அறிவின் ஜாலங்கள்
பணந்தான் இந்த உலகில் பலவற்றைத் தீர்மானிக்கிறது.
பணத்தைத் தேடிய பிறகு மனந்தான் அடுத்தப் படியாக இந்த உலகில் பலவற்றைத் தீர்மானிக்கிறது.
பணத்தைத் தேடிக் கொண்டிருப்பவர் கடைசி வரை பணத்தைத் தேடிக் கொண்டிருந்தால் அப்படியே
ஒரு சடமாகச் செத்து விடுவார். பணத்தை வைத்து மட்டும் இன்பம் காண நினைப்பவர் ஒரு சைக்கோவின்
எல்லையைத் தாண்டியும் செல்வார். பணத்திலிருந்து மனத்தை நோக்கி நகர்பவர் ஆன்மீகத்தை
நோக்கை அடியெடுத்து வைப்பார். அந்த ஆன்மீகத்தில் ஒன்று அவர் தீவிரவாதியாக ஆகலாம்,
அல்லது வறட்டு வேதாந்தியாக ஆகலாம். இரண்டில் ஒன்று அங்கே நடக்கும். இந்த இரண்டுமே அறிவின்
மூலம் உருவாக்கிக் கொள்ளும் ஒரு பிம்பமே. அறிவால் மனதிற்குள் உருவாக்கிக் கொள்ளும்
பலவும் பொதுவாகப் பொருந்தக் கூடிய உண்மைகளல்ல, குறிப்பிட்ட சில நிலைகளுக்கு மட்டுமே
பொருந்தக் கூடிய மாயைகளே.
இதைத் தொடர்ந்து இந்த உலகில் அறிவு எதற்குத்
தேவைப்படுகிறது? என்று கேட்கலாம்.
அறிவில்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை.
உதாரணத்திற்கு ஒன்றாகப் பிறரின் மனம் புண்படாமல் பேச, அப்படிப் பேசிக் காரியம் சாதிக்க
அறிவுதான் தேவைப்படுகிறது எனலாம்.
பணம் இந்த உலகில் சமமாக எல்லோரிடத்திலும்
இல்லை. கண்டபடிக்கு சமமற்று இருக்கிறது. அதை தனக்குத் தேவையான அளவுக்கோ, அதை வுட கூடுதலாகவோ
இழுத்துக் கொள்வதற்கும் இந்த அறிவுதான் தேவைப்படுகிறது எனச் சொல்லலாம்.
வாழ்வதோ, வாழாமல் போவதோ அறிவின் மூலம்
அறிவு எடுக்கும் அறிவுதான் அது. அந்த அறிவை சரியான அறிவு, தவறான அறிவு என்று வேண்டுமானால்
பிரிக்கலாம். இரண்டுமே அறிவுதான். சரியான அறிவு இருந்தால் தப்பிப் பிழைக்கலாம். தவறான
அறிவுக்கு எது வேண்டுமானால் நடக்கலாம். எது வேண்டுமானால் என்றால் நல்லதும் நடக்கலாம்,
கெடுதலும் நடக்கலாம்.
பொதுவாக அறிவை உலகம் எப்படி பெரும்பான்மையாகப்
பயன்படுத்துகிறது என்று கேட்டால், குறிப்பிட்ட அளவு சொத்து இருக்கும் போது அதைப்
பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த வழிமுறைகளின்படி
சொத்தானது நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்காககவும்தான் பயன்படுத்துகிறது.
இதற்காகப் பல நேரங்களில் இந்த உலகம் அறிவைக்
கொண்டு வறட்டு வேதாந்தம் பேசலாம். அந்த வறட்டு வேதாந்தம் எப்போதும் மற்றவர்களுக்காகத்தானேயன்றி,
தமது தனிப்பட்ட உலகுக்காகக் கிடையாது என்பதை அதை உருவாக்கிப் பேசுபவர்கள் தெளிவாக
உணர்ந்திருப்பர். இதன் அடிப்படையில் முறையாக அடுத்த தலைமுறையைப் பழக்கப்படுத்தவில்லை
என்றால் அந்தத் தலைமுறை சொத்துகளை நிர்வகிக்க நிறையவே சிரமப்படும்.
வறட்டு வேதாந்தத்தில் தெளிவாகப் பேசுவது
என்பது இப்போது வரைக்கும் சவாலாக இருக்கிறது. உங்கள் அறிவைக் கொண்டு அதில் பேச சிரமப்படலாம்,
கூச்சப்படலாம், தயங்கலாம். எல்லாம் வறட்டுத்தனம் என்றான பின் நீங்கள் அதில் எதைப் பேச
முடியும்? அப்படி பேச முற்பட்டால் நீங்கள் அந்த வறட்டுத்தனத்தை ஏற்கவில்லை என்றாகி
விடும். அதை விடவும் அது குறித்த அறிவற்ற முட்டாளாக இருக்கிறீர்கள் என்பதான தோற்றம்
மிக எளிதாக உண்டாகி விடும். வறட்டு வேதாந்தத்தின் அமைப்பு நிலை அப்படி மிக மோசமாக
உள்ளபடி உங்களைத் தள்ளி விடலாம். நியாயமாகப் பேச வேண்டியதைக் கூட பேச முடியாமல் போகலாம்.
அதன் பின்விளைவாக நீங்கள் அதீதமாக உணர்ச்சிவசப்படலாம். இல்லையென்றால் சோர்ந்துப் போய்
உட்கார்ந்து விடலாம். இந்த இரண்டில் ஒன்று இல்லாமல் வேறொன்றாகவும் நிதானமாக செயல்பட
முடியாமல் தடுமாறலாம்.
வறட்டு வேதாந்தத்தைக் கொண்டு நீங்கள்
எதையும் கடைசி வரை புரிந்து கொள்ள முடியாது. மிகவும் குழப்பமான மற்றும் குழப்பமூட்டும்
அம்சங்கள் அதன் அங்கங்களாக இருக்கின்றன. அது மிக எளிதாகத் தன்னையும் குழப்பிக் கொண்டு,
பிறரையும் குழப்பி விட்டு விடுவதால் தெளிவான பல முடிவுகளுக்கு வர முடியாமல் நீங்கள்
தடுமாறிக் கொண்டே இருக்க நேரிடலாம். இந்தக் குழப்பமான தன்மையால் தெளிவாக செயல்பட முடியாமல்
தடுமாற வேண்டியதாக இருக்கலாம். எப்படிச் செயல்படுவது என்பது குறித்த எதுவுமே உங்களுக்குத்
தோன்றாமல் போகலாம். ஒவ்வொன்றையும் உங்களுக்கு நீங்களே தெளிவு செய்து கொள்ள வேண்டியதாக
இருப்பதால் அதற்கு மிகுந்த நேரம் ஆகலாம். ஒரு கட்டத்தில் நீங்கள் சோர்வடைந்து அந்தச்
சோர்வின் காரணமாகக் கூட நீங்கள் அதை ஏற்கலாம்.
அறிவின் ஆகச் சிறந்த பயன் நீங்கள் அந்த
இடத்தில் அதாவது தடுமாறும் அந்த இடத்தில் வைத்துக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். நீங்கள்
கேட்கவில்லை எனும் நிலையில் எது உங்களைக் கேள்வி கேட்க விடாமல் தடுக்கிறது எனப் புரிந்து
கொள்ள வேண்டியது அவசியமாகும். அதிகப்படியான செயலுக்கு உதவாத, நடைமுறையோடு ஒவ்வாத
உங்கள் யோசனைதான் காரணம். அத்துடன் தயக்கமும், கூச்சமும் காரணமாக இருக்கலாம். முட்டாள்தனமாகக்
கருத இடமுண்டாகி விடுமோ என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம். இது ஒரு மனநிலை. சுற்றித்
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மனநிலை. இந்த மனநிலையை நீங்கள் என்ன செய்து விட முடியும்?
எந்த அறிவால் இது உருவாக்கப்பட்டதோ, அதே அறிவைக் கேள்விக் கேட்பதன் மூலம் இதைத் தகர்க்க
முடியும். பக்கப்பலமாக துணை நிற்கும் மனிதர்கள் கிடைக்கும் போது உண்டாகும் சமூகப்
பழக்கத்தால்தான் இந்த மனநிலையை உடைக்க முடியும். நாம் மையப்படுத்தப்பட்டிருக்கும் சமூகப்
பழக்கம் காரணமாக அது இயலாதது போலத் தோன்றலாம். உருவாக்கப்பட்ட எதற்கும் மாற்றாக இன்னொன்றை
எப்போதும் உருவாக்க முடியும்.
மேற்கூறிய வகையில் அது ஒரு சில காரணங்கள்
என்றாலும் உங்களுக்கான பொறுப்பும் அதிகாரமும் கொடுக்கப்படாமல் இருப்பது இன்னொரு
பெரிய பின்னடைவை உண்டாக்கும் காரணம். அதன் காரணமாகத்தான் உங்களால் அதைப் புரிந்து கொள்ளவோ,
ஒருவேளை புரிந்தாலும் அதில் எப்படிச் செயல்படுவது என்பது புரியாமல் தடுமாற வேண்டியதாக
இருக்கிறது. உங்களுக்கு வாழ்க்கை சார்ந்த விசயத்தில் முடிவெடுப்பதில் பல தடுமாற்றங்கள்
இருக்கலாம். அதே நேரத்தில் வாழ்க்கைக்குப் புறம்பான தொடர்பில்லாத விசயங்களில் அதிவேகமாக
முடிவெடுப்பீர்கள். காரணம் அதற்கு அந்த வறட்டு வேதாந்தம்தான். அது அப்படித்தான் ஒரு
சூழ்நிலையை உருவாக்கிறது, அதாவது, தெளிவான அணுகுமுறைகள் இல்லாமல், எப்போது எப்படி
முடிவு எடுப்பது என்று புரியாத குழப்பமான மனநிலையையும், சூழ்நிலையையும் உருவாக்குகிறது.
ஆக, அறிவை நீங்கள் எந்தத் திசையிலும் செலுத்திக்
கொள்ளலாம். அறிய வேண்டியது அது அப்படி உருவாக்கியது இந்த உலகின் இயல்போ, சாசுவதமோ
அல்ல என்பதுதான். அத்துடன் அது அறிவு உருவாக்கிய ஒரு சூழ்நிலைத்தான் அது என்பதும்,
அதுவே உலக இயற்கை அல்ல என்பதும் முக்கியம். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்
இந்த உலகில் அறிவு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று. ஆனால் இந்தப் பத்தி அப்படி ஒரு
குறிப்பிட்ட கோணத்தை மட்டுமே உங்களுக்குக் காட்டுகிறது. இது குறித்த நிறைய கோணங்கள்
இருக்கின்றன என்பதை அந்த அறிவே உங்களுக்குக் காட்டும்.
*****
No comments:
Post a Comment