23 Oct 2020

ஒரு மோசமான விடியல்


 ஒரு மோசமான விடியல்

செய்யு - 603

            ஒவ்வொரு நாளு ராத்திரியும் எப்பிடி விடியுங்றது இருட்டுக்குள்ள புதைஞ்சிருக்கிற ரகசியம். விடியுற நேரத்துல பூகம்பம் வரக் கூடாதுன்னு ஒண்ணும் கணக்கில்லே. புயல் காத்து வீசக் கூடாதுன்னு விதிக ஏதுமில்லே. சுனாமி வந்து அடிச்சிட்டுப் போவாதுங்றதுக்கு ஒண்ணும் நிச்சயமில்ல. எப்பவாச்சும் நடக்குற இந்தச் சம்பவங்க அதுக்குப் பின்னாடி வர்ற ஒவ்வொரு விடியல்லயும் ஒரு பூகம்பத்தையோ, சுனாமியையோ, புயலையோ மனசுக்குள்ள கொண்டு வந்துகிட்டெ இருக்கும். அது வந்தது ஒவ்வொரு நாளுன்னாலும் ஒவ்வொரு நாளும் மனசுக்குள்ள அத்து வந்துகிட்டெ இருக்கிறதெ ஒண்ணும் பண்ண முடியாது. எது எப்பிடின்னாலும் ஒவ்வொரு நாளும் நல்ல வெதமா விடியுங்ற நம்பிக்கையிலத்தாம் உறங்கப் போறோம். அந்த விடியல் நல்ல வெதமா விடியப் போவுதா? மோசமா விடியப் போவுதா?ங்றதெ விடிஞ்ச பெற்பாடுதாம் அறிய முடியுது.

            ராத்திரி சந்தானம் அத்தான் பேசுறப்பல்லாம் செய்யு எதையும் சொல்லல. தன்னெப் பத்திப் பாலாமணி சொன்னதா சந்தானம் அத்தான் சொன்னப்ப மட்டும் கண்ணுத் தண்ணி வுட்டவ, அதுக்குப் பெறவு எதையும் பேசல. பேசா மடந்தையப் போல உக்காந்திருந்தா. ஒண்ணும் தப்ப பண்ணாதவங்ககிட்டெ தப்புப் பண்ணதா சொல்லுறப்போ அவுங்க மனசு படுறா பாடு இருக்கே, அது அப்படியே இதயத்தை அப்பிடியே சுக்குநூறா ஒடைச்சிக் கையில கொடுத்தாப்புல இருக்கும். அவுங்களால அதெ தாங்க முடியாது. ஆயிரம் குத்தம் பண்ணுற மனுஷன் பத்தாயிரம் குத்தம் பண்ணுனதா சொன்னாலும் அதெப் பத்தி அவ்வேம் ஒண்ணும் கவலெப்பட்டுக்கிறதில்ல. ஆனா ஒரு குத்தம் பண்ணாத ஆளுகிட்டெ போயி குத்தம் பண்ணிப்புட்டதா சொன்னா போதும் அப்பிடி குத்தம் சொல்லுற அளவுக்கு நாம்ம நடந்துக்கிட்டோமேங்ற மன உளைச்சல்லயே அவ்வேம் செத்துப் போனாலும் செத்துப் போனதுதாம். இதுல ஒண்ணும் மிகுபாடு ஏதுமில்ல. சில பேத்தோட மனசு அப்பிடித்தாம்.

            அவ்சாரித்தனம் பண்ணுறவுகளப் பாத்து அவ்சாரின்னு சொல்றதால அவுக தூக்குலப் போயி தொங்கிடப் போறதில்ல. அப்பிடிப் பண்ணாதவுகளப் பாத்து அவ்சாரின்னு சொல்லிட்டாப் போதும் அதுக்கே போயி தொங்கிடுவாக. அப்பிடிச் சொல்லாம சந்தேகப்பட்டதா அறிஞ்சா கூட அதெ தாங்கிக்க முடியாம தொங்குனதுக நாட்டுல நெறைய இருக்குதுங்க. திருடனெ திருடன்னு சொல்லுறதாலயோ, கொலைகாரனெ கொலைகாரன்னு சொல்லுறதால அது நெசமா இருக்குற பட்சத்துல அத்து சம்பந்தப்பட்டவங்களப் பாதிச்சிடப் போறதில்ல. திருடாத மனுஷனப் பாத்து திருடன்னு சொல்றப்போ, கொலை பண்ணாதவனப் பாத்து கொலைகாரன்னு சொல்றப்போ அத்து அந்தத் தப்புக்குக் கொடுக்குற தண்டனையெ வுட கொடுமையா தெரியும் சம்பந்தப்பட்ட மனுஷருக்கு.

            செய்யுவால அந்த ராத்திரி முழுக்க தூங்க முடியல. பஞ்சாயத்துச் சார்பா வெசாரிச்சதுல பாலாமணி சொன்னதா சந்தானம் அத்தான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவ்வே காதுக்குள்ள எதிரொலிச்சிக்கிட்டெ இருந்துச்சு. காதுக்குள்ளப் பூந்த பூச்சியப் போல, கண்ணுக்குள்ள உறுத்துற தூசியப் போல பாலாமணியோட வார்த்தைக ஒவ்வொண்ணும் அவ்வே மனசுக்குள்ள உறுத்திக்கிட்டெ இருந்துச்சு. கருப்பா இருக்குற சட்டையில இருக்குற ஆயிரம் கரும்புள்ளிகள யாரும் கண்டுக்கிடப் போறதில்ல. வெள்ளையா இருக்குற சட்டையில இருக்குற ஒத்த கரும்புள்ளி எப்பவும் உறுத்தலாத்தானே இருக்கும். அப்பிடித்தாம் செய்யுவோட மனசுக்கு இருந்துச்சு பாலாமணி பேசுனதெல்லாம்.

            ராத்திரியே இதெப் பத்தி தெளிவு பண்ணித்தாம் செய்யுவப் படுக்க வெச்சது. அவ்வேம் சொன்னாம்ங்றதுக்காக மனசெப் போட்டுக் கொழப்பிக்கிட வாணாம், கொறைச் சொல்லுறவேம் சொல்லிட்டுத்தாம் இருப்பாம், அதெ நம்ம காதால நாம்ம வாங்கிக்கிட கூடாது, இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல வுட்டுப்புடணும்ன்னு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சு. அதெ கேட்டுகிட்டு அதெ ஒத்துக்கிட்டவப் போலத்தாம் படுக்கப் போனா. குதிரைய தண்ணித் தொறைக்குக் கூட்டிட்டுப் போனாலும் தண்ணிய அந்தக் குதிரைத்தாம் குடிச்சாவணும்ன்னு கெராமத்துல சொல்லுறாப்புல, ஆறுதல என்னத்தெதாம் சொன்னாலும் கேக்கறவங்களோட மனசு அதெ எடுத்துக்கிட்டாத்தாம். ஆறுதலெ சொல்லுறப்பல்லாம் அவங்களோட மனசு அதெ கேக்குறாப்புலத்தாம் இருக்கும். அதுக்குப் பெறவு அவுங்களோட மனசு எப்பிடி இருக்குதுங்றது பாதிக்கப்பட்டவங்களோட மனசுக்குத்தாம் தெரியும். அதுவும் பொம்பளைகளோட மனசு ஒத்த வார்த்தையத் தப்பா சொல்லிப்புட்டாலும் அதெயே பிடிச்சிக்கிட்டுத் தொங்குமே தவுர, அதெ தூக்கிப் போட்டுட்டு செரித்தாம் போன்னு அந்தாண்ட இந்தாண்ட போவாது. பொண்ணுங்களோட வாழ்க்கையே அப்பிடித்தாம் ஆம்பளைகளோட வார்த்தைகத்தாம் ஒலகம்ங்ற மாதிரிக்கித்தானே வடிவமைஞ்சுப் போயிக் கெடக்கு.

            படுக்கப் போனப்போ செய்யு தெளிவா படுக்கப் போனாப்புலத்தாம் இருந்துச்சு. ஆன்னா அவ்வே கண் முழிச்சப்போ அப்பிடி யில்ல. காலையில சூரியன் வந்து வெளிச்சத்தப் பரப்பி வுட்டு, எட்டு மணி ஆன பெறவும் அவ்வே எழுந்திரிக்கல. நேத்தி நடந்த பஞ்சாயத்தப் பத்தின பேச்சு சந்தானம் அத்தான் கெளம்பிப் போன பதினோரு மணிக்கு மேலயும் வூட்டுல நடந்துகிட்டெத்தாம் இருந்துச்சு. எப்பிடியும் படுக்கப் போறப்போ ரண்டு மணியாவது இருக்கும். அப்போ படுத்தாலும் வூட்டுல பெரும்பாலனவங்க ஆறு மணி, ஏழு மணி வாக்குல எழும்பியாச்சு. ஆன்னா செய்யு மட்டும் எழும்பல. படுத்தே கெடந்தா. இந்தப் பஞ்சாயத்தே செய்யுவுக்குத்தாங்றதால பாதிப்பு அவ்வே மனசுக்குத்தாம் அதிகம்ங்றதால கொஞ்ச நேரம் ஒறங்குறதால ஒண்ணும் குத்தமில்லன்னு அதெ யாரும் பெரிசா கவனிச்சிக்கிடல. காலச் சாப்பாட்டுக்கான வேல வேற மும்முரமா நடந்துக்கிட்டு இருந்துச்சு.

            செரித்தாம் தூங்கட்டும் பொண்ணுன்னு சமைச்சி முடிச்சி எட்டரை மணி வாக்குல போயி செய்யுவ எழுப்புனா அவ்வேம் எழுந்திரிக்க மாட்டேங்றா. தொவண்டு தொவண்டு வுழுவுறா. அவளெ எழுப்பி உக்கார வெச்சி நிமுத்துறது பெரும்பாடா இருக்குது. வெங்கு அப்பிடி இப்பிடின்னு முயற்சிப் பண்ணிப் பாத்துப்புட்டு சத்தத்தெ போட ஆரம்பிச்சிடுச்சு. ஒடனே வூட்டுல இருந்த சுப்பு வாத்தியாரு, விகடு, ஆயி எல்லாம் ஓடிப் போயிப் பாத்தாக்கா பிரக்ஞை யில்லாதவப் போல கெடக்கா செய்யு. ஆளாளுக்குத் தெகிரியத்தக் கொடுக்குறாப்புல பேசி அவளெ கெளப்பப் பாக்கறாங்க. ஒண்ணுத்துக்கும் மசியக் காணும். கொஞ்சம் தண்ணிய வாயில ஊத்தணும்ன்னு பாத்தா பல்ல இறுக்க கடிச்சிக்கிட்டு தம்பளரை உள்ள வுட மாட்டேங்றா.

            "யய்யோ! யம் பொண்ணு இப்பிடிச் சாவக் கெடக்குறாளே! உசுரோட இருக்குறப்பவே கொன்னுப்புடுவானுவோ போலருக்கே! இந்த ஊருக்காரப் பயலுவோ பஞ்சாயத்து பஞ்சாயத்துன்னு வெச்சி இப்பிடிக் கொல்லுறானுவோளே! எம் புருஷந்தாம் பஞ்சாயத்தும் வாணாம், ஒண்ணும் வாணாம் நாஞ்ஞ எதாச்சும் பாத்துப் பேசிக்கிடுறேம்ன்னு சொன்னாரே! அதெ கேக்க மாட்டேம்ன்னு யிப்பிடி பண்ணுறானுவோளே! ஒறவுக்காரப் பயலுவோ சரியில்லன்னா, ஊருக்காரப் பயலுவோ வேற கூடிக்கிட்டு ஆளாளக்கு யிப்பிடிப் பண்ணுறானுவோளே!"ன்னு ஒப்பாரிய வைக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்தச் சத்தத்தெ கேட்டு பக்கத்துல இருந்த தம்மேந்தி ஆத்தா, அம்மாசியம்மான்னு சனங்க பலதும் ஓடி வந்துச்சுங்க.

            "கொஞ்சம் இட்டிலியக் கொண்டாங்க. ஊட்டி வுட்டாத்தாம் செரிபட்டு வரும்!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா. இட்டிலியச் சுட்டு, சட்டினிய அரைச்சு எல்லாம் தயாராத்தாம் இருந்துச்சு. செய்யுச் சாப்புட்டு ஒரு நாளு இருக்கும். பஞ்சாயத்து நடக்கப் போவுதுங்ற பதற்றத்துல நேத்திக் காலையிலயும் சாப்புட மாட்டேம்ன்னு அடம் பண்ணிப்புட்டா. செரித்தாம் கெடக்கட்டும், ரொம்பப் போட்டுத் தொந்தரவு பண்ண வாணாம்ன்னு வுட்டாச்சி. மத்தியானம் ஆரம்பிச்சப் பஞ்சாயத்து சாயுங்காலத்தெ கடந்து நடந்ததுல அவ்வே மத்தியானமும் சாப்புடல. ராத்திரிச் சாப்புட்டுப் படுன்னுதுக்கு மனசு சரியில்லன்னு சொன்னவள சமாதானம் பண்ணா போதும்ன்னு நெனைச்சச் சனங்க, சாப்புடச் சொல்லியும் சாப்புடாமப் படுத்த செய்யுவ ஒண்ணும் சொல்லாம வுட்டுப்புட்டுங்க. அவ்வே பச்சத் தண்ணிய வாயில ஊத்தியே ஒரு நாளு கணக்குக்கு இடைவெளி இருக்கும்.

            தம்மேந்தி ஆத்தாதாம் தெகிரியமா ஒரு முடிவெ எடுத்துச்சு. அம்மாசிக் கெழவியப் பக்கத்துல கூப்புட்டு, "ஓங்கி முதுகுல ஒண்ணு போடு! வாயை எப்பிடியும் தொறந்துதாம் ஆவணும். அப்போ கொஞ்சம் இட்டிலியப் பிட்டு வாயிலப் போடுறேம். இத்துச் சாப்புடாத கொறைதாம். ஒடம்பும் பலவீனமா இருக்கு. மனசும் அதெ வுட பலவீனமா இருக்கு. அதெத் தவுர வேற ஒண்ணும் யிப்போ பெரச்சனெ யில்ல!"ன்னு சொன்னதும் அம்மாசிக் கெழவி செய்யுவோட முதுகுல ஓங்கி ஒண்ணுத்தப் போட்டுச்சு. சட்டுன்னு யம்மான்னு வாயத் தொறந்ததும் செய்யுவோட வாயில பிட்டு வெச்சிருந்த இட்டிலிய வாயிலப் போட்டு வுட்டுச்சு தம்மேந்தி ஆத்தா. அதெ அப்பிடியே வாயிலேந்து எச்சில வழிய வுடறாப்புல வழிய வுடுறாளே தவுர செய்யு சாப்புட மாட்டேங்றா. தண்ணிய அந்தப் படிக்கு ஊத்தி வுட்டாலும் பொறையேறுது.

            ஆளாளுக்குச் சனங்க செய்யுவ பல வெதமா திட்டிப் புத்திமதிகளச் சொல்ல ஆரம்பிச்சதுங்க. "நீயி யிப்பிடிச் சாப்புடாம கெடந்து உசுர்ர வுட்டா அவனுக்கு ரொம்ப லாவமாப் போயிடும். இன்னொரு பொண்ண கட்டிக்கிட்டுச் சந்தோஷமா இருப்பாம். அவனெ பிடிக்கலன்னாலும் செரித்தாம் அவ்வேம் மின்னாடி சந்தோஷமா வாழ்ந்து காட்டுனாத்தாம் அந்தப் பெய மனசுக்குள்ள செத்துப் போவாம். யிப்போ நீயி பண்ணுறதப் பாத்தா அவ்வேம் சொன்னதெல்லாம் உண்மெங்ற மாதிரிக்கிப் போறதுக்குத்தாம் துணை போவுமெ தவுர வேற ஒண்ணுத்துக்கும் ஒதவாது. செத்துட்டா எல்லாம் முடிஞ்சிட்டீன்னு நெனைச்சியா? ஒம் பக்கம் சரியா ஆயிடும்ன்னு நெனைச்சியா? செத்தா ன்னா? நாலு நாளுக்கு அழுது கண்ணுத் தண்ணிய வுட்டுப்புட்டு அடுத்ததா அவுகவுக வேலையப் பாக்கத்தாம் நேரமிருக்குமே தவுர ஒன்னையப் பெறவு நெனைக்க யாருக்கு நேரமிருக்கப் போவுது? வருஷா வருஷம் நீயிப் போயிச் சேந்த ஒரு நாள்ல ஒன்னயப் பத்தி நெனைச்சி கொஞ்சம் கண்ணுத்தண்ணிய வுட்டுப்புட்டு அத்தோடப் போயிடும். தெகிரியமா எழும்பி நில்லு. ஒன்னய எதுத்தம்வலாம் கால்ல வுழுவாம்!"ன்னு ஆளாளுக்குச் சொல்ல ஆரம்பிச்சும் என்னவோ சவத்துக்குச் சொல்றதெ போலவே எதெயும் கேக்காதவளப் போல கெடந்தா செய்யு.

            நேரம் ஆவ ஆவ அவளோட பல்லு தானா‍வே கிட்டிக்கிட ஆரம்பிச்சிது. ஒடம்பு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிச்சது. கையும் காலும் இழுத்துக்கிட்டாப்புல ஒதைச்சிக்கிட்டும், உள்ள வாங்கிக்கிட்டும் என்னவோ ஒரு மாதிரியா பண்ண ஆரம்பிச்சா. சுத்தி நின்ன சனங்க அவளோட காலையும் கையையும் இழுத்துப் பிடிச்சிக்கிட்டுங்க. யாரோட பிடிக்கும் கட்டுப்படாம சாமி வந்ததுப் போல அவ்வே ஒடம்பு திமிரித் திமிரி அடங்க ஆரம்பிச்சது. அவ்வே கெடக்குற நெலையும், தொவண்டாப்புலயும், வெறி பிடிச்சாப்புலயும் பண்ணுன ஒவ்வொண்ணையும் பாத்தப் பெறவு மேக்கொண்டு வூட்டுல வெச்சி எதையும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சது. இனுமே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறதெ தவுர வேற வழியில்லன்னு புரிஞ்சது. சுப்பு வாத்தியாரு விகடுகிட்டெ சொல்லிக் காருக்கு வாரச் சொல்லிப் போன அடிக்க சொன்னாரு.

            காரு ஒரு அரை மணி நேரத்துல வூட்டுக்கு மின்னாடி வந்துச்சு. கார்ல அப்பிடியே செய்யுவத் தூக்கிப் போட்டுக்கிட்டு, வெங்கு, தம்மேந்தி ஆத்தா, அம்மாசிக் கெழவி, சுப்பு வாத்தியாருன்னுக் கெளம்பிப் போனுச்சுங்க. கார்ர எங்கயும் நிறுத்தாம நேர்ரா கொண்டுப் போயி திருவாரூரு ஏயெம்சி ஆஸ்பிட்டல்ல நிறுத்தச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு. எடுக்க வேண்டிய சாமாஞ் செட்டுகள எடுத்துக்கிட்டு பின்னாடியே வெரசா வந்துப்புடுன்னு மவ்வேங்கிட்டெயும் சொல்லிட்டு கெளம்புனவரு பாக்கப் பரிதாபமா இருந்தாரு.

            விகடு டிவியெஸ்ஸூ பிப்டியக் கெளப்பிக்கிட்டு, ஒரு பையில கொஞ்சம் துணி மணிகள அள்ளிப் போட்டுக்கிட்டு, சுட்டு வெச்சிருந்த இட்டிலிகள ஒரு தூக்குல அள்ளிப் போட்டுக்கிட்டு, வூட்டுப் பீரோல்ல அங்க இங்க கெடந்த காசி, பணத்தெ அத்தனையையும் ஒண்ணு வுடாம தெரட்டிக்கிட்டு, போறப்ப ஆயிகிட்டெ வூட்டப் பாத்துக்கிட்டுத் தெகிரியமா இருக்கச் சொல்லிட்டுக் கெளம்புனாம். நாமளும் கெளம்பி வர்றேன்னு சொன்ன ஆயியப் பாத்து, "சித்தெ பொறுமையா மட்டும் வூட்டுல இரு!  பாப்பாவப் பாத்துக்கிட்டுக் கெட. நாம்ம ஆஸ்பிட்டலுக்குப் போனதும் போன அடிக்கிறேம். அதாங் மூணு பொம்பளைக, யப்பால்லாம் போயிருக்காகல்ல. ஒண்ணும் பயப்புடற மாதிரிக்கி இருக்காது. அப்பிடி நீயி வர்ற வேண்டிய நெலமெ யிருந்தா நாம்மப் போயிப் போன அடிக்கிறேம். கெளம்பி தயாராவே யிரு. எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி ஏறி வந்துப்புடலாம்! யிப்போ நீயி வர்றேன்னா வூட்டப் பூட்டிப்புட்டு கெளம்ப அத்து ஒரு பத்து நிமிஷம் ஆவும். சொல்றதெக் கேளு!"ன்னாம் விகடு.  ஆயி ஒண்ணும் சொல்ல முடியாம, "போயிச் சேந்த ஒடனேயே போன அடிச்சிப்புடுங்க! நமக்கு இஞ்ஞ தவிப்பாவே இருப்பேம்!"ன்னா. செரின்னு சொல்லிட்டுக் கெளம்புனாம் விகடு. அவ்வேம் டிவியெஸ் பிப்டியில வேகமா முடுக்கிட்டுக்கிட்டுப் போறதையே வூட்டுக்கு மின்னாடி நின்ன மித்த சனங்களோட சனங்களா வெறிச்சிப் பாத்துட்டு நின்னா ஆயி.     

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...