8 Oct 2020

நூல் வாசிப்பின் சில நகர்தல்கள்

நூல் வாசிப்பின் சில நகர்தல்கள்

            படிப்பு என்றால் அது பரீட்சைக்காதத்தான் என்ற நம்பிக்கை அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும் போலிருக்கிறது.

            "ஏன்டா முடி நரைச்சு வெளுத்துப் போயிட்டு. இன்னும் என்னடா பரீட்சைக்குப் படிச்சிக்கிட்டெ இருக்கே? இன்னும் எத்தனெ வயசுக்குத்தாம் பரீட்சை எழுதப் போறீயோ?" என்று என் அம்மா என்னை அடிக்கடி திட்டிக் கொண்டிருக்கும்.

            "என்னடாம்பீ! எப்பப் பாத்தாலும் படிச்சிக்கிட்டெ கெடக்குறே! வேல கெடக்குது பாருடாம்பீ! போயி வேல வெட்டியப் பாருடாம்பீ! படிச்சவன் பாட்டெ கெடுத்தான். எழுதுனவன் ஏட்டெ கெடுத்த கதெதான் போ!" என்று எதிர்வீட்டுத் தாடி தாத்தாவும் திட்டியிருக்கிறார்.

            என்னவோ பரீட்சை எழுதுவதை எப்போது நிப்பாட்டுகிறோமோ அத்துடன் படிப்பையும் நிறுத்தி விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். படிப்பது பரீட்சைக்காக அல்லது பரீட்சைக்காகவே படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனக்குப் படித்துப் படித்து அதுவே ஒரு வியாதியாகி விட்டது போலிருக்கிறது. படிக்காமல் இருப்பது சிரமம். இதற்காகவே இந்தப் பரீட்சை எழுதப் போகிறேன், அந்தப் பரீட்சை எழுதப் போகிறேன் என்ற பக்கவாட்டில் ஒன்றை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.

            படிப்பின் பரிமாணங்கள் மாறிக் கொண்டே வருவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. சிறு வயதில் பாடப்புத்தகங்களைத் தாண்டி அம்புலிமாமா, கோகுலம், இரும்புக்கை மாயாவி என்று தொடங்கி இப்போது படிக்கும் கனமான இதழ்கள், புத்தகங்கள் வரை எதைப் படித்தாலும் அதே ஆர்வம் குறையவில்லை. எப்போதோ ஒரு முறை கோகுலத்தையும் அம்புலிமாமாவையும் வாங்கிப் படித்த போது சிறுவயதில் அடைந்த அதே உற்சாகத்தை அடைய முடிந்தது. நடையைத் தாண்டியும் அதில் இருக்கும் விசயங்களை உள்வாங்குவதிலேயே மனம் கவனமாக இருக்கிறது என்பது புரிகிறது. முதல் வகுப்பு பாடநூல்களைப் படிக்கும் போதும் அதே ஆர்வமும் உற்சாகமும் இருக்கிறது. வெகு முக்கியமாக இப்போது முதல் வகுப்புப் பாடநூல்களை அந்த அளவுக்குச் சுவாரசியமாகவும் தயார் செய்திருக்கிறார்கள். பழைய பாடப்புத்தகங்களையும் புதிய பாடப்புத்தகங்களையும் ஒப்பிட்டுப் படித்துப் பார்ப்பதும் ஆர்வமாகத்தான் இருக்கிறது. அப்படிப் படிக்கும் போது மனதில் நிறைய கதைகள் தோன்றும் பாருங்கள் அது தரும் மகிழ்ச்சியை இந்த உலகில் வேறெதுவும் தந்து விட முடியாது என்பது போலத் தோன்றும்.

            நான் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பலர் சொல்லியிருக்கிறார்கள் திருக்குறளை முழுமையாகப் படித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று. அந்த வாக்கியப் பயன்பாடே அருமையானதுதான் அல்லவா! அதாவது படித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது. அதாவது என்ற சொல்லி மறுபடியும் சொல்லப் போனால் அதுவானது படித்து மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் வரும். இதை எனக்கு முதலில் சொன்னவர் எனது வேதியியல் ஆசிரியர். அவர் ஒருத்தர்தான் படித்து மருத்துவராக வேண்டும், பொறியாளர் ஆக வேண்டும், எதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லாமல் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். நான் வருங்காலத்தில் படித்து என்னவாக வேண்டும் என்பதைப் பற்றிய எந்த அறிவுரையையும் சொல்லாமல் இதை ஒன்றை மட்டுந்தாம் அவர் என்னிடம் விடைபெறும் போது சொன்னார். அதற்குப் பிறகு ஒரு காப்பி. அதைக் குடித்து முடித்ததும் அந்தச் சந்திப்பு முடிந்து விட்டது. ஆனால் அந்தச் சந்திப்பு இன்னும் மறக்க முடியாததாக இருக்கிறது. மற்ற பல ஆசியர்கள் பலரும் படித்து ஒரு வேலைக்குப் போவது பத்தியையும், சம்பாத்தியத்தைப் பற்றியும், சாமர்த்தியமாக இருப்பது பற்றியும், சமூகத் தொண்டு செய்வது பற்றியும் பலவிதமாக பற்பல சொன்னார்கள்.

            வேறெந்த ஆசிரியரும் இவ்வளவு குறிப்பாகச் சொல்லாமல் வேதியியல் ஆசிரியர் அவ்வளவு குறிப்பாகச் சொன்னார் என்பதற்காக, அதற்குப் பின் நான் திருக்குறளை இரண்டு ஆண்டுகளாகப் படிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். நான்கு அதிகாரங்கள் வரை படித்து நிறுத்துவதும், கால்வாசி அளவு படித்து நிறுத்துவதும், அரைவாசி அளவு படித்து நிறுத்துவதும், முக்கால்வாசி அளவு படித்து நிறுத்துவதுமாக இரண்டு ஆண்டுகள் ஓடிக் கொண்டிருந்தன. ஏன் இப்படி படிக்க ஆரம்பித்து இடையிடையே நிற்கிறது என்பது புரியாமல் திருக்குறள் பற்றி பலர் எழுதிய உரைகளை வாங்கி மாற்றி மாற்றிப் படிக்க ஆரம்பித்தேன். எல்லா உரைகளிலும் இடையிடையே நிற்பது நிற்கவில்லை. நாமக்கல் கவிஞரின் உரையில்தான் நான் திருக்குறளைப் படிக்கும் அந்த முயற்சியை ஆரம்பித்து சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவு செய்தேன். அப்படி பல உரைகள் வாங்கியதில் இப்போது நிறைய திருக்குறள் உரைகள் என்னிடம் இருக்கின்றன. இந்த ‍உரைகளை வைத்து திருக்குறள் ஆய்வு செய்ய வேண்டும் என்று நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். உரைகளில் என்ன இருக்கிறது என்றாலும், நான் நாமக்கல் கவிஞரின் உரையில்தான் திருக்குறள் எனும் நூல்பெருங்டலின் கரையைக் கடக்க முடிந்தது என்றாலும் திருக்குறளைத் திருக்குறளாக உள்வாங்குவதில்தான் அதன் முழுமையும், ருசியும் அடங்கியிருப்பதாக நினைக்கிறேன். அதற்காக எந்தத் திருக்குறள் ‍உரையையும் குறை சொல்லி விட முடியாது. பல திருக்குறள் ‍உரைகளைப் படித்ததில் திருக்குறள்கள் அனைத்தும் மனதில் நன்றாக நிலைத்து நிற்கிறது. அதாவது திருக்குறளைப் படித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்களே அது நிறைவேறியிருக்கிறது.

            திருக்குறளைத் துவக்கத்தில் புரிந்து கொள்வதற்கு உரைநூல்களின் உதவி அபாரமானது என்றாலும் அதற்குப் பின் திருக்குறளே மனதிற்குள் தரும் பொருள் அலாதியானது. அந்த அலாதியில் திளைத்துதான் பலர் திருக்குறளுக்கு உரை தர புகுந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாமக்கல் கவிஞரின் உரையில் இந்த அலாதித் தன்மையை எப்போதும் பார்க்கலாம். ஆகவே திருக்குறளை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களிடம் நான் நாமக்கல் கவிஞர் உரையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பேன்.  நண்பர்களிடம் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது அவர்களின் நூல் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாகக் குறிப்பிடுவார்கள். அப்படி நான் அவர்களிடம் பேசும் அளவுக்குச் சுவாரசியமாக இதை எழுதியிருக்கிறேனா என்றால் அது சந்தேகந்தான். என்றாலும் கூட இந்தப் பத்தி இதை வாசிக்கும் யாரோ ஒருவருக்கேனும் நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டால் மெத்த மகிழ்ச்சிதான்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...