5 Oct 2020

அழைச்சிட்டு வா தங்கச்சிய!

அழைச்சிட்டு வா தங்கச்சிய!

செய்யு - 585

            எத்தனெ நாளுக்குப் பொண்ண அனுப்புறதா சொல்லிட்டு வூட்டுலயே வெச்சிக்க முடியும்? தலைபொங்கலுக்குக் கொண்டு போயி வுடுறாப்புல வுட்டா எல்லாம் மாறிப் போயிடும்ன்னு பாத்தா அங்க போயிட்டு வந்ததுலேந்து திரும்ப போறதுக்கான மனநெலையே இல்லாம இருந்தா செய்யு. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களும் ஒண்ணும் உவப்பா வேற இல்லாம தெகப்பா இருந்துச்சு. அதுக்காகப் பொண்ண அனுப்பிச்சிடாமலும் இருந்துட முடியாது. பொண்ணுக்குப் போக மனசில்லங்றதுக்காக வூட்டுலயும் வெச்சிட முடியாது. பொண்ண அனுப்பித்தாம் ஆகணுங்றதுக்காக கல்ல கட்டிக்கிட்டுக் கெணத்துக்குள்ள குதிக்குறாப்புல குதிச்சிடவும் முடியாது. எந்தப் பக்கம் போனாலும் முட்டுறாப்புல இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு.

நாளுங்க வேற வேக வேகமா நகர, சுப்பு வாத்தியாரு முன்னாடி பாக்குக்கோட்டையில் பக்குவமா பேசி வெச்சிருந்தாப்புல சென்னை பட்டணத்துக்கு பொண்ணையும் அனுப்பி வுட்டு, கூடவே தொணைக்குப் பொண்டாட்டியையும் அனுப்பி வுட்டாரு. வூட்டுல வந்து செய்யு ஏடாகூடாம பொடவையில தூக்கப் போட்டு, வூட்டுல ஆளு இருந்து பாத்து வெச்சதால கதவெ உடைச்சிக் காப்பாத்தியாச்சு. இதெ சென்னைப் பட்டணம், பாலாமணி பாத்திருந்த வாடகை வூடுன்னா ரண்டு கேட்ட ஒடைச்சிக்கிட்டு, வெளிக்கதவை ஒடைச்சி, அதுக்குப் பெறவு அறைக் கதவெ உடைச்சி அதுக்குள்ள பொண்ணு தொங்கி உசுருப் போயிருந்திருக்கும். அதுக்காக கூடவே அம்மாக்காரியும் கூடவே யிருந்தா எதாச்சும் ஒண்ணுன்னா பாத்துப்புடலாம்ன்னு அந்த ஏற்பாடு. மாசா மாசம் மாமியாக்காரி வந்து செலவில்லாம ஓசிச் சாப்பாட்ட சாப்புட்டுப்புடுறான்னு நெனைக்காத அளவுக்கு அய்யாயிரம் காசியையும் போறப்பவே கையில கொடுத்து கொண்டு போயி வுட்டுப்புட்டு வந்தாரு சுப்பு வாத்தியாரு. அது தவுர மூவாயிரம் காசியைக் கொடுத்து மளிகெ சாமானுங்களையும் வாங்கிப் போட்டுக்கோ, நாளைக்கி குத்தம் கொறை வந்துப்புடக் கூடாதுன்னு சொல்லிப்புட்டாரு.

            ஒரு பத்து நாளு எந்தப் பெரச்சனையும் இல்லாமத்தாம் போச்சுது. அதுக்காகவே எந்நாளும் பெரச்சனை இல்லாமப் போயிடுமா? ஒரு நாளு பாலாமணியே பேச்சேடுத்தாம், "யிப்பிடியே யிருந்தா சுத்தப்பட்டு வாராது யக்கா! அவளுக்கும் பொறுப்பு வாரணும். ஒலகம்ன்னா ன்னான்னு புரிஞ்சிக்கோணும். நாம்மத்தாம் அவளெ தயாரு பண்ணணும்!"ன்னாம். மருமவென் ரொம்பப் பொறுப்போட பேசுறானேன்னு நெனைச்சிக்கிட்டு அப்பிடின்னா அதுக்கு என்னத்தெ பண்ணணுமோ அதெ பண்ணி வுடுவோம்ன்னு சொன்னிச்சு வெங்கு. அப்பிடிச் சொன்னதுதாம் சாக்குன்னு மறுநாளே பாலாமணி அஞ்சுப் பள்ளியோடத்துக்கு மெனக்கெட்டுப் போயி வெசாரிச்சிட்டு வந்தாம் செய்யுவ எப்பிடியாச்சிம் ஒரு வாத்திச்சியா அனுப்பி வுட்டுப்புடுறதுன்னு.

            "சென்னைப் பட்டணத்துல ச்சும்மா இருந்து என்ன கதைக்கு ஆவுறது? ஒரு பள்ளியோடத்துக்குப் போனா அய்யாயிரம், ஆறாயிரம் கொடுத்தா கூட ஏத்தோ ஒரு சிலவுக்கு ஆவுமே?"ன்னாம் பாலாமணி.  அப்பத்தாம் அவனோட நெனைப்புப் புரிஞ்சி ஒடனே விகடுவுக்குப் போன அடிச்சிது வெங்கு. அதுக்கு அவ்வேம் கேட்டாம், "ஏம்மா! அத்துவே இப்பத்தாம் மனநெலை சரியில்லாம கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு வருது. கொஞ்ச நாளு ஒரு ரண்டு மூணு மாசம் யிருந்து பட்டணத்துக்கு வாழ்க்கெ  பழக்கப்பட்டப் பெறவு அனுப்புனா செரிபட்டு வாரும்லா! அதுவுமில்லாம இந்த பெப்ரவரி, மார்ச் மாசத்துல எந்தப் பள்ளியோடத்துல சேத்துப்பாம்? கொஞ்சம் பொறுத்தா மே மாசம் முடிஞ்சி சூன் வர்றப்போ போனாலும் கூட வேலைக்கு ஆளு தேவைன்னு எடுத்துப்பாம். பள்ளியோடம் வருஷத்துல முக்காவாசி முடிஞ்ச நேரத்துல எந்தப் பள்ளியோடத்துல எடுத்துப்பாம்?"ன்னு கேட்டாம்.

            "அடப் போடாம்பீ! ஒமக்கு வெவரமா புரியுறது போலயா நமக்குப் புரியுது? என்னவோ கேட்டாம். நமக்கும் சரின்னு பட்டதா, இவளும் இஞ்ஞ கெடந்துட்டு இருக்குறதுக்கு இருவது முப்பது புள்ளீயோ மின்னாடி போயிக் கெடக்கட்டும்ன்னு நெனைச்சிக்கிட்டுச் சரின்னு சொல்லிப்புட்டேம். நீயி வேணும்ன்னா போனப் போட்டுச் சொல்லிப் பாரு!"ன்னுச்சு வெங்கு. இந்த விசயத்த ஆற போடக் கூடாதுன்னு ஒடனே பாலாமணிக்குப் போனப் போட்டாம் விகடு. மொதல்ல போன எடுத்தவேம், "கேஸ் பாத்துட்டு இருக்கேம். நாமளே ப்ரியானப் பெறவு அடிக்கிறேம்!"ன்னாம் பாலாமணி. செரி அவ்வேம் அடிக்கிறப்ப அடிக்கட்டும்ன்னு நெனைச்சிக்கிட்டு, அப்பிடி அடிச்சா என்னத்தெ பேசணுங்றதெ ஒரு முடிவு பண்ணிக்கிட்டாம். அதுக்கு மின்னாடி வூட்டுக்குப் போன அடிச்சி சுப்பு வாத்தியாருக்கிட்டெயும் வெவரத்த கலந்துகிட்டாம்.

            சுப்பு வாத்தியாரு எல்லாத்தையும் கேட்டு வாங்கிட்டு, "அவ்வேம் ன்னடா மனஷனா இருப்பாம்? மனசு சரியில்லாம இருக்குறப் பொண்ண அதெ சரிபண்ணி வுட்டு வுடாம, என்னவோ வேலைக்கி அனுப்புறதுக்கு நிக்கானே? நீயி என்னத்தெ பேசப் போறே?"ன்னு எதிர்கேள்வி கேட்டாரு. அதுக்கு விகடு சொன்னாம், "யிப்போ இத்து வாணாம் மச்சாம்! கொஞ்சம் பொறுத்து செஞ்சிக்கிடலாம்ன்னு சொல்றேம். வேணும்ன்னா ஒஞ்ஞ கிளினிக்குக்கு சாயுங்காலாமா அழைச்சிட்டுப் போயி வெச்சுக்கோங்கன்னு சொல்லுதேம்!"ன்னாம். செரித்தாம் அப்பிடியே சொல்லலாம்ன்னு சொல்லிட்டுப் போனை வெச்சிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            கொஞ்ச நேரம் கழிச்சி பாலாமணி விகடுவுக்குப் போன அடிச்சாம். “என்னவோ பேணும்னீயேன்னு சொன்னீயளே மச்சாம்!” ன்னாம் பாலாமணி. விகடு சொன்னாம், "தங்காச்சிய வேலைக்கு அனுப்புறதா கேள்விப்பட்டேம். அத்துச் சம்பந்தமா பேசணும்னுத்தாம் போன அடிச்சேம். யிப்போ யிந்த வேல வாணாம்ன்னு தோணுது மச்சாம். கொஞ்சம் தள்ளி வெச்சிக்கிடலாம்! நீஞ்ஞ டாக்கடர்ர யிருக்கிறதால ஆயுர்வேதா ப்யூட்டி பார்லர் போல ஒண்ணுத்தெ கூட கொஞ்ச நாளுக்குப் பெறவு ஆரம்பிச்சி அதெப் பாத்துக்கிறாப்புல செய்யுவப் பண்ணிக்கிடலாம். இப்போதைக்கு வேணும்ன்னா ஒஞ்ஞ கிளினிக்குக்கு அழைச்சிட்டுப் போயி எதாச்சிம் வேல யிருந்தா கொடுங்க!"ன்னாம் விகடு.

            "பணங்காசிக்குல்லாம் அனுப்புறதா நெனைச்சிக்கிடாதீயே! சின்னப் புள்ளீயோளப் பாத்தா மனசு மாறுங்றதால. வூட்டுலயே அடைஞ்சிக் கெடந்தா அதுவே மனசுக்கு ஒரு மாரியா இருக்கும். அதுவுமில்லாம நாம்ம ரெசியூம்லாம் தயாரு பண்ணி கொடுத்திருக்கேம். அஞ்ஞ வேலைக்குச் சேர்றதுன்னாலும் ச்சும்மால்லாம் சேந்துட முடியாது. சிபாரிசுதாங். இந்த விசயத்த நாம்ம மினிஸ்டர் மூலமாத்தாம் மூவ் பண்ணப் போறேம். அந்த மாதிரிக்கிப் பள்ளியோடத்துல வேல பாக்குறதுல்லாம் சாமானியம் யில்ல. ரொம்ப பெரிய விசயம். புரிஞ்சிக்கோங்க மச்சாம்!"ன்னாம் பாலாமணி.

            அதெ என்னத்தெ புரிஞ்சிக்கிறதுன்னு விகடுவுக்குக் கொழப்பமா இருந்துச்சு. கவர்மெண்டு வேலன்னா கூட மினிஸ்டரு சிபாரிசு தேவைப்படும். தனியாரு பள்ளியோடத்துல அய்யாயிரச் சம்பளத்துக்குல்லாம் எதுக்குடா மினிஸ்டரு சிபாரிசு? இந்தப் பள்ளியோடத்த வுட்டா இன்னொரு பள்ளியோடம். அதுவும் சென்னைப் பட்டணத்துல தனியாரு பள்ளியோடத்துக்காக கேக்கணும்?ன்னு விகடுவுக்கு மனசுல தோணுக்சு. எதையும் கேக்கல. நாம்ம பாட்டுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு கேட்டு அதுக்கு ஒண்ணு கெடக்க பதிலு வந்தா நெலமெ சங்கடமாயிடும்ன்னு நெனைச்சிக்கிட்டுப் பேயாமலே இருந்துட்டாம்.

            பாலாமணி எடுத்த முயற்சியில கொஞ்சம் கூட சளைப்பில்லாம மறுநாளே இன்டர்வியூ வரைக்கும் கொண்டாந்துட்டாம். அதெ கேட்டதுமே செய்யுவுக்கு தலைசுத்திப் போச்சு. அன்னிக்குன்னுப் பாத்து அவ்வே எழுந்ததுமே வாந்தி வாந்தியா எடுக்க ஆரம்பிச்சிட்டா. அதெ பாத்ததும் வெங்குவுக்குப் பயம் வந்துப் போச்சு. "ஏந் தம்பீ! இன்னொரு நாளைக்கி இண்டர்வியூக்கு அழைச்சிட்டுப் போறதெ வெச்சிக்கிடலாமே?"ன்னுருக்கு.

            "ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கியிருக்கேம் யக்கா! ஒமக்குப் புரியாது. யிப்போ ஒரு மாத்திரையெ தர்றேம். இதெப் போடச் சொல்லு. வாந்தில்லாம் இருந்த எடம் தெரியாமப் போயிடும்!"ன்னிருக்காம் பாலாமணி.

            ஏற்கனவெ இவ்வேம் கொடுத்த மாத்திரைகளச் சாப்புட்டு தூக்கம் தூக்கமா வந்ததால அதெ ஒவ்வொரு வேளைக்கும் சாப்புடறாப்புல எடுத்து அதெ டாய்லெட்டுல போட்டு தண்ணிய ஊத்திட்டு இருந்தா செய்யு. யிப்போ பாலாமணி மாத்திரையோட மின்னாடி நின்னதுல அதெ எப்பிடிக் கொண்டுப் போயி டாய்லெட்டுல போட்டு தண்ணிய ஊத்துறதுன்னு புரியாம, வாயிலப் போட்டு தண்ணிய ஊத்திருக்கா. ஊத்தி ரண்டு நிமிஷம் ஆனதும் பாலாமணி அழைச்சிட்டு மாடிப்படி வழியா கெளம்பிருக்காம். அவ்வேம் மேலயே வாந்திய அடிச்சி வுட்டுருக்கா செய்யு. அதுல டென்ஷன் ஆனவேந்தாம் பாலாமணி. அதுக்காக அவ்வேம் ஆரம்பிச்ச காரியத்தெ நிறுத்தல. ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம திரும்ப உள்ளார வந்து குளிச்சி முடிச்சிட்டு, டிரெஸ்ஸ மாத்திட்டுக் கெளம்புறப்போ செய்யுவுக்குத் தாங்க முடியாத தலைவலி. அதெ சொன்னா இன்னொரு மாத்திரையப் போடச் சொல்லுவானோன்ன நெனைச்சி அந்தத் தலைவலியோடப் போயி அந்த இண்டர்வியூவுல கலந்திருக்கா.

            அன்னிக்கு ராத்திரி அந்த இண்டர்வியூவெ பத்தி விகடுவுக்குப் போன அடிச்சிச் சொன்னா செய்யு. "ன்னா கேள்வியக் கேட்டாங்கன்னே தெரியலண்ணே! ன்னா பதில நாம்ம சொன்னேம்ன்னு நமக்கும் தெரியலண்ணே! ஆன்னா நம்மள செலக்ட் பண்ணிட்டாங்கண்ணே. யிப்போ சர்டிபிகேட்ட கேக்கறாங்கண்ணே. ன்னா பண்ணுறது? அவுக சர்டிபிக்கெட்டெ ஆர்குடி பஸ் ஸ்டாண்டுல சென்னைப் பட்டணத்துக்கு வர்றப் பஸ்ஸப் பாத்து அதுல இருக்குற டிவைர்ர கொடுத்து வுடச் சொல்லுறாக!"ன்னா செய்யு.

            செய்யுவோட படிப்பு சர்டிபிகேட்டெல்லாம் இங்க திட்டையிலத்தாம் இருந்துச்ச. அத்தனெ வருஷம் படிச்சி வாங்குன சர்டிபிகேட். அந்த்ச் சர்டிபிகேட்டா பஸ்ல கொடுத்து வுடுறதான்னு விகடுவுக்குக் கொழப்பமா போயிடுச்சு. சர்டிபிகேட்டுக செரியா போயிச் சேராம போனா வேற வெனையே வாணம். திரும்ப டியூப்ளிகேட்ட சர்டிபிகேட்ட வாங்குறதுக்குள்ள உசுரே போயிடும். இதெப் பத்தி சுப்பு வாத்தியாருகிட்டெ சொன்னாம். "அதெப்பிடிடா சர்டிபிகேட்டா பஸ்ல கொடுத்து வுட முடியும்? அவ்வேம் ன்னா இஞ்ஞ பாக்குக்கோட்டைக்கு வர்றாமலா போயிடப் போறாம்? அப்பிடி வர்றப்போ அஞ்ஞ வந்துக் கொடுக்கறதா சொல்லு! யில்லன்னா நாம்ம சென்னெ பட்டணம் வர்றப்போ பத்ரமா எடுத்துட்டு வர்றதா சொல்லு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            விகடு பாலாமணிக்குப் போனப் போட்டப்போ நல்ல வேளையா ஒடனே எடுத்தாம். "அத்து வந்து மச்சாம்! சர்டிபிகேட்ட கொடுத்து விட சொன்னதா சொன்னா தங்காச்சி. சர்டிபிகேட்ட பஸ்ல கொடுக்குறதுல நெறைய செருமம் இருக்கு. ஒருவேள வந்துச் சேரமாப் போயி எங்காச்சும் போச்சுன்னா செருமமா போயிடும். அத்தனெ வருஷம் படிச்சதுக்கு ஒரே அத்தாட்சி அதுதாங். ஒரு சனி ஞாயித்துக் கெழமெ வர்ற வரைக்கும் பொறுங்க. யில்ல நீஞ்ஞ பாக்குக்கோட்டெ வர்ற வரைக்கும் பொறுங்க. நேர்லயே அதெ கொடுத்துப்புடுறதுதாங் நல்லது!"ன்னாம் விகடு. அவனுக்குக் கோவம் வந்திருக்கும் போல, "ஆர்குடியிலேந்து வர்ற பஸ்ல நமக்குத் தெரியாத பஸ்ஸே கெடையாது. அதுல வேல பாக்குற அத்தனெ டிரைவரு, கண்டக்கடரும் நம்மட்ட வைத்தியம் பாத்துக்கிடறவங்க. அவுங்ககிட்டெ கொடுக்குறது நம்மகிட்டெயே கொடுக்குறதுப் போல. நேர்ரா வண்டிய நம்ம வூட்டுக்கு வுட்டுக் கொடுத்துப்புட்டுதாங் மறுவேல பாப்பாங்க!"ன்னாம் பாலாமணி.

            "யிருந்தாலும் வாணாம் மச்சாம். அவுங்களுக்கும் தேவையில்லாத செருமம். நமக்கும் அதெல்லாம் ஒழுங்கா வந்துச் சேந்துச்சா யில்லியான்னே நெனைப்பு ஓடிட்டு இருக்கும். கொஞ்சம் பொறுங்க. அதெல்லாம் ஒஞ்ஞகிட்டெ சேக்க வேண்டியதுதாங். எல்லாத்தையும் சேத்தாச்சு. இத்து ஒண்ணு மட்டும் தங்கிப் போச்சு. கொடுத்துப்புடுறேம்! ஆன்னா இந்த மொறையில வாணாம்!"ன்னாம் விகடு. பாலாமணி அதுக்கு ஒண்ணும் சொல்லாம சட்டுன்னுப் போன வெச்சிட்டாம். விகடுவுக்கு ஒரு மாரியா போயிடுச்சு. விகடு மறுபடி அடிக்கிலாம்ன்னு பாத்தாம். கொஞ்சம் கொழப்பமாவும் இருந்துச்சு அவனுக்கு. அதுக்குக் கொஞ்சம் யோசனெ பண்ணிட்டு இருந்த நேரத்துல ராசாமணி தாத்தா போன அடிச்சிது, "ஏம்டா பேராண்டி! சர்டிபிகேட்டெ கொண்டாந்து பஸ்ல கொடுக்கச் சொன்னா கொடுக்க வேண்டித்தானே. ன்னவோ கொடுக்க முடியாது அத்து இத்துன்னு பெரச்சனெ பண்ணுறீயாமே! கொடுக்குறதா யிருந்தா கொடு. யில்லன்னா ஒந் தங்காச்சியா அழைச்சிக்கிட்டுப் போயிடு. அப்பிடி ஒண்ணும் ஒந் தங்காச்சிய வெச்சி வாழ வைக்கணுங்ற அவ்சியம் யாருக்குமில்ல. நீஞ்ஞத்தானேடா வந்து கெஞ்சுனீங்க என்னவோ பொண்ணுத் தூக்குல தொங்கச் போச்சு அத்து இத்துன்னு. எந்த ஊர்லடா நடக்குது பொண்ணையும் கொண்டாந்து வெச்சு பொண்ணோட அம்மாக்காரியையும் கொண்டாந்து வெச்சு?"ன்னு காட்டமா பேசுனுச்சு.

            விகடுக்கு ராசாமணி தாத்தாவோட பேச்சு சுருக்குன்னு இருந்துச்சு. அவ்வேம் பாலாமணிகிட்டெ பேசுனதெ சொல்லித் தம் பங்குக்கான வெளக்கத்தைச் சொன்னாம். அதையெல்லாம் ஏத்துக்கிற மனநெலையில ராசாமணி தாத்தா யில்ல. அத்து சொன்னதையே சொல்லிக்கிட்டு இருந்துச்சு. "யின்னிக்கு ராத்திரி பஸ்ல சர்டிபிகேட்டுக கொடுத்து நாளைக்கி சென்னைப் பட்டணம் போயிச் சேரணும். மினிஸ்டரு சிபாரிசெல்லாம் வெச்சி வேலய வாங்கிருக்காம். அப்பிடி யில்லன்னா  ஒந் தங்காச்சி நாளைக்கி வேலையில சேர முடியாது. அப்பிடி அவ்வே வேலையில சேரலன்னா அவ்வே அஞ்ஞ இருக்க வாணாம். ன்னா முடிவுங்றதெ நீயும் ஒங்கப்பனும் கலந்து முடிவெ பண்ணிக்கிடுங்க!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அவ்ளவுதாம். அதுவும் சட்டுன்னு போன வெச்சிடுச்சு. அதெ கேட்டு முடிச்ச விகடுவுக்கு நடுக்கமா இருந்துச்சு. இதெ பத்தி மேக்கொண்டு விகடு சுப்பு வாத்தியார்கிட்டெ சொல்லல. அவரு இந்த சர்டிபிகெட் வெவகாரம் பேசுனதுல ஏதோ முடிஞ்சிட்டதா நெனைச்சிக்கிட்டாரு. அதே நேரத்துல நடந்ததெ எப்பிடிப் போயி யப்பங்காரர்கிட்டெ சொல்றதுங்ற யோசனையிலயே ரண்டு நாளைக்குக் கொழப்பமாவே இருந்துச்சு விகடுவுக்கு. அவ்வேம் நெனைச்சாம் இந்த வெசயத்த ஆறப் போட்டா செரியா போயிடும்ன்னு. ஆறப் போடணும்ன்னு நெனைச்சாலும் அவனால சரியா சாப்புட முடியல, சரியா தூங்க முடியல. தவியா தவிச்சிட்டுக் கெடந்தாம். ஆயி அதெ கண்டுபிடிச்சிட்டா. அவ்வே இதெப் பத்தி மாமானருட்டச் சொன்னா. அவரும் இப்பிடில்லாம் இருக்குற ஆளில்லன்னு நெனைச்சாரு. ஆனாலும் அவருமே அப்பிடித்தாம் இருந்தாரு. சரியா சாப்புடாமா, தூங்காம எதையோ பறி கொடுத்தவரு போல. ஒரே நேரத்துல அப்பனும் மவனும் ஏம் இப்பிடி இருக்காகன்னு ஆயிக்குக் கொழப்பமா இருந்துச்சு.

            விகடு தன்னோட மனசுல இருக்குறதெ சுப்பு வாத்தியாருகிட்டெ சொல்லல. சுபபு வாத்தியாரு தன்னோட மனசுல இருக்குறதெ மவ்வேங்கிட்டெ சொல்லல. ரண்டு பேத்தோட மனசுலயும் இருந்த விசயங்க அப்பிடியே இருந்துச்சு. எத்தனெ நாளுதாம் அதெ மனசுல வெச்சிக்கிட்டெ சரியா தூங்காம, சாப்புடாம இருக்க முடியும். இந்தச் சர்டிபிகேட் வெவகாரம் எப்படியெல்லாம் பத்தி எரியப் போவுதோன்னு விகடுவுக்கு நாளுக்கு நாளு பயமா வேற இருந்துச்சு. திடீர்ன்னு ஒரு நாளு போன அடிச்சி அம்மையையும், தங்காச்சியையும் அழைச்சிட்டுப் போங்டான்னு சொல்லிடுவாங்களோன்னு.

            ஒரு நாலு நாளு பொறுத்துப் பாத்தாம். போற போக்க பாத்தா ஒரு வேலையும் புரியாமப் போயிடும் போல இருந்துச்சு எது நடந்தாலும் பரவாயில்லன்னு அப்பங்காரரு ராத்திரிச் சாப்புட்டு இருந்த நேரத்துல, ராசாமணி தாத்தா எதாச்சிம் சொன்னா, ஒடனே அடிக்கடி தங்காச்சிய அழைச்சிட்டுப் போன்னு சொல்றதெ சொல்லி டப்புன்னு வெடிச்சி முடிச்சாம்.

            சுப்பு வாத்தியாரு சரியா சாப்பாட்ட சாப்புட்டு முடிச்சிருந்தாரு. அவரு யோசிச்சுச் சொன்னாரா, யோசிக்காம சொன்னாரான்னு தெரியல, "போயி தங்காச்சிய அழைச்சிட்டு வாடா! பாத்துப்பேம்! அவனுவோ வுட மாட்டானுவோ! சினிமாகொட்டகெக்குப் பக்கத்துல இருக்குற நெலத்தோட ரீஸ்தரு செய்யு வந்தாத்தாம் முடியும்ன்னு சொல்லி, அதுக்குக் கையெழுத்தப் போடணும்ன்னு கொண்டா பாத்துப்பேம். வேற ஒண்ணுத்தையும் சொல்லாதே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            விகடுப் போக தயங்குனாம். நாம்ம சொன்னது இம்மாம் கோவத்த அப்பங்காரருக்கு உண்டாக்குமுன்னு அவ்வேம் நெனைக்கவே யில்ல. அவசரப்பட்டு கோவத்துல எந்த முடிவையும் எடுக்க வாணாம்ன்னாம். அதுக்கு சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "அவ்சரத்துல கோவத்துல எடுக்கலடா இந்த முடிவெ! ஒரு வார காலமாவே யோஜிச்சுட்டுத்தாம் இருந்தேம்! யோஜிச்சு எடுத்த முடிவுதாம்! நீயி போயி அழைச்சிட்டு வர்ற வழியப் பாரு. நீயி போவலன்னா சொல்லு, நாம்ம போறேம். இதுக்கும் மேல அஞ்ஞ வுட்டு வைக்கக் கூடாது. ஒந் தங்காச்சியோட உசுருக்கு ஆபத்துடா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நீஞ்ஞ என்னத்தெ சொல்லுதீயேன்னு புரியலயே யப்பா?"ன்னாம் விகடு.

*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...