22 Oct 2020

நம்ம கூட வெச்சிப் பாத்துக்கிறேன்!

நம்ம கூட வெச்சிப் பாத்துக்கிறேன்!

செய்யு - 602

            பஞ்சாயத்து முடிஞ்சது. யாரும் மத்தியானம் சாப்புடல. மத்தியானம் சமைச்சது அப்படியே கெடந்துச்சு. இதுக்கு மேல யாரையும் பட்டினிப் போடாம ஒடனயே எல்லாரையும் சாப்புட வெச்சிப்புடணும்ன்னு சுப்பு வாத்தியாரு மெனக்கெட்டாரு. ஆனா அவரோட முயற்சிப் பலிக்கல. சந்தானம் அத்தானும், பரசு அண்ணனும் தங்க கூட அழைச்சிட்டு வந்த ஆட்களெ அழைச்சிக்கிட்டு மாடியில இருந்த கொட்டகைக்கு ஏறுனுச்சுங்க. எல்லாத்துக்கும் பசி மரத்துப் போச்சுட்டுதா சொன்னுச்சுங்க. ஏம் அப்படிச் சொன்னாங்கங்றதுக்கான காரணம் கொஞ்ச நேரத்துல புரிஞ்சது. மாடிக்கு ஏம் ஏறுதுன்னுப் புரிஞ்சதும் சுப்பு வாத்தியாரு வீட்டுக்கு உள்ளார வந்து உருளைக் கெழங்குல செஞ்சு வெச்சிருந்த கறியை அப்பிடியே எடுத்துக்கிட்டு மாடி மேலப் போயிக் கொண்டு கொடுத்துட்டு வந்தாரு. கொஞ்ச நேரத்துல ஊறுக்காயி இருந்தா கேட்டதா சொல்லி ஒரு ஆளு வந்து கேட்டதும் அதெயும் எடுத்துக் கொடுத்து விட்டாரு. சந்தானம் அத்தானோட கார்லேந்து சரக்குப் பாட்டில்கள எடுத்துக்கிட்டு ரெண்டு மூணு பேரு மாடியில ஏறுனுச்சுங்க. மாடி ‍மேல குடிச்சிக்கிட்டெ அவுங்கப் பேசுறதும், சிரிக்கிறதுமான சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அவுங்க பாட்டுக்கு பலவெதமா ஆளாளுக்குப் பேசிட்டெ இருந்தாங்க.

            "அவ்வேம் என்னாம்பீ! கெழட்டுப் பயலாட்டாம் இருக்காம். இந்தப் பொண்ணு ஓங்கி ஒரு ஒதெ ஒதைச்சா பட்டணத்துக்கு வெளியிலப் போயி வுழுந்துடுவாம் போலருக்கு. அதெ இந்தப் பொண்ணு அன்னிக்கே செஞ்சிருந்தா இன்னிக்கு இந்தப் பஞ்சாயத்தெ கெடையாதும்பீ!"ன்னு சொல்லிட்டுச் சிரிக்கிற ஒருத்தரோட சத்தம் கேட்டுச்சு.

            "வயசனாப் பயலுக்குத் தண்டு எந்திரிக்காதும்பீ! வேற மொறையிலத்தாம் கொழந்தைக்கு முயற்சிப் பண்ணியாவணும். இந்த கருத்தரிப்பு மையத்துக்குப் போனா அந்த வேலையப் பண்டிடுவாஞ்ஞ. ன்னா காசிக் கொஞ்சம் செலவுத்தாம் ஆவும். டாக்கர்ரா இருக்காம்ல பண்டிகிடட்டும். மவ்வனே அதுக்கு மட்டும் காசி கீசின்னு இஞ்ஞ வந்து கேக்கட்டும். அவனெ செருப்ப கழட்டியே அடிப்பேம். அத்தோட வுட மாட்டேம். அப்பிடியே வெட்டிப் போலி போட்டுப்புடுவேம்!"ன்னு இன்னோரு கொரலும் சிரிப்புச் சத்தத்தோட கேட்டுச்சு.

            "பயலெ! போறப்ப கூப்புட்டு வெச்சி ஒரு வார்த்தெ பேசுனேம். பொண்டாட்டிய கெழட்டி வுட்டுப்புட்டுப் போவலாம்ன்னு நெனைச்சே வெக்காலி ஒன்னய சென்னைப் பட்டணத்துலயே வெச்சித் தூக்கிப்புடுவேம்ன்னேம் பாருங்க. பயலுக்கு வெடவெடத்துப் போயிடுச்சு. இன்னு ரண்டு வார்த்தெ பேசிருந்தா நின்ன எடத்துலயே பேண்ட நனைச்சிருப்பாம் போலருக்கு. அப்பிடியே தொட ரண்டும் நடுங்குது மாப்ளே! ந்நல்லா தெரியுது. அந்த ஆட்டத்தெ கொஞ்சம் கட்டில்ல ஆட்டியிருந்தாம்ன்னா வேல முடிஞ்சிருக்கும். முடியாதப் பயலுவோ இந்த மாதிரிக்கி சரக்கக் கொஞ்சம் அடிச்சிட்டுப் படுத்தா கெளம்பிடும்ங்றேம்!"ன்னு அடுத்தச் சிரிப்போட ஒரு கொரலு வந்துச்சு.

            "இந்தப் பயலுக்குல்லாம் ஒரு பஞ்சாயத்தா? நெனைச்சா சிரிப்புச் சிரிப்பாத்தாம் வருது. அவ்வேம் என்னங்க பையனோட அப்பங்கார்ரேம் தாடிய வெச்சிக்கிட்டு அதெ எந்நேரத்துக்கும் சொரிஞ்சி வுட்டுக்கிட்டெ இருக்காம். தாடி முடியிலயுமா அரிப்பு இருக்கும்? ஏம்லா தாடியில பேனா ஈறா எது கெடக்கும்? முடியைப் போட்டு பரக் பரக்குன்னு இழுத்துக்கிட்டு. அவனெ பாத்துப்புட்டு நமக்கே கொஞ்சம் நேரத்துக்குப் பாத்தீயன்னா தாடி இருக்குறாப்புல நெனைப்புல நாமளும் தாடைக்குக் கீழே வெறுங்காத்த உருவுறேம். அப்பம் ஒரு சாமியாருப் பயலா இருப்பாம் போலருக்கு காவி வேஷ்டியக் கட்டிக்கிட்டு. மவ்வேம் நெசமாலுமே சாமியாருப் பயலா இருப்பாம் போலருக்கு. இவனையெல்லாம் எவ்வேம் கலியாணத்தக் கட்டிக்கிடச் சொல்றாம். பேயாம இருந்திருந்தா இன்னிக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கெ பாதிக்கப்பட்டுப் போயிருக்காது. இந்த மாதிரிப் பயலுகள அப்பிடியே நிக்க வெச்சு சுடணும்ங்க! யில்ல பட்டக்ஸூக்குக் கீழே பாம்ம வெச்சி காலி பண்டனுங்றேம். பொட்டப் பயலுவோ! எதுக்குக் கலியாணத்தப் பண்டுறானுவோ? முடியலன்னா வுட்டுப்புட வேண்டியதுதானே. ரொம்ப அரிப்பெடுத்தா ஒரு அவ்சாரிக்கிட்டெ போயித் தீத்துக்கிட வேண்டித்தானே? அதுவும் இந்தப் பயலுக்கு அவ்சாரிக் கூட வேண்டிதில்ல. அதுக்குன்னே நெறைய பொறுக்கிப் பயலுவோ பட்டணத்துல கெடக்கானுவோ. அஞ்ஞப் போயி சொரிஞ்சிக்கிட வேண்டித்தானே! என்னாங்க ஒரு டாக்கடருக்குப் படிச்சி வேலையில இருக்காம். கலியாணத்தப் பண்ணி இப்பிடி வுட்டா பொண்ணோட நெலமெ என்னான்னு யோஜிக்கத் தெரியலன்னா, அவ்வேம் நெசமாத்தாம் டாக்கடருக்குப் படிச்சானா? யில்ல போலி டாக்கடர்ரான்னு கேக்குதேம்? நாளைக்கே அந்தப் பயலப் பத்தி மெடிக்கல் போர்டுக்கு எழுதிப் போடலாம்ன்னு இருக்கேம்!"ன்னு அடுத்தக் கொரலு சிரிப்புச் சத்தத்தோட கேட்டுச்சு.

            போதை மேல ஏற ஏற பேச்சு இன்னும் பலவெதமா பேச்சு போனுச்சு. சில சமயங்கள்ல அவுங்க சத்தமா சிரிச்சிப் பேசுனது கீழே கூடத்துல உக்காந்துகிட்டு இருந்தவங்களுக்குக் கேட்டுச்சு. உச்சகட்டமா, "அந்தப் பயல‍ பேண்ட அவுத்துப் பாத்துப்புடலாம்ன்னே பாத்துப்புடலாம்ன்னு நெனைச்சேம்! வெக்காலி பேண்ட மாட்டிக்கிட்டு வந்து உக்காந்தாம் பாருங்க! அதுலயும் தம்பி மொறையில உள்ளவங்களையும், தகப்பம் மொறையில இருக்கறவங்களையும் சந்தேகப்பட்டுச் சொன்னாப்போ நமக்கு ஆத்திரம் தாங்கல. பஞ்சாயத்துல இருக்குறவங்க வேற கூட இருக்காங்றதால வுட்டேம். ல்லன்னா ஒக்கமாக்கா அவனெ அஞ்ஞயே வெச்சி நீயி ஒழுங்கா ஆம்பளையா யிருந்தா ஒமக்கும் ஏம்டா அந்த மாதிரியான நெனைப்புக வருதுன்னு சபையிலயே வெச்சிக் கேட்டிருப்பேம்! சந்தானம் மச்சாம்தாம் அதல்லாம் வாணம்ன்னு அப்பைக்கப்போ தொடையில தட்டுது. செரின்னுத்தாங் வுட்டுப்புட்டேம்! ஆன்னா சந்தானம் மச்சாம் கோவப்பட்டு அடிக்காம யிருந்தது நமக்கே ஆச்சரியமா போயிடுச்சு. எப்பிடி மச்சாம் ஒமக்குக் கோவமே வாரல. சாதாரண வெசயத்துக்குப் பாஞ்சு தல குப்புற வுழுந்து பொசுக்குன்னு கைய நீட்டிப்புடுவீயே?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "என்னத்தெ பண்ட சொல்றே? மாமா பொண்ணோட வாழ்க்கயெப் பாக்குறதா? நம்மட கோவத்தப் பாக்குறதா? செரித்தாம் போ! எடுபட்ட நாயீ எதெயோ கொரைச்சிட்டுப் போன்னு வுட்டுப்புட்டேம். ஆன்னா மனசுக்குள்ள ஆத்திரந்தாம். இழுத்து வெச்சு வெளுத்திருப்பேம். ஒரு பொண்ணோட வாழ்க்கயா இருக்கேன்னு பதிவிசுப் பண்ணிட்டேம். செரியான வெங்கம் பயலுங்கடா அவ்வேனுங்க. இப்பிடித் தெரிஞ்சிருந்தா வூட்டுலயே வெச்சி நாலு இழுப்பு இழுத்துப்புட்டு பஞ்சாயத்துக் கெடையாது, ஒரு மண்ணும் கெடையாது. மருவாதியா பொண்ண வெச்சி வாழுற வழியப் பாருடான்னு சொல்லிருப்பேம். இந்த மாதிரிப் பயலுக எல்லாம் பொண்ண இருக்குற எடம் தெரியாம வெச்சிக் குடித்தனத்த நடத்திட்டுப் போவணும். அதுவும் கிராமத்துப் பொண்ணா புருஷங்காரனே தெய்வம்ன்னு நெனைச்சிக்கிட்டு அது பாட்டுக்குக் காலத்தெ ஓட்டிக்கிட்டுக் கெடக்கும். அவனுக்கும் எந்தப் பெரச்சனை யில்லாம காலம் ஓடும். காலப்போக்குல ஒரு கொழந்தையும் உண்டானாலும் உண்டாவும். உண்டான்னா பாக்குறது, யில்லன்னா ஒரு கொழந்தையெ தத்து எடுத்துக்கிட வேண்டித்தாம். யில்ல மச்சாங்கார்ரேம் புள்ளைய ஒண்ணுத்த கூட எடுத்து வளத்துக்கிடலாம். வழிக நெறைய இருக்குங்க. இந்தப் பயலுவோ பேயாம கெடந்தாப் போதும். அதெயெல்லாம் பேசிச் சரி பண்ணுறதுக்கு எஞ்ஞ மாமாவே இருக்கு. அதெயெல்லாம் ஊரு ஒலகம் ஒண்ணு சொல்லாதபடிக்கு சரி பண்ணப் பாக்கும். வெவரம் புரியாதப் பயெ. எப்பிடிப்பட்ட எடத்துல கலியாணத்தப் பண்ணிருக்காம்? அவுங்க எம்மாம் தொணையா இருப்பாங்க ஏது என்னான்னு புரியாமலே கெடந்துக்கிட்டு துள்ளிக்கிட்டுக் கெடக்காம்! பாத்துப்போம் வுடுங்க. போறப்ப பாத்து சேத்து வுடுங்கன்னு கெஞ்சிட்டு வேறப் போனாம். அந்த எடத்துலத்தாம் நமக்குக் கொஞ்சம் யோஜனையாப் போச்சு. செரி போனாப் போறாம் சாதிக்காரப் பயலா போயிட்டாம். கலியாணம்ன்னு வந்து மாமா பொண்ணா வந்து கட்டிக்கிட்டதால ஒறவுக்காரனாவும் போயிட்டாம். பாத்து எதாச்சும் பண்டி வுடணும்ன்னு முடிவெ பண்ணிட்டேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். இப்பிடியே பேசிகிட்டெ சரக்கெல்லாம் குடிச்சி முடிச்சி பிற்பாடுதாம் எல்லாம் மாடிய வுட்டுக் கீழே எறங்குனுச்சுங்க. மாடி முழுக்க பாட்டில்களா எறைஞ்சி கெடந்துச்சு. அதெ மறுநாளுதாம் சுப்பு வாத்தியாரும், விகடுவும் மாடிக்குப் போயி அள்ளிட்டுக் கொண்டு போயி கொல்லைக் கடைசியில போட்டாங்க.

            பஞ்சாயத்துக்குப் பெறவு ஒரு விருந்தெ போல சரக்கடிச்சி முடிஞ்சதும் தள்ளாடிகிட்டெ கீழே எறங்கி வந்த ஒவ்வொருத்தரையும் சந்தானம் அத்தானும், பரசு அண்ணனும் வழியனுப்பி வெச்சதுங்க. அவுங்கவுங்க வந்த கார்ல கெளம்பிப் போன பெற்பாடு சந்தானம் அத்தான், பரசு அண்ணன் ரண்டு பேரும் வூட்டுக்குள்ளார வந்து சாப்பாட்டப் போடச் சொல்லி அது பாட்டுக்குச் சாப்புட்டுட்டெ கெடந்துச்சுங்க. வைக்க வைக்க சோறு உள்ளார போன வேகம் தெரியல. சாப்புட்டு முடிச்சதும் கூடத்துலயே பாயப் போடச் சொல்லி ஒரு மணி நேரத்துக்கு மேல கொறட்டை அடிச்சிட்டுக் கெடந்து எழும்புனுச்சுங்க. அதுக்குப் பெறவு ஒரு பேச்சு வார்த்தெ ஆரம்பாயிடுச்சு.

            சந்தானம் அத்தானுக்குக் குடிச்ச போ‍தையெல்லாம் தெளிஞ்ச மாதிரி இருந்தாலும் வாயிலேந்து சரக்கு வாசனெ மட்டும் அடிச்சிக்கிட்டெ இருந்துச்சு. பரசு அண்ணன் உக்காந்தது உக்காந்ததுதாம். ஒண்ணும் பேசாம பொம்மையாட்டமே இருந்துச்சு. சுப்பு வாத்தியாருக்குப் பொண்ண அனுப்புறதுல கொஞ்சம் கூட இஷ்டமில்லே. இதெப் பத்தி பஞ்சாயத்தெ ஆரம்பிச்சிப் போறதுக்கு மின்னாடியே சந்தானம் அத்தாங்கிட்டெயும், பரசு அண்ணங்கிட்டெயும் சொல்லி வுட்டுருந்தாரு. அந்தப் போக்குலயே பஞ்சாயத்தெ பேசி வுட்டுப்புடுங்கன்னுத்தாம் சொல்லியிருந்தாரு. நடந்து முடிஞ்ச பஞ்சாயத்து அதுக்கு நேர்மாறா இருந்ததால, "என்னடாம்பீ! இப்பிடிப் பேசி வுட்டு இருக்கீயேளே? நம்மடப் பொண்ணு அஞ்ஞப் போயி குடித்தனம் பண்ணுமாடா? நாம்ம எத்தனெ பேத்தடா காவலுக்கு அஞ்ஞப் போயி வைக்கிறது? கொஞ்சமாட்டாம் யோஜனெ பண்ண வாண்டாமா? அஞ்ஞ பொண்ண அனுப்பி வுட்டுப்புட்டு இஞ்ஞ நாம்ம கோழிக்கனவா கண்டுட்டுக் கெடக்க முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "மாமா! நீயி அந்தக் காலத்து ஆளு. இன்னிக்கும் பெரும்பாலான பசங்கோ இப்பிடித்தாம் இருக்கானுங்கோ. எஞ்ஞ அப்பன் ஆயி காலத்துல, நீயி சின்னப் புள்ளையா இருந்த காலத்துல வூட்டுக்கு அஞ்சு பத்துன்னு பெத்துப் போட்டுச்சுங்க. பெத்துப் போட்டுச்சுங்கன்னா அந்த அளவுக்குத் தெம்பு இருந்துச்சு. சாப்புடுற சாப்பாட்டு ரசாயனம் இல்லாம் இருந்துச்சு. இன்னிக்குப் பாரு வூட்டுக்கு ஒண்ணோ ரண்டோத்தானோ கொழந்தெ குட்டிக இருக்குங்க. சில வூடுகள்ல அதுவும் இல்ல. ஏன்னா இன்னிக்கு சாப்புடுற சாப்பாடே வெசமா இருக்கா. மனுஷன் செத்துப் போவாம இதெ திண்டுகிட்டு வாழுறானேன்னு சந்தோஷப்பட வேண்டிக் கெடக்கு. அந்தக் காலத்துல இருக்குற புள்ளீயோ குட்டியோள வெச்சிட்டு என்னப் பண்டுறதுன்னு கொழப்பம்ன்னா, இன்னிக்கு ஒரு புள்ளையோ குட்டியோ வேணுமே  என்னத்தெ பண்டுறதுன்னு கொழப்பத்துல ஒலகம் போயிக்கிட்டுக் கெடக்கு. நீஞ்ஞ பட்டணத்துக்கு வந்து பாத்தீன்னா அரும்பாக்கத்துலயே நமக்குத் தெரிஞ்சி நாலைஞ்சி செயற்கை கருத்தரிப்பு மையம்ன்னு போர்டெ வெச்சி இதுக்குன்னே ஆஸ்பிட்டல வெச்சிருக்காம். நமக்குத் தெரிஞ்சி ஆஸ்பிட்டல்ன்னா சளி, காய்ச்சலுன்னு போறதுக்குத்தாம். இப்பிடி இதுக்குல்லாம் ஆஸ்பத்திரிங்றதெ நெனைச்சா பெரமிப்பாத்தாம் இருக்கு இல்லியா? ஏன்னா காலம் அப்பிடிப் போயிட்டு இருக்கு. வருங்காலத்துல கலியாணத்தெ கட்டுறவனுக்குல்லாம் கொழந்தெ பொறக்கும்ங்றதுக்கு ஒண்ணும் நிச்சயம் கெடையாது. ஏதோ குடித்தனத்தெ நடத்த வேண்டியதுதாங். கொழந்த குட்டிக்கு அப்படி இப்படின்னு எதாச்சும் ஏற்பாட்ட பண்டிக்கிட வேண்டியதுதாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அதுக்குப் பெறவு பாலாமணி சொன்னதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிது. அதெ சுத்தி உக்காந்திருந்த சனங்க எல்லாம் கவனமா கேட்டுக்கிட்டுச்சுங்க. செய்யுவும் அதெ கேட்டுக்கிட்டுத்தாம் இருந்தா. அதெ கேக்க அவ்வே கண்ணுலேந்து தண்ணி தண்ணியா ஊத்துனுச்சு. அதெப் பாத்துப்புட்டு சந்தனாம் அத்தான், "மொதல்ல அழுவுறதெ நிப்பாட்டு. இப்பிடி அழுது அழுதுதாங் அவனுக்கு எடத்தெ கொடுத்துப்புட்டே. அப்பயே வெச்சு நாலு இறுக்கி இறுக்கியிருந்தா இந்த அளவுக்கு அவனுக்கு எடம் கொடுத்துப் போயிருக்குமா?"ன்னுச்சு.

            "நம்மப் பொண்ணு எப்பிடி இருக்கு? அதுக்கு ஏத்தபடி எப்பிடி பஞ்சாயத்துல பேசுறதுன்னா நீயி ஊரு ஒலகத்துக்குச் சம்பந்தம் இல்லாத ஒண்ணுத்தெ பேசிக்கிட்டு இழுக்குறே? பஞ்சாயத்துலயே வந்து இப்பிடிப் பேசுறெ பயெ நாளைக்கி என்னத்தெ பண்ண மாட்டாம்ன்னு நிச்சயம் இருக்கு? கலியாணத்தெ கட்டி வெச்ச நாள்லேந்து நாம்ம எதாச்சும் அந்தப் பயலெ கேட்டிருப்பமா? அவ்வேம் கேக்காமலேத்தானே நெறைய செய்வினை விசயங்களப் பண்ணிட்டு இருக்கேம். அதுக்கு அந்தப் பயெ எப்பிடி நடந்துக்கிடணும்? ஆன்னா அவ்வேம் எப்பிடி நடந்துக்கிட்டாம் பாத்தீள்ளே? பஞ்சாயத்து வரைக்கும் கொண்டுப் போயி நிப்பாட்டி இருக்காம். இதுல ஒன்னயப் பத்தி வேற தப்புத் தப்பா பேசிருக்காம். அவனுக்குப் போயி வக்காலத்து வெச்சிட்டு நிக்குதீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னா யம்பீ! அவனோட இனுமே குடித்தனம் வெச்சி, அந்தக் குடித்தனத்தெ எங்க வெச்சி, அவுகளோட எவுகப் போயி தங்குறதுன்னு ஆயிரத்தெட்டு விசயங்க இருக்கே? நிச்சயம் அவ்வேம் ஏற்கனவே இருக்குற வூட்டுல வைக்க முடியாது. அப்பிடின்னா நீஞ்ஞ ஒஞ்ஞ வூட்டுலத்தாம் ஒண்ணுத்தல வாடவைக்கு வெச்சி கூடவே பக்கத்துல இருந்துப் பாத்துக்கிடணும். யில்லன்னா பாக்குக்கோட்டையிலத்தாம் வைக்கணும். ஆன்னா நமக்குப் பாக்குக்கோட்டையில வைக்கவும் விருப்பமில்லா. இனுமே அந்த சனத்தோட கொண்டு போயி நம்ம பொண்ட வைக்குறது உசிதமில்ல. அவனெ நம்பி இனுமே பொண்ண வுட முடியாதும்பீ. கொன்னுபுட்டுத்தாம் மறுவேல பாப்பாம்!"ன்னுச்சு வெங்கு.

            "அந்தப் பயலுக்கு அந்த அளவுக்குல்லாம் தெகிரியம் கெடையாது யத்தே! நீயி ஒண்ணும் கவலெப்படாதே. நாம்ம பேசி வுட்டு நம்ம வூட்டுக்கு மேலயே மாடியிலயே வெச்சிக்கிடுறேம். தனம்லாம் வூட்டுலயே இருக்குல்லா. கூட மாட நின்னு பாத்துக்கிடும். நீயி ஒண்ணும் கவலெப்படாதே யத்தே! நம்மள மீறி என்னத்தெ பண்ணிட முடியும்? நாமளே வந்துப் பேசி முடிச்சி வுட்டு, அழைச்சிட்டுப் போயி ஒரு கொழந்தெ குட்டின்னு ஆவுற வரைக்கும் நம்ம கூடயே வெச்சிக்கிடுறேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அப்பிடி முடிஞ்சாலும் செரித்தாம்டாம்பீ! அப்பிடித்தாம் பண்ணா பண்ணியாவணும். இல்லன்னா வெலகிக்கிடணும். அதாங் சரியான முடிவா இருக்கும். பொண்ணு ரொம்ப பயந்துப் போயி கெடக்குடாம்பீ! அதெ வுட அத்துச் சொன்ன கதெயெல்லாம் கேட்டு நாம்ம ரொம்ப பயந்துப் போயி கெடக்கோம்டாம்பீ! அதெ தெரிஞ்சிக்க மொதல்ல. ஒன்னய நம்பித்தாம் காரியத்துல எறங்குறேம். எதாச்சும்ன்னா பின்னாடி நீந்தாம் பொறுப்புப் பாத்துக்கோ! ஏன்னா அவ்வேம் ஒன்னயும் பொண்ணோட சேத்து வெச்சு சந்தேகப்படுறாம். இதெ மனசுல வைக்காமல ஏத்தோ நல்லத்தெ பண்டி வைக்குறதா ஆர்வக் கோளாறுல பின்னாடி நடக்கப் போறதெ யோஜனெ பண்ணிப் பாக்காம காரியத்துல எறங்கிப்புடக் கூடாது பாத்துகோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

“அதெல்லாம் அப்பிடித்தாம் மாமா கொஞ்ச நாளு கரைச்சலும் கிரைச்சலுமா கெடக்கும். அதெப் பாத்தா நாட்டுல குடித்தனமே கெடயாது. நம்மட விசயத்துல தனத்தெ அழைச்சாந்து வெச்சு நீயி நம்மட குடித்தனத்தெ சரி பண்டி வுடலாயா? எல்லாம் ஒரு காலத்துல அப்பிடி யிப்பிடித்தாம் இருக்கும். இன்னொரு காலத்துல சரியாவும். அதெ நெனைச்சிக்கிட்டுக் கெடக்காதே. அதெ அப்பிடியே காத்துல வுடு.”ன்னுச்சு சந்தானம் அத்தான். இதெயெல்லாம் கேக்க அப்பிடியே சுப்பு வாத்தியாரு மனசுல நெனைச்சிருந்த முடிவுலேந்து கொஞ்சம் மாத்தத்துக்கு வந்தாரு. அப்பிடி நடந்து முடிஞ்சா கூட, சந்தானம் அத்தான் தொணையிருந்தா கூட கலியாணத்தெ நடத்தி முடிச்சதோட அர்த்தம் பூர்த்தியாவுதுங்றது சுப்பு வாத்தியாரோட நெனைப்பு. தப்பான எடத்தப் பாத்து கலியாணம் பண்ணி வெச்சிப்புட்டோங்ற உறுத்தலாவது இல்லாமப் போவும்ன்னு ஒரு எண்ணம் இப்போ அவரோட மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சது. ஆன்னா அந்த நெனைப்பு மனசு பூரா ஓடாம, அரையும் கொறையுமா அப்பிடியும் இப்பிடியுமாத்தாம் ஓடுனுச்சு. 

            அப்படியே இப்பிடியும் அப்பிடியுமா ரொம்ப நேரத்துக்கு இந்தப் பேச்சு ஓடிட்டெ இருந்துச்சு. சந்தானம் அத்தான் எல்லாத்துக்கும் தெகிரியத்த கொடுக்குறாப்புல பேசி வுட்டு, இந்தப் பெரச்சனைய மின்னாடி நின்னு பாத்துக்கிடுறதாவும், இந்த விசயத்தெ தம் பொறுப்புல எடுத்துக்கிடறதாவும் சொல்லிட்டு அன்னிக்கு ராத்திரி பதினோரு மணி அளவுக்குத்தாம் கெளம்புனுச்சு. அதோட பரசு அண்ணனும் காருக்குப் பின்னாடி தன்னோட ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளண்டர் வண்டிய எடுத்துக்கிட்டுக் கெளம்புனுச்சு. கெளம்புறப்போ எல்லாரு மொகத்துலயும் ஒரு தெளிவு இருந்துச்சு. ஒரு நல்ல காலம் பொறந்துடும், ஒரு மாத்தம் உண்டாயிடும்ங்ற நம்பிக்கெ உண்டானுச்சு. அது வரைக்கும் மனசுக்குள்ள உண்டாயிருந்த வெறுப்பும், அவநம்பிக்கையும் அகண்டாப்புலயும் இருந்துச்சு. நாளையப் பொழுது விடிஞ்சி எழுந்திரிக்கிறப்ப இன்னும் மனசு தெளிவா இருக்கும்ன்னு பட்டுச்சு. அந்த நம்பிக்கெதானே வாழ்க்கெ!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...