16 Nov 2020

பதில் நோட்டீஸ்

பதில் நோட்டீஸ்

செய்யு - 627

            திருநீலகண்டன் வக்கீல் ரொம்ப சீக்கிரமாவே ஒரு பதில் நோட்டீஸ தயார் பண்ணி அனுப்புனாரு. அவரு அனுப்புன பதில் நோட்டீஸோட வெவரம் இதுதாம்.

அனுப்புனர் :-

                        S.திருநீலகண்டன், M.A.,B.L.,

                        வழக்கறிஞர்,

                        227/7A, ரத்தினம் காம்ப்ளக்ஸ், முதல் மாடி,

                        திருவாரூர் மெயின் ரோடு,

                        விளமல் & போஸ்ட், திருவாரூர்.

பெறுநர் :-

                        சி.சாமித்துரை, M.Sc.,B.L.,

                        வழக்கறிஞர்,

                        பாக்குக்கோட்டை நீதிமன்ற வளாகம்,

                        வழக்கறிஞர் சங்கம்,

                        பாக்குக்கோட்‍டை.

பதில் அறிவிப்பு

                        தங்களின் 15/04/2016 தேதியிட்ட தங்களின் அறிவிப்புக்கு,

            திருவாரூர் மாவட்டம் திட்டை, வடபாதி, கதவு எண் 1-159, காமராசர் தெருவில் வசிக்கும் பாலாமணி என்பவரின் மனைவியும், சுப்பு வாத்தியாரின் மகளுமான செய்யு என்பவரிடமிருந்து தகவல் பெற்று தங்களுக்குக் கொடுக்கும் பதில் அறிவிப்பு.

            எனது கட்சிக்காரர் 02/11/2014-இல் தங்கள் கட்சிக்காரரான பாலாமணி என்பவரை பாக்குக்கோட்டை வைரம் திருமண மஹால், மாடடிக்குமுளை என்ற இடத்தில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் தங்கள் கட்சிக்காரரைத் திருமணம் செய்ததாகத் தெரிவிக்கிறார். தங்கள் கட்சிக்காரரான பாலாமணி நிர்பந்தத்தின் படி நான்கு சக்கர வாகனம் (கார்) வாங்க ரூ. 20,00,000/- (ரூபாய் இருபது லட்சம்) என் கட்சிக்காரரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டதாக என் கட்சிக்காரர் தெரிவிக்கிறார். திருமணச் செலவிற்காக ரூ. 15,00,000/- (ரூபாய் பதினைந்து லட்சம்) திருமணத்திற்கு முன்பாக தங்கள் கட்சிக்காரரின் பெற்றோரிடம் எனது கட்சிக்காரரின் பெற்றோர் கொடுத்ததாக எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். தங்கள் கட்சிக்காரரின் தாயாரான சரசு அம்மாள் நிர்பந்தத்தின் பெயரில் தங்கள் கட்சிக்காரருக்கு 200 சவரன் நகை திருமணத்தின் போதும், மாப்பிள்ளை சீராக தங்கள் கட்சிக்காரருக்கு ஐந்து சவரன் கை செயினும், ஆறு சவரன் கழுத்துச் செயினும், இரண்டு சவரன் மோதிரமும், மாப்பிள்ளை ஆடைகள் வாங்க ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) தொகையும் எனது கட்சிக்காரரின் பெற்றோரால் தங்களது கட்சிக்காரருக்கு கொடுக்கப்பட்டது எனவும் எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். அனைத்து திருமண நகைகள் உட்பட, திருமண சீர்வரிசைப் பொருட்களும் ரொக்கமும் தங்கள் கட்சிக்காரரிடம் பத்திரமாக உள்ளதாகவும் எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். தங்கள் கட்சிக்காரரின் திருமணம் விமரிசையாகத்தான் நடக்க வேண்டும் என்றும், மேலும் தங்கள் கட்சிக்காரரின் கெளரவம் எந்த விதத்திலும் குறையக் கூடாது என்றும் தங்கள் கட்சிக்காரர் உட்பட அவர்களின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் கட்டாயப்படுத்தி கூறியதன் பெயரில் திருமண சீர்வரிசையாக ப்ரிட்ஜ், எல்யீடி டி.வி., வாஷிங்மெஷின், தேக்கு மரக்கட்டில், தேக்கு மர பீரோல், தேக்கு மரத்தில் செய்யப்பட்ட டைனிங் டேபிள் மற்றும் நாற்காலிகள், மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், வெள்ளிப் பாத்திரங்கள் 50 கிலோவும், பித்தளைப் பாத்திரங்கள் 200 கிலோவும், அத்துடன் விலையுயர்ந்த பட்டு ஆடைகள் உட்பட பலவற்றையும் எனது கட்சிக்காரரின் பெற்றோர்கள் பல இடங்களில் கடன்பட்டும், சொத்துகளை விற்றும் பணத்தைத் திரட்டி செய்வித்து திருமணத்தையும் வெகு விமரிசையாக நடத்தியதாகவும் எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். திருமணமான இரண்டு மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். திருமணமான முதல் நாளிலிருந்து சிறு சிறு சண்டைகளைப் பெரிதாக்கி மகிழ்வது தங்கள் கட்சிக்காரரின் வாடிக்கை என எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். எவ்வளோ சண்டைகளையும், வீண் விவாதங்களையும் வேண்டுமென்றே தங்கள் கட்சிக்காரர் ஏற்படுத்தினாலும் எனது கட்சிக்காரர் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் தங்கள் கட்சிக்காரரோடு வாழ முயற்சித்துள்ளார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தங்கள் கட்சிக்காரர் எனது கட்சிக்காரரை அடித்தும், திட்டியும், துன்புறுத்தியும் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் எனது கட்சிக்காரர் துன்புறும் ஒவ்வொரு வேளையிம் தங்களது கட்சிக்காரர் அதைப் பார்த்து மகிழ்வு கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். தங்கள் கட்சிக்காரர் குடும்பத்தின் சிறு சிறு விசயங்களையும், கணவன் மனைவிக்குள் நடைபெறும் அந்தரங்க விசயங்களையும் தனது பெற்றோர், சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்வதும், அதைப் பற்றி விவாதம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் தங்கள் கட்சிக்காரர் தனது தாய் மற்றும் சகோதரிகளின் அறிவுறுத்தலின் பெயரில்தான் எனது கட்சிக்காரருடன் தாம்பத்திய உறவு கொள்வார் என்றும் அவ்வமயம் பெண்கள் அணியும் ஆடைகளை அணிவதையும், கட்டாயப்படுத்தி எனது கட்சிக்காரரைப் போதை மாத்திரைகளை உண்ணச் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். தங்களது கட்சிக்காரரின் இச்செயலானது உயிரியல் நியதிக்கும் நீதிக்கும் முரணான செயலாகும். இருந்த போதிலும் எனது கட்சிக்காரர் தங்களின் கட்சிக்காரரின் வீட்டிலேயே அமைதியோடும், பொறுமையோடும் இருந்து, இவ்விசயங்களை யாருக்கும் கூறாமல் இந்துக் குடும்ப தர்மத்தை நிலைநாட்டி தனது குடும்பக் கடமைகளை ஆற்ற முற்பட்டாலும் தங்கள் கட்சிக்காரர் எனது கட்சிக்காரரின் துணிமணிகளை வீட்டிற்கு வெளியே தூக்கி எறிந்து, "உன் பிறந்த வீட்டுக்குப் போடி நாயே!" என்றும், "நீ என் கூட வாழ்ந்தால் அவ்சாரிப் பட்டம் கட்டி விடுவேன்!" என்றும், "என் சொந்தத்தில் அதிக வசதியில் பெண் இருப்பதால் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ளும் வகையில் நீயாக விவாகரத்து வாங்கிக் கொண்டுப் போய் விடு!" என்றும் பலப்பல விதமாக எனது கட்சிக்காரரை மிரட்டி அடித்து உதைத்ததாக எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். எனது கட்சிக்காரரை உடல் மற்றும் மனதால் நோகச் செய்து அவரை பிறந்ததகத்தில் விட்டதோடு, எனது கட்சிக்காரரை வாழ வைக்க வேண்டும் என்ற நோக்கோடு யாரையும் சமரசப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பவில்லை என்றும் எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். தங்கள் கட்சிக்காரரின் சகோதரிகள், "நீயாக விவாகாரத்து வாங்கிக் கொண்டு போய் விடுடி. இல்லையனா உன்னை எரித்துக் கொலை செய்து விடுவோம்!" என்று அடிக்கடி போனிலும், நேரிலும் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டு வருவதாகவும் எனது கட்சிக்காரர் மிகுந்த மனவேதனையுடனும் துன்பத்துடனும் தெரிவித்துக் கொள்கிறார். என்றாவது தங்கள் கட்சிக்காரர் மனம் திருந்தி தன்னோடு வாழ வருவார் என்ற நம்பிக்கையோடு இருப்பதாக எனது கட்சிக்காரர் கூறுகிறார். தங்கள் கட்சிக்காரர் மற்றும் அவரின் சகோதரிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் நேரிலும் போனிலும் தொடர்ந்து தகாத மற்றும் அச்சுறுத்தும் வகையில் பேசியதில் அதனால் எனது கட்சிக்காரர் தூக்கு மாட்டிக் கொண்டு மரண தறுவாயில் மீண்டு வந்ததாகவும் எனது கட்சிக்காரர் தெரிவித்துக் கொள்கிறார். எனது கட்சிக்காரர் அவ்வாறு உடல்நிலை சரியில்லாமல் கிடந்த போதும் கூட தங்கள் கட்சிக்காரரோ, அவர்களின் குடும்பத்தினரோ நேரில் வந்து மருத்துவமனையில் பார்க்கவில்லை என்று எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். எல்லா சூழ்நிலையிலும், எல்லா காலகட்டத்திலும் சேர்ந்து வாழ முடியாதபடி ஒரு சூழலைத் தங்களது கட்சிக்காரர் தொடர்ந்து உருவாக்கி வருவதாகவும் எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். ஒரு இந்துப் பெண்மணி இந்துத் தர்மப்படி ஆற்ற வேண்டிய கடமைகளை எள்ளளவு குறைவும் இன்றி எனது கட்சிக்காரர் ஆற்றியதாகவும் அதற்குப் பிரதியுபகாரமாக தான் பெற்றது அடியும், உதையும், சித்திரவதையுந்தாம் என்று எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். இருப்பினும் தங்கள் கட்சிக்காரர் சந்தேக மனப்பான்மையையும் சண்டையிடும் வழக்கத்தையும் துன்புறுத்தி சந்தோஷமடையும் சைக்கோ மனநிலையையும் கைவிட்டு மனம் திருந்தி வாழத் தயாராக இருப்பாராயின், எனது கட்சிக்காரர் திருவாரூர் சார்பு நீதிமன்றத்தின் வாயிலாக எனது கட்சிக்காரர் சேர்ந்து வாழ சம்மதிக்கிறார். மேலும் தங்கள் கட்சிக்காரரிடம் திருமண சீர்வரிசைப் பொருட்களும் நகைகளும் ரொக்கமும் பத்திரமாக இருப்பதாக எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். எனவே இவ்வறிப்பு கண்ட 7 தினங்களுக்குள் தங்கள் கட்சிக்காரரின் துர்மதிக்கு நல்ல புத்திமதிகளைக் கூறி, வீண் விவாதங்களில் ஈடுபடாத வண்ணம் எனது கட்சிக்காரருடன் குடும்பம் நடத்த செய்ய வேண்டியது வேண்டுவது. தவறும் பட்சத்தில் திருவாரூர் சார்பு நீதிமன்றத்தின் வாயிலாக சேர்ந்து வாழ வழக்குத் தொடுப்பார் என்றும் அவ்வாறு வழக்குத் தொடுக்கப்படும் பட்சத்தில் வழக்கிற்கான அனைத்துச் செலவுகளுக்கும் தங்கள் கட்சிக்காரரே முழு பொறுப்பு என்பதையும் இதனால் தங்கள் கட்சிக்காரரிடம் தெரிவிக்கவும்.

இடம் : விளமல்                                                                  வழக்கறிஞர்,

தேதி : 20/04/2016                                                      S.திருநீலகண்டன், M.A., B.L.

            இந்த வக்கீல் நோட்டீசுக்குப் பிரமாதமான பலன் இருக்கத்தான் செஞ்சுது. இந்த நோட்டீசு எதிர்தரப்புக்குக் கெடைச்ச மறுநாளே வடவாதியில இருந்த வீயெம் மாமா திட்டையில இருக்குற சுப்பு வாத்தியாரு வூட்டுக்குப் பூச்சிபுழு கூட முழிக்காத காலங்காத்தால வந்துச்சு.

            கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம இவ்வேம் எப்பிடித்தாம் வூடு தேடி வர்றாம்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. மவளோட மூர்த்தோலைக்கோ, கலியாணத்துக்கோ அவரு பத்திரிகெ வைக்கல. ஆன்னா பாக்குக்கோட்டை சார்பா அழைப்பு வெச்சாலும் கலியாணத்துக்கு மண்டபத்துக்கு வரல. அப்போ வாராட்டியும் பரவாயில்ல. தன்னோட மவ்வே தூக்கு மாட்டிக்கிட்டுச் சாவக் கெடந்தப்பயும் வந்துப் பாக்கல. ஒடம்புக்கு ரொம்ப முடியாம திருவாரூரு ஏயெம்ஸி ஆஸ்பிட்டல்ல கெடந்தப்பவும் வந்துப் பக்கல. பஞ்சாயத்து நடந்தப்பயும் என்னா ஏதுன்னு வந்து ஒரு வார்த்தெ கூட கேக்கல. அப்பிடிப்பட்ட பயெ இப்போ ஏம் வாரான்னு சுப்பு வாத்தியாருக்குள்ள யோசனெ ஓடுனுச்சு. காரணமில்லாம கம்மாவக் கட்டி எறைக்குற கூறுகெட்ட பயெ வீயெம் மாமா கெடையாதுங்றதும் சுப்பு வாத்தியாருக்கு ஒரு பக்கம் ஒரைச்சது.

            வூட்டுக்கு வந்த அத்து எல்லாரையும் கொல்லைய நெருங்குனாப்புல இருந்த கடைசிக் கொட்டாய்ப் பக்கமா வாரச் சொன்னுச்சு. திடுதிப்புன்னு இவ்வேம் ஏம் வந்து கொல்லப்பக்கம் வாரச் சொல்றாம்ன்னு எல்லாத்துக்கும் எரிச்சலாவும் தெகைப்பாவும் இருந்தாலும் ஒண்ணுத்தையும் சொல்லாம கொல்லப்பக்கக் கொட்டாய்க்கு வந்துச்சுங்க. எல்லாரும் வந்தப் பெறவு வீயெம் மாமா பேச ஆரம்பிச்சிது.

            "நமக்கு எல்லா வெசயங்களும் தெரியும். நீஞ்ஞ பொண்ண அழைச்சிட்டு வந்தப் பெறவு வேலன் பயலும், ஈஸ்வரியோட புருஷனும் நம்ம வூட்டுக்கு வந்தானுவோ. எப்பிடியாச்சும் சேத்து வைக்கணும்ன்னு நம்மட கால்ல வுழுவாத கொறையா கேட்டானுவோ. நாம்ம அப்போ அவனுகளப் பாத்து ஒரு வார்த்தெ கேட்டேம் பாருங்க, ‘ஏம்டா இப்பத்தாம் நம்ம வூட்டுக்கு வழித் தெரியாதுன்னா?’ அவனுங்க பக்கம் பேச்சு மூச்சக் காணும். வெக்கிப் போயி உக்காந்திருந்தானுவோ. எப்பிடியாச்சும் பொண்ணையும் பையனையும் சேத்து வெச்சிப்புடணும்ன்னான்னுவோ. அப்போ நாம்ம சொன்னேம், எங்கத்தாம் தப்பா எதுவும் பண்ணிட மாட்டாரு. தப்பு ஒஞ்ஞப் பக்கந்தாம் இருக்குடா! ஓடுங்கடா நாயின்னு. அதெ கேட்டுப்புட்டு ஓடுனப் பயலுவோதாம். நாமளும் அப்போ இத்துச் சம்பந்தமா எதுவும் கேக்க வாரல. நீஞ்ஞளும் நம்மகிட்டெ வெட்டுன்னாப்புல நடந்துக்கிட்டீயே. அதால அதெப் பத்தி அப்ப எதுவும் ஒஞ்ஞகிட்டெ சொல்ல வாரல. என்னத்தெ இருந்தாலும் யக்காப் பொண்ணுங்ற நெனைப்பு நம்மட மனசுல இன்னும் மாறல. நாம்ம தூக்கி வளத்தப் பொண்ணுங்ற நெனைப்பும் மனசெ வுட்டுப் போவல. அதாங் மனசு கேக்காம வந்துப்புட்டேம்! யிப்போ அவனுங்க ஒஞ்ஞளுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியிருக்கானுங்க. நீஞ்ஞப் பதிலுக்கு ஒரு நோட்டீஸ அனுப்பியிருக்கீங்க. இதெல்லாம் வேலைக்காவாது யத்தாம்! ன்னா நாம்ம இப்பிடிச் சொல்றேம்ன்னு நெனைக்கக் கூடாது! இதால ஒண்ணும் கதையாவப் போறதில்ல! ன்னா நாம்ம சொல்றது?"ன்னு சொல்லி நிறுத்துனுச்சு வீயெம் மாமா.

            "ஒண்ணும் கதையாவப் போவாதுன்னா அவ்வேம் எதுக்கு வக்கீல் நோட்டீஸ வுடுறாம்! நம்மட வக்கீல் நோட்டீஸக் கெடைச்சதும் எதுக்குப்பா ஒன்னய அனுப்பி வுடுறாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஏகக் கடுப்புல.

            "அத்து வந்து யத்தாம்! சில விசயங்கள நீஞ்ஞப் புரிஞ்சிக்கிடணும். ஒஞ்ஞளுக்குல்லாம் கோர்ட்டு கேஸூ, போலீஸ் ஸ்டேசன்லாம் ஒத்து வாராது. நமக்கு அப்பிடியில்லா. கோர்ட்டு, கேஸூ, போலீஸ் ஸ்டேசன்னு அலையுற ஆளு. ஏம் அஞ்ஞயே குடித்தனம் நடத்துற ஆளுன்னும் சொல்லலாம். நாம்ம எஞ்ஞ இருப்பேன்னு கேட்டா வூட்டுல இருப்பேம், யில்லாட்டி கோர்ட்டுல இருப்பேம், யில்லாட்டி ஸ்டேசன்ல இருப்பேம்ன்னு மூணு விலாசத்துல இருக்குற ஆளு. நீஞ்ஞ அப்பிடியா? நீஞ்ஞ இருக்குறது எஞ்ஞன்னு கேட்டா இந்த வீட்டு விலாசம் ஒண்ணுலத்தாம். ஒஞ்ஞளுக்கு இத்து ஒத்து வருமா சொல்லுங்க? ஒரு கோர்ட்டு கேஸூன்னுப் போனா கேக்கக் கூடாத கேள்வியெல்லாம் கேப்பாம். அதெயல்லம் நம்ம பொண்ணு தாங்குமா? ஒண்ணும் யில்லாத பெரச்சனைக்கே தூக்குக் கயித்தத் தேடி, அதெ மாட்டிக்கத் தெரியாம தப்பிச்சப் பொண்ணு இத்து. பெறவென்னவோ ஒடம்பெல்லாம் விதுத்துப் போயி ஆஸ்பிட்டல்ல சேத்துப் பொழைக்க வெச்ச கேசு. அதையெல்லாம் நெனைச்சிப் பாக்கணும். அதாலத்தாம் சொல்றேம், இந்த வெளையாட்டுல்லாம் வாணாம். புள்ளப்பூச்சிகளுக்கு அதெல்லாம் ஒத்து வாராது. அவனுக அப்பிடியில்ல. எந்த எல்லை வரைக்கும் போவுற ஆளுக. இந்தத் தலைமொறையிலத்தாம் நாம்ம அப்பிடின்னா அவனுக போன பல தலைமொறையாவே அப்பிடி இருந்த ஆளுவோ. அத்து தெரியாம பொண்ண கொண்டு போயிக் கொடுத்துட்டு என்னத்தெ சொல்ல? கிளியக் கொண்டுப் போயி பூனைகிட்டெ கொடுத்த கதெதாம். துஷ்டன்ன கண்டா தூர வெலகிப் போன்னு சொல்லுதாகளா இல்லியா? அப்பிடி வெலகிப் போயிகிட்டெ இருக்கணும். அவ்வேங்கிட்டெ போயி நெருங்கிக்கிட்டு வம்பு வழக்க வெச்சிக்கிட்டுக் கெடக்கக் கூடாது! ஆங் இதெ நல்லாப் புரிஞ்சிக்கிடணும், யோஜிச்சுக்கிடணும்!"ன்னுச்சு வீயெம் மாமா. வீயெம் மாமா அவனுகளுக்கு தோதா பேசுதா? யில்ல யத்தானோட குடும்பம் மேலுக்கு மேல வம்புல சிக்கிக்கக் கூடாதுன்னு பேசுதா? இப்படி ரண்டு வெதமான கேள்விங்க அதெ கேட்ட எல்லாரு மனசுலயும் உண்டானுச்சு. இந்தக் கேள்விகளுக்கான பதில சட்டுன்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இப்படி சுத்திக் கொழப்பி அடிச்சதுல இப்போ வீயெம் மாமா எதெ பேச வருது, என்னத்தெ சொல்ல நெனைக்குதுங்றது யாருக்கும் ஒண்ணும் புரியாம தடுமாற வேண்டியதாப் போச்சு.

            "சுத்தி வளைச்சுல்லாம் எதையும் பேசுறதில்ல அர்த்தம் யில்ல. ஆனது ஆயிப் போச்சு. இனுமே போயி நடந்ததெ மாத்த முடியாது. சொல்ல வர்றது எதுவா இருந்தாலும் அதெ நேரடியாவே இன்னா இதுன்னு சொல்லிப்புட்டா எல்லாத்துக்கும் புரிஞ்சிப் போயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நேருக்கு நேரு நெத்தியடியா.

            "அதுக்குத்தாம் யத்தாம் வர்றேம்! அதுக்குள்ள அவ்சரப்பட்டா எப்பூடி? விசயம் ன்னான்னா இப்போ அவனுக சுமூகமா முடிச்சிடப்புட நிக்குறானுவோ! நீஞ்ஞ மொதல்ல வெவகாரத்துக் கேஸப் போடுதீயளா? யில்ல அவுனுகளப் போடச் சொல்லவா? அவ்வளவுதாங் வெசயம் முடிஞ்சிது!"ன்னு ஒடனே பட்டுன்னு அடிச்சிது வீயெம் மாமா.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...