15 Nov 2020

வக்கீலிடம் பொய் சொல்லக் கூடாது!

வக்கீலிடம் பொய் சொல்லக் கூடாது!

செய்யு - 626

            விளமல்ல திருவாரூரு மெயின்ரோட்டுல, ரத்தினம் காம்ப்ளக்ஸ் முதல் மாடியில இருந்துச்சு வக்கீலு திருநீலகண்டனோட ஆபீஸூ. ஆபீஸூக்குக் கீழே ஒரு வேப்பமரம். கிராமத்துல வேப்ப மரத்தப் பாக்குறது பெரிசில்ல. டவுன்ல அதெ பாக்குறது பெரிசுதாம். கிராமத்துல வேப்ப மரத்த வெட்டுறதுங்றது சாமிய வெட்டுறாப்புல. நகரத்துல சாமிய வெட்டுறதெ மரத்தெ வெட்டுறாப்புலத்தாம். ரோட்டு வாக்குல அதுவும் ஒரு காம்ப்ளக்ஸ் மின்னாடி அப்படி ஒரு வேப்ப மரங்றது அபூர்வந்தாம். டவுன்ல இத்து மாதிரியான அதிசயங்கள தேடித் தேடித்தாம் கண்டுபிடிக்கணும். அந்த வேப்பமரத்து நிழல்லத்தாம் சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடுன்னு மூணு பேரும் வக்கீலப் பாக்க காத்திட்டு நின்னாங்க. வேப்பமரத்தடியிலேந்து மேல எட்டிப் பாத்தப்போ நீலநிற ப்ளக்ஸ்ல வெள்ளை நிறத்துல அவரோட பேரு எழுதி, எந்த நேரத்துல பாக்கலாங்ற வெவரம் எழுதி மாடி மேல தொங்கிட்டு இருந்துச்சு. மூணு பேரும் வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருந்துச்சு. "இந்த வக்கீல்கிட்டெ இதாங் ஒண்ணு. சொன்னா சொன்ன நேரத்துல வர மாட்டாம். எப்ப வந்தாலும் செரித்தாம் இத்தோ கெளம்பிட்டேம், அஞ்சு நிமிஷத்துல வந்திடுறேம்பாம் போன் பண்ணிக் கேட்டா. ஆன்னா வந்துச் சேர்றதுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடும். அவ்வேம் நேரக் கணக்குக்கு அஞ்சு நிமிஷம்ன்னா ஒரு மணி நேரம். பத்து நிமிஷம்ன்னா ரண்டு மணி நேரம். ஒரு மணி நேரம்ன்னா அன்னிக்கு ஆளே வர்ற மாட்டாம். என்னவோ அவ்வேம் பொழப்புந்தாம் ஓடிட்டு இருக்கு! ஆளு மட்டும் கொஞ்சம் ஒழுங்க இருந்தாம்ன்னா திருவாரூர்ல அவனெ அடிச்சிக்க ஆளு கெடையாது. ஒழுங்கா இருக்கணுமே? அதாங் சுழி!"ன்னாரு கைப்புள்ள சலிச்சிக்கிட்டு.

            கைப்புள்ள சொன்னது சரிதாங்றது போல அஞ்சு நிமிஷத்துல ஆபீஸ்ல வந்து நிக்குறதா சொன்ன திருநீலகண்டன் ஒரு மணி நேரம் கழிச்சித்தாம் வந்தாரு. ஒரு பழைய டிவியெஸ் ஸ்டார்சிட்டி பைக்குல வந்து எறங்குனவரு, வண்டிய ஸ்டேண்டு போட்டுட்டு வண்டியில மாட்டியிருந்த சூட்கேஸ்ஸ கையில எடுத்துக்கிட்டாரு. அந்த சூட்கேஸூ கீறல் விழுந்து, அழுக்கா, பழங்காலத்து பொருளப் போல கைக்கு அடக்கமா சின்னதா இருந்துச்சு. ஞாயித்துக் கெழமையும் கோர்ட்டுக்குப் போறாப்புல வெள்ளைப் பேண்டோடும், வெள்ளைச் சட்டையோடும் வந்திருந்தாரு. முடி வெட்டி நாளாயிருக்கும் போல. முடி சடை சடையா தொங்கிட்டு இருந்துச்சு. முகச்சவரம் பண்ணியும் நாளாயிருக்கணும். மொகம் முழுக்க புதரு போல தாடி முடிங்க மண்டியிருந்துச்சு. வேப்பமரத்தடியிலேந்து மொத மாடிக்கு ஏறி, வக்கீலு ஷட்டரைத் தொறந்து விட்டதும் ஆபீஸ்லேந்து அனத்துற காத்து குப்புன்னு வெளியில வந்துச்சு. வக்கீலு பேனப் போட்டு வுட்டாரு. அது மெதுவா சுத்துனுச்சு. "இந்தப் பேன வந்து ரிப்பேர்ர பாருடான்னு எலக்ட்ரீஷியனுக்குப் போன அடிச்சிட்டேம். இத்தோ வர்றேம்! அத்தோ வர்றேங்றான்னே தவுர வர்ற மாட்டேங்றாம்!"ன்னாரு வக்கீலு.

            "ஒஞ்ஞள மாதிரித்தாம்!"ன்னாரு கைப்புள்ள சிரிச்சிக்கிட்டு.

            "நாம்ம என்னிக்கு வர்றேம்ன்னு சொல்லிட்டு வர்றாம இருந்திருக்கேம்? நேரந்தாம் மின்ன பின்ன ஆவும்? ஒரு வக்கீலுங்றவேம் வண்டிய எடுத்தா நேரடியா வந்துச் சேர முடியாது. அங்கங்க ஆளுங்க பிடிச்சிப்பானுங்க. பேசிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்! அந்தப் பேச்ச வுட்டா நாலு கேஸ்ஸ பிடிக்க முடியாது பாருங்க. வக்கீலுக்குப் பொழப்பே கேஸ்தானே!"ன்னாரு வக்கீலு.

            ஆபீஸூ முழுக்க இரும்பு ராக்கையில வழக்குக் கட்டுக நெறைய இருந்துச்சு. எல்லாம் அழுக்குப் படிஞ்சிச் சுத்தம் பண்ணாம பழுப்பேறி இருந்துச்சு. அத்தோட சட்டப்புத்தகங்கள் நெறைய மொத்த மொத்தமா இருந்துச்சு. அதுவும் அப்பிடித்தாம் அழுக்கடைஞ்சு பழுப்பேறி அடுக்கியிருந்துச்சு. வக்கீலு ஒரு பெரிய சொழல்ற நாற்காலியும், மேசையும் போட்டு எதுத்தாப்புல நாலு ப்ளாஸ்டிக் நாற்காலியப் போட்டிருந்தாரு. அந்த நாற்காலியில ரண்டு நல்ல நெலையிலயும், ரெண்டு ஒடைஞ்சு விரிசல் வுட்ட நெலையிலயும் இருந்துச்சு. கைப்புள்ளயும், சுப்பு வாத்தியாரும் நல்ல வெதமா இருந்த நாற்காலியில உக்காந்துக்கிட்டாங். விகடுவெ ஒடைஞ்சாப்புல நாற்காலியிலப் பாத்து கவனமா உக்காருங்கன்னு சொல்லிட்டு மேசை மேல அலங்கோலமா கெடந்த வழக்குக் கட்டுகள அப்பிடி இப்பிடின்னு போரட்டிப் பாத்துப்புட்டு, சிலதெ சரட்டு சரட்டுன்னு வேக வேகமாக அடுக்கி வெச்சாரு வக்கீலு.லீகல் சைஸ் பேப்பர்ர மடிச்சு வெச்சாப்புல இருந்த அவரோட வக்கீலு டைரிய எடுத்து பரட்டு பரட்டுன்னு பொராட்டி தேதிங்களயும் வழக்குகளயும் ஒரு பார்வே பாத்துக்கிட்டாரு. அதுக்கு எடையில சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடுன்னு எல்லாரையும் ஒரு பார்வெயும் பாத்துக்கிட்டாரு.

            மேசைக்குப் பக்கத்துல ஒரு டெஸ்க்டாப்பு கம்ப்யூட்டர்ர வெச்சிருந்தாரு. அநேகமா அதெ அவரு பயன்படுத்துன அறிகுறி எதுவும் தெரியல. அதுவும் அழுக்கும் தூசியுமாத்தாம் இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு எழுந்து நின்னு பவ்வியமா வக்கீல் நோட்டீஸ எடுத்து நீட்டுனாரு. அதெ வாங்கி கவர்லேந்து பிரிச்சி அந்தத் தாள அப்பிடியும் இப்பிடியுமா கண்ண ஓட்டுன வக்கீலு பட்டுன்னு வீசி எறியுற தொனியில மேசையில தூக்கி அடிச்சாப்புல வெச்சிட்டு, "சின்னபுள்ளத் தனமா அனுப்பியிருக்காம். நான்சென்ஸ். இதெல்லாம் ஒரு நோட்டீ‍ஸே யில்ல! எந்த வக்கீலும் இப்பிடி நோட்டீஸ கவர்ரப் போட்டு அனுப்ப மாட்டாம். அனுப்புன மொறையே தப்பு. நோட்டீஸூ வுடுற சீட்ட அப்பிடியே மடிச்சித்தாம் அனுப்பணும். இதுக்கே ஒரு நோட்டீஸ வுடுவேம். அத்து கெடக்கட்டும். அதெ அப்புறம் வெச்சு செய்யுறேம். யிப்போ ஒங்ககிட்டெ ஒரு முக்கியமான விசயத்தெ சொல்றேம். டாக்கடர்ட்டயும், வக்கீல்ட்டயும் எதையும் மறைக்கக் கூடாது. உள்ளது உள்ளபடி என்ன கதெ நடந்துச்சோ அதெ அப்பிடியே சொல்லணும். ஒரு வார்த்தெ கூடவோ, கொறைச்சலோ இருக்கக் கூடாது. முக்கியமா வக்கீல்கிட்டெ பொய்யே சொல்லக் கூடாது. ஏன்னா அதெ நாங்கத்தாம் சொல்லணும். நீங்க சொல்லக் கூடாது. புரிஞ்சிதா? என்ன நடந்துச்சோ அதெ அப்பிடியே பூசி மொழுகாம, கண்ணு காது வைக்காம கச்சிதமா சொல்லணும்!"ன்னு அழுத்தமா சொல்லி கண்ண ஒரு உருட்டு உருட்டுனாரு வக்கீலு. அப்பிடி அவரு பேசுனதையும், கண்ண உருட்டுனதையும் பாக்குறப்பவே பயங்கரமா இருந்துச்சு.

            சுப்பு வாத்தியாரு நடந்த ஒவ்வொண்ணையும் சொல்ல ஆரம்பிச்சாரு. நடந்த கதென்னாலும் அவரால கோர்வையா சொல்ல முடியல. எடையிடையே சொல்ல முடியாம தடுமாறி தடுமாறித்தாம் சொல்லிட்டு இருந்தாரு. இடை இடையில விகடுவும் கைப்புள்ளையம் நடந்ததெ எடுத்துக் கொடுத்தாங்க. நடந்த கதென்னாலும் அதெ மத்தவங்ககிட்டெ சொல்றதுக்கே ஒரு பயிற்சி தேவைப்படும் போலருக்கு.

            "ஆகாங்! ஒரு ஒம்போது பயலுக்கு மொத்தத்துல கலியாணத்தப் பண்ணிக் கொடுத்துப்புட்டீங்க. பம்பாய்ல போயி ஆபரேஷனப் பண்ணிட்டு பொம்பளையாத் திரிய வேண்டியவனெப் போயி பொண்ணுக்குக் கட்டிக் கொடுத்துக் கலியாணத்தெ நடத்துன்னா அத்து எப்பிடி நடத்தும்? மொத்தத்துல பொண்ணோட வாழ்க்கைய சீர்கெடுத்தாச்சு!"ன்னு சொன்னா வக்கீலு, விகடுவெப் பாத்து, "பொண்ணோட அண்ணந்தானே! அப்பவே மச்சான நாலு போடு போட்ருந்தீன்னா இங்க ஆபீஸ்ல வந்து நிக்கவே வேண்டியதில்ல!"ன்னாரு கண்ண பெரிசா ஒரு உருட்டு உருட்டிக்கிட்டு.

            "அத்து எப்பிடிங்கய்யா வெவரம் தெரியாம அடிதடியில எறங்க முடியும்?"ன்னாம் விகடு.

            "வெவரம் தெரியாததுக்கு மின்னாடித்தாம் அடிக்க முடியும். வெவரம் தெரிஞ்சிட்டா அடிக்க முடியாது. எங்க அக்கா புருஷன் ஒருத்தன் இப்பிடித்தாம். சொல்லிச் சொல்லிப் பாத்தேம். கேக்குறாப்புல இல்ல. அக்காவப் போட்டு அடிச்ச அடியில ஆஸ்பத்திரியில சேக்குறாப்புல ஆயிடுச்சு. ஆஸ்பத்திரிக்கி அக்காவப் பாக்க வந்தவனே அங்க வெச்சே அடிச்சி அதே ஆஸ்பத்திரியில சேத்து விட்டேம். வாயத் தொறக்கலையே. அக்காவும் அக்கா புருஷனும் ஒண்ணா டிஸ்சார்ஜ் ஆனாங்க. இப்போ ரண்டு பேரும் எந்தப் பெரச்சனையும் இல்லாம இருக்காங்க!"ன்னு சொல்லிட்டு சிரிச்சாரு வக்கீலு. சிரிச்ச அவரோட மொகம் இப்போ கர்ண கொடூரமா மாறி வெறி கொண்டாப்புல மாறுனுச்சு. மேசையைப் பிடிச்சி படார்ன்னு தட்டுனாரு. மேசை மேல இருந்த கேஸூ கட்டுங்க, பொருளுங்க ஒரு அதிர்வு அதிர்ந்து அமைதியானுச்சுங்க. "வேலைய வுட்டுத் தூக்கவா? வேலையக் காலிப் பண்ணிடவா? யில்ல சேத்து வுடவா?"ன்னாரு வக்கீலு ஆக்ரோஷமா.

            "அதெப்படி சேக்க?"ன்னாரு சுப்பு வாத்தியாரு புரியாம.

            பக்கத்துல ராக்குல அடிக்கியிருந்த கேஸ் கட்டுகள பெரட்டு பெரட்டுன்னு பெரட்டி அதுல ஒண்ணு வேக வேகமா தேடி எடுத்தாரு வக்கீலு. அந்தக் கட்டப் பிரிச்சி அதுலேந்து ரெண்டு மூணு போட்டோவ வெளியில எடுத்தவரு, "மனசுல துணிச்சல் இருந்தா மட்டும் இந்தப் போட்டோவப் பாருங்கோ! இல்லாட்டி பாக்க வாணாம். நாம்ம கதையச் சொல்றேம்!"ன்னாரு. கைப்புள்ள, சுப்பு வாத்தியாரு, விகடு மூணு பேருமே அந்தப் போட்டோக்களப் பாத்தாங்க. பாக்க முடியாத அளவுக்கு ஒரு பொண்ணோட முதுகு, தோள்பட்டெ, கழுத்து, நெஞ்சுன்னு தீக்காயங்களா இருந்துச்சு.

            "கதெ என்னான்னா தெரிஞ்சுக்கோங்கோ! புருஷன் பொண்டாட்டிப் பிரச்சன. ஒரு நாளு ஆத்திரத்துல ஆத்துக்காரன் கொதிக்கிற கொழம்ப தூக்கி ஆத்துக்காரி மேல ஊத்திட்டாம். பாத்தீங்கல்ல போட்டோல்ல. கேஸ்ஸூ நம்மகிட்டத்தாம் வருது. பொண்ணு சார்பா நாம்ம ஆஜரு. கேஸ்ஸூ விகரஸ்ஸப் போயிட்டு இருக்குங்றேம். அந்த நேரத்துல ஆத்துக்காரன் ஆத்துக்காரி ரண்டு பேருக்கு எடையில இதெ ஆபீஸ்ல உட்கார வெச்சு ஒரு சிட்டிங்கப் போடுறேம். லாஸ்ட் அண்ட் பைனல் டிசிஷன் என்னான்னு கேக்குறேம்! இனுமே கொதிக்குற கொழம்ப தாங்குற அளவுக்குத் தெம்பு இல்லன்னு சொல்றா ஆத்துக்காரி. இனுமே சேர்ந்து வாழ்ந்தா கொதிக்குற கொழம்புல பல்லிய அடிச்சிப் போட்டு நம்மளக் கொன்னுப்புடுவாங்றாம் ஆத்துக்காரன். அப்பத்தாம் நாம்ம ரண்டு பேரையும் பாத்துச் சொல்றேம். ஆத்துக்காரி பேர்ல அஞ்சு லட்சத்துக்கு இன்ஷ்யூரன்ஸ ஆத்துக்காரனெ போடச் சொன்னோம். அதெப் போல ஆத்துக்காரன் பேர்ல ஆத்துக்காரியப் போடச் சொன்னேம். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கோ. மறுநாளே சேர்ந்து வாழ்றேம்ன்னு சொன்னாங்க. இதெ அப்பிடியே கொண்டுப் போயி கோர்ட்ல வெச்சு ரண்டு பேரும் போட்டுருக்கிற இன்ஷ்யூரன்ஸ் டாக்குமெண்டையும் ஜட்ஜ் முன்னாடி கொண்டுப் போயி வெச்சேம். ஜட்ஜ் அசந்துப் போயிட்டாரு, பிரிஞ்சிடும்ன்னு நெனைச்ச தம்பதிகள சேத்து வைச்சதேப் பாத்து. ஜட்ஜ்கிட்டேயிருந்து கிரேட் அப்ரிஷியேஷன் சார்! சொன்னா நம்ப மாட்டீங்க! இந்த திருநீலகண்டன் சாதிச்சுக் காட்டுனாம் சார்! பேசிக்கலி ஐயாம் இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட் ஆல்சோ. அதால அப்பிடி நம்மால சிந்திக்க முடிஞ்சது. இன்னிக்கு ரண்டு பேரும் சேர்ந்து வாழ்றாங்க. நல்லாவே வாழ்றாங்க சார்! சொன்ன நம்ப முடியுதா?"ன்னாரு வக்கீலு.

            "நம்ம வெசயத்துல சேத்துப்புடறதல்லாம் வாணாம்ங்கய்யா! நகெநட்டு, சீரு சனத்தி, பணங்காசின்னு ரொம்ப அந்தப் பக்கத்துல தங்கிட்டு. அதெ வாங்கிட்டு விடுதலைய வாங்கிக் கொடுத்தா போதும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அமைதியா.

            "சேர்க்குறதுன்னாலும் செரித்தாம், பிரிக்கிறதுன்னாலும் செரித்தாம். ரெண்டுமே நமக்கு அல்வா ஜிலேபி சாப்புடுற மாதிரித்தாம். எதைச் சொல்றீங்களோ அதைச் செய்வேன். அதுக்கு மொதல்ல பொண்ணுகிட்டெ முழுசா கேட்டுக்கிட்டுத்தாம் செய்வேம். இதுல ஒங்க கருத்தெ மட்டும் வெச்சு முடிவெ பண்ணுப்புடுவேன்னு நெனைச்சிப்புடாதீங்கோ! ஏன்னா நாம்ம அந்த மாதிரி வக்கீல் கெடையாது. பார்ல விசாரிச்சிப் பாருங்க திருநீலகண்டன்னா யாருன்னு? திருவாரூரே திருநீலகண்டன்னா அலறும்! இதுக்கு மொதல்ல ஒரு பதில் அறிவிப்பத் தட்டி வுடுவேம். அந்த வக்கீலு ஒரு அறியாதப் பயலா இருப்பாம் போலருக்கு. அவ்வேம் கொடுத்ததெப் போல பிப்டின் டேஸ்லாம் நான் கொடுக்க மாட்டேன். ஒன்லி செவன் டேஸ்தான் கொடுப்பேன். எவ்ளோ நகைப் போட்டீங்க? என்னென்ன சீர் சனத்திப் பண்ணீங்க? எவ்ளோ பைசாவ அள்ளிக் கையில கொடுத்தீங்க? கரெக்டா சொல்லுங்க! கூட கொறைச்சல் இருக்கவே படாது!"ன்னாரு வக்கீலு. அதெ கேட்டுட்டு சுப்பு வாத்தியாரு சொல்ல சொல்ல அதுல ஒரு வேடிக்கெ நடந்துச்சு.

            சுப்பு வாத்தியாரு நகெ போட்டதா நூறு சவரன்னு சொன்னா, அதெ எரநூத்து சவரன்னாரு வக்கீலு ஒடனே. சுப்பு வாத்தியாரு காரு வாங்குறதுக்குப் பத்து லட்சம் கொடுத்தா சொன்னா அதெ இருவது லட்சம்ன்னாரு வக்கீலு ஒடனே மாத்தி. கலியாணச் சிலவுக்கு ஏழரை லட்சம் வரைக் கொடுத்தா சொன்னா அதை பாஞ்சு லட்சம்ன்னாரு வக்கீலு. சுப்பு வார்த்தியாரு சொல்ல சொல்ல அதெ அப்படியே ரண்டு பங்கா அவரு சொல்ல சொல்ல மாத்திச் சொன்னாரு வக்கீலு. சுப்பு வாத்தியாரு சொன்ன பித்தளைச் சாமாஞ் செட்டுகள வெள்ளி சாமாஞ் செட்டுகளா மாத்திச் சொன்னாரு வக்கீலு. சுப்பு வாத்தியாரு கலியாணத்துக்குன்னு யிப்படி எதெ பண்ணுனதா சொன்னாலும் அதெ அப்பிடியே ஒடனுக்கு ஒடனே தினுசு தினுசா ஏத்தியும் கூட்டியும் சொன்னாரு வக்கீலு. சொல்லிப்புட்டு இப்பிடித்தாம் நீங்க செஞ்சதா நோட்டீஸ அனுப்புவேம்ன்னு பட்டுன்னு டேபிள்ல ஒரு அடி அடிச்சிச் சொன்னாரு.

            "அப்பிடி நோட்டீஸ் அனுப்புறது சரிபட்டு வருமா? என்ன செஞ்சோமோ அதெ மட்டும் எழுதுங்கய்யா!"ன்னாம் விகடு.

            "நீங்க சும்மா இருங்க பிரதர். ஒங்களுக்குப் புரியாது. கூடப் போட்டு போட்டதெ வாங்கிப்புடலாம். சரியாப் போட்டா அதுல பாதியத்தாம் வாங்க முடியும். அனுப்புற நோட்டீஸ சரியா அனுப்பணும். பின்னாடி கோர்ட்ல கேஸ் ஆன்னா இதுவும் நின்னுப் பேசும். நோட்டீஸ வுடுறப்பவே சரியா வுடணும். இதுலயெல்லாம் நீங்க தலையிடக் கூடாது. நோட்டீஸத் தயாரு பண்ணி அனுப்பிட்டுப் போன அடிக்கிறேம். பொண்ண அழைச்சாந்து ஒரு நாளு காட்டி வுட்டுட்டு போயிக்கிட்டெ இருங்க. அப்போ பொண்ணோட விருப்பத்தையும் இங்க ஆபிஸ்ல வெச்சு ஜட்ஜ் குறுக்கு விசாரணை பண்ணுறதுக்கு முன்னாடி நாம்ம ஒரு குறுக்க விசாரணை பண்ணிக்கிறேம்! இந்த பதில் நோட்டீஸ் ஒண்ணு போதும் அவ‍னை மெரள வைக்க. இதுக்கே அவன் அப்பிடியே கழிஞ்சிக்கிட்டு யூரின அடிச்சிக்கிட்டுச் சமாதானத்துக்கு வந்துடுவான். இதுக்கு அவன் மசியலன்னா அதுக்கு அடுத்தாப்புலயும் சில வேலைகளப் பண்ணலாம். அதெ இப்போ சொல்ல மாட்டேம். அப்பிடி ஒரு நெலை வந்தா மட்டும்ந்தாம் சொல்லுவேம். இப்போ நோட்டீஸ அனுப்புறப்போ சேர்ந்து வாழ வர்றதாத்தாம் அவனெ உள்ளார இழுக்கணும்! அப்பிடித்தாம் அனுப்புவேம். இதெல்லாம் சில சட்ட நுணுக்கங்களாக்கும். அதுல நீங்க தலையிக் கூடாது பாத்துக்கோங்க!"ன்னாரு வக்கீலு.

            "சட்ட வெசயங்க நமக்குப் புரியாதுங்கய்யா! அதெல்லாம் நீஞ்ஞப் பாத்துச் செஞ்சுக்கோங்க. யிப்போ எம்மாம் காசியக் கொடுக்கணும்ங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நோட்டீஸ எழுதி டைப் பண்ணி பிரிண்ட் பண்ணி, நமக்கு ஒண்ணு, ஒங்களுக்கு ஒண்ணுன்னு காப்பிக் கொடுக்க செராக்ஸ் பண்ணணும். அந்தக் காசுதாம். இருவது இருவத்தஞ்சு ஆவலாம். பெறவு ரீஸ்தர் போஸ்ட் வித் அக்நாலெட்ஜ்மெண்ட். அதுக்கு ஒரு முப்பது. ஆக மொத்தம் ஐம்பத்தஞ்சு ஆவலாம். பொண்ண கையெழுத்துப் போட அழைச்சிட்டு வருவீங்க இல்ல. அப்போ வேலைய முடிச்சாத்தாம் காசு எவ்ளோன்னு எக்ஸாக்ட்டா தெரியும்! அதெ மட்டும் கொடுத்தா போதும்! இந்த கேஸ்ஸ எடுத்ததுக்கான பைசாவ உங்களுக்கு நகை, சீரு, பணத்தை வாங்கிக் கொடுத்துட்டு அதுலேந்து கணக்குப் பண்ணி எடுத்துப்பேம். மத்தபடி கேஸூன்னு நீங்க பைசா காசு செலவ பண்ண வேண்டியதில்லே! நல்லபடியா போயிட்டு வாங்கோ! நமக்குச் சில கேஸ்களுக்கு பேப்பர்ஸ் ரெடி பண்ண வேண்டிக் கெடக்கு!"ன்னு வக்கீலு அனுப்பி வெச்சாரு. அதெ கேட்டுக்கிட்டு பதில் நோட்டீஸ் தயாரு பண்ணிட்டு வக்கீலு சொல்றப்பப் போயிப் பாப்பேம்ன்னு கெளம்பி வந்தாங்க சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடுன்னு மூணு பேரும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...