நாம் ஏன் அநாவசிய விலை கொடுக்கிறோம் தெரியுமா?
ஒரு சட்டையோ, ஒரு மின்விசிறியோ,
ஒரு ஆபரணமோ ரண்டாயிரம் ரூபாய் விலை என்றால் அதன் விலை ரண்டாயிரமா என்ன? அப்படியல்லாமல்
வேறென்ன? அப்படித்தானே விலை எழுதப்பட்ட ஒரு வில்லையானது அதிகபட்ச விலையாக அதன் மேல்
ஒட்டியிருக்கிறது. அந்த வில்லையில் ஒட்டப்பட்டிருக்கும் விலைக்குத்தான் நாம் வாங்கியாக
வேண்டும். பேரம் பேசுவது சாமர்த்தியம். அந்தச் சாமர்த்தியம் எல்லாருக்கும் வந்து விடுவதில்லை.
பெரும்பாலும் வில்லையில் ஒட்டியிருக்கும் விலையே பெரும்பாலானோர் கொடுக்கும் விலை.
ரண்டாயிரத்துக்கு வாங்கிய
சட்டையை உடுத்திப் பார்க்கும் போது அது ஐநூறு ரூவாய்க்குக் கூட தேராததாக இருக்கலாம்.
ரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிய மின்விசிறி மூன்றே மாத்தில் ஓடாமல் நின்று போய் மேற்கொண்டு
ஆயிரம் ரூபாய்க்குச் செலவு வைக்கலாம். ரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஆபரணம் நான்கே
நாட்களில் பல்லை இளித்துக் கொண்டு வெளுத்துப் போய் விடலாம். ஒரு பொருளுக்கான சரியான
விலையை வாடிக்கையாளர்கள் எப்படித்தான் தீர்மானிப்பது? அவர்களால் அதை தீர்மானிக்க முடிவதில்லை.
அதற்கான சுதந்திரம் வாடிக்கையாளர்களுக்குக் கிடையாது. அந்தச் சுதந்திரம் இன்னும் நமது
சுதந்திர நாட்டில் வழங்கப்படவில்லை என்பதுதான் உணமை. உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு
விலையைத் தீர்மானிக்கும் சுதந்திரம் வேண்டும். ஒரு பொருளின் தரத்துக்கு ஏற்ப விலையைக்
கொடுக்கிறோம் என்ற திருப்தி வேண்டும். இந்த இரண்டுமே சுதந்திரமாக வாழும் பெரும்பாலான
நாட்டில் கூட கிடைப்பதில்லை.
ஒரு விற்பனையாளர் கடை வாடகை
தொடங்கி, மின்கட்டணம், கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி, அரசாங்கத்துக்கும் உள்ளாட்சிக்கும்
கட்ட வேண்டிய வரிகள் வரை அனைத்திற்கும் வாடிக்கையாளரின் தலையிலேயே கை வைக்கிறார். அநேகமாக ஒரு விற்பனையாளர் அவரது விற்பனை லாபத்திலிருந்து
கடை வாடகையையோ, மின் கட்டணத்தையோ, செலுத்த வேண்டிய வரிகளையோ, கட்ட வேண்டிய கடனுக்கான
வட்டியையோ செலுத்த மாட்டார். எல்லாவற்றையும் சேர்த்து பொருளின் விற்பனை விலையில்
நுழைத்து அதற்கேற்ப லாபத்தையும் சேர்த்துதான் விலையை நிர்ணயம் செய்கிறார்.
யோசித்துப் பார்த்தால் வாடிக்கையாளர்கள்தான்
பொருட்களை வாங்குவதன் மூலம் விற்பனையாளரின் கடைக்கான வாடகையைச் செலுத்துகிறார், கடைக்கான
மின் கட்டணத்தைச் செலுத்துகிறார், விற்பனையாளர் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டுகிறார்,
அரசுக்கும் உள்ளாட்சிக்கும் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துகிறார். அவ்வபோது விற்பளையாளருக்குத்
தேவையான பராமரிப்புப் பணிகளுக்கான தொகையையும், அடுத்தடுத்த கடைகளுக்கான விரிவாக்க
மூலதனத்தையும் கூட வாடிக்கையாளரே ஒவ்வொரு முறையும் பொருளை வாங்குவதன் மூலம் செலுத்துகிறார்.
மிக உச்சமாக அந்த விற்பனையாளரின் கடை விளம்பரத்துக்கு ஆகும் செலவையும் கூட வாடிக்கையாளரே
செலுத்துகிறார்.
நிச்சயமாக நீங்கள் எந்தப் பொருளை வாங்கும்
வாடிக்கையாளராக இருந்தாலும் மேற்சொன்ன அத்தனை சுமைகளையும் சுமக்கத்தான் வேண்டி வரும்.
இதற்கு மாற்றாக நாம் ஏன் நம் சுயதேவைகளை நமக்குள் பூர்த்தி செய்து கொள்ளக் கூடாது?
விளைபொருட்களுக்கு உள்ளூரில் இருக்கும் நமது விவசாயிகளிடம் நட்புறவான நிலையை ஏற்படுத்திக்
கொள்ளலாம். விளைவிக்கும் பொருட்களை நியாயமான விலையில் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள்
என்று தெரிந்தால் அவர்கள் நம்பிக்கையோடு விளைவித்துக் கொடுப்பார்கள். அவர்களுக்கும்
விளைபொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். நமக்கும் விற்பளையாளரிடம் வாங்குவதை
விட குறைவான விலைக்குப் பொருளை வாங்கிய திருபதி கிடைக்கும்.
ஆடை, வீட்டு உபயோகப் பொருட்களைத் தெருவில்
இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து நேரடியாக உற்பத்தி செய்வோரிடமிருந்து கொள்முதல்
செய்யலாம். மளிகைப் பொருட்களுக்கு தெருவில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுறவு
முறையில் ஒரு கடையை உருவாக்கி, நம் தெருவில் இருக்கும் ஒருவருக்கே நாமே வேலை கொடுக்கலாம்.
ஊரில் உள்ள நான்கைந்து தெருக்கள் ஒன்றிணைந்து நமக்கு நாமே ஒரு சேமிப்பு மற்றும் கடன்
வங்கியை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் நிறைய பணம் மிச்சமாவதுடன் அநாவசியமாக ஒரு
பொருளுக்குக் கூடுதல் விலை கொடுக்கும் வாடிக்கையாளரின் சுமை நிச்சயம் குறையும். அத்துடன்
உள்ளூரில் இருக்கும் சில குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கவும்
முடியும்.
நமது தேவைகள் மற்றும் நுகர்வுகளை உள்ளூர்
அளவில் உள்ளூர் வளங்களைக் கொண்டு திட்டமிட முனைந்தால் தற்சார்பான பொருளாதாரத்தை நாம்
அடையலாம். அதைத் திட்டமிடாத வரையில் நமது பொருளாதாரம் கடன் பொருளாதாரமாகவே அமையும்,
அது தனிநபர் பொருளாதாரமாக இருந்தாலும் சரித்தாம், நம் குடும்பப் பொருளாதாரமாக இருந்தாலும்
சரித்தாம், நம் நாட்டுக்கே உரிய பொருளாதாரமாக இருந்தாலும் சரித்தாம். நம்மைத் தற்சார்பு
இல்லாதவர்களாகச் செய்வதுதான் கடன் பொருளாதாரத்தின் நோக்கம் என்பதால் நாம் தற்சார்பை
நோக்கி முன்னேறுவதன் மூலம்தான் கடன் பொருளாதாரத்தின் ஆணிவேரை அசைக்க முடியும். ஒரே
நொடியில் நாம் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி விட முடியாதுதான் என்றாலும்
ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதன் மூலம் அதை நோக்கி மாற முடியாது என்பதில்லை. ஒருங்கிணைந்த
சிந்தனை மற்றும் திட்டமிடுதல் அதற்கேற்ப செயலாற்றுவதன் மூலம் மிக எளிதாக தற்சார்பு
பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேறலாம். தேவை ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அது
குறித்த புரிதலும்தான்.
*****
No comments:
Post a Comment