கொலைகாரப் பாவிகள்!
செய்யு - 586
ஒரு சில விசயங்க தெரிஞ்சி இருந்தாலும்
அந்த விசயத்தால நமக்கொண்ணும் பாதிப்பு ஏற்பட்டுப் போயிடப் போறதில்லன்னு சுப்பு வாத்தியாரு
எடுத்த முடிவுதாம் இப்போ எல்லாத்தையும் பாதிச்சிட்டு இருக்கு.
சுப்பு வாத்தியாரு பேச ஆரம்பிச்சாரு. அதெ
கேக்க கேக்க விகடுவுக்குப் போயி அழைச்சிட்டு வந்துப்புடுறதுதாங் சரின்னு தோணுச்சு.
இந்தக் கதையெ அவருக்கு யோகிபாயி சொல்லியிருந்தாரு ஒரு செல நாளுங்களுக்கு மின்னாடி.
இதெல்லாம் காதுங் காதும் வெச்ச மாதிரியான கதைங்க. கடன்கப்பின்னு அங்கங்க கொடுத்து
வாங்குறதால யோகிபாயிக்கு பல பேத்தோட கதைக அத்துப்படி. அவருக்குத் தெரியாம ஊருல ஒரு
கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவம் நடந்துட முடியாது. அப்பிடி எது நடந்தாலும் அதெ
பத்தித் தோண்டித் துருவி வெசாரிச்சி உண்மெ என்னங்றதெ தெரிஞ்சிக்கிட்டாத்தாம் அவருக்குத்
தூக்கம் வரும். அப்படி பல விசயங்கள தெரிஞ்சி வெச்சிருக்கிறதெ அவரு பலமா நெனைச்சாரு.
யோகிபாயி சொன்ன கதெ சாதாரண கதெ யில்ல. ஒரு கொலகாரக் கதெ.
ஆமாம், சில கதைகளெ எப்பிடி வெளியில சொல்லுறதுன்னு
தெரியல. அதெ யிப்போ இந்த எடத்துல சொல்லாமலும் இருக்க முடியல. அப்பிடிச் சொல்லுறப்போ
இது மாதிரியான கதைகளெ கொலைக்கான சாட்சியமாவும் போயிடக் கூடும். ஆனா இந்த மாதிரியான
ஒரு சில விசயங்க ஊருக்குள்ள அரசல் புரசலா தெரிஞ்சித்தாம் இருந்துச்சு.
சுந்தரியோட தொடர்புல இருந்த ஆதிகேசவனோட
கதெ ஊரறிஞ்சி நாறிப் போன பெறவு அதெப் பத்தி யாரும் பெரிசா பேசிக்கிறதில்ல. நெதமும்
நடக்குறதுக்குப் பேரு அதிசயம் இல்லங்கற மாதிரி, அதுக்கான பரபரப்ப அந்தக் கதெ இழந்துப்
போயி நாளாயிருந்துச்சு. ஊரு ஒலகத்துல மொத மொதலா ஒரு திருட்டோ, கொலையோ நடக்குறப்பத்தாம்
அதெப் பத்தினப் பேச்சா இருக்கும். அதுவே வருஷா வருஷம் நடக்கறது வழக்கமாச்சுன்னா அதெப்
பத்தி அலட்சியமா பேசிட்டுப் போயிட்டே இருக்குமுங்க சனங்க. மின்னாடி மாத்திரி சுந்தரியோட
கள்ளக்கதைய யாரும் பெரிசா சுவாரசியமா பேசிக்கிறதுமில்ல, அதெ ரசிக்கிறதுமில்ல. அவ்வே
அப்பிடித்தாம்ங்ற முடிவுக்கு சனங்க வந்திருச்சு.
இன்னும் ஒரு சில வருஷத்துல வயசுக்கு வந்துடற
நெலமெயில இருந்தா சுந்தரியோட பொண்ணு. அவ்வே வயசுக்கு வந்திருந்தா அவளெ கூட பாலாமணிக்குக்
கட்டி வெச்சிப்புடுறதுன்னு ஒரு யோசனெதாம். அதெ கொஞ்சம் உறுதியா சொல்லிருந்தா பாலாமணியும்
காத்திருக்குற ஆளுதாம். யிப்பவே மொகத்துல மொளைச்சி வர்ற தாடி மசுருக வெளுப்ப வர்றதுல
வெறுத்துப் போயிருந்த பாலாமணியப் பாத்துட்டு, அந்த முடிவெ தூக்கி அந்தாண்ட வைக்குறாப்புல
ஆயிடுச்சு. சுந்தரியோட மவனும் தோளுக்கு மேல வளந்து நாலு பொண்ணுகளப் பாக்க ஆரம்பிச்சிருந்தாம்.
இப்படி ஒரு நெலமையில சுந்தரி கருத்தரிச்சா எப்பிடி இருக்கும்? அதுவும் சித்துவீரன்
சுந்தரியோட படுக்குறதெ வுட்டு பத்து வருஷத்துக்கு மேல ஆனப்போ. இந்த இடைப்பட்ட பத்து
வருஷத்துல எத்தனெ கரு உண்டானுச்சு, அதுல எத்தனெ கலைச்சதுங்றதுக்குல்லாம் கணக்கெ யாரும்
துல்லியமா வெச்சிக்கிடல. குத்துமதிப்பா அஞ்சோ ஆறோ இருக்கும். இருந்தாலும் அதெ பெரிசா
எடுத்துக்கிடாத அளவுக்கு சித்துவீரன் பழகிப் போயிருந்தாம். லாலு மாமாவும் ஒவ்வொரு
தடவெ சுந்தரி கர்ப்பம் ஆகுறப்பல்லாம் என்னவோ பென்சிலால வரைஞ்சது தப்பாயிடுச்சுன்னு
அதெ அழிரப்பரால வெச்சி அழிச்சி வுடுறாப்புல மின்னாடி வந்து கலைச்சி வுட்டு, அப்பிடி
எல்லாத்தையும் பழக்கி வெச்சிருந்துச்சு.
இந்தப் பத்து வருஷத்துல சுந்தரி கர்ப்பம்
ஆனதெப் பத்தி வாராத பெருங்கோவம் சித்துவீரனுக்கு வந்துடுச்சு. சித்துவீரனுக்கு மட்டுமில்லே
பாலாமணிக்கும் வந்திடுச்சு. நாமளே அரைக்கெழடா ஆயி இப்பத்தாம் செய்யுவோட நிச்சயம் முடிஞ்சி
கலியாணத்துக்கு நாளு குறிச்சா இந்த நேரம் பாத்து இப்பிடி ஒரு சோதனெ வந்தா என்னத்தெப்
பண்ணுறதுன்னு அவ்வேம் முடியப் பிய்ச்சிக்கிட்டு டென்ஷனாகி நின்னிருக்காம். அப்பிடி
இப்பிடின்னு ஆஸ்பத்திரிக்கிப் போயி கலைச்சி வுட வேண்டிய ஆளுதாம் சுந்தரின்னு தெரிஞ்சாலும்,
அதெப் பத்தி சனங்களும் பெரிசா எடுத்துகிடாட்டாலும், யிப்போ பாலாமணியோட கலியாண நேரத்துல
இந்த விசயம் கொஞ்சம் வெளியில தெரிஞ்சாலும் ரொம்ப பெரிசா ஆயி, சனங்களுக்குச் சுவாரசியமா
ஆயிடுமேன்னு நெனைச்சாம் பாலாமணி. அவனுக்கு ஒரு விசயம் தெளிவா புரிஞ்சது, சுந்தரி இருக்குற
வரைக்கும் செரித்தாம் அல்லது ஆதிகேசவன் இருக்குற வரைக்கும் செரித்தாம் இது ஒரு தொடர்கதையாத்தாம்
இருக்கப் போவுதுன்னு. அந்த ரண்டுல ஒண்ணு இல்லாமப் போனதாத்தாம் இந்த விசயத்துக்கு
ஒரு முடிவு வரும்ன்னு அவனா ஒரு முடிவெ பண்ணிக்கிட்டாம்.
ரெண்டு பேத்துல யார்ரப் போட்டுத் தள்ளுறது
செரின்னு நெனைச்சப்ப பாலாமணிக்கு தங்காச்சிப் பாசம் கண்ணக் கட்டிடுச்சி. அவனுக்கும்
ஆதிகேசவனுக்கும் பெரிசா பந்தமோ ஒறவோ யில்லாததால அவனெப் போட்டுத் தள்ளிப்புடுறதாம்
செரிங்ற முடிவெ பண்ணிட்டாம். இதெப் பத்தி அவ்வேம் சித்துவீரங்கிட்டெயும், முருகு மாமாகிட்டெயும்,
லாலு மாமாகிட்டெயும் கலந்துகிட்டப்போ அவுங்களுக்குத் தாங்க முடியாத குஷி. இந்தியா
பாகிஸ்தான் எல்லை பெரச்சனையப் போல அத்துமீறி நடந்துகிட்டு இருக்குற இந்த சமாச்சாரம்
எப்பிடியே முடிவுக்கு வந்தா செரித்தான்னு அவுங்கப் பாட்டுக்கு கசாப்புக் கடையில ஆட்டெ
வெட்டுறாப்புல நெனைச்சிக்கிட்டு செஞ்சி முடிச்சிப்புடுங்கன்னுட்டாங்க.
ஒரு டாக்கடர்ரா இருக்குறவேம் கத்திய எடுத்து
ஆபரேஷனப் பண்ணலாம். கத்திய எடுத்துக் கொலையப் பண்ணா ஜெயில்லலப் போயி உக்காந்துக்கிடணும்ன்னு,
எவ்வளவோ சூதானமா இருக்குற பாலாமணிக்கு இத்து தெரியாதா என்னா? இதுக்குன்னே தொழில்முறையில
இருக்குற ஆளுகளெ ஏற்பாட்டப் பண்ணி இந்த வேலைய முடிக்க நெனைச்சாம். இந்த மாதிரி வேலைக்கான
ஆளுக பாக்குக்கோட்டையில இருந்தது வசதியாப் போச்சுது. தலைக்கு எழுவதினாயிரமோ, எண்பதினாயிரமோ
அத்தோட குவார்ட்டரும், பிரியாணியும் வாங்கிக் கொடுத்தா போதும் ஏழெட்டு பேரு காரியத்துல
எறங்கிச் சம்பவத்தெ தரமா முடிச்சிப்புடுவாங்க. அந்தக் கொலையப் பண்ணது கூலிப்படைன்னும்,
அதெ பண்ண வெச்சது இன்ன ஆளுன்னுத்தாம் விசயம் வெளியில தெரியுமே தவிர அந்தக் கொலைய இந்த
ஆளுதாம் பண்ணச் சொன்னார்ங்றதுக்கான துப்போ, ஆதாரமோ சிக்காது. ஒருவேள கூலிப்படை ஆளுங்க
மாட்டுனாலும் கொல பண்ணச் சொன்னவங்கள மாட்டிக் கொடுத்துட மாட்டாக.
கூலிப்படைக்காரங்க காரியத்துல எறங்கிட்டாங்கன்னா
அவுகளப் பத்தி யாரும் சாட்சியம் சொல்லவும் கோர்ட்டு படியேற மாட்டாக. அப்பிடி சாட்சியம்
ஏறுனவங்களோட குடும்பம் உசுரோட இருக்க முடியாது. இந்த விசயத்துல மட்டும் அப்பனெ கொன்னதெ
மவனே பாத்திருந்தாலும், அதெப் பத்தி மவ்வேன் சாட்சியம் சொல்ல மாட்டாம். சொன்னாம்ன்னா
அவ்வேம் வமிசத்தையே கருவறுத்துப்புடுவானுங்க கூலிப்படை ஆளுங்க. அப்படி கூலிப்படைய ஏற்பாடு
பண்ணி ஆதிகேசவனெ காடுவெட்டியில வெச்சிக் காலி பண்ணுனாம் பாலாமணி. கூலிப்படைக்குக் கொடுக்குறதுக்கு
அம்மாம் பணம் எங்கேயிருந்து வந்துச்சுன்னு கேட்டீயள்ன்னா நீஞ்ஞ சுப்பு வாத்தியாரு அதெ
பத்தி விகடுகிட்டெ சொல்றதெ கேட்டாவணும்.
"பாக்குக்கோட்டையான் குடும்பம் ஒண்ணும்
நல்ல குடும்பமில்லடாம்பீ! ஒட்டுமொத்த குடும்பமே சைக்கோ குடும்பம்டாம்பீ! இத்தெல்லாம்
யம்மாவையும், தங்காச்சியையும் யிப்போ சென்னப் பட்டணத்துக்கு அனுப்பி வெச்சப் பெறவுதாம்
ஒவ்வொண்ணா தெரிய வந்துச்சுடாம்பீ! உசுரோட மனுஷம் இருக்குற வரைக்கும் வுழாத லாட்டரிச்
சீட்டு அவ்வேம் செத்தப் பின்னாடி வுழுவும்பாங்களே. அப்பிடித்தாம்டா யம்பீ ஆச்சு! அவனுங்களப்
பத்தின கெட்ட சேதிங்களையெல்லாம் கலியாணத்துக்கு முன்னாடியே சொல்லிருந்தாலும் நல்லா
இருந்திருக்கும், யில்ல அவ்வே தூக்க மாட்டிக்கிட்டப்போ சொல்லிருந்தாலும் உபயோகமா
போயிருந்திருக்கும், யில்ல சென்னைப் பட்டணத்துக்கு ஓயாளயும் தங்காச்சியையும் அனுப்புறதுக்கு
மின்னாடி சொல்லிருந்தாலும் ஒதவியா இருந்திருக்கும். பாழாப் போன யோகிபாயி எல்லாம்
நடந்து முடிஞ்சப் பெறவு யிப்போத்தாம் கதெ கதெயா சொல்லுறாம் வட்டியக் கொடுக்கப் போறப்ப.
அது மட்டுமில்லடாம்பீ! நாம்ம நெனைச்சிட்டு
இருக்கோம், தங்காச்சித் தூக்கு மாட்டிக்கிட்டது வெளியில தெரியலன்னு. வெளியில விசயம்
சன்னமா கசிஞ்சிக்கிட்டேதாம் இருந்திருக்கு. வெளியில கெளம்ப கெளம்ப ஒவ்வொருத்தனும்
வெசாரிக்க ஆரம்பிச்சாம். வெசாரிச்ச எவனும் பொண்ண அவ்வேம் கூட அனுப்புனதெ சரின்னே சொல்லல.
நாம்ம நெனைச்சது கஷ்டப்பட்ட குடும்பத்துலேந்து மின்னுக்கு வந்து டாக்கடர்ராயிருக்கேன்னு.
குடும்ப கஷ்ட நஷ்டம் அவனுக்குப் புரியும்ன்னு நாம்ம எதிர்பாத்தேம். அவனுக்கு எதுவும்
புரியாதுங்றது பெறவுத்தாம் தெரிஞ்சது. யோகிபாயி அடிச்சி சொல்றாரு, படிச்சிப் படிச்சிச்
சொல்றாரு, அவனுக கொலைகாரக் கூட்டம்ன்னு.
சித்துவீரனோ வேலை பாத்த ஆசாரிமாருகள பாக்க
நேந்தப்போ அவுங்களும் சொன்னாங்க தப்பான முடிவெடுத்துப்புட்டீங்க வாத்தியாரேன்னு.
கொல பாதகத்துக்கு அஞ்சாத பயலுவோ அவனுகன்னு. தங்காச்சிக் கலியாணத்துக்கு பாஞ்சு நாளு
இருவது நாளு இருக்குறதுக்கு மின்னாடி வெண்ணாத்துல ஒருத்தெம் செத்து வடவாதி பெட்டேம்ல
ஒடம்பு ஒதுங்குனுச்சே ஞாபவம் இருக்காடாம்பீ?"ன்னு கேட்டு சுப்பு வாத்தியாரு நிறுத்துனாரு.
அதெ ஏம் யிப்போ கேக்கறாருன்னு விகடுவுக்கு
யோசனையா இருந்துச்சு. ஒடம்பு கொழகொழத்துப் போயி ஊரே நாத்தம் அடிக்கிறாப்புல ஒதுங்குன
ஒடம்பு அது. அதெ பாக்க நூறு எரநூறு ஊரு சனமும் தெரண்டுப் போயி, போலீசு வந்து சனங்கள
அடிச்சி அந்தாண்ட வெரட்டி அந்தப் பொணத்தெ அள்ளியெடுத்துட்டுப் போயி வெசாரணெ மேல வெசாரணெ
பண்ணிட்டுக் கெடந்துச்சு. அந்தப் பொணம் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிப் போயிருந்ததால,
அந்தப் பொணத்துக்குக் கண்ணு, காது, மூக்குன்ன வெச்சி சனங்களா அடையாளத்த உண்டுப் பண்ணி
பலவெதமா பேசிட்டு இருந்துச்சுங்க. சுப்பு வாத்தியாரு அப்போ கலியாண ஏற்பாட்டுல இருந்ததால
இந்த விசயத்த அவரு பெரிசா நெனைக்கல. வருஷத்துக்கு ஒரு பொணத்தெ கொண்டாந்து ஒதுக்குறது
இந்த வெண்ணாத்துக்கு ஒரு வேலையாப் போச்சுது. இந்த வருஷம் அடையாளம் தெரியாத பொணமா
கொண்டாந்து ஒதுக்கியிருக்குன்னு அப்போ நெனைச்சிட்டு இருந்தாரு. கொஞ்ச நாளுக்கு சனங்களும்
அதெப் பத்தியே பேசிட்டு இருந்துட்டு, ஆமாம் போ உசுரோட இருக்குற மனுஷனப் பத்தியே நெனைக்க
நேரமில்லன்னு, இதுல அடையாளம் தெரியாம செத்துப் போனவனெப் பத்தி இன்னம் நாளைக்குத்தாம்
பேசுறதுன்னு அதெ விட்டுப்புட்டு வேற வெசயங்கள பேசக் கெளம்பிட்டு.
அப்பங்காரரு பேசுனதெ எல்லாத்தையும் வெச்சி
ஒட்டுப் போட்டு, பஞ்சர் ஒட்டி மனசுக்குள்ள ஓட விட்டதுல, ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம்
இல்லாமல்லா பேசுதாருன்னு நெனைச்சாம் விகடு. அவரோட பேச்சுல ஒரு கோர்வை இல்லாததப் போல
இருந்துச்சு. நாலைஞ்சு நாளா யோசனெ பண்ணி பண்ணி மனசுக் கொழம்புனவரு போலல்லா பேசுறாருன்னு
அவ்வேம் நெனைச்சிட்டு இருக்குறப்பவே, சுப்பு வாத்தியாரு அவனோட பதிலெ எதிர்பாக்காம
பேச ஆரம்பிச்சாரு,
"செத்தவனோட ஒடம்பு அப்பிடியே அழுவி,
அடையாளம் காங்க முடியாம இருந்துச்சுல்லா. பெறவு அவ்வேம் ஒடம்பு யாருன்னு கண்டுபிடிக்க
முடியலன்னு பேப்பர்ல கூட வந்துச்சுல்லா. அவ்வேம் வேற யாருமில்லடாம்பீ! ஆதிகேசவங்றவேம்.
பாக்குக்கோட்டைக்கார்ரேம். அவ்வேம் யாருன்னா சுந்தரியோட தொடுப்புடாம்பீ. அந்தப்
பயலுக்கும் சுந்தரிக்கும் தொடர்பு இருக்குங்றது எல்லா பயலுக்கும் தெரியும். ஒண்ணும்
சொல்ல முடியாம கெடந்திருக்கானுவோ. அந்தப் பயெ ரொம்ப அட்டகாசம் பண்ணான்னா, சுந்தரிக்
குட்டி அவனோட ஓடிப் போவ நின்னான்னா ஏதுன்னு தெரியல. அந்த ஆதிகேசவன் பயலெ போட்டுத்
தள்ளுறதுன்னு முடிவெ பண்ணிட்டானுங்க. அதுக்கேத்தாப்புல கூலிப்படைக்குக் கொண்டுப் போயி
பணத்தெ கொடுத்திருக்கானுவோ. யாரோட பணம்ங்றே அந்தப் பணம்? நாம்ம காரு வாங்கன்னு கொடுத்த
பணமிருக்குல்லா. அதெத்தாம் கொடுத்திருக்கானுவோ. அதாங் அந்தப் பயலுவோளால கார்ரெ வாங்க
முடியல. அதெ எப்பிடி மறைக்குறதுன்னு தெரியாமத்தாம் ஆளாளுக்கு ஒரு பதிலச் சொல்லி நம்மள
சுத்தி வுட்டானுவோ. இந்தச் சம்பவம்ல்லாம் நாம்ம கார்ர வாங்க பணத்தெ கொடுத்தப் பெறவு
நடந்திருக்கு. நமக்கு ஒண்ணும் வெசயமெ தெரியலடாம்பீ!
கூலிப்படையச் சேந்தப் பயலுவோ அந்த ஆதிகேசவம்
பயெ சுந்தரி வூட்டுக்கு வந்து அதிகாலையில திரும்புறதெ நல்லா நோட்டம் வுட்டுட்டு இருந்திருக்கானுவோ.
சம்பவம் நடந்தப்போ பைக்குல வந்து திரும்பியிருக்காம். காடுவெட்டிக்கிட்டெ அவனெ வெச்சு
சம்பவத்தெப் பண்ணி, ஆத்துக்கு அடியில அரசமரத்து வேர்ல வெச்சி தண்ணியோட தண்ணியா கட்டிப்புட்டானுவோ.
ரொம்ப நாளு தண்ணிக்குள்ளே கெடந்திருக்குப் பொணம். ஒரு நாளு கட்டு அவுந்துப் போயி
ஆத்துல மெதந்து வந்து அத்து வடவாதி பெட்டேம்ல ஒதுங்கிருக்கு. இதெ கேட்ட நாளு மொதலா
நமக்குப் பக்குப் பக்குன்னே இருக்குதுடாம்பீ! இதெ எப்பிடி வெளியில சொல்றது? மேக்கொண்டு
எப்பிடி முடிவெ எடுக்குறதுன்னு புரியாமலே கெடந்தேம்டாம்பீ! இப்பத்தாம் அந்தப் பயலுகளே
சொல்லிட்டானுவோளெ! ஒந் தங்காச்சிய அழைச்சிட்டுப் போயி நெரந்தரமா வெச்சிக்கோயேன்னு.
அவனுகள சொல்லிட்டுப் பெறவு இனுமே அங்ஞ வைக்குறது செரிபட்டு வாராது. நீயி போயி அழைச்சிட்டு
வந்துப்புடு. மேக்கொண்டு நடக்குறதெ பாத்துக்கிடுவோம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
அப்பங்காரரு சொல்றதொட காரணம் அப்பத்தாம்
ஒரைச்சது விகடுவுக்கு. இப்பிடியில்லாம நாட்டுல மனுஷங்க இருப்பாங்கன்னு அவனுக்குப் பயமா
வேற இருந்துச்சு. கொன்னவனெ வெண்ணாத்துல கட்டுனவாசி கட்டு அவுந்து பேட்டெம்ல ஒதுங்கி
நாத்தமடிச்சி அது ஊரு முழுக்க தெரிஞ்சிது. அதெ போல சென்னைப் பட்டணத்துல தங்காச்சிய
வெச்சிச் செஞ்சு கூவத்துல தூக்கி வீசுனாவோன்னா, கூவத்தோட நாத்தமே பொண நாத்தாம்.
அதோட அந்த நாத்தத்துல பொணம் கெடக்குற நாத்தம் தெரியாமப் போயி தங்காச்சிய காலம் முழுக்க
தேடுறாப்புலல்ல ஆயிடும்ன்னு நெனைச்சாம் விகடு. அதெ நெனைச்சிப் பாத்து, அன்னிக்கே கெளம்புணும்ன்னு,
"ராத்திரிக்கிக் கெளம்பவாப்பா?"ன்னாம் விகடு.
"வாணாம்! பள்ளியோடத்துக்கு லீவெப்
போட்டுட்டுக் காலங்காத்தாலயே கெளம்புடாம்பீ! போனீன்னா சாயுங்காலமா சேந்துடுவே. அப்பிடியே
அழைச்சிக்கிட்டு ராத்திரிக்கித் திரும்புனீன்னா காலையில வூடு வந்துச் சேந்துப்புடலாம்.
பொண்ணுங்றது புருஷனோட சேந்து வாழ்றதுதாம் சமூகத்துல கெளரவம். யிப்போ நம்ம வூட்டுப்
போண்ணு கெளரவத்தோட வாழ்றதெ வுட உசுரோட வாழ்றதுதாம் முக்கியம். போயிச் சுருக்கா
அழைச்சிட்டு வந்துப்புடு. இதெப் பத்தி எதையும் யாருகிட்டேயும் பேசிட்டு இருக்காதே.
யம்மா, தங்காச்சிக்குக் கூட உண்மெயெ சொல்லாதே. சினிமா கொட்டகெ பங்குக்கு ரீஸ்தரு
சம்பந்தமா கையெழுத்துப் போட வேண்டிக் கெடக்குன்னு மட்டும் சொல்லு. அழைச்சிக்கிட்டுக்
கொண்டு வந்து திரும்ப அழைச்சிட்டு வந்து வுட்டுப்புடுறேம்ன்னு ஒரு வார்த்தெ மட்டும்
சொல்லு. வேற எதையும் சொல்லாதே! நீயி ரண்டு பேத்தையும் வூட்டுக்கு அழைச்சிட்டு வர்ற
வரைக்கும் நமக்குப் பக்குப் பக்குன்னுத்தாம் இருக்கும்! இனுமே அதுகள அந்தக் கொலைக்கார
பாவியோள்ட்ட வுட்டுகிட்டு நாம்ம இஞ்ஞ கோழிக்கனா கண்ட்டு இருக்கு முடியாது!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
காலையில குளிச்சி முடிச்சி மொத வேலையா
சென்னைப் பட்டணத்துக்குக் கெளம்புனாம் விகடு. கெளம்புறப்பவே போன அடிச்சிச் சொன்னாம்
செய்யுகிட்டெ, வந்த ஒடனே கெளம்புறாப்புல தயாரா இருந்துக்கிடுங்கன்னு. இவ்வேம் அப்பிடிப்
போனடிச்சு சொன்னதெ கேட்ட செய்யு, "யின்னிக்குக் காலையிலத்தாம் பாக்குக்கோட்டையிலேந்து
தாத்தாவும், யாத்தாவும் வந்திருக்கு!"ன்னு வெசயத்தெ சொன்னா. அவுககிட்டெயும் சுப்பு
வாத்தியார்ரு சொன்ன விசயத்தச் சொல்லிப்புடுவோம்ன்னு சொன்னாம் விகடு. அழைச்சாந்து
வெச்சிட்டு ஒரு வாரத்துல பாக்குக்கோட்டையிலயோ, சென்னைப் பட்டணத்துலயோ கொண்டாந்து
விட்டுப்புடறதாவும் சொன்னாம்.
"தாராளமா வந்து அழைச்சிட்டுப் போ.
நமக்கும் இதெ வெச்சிக்கிட்டுப் பக்கு பக்குன்னுத்தாம் இருக்கு. ரொம்ப சோம்பேறியா
இருக்குடா ஒந் தங்காச்சி. அழைச்சிக் கொண்டுட்டுப் போயி செரிபண்ணிக் கொண்டாந்து வுடு!"ன்னு
சொன்னிச்சு ராசாமணி தாத்தா. ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு.
அத்தோட இந்த ஒலத்துல ஏந் தாத்தா ஒன்னய வுடவா ஒரு பெரிய சோம்பேறி இருக்க முடியும்ன்னும்
மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாம்.
பகல்ல சென்னைப் பட்டணம் போறதுங்றது ஒரு
சல்லையான விசயம். பஸ்ஸூப் பாட்டுக்கு முப்பது கிலோ மீட்டரு வேகத்துலத்தாம் போவும்.
அந்தக் காலத்துலேந்து இந்தக் காலம் வரைக்கும் பஸ்ஸூக எவ்வளவோ நவீனமாயும், ரோடுக எவ்வளவோ
மேம்பட்ட பெறவும் அரசாங்க பஸ்ஸூகளோ நெலமெ இதுதாங். அதுலத்தாம் உக்காந்து தூங்கவும்
முடியாம, முழிச்சிக்கிட்டு உக்காந்திருக்கவும் முடியாம போயிட்டு இருந்தாம்.
*****
No comments:
Post a Comment