1 Oct 2020

பிரிச்சி வெச்சிடுவோமா?

பிரிச்சி வெச்சிடுவோமா?

செய்யு - 582

            சுப்பு வாத்தியாரு சேத்து வெச்சிடணுங்ற முடிவுக்கு வந்திருந்தாரு. காலங்காத்தால விடியங்காட்டியும் நல்லா குளிச்சி முழுவிட்டு பூவும் பொட்டுமா சுந்தரி வந்துச்சு. நடந்துதாம் வந்துச்சு. வூட்டுலேந்து அம்புட்டு தூரம் நடந்தா வந்துச்சுங்ற சந்தேகத்துல கேட்டப்போ, சித்துவீரன் அதெ வாள்பட்டறை வரைக்கும் கொண்டாந்து வுட்டதாவும், பக்கத்துலேந்துதாம் நடந்து வர்றதாவும் சொன்னுச்சு. வாள்பட்டறெ வரைக்கும் வந்த சித்துவீரன் பக்கத்துல இருக்குற வூட்டுப்பக்கம் ஏம வரலன்னு ஒரு யோசனெ வந்தாலும், இப்போ சுந்தரி ஏதோ முக்கியமான விசயம் பேசத்தாம் வந்திருக்குங்றது எல்லாத்துக்கும் புரிஞ்சது. அது புரிஞ்ச மாதிரி சுப்பு வாத்தியாரு கொல்லக் கடைசியில போட்டு வெச்சிருந்த கீத்துக் கொட்டாய்க்கு எல்லாம் போயாச்சு. கொஞ்ச நேரம் வரைக்கும் அமைதியா இருந்த சுந்தரி பேச ஆரம்பிச்சிது.

            "சம்பவத்தெ கேள்விப்பட்டெம். ரொம்ப வருத்தமாப் போச்சு. அதாங் பாத்துட்டுப் போவலாம்ன்னு வந்தேம். யாரும் எதுவும் தப்பா நெனைச்சிக்கப்படாது. ராத்திரி முழுக்க யாரும் தூங்கல. இதெப் பத்திதாம் ஒருத்தருக்கொருத்தரு போன்ல பேசிட்டுக் கெடந்தேம். எல்லாத்துக்கும் பொதுவா தோணுன ஒரு அபிப்ராயமா இனுமேலும் சேந்திருந்தா நல்லா இருக்காதுங்றது போல தோணுச்சு. அதாங் அத்து சம்பந்தமா பேசிட்டு வான்னு எல்லாமும் சொன்னுச்சுங்க. அதாங் பாத்துப் பேசிட்டுப் போவலாம்ன்னு வந்திருக்கேம்!"ன்னுச்சு சுந்தரி.

            வெட்டி வுடுறது சம்பந்தமா சுந்தரி பேச வந்திருக்கிறது புரிஞ்சிது. அதையும் எடுத்த எடுப்புலயே பேசிட்டு மித்தவங்களோட பதிலுக்காக அத்து காத்திருந்துச்சு.

            "கலியாணம் ஆயி மூணு மாச காலம் கூட ஆவலியே! அதுக்குள்ள இப்பிடிப் பேசுனா எப்பிடி?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆரம்பத்துலயன்னா யாருக்கும் எந்தப் பெரச்சனையும் யில்ல. மொகம் முறிஞ்சிப் போறதுக்கு மின்னாடி செஞ்சிக்கிட்டா எல்லாத்துக்கும் நல்லது. யப்பா பேசுனப்போ கூட நகெ நட்டு, காருக்குன்னு வாங்குன பணத்தையல்லாம் கொடுத்துப்புடலாம். சுமூகமா விவாகரத்தெப் போட்டு முடிச்சிக்கிடலாம்ன்னு சொன்னுச்சு!"ன்னுது சுந்தரி.

            "அத்து ன்னா? ஓம் வயசு ன்னா? எடுத்த எடுப்புலயே வெட்டி வுடுறது, வெவாகரத்துன்னு பேசுதீயே? ஒம்மட வூட்டுல நடக்காத கேடு கெட்டதா எம்மட வூட்டுல நடந்துட்டு? எம் போண்ணு எந்த வூடு மேயப் போனா? எந்த ஆஸ்பத்திரியில கர்பத்த கலைச்சா? நீயிப் பாத்தியா? ன்னா நடந்ததுன்னு தெரிஞ்சிட்டுப் பேசு!"ன்னுச்சு வெங்கு கோவமா.

            "யய்யோ நாம்ம அந்த மாதிரிக்கில்லாம் பேசல! இந்தப் பொண்ணு இந்த மாதிரிக்கி இஞ்ஞ பண்ணிக்கிட்டதெ நாளைக்கி அப்பிடி அஞ்ஞ யண்ணனோட கொண்டுப் போயி குடித்தனம் வைக்குறப்ப பண்ணினுச்சுன்னா நெனைச்சுப் பாருங்க. டாக்கடர்ரா இருக்குறதுக்கு இதெல்லாம் எடைஞ்சலு பாருங்க. ஒஞ்ஞளுக்கும் பொண்ணு போயிட்டேங்ற கவலெ ஆயிடும். நமக்கும் ஊர்ல கெட்டப் பேரா ஆயிடும் பாருங்க. அதால் சொல்றேம்!"ன்னுச்சு சுந்தரி.

            "இதத்தாம் ஒங்கிட்டெ எல்லாம் பேசி வுட்டு விடியக் காலையில போயி சொல்லிட்டு வான்னு சொன்னுச்சுங்களா?"ன்னுச்சு வெங்கு.

            "நீஞ்ஞ நம்மளப் பத்தித் தப்புத் தப்பாவெ நெனைச்சிக்கிட்டு இருக்கீயே! மனசுல பட்டதெ கேக்குறேம். தப்பா யிருந்தா மாத்திக்கிறேம். ஒஞ்ஞ நெனைப்பு ன்னான்னு தெரிஞ்சா செளரியமா இருக்கும். பேச்ச ஏத்தோ ஒரு தெசையிலேந்து ஆரம்பிச்சிப் பேசித்தானே ஆவணும். அப்பிடித்தாம் நாம்ம பேசுதேம். வேற மொறைப்பாடு யிருந்தாலும் சொல்லுங்க. நாம்மப் போயி கலந்துகிட்டு சொல்லுதேம்!"ன்னுச்சு சுந்தரி.

            "ஒம்மட வயசுக்கு நீயில்லாம் இந்த விசயத்துல முடிவெ எடுக்காதே ஆயி. இதல்லாம் பெரியவங்க பாத்து முடிவு பண்ண வேண்டிய சங்கதி. அவுங்கத்தாம் கலந்து இந்த மாதிரிக்கான முடிவெல்லாம் பண்ணணும். நீயா எடுத்தேம் கவுத்தேம்ன்னு எதாச்சிம் பண்ணி வுட்டுப்புட்டுப் போயிடாதே! பெறவு நாளைக்கு நாம்மத்தாம் சின்னப் பொண்ணு, நமக்கு என்னத்தெ தெரியும்ன்னு நீயி பாட்டுக்கு வெலகிப் போயிட்டு யிருப்பே! கட்டி வெச்ச நமக்குல்லா தெரியும் எத்தனெ செருமம், எத்தனெ கஷ்டம்ன்னு. பெத்த வவுற அப்பிடியே பத்தி எரியுதுடி. நேத்திக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு. இன்னிக்கு நீயி வந்துப் பேசுற பேச்சப் பாக்குறப்போ யின்னும் தாங்க முடியாத அளவுக்கு எரியுது!"ன்னுச்சு வெங்கு.

            "முடிவுங்றது சேந்து வாழப்போறவங்களோடது. அதுல நாம்ம ஒண்ணுத்தையும் செய்யுறதுக்கு யில்ல. அவுங்களோட மனசு எப்பிடி இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு மின்னாடி பெரியவங்களோட மனசு எப்பிடி இருக்குன்னு தெரிஞ்சிக்கத்தாம் நாம்ம வந்தேம்!"ன்னுச்சு சுந்தரி ரொம்ப சாமர்த்தியமா.

            "எல்லாத்தையும் கொஞ்சம் ஆறப் போடுவேம். நெலமையெல்லாம் கொஞ்சம் சரியா ஆவட்டும். அதுக்குள்ள மனசுக்குள்ளயும் நெறைய மாத்தங்க உண்டாவும். அதுக்குல்லாம் வாய்ப்பே கொடுக்காம ஒடனுக்கு ஒடனே முடிவெ எடுக்கணும்ன்னா எப்பிடி?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம முடிவு எடுக்க ஒண்ணும் அவ்சரம்லாம் படுத்தல. சம்பவம் யிப்பிடி ஆயிடுச்சே. மேக்கொண்டு இதெ எப்பிடி எடுத்துக்கிறது, என்னத்தெ பண்ணுறதுங்றதெ கேக்குறதுக்குத்தாம் வந்தேம். வேற எதுவும் தப்பா பேசிருந்தா அதெ மனசுல வெச்சிக்கிட வாணாம்!"ன்னுச்சு சுந்தரி.

            "செரிதாங் இந்த விசயத்தெ பேசணுங்றப்போ ஒம்மட வூட்டுக்காரரு வாரணும்ல. அத்து ன்னா ஒன்னய அனுப்பிட்டு அந்தாண்ட நிக்குறதுன்னா? அத்துவே நமக்குப் புரியல!"ன்னுச்சு வெங்கு.

            "அவுக வர்றதுக்கு யோஜனெ பண்ணுறாங்க. இனுமே இந்த வூட்டுப்பக்கம் அடியெடுத்து வைக்க மாட்டேனுட்டாங்க!"ன்னுச்சு சுந்தரி.

            "யப்போ எல்லாத்தையும் பேசி வெச்சித்தாம் முடிவெ பண்ணுதீயளா?"ன்னுச்சு வெங்கு.

            "பேசி வெச்சுத்தாம்ன்னா ன்னான்னு புரியல?"ன்னுச்சு வெங்கு.

            "அதாங் வெட்டி வுட்டுப்புட்டு ஒம்மட யண்ணனுக்கு வேற ஒரு எடத்துல கலியாணத்தெ கட்டி வுட்டுப்புடலாம்ன்னுத்தாம் சொல்ல வர்றீயான்னு கேக்குதேம்!"ன்னுச்சு வெங்கு.

            "அப்பிடில்லாம் யில்ல. அப்பிடில்லாம் சட்டுப்புட்டுன்ன கலியாணத்தெ பண்ணி வுட்டுட முடியுமா?"ன்னுச்சு சுந்தரி.

            "யப்போ பண்ண முடியும்ன்னா அதெயும் பண்ணி வுட்டுப்புடுவீயே அப்பிடித்தானே?"ன்னுச்சு வெங்கு.

            "யப்பிடில்லாம் யில்ல யக்கா! என்னத்ததாம் நடந்திருந்தாலும் யிப்படி ஒரு முடிவெ செய்யு எடுத்திருக்கக் கூடாது. நாளைக்கி இதெ முடிவெ இஞ்ஞ வாழ வந்த பெற்பாடு எடுத்தா அதுக்கு என்னத்தெ பதிலெச் சொல்லுவீயே?"ன்னுச்சு சுந்தரி.

            "கேப்பேடியம்மா! ந்நல்லா கேப்பே! இந்நேரத்துக்குப் போலீஸ் ஸ்சேன்ல கம்ப்ளெய்ண்ட்ட பண்ணாம இருக்கேம் பாரு. அதுக்கு ந்நல்லா கேப்பேடியம்மா. ஒண்ணும் வாணாம். வரதட்சணெ கொடுமென்னு ஒரு புகார்ரக் கொடுத்தா போதும்!"ன்னுச்சு வெங்கு.

            "நாஞ்ஞ எஞ்ஞ வரதட்சனெ கேட்டேம். நீஞ்ஞளா கொடுத்தீயே. அதெத்தாம் வாங்குனுச்சு. அதயுந்தாம் யிப்போ தர்றோம்ன்னு சொல்லியாச்சு. எஞ்ஞ யண்ணனுக்கு அதெல்லாம் தேவையில்லா. அத்து டாக்கடர்ரு. இதெல்லாம் அதுக்கு ஒரு பெரிய விசயமேயில்ல. கொணமான பொண்ணுத்தான்னு வந்து கட்டி வெச்சேம்!"ன்னுச்சு சுந்தரி.

            "யிப்போ என்னத்தெ கொணக்கேடே கண்டுபுட்டே? ஒங் கதெ தெரியாதா ஒனக்கு? ஊரு சிரிச்ச கதெ. அப்பிடி யில்லன்னு நெனைக்குதீயா?"ன்னுச்சு வெங்கு. சுந்தரியால அதுக்கு மேக்கொண்டு எதையும் பேச முடியல. தலையக் குனிஞ்சிட்டு உக்காந்துடுச்சு.

            "எதுவா இருந்தாலும் இந்த மாதிரியான விசயங்களப் பெரியவங்கப் பேசி முடிவு பண்ணட்டும். அதெ வுட்டுப்புட்டு நேத்திக்கு ராத்திரி புள்ளய அனுப்பி வுட்டு நோட்டம் பாக்க வுடுறது, யிப்படி புருஷங்கார்ரேம் வர்றாம பொண்டாட்டிக்காரிய வுட்டு துப்பறிஞ்சிட்டுச் செஞ்சி வுடுற வேலையல்லாம் வாணாம் பாத்துக்கோ!"ன்னுச்சு வெங்கு.

            "யிப்போ நாம்ம என்னத்தெ சொல்லணும்ங்றீயே?"ன்னுச்சு சுந்தரி.

            "அதெ நாஞ்ஞ சொல்ல வேண்டியவங்கிட்டெ சொல்லிக்கிறேம். ஒங்கிட்டெ ஒண்ணுத்தையும் சொல்லணும்ன்னு அவசியமில்ல!"ன்னுச்சு வெங்கு.

            "யப்புறம் ஒஞ்ஞ இஷ்டம். நாம்ம நமக்குத் தெரிஞ்சதெ பேசிட்டேம். அதுக்கு மேல நமக்குப் புரியல இதுல ஒண்ணும்!"ன்னுச்சு சுந்தரி.

            "ஒமக்குத்தாம் ஒண்ணும் புரியல யில்ல. அப்பிடியே யிருந்துக்கோடியம்மா. தேவையில்லாம இதுல மூக்கெ நொழைச்சி வாழ வேண்டியதுகளப் பிரிச்சி வுட்டுபபுடாதேடிம்மா!"ன்னுச்சு வெங்கு. அதே நேரத்துல ஆயி டீத்தண்ணியப் போட்டுக் கொண்டாந்து சுந்தரி மின்னாடி வெச்சது.

            "நாம்ம குடிச்சிட்டுதாங் வந்தேம்!"ன்னுச்சு சுந்தரி.

            "வெட்டி வுடபப் போற வூட்டுல என்னத்தெ குடிக்கணும்ன்னு நெனைக்குறே போல!"ன்னு வெங்கு சொன்னதும், சுந்தரி டக்குன்னு எடுத்து டீத்தண்ணியக் குடிச்சிது. "நமக்கு எந்த எண்ணமுமில்ல. சனங்க பேசிக்கிறதெ வெச்சித்தாம் நாம்ம பேசுனேம். எப்பிடி இருக்குறதுங்றதெ வாழ வேண்டிய அதுங்க முடிவெ பண்ணிக்கிடட்டும். பெரியவங்க நாம்ம அதுக்கு தொணை நிப்பேம். அத்து நல்லதா யிருந்தாலும் செரித்தாம், கெட்டதா யிருந்தாலும் செரித்தாம்!"ன்னுச்சு சுந்தரி. அவ்வளவுதாங் அத்தோட அத்து கெளம்புனுச்சு.

            "நடந்தா போறே? கொண்டாந்து வுடச் சொல்லவா?"ன்னுச்சு வெங்கு.

            "போன அடிச்சா வந்துட்டு இருப்பாக. நாம்ம போற வழியில ஏறிப் போயிட்டே இருப்பேம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனுச்சு.

            "ஒரு சம்பவம் முடிஞ்சி முழுசா ஒரு நாளு முடியல. ஒரு ராத்திரிதாம் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள ஆளாளுக்கு இதெப் பத்தி ஒரு முடிவெ பண்ணிக்கிட்டு அலையுது பாருடாம்பீ. சனங்க சேத்து வைக்கிறதெ வுட பிரிச்சி வுடுறதுலத்தாம் நிக்குதுங்க. இதெல்லாம் புரியாம நிக்காடா ஒந் தங்காச்சி. ஒலகத்தெ பத்தி ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. நாம்ம ந்நல்லா வாழ்ந்தா யாருக்கும் பிடிக்காது. கெடுக்குறதுக்குன்னே நிக்குமுங்க. அதுவும் கெட்டுப் போயி நின்னா போதும் குட்டிச்சுவரா ஆக்க நிக்குமுங்க. இவ்வே பஞ்சாயத்து ஊரு நாறிக் கெடக்கற பஞ்சாயத்து. இவ்வே யல்லாம் கெளம்பி வர்றா பாரு. இந்த வெவகாரத்தெ ரொம்ப ஆறப் போடாம சட்டுப்புட்டுன்னு பேசித்தாம் ஒரு முடிவெ பண்ணியாவணும்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒரு விசயத்தப் பத்தி ஒவ்வொருத்தருக்கும் இருக்குற பார்வெங்றது வெவ்வேறு மாதிரி. அதுக்காக யாரையும் எந்தக் கொறையும் சொல்லிட முடியாது. புருஷம் பொண்டாட்டி வெவகாரங்றது அவுங்கக்குள்ள இருக்க வேண்டிது. அதெ வெளியில கெளப்பிக் கொண்டார நெனைச்சா யிப்பிடித்தாம் ஆவும். இனுமேலாவது இதெப் புரிஞ்சிக்கிட்டு ரண்டு பேரும் நடந்துகிட்டா செரித்தாம்!"ன்னுச்சு வெங்கு.

            செய்யு எல்லாத்தையும் அமைதியா உக்காந்து கேட்டுக்கிட்டுத்தாம் இருந்தாளே தவுர எந்தப் பதிலையும் சொல்லல. அவளுக்கு ரொம்பவும் நம்புன புருஷங்கார்ரேம் தன்னெ கையி வுட்டுப்புட்டதாவே ஒரு நெனைப்பு இருந்துச்சு. "நீயி ன்னாடி ஏதோ பித்துப் பிடிச்சாப்புல ஒக்காந்திருக்கே. அவ்வே கெடக்கா கூறு கெட்டவே. இதெப் பேசுறதுக்குன்னு காலங் காத்தாலயே கெளம்பி வந்திருக்கா? காலங் காத்தால யிந்த நாதாரி மூஞ்சுல முழிக்கணும்ன்னு எழுதிருக்குப் பாரு. அதுக்குல்லாம் எடம் கொடுக்குறது நீந்தாம். இவ்வல்லாம் வந்துப் பேசிட்டுப் போற அளவுக்கு ஏம் நடந்துக்கிறே? இவ்ளே இப்பிடி இருக்குறப்ப நீயெல்லாம் எப்பிடி இருக்கணும் தெரியுமா?"ன்னுச்சு வெங்கு.

            "நாம்ம அவர்ர எம்மாம் நம்புனேம் தெரியுமாம்மா! அவுகத்தாம் இதெப் பத்தில்லாம் யாருகிட்டயும் சொல்ல வாணாம்ன்னு சொல்லிப்புட்டு யிப்ப அவுகளே எல்லாத்துகிட்டேயும் சொல்லி வுட்டுப்புட்டு பெரச்சனைய உண்டு பண்ணிட்டு இருக்காங்க. அதெப் பத்தி யாரும் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்றீயளே?"ன்னா செய்யு.

            "இனுமே நீயி யாருக்கும் எந்த ஒதவியையும் செய்ய வாணாம். எந்த உபத்திரவதத்தையும் அனுபவிக்க வாணாம். வுடு. தலைக்கு வந்தது தலெப்பாகையோடபோனுச்சன்னு நெனைச்சுக்கோ. ன்னா நடந்துப்புடும். பாத்துக்கிடலாம் வா. அந்தத் தெகிரியம் இருந்தா எதெயும் சமாளிச்சிப்புடலாம் போ!"ன்னுச்சு வெங்கு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...