21 Oct 2020

குத்தம் குறைகளப் பாத்தா குடித்தனம் இல்ல!

குத்தம் குறைகளப் பாத்தா குடித்தனம் இல்ல!

செய்யு - 601

            என்னதான் குத்தங் குறை இருந்தாலும் கலியாணங்ற ஆயிரம் காலத்துப் பயிரெ சட்டுன்னு அறுத்து அந்தாண்ட போட்டுட கிராமத்துச் சனங்களுக்கு மனசு வந்துப்புடாது. கொழந்தெ குட்டி இல்லன்னு சண்டெ வந்து பிரியுறாப்புல இருக்குற தம்பதிகளையே அப்பிடி இப்பிடின்னு பேசி சரிபண்ணி வுட்டுப்புட்டுதாம் மறுவேல பாப்பாங்க. வைப்பாட்டி வெச்சிக்கிட்டு குடித்தனம் பண்ணுறவனையே எப்பிடியே குடும்பத்தோட சேத்து வெச்சி ஒரு மாதிரியாக குடும்பத்தெ ஓட வெச்சிப் புடுவாங்க. அது கெடக்குது கருமம்ன்னு அந்த கருமத்தெப் பாத்தா புள்ளீயோ குட்டியோளட எதிர்காலம் என்னத்தெ ஆவுதுன்னு ரண்டு பேச்ச கொச்சையா கேவலமா நாக்கெ புடுங்கிக்கிறாப்புல கேட்டுப்புட்டு எப்பிடியோ ஒரு அனுசரணைய கொண்டாந்து நிப்பாட்டிப் புடுவாங்க. இதெ அப்பிடியே வெச்சிக்கிட்டு குடிகார புருஷனோட நடக்குற சண்டைக்கிப் போயி, "செரித்தாம் போ ஆயி, பயெ குடிச்சிட்டு வந்து உங்கிட்டதானே கெடக்குறாம்ன்னு சந்தோஷப்பட்டுக்கோ, எவுத்தியோடயோ பொயிக் கெடக்காம அந்த மாரியாயித்தாம் காபந்து பண்ணுறான்னு நெனைச்சுக்கோ!"ன்னு பொண்டாட்டிக்காரிகிட்டெ ஒரு சமாதானத்த வெச்சு பொசுக்குன்னு வாய அடைச்சி வுட்டுப்புட்டு போயிகிட்டெ இருப்பாங்க.

            கிராமப் பஞ்சாயத்துக்கு எப்பயும் சாதியும் குடும்பமும் முக்கியம். அது கலைஞ்சிடாத அளவுக்கு என்னென்ன வேலயப் பாக்கணுமோ அத்தனையையும் பாப்பாங்க. புருஷன் அடிச்சிப்புட்டானேன்னு ஒரு பிராதெ வைக்க முடியாது. ஒம்பட புருஷன் ஒன்னய அடிக்காம இதுக்குன்னு ஒரு சின்ன வூடெ கட்டிக்கிட்டு அவளையா அடிக்க முடியும்ன்னு பொசுக்குன்னு கேட்டுப்புடுவாங்க. ஒரு சாதிக்கார பயெ பிற சாதிக்கார பயெல அடிச்சிக் கொன்னாத்தாம் அது கொலெ. ஒரு சாதிக்குள்ள அடிச்சிக்கிட்டுக் கொன்னுப்புட்டா ஒரு சாதிக்காரப் பயலுவோதானே அடிச்சிக்கிட்டுச் செத்தானுவோ, இதெப் போயி கம்ப்ளெய்ண்ட்டு பண்ணி ஒஞ் சாதிக்காரனெ ஒஞ் சாதிக்காரனே மாட்டி வுடப் போறீயளாக்கும்ன்னு அதெ கமுக்கம் பண்ணிப்புடுவாங்க.

            இப்போ ரெண்டு பேத்தையும் வெசாரிச்சப் பெறவு ரண்டாவது பஞ்சாயத்துல என்ன முடிவு எடுப்பாங்கன்னு இதெ வெச்சே நீங்க கணிச்சிப்புடலாம். இந்தச் சம்பவங்க எல்லாம் புதுசா தெரியுறவங்களுக்குத்தாம் அதிர்ச்சியா இருக்கும், ஆச்சரியமா இருக்கும். பழந் தின்னு கொட்டெ போட்டெ சில பெரிசுக கிராமத்து இருக்குதுங்க. அதுகளுக்கு இதெ விட அதிர்ச்சியான பல கதைக தெரியும். அதுகளப் பாத்துப் பாத்துப் பழக்கப்பட்ட அதுகளுக்கு இத்து ன்னா தம்மாத்துண்டுன்னுத்தாம் தெரியும். அதுல லாலு மாமாவையோ, சித்துவீரனையோ எடுத்துக்கிட்டாலும் இத்துல்லாம் அவுங்களுக்கு ஒரு பெரிய பெரச்சனையோ யில்ல. அவுங்க சொந்த வாழ்க்கையில அதெ வுட மோசமான அனுபவத்தப் பாத்தவங்க. சின்னுவோட அப்பாவும், பரமுவோட அப்பாவும் இந்தக் கிராமத்து அசாமிங்க. அவுங்களுக்குத் தெரியாம இந்தக் கிராமத்துல எதுவும் நடந்திருக்கிறதுல. அத்தோட அவுங்களோட பாட்டன், முப்பாட்டன்க காலத்து கதைக வரையும் அறிஞ்சவங்க.

            பொண்ணு மாப்புள ரண்டு பேத்திடமும் எல்லாத்தையும் கேட்டுட்டு வந்தப் பெற்பாடு சின்னுவோட அப்பாத்தாம் மொதல்ல பேசுனாரு. ஆளு நல்ல கருப்புன்னாலும் ஒறுப்பான்ன கொரலு. இடுப்புல மடிச்சிக் கட்டுன கிழிஞ்ச கைலியும், ஓம்டை வுழுந்த கை வெச்ச பனியனும் மேலுக்கு ஒரு துண்டெ போட்டுக்கிட்டு அவரு பேசுன தொரனெ இருக்கே அப்பிடியே அந்த ராசா காலத்துல ராசாவே வந்து தீர்ப்பெ வழங்குனாப்புல அப்பிடிக் கணீர்ன்னு இருந்துச்சு. "நமக்குத் தெரிஞ்ச வரையில, அதாச்சி நாம்ம வெசாரிச்ச வகையில பொண்ணும் மாப்புள்ளையும் கலியாணமாயி மனசு வுட்டுப் பேசுனாவோளான்னு தெரியல. இந்தக் காலத்துப் புள்ளீயோ நம்ம காலத்து மாதிரி கெடையாது. நாஞ்ஞலாம் கலியாணம் ஆன காலத்துலயே பொண்ணு மொகந் தூக்கிப் பேசுறதுக்குள்ள கொழந்தெ பொறந்து பால்ல குடிச்சிக்கிட்டுக் கெடக்கும். ஏன்னா ஏம், என்னான்னா என்னா அம்புட்டுத்தாம் பேச்சு. அப்பிடியே கூட காலம் இருந்திருக்கலாம் போல. யிப்போ ன்னான்னு பொண்ண பாக்க வர்றப்பவே மாப்புளப் பொண்ணப் பாத்து பேசணுங்றாம். பொண்ணும் பயலப் பாத்து பேசணுங்குது. காலம் அந்த அளவுக்கு நாகரிகமாப் போச்சு. அப்பிடி இருக்குறப்ப பொண்ணும் புள்ளையும் தங்களுக்குள்ள எப்பிடியெல்லாம் மனசெ வுட்டுப் பேசிருக்கணும்? இதுக என்னான்னா நவகெரகத்தெப் போல இத்து ஒரு தெசையில இருந்திருக்கும் போல. அத்து ஒரு தெசையில இருந்திருக்கும் போல. அஞ்சு வெரலும் ஒண்ணா யில்ல. ஆன்னா அஞ்சு வெரலும் கைக்குள்ள அடக்கம். ஒரு மரத்துக் காய்கள்ல வெவ்வேறு ரூவ அளவு உண்டுன்னாலும், அத்தனையும் ஒரு மரத்துக் காயிலத்தாம் அடக்கம். பொண்ணு புள்ளையோட்ட கொஞ்சம் மின்ன பின்ன இருந்தாலும், குத்தங் குறையே இருந்தாலும் அதெல்லாம் குடித்தனத்துக்குள்ள அடக்கம்! இதெ பொண்ணு புள்ள ரண்டும் சூசகமா புரிஞ்சிக்கிட்டா விசயம் முடிஞ்சிடுச்சி. இதுக்கு மேல பொண்ணு புள்ள ரண்டும் நடத்துற தாம்பத்தியத்துல பெறத்தியாரு உள்ள பூந்து கருத்து சொல்றது அவ்வளவு நல்லதில்ல. அவ்வளவுதாங் நாம்ம சொல்ல நெனைக்கிறது!"ன்னு பேசி முடிச்சாரு சின்னுவோட அப்பா. வெசயத்த வாங்குன வரைக்கும் சரியாத்தாம் பேசிருக்கிறாருன்னு அவரோட பேச்ச கேட்ட சனங்க மனசுல ஒரு நெனைப்பு. வெசாரிச்ச வெசாரிப்புல பரமுவோட அப்பாவும் இருக்காருல்லா.

            அடுத்ததா பரமுவோட அப்பா பேச ஆரம்பிச்சாரு. "யண்ணம் பேசுனதுதாங் நம்மோடதும். புருஷனும் பொண்டாட்டியும் ஒண்ணுப்பட்டுப் போயிட்டா எந்தக் கொறையையும் சரி பண்ணிக்கிடலாம். அதெ சரிபண்ணிக்கிட வேண்டியது ஒருத்தருக்கொருத்தரு இணைஞ்சாப்புல செஞ்சிக்கிட வேணும். பச்சையா சொல்றதுன்னா புருஷனெ மயக்கிக்கிட வேண்டியது பொண்டாட்டிக்காரிப் பண்ணிக்கிட வேண்டியது. பொண்டாட்டிக்காரிய மயக்கி வெச்சிக்கிறது புருஷங்கார்ரேம் பண்ணிக்கிட வேண்டியது. இதுல ஒண்ணும் குத்தமில்ல. ஒருத்தருக்கொருத்தரு மயக்கிடறதோட, ஒருத்தருக்கொருத்தரு வுட்டுக் கொடுத்துப்புட கூடாது. பொண்டாட்டி வெச்ச ரசம் வாயில வைக்கவே வக்கில்லன்னாலும் எம் பொண்டாட்டியப் போல ரசம் வைக்க ஒலகத்துலயே ஆளு இல்லன்னு சொல்லிக்கிறதுல ஒண்ணும் குத்தம் வந்துச் சேந்துடப் போறதில்ல. சொல்லப் போனா அப்பத்தாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள அந்நியோன்யம் நெலைக்கும். புருஷங்கார்ரேம் வாங்கியாந்தா கத்திரிக்காயி அத்தனையும் பூச்சியா இருந்தாலும், நீஞ்ஞ அம்புட்டு பாத்து வந்த கத்திரியில இப்பிடிப் பூச்சின்னா கடையில இருந்த மித்த கத்தரியில எம்மாம் பூச்சி இருந்திருக்கும் மாமான்னு புருஷங்காரனெ வுட்டுக் கொடுக்காம பேசுறதுனால ஒண்ணும் கொறைஞ்சிடப் போறதில்ல. சொல்லப் போனா அடுத்த தடவெ இன்னும் மெனக்கெட்டு சாமாஞ் செட்டுகள வாங்கி வரப் பாப்பாம் புருஷங்கார்ரேம். இதாங் குடும்பம் நடத்துற லட்சணமா நாம்ம அறிஞ்ச வரையில, அனுபவப்பட்ட வரையில நெனைக்கிறேம். இந்த பஞ்சாயத்துல நடந்த கதெ என்னான்னா ஒருத்தரு மாத்தி ஒருத்தரு கொறைதாங். அந்தக் கொறையில உண்மெ இல்லன்னும் சொல்ல வாரல. அத்தனையும் உண்மென்னும் சொல்ல வாரல. ஒரு சிலது கொஞ்சம் கூட கொறைச்சலு இருக்கலாங்றதும் எஞ்ஞளுக்கு தெரியாததில்ல. அவுங்க சொல்றதுல எதுவும் ஒலகத்துல நடக்காத ஒண்ணுல்ல. நம்ம ஊர்ல கெடந்தானே மொட்டையன். அவ்வேம் கதெ ஒஞ்ஞளுக்குத் தெரியாததில்லே. ரொம்ப நாளு வரைக்கும் பக்கிரியோட சுன்னிய ஊம்பிட்டுக் கெடந்தவேம். இதாலயே பக்கிரியோட பொண்டாட்டிக்கும், மொட்டையனுக்குத் தகராறு வந்து அதுக்குப் பஞ்சாயத்த நடந்தெ கதெ பல பேத்துக்குத் தெரிஞ்சிருக்காது. பெறவு மொட்டையனுக்குப் பொண்ணப் பாத்து பொண்ணோட ஊர்லயே குடித்தனம் வெச்சு ரண்டு புள்ளையாகி, யிப்போ புள்ளைகளுக்கும் புள்ளையாகிக் கெடக்குது. சுப்பு வாத்தியாரு எதிர்வூட்டுக்கு எதுத்தாப்புல இருக்குற வூட்டுல நடந்தெ கதெ இருவது வருஷத்துக்கு முந்தின கதெ. அன்பரசுப் பயெ ஒரு பொண்ண ஏய்ச்சிப்புட்டு வாயும் வயித்தோட தூக்குல தொங்க வுட்டுப்புட்டு வந்துட்டாம். பெறவு சமாதானம் வெச்சி அந்தப் பயலுக்குந்தாம் பெறவு ஒரு கலியாணத்தப் பண்ணி ரண்டு பொட்டப்புள்ளையாயி வயசுக்கு வந்து கலியாணத்துக்கு நிக்குதுக. குத்தம்ன்னு பாத்துட்டு நின்னா பாத்துட்டெ நிக்க வேண்டித்தாம். குத்தமில்லாத மனுஷன்னு எவ்வேம் இருக்காம்? குடும்பம்ன்னு வந்தா அந்தக் குத்தம் கொறைய மறைச்சி குடித்தனத்தெ தூக்கி நிறுத்துனாத்தாம் அழகு. அதெ வுட்டுப்புட்டு அத்து நொள்ள, இத்து சொள்ளன்னா குடித்தனம் பண்ணுறதுக்கில்ல. நாட்டுல அவனவனும் நொள்ளத்தாம், சொள்ளத்தாம். அத்து தெரியாம சாமர்த்தியமாத்தாம் ஒவ்வொருத்தனும் குடித்தனத்தெ பண்ணிட்டு இருக்காம். நொள்ள சொள்ளன்னு பாத்தா நாட்டுல ஒரு பொண்ணு பையேம் குடித்தனம் பண்ண முடியாது. இதெ பொண்ணு மாப்புள ரண்டு பேத்துமே புரிஞ்சிக்கிடணும். பெரியவங்க இதெ எடுத்துச் சொல்லணும். இத்தெ மாத்தி இன்னொரு கலியாணத்தப் பண்ணி வெச்சாலும் குத்தங் கொறை இருந்துட்டுத்தாம் இருக்கும். பெறவு அதுக்காக ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு பண்ணிட்டெப் போனா அதுக்கு ஒரு முடிவெ இருக்காது. அம்பது வயசு வரைக்கும் மாத்தி மாத்தி கலியாணத்தெ மட்டும் பண்ணிட்டுக் கெடக்க வேண்டியதுதாம். எல்லா கொறையும் கொழந்தெ குட்டிங்க பொறக்குற வரைக்கும். அப்பிடி கொழந்தெ குட்டிக்கு வாய்ப்புல்லையா அப்பவும் நமக்கு நீயி கொழந்தெ, ஒமக்கு நாம்ம கொழந்தென்னு வாழ்ந்துப்புட்டுப் போறதெதாம் சாமர்த்தியம். பொண்ணு புள்ளையாள பெத்தவங்க கலியாணத்த முடிச்சா பேரப் புள்ளையோளத்தாம் பாக்கணும், சண்டெ சச்சரவே பாக்கக் கூடாது! ரண்டு குடும்பத்துலேந்தும் எல்லாம் வந்துப் பேசுனதுதாம் ஒரு வெதத்தல நல்லதாப் போச்சு. ரண்டு குடும்பத்துப் பெரியவங்களும் இந்த விசயத்துல நாம் பெரிசு நீயி பெரிசுன்னு வறட்டுக் கௌரவம் பாக்காம வுட்டுக் கொடுத்து, அதெ போல பொண்ணும் புள்ளையும் யாரு பெரிசுன்னு வறட்டுத்தனம் பாக்காம, இதுவரிக்கும் நடந்ததெ அப்பிடியே வுட்டுப்புட்டு சேந்துக் குடித்தனம் நடத்துற வழியப் பாக்கணுங்றதத்தாம் நாம்ம பஞ்சாயத்துக்கு சொல்லிக்கிட விரும்புறேம்!"ன்னு முடிச்சாரு பரமுவோட அப்பா. என்ன வெசாரிச்சாங்களோ, என்ன கேட்டாங்களோ, ஆன்னா சின்னுவோட அப்பாவும் பரமுவோட அப்பாவும் பொதுப்படையாக பேசுனதுங்றது பேசி வெசாரிச்ச வகையில் அவுங்க ரண்டு பேரும் பேசுனது ரொம்ப சரியா எல்லாத்துக்கும் பட்டுச்சு.

            "குடும்பத்துச் சார்பா யாராச்சும் எதாச்சும் சொல்லணும்ன்னா சொல்லிப்புடலாம்! பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வர்றதுக்கு அப்பத்தாங் வசதியா இருக்கும்!"ன்னாரு இப்போ சொட்டே கண்ணுராசு.

            "பெரியவங்கப் பேசுனாங்க. கொணமா சொல்ல வேண்டியதெ சொல்லிட்டாங்க. மித்த ஊரு பஞ்சாயத்தெப் போல யில்லாம ரண்டு பக்கமும் சொல்ல வேண்டியதுக்கு நல்ல வாய்ப்பப் பண்ணிக் கொடுத்தாங்க. இருந்தாலும் குடும்பத்துக்குள்ள சிலதெ பேசித் தீக்க வேண்டிக் கெடக்கு. அதெ ஒடனுக்குடன் பேசித் தீத்திருந்தா பஞ்சாயத்து வரைக்கும் வந்து நிக்க வேண்டிய அவ்சியமில்லா. பேசுன வரைக்கும் நாம்ம அறிஞ்சது இதெ வெளியில கொண்டு வந்திருக்கவே வேண்டியதில்லா. வெளியில கொண்டு வந்ததுங்றது ரண்டு குடும்பத்துக்குமே ஒரு வெதத்துல அசிங்கந்தாம். பஞ்சாயத்துக்குன்னு வர்றதுக்கு மின்னாடியே சில விசயங்களப் பேசித் தீத்திருந்தா இந்த அளவுக்கு வந்திருக்கப் போறதில்ல. அதுக்கு நாம்ம பஞ்சாயத்தெ குத்தம் சொல்றதாவோ, பஞ்சயாத்துக்காரர்களோ குத்தம் சொல்றதாவோ நெனைச்சிப்புடக் கூடாது. நாம்ம எஞ்ஞ குடும்பத்துப் பெரியவங்களத்தாம், குறிப்பா என்னையும் சேத்துதாம் குத்தம் சொல்லிக்கிட நெனைக்கிறேம். ஆகையினால இனுமெ இதெ கொறைச்சி மதிப்புடுறதா நெனைச்சிப்புடக் கூடாது. பஞ்சாயத்தெ தப்பா பேசிப்புட்டதாவும் நெனைச்சிக்கிட கூடாது. நல்லதோ, கெட்டதோ இனுமே இந்த விசயத்துல பஞ்சாயத்து தலையிடாம இருந்தா நாஞ்ஞ எஞ்ஞ குடும்பத்துக்குள்ள பெரியவங்கள வெச்சித் தீத்துக்கிடுறோம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். சந்தானம் அத்தான் இப்பிடிப் பேசுனது பஞ்சாயத்தெ ஒரு வெதத்துல கொறைவா மதிப்பிட்டது போல பஞ்சாயத்தாருக்குத் தோணிருக்கணும்.

            "அந்த மாதிரிக்கிப் பேசாதீயே யம்பீ! இஞ்ஞ பஞ்சாயத்துலேந்துல்லாம் யாரு வந்து தலையிடல. பிராது வந்துச்சு. வெசாரிச்சோம். நாலு சொவத்துக்குள்ள இருந்திருந்தா இந்த வெவகாரம் எஞ்ஞளுக்கும் எப்பிடித் தெரிஞ்சிருக்கும்? பிராதுன்னு வர்றப்ப வெசாரித்தாம் ஆவணும். அதாங் மொ‍றை. அதெத்தாம் நாஞ்ஞ செஞ்சோம். அப்பிடி செய்யுறப்பயும் ரண்டு குடும்பத்துக்கும் எந்த பாதகமும் யில்லாமத்தாம் பேசிருக்கோம். பேசவும் வெச்சிருக்கோம். எடுத்த எடுப்புலயே ஒரு வெசயத்தெ சொல்லித்தாம் ஆரம்பிச்சேம். யப்போ மொத பஞ்சாயத்துல நீஞ்ஞ கெடையாது. அதாச்சி சேத்து வைக்குறதுக்குத்தாம் பஞ்சாயத்துன்னும், பிரிச்சி வைக்கறதுன்னு அதுக்கு வேற எடத்தெ பாருங்கன்னும் சொல்லியாச்சு!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு வெடுக்குன்னு.

            அதெ கேட்டுக்கிட்டு சொட்டெ கண்ணுராசுவச் சமாதானம் பண்ணுறாப்புல, "பஞ்சாயத்தப் பத்தி நமக்குக் குத்தங் கொறை எதுவும் கெடையாதுங்க பஞ்சாயத்துக்காரவுகளே. குடும்பத்துல இருக்குற சொந்த பந்தங்க நாஞ்ஞ் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தா இதெ சரிபண்ணிருக்கலாம். அதெ பஞ்சாயத்து வரைக்கும் வர்ற வுட்டுப்புட்டாங்களேங்ற ஆதங்கந்தாம். வேற ஒண்ணும் இல்ல. யாரும் தப்பா நெனைச்சிக்கிட கூடாது!"ன்னுச்சு சந்தானம் அத்தான். ஆகப் பஞ்சாயத்த ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து முடிக்க வேண்டிய நெல வந்துச்சு. அதுக்கேத்தாப்புல பரமுவோட அப்பா, சின்னுவோட அப்பா, பட்டறக்காரரு பட்டாமணி, சொட்டெ கண்ணுராசு இவுங்கள்ல யாரு பேசுறதுன்னு ஒரு யோசனெ. சொட்டெ கண்ணுராசுத்தாம் வாயத் தொறந்தாரு.

            "மனசுல உள்ளதெ பேசுறதுல தப்பு ஒண்ணுமில்ல. ஆன்னா பஞ்சாயத்துன்னு வந்த ஒண்ணெ நாஞ்ஞ பைசல் பண்ணாம எப்பிடி வுடுறது? அப்பிடின்னா ஒண்ணுத்தெ பண்ணுங்க. பஞ்சாயத்துல பேசி வுட்ட வகையில நாஞ்ஞ எஞ்ஞ குடும்பத்துப் பெரியவங்க இதெ பேசித் தீத்துக்கிட்டு அதெ பஞ்சாயத்துக்கு மின்னாடி வெச்சிக்கிடுறோம்ன்னு ஒத்துக்கிட்டுப் பஞ்சாயத்து நோட்டுபுக்குல கையெழுத்தப் போட்டுட்டுப் போங்க! நீஞ்ஞ ன்னா முடிவு பண்ணாலும் அதாச்சி சேத்து வைக்கறதா மட்டுந்தாம். அதெ வந்துச் சொல்லிப்புடுங்க. அதெயே பஞ்சாயத்து முடிவா எழுதி நாஞ்ஞ மூணாவது பஞ்சாயத்துல வெச்சிப் பேசி முடிச்சதா முடிவு பண்ணிக்கிடுறேம். மொத்தத்துல ஒரு முடிவுக்கு வந்திருக்கணும் இந்தப் பெரச்சனெ! அதாங் விசயம்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு.

            "சேத்து வைக்கணுங்றதுதாம் எல்லாத்துக்கும் இருக்குற நெனைப்பு. அதுக்கு அந்தத் தரப்புலயும் செல பேத்து மின்னுக்கு வந்து நிக்குறப்போ அதெ எப்பிடி செஞ்சிக்கிடணும், எந்த மாதிரிக்கிப் பண்ணிக்கிடணும்ங்றதெ நாஞ்ஞ ஒருத்தருக்கொருத்தரு கலந்துக்கிடுறேம்! கலந்துக்கிட்டு ஒரு முடிவெ சொல்லிப்புடுறேம்!"ன்னுச்சு அதெ ஏத்துக்கிடறாப்புல லாலு மாமா.

            "இதெ வளவலள கொழகொழன்னுப் போட்டு இழுத்துக்கிட்டு இருக்கக் கூடாது. சீக்கிரமே முடிச்சிப்புடணும். ஒரு முடிவெ கண்டாகணும் ஆம்மா!"ன்னாம் சித்துவீரன் படபடன்னு எண்ணெய்ல போட்ட பலகாரம் பொறியுறாப்புல. அதுக்குப் பெறவு சுப்பு வாத்தியாரையும், ராசாமணி தாத்தாவையும் பஞ்சாயத்தாருங்க கேட்டதுக்கு அவுங்கப் பஞ்சாயத்துப்படிக்கும், சொந்தக்காரவுங்க முடிவுக்குப் படியும் கட்டுப்படுறதா சொல்லி பஞ்சாயத்து நோட்டுபுக்குல கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாங்க. இப்போ சொட்டெ கண்ணுராசு எல்லாத்தையும் சுத்தி ஒரு பார்வெ பாத்துட்டுப் பேசு ஆரம்பிச்சாரு. அவர்ரே பேசட்டுங்ற மாதிரிக்கு மித்த கிராமத்துப் பெரிசுகளும் அவரையேப் பாத்துச்சுங்க.

            "மூணாவது பஞ்சாயத்துன்னு நாம்ம ஒண்ணும் கூடப் போறதில்லே. அதுக்கு அவ்சியமும் யில்ல. அவுங்க சொல்ற முடிவெ அப்பிடியே எழுதி அவுங்கிட்டெ கையெழுத்த மட்டும் பண்ணிக்கிடுறேம். யாரையும் இனுமே கூட்டி வெச்சு பேசணும் வெசாரிக்கணும்ன்னு அவ்சியமில்ல. அவுங்க முடிவெ பண்ணிகிட்டு வாரட்டும். அதெ எழுதிக்கிறேம். கையெழுத்த வாங்கிக்கிறேம். அவ்வளவுதாங்! மேக்கொண்டு இதுல இதுக்கு மேல வேற எதுவும் பேச வாணாமுன்னு நெனைக்கிறேம். பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டு வந்த அத்தனெ பேத்துக்கும் இன்னாருன்னு பேரு சொல்லாம எல்லாத்துக்கும் சேர்த்து திட்டையோட கெராம பஞ்சாயத்துச் சார்பா நன்றிய சொல்லிக்கிறேம். பஞ்சாயத்துக் கலையலாம். இதெ அங்ஙன இங்ஙன நின்னு யாரும் எதுவும் பேயக் கூடாது. எல்லாம் கலைஞ்சி அவுங்கவுங்க வூட்டுக்கு நேரா போயிடணும். ஒருத்தருக்கொரு கூட கொறைச்சு வாயக் கொடுத்துட்டு வம்பு தும்ப வெலைக்கு வாங்கிட்டு அதுக்கு ஒரு பஞ்சாயத்தப் பண்டுறாப்புல நெலமெயெ உண்டு பண்ணிடக் கூடாதுன்னு எல்லாரையும் தாழ்மையோட கேட்டுக்கிறேம். கலைஞ்சி போவ வேண்டிய எடத்துக்குப் போயி சேருங்க. மறுக்கா எல்லாத்துக்கும் நன்றி. அம்புட்டுதாங்!"ன்னு சொட்டெ கண்ணுராசு சொல்லி முடிச்சதும் ரண்டாவது பஞ்சாயத்துல அவுங்கவுங்க கலைஞ்சாங்க. மணி அப்போ சாயுங்காலமா அஞ்சரையோ ஆறு மணியோ இருக்கும். எல்லாம் காலையில சாப்புட்டச் சனங்கத்தாம். மத்தியானம் நேரம் போறது தெரியாம பஞ்சாயத்து நெனைப்பாவே இருந்ததால அப்பிடியே எல்லாம் நின்னுப்புட்டாங்க. இந்தப் பஞ்சாயத்து மத்தியானம் எல்லாத்தையும் பட்டினி போட்டிடுச்சு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...