4 Oct 2020

கணபதி ஹோமம் பண்ணாம வர்ற மாட்டாம்!

கணபதி ஹோமம் பண்ணாம வர்ற மாட்டாம்!

செய்யு - 584

            இந்த வருஷத்துப் பொங்கலு சந்தோஷமா பொங்கல சுப்பு வாத்தியாருக்கு. அவரோட மனசுல மவளோட வருங்காலத்த நெனைச்சிக் கவலைகளா பொங்கிட்டு இருந்துச்சு. தலைபொங்கல வெச்சிட்டு மருமவ்வேம் ஏம் கன்னிச்சாமியா மாலையப் போட்டுக்கிட்டு மலைக்குப் போறாங்ற கேள்விக்கு அவரால அவரு மனசு ஒத்துக்கிடற மாதிரி சாதவமான பதிலக் கண்டுபிடிக்க முடியல. ரொம்பவே யோசிச்சு யோசிச்சு அலமலந்தாரு. பொண்ண கொண்டு போயி வுட்டு ஒரு தப்பான முடிவெ எடுத்துட்டோமோன்னும் ஒரு பக்க மனசு அவர்ரப் போட்டுக் கொழப்புனுச்சு. இப்படி ஒரு பொங்கலா இந்த வருஷம் வரணுங்ற அளவுக்கு அவரு யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு. அப்படியே இந்தப் பொங்கலு முடிஞ்சா ஒரு நல்லது நடக்காமலா போயிடும்ணும் மனசுல ஒரு பக்கத்துல நம்பவும் செஞ்சாரு.

ஒரு வழியா பொங்கல் முடிஞ்சதும் ஒரு நாளு பொண்ணை அழைக்கப் பாக்குக்கோட்டைக்குப் போனாரு சுப்பு வாத்தியாரு. மாப்ள ஒரு நாளு ஊருப் பக்கம் வந்துட்டுப் போவணும்ன்னு ஒரு நெனைப்பு அவருக்கு. அதெ வெளிப்படையா சொன்னாரு. அதுக்கு ராசாமணி தாத்தா சொன்னுச்சு, "தப்பா நெனைச்சுக்காதே மாப்ளே! ஒம்மட வூட்டுல ஒம் பொண்ணு தூக்குல தொங்கப் பாத்திருக்கு. வூட்டுல ஏதோ தோஷம் இருக்கு. வேணும்ன்னா ஒண்ணுத்தெ பண்ணு. ஒரு கணபதி ஹோமத்த பண்ணி வுட்டுப்புட்டுச் சொல்லு. மவனெ அனுப்புறேம்!"ன்னு.

            "கணபதி ஹோமம் பண்ணுற அளவுக்கு நம்மகிட்டெ ஏது யிப்போ பணம் மாமா? அதுக்கு எப்பிடியும் வூட்ட மறுக்கா வெள்ளையடிச்சி சுத்தம் பண்ணித்தாம் பண்ணியாவணும். கலியாணத்துக்கு மின்னாடித்தாம் வூட்டுல கைய வெச்சேம். மறுக்கா கைய வெச்சேம்ன்னா வெச்சுக்கோ அதுக்கு எப்படியும் நாப்பதினாயிரம், அம்பதினாயிரம் ஆவும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யப்போ ஒமக்கு கணபதி ஹோமம் பண்ண தோதுபடுதோ பண்ணி வுட்டுப்புட்டு சொல்லி வுடு. நாமளும் மவனெ அனுப்புறேம்!"ன்னு கறாரா சொன்னிடுச்சு ராசாமணி தாத்தா. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்குப் பக்குன்னு ஆயிடுச்சு. பொண்ண வுடுறதுக்கு மின்னாடி இருந்த பேச்சு இதில்லையே, யிப்போ பேச்சு மாறுதேன்னு நெனைச்சாரு. நாம்ம எதுவும் ஏடாகூடாம பதிலச் சொல்லி நெலமெ சிக்கலாயிடக் கூடாதுன்னு பேசத் தயங்கிப் பேசாமலே, என்னடா இப்பிடிச் சொல்லுறானுவோளேன்னு நெனைச்சிட்டு, மேக்கொண்டு அங்க பேசுன பேச்சுக்கு ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம, எதுவா யிருந்தாலும் வூட்டுக்குப் போய ஆர அமர யோசிச்சிக்கலாம்ன்னு சுப்பு வாத்தியாரு மௌனசாமியாரா பொண்ணோட வூடு திரும்புனாரு.

            செய்யு வூட்டுக்கு வந்ததும் மேக்கொண்டு எப்படி இருக்கணும், எப்படி நடந்துக்கணும்ன்னு பல வெதமா பல பேரும் யோசனைகள சொல்லிட்டு இருந்தாங்க. சுப்பு வாத்தியாரும் சாமர்த்தியமா இருந்துகிடணும்ன்னு சில விசயங்கள சொன்னாரு. அது எல்லாத்தையும் அவ்வெ கேட்டுகிட்டா. இருந்தாலும் மனசுக்குள்ளார இருந்த பயம் மட்டும் போவேனான்னு இருந்துச்சு. குறிப்பா பாலாமணி கொடுத்த மாத்திரைகளச் சாப்புட அவ ரொம்பவே பயந்தா. அந்த மாத்திரை மருந்துகளையெல்லாம் எடுத்துகிட முடியாதுன்னு சில சமயங்கள்ல அடம் கூட பண்ணுனா. அவளெ ரொம்ப கட்டாயம் பண்ணாம வுட்டாச்சு. அந்த மாத்திரை மருந்துகள சாப்புடாம நிறுத்துன ஒடனே இயல்பா பேசவும், நடந்துக்கவும் ஆரம்பிச்சா. அப்படி என்னத்தாம் பாலாமணி மாத்திரைய கொடுத்தானோ தெரியல. இதுல வேற அவ்வேம் போன் பண்றப்பல்லாம் மருந்து மாத்திரைய சாப்புட்டுட்டு இருக்கீயான்னு வேற வெசாரிச்சிட்டு இருந்தாம். செய்யு சாப்புட்டுகிட்டு இருக்கேம்ன்னு பொய்யச் சொல்லுவா. அதெ கேட்டுப்புட்டு, "பாத்தியா! நம்ம மாத்தி‍ரெ எப்பிடியெல்லாம் கொணம் பண்ணுதுன்னு!"ம்பாம் பாலாமணி. அதெ கேக்குறப்போ அவளுக்குச் சிரிப்பு வந்துடும். சிரிச்சா வெசயம் தெரிஞ்சிடுமோன்னு போன எட்டிப் பிடிச்சிக்கிட்டு, வாயைப் பொத்திக்கிட்டுல்லாம் சிரிச்சிருக்கா.

            திட்டையில வூட்டுல இருக்குற வரைக்கும் அவளுக்கு எந்தப் பெரச்சனையும் இல்ல. பாக்குக்கோட்டை போறதுன்னாலோ, சென்னைப் பட்டணம் போறதுன்னாலோ அவளுக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரியான நடுக்க வர்ற ஆரம்பிச்சிது. அதெ பத்திப் பேச ஆரம்பிச்சாவே அன்னிய நாளு முழுக்க பித்து பிடிச்சாப்புல ஆவ ஆரம்பிச்சா. அதெ பத்தி அன்னிய நாளுக்கு எதுவும் பேசாம யிருந்தா அவ்வே பாட்டுக்குச் சிரிச்சிக்கிட்டும், பேசிகிட்டும், வேலையப் பாத்துக்கிட்டும் கெடந்தா. அவ மனசுக்குள்ள இப்பிடியே நாட்கள் ஓடாதான்னு நெனைச்சிக்கிட்டு இருந்தா. தன்னோட வாழ்க்கையிலேந்து பாக்குக்கோட்டையையும், சென்னைப் பட்டணத்தையும் அழிச்சிட முடியுமான்னு பிரயத்தனம் பண்ணியும் பாத்தா. இப்படியே எத்தனெ நாளுத்தாம் ஓடும்? அடுத்தடுத்த சம்பவங்க நடக்கத்தானே வாழ்க்கெ.

            ஒரு நாளு விகடுவுக்குப் போன் அடிச்சு பாலாமணி வடவாதிக்கு வர்றதா சொன்னாம். வடவாதிக்கு வர்றதா அவ்வேம் சொன்னதெ திட்டைக்கு வர்றதா சொல்றதாத்தாம் மொதல்ல விகடு நெனைச்சாம். அதெ பாலாமணி தெளிவு பண்ணுனாம். சுந்தரியோட மவ்வே பொறந்த நாளுக்கு வர்றதாவும், வந்துட்டு ஒடனே திரும்பிடறதாவும், அதுக்கேத்தாப்புல செய்யுவக் கொண்டாந்து சுந்தரியோட வூட்டுல வுட்டுட்டுப் போவணும்ன்னு சொன்னாம். அவ்ளோ தூரம் வந்துட்டுப் போறப்ப, பக்கத்துல இருக்குற திட்டைக்கு வர்றதுல என்ன செருமம் இருக்க முடியுமுன்னு நெனைச்சிக்கிட்டு, “அப்பிடியே மச்சானே வூட்டுக்கு வந்து அழைச்சிட்டுப் போனா சந்தோஷமா இருக்கும்! வூட்டுலயும் ஊர்லயும் எல்லாத்துக்கும் ஒரு நல்ல நெனைப்பு உண்டாவும்’”ன்னு அதெ பத்தி விகடு பாலாமணிகிட்டெ கேட்டாம்.

            அதுக்குப் பாலாமணி சொன்னாம், "தங்காச்சி மவளோட ஒவ்வொரு பொறந்த நாளுக்கும் வந்துட்டுப் போறேம். இந்தப் பொறந்த நாளுக்கு வந்துப்புடணும், வுட்டுப்புடக் கூடாதுன்னுத்தாம் வர்றேம். அதுக்காக நாம்ம அஞ்ஞ திட்டைக்கு வார்ற முடியாது. ஏம்ன்னா தெருவுல இருக்குற சனங்க நம்மளப் பத்தி தப்பா நெனைக்குமுங்க. நம்மல எதாச்சும் கேள்விக் கேட்டுப்புட்டா நம்மால தாங்க முடியாது. நமக்குச் சுர்ருன்னு கோவம் வந்துப்புடும். கொஞ்ச நாளு ஆவட்டும். சனங்களுக்கு இத்து மறந்துப் போவட்டும். யப்போ வருவேம். ஆன்னா யிப்போ வாரதுக்கு நமக்குச் சங்கடமா இருக்கு!"ன்னு பிடிவாதமா. பல்ல கடிச்சிக்கிட்டு ஒரு விசயத்த சொல்றவேம்கிட்ட அதுக்கு மேல என்னத்தெ மல்லுகட்டுறதுன்னு, அதுவும் சரிதாம்ங்ற மாதிரிக்கு விகடு ஒப்புக்கிட்டாம்.

            தன்னோட கலியாண நாளு உட்பட லீவு நாளான ஞாயித்துக் கெழமையில வெச்சு, தாலி பெருக்கிப் போடறதுக்குக் கூட லீவு போட்டுட்டு ஒரு நாளு வர்ற முடியாதுன்னு சொன்ன பாலாமணி ஒரு புதன் கெழமையில நடந்த தங்கச்சி மவளோட பொறந்த நாளுக்கு லீவு போட்டுட்டுதாம் வந்தாம். காலங்காத்தால அவ்வேம் சுந்தரியோட வூட்டுக்கு வந்த கதியோட செய்யுவ அழைச்சிட்டு வார்றச் சொல்லி விகடுவுக்குப் போன அடிச்சாம். செய்யு கெளம்ப ரொம்பவே தயங்குனா.

            "அவுகளுக்கு மட்டும் இஞ்ஞ வர்றதுல சங்கடம் இருக்கும்ன்னா நமக்கும் அப்பிடித்தானே அவுக வூட்டுச் சனங்க வூட்டுக்குப் போறதுக்குச் சங்கடமா இருக்கும். யாராச்சிம் அவுக சொல்றதெப் போல நம்மள ஒரு கேள்வியக் கேட்டுப்புட்டா எப்பிடி இருக்கும்ன்னே? அவுகளுக்கு ஒரு ஞாயம்? நமக்கு ஒரு ஞாயமா? நீயே சொல்லுண்ணே இத்துச் சாரியான்னு?"ன்னு கேள்வியக் கேட்டா. அந்தக் கேள்விக்கு என்னத்தெப் பதிலெச் சொல்றது.

            "சேந்த வாழப் போறது நீஞ்ஞ ரண்டு பேருதாம். நீயி செல விசயங்கள்ல அனுசரிச்சிப் போறதுதலத்தாம் குடித்தனமே இருக்கு. ன்னா போயி கொஞ்ச நேரம் அஞ்ஞ இருக்கப் போறே. பொறந்த நாளு முடிஞ்ச ஒடனே போன அடிக்கப் போறே. வண்டி வந்த ஒடனே கெளம்பு வர்றப் போறே!"ன்னாம் விகடு.

            "யிருந்தாலும் நமக்கு சங்கடமாத்தாம் இருக்குண்ணே!"ன்னா செய்யு.

            "எப்பிடியா இருந்தாலும் நீயி அந்தச் சனங்களோட கலந்துப் பழகிப் பேசித்தாம் ஆவணும். அத்து இன்னிக்குத்தான்னு நெனைச்சிட்டுக் கெளம்பு. ஒரு விஷேசம் தேவைன்னா ஒமக்கு மின்னாடி வந்து நிக்கப் போறது ஒம் நாத்தானுருகத்தாம். அவுகள வுட்டுப்புட மிடியாது."ன்னாம் விகடு. செய்யுவும் விகடு சொன்னதையெல்லாம் கேட்டுப்புட்டு வேற வழியில்லாமத்தாம் கெளம்புனா.

            டிவியெஸ்ஸூ பிப்டியில வெச்சிக் கொண்டு போயி விகடு செய்யுவ விட்டாம். செய்யு வந்ததும் அவளெ உள்ளார அழைச்சிட்டுப் போன பாலாமணி வெளியில நின்ன விகடுவ வான்னு ஒரு வார்த்தெ கூட சொல்லல. கொஞ்ச நேரம் அவ்வேம் பாட்டுக்கு வாசல்ல நின்னுப் பாத்தாம். வூட்டுக்குள்ளேயிருந்து யாரும் வந்தும் கூப்புடறாப்புல தெரியல. செரின்னு அவ்வேம் பாட்டுக்குக் கெளம்பி வந்துப்புட்டாம். அந்த சம்பவம்லாம் நடந்து முடிஞ்சு பதினொரு மணி வாக்குல சாப்பாடு முடிஞ்சதும் செய்யு சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சிச் சொல்லி மொத வேலைய வூட்டுல வந்து உக்காந்துட்டா.

            சுப்பு வாத்தியாரு போனப்பவும் அப்பிடித்தாம் நடந்துருக்கு. யாரும் அவரெ உள்ளார வாரச் சொல்லவோ, வந்து ஒரு வாயி டீத்தண்ணிய ஊத்திட்டுப் போங்கன்னோ சொல்லல. அவுகவுகப் பாட்டுக்கு வூட்டக்குள்ளாரயே உக்காந்திட்டாவோ. செய்யுவ அழைச்சாந்து வுட்டுப்புட்டு அதெப் பத்தி ரொம்ப வேதனையோட சொல்லிக்கிட்டுக் கெடந்தாரு சுப்பு வாத்தியாரு.

            "ஏதோ சில மனச்சங்கடங்க உண்டாகிப் போனது உண்மெதாம். அதுக்காக பொறந்த நாளுக்கு வந்துட்டுப் போங்கன்னு ஒரு வார்த்தெ சொல்லிப்புடுறதுல என்னத்தெ கொறைஞ்சிடப் போறாம் அவ்வேம். செரி அவ்வேம்தாம் கூப்புடல. போயி வூட்டு வாசல்ல நிக்குற நம்மளயாவது ஒரு வார்த்தெ உள்ளார வந்துட்டுப் போங்கன்னு சொல்லாம, அவுகவுக வூட்டுக்குள்ளாரயே உக்காந்துக்கிட்டா என்னத்த அர்த்தம்? அப்பிடி என்னத்ததாம் நாம்ம தப்பெ பண்ணிப் புட்டேம். நாமளும் பாரு வெக்கமில்லாம பொண்ண அழைச்சாந்து வுடச் சொல்றான்னு கொண்டு போயி வுடறேம், பெறவு அழைச்சிட்டு வார்றேம்! எல்லாம் நம்ம தலையெழுத்து!"ன்னு தலையில அடிச்சிக்கிட்டாரு. 

            இந்தச் சம்பவம் நடந்து முடிஞ்ச பெற்பாடு அடுத்தடுத்தும் சில சம்பவங்க நடந்துச்சு. அடுத்த வாரத்துலயே ஒரு நாளு திடீர்ன்னு திருநள்ளாறு கோயிக்குப் போவணும்ன்னும், அதுக்குச் செய்யுவ மூலங்கட்டளை ரோட்டுல கொண்டாந்து வுடணும்ன்னும் சொன்னாம் பாலாமணி.

            "ஏம் அதுக்கு வூட்டுலயே வந்து அழைச்சிட்டுப் போவலாமே?"ன்னு கேட்டுப் பாத்தாம் விகடு.

            திரும்பவும் பழையப் பல்லவியையேப் பாடுனாம் பாலாமணி. வூட்டுக்கு வந்துட்டப் போறது சங்கடமா இருக்குறதாவும், யாராச்சும் எதாச்சும் கேள்வியக் கேட்டுப்புட்டா அதெ நம்மால தாங்க முடியாதுன்னும் மறுக்க மறுக்கா சொன்னாம். அத்தோட காலங்காத்தால சீக்கிரமா போவ வேண்டியதா இருக்குறதால, உள்ளார வடவாதி வந்துட்டுத் திரும்புற நேரம் மிச்சமாவும்ன்னும் சொன்னாம். வேற வழியில்லாம அதுக்கும் செய்யுவக் கொண்டு போயி வுட வேண்டியதா வந்துச்சு. இந்த தவா தனியா அனுப்பக் கூடாதுன்னு வெங்குவையும் அனுப்புறதா சொல்லி அதெ மொதல்ல கொண்டு போயி மூலங்கட்டளை ரோட்டுல நிறுத்தி, பெறவு திரும்ப வந்து விகடு செய்யுவ அழைச்சாந்து மூலங்கட்டளை ரோட்டு நிறுத்தி அவுக வாகனம் வர்றதுக்காகக் காத்திருந்தாம்.

            கலியாணத்துக்கு எடுத்திருந்த அதே இன்னோவா கார்ரத்தாம் வாடகைக்கி எடுத்துட்டு தன்னோட பட்டாளத்தையெல்லாம் அதுல தூக்கிப் போட்டுக்கிட்டு வந்தாம் பாலாமணி. திருநள்ளாறு கோயிலுக்கு அழைச்சிட்டுப் போறதா சொல்லி அங்கப் போயி அப்பிடியே சுத்தி உள்ள அத்தனெ கோயிருக்கும் அழைச்சிட்டுப் போயி அங்கல்லாம் செய்யுவ முழுக்குப் போட வெச்சிட்டு, ராத்திரி ஒம்போது மணி வாக்குல விகடுவுக்குப் போனப் போட்டு மூலங்கட்டளை ரோட்டுக்கு வாரச் சொன்னாம் அழைச்சிட்டப் போவ.  அவ்வேம் சொன்னபடியே விகடுவும் போயி செய்யுவ மொதல்ல அழைச்சிட்டு வந்து, பெறவு வெங்குவ அழைச்சிட்ட வந்தாம். அப்பிடி செய்யுவ சென்னைப் பட்டணத்துக்கு அழைச்சிட்டப் போறதுக்குள்ள ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பாத்தாம் பாலாமணி.

            பலவெதமான கோயிக்குப் போயி முழுக்குப் போட்டுட்டு வந்ததுல மறுநாளே காய்ச்சல் வந்து ஒடம்புக்கு முடியாம படுத்திட்டா செய்யு. "சொன்னா கேக்கவே மாட்டேங்றம்ப்பா அவ்வேம். கடவுளு மேல பக்தி இருக்க வேண்டித்தாம். அதுக்கா இப்பிடியா? ஒவ்வொரு கோயிலு கோயிலா ஏத்தி எறக்கி அவ்வேம் பண்ண அட்டகாசம் இருக்கே. அந்த வண்டியில பின்னாடி உக்காந்துட்டு நம்மால கால நீட்டவும் முடியல. மடக்கவும் முடியல. ஒரு வண்டியில எத்தனெ பேருதாம்டா போறது? அவ்வேம் பாட்டுக்கு வந்த சனங்க அத்தனையையும் ஏத்திட்டு வந்துட்டாம். ஒண்ணும் அந்தாண்ட இந்தாண்ட நவுந்து உக்கார மாட்டேங்குது. நமக்குத்தாம்டாம்பீ ரொம்ப சங்கடமா போயிட்டு. ஆன்னா போயிட்டு வந்து இவ்வே படுத்துக் கெடக்கா. கண்ட கண்ட ஊர்லயும் கண்ட கண்ட தண்ணியிலயும் முழுவச் சொன்னா, பெலமான ஆளா இவ்வே? ஒண்ணுத்தையும் நாமளும் சொல்ல முடியல. அவளும் சொல்ல முடியுல. பண்ணச் சொன்னதையெல்லாம் பண்ணிட்டு வந்து இப்பிடி படுத்துக் கெடக்கா!"ன்னுச்சு வெங்கு.

            செய்யு யிப்படி படுத்துக் கெடக்குற சேதி தெரிஞ்சதும் ஒடனடியா ஆயுர்வேத மருந்துகள கூரியர்ல போட்டு அனுப்பி வுடுறதாவும், வேற எந்த இங்கிலீஷ் வைத்தியத்தையு பண்ணிட வாணாம்ன்னு போன்ல சொன்னாம் பாலாமணி. அவ்வேம் கூரியர்ல போட்ட மருந்து எப்போ வந்து சேர்றது? அது வரைக்கும் அடிக்கிற காய்ச்சலுக்கு என்னத்தெ பண்ணித் தொலையுறதுன்னு சுப்பு வாத்தியாரு வடவாதியில இங்கிலீஷ் டாக்கடருகிட்டெ கொண்டுப் போயிக் காட்டிட்டாரு. இந்தச் சேதி வேற அவனுக்கு எப்பிடியே தெரிஞ்சிருக்கும் போல. ஆளு தாம் தூம்ன்னு போன்லயே தாவிக் குதிச்சாம். "அத்து எப்பிடி ஒரு டாக்கடர்ரோட பொண்டாட்டிய நீஞ்ஞ பாட்டுக்கு இன்னொரு டாக்கடர்கிட்டெ கொண்டுப் போயி காட்டுறது? நாம்மத்தாம் ஒண்ணும் பண்ணாதுன்னு சொல்றேம். அதெயும் மீறிகிட்டுக் கொண்டுப் போயி காட்டுனா ன்னா அர்த்தம்?"ன்னு மூஞ்செ தூக்கி வெச்சிக்கிட்டாம்.

            பாலாமணி போட்டு வுட்ட மருந்து மாத்திரைக ரண்டு நாளு கழிச்சி திருவாரூரு புரபஸனல் கூரியர்ல வந்திருக்கிறதாதவும், வந்து வாங்கிட்டுப் போங்கன்னும் விகடுவுக்குப் போன அடிச்சாங்க. ஒரு நாளு சாயுங்காலம் பள்ளியோடம் வுட்டு வேலை மெனக்கெட்டுஅவ்வேம் அந்த மருந்துகளப் போயி கூரியர்ல வாங்கியாந்தம். அதுக்குள்ள செய்யுவுக்கு இங்கிலீஷ் வைத்தியத்துலயே நல்லா கொணம் கண்டிருந்துச்சு. அதெப் பத்தி பாலாமணிட்டெ சொன்னப்போ, "கொணம் கண்டாலும் பரவால்ல. இந்த மருந்து மாத்திரைகளப் போடுறீயே!"ன்னுட்டாம். செரின்னு அதெ போடச் சொல்லிப் பாத்தா செய்யு பாட்டுக்கு விடிய விடிய தூங்க ஆரம்பிச்சாம். நல்லா சுறுசுறுப்பா மீண்டு வந்தவெ திரும்ப திரும்ப மதமதன்னு ஒரு நெலைக்குப் போவ ஆரம்பிச்சிட்டா. அந்த மருந்து மாத்திரைகள நிறுத்துன்னாத்தாம் போச்சுன்னு அவ்வே ஒரு நாளு ரகளைய வைக்கப் போயி, செரித்தாம்ன்னு அந்த மருந்து, மாத்திரைகளெ ஓரமா தூக்கி அந்தாண்ட போட்டுப்புட்டு, மருந்து மாத்திரைகளா சாப்புடுறதா பாலாமணிகிட்டெ ஒரு பொய்யெ சொல்ல வேண்டியதாப் போச்சு. அவனும் அதெ கேட்டுகிட்டு, "பாத்தியளா மச்சாம்! மருந்து மாத்திரைக எப்பிடி வேல செய்யுதுன்னு?" ரொம்ப பெருமையாச் சொன்னாம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...