16 Oct 2020

முதல் பஞ்சாயத்து!

முதல் பஞ்சாயத்து!

செய்யு - 596

            ராசாமணி தாத்தா, சித்துவீரன், பாக்குக்கோட்டைச் சொந்தக்காரங்க ரண்டு பேரு, லாலு மாமா அத்தோட சண்டியருத்தனம் பண்ணிட்டுத் திரியுற பெருமாள்சாமி,பெருமாள்சாமியோட தொடுப்பு திரிசங்குன்னு எல்லாரும் முச்சந்திக்கு மேற்கால இருக்குற புள்ளையாரு கோயில்ல வந்து எறங்குனுச்சுங்க. ஊர்லேந்து வந்துக் கூப்புடறப்போ பஞ்சாயத்துக்குப் போறதுன்னு சுப்பு வாத்தியாரு திண்ணையில உக்காந்திருந்தாரு. திண்ணைக்கு வெளியில விகடு வேடிக்கெப் பாத்துகிட்டு வர்றவங்களப் பத்திச் சொல்லிட்டு இருந்தாம். வந்து எறங்கிக் கொஞ்ச நேரம் வரைக்கும் அங்கங்க நின்னுகிட்டு ராசாமணி தாத்தா பட்டாளமா பேசிக்கிட்டு இருந்துச்சுங்க. கொஞ்ச நேரம் கழிச்சிக் கிராமத்து ஆளுங்க கொஞ்சம் கொஞ்சமா புள்ளையாரு கோயில்ல தெரள ஆரம்பிச்சாங்க.

            பெருமாள்சாமியும், திரிசங்குவும் வேட்டிய மடிச்சிக் கட்டிட்டு சுப்பு வாத்தியாரு வூட்டுப் பக்கம் வந்தாங்க. சுப்பு வாத்தியாரப் பாத்து, "யிப்பயும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. கெரகச்சாரம் சரியில்லன்னுத்தாம் பாக்குக்கோட்டை சோசியரு சொல்றாரு. அதெ சரிப் பண்ணுறதுக்கான வழிக இருக்குறதாவும் சோசியரு புட்டுப் புட்டு வைக்கிறாரு! கொஞ்சம் யோஜிச்சு முடிவெ பண்ணுங்க!"ன்னு பேசுனாங்க ரண்டு பேரும்.

            "மனுஷன் சரியில்லாம இருந்துகிட்டு ஏம் கெரகச்சாரத்தெ கொறெ சொல்லுதீயே? மனுஷனுக்குத்தாம் உசுரு இருக்கு. கெரகத்துக்கு ன்னா உசுரா இருக்குது?"ன்னாம் விகடு.

            "யம்பீ! நீஞ்ஞ பேசாதீயே! வயசுல சின்ன புள்ளே நீஞ்ஞ. கஷ்ட நஷ்டம் புரியாத ஆளு. நாம்ம வயசுல பெரியவங்க. ஒஞ்ஞ யப்பாகிட்டெ பேச வந்திருக்கேம். மறுக்கா சொல்றேம். யிப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. பஞ்சாயத்து வாணாம்ன்னு வந்து ஒஞ்ஞ சம்பந்திக்கிட்டெ ஒரு வார்த்தெ சொல்லுங்க. இஞ்ஞ வூட்டுல கொண்டாந்து வெச்சி எதுவா இருந்தாலும் முடிச்சிப்பேம்!"ன்னாரு பெருமாள்சாமி.

            "பஞ்சாயத்தெ வைக்கணும்ன்னு பிராதக் கொடுத்துப்புட்டு, அப்பிடியே ஆளெ அனுப்பி வுட்டுப் பஞ்சாயத்தெ வைக்க வாணாம்ன்னு வந்து கால்ல வுழுவுன்னு சொன்னாக்க ன்னா அர்த்தம்? இந்தப் பேச்ச நேத்திக்குப் புகாரக் கொடுக்குறதுக்கு மின்னாடி யோஜிச்சுச் செய்யணுங்றது கூட தெரியலையா? யிப்போ பஞ்சாயத்தெ வெச்சிட்டு ஊருக்கார்ரேம் வந்து கூப்புடுற நேரத்துல பஞ்சாயத்து வாணாம்ன்னா ன்னா அர்த்தம்ன்னு புரியலையே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெல்லாம் ச்சும்மா ஒரு மெரட்டலுக்குப் பண்ணுறதுதாங்!"ன்னு சிரிச்சாரு திரிசங்கு.

            "யப்போ அந்த பிராதுல இருக்குற வாசகங்க?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதுவும் ச்சும்மா ஒரு மெரட்டலுக்குத்தாங். இதெல்லாம் பஞ்சாயத்துன்னு வர்றப்போ கொஞ்சம் கூட கொறைச்சல் பேசுறதுதாங், எழுதுறதுதாங். அதெ மனசுல வெச்சிக்கக் கூடாது. பேத்தியக் கட்டி வெச்சிட்டு யிப்போ பேத்தி வூட்டுல யில்லாம இருக்குறாளேங்ற கோவத்துல பண்ணுறது அதெல்லாம். ன்னாத்த பண்ணலாம்ன்னு சட்டுபுட்டுன்னுச் சொல்லுங்க!"ன்னாரு பெருமாள்சாமி.

            "அதாங்! பஞ்சாயத்துன்னு முடிவாயிடுச்சு. எதுவா யிருந்தாலும் அஞ்ஞயே பாத்துப் பேசிப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வாத்தியார்ரே! பஞ்சாயத்துன்னு வந்தா வெளைவுக ரொம்ப விபரீதமா இருக்கும் பாத்துக்கோ! ஒம்மால அதெ தாங்க முடியாது. நாம்ம ஆயிரம் பஞ்சாயத்தப் பாத்தவேம் சொல்றேம். வாணாம் ஒதுங்கிக்கோ. ஆளாளுக்குக் கேள்வியக் கேப்பாம் பஞ்சாயத்துன்னா தெரியும்லா? ஆளாளுக்குக் கேள்வியக் கேக்குறானோ யில்லியோ நாம்மக் கேப்பேம். அதுக்குத்தாம் நம்மள அழைச்சாந்து வந்தது. ஒம் பக்கம் பேச யாரு யிருக்கா சொல்லு? வாத்திக்கு ஞாயம் பேசுனா ஒரு குவார்ட்டருக்குக் கூட வக்கிருக்காதுன்னு ஊருக்கார பயலுவோளுக்குத் தெரியும். அதுவுமில்லாம ஒம்மட ஊர்லயே ஆளுகள வெலைப் பேசி பன்னெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சுது. பஞ்சாயத்துங்றது சும்மா பேருக்குத்தாம், பூச்சாண்டிக் காட்ட. அதெ கூட சமாளிச்சி வந்துப்புடுவே. ஆன்னா அஞ்ஞ வெச்சுப் பேசுற வார்த்தயில ராத்திரி நிம்மதியா ஒம்மால தூங்க முடியுமான்னு பாரு?"ன்னாரு பெருமாள்சாமி.

            "எந் தூக்கம் அத்து. அதெ நாம்மப் பாத்துக்கிடறேம். ஒஞ்ஞளுக்குக் கொடுத்தக் காசிக்கு நீஞ்ஞ பேசியாச்சின்னா கெளம்பலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ந்நல்லா யில்ல வாத்தியார்ரே! பஞ்சாயத்துல வாத்தின்னுல்லாம் பாக்க மாட்டேம். நீயிப் பாத்த பெருமாள்சாமிங்றது வேற. பஞ்சாயத்துல பாக்கப் போற பெருமாள்சாமிங்றது வேற!"ன்னாரு பெருமாள்சாமி.

            "யித்து எஞ்ஞ ரண்டுக் குடும்பத்துப் பெரச்சனெ. அதத்தானே பேசப் போறேம். இத்துல ஒஞ்ஞளுக்கு எஞ்ஞ ன்னா வந்திருக்கு?"ன்னாம் விகடு.

            "யம்பீ! நாம்ம ஆரம்பத்துலயே சொல்லிட்டேம். நீஞ்ஞ சின்ன புள்ளன்னு. பேயாம வாய மூடிட்டு உள்ளார பொம்மெ கிம்மெ கெடந்தா அதெ எடுத்துக்கிட்டு புள்ளே குட்டியோட வெளையாடிட்டு இருக்கணும். இத்துப் பெரியவங்களோட வெளையாட்டு. யுத்தம் பாத்துக்கோ. ஒரு யுத்தத்துக்கு மின்னாடி ஒரு எச்சரிக்கெ பண்ணுறதுக்காகத்தாம் வந்திருக்கேம். யுத்தம்ன்னு ஆரம்பிச்சிட்டா சிந்துற ரத்தத்துக்குக் கணக்கு இருக்காது. உருளப் போற தலைக்கும் எண்ணிக்கெ இருக்காது. சொல்றதெ சொல்லியாச்சு. பெறவு ஒஞ்ஞ முடிவுதாங். அதுல நாம்ம தலையிட முடியாது! கெடசீயா பொட்டுல அடிச்சாப்புல ஒரே முடிவா சொல்லுங்க வாத்தியார்ரே!"ன்னாம் பெருமாள்சாமி.

            "பஞ்சாயத்துன்னு வந்த பின்னாடி வெளியில வெச்சு என்னத்தெ பேசுறது? எல்லாத்தையும் பஞ்சாயத்துல வெச்சே பேசிக்கிடலாம்!"ன்னு சுப்பு வாத்தியாரு சொன்னதும், "விபரீதத்தெ பாக்கணும்ன்னு ஆசெப்பட்டுட்டா அதுக்கு மேல நாம்ம பேசுறதுக்கும் ஒண்ணுமில்லெ. நடக்குறது நல்லபடியாவே இருக்கட்டும்ன்னு ஆண்டவனெ மட்டும் வேண்டிக்கோங்க வாத்தி!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனாங்க பெருமாள்சாமியும், திரிசங்கும்.

            "நீஞ்ஞ சொல்ற நேரத்துக்கு மின்னாடியே பஞ்சாயத்துக்கு வந்தாச்சு. பஞ்சாயத்து ஆரம்பிக்கிறதா சொன்ன நேரம் வந்தும் ஆரம்பிக்காம இருந்தா எப்பிடி?"ன்னு ராசாமணி தாத்தா அங்க சொன்னது சுப்பு வாத்தியாரு வூட்டு வரைக்கும் சத்தமா கேட்டது. பஞ்சாயத்துகாக நின்ன சின்னுவோட அப்பா, சொட்டெ கண்ணுராசு, பட்டறைக்கார்ரேம் பட்டாமணி, பரமுவோட அப்பா எல்லாம் சேந்து பேசிக்கிட்டாங்க. பரமுவோட அப்பா வூட்டுப்பக்கமா வந்து சுப்பு வாத்தியார்ர கூப்புட்டாரு. வேற ஆளுங்கள அழைச்சிட்டு வாரதுன்னாலும் ‍அழைச்சிட்டு வரலாம்ன்னாரு பரமுவோட அப்பா.

            யாரும் கெடையாது, நாம்ம மட்டுந்தாம்ன்னு சொல்லிக் கெளம்புனாரு சுப்பு வாத்தியாரு.

            புள்ளையாரு கோயிலுக்கு மின்னாடி மண்டபமா கட்டுறாப்புல பில்லர்ல்லாம்  போட்டு மேல காங்கிரட்டும் போட்டிருந்துச்சு. பூச்சுப் பூசாம கெடந்துச்சு. அதுக்குள்ள பாக்குக்கோட்டை சனங்களா உக்காந்திருந்துச்சுங்க. கிராமத்துலேந்து முக்கியமான ஆளுங்க மட்டும் உள்ளார உக்காந்திருந்தாங்க. உள்ளாரப் போவ எடமில்லெ. சுப்பு வாத்தியாரு கோயிலு மண்டபத்துக்கு மின்னாடியே நின்னுகிட்டாரு.

            "வாங்க வாத்தியார்ரே! உள்ளார!"ன்னாரு சின்னுவோட அப்பா.

            "பரவாயில்ல நாம்ம வெளியிலயே நின்னுகிடறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பஞ்சாயத்துக்குன்னு உள்ளவங்க வெளியில நின்னா எப்பிடிப் பஞ்சாயத்தெப் பேசுறதாம்? கொஞ்சம் எடத்தெ வுடுங்க. ரண்டு பேத்து கொஞ்சம் வெளியில எழும்பிப் போங்க!"ன்னாரு பரமுவோட அப்பா.ஒரு ரண்டு பேரு எழும்பி வெளியில வந்தப் பெறவு, கொஞ்சம் எடம் உண்டானுச்சு. அந்த எடத்துலப் போயி உக்காந்தாரு சுப்பு வாத்தியாரு.

            "பஞ்சாயத்தெ ஆரம்பிச்சிப்புடலாம். நேரமாயிட்டெ கெடக்குது!"ன்னாரு பட்டறைக்காரரு பட்டாமணி.

            "புகாரு கொடுத்தவங்க மொதல்ல ன்னா வெவரம் ன்னான்னு சபைக்குத் தெரியுறாப்புல எடுத்துச் சொல்லுங்க!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு.

            ஒரு நிமிஷம் சர்வமும் அடங்குனாப்புல அமைதியா இருந்துச்சு. பெறவு தொண்டயெ கனைச்சிக்கிட்டு, "நல்லா இருக்கணும்ன்னு எம்மட மவனுக்கு ஒஞ்ஞ ஊர்ல வந்து பொண்ணு எடுத்தது, கலியாணம் கட்டுனது எல்லாம் தெரிஞ்ச கதெதாம். கலியாணம் கட்டி வைக்குறது எதுக்குப் பொண்ணும் புள்ளையும் சேந்து வாழத்தானே? கலியாணத்தக் கட்டி வெச்சா பொண்ணு எஞ்ஞ இருக்கணும்? மாப்புள்ளையோடயும் மாப்புள்ளையோட வூட்டுலயந்தானே? அதானே ஒலக வழக்கம்! இந்த ஊர்லத்தாம் இல்லாத வழக்கமா கட்டுனப் பொண்ண கொண்டாந்து பொறந்த வூட்டுல வெச்சிக்கிட்டா என்னத்தெ பண்ணுறது சொல்லுங்க. நாஞ்ஞளும் எஞ்ஞ தரப்புல பேசியாச்சு. மத்தியஸ்தம் பண்ணிப் பாத்தாச்சு. பொண்ணு அனுப்புறதா தெரியல. நமக்கு வேற வழி தெரியல. பஞ்சாயத்தாருப் பாத்து இதுக்கு ஒரு ஞாயம் பண்ணி வுடணும்! பொண்ண அழைச்சிட்டுப் போறதுக்கு நமக்கு இஷ்டம். இப்போ அழைச்சிட்டுப் போவச் சொன்னாலும் செரித்தாம். அதுக்காகத்தாம் கார்ர எடுத்துட்டு கார்லயே வந்திருக்கேம்!"ன்னு சொல்லி முடிச்சிச்சு ராசாமணி தாத்தா.

            "அவுங்க தரப்புல சொல்ல வேண்டியதெ சொல்லிப்புட்டாங்க வாத்தியாரே! இனுமே நீஞ்ஞத்தாம் சொல்லணும். அவுங்க வூட்டுப் பொண்ண நீஞ்ஞக் கொண்டாந்து வெச்சிருக்கிறதா சொல்லிருக்காங்க. அவுங்க பேசுறதலயும் செல ஞாயம் இருக்குறதாங் படுது. இனுமே ஒஞ்ஞ தரப்புல நீஞ்ஞ சொல்ல வேண்டியதெ என்னங்றது சொல்லிப்புட்டா மேக்கொண்டு பஞ்சாயத்தெ பண்ணுறதெ பண்ணிப்புடலாம்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு.

            "பொண்ண அனுப்பல்லாம் நமக்கு இஷ்டந்தாம். யிப்போ கொஞ்சம் ஒடம்புக்கு முடியல. அதெ சரிபண்ணி வுட்டுத்தாம் அனுப்பணும்! அதெத்தாம் பேசிட்டு இருந்தேம். அதுக்குள்ள அவுங்க அவ்சரப்பட்டு பஞ்சாயத்துல புகாரு பண்ணி பிராது கொடுத்தாச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பொண்ணு வூட்டுத் தரப்புல அனுப்ப இஷ்டம்ன்னு சொல்லியாச்சு. மாப்புள வூட்டுத் தரப்புல அனுப்ப வேணுங்றதுதாம் பிராதோட முக்கியமான வெசயம். பெறவென்ன? பஞ்சாயத்து முடிஞ்சது போலதாங்! வாத்தியார்ரே நீஞ்ஞ எப்போ என்னிக்கு அனுப்புறதுன்னு சொல்லிட்டா வெவகாரத்தெ முடிச்சிடலாம்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு.

            "அழைச்சிட்டுப் போறதுக்குத்தாங் வந்திருக்கேம். அதுக்காக அப்பிடியே அழைச்சிட்டுல்லாம் போயிட முடியாது. சில வெசயங்கள்ல பஞ்சாயத்துல வெச்சி முடிவெ பண்ணிட்டுதாங் அழைச்சிட்டுப் போவ முடியும்!"ன்னுச்சு திடீர்ன்னு லாலு மாமா.

            "ன்னடா இத்து வம்பா போச்சு! அழைச்சிட்டுப் போறதுக்குத் தயாருன்னு மாப்புள்ளயோட அப்பங்காரரு சொல்றாரு. அப்பிடியில்லாம் அழைச்சிக்கிட்டுப் போவ முடியாதுன்னு தாய்மாமங்காரரு சொல்றாரு. ஏதோ சில வெசயங்க இருக்குறதாவும் சொன்னா அந்தச் சில வெசயங்கள்ன்னா என்னாங்றதெ சொன்னாத்தாம் பஞ்சாயத்துக்குப் புரியும்!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "இப்போ இந்தப் பொண்ணோட வெவகாரம் இஞ்ஞ ஊர்ல இருக்குறவங்களுக்குத் தெரியாம இருக்காது. நாஞ்ஞ எஞ்ஞ வூட்டுல வெச்சிருந்த வரைக்கும் நல்ல வெதமாத்தாம் வெச்சிருந்தோம். நல்ல வெதமா வெச்சிருந்தேம்ன்னா எஞ்ஞ வூட்டுல இருந்த வரைக்கும் பொண்ணு தூக்குல்லாம் மாட்டிக்கிடல. ஆன்னா இந்தப் பொண்ண இந்த வூட்டுல கொண்டாந்து வுட்டப் பெறவு நடந்த கதெ ஊரறிஞ்ச விசயம். வந்த மறுநாளே பொண்ணு தூக்கு மாட்டிக்கிடுச்சு. அதுக்கான காரணம் என்னவோ ஏதுவோ நமக்குத் தெரியல. ஆன்னா முக்கியமான காரணம் இந்தக் குடும்பத்துல இருக்குற வெவகாரந்தாம். இந்தக் குடும்பத்துப் பெரச்சனையாலத்தாம் பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டுடுச்சுன்னு எழுதி ‍கையெழுத்துப் போட்டு அந்தக் காயிதத்தக் கொடுத்தாதாம் பொண்ண அழைச்சிட்டப் போவ முடியும்! இவரு பாட்டுக்க அழைச்சாந்து வெச்சிப்பாரு. அந்தப் பொண்ணு பாட்டுக்கு தூக்க மாட்டிக்கிடும். அதுக்குல்லாம் அஞ்ஞ இருக்குற நாஞ்ஞளா பலியாக முடியுமா? அதால இஞ்ஞ குடும்ப பெரச்சனெ காரணமாத்தாம் அத்து தூக்குல தொங்கப் போனுச்சுன்னு அத்து மட்டுமில்ல, ஒட்டு மொத்த குடும்பமே எழுதி கையெழுத்து வெச்சுக் கொடுத்தாதாம் நாம்ம எஞ்ஞ தரப்புலேந்து அழைச்சிட்டுப் போவலாம்!"ன்னுச்சு லாலு மாமா.

            சுப்பு வாத்தியாரு துண்டெ உதறித் தோள்ல போட்டுக்கிட்டு எழுந்திரிச்சாரு. "அப்பிடில்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு போயி வாழணும்ன்னு எம் பொண்ணுக்கு எந்த அவ்சியமும் கெடையாது!"ன்னாரு.

            "உக்காருங்க வாத்தியார்ரே பேசிட்டு இருக்குறப்பவே எழுந்திரிச்சா எப்பிடி? பேசிக்கிடலாம் உக்காருங்க! நீஞ்ஞ சொல்ல வேண்டியதெ சொல்லுங்க. அதெ வுட்டுப்புட்டு எழும்புனா னன் அர்த்தம்?"ன்னாரு பரமுவோட அப்பா.

            "பொண்ணு தூக்க மாட்டிக்கிட்டது அவுங்க வாயாலே வந்துடுச்சு. அதெயெல்லாம் பஞ்சாயத்துல பேசணும்ங்றது நமக்கு விருப்பம் யில்ல. அவுங்களே பேசுன பெற்பாடு அதெப் பத்தி செலதெ சொல்ல வேண்டிக் கெடக்கு. அப்பிடிச் சம்பவம் வந்த பெற்பாடும் நாம்ம பஞ்சாயத்துல வந்து புகாரும் கொடுக்கல, போலீஸ் ஸ்டேசன்ல போயி நிக்கல. எம் பொண்ணு எம்மட வூட்டுல வந்து தூக்க மாட்டிக்கிடுற அளவுக்கு எந்தப் பெரச்சனையும் கெடையாது. அஞ்ஞத்தாம் அதுக்கான பெரச்சனெ அத்தனையும் நடந்துச்சு! அதெ திரிச்சிப் பேயக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்மப் பாத்து இந்த ஆளெ கொண்டாந்து இந்த ஊர்ல குடி வெச்சது. அந்த நன்றியோடப் பேசணும்!"ன்னுச்சு லாலு மாமா.

            "அந்த நன்றிக்கு எஞ்ஞ தலையிலயே நாஞ்ஞளே மண்ணள்ளிப் போட்டுக்கிடணும்ன்னு நெனைச்சா எப்பிடி? யிப்பிடி ஒரு சீட்டெ எழுதி கையெழுத்து வாங்கிட்டுப் போயி எம் பொண்ண அவுக கொன்னோ போட்டுப்புட மாட்டாங்கங்கிறதுக்கு ன்னா நிச்சயம் இருக்கு? எந்த மடப்பயலா இருந்தாலும் அப்பிடி ஒரு காயிதத்துல கையெழுத்துப் போட மாட்டாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பொண்ண வாழ வைக்கணும்ன்னு நெனைப்பிருந்தா அதெ செய்யட்டும். இல்லாட்டி நாம்ம ன்னத்தா பண்ண முடியும்? நமக்குல்லாம் பொண்ண வாழ வைக்கணுங்ற நெனைப்புத்தாம் இருக்கு. பொண்ணு வூட்டுல வாழ வைக்க முடியாதுங்றதுக்கு நாம்ம என்னத்தெ பண்ண முடியும். பாத்துக்கோங்க கிராமத்துச் சனங்களே! நம்மடப் பக்கம் எந்தக் குத்தமும் கெடையாது!"ன்னு பேசி நிறுத்துனுச்சு லாலு மாமா.

            "இந்த மாதிரிப் பேசுறாப்புல இருந்தா நாம்ம பொண்ண அனுப்புறாப்புல யில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இவ்வேங்கிட்டெ என்னத்தெ பேசிக்கிட்டு? பொண்ண வூட்டுல வெச்சிக்கிறதுக்கு இவனுக்கு ன்னா ரைட்ஸ் இருக்கு? பொண்ண அனுப்பி வுட்டுப்புட்டு மறுவேல பாருடா வாத்திப் பயலே! அப்பிடி இந்தப் பயெ அனுப்பலன்னா பொண்ண வூடுப் பூந்து தூக்கிட்டு வாஞ்ஞடா! எவ்வேம் குறுக்கால நிக்காம்ன்னு பாக்கேம். எவனாச்சும் குறுக்கால நின்னா குத்திக் கொடல உருவிடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு பேச்சு தடிச்சாப்புல அப்போ திடீர்ன்னு உக்கிரமான கொரல எடுத்து பெருமாள்சாமி.

            "எலே பெருமாள்சாமி! இத்துப் பஞ்சாயத்துக்குப் பாத்துக்கோ. இஞ்ஞ பஞ்சாயத்துல பேசித்தாம் ஒரு முடிவுக்கு வாரணும். நீயிப் பாட்டுக்கு பொண்ண தூக்குவே அப்பிடி யிப்படின்னா சுத்தப்பட்டு வாராது! இத்து ன்னடா கட்டப் பஞ்சாயத்தாடா? கிராமப் பஞ்சாயத்து? இவனெயெல்லாம் யாரு கொண்டாந்தது? மொதல்ல பஞ்சாயத்துக்குச் சம்பந்தமில்லாத ஆளுகளெ அந்தாண்ட அனுப்பு!"ன்னாரு பரமுவோட அப்பா.

             "யார்ரப் பாத்து பஞ்சாயத்துக்கு சம்பந்தமில்லாத ஆளுன்னு பேசுறே? நமக்கும் பாக்குக்கோட்டெ சோசியரு குடும்பத்துக்கும் இருவது வருசத்து தொடர்பு பாத்துக்கோ. சொந்த பந்தம் கூட அப்பிடிப் போயி கூட மாட நிக்காது. அப்பிடிப் போயி ஒண்ணடி மண்ணடியா நின்ன ஆளு. நாம்ம ல்லன்னா இந்தப் பஞ்சாயத்து நடக்காது பாத்துக்கோ! பொண்ண அழைச்சாந்தது தப்பா யில்லியா? என்ன மசுத்துக்கு அந்த வாத்தி எஞ்ஞ வூட்டுப் போண்ண வந்து எஞ்ஞ வூட்டுலேந்து அழைச்சாந்தாம்? அதுக்குன்னா ஒத்தக் காரணத்தெ மட்டும் சொல்லச் சொல்லு! நாம்ம வாயையும் சூத்தையும் பொத்திக்கிட்டுக் கெளம்புடுறேம்!"ன்னாரு பெருமாள்சாமி.

            "நெல ரீஸ்தர்ன்னு அழைச்சாந்தேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பெறவு என்னா மசுத்துக்குக் காரியம் முடிஞ்சதும் கொண்டுப் போயி வுடாம வூட்டுலயே வெச்சிக்கிட்டு இருக்கே பொட்டெ பயலாட்டம்?"ன்னாம் பெருமாள்சாமி.

            சுப்பு வாத்தியாருக்கும் கோவம் வந்துடுச்சு. "வேணும்ன்னா ஒம் பொண்ண கொண்டுப் போயி வுடுடா! அவ்வேம் ஆம்பளையா கெடையாது. அவ்வேங்கிட்டெ எப்பிடிடா கொண்டுப் போயி வுடச் சொல்றே?"ன்னாரு பாருங்க ஒட்டுமொத்தப் பஞ்சாயத்தும் அமைதியாச்சுது ஒரு நிமிஷம். சுப்பு வாத்தியாரு அப்படிப் பேசுவாருன்னோ, அவருட்டேயிருந்து அப்படி ஒரு வார்த்தெ வருமுன்னோ யாரும் எதிர்பாக்கல.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...