27 Oct 2020

ஆறுதல் சொல்ல வந்த புண்ணியவதிகள்!


 ஆறுதல் சொல்ல வந்த புண்ணியவதிகள்!

செய்யு - 607

            செய்யு கொஞ்சம் தெளிஞ்சு வந்தாப்புல இருந்தது மூணாவது பஞ்சாயத்தால மாறிப் போச்சுது. அவளுக்குத் திரும்பவும் பதற்றமும், நடுக்கமும் வந்துடுச்சு. திரும்பவும் அவ்வே காட்டுக்கத்தலா கத்துறதும், தன்னெத் தானே அடிச்சிக்கிறதும்ன்னு ஆரம்பிச்சா. “இந்த ஊருக்கார பயலுவோலுக்கு நாம்ம நல்லா இருக்குறது பிடிக்காதா? ஏத்தோ வுழுந்துட்டோம்ன்னு கொஞ்சம் தத்தித் தடுமாற எழும்பி நின்னா திரும்பவும் பிடிச்சி ஏம்டா எழுந்தேன்னு தள்ளி வுடுறானுவோளே!”ன்னு வெங்கு தேம்பித் தேம்பி அழுதுச்சு. வெங்கு இப்பிடின்னா செய்யு, "சித்துவீரனோ கையி, கால ஒடைச்சி ஏம் அனுப்பல? பேசுனவனுங்களோட நாக்கையல்லாம் ஏம் அறுக்கல? அவனுங்க அடி ஒதைக்குத்தாம் பயப்படுவானுங்க!"ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தா. அவ்வே இப்பிடிச் சத்தம் போடுறதெ தடுக்க முடியல. ஒரு நாளுக்கு நூத்து மொறே, எரநூத்து மொறென்னு இதெயெ சொல்லிக்கிட்டுக் கெடந்தா. ஆளாளுக்கு எதையெதையோ சொல்லி சமாதானம் பண்ண பாத்தா சமாதானம் ஆவுறாப்புல தெரியல. நெலமெ ரொம்ப சிக்கலாத்தாம் இருந்துச்சு. இதுல ஒரே ஆறுதல் என்னான்னா எதுவும் பேசாம இருந்து சாப்புடாம கெடந்து பெரக்ஞை எழந்துப் போயி ரண்டாவது பஞ்சாயத்துல ஆனாப்புல ஆயிடாம, ஏத்தோ இப்பிடிச் சத்தம் போட்டுக்கிட்டாவது கெடக்குறாளேங்றதுதாம்.

            "அவனுகள அடிக்கணும்ன்னே போயாச்சு. யண்ணனும் அந்த முடிவோடத்தாம் வந்துட்டாம். நெலமெயப் புரிஞ்சிட்டு ஓடிப் போயிட்டானுவோ. அந்த நேரம் பாத்து கரண்டு வேற போனதுல ஒண்ணும் புரியாமப் போயிடுச்சு. ஒண்ணும் புரியல. மொத்தத்துல நம்ம ஊர்ல வந்து பஞ்சாயத்துப் பேசுனதுல ஒரு பயலும் நிக்காம ஓடிட்டாம்! அவ்வளவுதாங் வுடு!"ன்னு செய்யுகிட்டெ திரும்ப திரும்ப சுப்பு வாத்தியாரு சமாதானத்த சொல்லிட்டு இருந்தாரு. அவரோட மனசுக்குள்ளயும் இந்த மூணாவது பஞ்சாயத்தப் பத்தி நல்ல வெதமான எண்ணங்க ஓடல. இதுக்குப் பின்னாடி ஏதோ ரொம்ப பெரிய சதித்திட்டம் இருக்குறாப்புலயே அவரோட மனசுக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு. அதே நேரத்துல யிப்போ ஊருக்கார பெரிசுகளுக்கும் கொஞ்சம் பயம் வந்திருச்சு. விகடு பாட்டுக்குக் கட்டப்பஞ்சாயத்துன்னு எங்கயாச்சும் போயி பிராது பண்ணிடுவானோன்னு. ஆன்னா விகடு அந்த அளவுக்கெல்லாம் போவல. அவ்வேம் அத்தோட அதெ விட்டதோட செரி. இனுமே பஞ்சாயத்துன்னு யாரு வூட்டுப்பக்கம் வராம யிருந்தா போதும்ன்னு இருந்தாம். ஒருவேள எவனாச்சியும் மறுக்கா பஞ்சாயத்துன்னு வந்தா புகாரோட கௌம்பிடணும்ன்னு இருந்தாம். 

            கிராமத்துலேந்து யாரையும் வூட்டுக்கு வரக் கூடாதுன்னு விகடு சொன்னதுக்காக கிராமத்துலேந்து யாரும் வாராம யில்ல. தம்மேந்தி ஆத்தா, அம்மாசிக் கெழவின்னு பொண்டுக வந்துப் பாத்துப் பேசுனுச்சுங்க. விகடு ஒண்ணும் சொல்லல. அவ்வேம் பாட்டுக்கு மெளனமா இருந்தாம். அதெப் பாத்துப்புட்டு அவ்வேம் பேசுனதுல ஒண்ணும் தப்பு இல்லங்ற மாதிரி வந்துப் பாத்த சனங்க சொன்னிச்சுங்க.

            "இந்த ஊருப் பயலுவோ பஞ்சாயத்தே அப்பிடித்தாம்! வழுக்குனாப்புல வழுக்கிப்பானுங்க. கவுத்து வுடுறாப்புல கவுத்து வுட்டுப்புடுவானுங்க. ஒரு குடும்பத்துக்கு எப்போ பெரச்சனெ வரும்? அந்தக் குடும்பத்தெ பஞ்சாயத்துல நிறுத்தி கருவறுக்கலாம்ன்னு நிப்பானுங்க. அவனுவோ பசிக்கு ஒஞ்ஞ குடும்பம் ஆளாயிடுச்சு. இதெல்லாம் நெனைச்சிக்கிட்டுதாம் எந்தப் பெரச்சனையா இருந்தாலும் சரித்தாம் சண்டைக்கார்ரேம் கால்லயே போயி வுழுந்துடுறது. பஞ்சாயத்துக்கார்ரேம் கால்ல வுழுறதுக்கு அத்து எவ்வளவோ நல்லது! நாமளும் இந்த ஊருக்கு கட்டிக்கிட்டு வந்த நாளு மொதலா பாத்தாச்சு. இவனுங்க இப்பிடித்தாம். வாழவும் வுட மாட்டானுங்க. சாவவும் வுட மாட்டானுங்க. ரண்டுக்கும் எடையில வெச்சி பைத்தியம் பிடிக்குறாப்புல பண்ணி வுட்டுப்புட்டு வேடிக்கெ பாப்பானுங்க!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            அம்மாசிக் கெழவி இன்னொரு விசயத்தச் சொன்னிச்சு. "யம்பீ! ஊரு முழுக்க ராத்திரியிலேந்து இதாங் பேச்சா கெடக்குது. அவ்வேம் சொட்டெ கண்ணுராசு பயெ ஒம சம்பந்திக் குடும்பத்துக்கிட்டெயிருந்து பணத்தெ வாங்கிட்டுத்தாம் இந்தப் பஞ்சாயத்தெ வெச்சி வுட்டதா. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அந்தப் பயெ பணத்தெ வாங்கிருக்காம். வாங்குனதோட யில்லாம இஞ்ஞ நடக்குறது அத்தனையையும் போனப் போட்டு சொல்றதுதாம் வேலைன்னு கெடந்திருக்காம். அந்தப் பயெ மட்டுமில்ல, பட்டறைக்கார்ரேம் பட்டாமணிக்கும் இதுல தொடர்பு இருக்குறதா பேசிக்கிறாங்க. அந்த ரண்டு பயலுக்கும் நேத்தி ரண்டாயிரம் ரூவா பணம் பைசல் ஆயிருக்கு ஒஞ் சம்பந்திக் குடும்பத்துலேந்து. விசயம் என்னான்னா மெரட்டுறாப்புல பஞ்சாயத்துல வெச்சி மெரட்டி அசிங்கமாப் பேசுனா அதுக்கு யோஜனெ பண்ணி உணர்ச்சிவசப்பட்டு டக்குன்னு பொண்ண அனுப்பிப்புடுவேன்னு கணக்கெ போட்டுருக்கானுவோ. அப்படி பொண்ண அழைச்சிட்டுப் போவ நெனைக்குற பயலுவோ மொறையா வூட்டுல வந்து பேசுனா அனுப்பி வுடாமலா போவப் போறேம்? ஏம் அதுக்கு இந்தக் கூத்த கட்டி அடிக்கிறானுவோளோன்னு தெரியல!"ன்னுச்சு அம்மாசிக் கெழவி.

            "பொண்ண அனுப்பணும்ன்னுதாம் ஆரம்பத்துலேந்து நமக்கும் நெனைப்புன்னு வெச்சிக்குங்களேம்.  ஆன்னா அதுக்குண்டான மொறையோட அனுப்பணும்ன்னு நெனைச்சிட்டு இருந்தேம். இவனுவோ பண்ணுனதப் பாத்து அத்தோட எம் பொண்ணு புத்திக் கெட்டுப் போயி நின்னதப் பாத்த பெற்பாடு அனுப்பக் கூடாதுங்ற முடிவுக்கு வந்துப்புட்டேம். அந்தப் பயலுவோளுக்கு பொண்ண அழைச்சிட்டுப் போவணும்ன்னுல்லாம் மனசார நெனைப்பு ஒண்ணும் கெடையாது. பொண்ணு வாண்டாம்ன்னு சொல்லிப்புட்டா பணத்தையும், நகையையும் ஒடனடியா கொடுத்தாவணும். அத்தெ அவனுவோளால கொடுக்க முடியாது. பணத்தெ செலவு பண்ணிருப்பானுவோ. நகைய அடவு வெச்சிருக்கானுவோளா, வித்துப்புட்டான்னுவோளான்னு தெரியல. அதுக்கு யோஜன பண்ணிக்கிட்டுத்தாம் பொண்ண அழைச்சிட்டுப் போறேம்ன்னு பேரு பண்ணிட்டு நிக்குறானுவோ. அழைச்சிட்டுப் போறாப்புல போயி ஒண்ணும் பைத்தியம் ஆக்கிப் புடுவானுவோ. யில்ல கொன்னுப்புடுவானுவோ. அதுக்கா நாம்ம பொண்ண பெத்து வளத்தேம்? கிளிய வளத்து கோட்டாங்கிட்டெ கொடுத்தாப்புல ஆச்சு நம்ம நெலமெ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நீஞ்ஞ சொல்றது சரித்தாம்பீ! அப்பிடித்தாம் சனங்களும் பேசிக்குதுங்க. மெரட்டுறாப்புல மெரட்டி அழைச்சிட்டுப் போயிடணும்ன்னுத்தாம் நின்னுருக்கானுவோ. நீயி யிப்பிடி கோதாவா எறங்குவோன்னோ, பைய இப்பிடிப் பண்ணுவான்னோ யாரும் எதிர்பாக்கல. அதெ கண்டு மெரண்ட பயலுவோதாம் ஓட்டத்தெ பிடிச்சிட்டானுவோ. இதெ மொத பஞ்சாயத்துலயே பண்ணியிருந்தீயேன்னா இந்த கதிக்கு வந்திருக்காது நெலமெ! வேகப்பட்டு அருவாளா தூக்காத வரைக்கும் இவனுங்க அடங்காம சொல்றதையேத்தாம் சொல்லிட்டு இருப்பானுவோ. இனுமே எவ்வேம் வந்து சொல்றான்னு பாரேம்? ஒரு பய வர மாட்டாம்!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா.

            "பொண்ட அனுப்ப இஷ்டமில்லன்னா வுட்டுப்புடுங்க யம்பீ! அதாலயும் ஒண்ணும் தப்பு ஆயிடப் போறதில்ல. கலியாணத்தக் கட்டிக் கொடுத்தப் பெறவும் நம்மட பொண்ணு அஞ்ஞ இருக்கணுமா, கூடாதங்ற முடிவெடுக்குற உரிமெ நமக்கு இருக்கு. நம்ம பொண்டு அஞ்ஞ நல்லா இருக்காதுன்னு நமக்குத் தெரிஞ்சா அழைச்சாந்து வெச்சி நாம்ம காபந்து பண்ணுறதுல ஒண்ணும் தப்பெ யில்ல. அந்தப் பயலுந்தாம் பொண்டாட்டிய வுட்டுக் கொடுக்காமல்லா வெச்சிருக்கணும். கட்டிட்டுப் போனவேம் பொண்டாட்டிக்கு பொறந்து வூட்டு நெனைப்பே தெரியாத அளவுக்கு வெச்சிக்கிடணும். அவ்வேந்தாம் புருஷங்கார்ரேம். அந்தப் பயெ ன்னான்னா பஞ்சாயத்துலயே ஒறவுமொறைகளோட பொண்டாட்டிய தொடர்பு பண்ணி கள்ளத்தனம் கற்பிக்குறதால்லா கேள்விப்பட்டேம். நம்ம ஊர்லயே வந்து நம்ம மக்காகிட்டெயே இப்பிடிச் சொல்றவங்கிட்டெ நாம்ம அனுப்பி வெச்சா நாளைக்கு என்னா மாதிரியான கதையெல்லாம் கட்டுவாம்? வாணாம்பீ! அவ்வேங் கூட அனுப்பி வைக்காத வரைக்கும் நல்லது! இதெயெல்லாம் இந்த பஞ்சாயத்துக்காரப் பயலுவோ யோஜனெ பண்ண வேண்டியதில்லா? என்னவோ அவனுவோ பாட்டுக்கு அவனுவோ பண்ணுறதாங் சரிங்ற மாரில்லா நடந்துக்கிறானுவோ? இனுமே இந்த ஊர்ல அந்தப் பயலுவோ பஞ்சாயத்துன்னு வைக்க நிக்கட்டும்! நாமளே காறி மூஞ்சுல துப்புறேம். நம்ம ஊரு பொண்ணு, நம்ம ஊரு பஞ்சாயத்துங்றப்போ எப்பிடி நடந்துக்கிடணும்ன்னு தெரியாத மண்ணாங்கட்டிப் பயலுவோம்பீ இவனுவோ! இந்த மாதிரிக்கி நாம்ம போயி அவனுவோ ஊர்ல ஒரு பஞ்சாயத்தப் பண்ணிட்டு வந்துப்புட முடியுமா? இதெல்லாம் யாருக்கும் அசிங்கங்றீயே? அந்தப் பயலுவோக்குத்தாம்! இனுமே அந்தப் பயலுவோ பஞ்சாயத்துன்னு ஒண்ணுத்தெ வெச்சா ஊர்ல எவ்வேம் மதிப்பாங்றீயே? ஒரு பயலும் மதிக்க மாட்டாம். போங்கம்பீ பாத்துப்போம்! பஞ்சாயத்துல அப்பிடிப் பேசி அந்த பயலுவோள தெறிக்க வுட்ட வரைக்கும் செரித்தாம்! இனுமேலாவது அடங்கி ஒடுங்கி உக்கார்றானுவோளான்னு பாப்பேம்!"ன்னுச்சு அம்மாசிக் கெழவி.

            "அவனவனுவோ பண்ணுற பாவத்தெ அவனுங்களே அனுபவிச்சிக்கிட்டும். நாளைக்கி நம்ம வூட்டுல நடந்த மாதிரிக்கி ஒண்ணு அவனுவோ வூட்டுல நடக்காதுன்னு நெனைச்சிக்கிட்டுக் கெடக்குறானுவோ! நம்மட வவுறு இன்னிக்கு எரியு மாதிரிக்கி நாளைக்கு அவனுவோ வூட்டுலயும் ஒண்ணு நடக்கத்தாம் போவுது. யப்போ தெரியும் இதெல்லாம் எம்மாம் வாதனைன்னு? எம் மவ்வேம் எத்து நடந்தாலும் செரித்தாம் ஒரு வார்த்தெ பேச மாட்டாம். அவனேயே இப்பிடிப் பேச வெச்சிப்புட்டானுவோளே?"ன்னு அழுதுச்சு வெங்கு.

            "அதாம்டி வெங்கு விசயம்! அவ்வேம் மட்டும் நேத்திக்கு அப்பிடிச் சத்தத்தெ போடலன்னா ஒம் புருஷனெ அடிக்க வுட்டுப்புட்டெ வேடிக்கெ பாத்திருப்பானுவோ. இத்து யம்பீ ஏம் இத்து மட்டும் பஞ்சாயத்துக்குப் போவுது? தப்பு அதெல்லாம். பஞ்சாயத்துன்னு வந்தப் பெறவு நம்ம வூட்டுல இருக்குற தடிப்பயல நாம்ம கூட்டிட்டுப் போவணும். நாமளும் நாலு தடிப்பயல கொண்டாந்து நமக்குப் பாதுகாப்பா நிறுத்திக்கிடணும்!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா.

            "இந்தக் கதெ முடிஞ்சா அடுத்த கதெயெப் பாருங்க யம்பீ! ன்னா இதல்லாம் ஊரு ஒலகத்துல நடக்காததா? கிராமத்துலத்தாம் ஒண்ணு ரண்டுன்னு நடக்குது! டவுனுப் பக்கம் போயி பாருங்க! இதெ வேலையத்தாம் கெடக்குது. தூக்கிப் போட்டுட்டு அடுத்து ஆவ வேண்டியதப் பாக்குதீயளா? பொண்ணு எந்த வூட்டுல இருக்குறதோ அந்த வூடுதாம் இந்த விசயத்துல நல்லா இருக்கும். பொண்ண வுட்டுப்புட்டவேம் வூடு பொகைஞ்சித்தாம் போவும். அவனுவோ கண்ணவிஞ்சித்தாம் போவானுவோ படுபாவிப் பயலுவோ! நம்ம ஊருப் பொண்ண வெச்சி வாழ முடியலன்னா அவனுவோ எந்த ஊருப் பொண்ண வெச்சிம் வாழ முடியாது. இவ்வே ன்னா ராசாத்தீ! கட்டிக்க ஆயிரம் பேரு வருவாம் போ! அந்தக் கெழட்டுப் பயல கட்டிக்கிடன்னா ஒரு கெழட்டுச் சிறுக்கிக் கூட வர்ற மாட்டோ போவீயா! அந்தப் பயலுக்குக் கெட்ட நேரம் நெருங்கிடுச்சு யம்பீ! அவ்வேம் அழியப் போறாம். அதாங் அவ்வேம் புத்தி இந்த மாதிரிக்கி வேல செய்யுது. எம்மாம் தெகிரியம் யிருந்தா நம்ம ஊருப் பயலுவோள கையிலப் போட்டுக்கிட்டு, பஞ்சாயத்துன்னு ஒண்ணுத்தெ வைக்குறாப்புல வெச்சி நம்ம ஊருக்கே வந்து நம்மள மெரட்டிட்டுப் போவாம்? நம்ம ஊருப் பயலுவோ செரியில்ல யம்பீ! குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் நாக்கத் தொங்கப் போட்டுட்டு கெடக்குற பயலுவோ! இன்னிக்கு யாரு குவார்ட்டர்ர வாங்கிக் கொடுக்குறானுவோளோ அவனுக்கு கொடலத் தொங்கப் போட்டுக்கிட்டுப் பேசுவானுவோ! அதுவும் அந்த பட்டாமணி பயெ இருக்காம் பாரு! எமகாதகப் பயெ!"ன்னு பட்டறைக்கார்ரேம் பட்டாமணி கதெயெ சொல்ல ஆரம்பிச்சிது தம்மேந்தி ஆத்தா.

            இங்க ஊருக்குள்ள ஒவ்வொருத்தருக்கும் வெளியில தெரியாத ஒரு கதெ இருக்கும். அந்தக் கதெ கெராமத்து பழங்கட்டைகளுக்கு மட்டுமே தெரிஞ்ச கதெயா இருக்கும். ஒரு காலத்துல அந்தக் கதெயப் பத்தியே பேச்சா இருந்திருக்கும். கால ஓட்டம் பல விசயங்கள ஓட வுடுறப்போ அந்தக் கதெ மறதியில தேய்ஞ்சி மறைஞ்சிப் போயிருக்கும். வைரம் பாய்ஞ்ச கட்டைய தேய்ச்சி மறைக்குறதுங்றது சாமானியமுல்ல. அப்பிடித்தாம் கெராமத்து பழங்கட்டைகளோட ஞாபவத்துலேந்து நடந்த ஒரு சம்பவத்துக்கான நெனைப்ப அழிக்கிறதும். அத்து கல்வெட்டப் போல அதுகளோட மனசுல பதிஞ்சிருக்கும். கால ஓட்டம் அந்தக் கல்வெட்டையெல்லாம் ஒண்ணும் பண்ட முடியாது. யிப்போ அந்தக் கால ஓட்டத்தைத் தேக்கி வைக்குற சக்தி அந்தக் கல்வெட்டுக்கு இருக்குங்ற மாதிரிக்கு இருந்துச்சு தம்மேந்தி யாத்தா பேசப் பேச.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...