எழுதுவதன் ரசவாதம்
பேச்சுக்கும் எழுத்துக்கும் இருக்கும்
முக்கியமான வேறுபாடு சிந்தித்தல். சிந்திக்காமல் பேசி விடலாம். சிந்திக்காமல் எழுதி
விட முடியாது. அதனால் எழுதுவது என்பது மனதைச் சாந்தப்படுவத்துவதாக இருக்கிறது. கோபத்தை
எழுத எழுத எழுதி முடிக்கும் போது கோபம் கரைந்து விடுகிறது. சோகம், கவலை, விரக்தி,
எரிச்சல் என்று எல்லாவற்றையும் கரைத்து விடும் ஆற்றல் எழுத்திற்கு இருக்கிறது. இதைச்
செய்து பார்க்கும் போது உங்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இட்ஸ் எ மிராகிள்
என்று வியக்கத் தோன்றும்.
எழுத எழுத உங்களுக்குத் தெரியும் உங்களுக்குப்
பிடித்த ஒன்று என்றால் அது எழுதுவதுதான் என்பது. உண்மையில் எழுதுவதற்காக எழுதுங்கள்.
உங்களுக்காக மட்டும் எழுதுங்கள். அதில் எந்த பிற லாபமும் தேவை கிடையாது. அது சந்தை
சரக்குக் கிடையாது. உங்களுக்கான சுயலாபமாகக் கிடைக்கும் மகிழ்ச்சிப் போதுமானது. உங்கள்
மனமேன்மைக்குக் கொடுக்கும் விருந்தாக அது இருக்கட்டும்.
உங்களுடைய எழுத்து என்பது உங்களை எழுத
வைக்கும் எழுத்து. உங்களை எழுத்தாக எழுதிக் கொள்ள முடியும் என்பது ஆச்சரியமாகத்தான்
இருக்கும். எழுத எழுதத்தான் அது புரியும். உங்களை எந்த அளவுக்கு நீங்கள் புரிந்து கொள்ளாமல்
இருந்தீர்கள் என்பது அப்போது தெரியும். உங்கள் எழுத்து தாள முடியாத மன அழுத்தத்துக்கு
ஒரு வடிகால். எழுத்தின் மூலமாக நீங்கள் மீள முடியும் அதிசயத்தை பார்ப்பீர்கள். எழுத்தின்
மூலம் அமைதியைத் தரிசிப்பீர்கள். நாட்குறிப்பு எழுதுபவர்கள் நலமாக இருப்பார்கள். ஆனால்
நாட்குறிப்பு என்பது வரவு செலவு கணக்கன்று.
நீங்கள் நிஜமாகப் புரிந்து கொள்ளுங்கள்,
இந்த எழுத்து வணிகம் அன்று. இது எழுதுவதும்,
எழுதப்படுவதும் உங்களுக்காக மற்றும் உங்களுக்காக மட்டுமே. அதில் இப்பிடி எழுத வேண்டும்,
அப்பிடி எழுத வேண்டும் என்ற யாருடைய கருத்துக்கும் இடமில்லை. நீங்கள் உங்களை எழுதிக்
கொள்கிறீர்கள். உங்களைப் பற்றி என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக் கொள்கிறீர்கள். அப்படி
எழுத எழுத உங்களைப் பற்றி நீங்களே அறியாத பல ரகசியங்கள் வெளியாகின்றன. ஆகவே நீங்கள்
உங்களுடைய எழுத்தை மட்டும் எழுதுங்கள். இந்த எழுத்தில் யாருடைய பிரதிபலிப்பும் இருக்காது.
எவருடைய நடையும் இருக்காது. இது முற்றிலும் உங்களுடைய நடை. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ
அது மட்டுமே இங்கே எழுதப்படுகுறது.
நீங்கள் உங்களுடைய எழுத்தை எழுதுங்கள்.
நீங்கள் உங்களுடைய வாழ்வை வாழுங்கள். அது கூச்சமும் தயக்கமும் மிகுந்ததாகவும் இருக்கலாம்.
குறைபாடுகள், தாழ்வு மனப்பான்மைகள் கொண்டதாக இருக்கலாம். வடுக்களும் வேதனைகளும் ரணங்களும்
மிகுந்ததாக இருக்கலாம். எழுத முடியாததாகவும் இருக்கலாம். ஆனாலும் எழுதுங்கள். அது உங்களுக்கென
தரப்பட்டிருக்கும் பிரத்யேகமான எழுத்தும் வாழ்க்கையும் ஆகும். அதை நீங்கள் பணத்துக்காகவோ,
புகழுக்காவோ, வேறு ஏதேனும் ஆசைகளுக்காகவோ பலியிட வேண்டியதில்லை. மீண்டும் சொல்வதென்றால்
அது உங்களுக்கான வணிகச் சரக்காக வேண்டிய அவசியமில்லை.
உயர்ந்த எண்ணங்களால் உந்தித் தள்ளப்பட்டு
சிந்திப்பது எழுத்தில் சாத்தியமாகும். அது காலப்போக்கில் நடக்கப் போகும் மாற்றம்.
ஆரம்பத்தில் சிறுபிள்ளைத்தனமாக எழுதுவதாக நினைக்காதீர்கள். துவக்கம் எப்போதும் அப்படித்தான்.
முடிவு நிச்சயம் உயர்ந்த தன்மைதான். ஆக சிறப்பாக எழுத முடியவில்லை என்று நினைக்கவே
வேண்டியதில்லை. அதில் சிறப்பாக எழுத எதுவுமில்லை. நீங்கள் உங்களை எழுதுகிறீர்கள். அது
உங்களால் மட்டுமே எழுத முடியும்.
நீங்கள் எப்போதெல்லாம் மனதளவில் ஒரு சிறையில்
சிக்கிக் கொள்வதாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் எழுதுங்கள். எழுதுவதற்கான முக்கியமான
நேரமே அதுதான். எழுத்து அப்போது உங்களை விடுவிப்பதை உணர்வீர்கள். பல நேரங்களில் நீங்கள்
எழுத முடியாதது போது நினைக்கலாம். அப்போதெல்லாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்,
நீங்கள் உங்களை எழுதாமல் வேறொன்றை எழுதப் பிரயத்தனப்படுகிறீர்கள் என்பதை.
பல நேரங்களில் தவறான புரிதல்களிலோ, உணர்ச்சி
சிக்கல்களிலோ, குழப்பமான மனநிலைகளிலோ நீங்கள் மாட்டிக் கொள்கிறீர்கள். உங்களை அப்போது
விடுவிக்க யாரோ வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்காக யாரும் அப்போது வரத்
தேவையில்லை. நீங்கள் எழுதத் துவங்குங்கள். எழுத்து உங்களுக்கான மீட்பராக, தேவதூதரதாக
இருப்பதைக் கூடிய சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்.
சில சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களில் நீங்கள் சிக்கிக்
கொள்வது போல இருக்கலாம். அப்போது உங்களுக்கு உங்களிடமிருந்தே ஒரு விடுதலை தேவையாக
இருக்கலாம். நீங்கள் கொஞ்சம் ஓய்வை விரும்பலாம். இருக்கும் சூழ்நிலைகள் அதை உங்களுக்குத்
தராதது போலத் தோன்றலாம். ஒரே மாதிரியாக மாற்றமின்றியும், மகிழ்ச்சியின்றியும் உங்கள்
வாழ்க்கைப் போவதாக நீங்கள் நினைக்கலாம். நீங்கள் மன உளைச்சலில் இருக்கலாம், கவனச்சிதறலில்
இருக்கலாம், வெறுப்பின் உச்சத்தில் இருக்கலாம். எதுவாக இருந்த போதும் எழுத்தின் மூலம்
நீங்கள் விடுபடலாம். எழுத்து உங்களுக்கான தியானமாக இருப்பதை எழுத எழுத புரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் உங்களைப் பற்றி எழுதும் போது உங்களுக்கான தியானம் எழுத்தின் மூலம் நடந்து
விடுவதைப் புரிந்து கொள்வீர்கள்.
எந்த அளவுக்கு நீங்கள் மனதைப் போட்டு
நெருக்கியும் இறுக்கியும் வைத்திருக்கிறீர்கள் என்பதை எழுதும் போது புரிந்து கொள்வீர்கள்.
இந்த உலகில் உங்களுக்குப் புரியாத புதிராக மனம் இருப்பதாக நினைத்தால் அதைப் புரிந்து
கொள்ள உதவுவது எழுத்துதாம். உங்கள் மனதாலேதாம் நீங்கள் உங்களுக்கான இறுக்கத்தையும்
அழுத்தத்தையும் உண்டு பண்ணிக் கொள்கிறீர்கள். உங்களுக்கான மோசமான நிலையையும் நீங்கள்
மனதின் மூலமே உண்டு பண்ணிக் கொள்கிறீர்கள். எப்போதும் புறச்சூழலின் மோசமான நிலைகள்
உங்களை எதுவும் செய்து விட முடியாது. உங்கள் மனச்சூழலால் நீங்கள் உங்களை மோசமான நிலைக்குக்
கொண்டு போய் விடலாம். உண்மை இதுதான். உங்கள் மனதை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு
நீங்கள் எழுதுவது தேவைப்படுகிறது.
அமைதியான நிலையை உங்களுடைய மனதாலே சீர்கெடுத்துக்
கொள்பவர்கள்தான் நீங்கள். அதை எதுவும் செய்ய முடியாது என்று நினைக்காதீர்கள். எழுதும்
போது அதை நீங்கள் புரிந்து கொள்ளும் போது அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப்
புரிந்து கொள்வீர்கள். இந்த உலகில் தங்களையும்
சலிப்படையச் செய்து கொண்டு மற்றவர்களையும் சலிப்படையச் செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
நீ்ங்கள் அப்படி இருக்க வேண்டாம் என்று நினைத்தால் உங்களைப் பற்றி நீங்கள் எழுதுங்கள்.
சலிப்பிலிருந்து மீள எழுத்தே சர்வரோக நிவாரணி. எழுத்து ஒரு மருந்தும் கூட. அத்துடன்
எழுத்து ஒரு தரிசனமும் கூட. எழுத்து என்பது உங்களுக்கான உச்சபட்ச விடுதலையும் ஆகும்.
*****
No comments:
Post a Comment