7 Oct 2020

ஆட்களை மீட்கொணர்தல்!

ஆட்களை மீட்கொணர்தல்!

செய்யு - 587

            பஸ்ஸூ மசமசன்னுப் போயிட்டு இருக்குறதுல விகடுவுக்குச் சுப்பு வாத்தியாரு பேசுனதெல்லாம் ஞாபவத்துல வந்து வந்து நெழலாடுது. ராத்தூக்கத்துல பயங்கரமா கனவெ காணுறதெ வுட மோசமா இருக்கு, பகல்ல ஞாபவத்துக்கு வர்ற அந்த ஒவ்வொரு நெனைப்புகளும். அந்த நெனைப்புகளுக்கு மத்தியிலயும் அப்பதாம் சித்த நெரம் கண்ணசரது விகடுவுக்கு, அப்படி கண்ணசருற சித்த நேரத்துலயும் கனவுல வர்றாப்புல, "அரிப்பெடுத்த தேவிடியா அடங்க மாட்டீயாடி?"ன்னு சுந்தரிய இழுத்து வெச்சி அடிக்கிறாம் பாலாமணி. சட்டுன்னு வந்தத் தூக்கம் வார்ற மாட்டேன்னு சொல்லிட்டு டாட்டாவக் காட்டிட்டு ஓடிடுது.

            ஒரு பொண்ணு ஒருத்தனெ விரும்புறதா சொல்றப்போ அவனுக்கே அவளெ கட்டி வெச்சிப்புடணும். அதெ வுட்டுப்புட்டு மாத்திச் செய்யுறப்ப பெரச்சனெதாம். சாதி, சம்புரதாயம்ன்னு பாத்துகிட்டு, வெட்டிக் கெளரவமும், வறட்டுக் கெளரவமும் பாத்தா இப்பிடித்தாம் பின்னாடி அசிங்கப்பட்டு நிக்கணும். இந்தப் பயலுவோ இப்பிடிச் சாதியக் காப்பாத்துறதா சொல்லிட்டு மனுஷனக் கொன்னுப்புடுறானுவோளே. சாதியும் சடங்கும் மனுஷனுக்கா? யில்ல சாதி சடங்குக்காக மனுஷனா? இப்பிடி வெதவெதமா நெனைப்பு வேற வந்து வாட்டிக்கிட்டு இருந்துச்சு. இந்த நெனைப்புகளுக்கு எடையே எப்படா சென்னை பட்டணம் வரும்ன்னு காத்திருந்து இருந்தவனுக்குச் சாயுங்காலமா ஆனதும் சென்னை பட்டணம் வந்துச்சு. கோயம்பேட்டுல எறங்குனவேம் வேகு வேகுமா அரும்பாக்கம் போற பஸ்ஸப் பிடிச்சிப் பாலாமணியோட வூட்டுலப் போயி நின்னாம். இவ்வேம் போயி நின்ன நேரம் ராசாமணி தாத்தா ஹால்ல உக்காந்து டிவிப்பொட்டியப் பாத்துட்டு இருந்துச்சு. சரசு ஆத்தா உதிரிப்பூக்கள வாங்கி வெச்சி அக்கறையா கட்டிக்கிட்டு இருந்துச்சு. ரெண்டு பேத்துமே இவனெப் பாத்ததும், "வாடா பேராண்டி!"ன்னுச்சுங்க.

            பாலாமணி கிளினிக்குக்குக் கெளம்பிட்டு இருந்தாம். பாலாமணிய ஒரு சோதனைக்காவது என்னத்தெ சொல்றாம்ன்னு பாக்க நெனைச்ச விகடுவுக்கு அவ்வேம், "நல்ல வேளயா செரியான நேரத்துல ‍அழைச்சுட்டுப் போவ மச்சாம் வந்திருக்காப்புல. இனுமே கொஞ்சம் கிளினிக்க நல்ல வெதமா பாக்கலாம். நாம்ம கிளினிக்குல உக்காந்திருந்தாலும் மனசெல்லாம் இஞ்ஞத்தாம் இருக்கும். செய்யு என்னத்தெ பண்ணுறா? ஏதெ பண்ணுறான்னு நெனைச்சிக்கிட்டு!"ன்னாம் பாலாமணி. அவ்வேம் அப்பிடிப் பேசுனதிலேந்து அவ்வேம் எதுலயும் இன்னும் மாறலங்றது தெரிஞ்சிது விகடுவுக்கு. அப்பிடி ஒரு நெனைப்புல கிளினிக்குல ஏம் போயி உக்காந்துக்கிட்டு, வூட்டுல உக்காந்திருக்க வேண்டித்தானடா முட்டாப் பய மவனென்னு கேக்கறதுக்கு தொண்டே வரைக்கும் வந்த வார்த்தைய விகடு கஷ்டப்பட்டு அடக்கிகிட்டாம். எதாச்சும் கோபப்பட்டுப் பேசி அதால கெளம்ப வேண்டியது கெளம்ப முடியாம போயிடக் கூடாதுங்றதுல உறுதியா இருந்தாம். ஆம்பளைங்க பொதுவா அப்பிடித்தாம், கலியாணம் ஆவுற வரைக்கும் பொண்டாட்டின்னு ஒருத்தி வர்ற மாட்டாளான்னு நெனைக்குறதும், அதுவே கலியாணம் ஆன பெறவு பொண்டாடிங்றவெ வெளியிலயே கெளம்ப மாட்டாளான்னு நெனைக்குறதுமா நெனைப்பு ரண்டு வேறு தெசையில மாறிடும். பாலாமணிக்கு அப்பிடித்தாம் நெனைப்பு மாறியிருக்கா? அப்பிடியில்லாம வேற மாதிரி மாறியிருக்காங்றதெ அவந்தாம் சொல்லணும். அவ்வேம் மனசு அவனுக்குத்தாம் தெரியும். வேற யாராலயும் புரிஞ்சிக்க முடியா மர்மமான மனசு அவனோட மனசு.

            "நீயி வர்றதாச் சொன்னதால உக்காந்திருக்கேம். தரமணிக்குப் பிந்துவோட வூட்டுக்குப் போவணும். நீயி வேற எப்ப வருவீயோ? எப்பிடி வருவீயோங்ற யோஜனையில உக்காந்ததுதாம். எப்பிடி இங்கேயிருந்து அழைச்சிட்டுப் போவப் போறே?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "யிப்பிடியே நடந்துப் போயி பஸ்ஸப் பிடிச்சி கோயம்பேட்டுல எறங்கிக்கிறேம். அஞ்ஞயிருந்து ஆர்குடிக்கோ, திருவாரூருக்கோ எஞ்ஞ பஸ்ஸூ கெடைக்குதோ அதுல ஏறி மொத வேலையா ஊர்ல போயிக் காலடி எடுத்து வெச்சிட்டுதாங் மறுவேல பாப்பேம்!"ன்னாம் விகடு.

            "ஒரு ஆட்டோவப் பிடிச்சிட்டுப் போயிக் கோயம்பேட்டுல எறங்கிக்கிறது. மூட்டெ முடிச்சுக வேற நெறைய யிருக்கு!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "தோதுப்படிக்கிப் பாத்துக்கிடறேம்!"ன்னாம் விகடு.

            செய்யுகிட்டெயும், வெங்குகிட்டெயும் வந்து, "எடுத்துக்கிட வேண்டியதையெல்லாம் எடுத்துக்கிட்டீயளா? வெரசா கெளம்பிப்புடுவேம்!"ன்னாம் விகடு.

            "நீயி வாரதுக்குள்ள நாகம்மா கோயிலுக்குப் போயிட்டு வந்துப்புடுவேம்ன்னு நெனைச்சேம். நீயி என்னான்னு அதுக்குள்ளார வந்து நிக்குதீயேடா?"ன்னுச்சு வெங்கு. இந்த ஊர்ல எங்கப் பாம்பு இருக்கு? அதுக்குப் போயி நாகம்மா கோயில்ல வெச்சிருக்கானுவோன்னு நெனைச்ச விகடு, "அதாங் நம்ம ஊர்ல மாரியம்மன் கோயிலு பக்கத்துல புத்தடி இருக்குல்லா. அஞ்ஞப் போயி கும்புட்டுக்கிட்டா ன்னா?"ன்னு கேட்டாம்.

            "இஞ்ஞ யிருந்தப்போ நம்மளக் காத்தது அந்த நாகம்மாத்தாம்டா. அதெப் போயிப் பாக்காம கெளம்புறது எப்பிடிடாம்பீ?"ன்னுச்சு வெங்கு. இதுகளுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்க முடியாதுன்னு நெனைச்ச விகடு, "அந்தக் கோயிலு எஞ்ஞ இருக்கு? எம்மாம் நேரமாவும் போயிக் கும்புட்டு வர்ற?"ன்னாம்.

            "ந்தா பக்கத்துலதாம் யிருக்கு!"ன்னு அவனையும் கெளப்பிக்கிட்டுப் போன வெங்கு சொன்ன கோயிலு நாலு தெரு தாண்டி அந்தாண்ட இருந்துச்சு. அந்தக் கோயில்ல நொழைஞ்சதும் நொழையாதுதமா கொசுக்கடித் தாங்கால. சொரிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதாப் போச்சு. அந்தக் கொசுக்கடியப் பெரிசு பண்ணாம சனங்கப் பாட்டுக்கு வர்றதும், போறதும், வெளக்குப் போடறதுமா இருந்துச்சுங்க. நிச்சயம் அதுக்கான சக்திய நாகம்மாத்தாம் அவுகளுக்குக் கொடுத்திருக்கணும். இவ்வேம் அதாச்சி விகடு கடவுள் பக்தி யில்லாத காரணத்தால நாகம்மா அந்தச் சக்திய விகடுவுக்கு மட்டும் கொடுக்கல போலருக்கு. கொசு கடிச்சிப் பிய்ச்சி எடுத்துக்கிட்டு இருந்துச்சு.

            வெங்கு நாகம்மாகிட்டெ வேண்டுதுன்னா வேண்டுது அது பாட்டுக்கு வேண்டுது. "எம் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கெயெ கொடு. அவளெ நல்ல வெதமா வையி!"ன்னு அது பாட்டுக்கு ஆயிரத்தெட்டு நாமத்தெ சொல்றதெப் போல சொல்லிட்டே இருக்கு. இவ்வே செய்யு கோயிலச் சுத்தி இருக்குற ஒரு சின்ன கல்லக் கூட வுட்டுப்புடாத அளவுக்கு ஒவ்வொண்ணையும் சுத்தி சுத்தி வந்துகிட்டு வெளக்கப் போட்டுக்கிட்டு நிக்குறா. அப்பதாம் விகடு ஒண்ணுத்தெ கண்டுபிடிச்சாம். கோயிலுக்கு வந்து வேண்டிக்கிட்டோ, வெளக்குப் போட்டுக்கிட்டோ இருக்குறவங்கள இந்தக் கொசுக்க ஒண்ணும் செய்யுறதில்லைன்னும், சும்மா வந்து நிக்குறவங்களத்தாம் கடிச்சி உறிஞ்சி எடுக்குதுங்றதையும்.

            கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல நாகம்மா கோயிலே கதின்னு இருந்துப்புட்டு, "நீயி வந்ததால சட்டுப்புட்டுன்னு எல்லாத்தையும் முடிக்குறாப்புல ஆயிடுச்சு. கெளம்புவமா வெரசா?"ன்னு கேட்டுச்சு வெங்கு. செரித்தாம்ன்னு இப்பவாவது கெளம்ப மனசு வந்துச்சேன்னு அதுகளக் கெளப்பிட்டு பாலாமணி வூட்டுக்கு வந்தாம். வர்றப்ப செய்யு சொன்னிச்சு, "இந்தக் கோயிலக் கண்டுபிடிக்க தெனமும் சாயுங்காலம் சாயுங்காலாம தெருத்தெருவா அலைஞ்சேம்டாம்பீ! இஞ்ஞ வேண்டிக்கிட்டப் பெறவுதாம்டாம்பீ சித்தெ பரவாயில்ல. செய்யு வூட்டுக்கார்ரேம் கிளினிக்கு கெளம்புன அடியோட வெள்ளி, செவ்வாயில வந்து உக்காந்துட்டுப் போனா நல்ல சக்தியக் காட்டுனா நாகம்மா!"ன்னு.

            இவுங்க வந்த நேரமாப் பாத்து ராசாமணி தாத்தாவும், சரசு ஆத்தாவும் பிந்து வூட்டுக்குக் கெளம்ப ஆரம்பிச்சிருந்துச்சுங்க. "நல்ல வேள செரியான நேரத்துல வந்தீயே! நாஞ்ஞளும் கெளம்பிப்புடுவேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "அவுங்க வந்தா ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்னத்தெ பண்ணுவாக?"ன்னா செய்யு.

            "அவ்வேம் கிளினிக்கப் பாத்துப்புட்டு நேரா தரமணி வந்துப்புடறதா சொல்லிட்டாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            புடவெ, துணி மணின்னு வெங்கு ஒரு டிராவல் பேக்கும், செய்யு ஒரு டிராவல் பேக்கும் வெச்சிருந்துச்சுங்க. இதுக்கு எதுக்கு ஒரு ஆட்டோன்னு ரண்டு பேத்தையும் வூட்டுலேந்து நடத்தியே பஸ் ஸ்டாப்புக்குக் கெளப்பிட்டு வந்தாம் விகடு. பஸ் ஸ்டாப்புக்கு வந்தப் பெறவுதாம் செய்யுவுக்குக் குளிக்கிறப்போ தோடு, செயினெ பாத்ரூம்லயே கெழட்டி வெச்சது நெனைவுக்கு வந்துச்சு. அதெ சொன்னதும், "திரும்பவும் இந்தப் பேக்குகளத் தூக்கிட்டு அலைய வாணாம், நாம்ம பேக்குக்கு காவலா இஞ்ஞயே நிக்குறேம், கழட்டி வெச்சி ஒஞ்ஞளுக்குத்தாம் எஞ்ஞ வெச்சிருப்பீயேன்னு தெரியும், போயி அதெ வெரசா எடுத்து வாஞ்ஞ! நீஞ்ஞ கெளம்பிப் போறதுக்குள்ளார அவுக தாத்தாவும், யாத்தாவும் கெளம்பிப் போயிருந்தா ஒண்ணும் பண்ண முடியாது. அப்பிடிப் போயிருந்தா போயித் தொலையட்டும்ன்னு திரும்பி வந்துப்புடுங்க. போனப் போட்டு எந்த எடத்துல இருக்குன்னு சொல்லி எடுத்து வைக்கச் சொல்லிப்புடுவேம்!"ன்னு வெங்குவோட செய்யுவக் கெளப்பி விட்டாம் விகடு.

            வெங்குவும், செய்யுவும் போயி நகெ, நட்டுகளோட எடுத்துட்டு வந்ததோட, ஒரு சேதியையும் சொன்னுச்சுங்க, "அவுக ரண்டு பேத்தும் தரமணிக்கும் கெளம்பல. ஒண்ணுத்துக்கும் கெளம்பல. நீயி வர்றதால அப்பிடி ஒரு வேஷத்தப் போட்டுச்சுங்கப் போலருக்கு. நாம்ம திடீர்ன்னுப் போயி நின்னா அந்தக் கெழட்டுப் பயெ பாயப் போட்டு படுத்திருக்காம். அந்தக் கெழட்டுச் சிறுக்கி என்னவோ போயி சமையல்கட்டுல சமைச்சிட்டு நின்னா. நம்மளப் பாத்ததும் வெட்கிப் போயிட்டுங்க சனங்க. ஒடனே சமாளிக்குறாப்புல திடீர்ன்னு நெஞ்சு படபடன்னு வந்ததாவும், அதுக்காகத்தாம் கொஞ்சம் டீத்தண்ணியப் போட்டுட்டு இருக்குறதாவும் அடிச்சி வுடுதுங்கடாம்பீ!"ன்னுச்சு வெங்கு.

            "நல்ல வேள! போனதுக்கு நகெய எடுத்துட்டு வந்தாச்சு. நெசமா அவுக கெளம்பியிருந்தா நமக்குத்தாம் சிக்கலாப் போயிருக்கும். பொய்யினாச்சும் கெளம்பாம இருந்த வரைக்கும் நல்லதுதாங்!"ன்னாம் விகடு.

            "எல்லாம் அந்த நாகம்மாவோட சக்திதாம்டாம்பீ!"ன்னுச்சு வெங்கு.

            "நீஞ்ஞ நகெ நெட்ட மறந்து வெச்சிப்புட்டு அதுக்குல்லாம் நாகம்மாவக் கூப்புடுங்க!"ன்னு சொல்லிக்கிட்டு வேகு வேகுன்னு கோயம்பேட்டுக்குப் பஸ்ஸப் பிடிச்சி, அஞ்ஞயிருந்து ஆர்குடிக்குக் கெளம்ப தயாரா இருந்த பஸ்ல ஏத்துனாம் விகடு.

            "இன்னிக்கு நீயி வர்றதத் தெரிஞ்சோ என்னான்னோ‍ தெரியல யண்ணே! அவுக நமக்கு வண்டியெல்லாம் ஓட்டக் கத்துக் கொடுத்தாங்க. இன்னிக்கு மட்டும் நீயி வரலன்னா நாளைக்கும் தொடந்தாப்புல கத்துக் கொடுத்திருப்பாங்க. நாமளும் வண்டி ஓட்ட கத்திருப்பேம்! என்னவோ நாம்ம ஊருக்குக் கெளம்புறப்பத்தாம் பாசம் பொத்துக்கிட்டு வருது. மித்த நாள்க எல்லாம் அத்து எங்கப் போயி ஒளிஞ்சிக்குதோ யாருக்குத் தெரியும்?"ன்னா பஸ்ல ஏறி உக்காந்த செய்யு.

            "வண்டி ஓட்டுறதா பெரிய காரியம்? நீயி ஊருக்கு வந்து யப்பாவோட டிவியெஸ்ஸூ ஓட்டக் கத்துகிட்டேன்னா எந்த வண்டிய வாணாலும், புல்லட்ட வாணாலும் ஓட்டலாம். மொதல்ல ஊருக்குப் போயி சேர்ற வழியப் பாப்பேம்!"ன்னு சொல்லிக்கிட்டெ ஊருல கொண்டாந்து சேத்தாம் விகடு. பகல் நேரத்துல போற பஸ்ஸப் போல யில்லாம, ராத்திரி நேரத்து பஸ் கொண்டு வந்து சேக்குறது தெரியாம சேத்துச்சோ, யில்ல ராத்திரி நேரத்துல வர்ற உறக்கத்தால வந்ததும் சேர்ந்ததும் தெரியலையோ என்னவோ தெரியல. ஊரு வந்து சேந்தாச்சு.

            சென்னைப் பட்டணத்துக்குப் போயி ஆயாளயும், தங்காச்சியையும் அழைச்சிட்டு வர்றதுங்றது ஒரு பெரிய காரியமில்லத்தாம். யிப்போ அவுக ரெண்டு பேத்தையும் அழைச்சிட்டு வந்தது அவனுக்கு என்னவோ இமாலயச் சாதனையப் போல இருந்துச்சு. மனசுக்குள்ள அவ்ளோ கனம் இருந்துச்சு விகடுவுக்கு. போயி அழைச்சிட்டு வர்றப்போ அழைச்சிட்டுத் திரும்ப முடியாத அளவுக்கு எதாச்சும் நடந்துடுமோன்னு பயந்துகிட்டெ இருந்தாம் விகடு. அப்பிடி எதாச்சும் நடந்தா ஒடனடியா சந்தானம் அத்தானுக்குப் போன போட்டு வர்ற வெச்சிப்புடணும்ன்னுல்லாம் முடிவெ கட்டி வெச்சிருந்தாம்.

            மொத்தத்துல பாலாமணி அனுப்பி வெச்சதெப் பாத்தவேம் ஒரு விசயத்தப் புரிஞ்சிக்கிட்டாம், அவனுக்குச் செய்யுவோட வாழ்றதுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லேங்றதெ. வெரட்டி வுடுறதுக்குச் சரியான நேரத்தெப் பாத்துதாம் அவ்வேம் காத்துக்கிட்டு இருந்தாங்றதையும் அவ்வேம் நடந்துகிட்டு மொறையும், பேச்சும் புலப்படுத்துனது போலருந்துச்சு. யிப்போ அதெ வெறுக்குற மனநெலையில விகடு யில்ல. எப்பிடியோ அனுப்பி வெச்சானே புண்ணியவான்னு நெனைச்சிக்கிட்டாம். கிட்டதட்ட தன்னப் பத்தின விசயங்க எல்லாத்தையும் பொண்ணு வூட்டுல தெரிஞ்சிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சிருந்தா நிச்சயம் அவ்வேம் பொண்டாட்டிய அனுப்பி வைக்குறதுல எதாச்சும் பெரச்சனதாம் பண்ணியிருந்திருப்பாம். அத்துத் தெரியாத அளவுக்குக் கமுக்கமா அழைச்சிட்டு வந்ததால காரியத்தெ முடிக்க முடிஞ்சது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...