8 Oct 2020

சந்தேகப் பிராணி

சந்தேகப் பிராணி

செய்யு - 588

            சுப்பு வாத்தியாரு கிட்டதட்ட பாலாமணியோட சேர்த்து மவள வாழ வைக்கப் போறதில்லங்ற முடிவுக்கு வந்திருந்தாரு. விகடுவுக்கு அதெப் பத்தி இன்னும் யோசிச்சு முடிவுக்கு வாரணும்ன்னு ஒரு நெனைப்பு. இதெப் பத்தி பட்டும் படாம செய்யுகிட்டெ பேசிட்டு இருந்தாம் விகடு. ஒவ்வொரு மொறெ பேசுறப்பயும் விசித்திரமான சம்பவங்களா சொல்லிட்டு இருந்தா செய்யு. அவ்வெ சொல்றதெக் கேக்குறப்போ யாரா இருந்தாலும்  அவ்வே நெலையிலேந்துப் பாக்குறப்போ பைத்தியமே பிடிச்சிடும் போலத்தான் இருந்துச்சு.

            திட்டையில வூட்டுக்கு அழைச்சிட்டு வந்த நாள்லேர்ந்து செய்யு ரொம்ப நிம்மதியா உணர்ந்தா. எதையோ பறிகொடுத்தாப்புல இருந்த அவளோட மொகமும் மாறி வந்துச்சு. அதெ நேரத்துல எங்கே மறுபடியும் பாலாமணியோட அனுப்பி வெச்சிடுவாங்களோங்ற பயம் அவளோட கண்ணுக்குள்ள உருண்டுகிட்டும் தெரண்டுகிட்டும் இருந்துச்சு. அவ்வே மனசுல ஏதோ சொல்ல முடியாத விசயத்த வெச்சிக்கிட்டு அதெ மெல்லவும் முடியாம, வுழுங்கவும் முடியாம தவிக்குறாப்புல இருந்துச்சு. மனசளவுல செய்யு ரொம்ப பாதிக்கப்பட்டதுக்கான அறிகுறிக தெரிய ஆரம்பிச்சது. அதெ அப்பிடியே அவ்வே மனசோட ரொம்ப நாளு வெச்சிக்க வுடுறது நல்லதில்லன்னு விகடுவுக்குப் பட்டுச்சு. கொஞ்ச கொஞ்சமா பேச வுட்டு அதெ என்னனனு தெரிஞ்சிக்கிறதுதாம் செய்யுவுக்கும் நல்லது, அவளோட பெரச்சனைய தீக்குறதுக்கும் உகந்ததுன்னு நெனைச்சாம் விகடு. மனசெ வுட்டுப் பேசுனாவோ பல பெரச்சனைக தீந்துடுங்றதால, அதெ எப்படி ஆரம்பிச்சி கேட்டு அவளோட மனசெ விட்டு வெளியில கொண்டாரதுன்னு பலவெதமா யோசிச்சி எதார்த்தமா கேக்குறது போல செய்யுவோட பேச ஆரம்பிச்சாம். அப்படி பேச ஆரம்பிச்சு பல அணுகுண்டுக வெளியில வந்து வுழுவப் போவுதுங்றது அப்போ அவனுக்குத் தெரியல.

            விகடு அழைச்சிட்டு வந்த அன்னிக்குச் சாயுங்காலாமே கேட்டாம் செய்யுகிட்டெ, "ஒன்னோட கலியாண வாழ்க்கெயப் பத்தி நீயி மனசுக்குள்ள என்னத்தெ நெனைச்சிக்கிட்டு இருக்கே?"ன்னு. அதுக்குச் செய்யு சொன்னா, "அவ்வேம் கூட அனுப்பி வுடாம இருந்தீங்கன்னா தனியா இருந்து கூட வாழ்ந்துடுவேம். அவ்வேம் கூட வாழ்றதுதாம் கஷ்டம்ண்ணே! சரியான சைக்கோன்னே அவ்வேம்! அவனெப் போயி எப்பிடிப் பிடிச்சீங்கண்ணே? அவனெப் போயி நமக்குக் கலியாணத்தெப் பண்ணி வெச்சுப்புட்டீங்களே?"ன்னு தலையில அடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சா செய்யு. இப்பிடி ஆகும்ன்னு எதிர்பாக்காத விகடு நடுங்கிப் போயிட்டாம்.

            என்னா நடந்துச்சுன்னு முழுசா சொல்லாம அழுதா கேக்குறவனுக்கு எப்பிடி வௌங்கும்? அதுவுமில்லாம கட்டி வைக்குற மாப்புள நொண்டிய நொடமாங்றதெ கண்ணாலப் பாத்துக் கண்டுபிடிக்கலாம், நல்லவனா? கெட்டவனா?ங்றதெ அவ்வேம் நடந்துக்கிடுற மொறைய வெச்சிக் கண்டுபிடிக்கலாம், குடிகாரனா? கொலைகாரனா?ங்றதெ கூட வெசாரிச்சிக் கண்டுபிடிச்சிடாலாம். அவ்வேம் சைக்கோவா என்னாங்றதெ எப்பிடிக் கண்டுபிடிக்கிறது? அதெ அவனுகளோட நெருங்குன சொந்த பந்தங்க மட்டுந்தாம் அறிஞ்சிருக்க முடியும். அவுகளும் ஒரு கலியாணங் காட்சின்னு வர்றப்போ அந்த உண்மெயை மறைச்சி வெச்சி எப்பிடியாச்சும் கலியாணத்தப் பண்ணி வுட பாப்பாங்களா? உண்மெயெ வெளிப்படுத்திக் கலியாணம் நிக்கும்ன்னு பாப்பாங்களா?

            "மொட்டையா சைக்கோன்னு சொன்னா எப்பிடிப் புரியும்? எல்லா ஆம்பளைங்களும் ஒரு வெதத்துல சைக்கோதாம். அளவுதாம் கொஞ்சம் மின்ன பின்ன இருக்கும்!"ன்னாம் விகடு.

            "யய்யோ யண்ணே! நீயிப் புரியாமப் பேசுறே! ஒமக்கு எப்பிடிப் சொல்லிப் புரிய வைக்குறதுன்னு தெரியலையே?"ன்னு சொன்ன செய்யு தொடந்தாப்புல பேச ஆரம்பிச்சா.

            "அதாச்சி யண்ணே! யிப்போ ஒமக்குப் புரியும் பாரு! காலயில வந்து சாப்புட்டுப் போறப்போ மத்தியானம் சமைச்சி வெச்சி சாப்புட வர்றேம்ன்னு சொல்லிட்டுப் போறதுண்ணே. சரின்னு நாமளும் மத்தியானத்துக்கு ஆசெ ஆசெயா சோத்த வடிச்சி, சாம்பார்ர வெச்சி, ரண்டு கறி வகைகளப் பண்ணி, ரசம், மோரு, அப்பளம், மோரு மொளாக பொரிச்சது வரைக்கும் தயாரு பண்ணிட்டு உக்காந்திருப்பேம். யப்போ சாப்புட வர்ணும் யில்ல. சாப்புடாம வர்றாம இருந்தா கூட பரவாயில்ல. ன்னா நடக்கும்ன்னா ஓட்டல்லப் போயி ஒரு பார்சல் சாப்பாட்ட வாங்கிட்டு வந்தாவும். அதெ நம்ம கண்ணு மின்னாடி உக்காந்துச் சாப்புட்டு ஆவும். அதாங் வூட்டுல வேல மெனக்கெட்டு சமைச்சி வெச்சிருக்கேமே, யிப்பிடி சம்பந்தம் சம்பந்தம் யில்லாம சமைக்கச் சொல்லிட்டு ஓட்டல்ல வாங்கியாந்து சாப்புட்டா ன்னா அர்த்தம்ன்னு கேக்குறப்ப நமக்கு அழுகெயே வந்துடும்ண்ணே! யப்போ கூட மனசு எறங்காதுண்ணே! ஏம் இப்பிடின்னா அதெல்லாம் ஒம் யப்பம் வாங்கியாந்த மளிகெ சாமானுல்லா பண்ணிருப்பேம்பாம். நமக்குக் கோவம் வந்துப்புடும். எஞ்ஞ யப்பா கொடுத்த காசி மட்டும் வாங்கிக்கிடலாம், சாமஞ் செட்டுக மட்டும் வாணாம்ன்னா ன்னா அர்த்தம் சொல்லுங்கம்பேம்? செரித்தாம் வாணாம், நீஞ்ஞளாவது வாங்கியாந்து கொடுங்க சமைக்கிறேம்பேம். அதுக்கு அதாம் கடெ கடெயா இளிச்சி இளிச்சி போயி வாங்கியாந்துட்டு இருக்கீயே! அப்பிடியே போயி வாங்கிக்கிட வேண்டியத்தானே. கடையிலயும இளிச்சி இளிச்சிப் பல்ல காட்டிட்டுப் போறவளுக்கு ஓசியிலத் தாரானுவோளாமேம்பாம்!"ன்னா செய்யு.

            "ஏத்தோ ஒரு கோவத்துல இப்பிடிப் பேசுறது, பண்ணுறதுதாம். ஆன்னா அவ்வேம் அப்பிடி யப்பா மேல கோவப்படுறாப்புல பேசுறப்பயோ, நடந்துக்கிறப்பயோ தெரியலையே?"ன்னாம் விகடு.

            "அதாம் சொல்லிட்டேம்லா யண்ணே! அவ்வேம் ஒரு சைக்கோ. எப்போ எப்பிடி நடந்துப்பான்னே புரியாது. திடீர்ன்னு சில நாள்கள்ல பாத்தீன்னா ரொம்ப பாசமாக உருகி உருகி வழிவாம். மறுநாளே அதுக்கான வெலையக் கொடுக்கறாப்புல ஆயிடும். ஒடனே நம்மளச் சந்தேகப்பட்டு பேசுவாம்ண்ணே. அதுவும் பச்சைப் பச்சையா தேவிடியா, அவ்சாரி, கண்டாரஓலின்னுக் காதுல கேக்க முடியாது வார்த்தைக ஒவ்வொண்ணுத்தையும். அவ்வேம் ஒரு டாக்கடர்ருத்தானே யண்ணேம்? ஒரு டாக்கடர்ரு அப்பிடிப் பேசுவானா? அவ்ளோ கேவலமா பேசுவாம்! அதெ ஒரு பத்து நிமிஷம் கேட்டாக்கா, யிப்பிடி ஒரு உசுர வெச்சிக்கிட்டு ஏம் வாழணும்ங்ற எண்ணம் நம்மள அறியாமலேயே தோணும். ரொம்ப மோசமா பச்செ பச்செயப் பேசுவாம்ண்ணே! ஒஞ்ஞகிட்டெ பேசுறப்ப எல்லாம் பெரிய பக்திமானப் போல நடிப்பாம்ண்ணே!"ன்னா செய்யு.

            "பாத்தா அவ்ளோ மோசமாவும் தெரியலயே?"ன்னாம் விகடு.

            "பாத்தால்லாம் தெரியாதுண்ணே. அவ்வேம் செய்யுறதெ கவனிச்சாத்தாம் தெரியும். சந்தானம் அத்தான் ஒரு மொற யப்பா சொன்னிச்சேன்னு வூட்டுக்கு வந்துட்டு வெசாரிச்சிட்டுப் போனுச்சு. அதெப் பத்தி நாம்ம சொல்லாம கூட இருந்திருக்கலாம். வூட்டுக்கு வந்துட்டுப் போன விருந்தாடியப் பத்திச் சொல்லாம இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டேம்ண்ணே! அன்னிக்கு ஆரம்பிச்ச வெனைத்தாம் யண்ணே. அத்தானையும் நம்மளையும் சேத்து வெச்சு கண்டமேனிக்குப் பேசிப்புட்டாம். நமக்கு வாழ்க்கெயே வெறுத்தாப்புல ஆயிடுச்சு. அன்னிக்கே தொங்கிப்புடலாமான்னுத்தாம் நெனைச்சேம். ஆமாம்ப்போ! ஒரு சைக்கோன்னா இப்பிடித்தாம் இருப்பாம்ன்னு நெனைச்சு தாங்கிக்கிட்டேம்! அதுக்கு அப்புறமா சந்தானம் அத்தானுக்கு நாம்ம போனப் போட்டு இனுமே இந்தப் பக்கம் வாராதீங்கன்னு அழுதுகிட்டெ சொன்னேம். அத்தானும் அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல அதுக்குப் பெறவு அந்தப் பக்கமே வாரதில்ல!"ன்னா செய்யு.

            "அப்பிடிச் சந்தேகப்படுறதுக்கு ன்னா காரணம்ன்னு புரியலீயே?"ன்னாம் விகடு.

            "சந்தானம் அத்தான் வந்துட்டுப் போன கொஞ்ச நாள்ல திருவேற்காட்டுல இருக்குல்லா மாரி அத்தான் அத்து ஒரு நாளு வந்துச்சு. அதுக்கு கொஞ்ச நாள கழிச்சிக் கார்த்தேசு அத்தானும் வந்துச்சு. அதுக கால்ல வுழுந்து தயவு பண்ணி இந்தப் பக்கம் வாராதியேன்னு சொன்னேம். அத்தோட இந்த விசயத்தப் பத்தி ஒங்கிட்டெயோ, யப்பாகிட்டெயே எதையும் சொல்லிப்புடாதீயேன்னு வேற சத்தியத்தெ வாங்கிக்கிட்டேம்! இனுமே யாரும் இந்தப் பக்கம் வர்றாத அளவுக்கு சென்னைப் பட்டணத்துல இருக்குற நம்ம எல்லா சனத்து எல்லாத்துகிட்டெயும் சொல்லிப்புடுங்கன்னு வேற கெஞ்சிக் கேட்டுக்கிட்டேம்!"ன்னா செய்யு. அதெ கேக்க விகடுவுக்கு அழுகை அழுகையா வந்துச்சு.

            "அவ்ளோ மோசமானவனா அந்தப் பயெ?"ன்னாம் விகடு ஆத்திரத்துல.

            "அத்து கூட பரவால்லாண்ணா! நம்ம வேலுமணி இருக்காம்ல. அவ்வேம் கலியாணத்துக்கு வார முடியல. லீவு கெடைக்காமப் போயிடுச்சு. அதால சென்னைக்குக் குடித்தனம் போயி ஒரு வாரம் கழிச்சிட்டுப் போன்ல வெசாரிச்சிட்டுப் பாக்க வந்தாம். அன்னிக்குல்லாம் என்னவோ ஒண்ணடி மண்ணிடியாத்தாம் வேலுவோட கொலவுனாம். அவனுக்கு இதெ வுடப் பெரிய ஒரு எடத்துல வேலைக்கு ஏற்பாட்டெப் பண்ணி வுடுறதால்லாம் சொன்னாம்ண்ணே! வேலுவும் அவனுக்குத் தெரிஞ்சி ஆளுகளெ வெச்சி சீக்கிரமா குவார்ட்டர்ஸூக்கு ஏற்பாட்டப் பண்ணி வுடுறதா சொன்னாம். அவ்வேம் கெளம்புன பெற்பாடுதாம் ஆரம்பிச்சது வெனெ. வேலு நமக்கும் தம்பி மொறைதானே. அவனையும் நம்மளையும் சேத்து வெச்சி அசிங்கம் அசிங்கமா பேச ஆரம்பிச்சிட்டாம்ண்ணே. நமக்கு ஏந்தாம் உசுர்ர வெச்சிக்கிட்டு வாழணுங்ற மாதிரிக்கி ஆயிடுச்சு. ஒடனே வேலுவுக்குப் போன அடிச்சி இனுமே வூட்டுப் பக்கம் வராதேன்னு வெட்டி வுடுறாப்பல பேசுனேம். அவ்வேம் செரியான லூசுப் பயலா இருப்பாம் போலருக்கு. நாம்ம என்னவோ வெளையாட்டுக்குச் சொல்றதா நெனைச்சிக்கிட்டு அன்னிக்குச் செரியா அவ்வேம் கிளினிக்குக் கெளம்புற நேரமாப் பாத்து வந்து நின்னாம் பாரு. அன்னிக்கு கிளினிக்கே போவல அவ்வேம். நீயெல்லாம் வந்தா எப்பிடி வுழுந்தடிச்சி ஓடுறாம். அன்னிக்கு அந்தாண்ட இந்தாண்ட நவுரல. வேல அந்தாண்ட கெளம்புன பெற்பாடுதாங் அவனுக்கு மொகத்துல கலவரம் போனுச்சு. அன்னிக்கு ராத்திரிப் பெருஞ்சண்டையாப் போச்சுன்னே. அவ்வேம் பாட்டுக்கு நம்மளோட பேக்கு, பொட்டியையெல்லாம் எடுத்து வெளியிலப் போட்டு கதவச் சாத்தி உள்ளுக்குள்ள தாழ்ப்பாளப் போட்டுட்டாம். அவ்வேம் யில்லாத நேரமா பாத்து நாம்ம வேலுவுக்குப போன போட்டு வாரச் சொல்லிச் சோரம் போறதா வாயிக்கு வந்தபடிக்குப் பேசிட்டு இருந்தாம்ண்ணே நம்மள. நாம்ம அப்பிடியே நின்ன எடத்துலேந்து மாடியிலேந்து குதிச்சுப்புடுவமான்னு இருந்துச்சு. அதுக்கு அப்போ தெகிரியம் பத்தாம் அப்பிடியே கதவுக்கு மின்னாடி நின்னேம் பாரு. அப்போ தோலாமணித்தாம் அவ்வேங்கிட்டெப் பேசி சமதானம் பண்ணி உள்ளாரக் கொண்டு போனாம்! எஞ்ஞளுக்குள்ள அடிக்கடி வர்ற சண்டெயே அவ்வேந்தாம் செரி செய்வாம்!"ன்னா செய்யு.

            "நல்லவேள அவனும் இல்லன்னா சென்னைப் பட்டணத்துல ஒந் நெலமெ ரொம்ப பரிதாபமா ஆயிருக்கும்லா?"ன்னாம் விகடு.

            "அவனெ என்னவோ நல்லவேம் போல பேசுதீயேண்ணே? எல்லாம் ஒரு குட்டையில ஊறுன மட்டைவோ! அவ்வேம் வண்டவாளம் இன்னும் தெரிஞ்சா அவ்வேம் குடும்பமே தண்டவாளத்துல தலைய வெச்சிகிட்டுச் செத்துடும்ண்ணே!"ன்னா செய்யு.

            "அப்பிடி அவ்வேம் வேற ன்னா பண்ணாம்?"ன்னாம் விகடு அவனெப் பத்திப் புரியாம.

            "அந்தக் கதெய வேற எம் வாயாலச் சொல்லணுமா? சொல்றதுக்கே நாக்குல்லாம் கூசுதுண்ணே! எதாச்சும் ஒரு கதெயாவது சொல்றாப்புல இருக்கா? எப்பிடிண்ணே ஒங்கிட்டெ அதெச் சொல்றது? ரொம்ப அசிங்கமா, ரொம்ப கேவலமா வேற எப்பிடிச் சொல்றதுண்ணே தெரியலண்ணே! கொஞ்சம் கூடவா அதெ கூட வெசாரிச்சிக் கலியாணத்தப் பண்ணி வைக்க மாட்டீங்க? சொந்தக்காரன்னா எதையும் வெசாரிக்காம கண்ண மூடிட்டுப் பொண்ண தூக்கிக் கொடுத்துப்புடுவீயளாண்ணே! நீஞ்ஞல்லாம் பாத்து செஞ்சி வெச்சிருக்குறவாச்சித்தானே கலியாணத்துக்கு கழுத்தெ நீட்டுனேம். யில்லாட்டி நாம்ம பாட்டுக்கு எம்பில்லப் படிச்சி, அடுத்தப்படியா டாக்டரேட்டுக்கு அப்ளெ பண்ணிருப்பேம்."ன்னா செய்யு.

            "தோலாமணியப் பாக்குறப்போ நல்லவம் மாதிரித்தானே தெரியுது. அவனுமா மோசமா நடந்துக்கிட்டாம்?"ன்னாம் விகடு.

            "என்னத்தெ பெரிய நல்லவேம் போ! ஒங் கண்ணுக்கு எல்லாமும் நல்லவம் மாதிரித்தானே தெரிவானுவோ. ஒவ்வொருத்தணும் ரொம்ப மோசம்ண்ணே. ன்னா சொன்னே நம்மகிட்டெ எதாச்சும் மோசமா நடந்துக்கிட்டான்னுதானே? நம்மகிட்டெ மோசமா நடந்துக்கிட்டா அதெ கூட தலவிதின்னுப் பொறுத்துக்கிடலாம் போலருக்குண்ணே. அதெ வுட மோசமா அவ்வேம் நடந்துக்கிட்டாம் பாரு! அதெ வெளியில சொல்ல முடியாதுண்ணே! வெளியில சொல்ல முடியாது!"ன்னு செய்யு சொல்லுறப்போ அவ்வே கண்ணுலேந்து வழிஞ்ச தண்ணி கன்னத்தக் கடந்து அது பாட்டுக்கு ஊத்திக்கிட்டெ இருந்துச்சு.

            "நீயி அழுவுற மாதிரிக்கி யிருந்தா, இன்னிக்கு இத்துப் போதும். நாளைக்கிச் சொல்லலாம். வாணம். சொல்லவே வாணாம். வுட்டுப்புடு. ஒன்னயச் சங்கடப்படுத்த விரும்பல நாம்ம!"ன்னாம் விகடு.

            "எவ்ளவோ அனுபவிச்சிட்டெம். ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிட்டேம்ன்னே. கலியாணம் ஆயி இப்பிடி மூணு மாசத்துக்குள்ள அனுபவிக்கக் கூடாதெதல்லாம் அனுபவிச்சிட்டேம். அந்த தோலாமணி ரொம்பப் பெரிய திருட்டுப் பயெ. நாதாரிப் பயெ. அவ்வேம் பண்ணக் கதெயெ கேட்டீன்னா... நமக்குச் சுத்தமாவே அந்தச் சம்பவத்துக்குப் பெறவுதானே அவனெயும் அவ்வேம் குடும்பத்தெயும் பிடிக்காமலயேப் போயிடுச்சு!"ன்னா செய்யு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...