3 Oct 2020

தலைப் பொங்கலுக்குக் கன்னிச்சாமியா ஆனவன்!

தலைப் பொங்கலுக்குக் கன்னிச்சாமியா ஆனவன்!

செய்யு - 583

            அந்த ஞாயித்துக் கெழமெ பாலாமணி பாக்குக்கோட்டை வர்றதைக் கேள்விப்பட்டு சுப்பு வாத்தியாரும், விகடுவும் பத்தாயிரம் பணத்தெ எடுத்துக்கிட்டு டிவியெஸ்ஸூ பிப்டியிலயே கெளம்புனாங்க. போறப்பவே சுப்பு வாத்தியாரு மவ்வேங்கிட்டெ எப்பிடியெப்படிப் பேசனுங்றதெ திட்டம் பண்ணிக்கிட்டாரு. "அஞ்ஞப் போயி சேத்து வைக்குற மாதிரிக்கிப் பேசிப்புடணும்! அவனுங்க ஏது சொன்னாலும் அதுக்கு ஏத்தாப்புல ஆமாஞ் சாமிப் போட்டுத் தாளாளிச்சிப் புடணும். மறுத்து ஒண்ணும் பேச வாணாம்!"ன்னுட்டாரு. நாம்ம போற நேரத்துல பாலாமணி கிளினிக்குல்ல போயி உக்காந்திருப்பானோங்ற சந்தேகம் வேற இருந்துச்சு. நல்லவேளையா பாலாமணி கிளினிக்குக்குப் போகாம வூட்டுலத்தாம் இருந்தாம்.

            விகடுவையும், சுப்பு வாத்தியாரையும் பாத்த ஒடனே, "நாம்ம இப்பிடிப் பண்ணுவா செய்யுன்னு கொஞ்சம் கூட நெனைக்கவே யில்ல மாமா! இம்மாம் மனசு பலகீனமா இருப்பான்னு யோஜிக்கவே முடியல மாமா!"ன்னாம் பாலாமணி.

            "நீஞ்ஞ சொல்றது செரித்தாம் மாப்ளே! எல்லாம் மனபலவீனந்தாம். மனசெ தெம்புப் பண்ணி வுட்டுப்புட்டா செரியா வந்துடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதெ சொல்லிட்டு ராசாமணி தாத்தாகிட்டெ, "இந்த விசயத்தெ நாம்ம ரொம்ப வெளியில வுட்டுட்டு, ஆளாளுக்கு ஒண்ணு பேசுறாப்புல வுட்டுப்புடப்படாது மாமா. நம்மள பொருத்தமட்டுல நாம்ம இந்த விசயத்தெ வெளியில யாருட்டேயும் சொந்த பந்தங்ககிட்டெயும் சொல்லல மாமா! வெசயம் எதுவா இருந்தாலும் நம்ம ரண்டு குடும்பம் கலந்துக்கிறதுதாம் நல்லதுன்னு நெனைக்கிறேம் மாமா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. ராசாமணி தாத்தாவும் அதெ ஒத்துக்கிடுச்சு.

            "நாமாளும் சொல்லிட்டேம் மாப்ளே! பல பேத்து போன அடிச்சானுவோ நமக்கு. லாலு கூட அடிச்சாம். அடிச்சிச் சொல்லிட்டேம். நீஞ்ஞ யாரும் இதுல தலையிடாதீயே! எதுவா இருந்தாலும் நாம்ம பாத்துக்கிறேம்ன்னு! அதுல சிலதுக்குக் கொஞ்சம் வருந்தந்தாம். அதுக்கு நாம்ம ன்னா பண்ண முடியும் மாப்ளே? ன்னா சங்கதின்னு நமக்குத்தாம் தெரியும். நாம்மத்தானே மேக்கொண்டு முடிவு பண்ண முடியும்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "செரியாத்தாம் சொல்லிருக்கீயே மாமா! நம்ம ரண்டு குடும்பத்துக்கும் நீஞ்ஞத்தாம் பெரியவங்க. நீஞ்ஞப் பாத்துதாம் நல்ல முடிவா பண்ணி வுடணும். எப்படி பண்ணலாம், ஏத்து பண்ணலாங்றதெ நீஞ்ஞத்தாம் சொல்லணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இனுமே ரண்டு பேத்தையும் தனியா வைக்க முடியாது மாப்ளே! ரண்டு பேத்துமே கலியாண ஆன நாளு மொதலா வம்பு சண்டெ வெச்சிகிட்டு கெடந்திருக்குங்க. அவ்வே பேத்திக்கு கொழந்த மனசு. இவ்வேம் அத்து புரியாம அதெ போட்டு அப்பிடியிப்படின்னுப் போட்டு அலைக்கழிச்சிருக்காம். இஞ்ஞ வந்தாலும் பாத்தீன்னா மாப்ளே! ஒம் பொண்ணு சின்ன புள்ளையோடத்தாம் வெளையாண்ட்டுகிட்டுக் கெடக்குது. இஞ்ஞ பாக்குக்கோட்டையில கொண்டாந்து வெச்சுக்கிட வேண்டியதுதாம். இவ்வேந்தாம் வாரத்துக்கு ஒரு தவா வர்றானே. பாத்துக்கிட வேண்டியதுதாங். ன்னா ஒண்ணு அஞ்ஞ அம்மாம் அட்வான்ஸ், வாடவென்னு கொடுத்து வூட்டப் பிடிச்சிப் போட்டாச்சு. அதத்தாம் பாக்க வேண்டிக் கெடக்கு! அஞ்ஞ வைக்கிறதுன்னா யாராச்சும் தொணைக்குப் போயிக் கெடக்கணும். யாரு போயி கெடக்குறது?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "நீஞ்ஞ ஒண்ணும் தப்பா நெனைக்கலன்னா நாம்ம வேணும்ன்னா வெங்குவ அனுப்பி வைக்கிறேம். கொஞ்ச நாளு இருக்கட்டும் மாமா. அதெ அனுப்பி வைக்குறதால செலவுன்னு நெனைச்சிப்புடப் படாது மாமா. நாம்ம அதுக்குண்டான தொகைய மாசா மாசம் கொடுத்து வுட்டுப்புடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அ‍து கெடக்குது மாப்ளே! ஒன்னயப் பத்தித் தெரியாதா மாப்ளே! பண விசயத்துல நெருப்பால்ல யிருப்பே! யிப்போ அதோட மனசெ மாத்தியாவணும். பொதுவா சில தோஷங்க இருக்கும் போலருக்கு. நாம்ம ஒண்ணு பண்ணுவேம். ராமேஸ்வரதுக்குக் கொண்டு போயி சில பூசைகளப் போட்டு வுடுவேம். பொதுவா கலியாணம் ஆவுறதுக்கு மின்னாடி பல பொண்ணுவோளுக்கு நாம்ம அப்பிடிச் செய்ய சொல்றது. அதால எதாச்சும் துஷ்ட சக்தியோ, யில்லாட்டி சூன்யமோ, ஏவலோ இருந்தாலும் வெலவும். தோஷங்க இருந்தாலும் சரியாவும். என்னாத்தே சொல்றே மாப்ளே?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "இதுல என்னத்தெ சொல்ல இருக்கு மாமா? நீஞ்ஞ சொல்றதுதாங் செரி! என்னிக்குப் போவணும்? என்னென்னத்த ஏற்பாடு பண்ணணும் மட்டும் சொல்லுங்க மாமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒண்ணுத்தையும் ஏற்பாடு பண்ண வாணாம். பணத்தெ கொடுத்தா அஞ்ஞ இருக்கற ஐயருமாருகளே எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிப்பாம். நாம்ம கெளம்பி ஒரு நாளு போயிட்டு வர்ற வேண்டியதுதாங். வேறென்ன வேல? எல்லாம் அஞ்ஞ நமக்குத் தெரிஞ்ச அசாமிங்கத்தாம். மாசத்துக்கு மூணு நாளு கேஸூகள அனுப்பி வுட்டுப்புடுவேம். யிப்போ நம்ம வூட்டுப் பொண்ணையே அனுப்புறாப்புல இருக்கு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. பத்தாயிரம் பண வெவகாரத்தையும் தீத்துப்புட்டா தேவலாம்ன்னு நெனைச்ச சுப்பு வாத்தியாரு, அதுக்குத் தகுந்தாப்புல ஒரு கதெயை சோடிச்சிக்கிட்டுச் சொல்ல ஆரம்பிச்சாரு.

            "ஒரத்தநாட்டுல பணம் வாங்குனாங்க யில்லியா மாமா! அந்தப் பணத்தெ வெசயம் தெரிஞ்சி அவுங்க கொண்டாந்து நம்மகிட்டெ கொடுத்துப்புட்டாங்க. அதெ கொண்டாந்திருக்கேம். யிந்தாங்க மாமா!"ன்னு நீட்டுனாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெ எங் கையில கொடுக்காதே மாப்ளே! அந்தப் பாவப்பட்ட பணத்தெ நாம்ம தொட மாட்டேம். அதெ அஞ்ஞ சாமி மாடத்துல வெச்சிப்புடு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. என்னடா இது பாவப்பட்ட பணம்ன்னு சொல்லிப்புட்டு சாமி மாடத்துல வைக்க சொல்றாங்களே, எல்லா பாவத்தையும் சாமிகிட்டெ சேத்துப்புடலாம்ன்னு நெனைச்சிப்புட்டாங்க போலருக்குன்னு நெனைச்சாம் விகடு.

            "அந்தப் பணத்தெ ஏம் மாமா வாங்குனீயே? அத்து அப்பிடியே போவட்டும்ன்னு வுட்டுப்புடலாமுன்னுத்தாம் நாமளும் நெனைச்சேம். அந்தப் பணத்தால வந்ததுதாங் இம்புட்டுப் பெரச்சனையும். இனுமே அந்தப் பணத்தெ நாம்ம கையால தொட மாட்டேம்!"ன்னாம் பாலாமணியும்.

            "அந்தப் பணம் நேரா எதாச்சும் ஒரு அனாதி ஆசிரமத்துக்குப் போயிடும். வூட்டுல யாரும் கையால தொட மாட்டாங்க! ன்னா பணமோ அத்து? எம்மாம் பெரச்சனைய உண்டுப் பண்ணிடுச்சு? நாம்ம அப்பிடில்லாம் ஆவும்ன்னு நெனைச்சி சொல்லல. பண வெவகாரமா இருக்கு. கொஞ்சம் பயமுறுத்தி வுட்டாத்தாம் பிற்காலத்துல இந்த மாதிரிக்கி எதுவும் நடக்காதுன்னு நெனைச்சிச் சொன்னா அத்துத் தப்பா போயிடுச்சு. பணம்ன்னா இப்பிடித்தாம் தப்பாப் போவும் போல. அதாலத்தாம் பல நேரங்கள்ல நாம்ம பணத்தைக் கையால தொடுறதுக்கே யோஜிக்கிறேம். யப்பப்பா பணத்தெ பத்தி இனுமே நம்மகிட்டெ எதுவும் பேசாதீயே! இந்தாடா பாலாமணி! இனி ஒங் குடும்பம் ஆச்சு! நீயாச்சு! எதாச்சும் பண்ணிக்கிகோங்க. வளத்து வுட்டாச்சு. இதுக்கு மேலயும் பின்னாடி நின்னுகிட்டெ யிருக்க முடியாது!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "எப்போ ராமேஸ்வரம் போவணும்ன்னு சொன்னீயன்னா மாமா அதுக்கான ஏற்பாட்ட பண்ணிப் புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. ராசாமணி தாத்தா காலண்டரையும், பஞ்சாங்கத்தையும் வெச்சிக்கிட்டு மாத்தி மாத்திப் பாத்துச்சு. பாத்துப்புட்டு, "வெயாழம் பரவாயில்ல!" அன்னிக்குப் போயிட்டு வந்துப்புடுவோமா?"ன்னுச்சு. அத்தோட இத்து சம்பந்தமா இனுமே யாருகிட்டெயும் பேசுறதில்லன்னு ரண்டு தரப்புலயும் முடிவெ பண்ணிக்கிட்டாங்க.

            "மாமா சொல்றதுதாங்!"ன்னு ஒத்துக்கிட்டு சுப்பு வாத்தியாரும், விகடுவும் திட்டைக்கு வந்து சேந்தாங்க. அதுக்கப்புறம் அதுக்கான சம்பவங்க வேகவேகமா நடக்க ஆரம்பிச்சிது. ராசாமணி தாத்தா சொன்னாப்புல ராமேஸ்வரம் போயிட்டு வர்றாப்புல டாட்டா சுமோவப் பிடிச்சி அதுல சுப்பு வாத்தியாரு, வெங்கு, செய்யு, ராசாமணி தாத்தா, சரசு ஆத்தா, பாலாமணின்னு எல்லாரும் ராமேஸ்வரம் போயி முழுக்குப் போட்டுட்டு செய்ய வேண்டிய சடங்குளப் பண்ணி வந்தாங்க. எல்லாம் சுப்பு வாத்தியாரோ கைகாசிதாம். அந்தக் காசிதாம் தண்ணியப் போல செலவழிஞ்சிட்டு இருந்துச்சே தவிர, ஒண்ணும் பெரிசா மாத்தம் நடந்தாப்புல தெரியல.

            இது முடிஞ்சு அடுத்த சம்பவமா, பொங்கல் வேற நெருங்கிட்டு இருந்ததால அதுக்கான சீர்வரிசைய வைக்க வேண்டி இருந்துச்சு. பொங்கல் சீர்வரிசைய வைக்குறதப் பத்தி பரமுவோட அப்பா ஒரு விசயம் சொன்னாரு, "நீஞ்ஞளா போயி எதையும் பண்ணாதீங்க வாத்தியார்ரே! அவுங்களா வாரட்டும். இதுல நாம்ம அவ்சரப்படுதறது நல்லதில்ல!"ன்னு. அதுக்கு சுப்பு வாத்தியாரு, "இதுல முறுக்கிட்டுப் போறது நல்லதில்ல. ஏதோ பொண்ணு புள்ளையோ ஒத்துமையா யிருந்தா செரித்தாம், அதுக்காக நாம்ம கொஞ்சம் தணிஞ்சிப் போறதுல ஒண்ணும் குத்தமில்ல!"ன்னு நெனைக்கிறேம்ன்னு பொட்டுல அடிச்சாப்புல சொல்லிட்டாரு. அதுக்கும் ராசாமணி தாத்தாகிட்டெ கலந்துகிட்டுப் பொங்கல் சீர்வரிசைய வைக்கப் போறப்போ செய்யுவையும் அழைச்சிட்டுப் போறதாவும், அப்பிடியே பொங்கல் முடியுற வரைக்கும் அங்க இருக்கட்டுன்னு பேசிக் கலந்துகிட்டாங்க. பொங்கல் வரிசையையே போகி அன்னிக்கு வைக்குறதாவும் முடிவெ பண்ணிக்கிட்டாங்க. அப்படியே பொங்கலோட பொங்கலா பொண்ணையும் கொண்டு போய் வுட்டுச் சேத்துப்புடணுங்றது சுப்பு வாத்தியாரோட எண்ணம். அதுபடியே பொண்ணையும்  விட்டுப்புடலாம்ன்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சா, கெளம்புற நேரத்துல செய்யு, "நாம்ம இஞ்ஞயே இருந்திடுறேம்ப்பா! நம்மள கொண்டுப் போயி அஞ்ஞ வுட்டப்புடாதீயே!"ன்னு அழ ஆரம்பிச்சிட்டா. அந்த அழுகையப் பாத்ததும் வெங்குவுக்கும் மனசு கேக்கல. "அவ்வே வேண்டாம்ன்னு சொல்லிட்டா வுட்டுப்புடுங்க!"ன்னுச்சு.

            அதுக்குச் சுப்பு வாத்தியாரு, "பொங்க முடியுற வரைக்கும் மட்டும் யிரு. போதும். பெறவு நாம்ம வந்து அழைச்சிட்டு வந்துப்புடுறேம். பொங்கலுக்குப் பொண்ணு வூட்டுல இல்லைன்னு கொற வரும். அதெ ஒரு காரணமா வெச்சி பிரிச்சி வுடுறதுக்குன்னே நாலு பேத்து நிப்பானுவோ. பல்ல கடிச்சக்கிட்டு ஒரு நாலு நாளுதானே இருக்கு. அது வரைக்கும் யிரு. பெறவு ஒன்னய வந்து அழைச்சாந்து ஒடனே வுடப் போறதில்ல. கொஞ்ச நாளு வரைக்கும் வெச்சிருந்துதாம் வுடப் போறோம்!"ன்னு கௌப்புறத்துக்குத் தகுந்தாப்புல ஒரு சமாதானத்த சொன்னாரு சுப்பு வாத்தியாரு. அதுக்கு செய்யுவோட மனசு கொஞ்சம் ஒத்துக்கிட்டாப்புல இருந்துச்சு. 

            பொங்கலுக்கான சாமாஞ் செட்டுக, ரெண்டு வெங்கல பானைக, கரும்புக்கட்டு, வாழைத்தாருன்னு சீர்வரிசையெ சாமானுங்கள கூட ஆர்குடியில கடை கடையா கார்ர நிறுத்தித்தாம் சுப்பு வாத்தியாரு வாங்குனாரு. அவருக்குக் கொஞ்ச நாளா மனசே சரியில்லாம இருந்ததால முங்கூட்டியே திட்டம் பண்ணி வாங்குற மனநெலையே யில்லாமப் போயிடுச்சு. ரொம்ப கடைத்தெருவுல பொங்கல் சீர்வரிசைய அலைஞ்சு திரிஞ்சி வாங்கிட்டுப் போயி வைக்குறப்போ பாலாமணியும் இருக்காம். பாஞ்சு நாளு மெடிக்கல் லீவு போட்டுப்புட்டதா சொன்னாம் பாலாமணி. அவனால செரியா வேலையப் பாக்க முடியாம தப்புத் தப்பா மருந்துகளெ எழுதிக் கொடுத்து பெரச்சனை ஆயிட்டதாவும், மனசு சரியாவுற வரைக்கும் இஞ்ஞத்தாம் இருக்கப் போறேம்ன்னு சொன்னாம். அத்தோட செய்யுவோட மனசு சரியாவணுங்றதுக்காக ஐயப்பன் கோயிலுக்கு வேற மாலையப் போட்டிருந்தாம். பொங்கல் அன்னிக்கு வூட்டுல இருக்க மாட்டேம்ன்னும் இன்னிக்கு சாயுங்காலமே சபரிமலை கெளம்பப் போறேம்ன்னு வேற சொன்னாம். கன்னிப்பொங்கல் முடிச்சி மறுநாளுதாம் வர்றதாவும் சொன்னாம். அதுவும் தலைப்பொங்கல் ரண்டு பேத்துக்கும். ஒரு மோசமான சம்பவம் நடந்து முடிஞ்ச பெற்பாடு தம் பொண்டாட்டிக்கான ஆறுத‍‍லெ அவந்தாம் தர்ற வேண்டியி நெலையில அவ்வேம் அப்பிடி ஒரு முடிவெ எடுத்திருந்தாம்.

            "நாம்ம கூட மாப்ளே கூட யிருந்தா பேசி கீசி மனசெ சரிப்பண்ணிப்புடலமான்னு பாத்தேம். இப்பிடி பொங்குலுக்குக் கூட வூட்டுல யில்லாம சபரிமலெ கெளம்புதீயே? என்னத்ததாம் நாங்க இருந்து பேசுனாலும் அத்து நீஞ்ஞ பேசுறாப்புல ஆவாது. டாக்கடர்ராவும் வேற இருக்கீயளா! மனசுல தைக்கறாப்புல செலதெ நீஞ்ஞ சொல்லலாம்!"ன்னு சொல்லிப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெப் பத்தி கவலெப்பட வாணாம் மாமா! சிலதெ நம்மாள முடியாததெ கூட தெய்வம் செஞ்சி வைக்கும். அதுக்காகத்தாம் இந்த மாலையப் போட்டிருக்கிறேம். எல்லாம் செய்யுவுக்காகத்தாம்!"ன்னாம் பாலாமணி.

            "கலியாணம் ஆன வருஷத்துல சபரிமலைக்கு மாலையே போடக் கூடாதுன்னுத்தாம் சொல்லுவாங்க. அதுவும் மொத மொறையா கன்னிச்சாமியா மாலையப் போட்டுட்டுப் போவவே மாட்டாங்க!"ன்னு வெங்குவும் சொல்லிப் பாத்துச்சு.

            "போட்டது போட்டாச்சு. போயிட்டு வந்துப்புடட்டும்! போயிட்டு வந்தா அவனுக்கும் மனசு திருப்திப்படும். நாஞ்ஞல்லாம்தாம் வூட்டுல இருக்கேம்லா! பெறவென்ன?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "அந்த நம்பிக்கையிலத்தாம் சின்னம்மா பொண்ண வுட்டுப்புட்டுப் போறேம்! நீந்தாம் நல்ல வெதமா வெச்சிப் பாத்துக்கிடணும்!"ன்னுச்சு வெங்கு.

            எப்பிடியோ எதையோ சொல்லிட்டு வந்தாலும் பாலாமணி சபரிமலைக்கு மாலையப் போட்டது எல்லாத்துக்கும் கொஞ்சம் நெருடலா, மனசுக்குச் சொரசொரன்னுத்தாம் இருந்துச்சு. மனசுக்கு ஆறுதால பக்கத்துல இருந்தா நல்லா இருக்குமா? அதெ வுட்டுப்புட்டு சபரிமலைக்குப் போறதுன்னு சொன்னா நல்லா இருக்குமான்னு? ஒருவேள செய்யுவ தவிர்க்குறதுக்காக அப்பிடிப் பண்ணுறானான்னும் அதெ பத்தி கணிக்க முடியல. 

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...