக் கொண்டாந்து கண்ணு மின்னாலக் காட்டு. நாம்ம அவளெ அழைச்சிட்டுப் போவப் போறேம். அழைச்சிட்டுப் போயி யாரு ன்னா சொன்னாலும் செரித்தாம் பாக்குக்கோட்டையில நம்ம கூடத்தாம் வெச்சிருப்பேம். சென்னைப் பட்டணமெல்லாம் அனுப்ப மாட்டேம்! இனுமே பாழாப் போன அந்தப் பட்டணத்துக்குல்லாம் அனுப்புறாப்புல யில்ல."ன்னுச்சு சரசு ஆத்தா ரொம்ப கேவலா.

            "எம் பொண்ண புருஷங்காரனோட குடித்தனம் பண்ண கட்டிக் கொடுத்தேமா? யில்ல ஒங் கூட காலம் பூரா வெச்சிக்கிட கட்டிக் கொடுத்தேமா? அழைச்சிக்கிட்டுக் கொண்டுப் போயி இவ்வே கூட வெச்சிக்கிறாளாமே வெச்சி? ன்னா பசப்புப் பசப்புறா? ஏம்டி இந்த யோஜனையெல்லாம் ஒமக்கு மின்னாடி வந்திருக்காதே? மின்னாடி வந்திருந்தா ஏம் பஞ்சாயத்தெ வைக்கச் சொல்லி அசிங்கம் பண்ணுறா? சரக்கு ஊத்திவுட்டு அடிக்க ஆளெ அனுப்பி வுடுறே?"ன்னுச்சு வெங்கு காட்டமா.

            "யய்யோ! இவ்வே புடிச்சிப் புடிய வுட மாட்டேங்றாளே! நடந்தது நடந்துப் போச்சு! யாருக்குத் தெரியும் இத்து இந்த அளவுக்கு வந்து நிக்கும்ன்னு? இனுமே எதாச்சும் தப்பா நடந்தா நம்மள செருப்பக் கெழட்டி அடி! காறித் துப்பு! ஒரு புருஷனுக்குத்தாம் முந்தானே விரிச்சியான்னு நாக்கெ புடுங்றாப்புல கேளு! இந்த ஒரு வாட்டி நடந்ததெ வுட்டுப்புடு! வேணும்ன்னா ஒண்ணுத்தெ சொல்லுறேம்! அவ்வேம் புருஷங்காரனோடத்தாம் இருக்கணும்ன்னு நெனைச்சா நாம்ம சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போயி அவளெ வெச்சிக்கிட்டுக் கெடக்குறேம். அதெ வுட நமக்கு ன்னா வேல?"ன்னுச்சு சரசு ஆத்தா ரொம்ப எறங்கி வந்தாப்புல.

            "ஆமாம்டி! கண்ணு கெட்டப் பெறவுதாம் சூரியனெ குடும்புடத் தோணுமாம்! நாஞ்ஞ உசுரக் கொடுத்து எம் பொண்ண காத்து வெச்சிருந்தா இவ்வே அழைச்சிட்டுப் போயி வெச்சிப் பாத்துப்பாளாம்? ஏம்டி அன்னிக்கே எம் பொண்ணோட உசுரு தூக்குலப் போயிருந்தா இன்னிக்கு இந்த மாதிரியா பொண்ண கொடுன்னா வந்து கேப்பே? யில்ல கேக்குறேம்! பஞ்சாயத்து முடிஞ்ச மறுநாளு காலையில வெட்டு வந்து இழுத்துக்கிட்டு அப்பிடியே எம் பொண்ணு போயிருந்தா இந்த மாதிரிக்கித்தாம் பொண்ண அனுப்புன்னா வந்து நிப்பே? யில்ல கேக்குறேம் சொல்லு! கொஞ்சமாச்சும் மனசாட்சி யிருந்திருந்தா, ஈரமான மனசு யிருந்திருந்தா யிப்ப வந்ததப் போல யப்போ ஒரு தவா பேருக்காவது வந்துப் பாத்துட்டுப் போயிருக்கணும்டி! ஒரு துரும்பு கூட வந்துப் பாக்கல அன்னிக்கில்லாம்! இதுல ஒம் மவளெ வேற வுட்டுப் பேசுறே பொண்ணு தூக்க மாட்டப் போயிடுச்சுங்றதால அத்து வுட்டுப்புடுவேம்ன்னு. அப்பிடில்லாம் பேசிப்புட்டு இன்னிக்கு எந்த மூஞ்சோட இந்த வூட்டுக்கு மின்னாடி வந்து நிக்குறேன்னு தெரியலையேடி!"ன்னுச்சு வெங்கு கண்ணு ரண்டும் செவக்க.

            "நம்புடி தங்கம்! பாக்குக்கோட்டையில கொண்டு போயி பத்திரமா வெச்சிக்கிறேம் தங்கத்தப் போல வெச்சிக்கிறேம் தங்கம். அவ்வேம் வேணும்ன்னா வார வாரத்துக்கு வந்துப் பாத்துக்கிட்டுக் கெடக்கட்டும். யில்லியா அந்தப் படுபாவிப் பய எம்மட வவுத்துல வந்துப் போறந்தானே அவ்வேம் இஞ்ஞ பாக்குக்கோட்டைக்கு மாத்தல வாங்கிட்டு வந்துக் கெடக்கட்டும். அதுக்கும் ஒத்து வரலையா இஞ்ஞப் பக்கத்துல திருவாரூருக்கோ ஆர்குடிக்கோ எங்காச்சிம் மாத்தல வாங்கிட்டு வந்து வூட்டோட மாப்புள்ளையா வாணும்ன்னா கெடக்கச் சொல்லுறேம். நம்புடியம்மா நம்புடி! எந் தங்கம் நம்புடி!"ன்னு கெஞ்சுனுச்சு சரசு ஆத்தா.

            "கழுத்தறுக்குற குடும்பத்துல வந்தவளே! ஒன்னய இனுமே நம்புறாப்புல யில்லடி! ஒங் குடும்பத்தோட எம் பொண்ண யிருக்கும். அதெ இனுமே அனுப்புறாப்புல யில்லடி. நீயி என்னத்தாம் பசப்புனாலும் அதெ நம்புறாப்புல யாரும் இல்லலேடி! எம் மவ்வனெ போயி கூலிப்படையோட தொடர்பு பண்ணித் தப்பு தப்பா கடுதாசி எழுத வுடுறீயே? அவ்வேம் கொழந்த மனசுடி. ஈயி எறும்புக்குக் கூட கெட்டது நெனைக்காத புள்ளபூச்சிடி அவ்வேம். அவனெப் போயி அப்பிடி நெனைக்கவே முடியாதப்போ இல்லாததும் பொல்லாததுமா காயிதமே எழுதுறீயேடி. எம் புருஷங்காரனப் பத்தித் தப்புத் தப்பா கதெ அளக்குறீயே? குனிஞ்ச தல நிமிராம நடக்குறவர்டி அவரு. பதிவிசுப் பத்திரமா இருக்குற அவுகளப் பத்தித் தப்புத் தப்பா பேசுனா நாக்கு அழவிப் போயிடுவீங்கடி! பண்டுறதையெல்லாம் வசமா பண்ணிப்புட்டு நெசமா பேசுறாப்புல நடிக்காதீயடி? யாருகிட்டெ காட்டுற ஒம்மட நடிப்பயெல்லாம்? சின்னம்மா சின்னம்மான்னு நம்பி இத்தனெ நாளு ஏமாந்துகிட்டுக் கெடந்த வெங்கு யில்லடி யிப்போ! ஒன்னயப் பத்தி நல்லா புரிஞ்சிக்கிட்டெ வெங்குடி இவ்வே!"ன்னு தரையில கைய வெச்சு அடிச்சிது வெங்கு.

            "ஏந் தங்கம்! பேசுறதுல ஒண்ணும் குத்தமில்லடி! ஒந் நெலமையில நாம்ம நின்னாலும் இதெத்தாம் பேசுவேம்! ஒண்ணப் புரிஞ்சக்கடி ஏந் தங்கம்! ஒம் பொண்ணு மட்டும் வரலேன்னா எங் குடும்பம் கெட்டுச் சீரழிஞ்சிப் போயிடுமடி! பொண்ணு பாவம் ஏழேழு சென்மத்துக்கும் வுடாதும்பாங்கடி! ஒரு பொண்ணு வவுறு எரிஞ்சா குடும்பம் நல்லாருக்காதுடி! அத்துப் புரியாமக் கெடக்குறானுவோ எம்மட வூட்டு ஆம்பளையோ! யாரு பேச்சையும் கேக்குறாப்புல யில்லாம நெலையா நிக்குறானுவோ! அதாங் போங்கடா நீஞ்ஞளும் ஒஞ்ஞ நெலையும்ன்னு தூக்கிப் போட்டுட்டு வந்துப்புட்டேம்டி! புரிஞ்சிக்கோடி ஏந் தங்கம். அவனுவோ பண்டுறதுப் பிடிக்காமதாம்டி கெளம்பி வந்திருக்கேம்! இந்த ஒரு தவா மட்டும் அனுப்பி வையி. ஒரு கொறையும் வர்றாம தங்கத்தெ வெச்சி தங்கமா பாத்துக்கிடுறேம்டி ஏந் தங்கம்!"ன்னுச்சு சரசு ஆத்தா அழுகாச்சியோட.

            "ஒம் மவனுக்கு எவளாச்சும் ஒரு பொண்ண பாத்துக் கட்டி வெச்சுக்கோடி! எம் பொண்ண இனுமே எதிர்பாக்காதே! எம் பொண்ண இனுமே அனுப்புறாப்புல இல்லடி! இனுமேலயும் வூட்டுல வாசல்ல உக்காந்திருந்தே மருவாதிக் கெட்டுப் போயிடும்! ஒங் கூடயோ, ஒங் குடும்பத்து கூடயோ இனுமே ஒட்டும் யில்ல, ஒறவும் இல்ல. இதுக்கு மேல இஞ்ஞ உக்காந்தீன்னா வெளக்குமாத்துப் பிஞ்சிடும் பாத்துக்கோ! மொதல்ல கெளம்புடி! செருப்பு பிய்யிறதுக்குள்ள கெளம்புடி நாயே மொதல்ல!"ன்னுச்சு வெங்கு.

            இதுக பேசிகிட்டு நிக்குறதெ வேடிக்கெ பாத்துட்டு நின்ன சனங்க கொஞ்ச நேரத்துக்குப் பிற்பாடு சமாதானம் பண்ணப் பாத்துச்சுங்க. "பொண்ண காட்டி வுட்டாவது அனுப்பி வுடு! ஏங்கிப் போயி போவக் கூடாதுடி யிப்படி வூட்டுக்கு வர்றவுக!"ன்னு சொல்லிப் பாத்துச்சுங்க. வெங்கு கேக்குறாப்புல இல்ல. "அவ்வவ்வே வூட்டுல நடக்கறப்பத்தாம் அவளவளுக்கும் வலி தெரியும்! ச்சும்மா வேடிக்கே பாத்துக்கிட்டு நிக்குறவளுக்கு அந்த வலி என்னத்தெ தெரியும்? வேடிக்கெப் பாக்க வந்தவளுவோ வேடிக்கெ பாத்தோமா போனாமான்னுப் போயிட்டே இருக்கணும். அதெ வுட்டுப்புட்டு ஞாயம் வெச்சிக்கிட்டு நின்னாளுவோன்னா நமக்குக் கெட்டக் கோவம் வந்துப்புடும் பாத்துக்கோ! போங்கடி போயி ஒஞ்ஞ ஒஞ்ஞ குடும்பத்துல நடக்குறதப் பாருங்கடி! எங் குடும்பத்துக்குப் புத்திச் சொல்ல வந்துப்புட்டாளுவோ!"ன்னு வெங்கு அதுக்கு மறுபேச்சுப் பேசுனுச்சு. அதுக்குப் பெறவு சுத்தி நின்ன சனங்க நமக்கு என்னா வந்துச்சுன்னு கலைஞ்சிப் போவ ஆரம்பிச்சதுங்க.

            சரசு ஆத்தா அங்கேயே உக்காந்தது உக்காந்தபடி உக்காந்துச்சு. "வெக்கங் கெட்டவளுவோ! வெளியில போங்கடி நாயீன்னு சொல்லியும் உக்காந்திருக்காவோ பிச்சக்காரி நாயீவோ! காறித் துப்புனாலும் செரித்தாம், வெளக்கமாத்தாலும் அடிச்சாலும் செரித்தாம், செருப்பே பிஞ்சாலும் செரித்தாம் அந்தாண்ட கெளம்ப மாட்டானுவோ! சோத்துல உப்பப் போட்டு சாப்புடுறாளுவோளா என்னவோ? சோத்தத்தாம் திங்குறாளுவோளா? பீய்யத் திங்குறாளுவோளான்னு தெரியல!"ன்னு சொல்லிட்டு அங்கயிருந்து உள்ளார வந்து வெளிக்கதவெ படார்ன்னு சாத்திட்டு வூட்டுக்குள்ளார வந்துடுச்சு வெங்கு.

            சரசு ஆத்தா ரொம்ப நேரமா வூட்டப் பாத்துட்டே உக்காந்திருந்துச்சு. பெறவு என்ன நெனைச்சிதோ உள்ளாரக் கூப்புடவோ, பேத்தியாளக் காட்டவோ மாட்டாளுவோன்னு புரிஞ்சிப் போன அத்து மெதுவா எழுந்திரிச்சி தலைவிரிக்கோலாம ஒரு பைத்தியக்காரிச்சிப் போல ஒடம்பு தளந்துப் போயி குடிக்காரப் பயெ குடிச்சிப்புட்டு தெருவ இந்தாண்டயும் அந்தாண்டயும் அளந்துக்கிட்டுப் போறாப்புல வடவாதிய நோக்கிப் போயிகிட்டெ இருந்துச்சு. சனங்க அதெ பாவமாவும், பரிதாபமாவும் பாத்துச்சுங்க. எதுத்தாப்புல கோயில்ல இருந்த வரசித்தி விநாயகரும் அதெ கல்லுப் போல உக்காந்துப் பாத்துட்டுதாம் இருந்தாரு. எதுவும் செய்யல. அவ்வளவுப் பேச்சுக்கும் அவரு சாட்சியா இருந்ததோட ஒதுங்கி இருந்தாப்புல இருந்துக்கிட்டாரு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...