20 Oct 2020

மாப்புள சொன்னது!

மாப்புள சொன்னது!

செய்யு - 600

            கடலெகாரரு மவ்வேம் பன்னீரு. வெளிநாடு போயி இப்பதாங் தலையெடுக்க ஆரம்பிச்ச குடும்பம். மொத வேலையா வூட்டைக் கட்டுற வேலையில எறங்கியிருந்தாம் பன்னீரு. உள்ளயெல்லாம் பூச்சு பூசிட்டுத் திண்ணையில மட்டும் பூச்சப் பூசமா குடி போயிட்டாம். பூச்சுப் பூசாம கெடந்த திண்ணையில சிமெண்டு கறை படிஞ்சிருந்த ஒரு பெஞ்சப் போட்டிருந்தாம். அந்த பெஞ்சுல பாலாமணிய உக்கார வெச்சு, சுத்தி நின்னவங்கள அந்தாண்ட கெளப்பி வுட்டு ஆறு பேருமா வெசாரிக்க ஆரம்பிச்சாங்க. "புருஷங் பொண்டாட்டிக்குள்ள சண்டெயில்லா குடும்பம் எங்கயும் கெடையாது. அந்த சண்டெங்றது நீர்க்குமிழி மாதிரிக்கி. உண்டாவறதும் தெரியக் கூடாது. மறையறதும் தெரியக் கூடாது. அப்பிடி இருந்துப்புட்டா எந்தப் பெரச்சனையும் கெடையாது. பொண்ணு சொல்ல வேண்டிய வெசயங்களெ சொல்லிட்டு. மாப்புள்ளக்காரரு சொல்றதெ கேட்டுப்புட்டா சில விசயங்க தெளிவாயிடும்! நாலு சொவத்துக்குள்ள இருக்கு வேண்டிய வம்பு சண்டெ யிப்பிடி பஞ்சாயத்து அளவுக்கு வர்றதுக்கு ன்னா காரணம்? அப்பிடி ன்னா கட்டுன மூணு மாசத்துக்குள்ள சண்டெ வர்றதுக்கு இருக்கு? அப்பிடித்தாம் பொண்ணு மேல கண்ட குத்தந்தாம் ன்னா?"ன்னாரு சின்னுவோட அப்பா.

            பாலாமணி ஒரு பெரிய சிந்தனையாளம் போல கண்ண மூடிட்டு அதெ உள்வாங்கிக்கிட்டு சில வினாடிக அமைதியா இருந்துட்டுப் பெறவு பேச ஆரம்பிச்சாம். அதுக்குள்ள ஒரு பெருமூச்ச இழுத்து விட்டுக்கிட்டு உதட்டை ஒரு மாரியா பிதுக்கிக்கிட்டாம்.

            "அய்யா! பெரியவங்களே! குடும்பம் நடத்தறதெப் பத்தி நமக்கு யாரும் சொல்ல வேண்டாத அளவுக்குப் புத்தகங்களெப் படிச்ச ஆளு நாம்ம. புருஷம் பொண்டாட்டிக்குள்ள மனத்தாங்கல் வந்தா எந்தத் தெய்வத்தெ கும்புடணும், என்னென்ன பரிகாரங்க பண்ணணுங்றதெ தெரிஞ்ச ஆளுத்தாம் நாம்ம. கல்யாணத்துலயேப் பாத்தீயன்னா இதுக்குன்னே ஒரு பொத்தகத்தப் போட்டு கல்யாணப் பரிசா கொடுத்தேம். அதெ பாத்திருப்பீயே. நாம்ம பெரிசா அதெ சொல்ல வேண்டியதில்லா. இப்போ வெசயம் ன்னான்னா, நாம்ம ஒண்ணும் பெரச்சனெ பண்ணிக்கிட்டு ஓடிப் போவல. குடித்தனம் பண்ண வேண்டிய எடத்துலத்தாம் இருக்கேம். பொண்ணுத்தாம் பெரச்சனெ பண்ணிட்டு இஞ்ஞ வந்திருக்கு. அதெ கூப்ட்டுப் போவத்தாம் இந்தப் பஞ்சாயத்து. அதால நாம்ம சண்டெ நிக்குறதாவோ, பெரச்சனெ பண்ணுறதாவோ ஒஞ்ஞ மனசுக்குள்ள ஒரு நெனைப்பு யிருந்தா அதெ தப்புங்றதெ மொதல்ல சொல்லிக்கிறேம். ஆம்மா சண்டெ வைக்கறதும், பெரச்சனெ பண்ணுறதும் யாருன்னு கேட்டாக்கா அத்து பொண்ணுதாம்.

            “நம்மள போல ஒரு புருஷம் கெடைக்கிறதுக்கு ஒஞ்ஞ கிராமத்துப் பொண்ணு புண்ணியம் பண்ணிருக்கணும் போன சென்மத்துல. நமக்குன்னுப் பொண்ணு கொடுக்க நான் நீயின்னு ஆயிரம் பேத்துப் போட்டிப் போட்டாம். அத்தனெயும் வாணாம்ன்னு சொன்னேம். நம்ம ஒறவுல, நம்ம குடும்ப வகையிலத்தாம் கலியாணம் பண்ணணும், அதுவும் ஒரு கெராமத்துப் பொண்ணைத்தாம் கலியாணம் கட்டணும்ன்னு ஒத்தக் கால்ல நின்னு கட்டுனேம். ஒண்ணுத்த நீஞ்ஞ புரிஞ்சிக்கணும், ஒரு டாக்கடர்ரு இந்த அளவுக்கு எறங்கி வந்து எதையும் பண்ண வேண்டியதில்லா. அத்தனையும் பண்ணேம்.

            “நாம்ம நெனைக்கிறேம் கலியாணத்தெ கட்டிக்கிட்டா பொம்பளைங்க நம்ம மேல உசுரா இருப்பாங்கன்னு. எந்நேரம் பாருங்க யிப்பிடிப் பஞ்சாயத்துல வந்து நிக்க வெச்சு நம்ம உசுர்ர எடுக்குறாப்புல ஒரு பொம்பளையக் கட்டிருக்கேம். அதெப் பத்தியும் ஒண்ணுமில்லே. ஏத்தோ அறியாமப் பண்ணுது அந்தப் பொண்ணுன்னுத்தாம் நெனைச்சிக்கிடுறேம். விசயத்துக்கு வர்றேம்! பாத்தீங்கன்னா, ஒரு சின்ன பொருளா இருந்தாலும் செரித்தாம் அவ்வே கேட்டான்னு சொன்னாக்கா அடுத்த நொடி அத்து அவ்வே கையில இருக்கும். அவ்வே யாருக்கு என்னென்ன ஒதவி பண்ணணும்ன்னு சொன்னாலும் செரித்தாம் அதெ செஞ்சு முடிச்சாத்தாம் நமக்கு நிம்மதியா இருக்கும். ஒஞ்ஞ ஊரு பொண்ணக் கொண்டு போயி நாம்ம பட்டணத்துல குடியிருந்த வூட்டுக்குத் தந்த வாடவைய வெச்சி நாலு வூட்டெ வாடவைக்கு எடுத்துக் குடியிருக்கலாம். எதுக்கு இதெ சொல்றேன்னா அப்பிடியெல்லாம் ஒஞ்ஞ கிராமத்துப் பொண்ண நாம்ம பட்டணத்துல வெச்சிக்கிட்டெம்.

            “அப்பிடியெல்லாம் வெச்சுக்கிற புருஷனெ ஒரு பொண்டாட்டி எப்பிடி வெச்சிருக்கணும்? நாம்ம வர்ற நேரத்துக்குச் சோறாக்கிப் போடணுமா இல்லியா? போடுறது கெடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் நாம்ம வர்ற வரைக்கும் அப்பியே உக்காந்திருக்கிறது. வந்த ஒடனே ஓட்டல்ல போயி சாப்பாட்ட வாங்கியாங்றது. செரித்தாம் போ நம்மட பொண்டாட்டிக்கு ஒடம்பு முடியல போலருக்குன்னு நாமளும் போயி வாங்கியாரது. எத்தனெ நாளு எத்தனெ வேள ஒரு பொண்ணுக்கு ஒடம்பு முடியாமாப் போவும் சொல்லுங்க? மாசத்துல முப்பது நாளும், வாரத்துல ஏழு நாளும், ஒரு நாள்ல இருவத்து நாலு மணி நேரமுமா? அப்பிடித்தாம் இருந்தா நாம்ம கட்டுனப் பொண்டாட்டி. என்னத்தெப் பண்ணுறது?கட்டுனப் பொண்டாட்டிய கண்கலங்காம வெச்சிச் சோத்தப் போடுறது புருஷனோட கடமெ இல்லியா? அதெத்தானே இந்து தர்ம சாஸ்திரம் சொல்லுது. நாம்ம சாஸ்திரத்தெ மீறல. அத்து கெடக்குது வுடுங்க. சொத்துப் பெரச்சனெ. மனுஷன் நாலு வேளைக்குச் சாப்புடலன்னாலும் ஒண்ணும் செத்துப் போயிட மாட்டாம்.

            “கலியாணங் கட்டி கழுத்துல கட்டுன மஞ்சக் கயித்தோட ஈரம் கூட காயல. அதுக்குள்ள அரிப்பெடுத்தவப் போல தம்பிக்காரனுக்குப் போனப் போட்டு வூட்டுக்கு வாரச் சொல்லி மணி கணக்கா பேசுனாக்கா ன்னா அர்த்தம்? அக்கா தம்பி பேசுற மாதிரியா ரண்டும் பேசுனுச்சுங்க? வெளியில சொன்னா வெக்கக்கேடு. அந்தப் பயலுக்கும் அறிவு வாணாம் சொல்லுங்க. இப்பத்தானே கலியாணம் ஆயிருக்குங்ற லஜ்ஜையே யில்லாம வர்றாம். தொட்டுத் தொட்டுப் பேசுறாம். இத்து நாம்ம பாக்குறப்போ. பாக்குறப்பவே அப்பிடின்னா பாக்காதப்ப என்னென்ன நடந்திருக்குமோ? சத்தியமா நாம்ம பாக்காததப் பத்தியெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேம். ஏன்னா நாம்ம நாகரீகமான குடும்பத்துலேந்து வந்தவேம். எதப் பேசணுமோ, சொல்லணுமோ அதத்தாம் சொல்லுவேம்.

            “இவ்வே ஒரு பொம்பளத்தானே? இவளெப் பாக்க யாரு வாரணும்? பொம்பளைக வாரணும். அப்பிடி வந்தா அதுல ஒரு ஞாயம் இருக்குங்றேம். வர்றவனுல்லாம் ஆம்பளெப் பயலுகளா இருக்கானுவோ. வேற ஒருத்தனா இருந்தா சந்தேகப்பட்டு அன்னிக்கே அடிச்சிப் புடிச்சி வூட்டெ வுட்டெ தொரத்தி விட்டுருப்பாம். நாம்ம அப்பிடிக் கெடையாதுங்க. நம்மள நம்பித்தாம் அக்காவும், மாமாவும் பொண்ணக் கட்டிக் கொடுத்திருக்காங்கன்னு, அப்பிடில்லாம் போவதடி ராசாத்தின்னு கிளிப்புள்ளைக்குச் சொல்றதெப் போல புத்திச் சொல்லிருக்கேம். சொல்லி ன்னா பிரயோசனம்? கேட்டாத்தானே? கேட்கறதெ கெடையாது. அத்தனெயும் சேதாரந்தாங்க போங்க். பொண்ணு அத்துப் பாட்டுக்குத் தாம் இஷ்டத்துக்கு நடந்துக்கிடுறது. நமக்குச் சந்தேகந்தாங்க. அவ்வேம் தம்பிய வெச்சிருக்காளா ன்னான்னு? யிருந்தாலும் பாருங்க, நாம்ம இனுமே அந்தத் தப்பப் பண்ண மாட்டேம்ன்னு கோயில்ல எல்லாரு மின்னாடியும் கற்பூரத்தெ அணைச்சிச் சத்தியத்தெப் பண்ணட்டும். நாம்ம அழைச்சிட்டுப் போவ தயாரு. நமக்குத் தெய்வந்தாம் அப்பயும் இப்பயும் எப்பயும்.

            “விஞ்ஞானிங்க போனெ எதுக்குக் கண்டுபிடிச்சிருக்காம்? ஒரு ஆத்திர அவ்சரம்ன்னா பேச கொள்ளத்தானே. அதுல எம்மாம் நேரம் பேசுறது? ஒரு பத்து நிமிஷம், மிஞ்சி மிஞ்சிப் போனா இருவது நிமிஷம் பேசலாம். அதுக்கு மேல பேசுனீயன்னா செல்லும் சூடாயிடும். கேக்குறவனும் சூடாயிடுவாம். எம் பொண்டாட்டி இருக்காளே போன எடுத்துட்டாப் போதும், சாமானியத்துல வைக்குறது யில்ல. பேசுவா பேசுவா பேசிட்டெ யிருப்பா. நாம்ம பாக்குறப்பவே நெதமும் மூணு நாலு மணி நேரம் பேசுவா. பாக்காதப்பா எத்தனெ மணி நேரம் பேசுனாளோ? அவளுக்குச் செல்லுக்கு ரீசார்ஜ் பண்ணி வுடவே நாம்ம மாசத்துக்கு ரண்டாயித்தெ எடுத்து தனியா வைக்கணும்ன்னா பாத்துக்கிடுங்களேம். ஒரு நிமிஷம் வுடுறதில்ல. எந்நேரத்துக்கும் அந்த செல்லுலயே வாட்ஸாப்பு, பேஸ்புக்குன்னு நிண்டிக்கிட்டெ கெடக்கறது. சொன்னா நம்ப மாட்டீயே, இன்னிய வரைக்கும் பேஸ்புக்கப் பத்தி நமக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது. அதெ தெரிஞ்சிக்கிட வாணாம்ன்னே வுட்டுப்புட்டேம்ன்னா பாத்துக்கோங்களேம்.

            “செல்லப் போட்டுத்தாம் எந்நேரத்துக்கும் நோண்டுறது. இதுக்குன்னே நெட்டு கார்டு மூணு நாளைக்கு ஒரு மொறெ போட்டு வுடுவேம். அதெ ஒரே நாள்ல காலி அடிச்சிடுவா. காலி அடிச்சிட்டு நம்ம செல்லுலயும் நோண்டுறது. பாக்கக் கூடாத படத்தெ பாக்குறதுன்னு அந்தச் செல்லுல அவ்வே பண்ணுன அட்டகாசம் இருக்கே. அதெ எந்தப் புருஷங்காரனாலயும் தாங்க முடியாது. வெளியில சொன்னா வெக்கக்கேடு. சொல்லாட்டி மானக்கேடு. என்னத்தெப் பண்டுறது? செல்லையே நோண்டிக்கிட்டு இருந்தா குடும்பத்தெ எப்பப் பாக்கறது? கட்டுன புருஷன யாரு கவனிக்கிறதுன்னு ஒண்ணுமே புரியாதச் செரியான மண்டூகம்ங்க அவ்வே. கட்டியாச்சேன்னு நாம்ம தாங்கிட்டு இருக்கேம். அதுக்குல்லாம் சேத்துத்தாங் இன்னிக்கு இப்பிடி பஞ்சாயத்துல நிறுத்தி வெச்சு அடிக்குறா ஆப்பு.

            “செலதெ சொல்லக் கூடாது. அதாங் தாம்பத்தியம். அதெ சொல்ல விரும்பல. யிருந்தாலும் பஞ்சாயத்துன்னு வர்றப்போ எப்பிடிச் சொல்லாம இருக்குறது சொல்லுங்க? எவனயோ நெனைச்சிக்கிட்டு எங் கூட படுக்குறது. இத்தெ ஒரு ஆம்பளெ மனசால படிக்க முடியாதா ன்னா? அதெயும் படிச்சேம். கேட்டாக்கா நம்மள குத்தம் சொல்றது. ஆம்பளெ ஆம்பளையோட பழகோணும், பொம்பளெ பொம்பளையோட பழகோணும். அதெ மாத்தி ஒரு ஆம்பளெ பொம்பளையோட பழகுறாம்ன்னா அத்து அவ்வேம் பொண்டாட்டியோடத்தாம் பழகோணும். அதெ போலத்தாம் பொம்பளெ ஆம்பளையோட பழகோணும்ன்னா ஆம்படையான் ஒருத்தனோடத்தாம் பழகோணும். நாம்மப் பழகுன பொண்ணுன்னா அத்து அவ்வே ஒருத்தித்தாம். மித்தப்படி ஆம்பளையோடத்தாம் நம்ம பழக்க வழக்கங்க. அதெயும் கொறை சொன்னா பாருங்க அவ்வே. நாம்ம ஆம்பளையோட குடித்தனம் நடத்துறதா?

            “நீஞ்ஞ நல்லா கவனிக்கோணும். அவ்வே தம்பியோட சேத்து வெச்சு நாம்ம அவளெ கொறை சொல்றேம்மாம். அதுக்காக அவ்வே எந் தம்பியோட நம்மளச் சேத்து வெச்சு கொறையா சொல்றா பாருங்க. அட அறிவு கெட்டவளெ சொல்றதுதாங் சொல்ற அண்ணனோட தங்காச்சியல்லாம் சேத்து வெச்சில்லா கொறையச் சொல்லணுங்ற அறிவு கூட கெடையாத முண்டச்சிங்க அவ்வே. அவ்வே கூடல்லாம் எவ்வேம் வாழ முடியும்? ஆன்னா நாம்ம இன்னும் அவ்வே கூடத்தாம் வாழணும்ன்னு நிக்குறேம். ஏன்னா இந்து தர்ம சாஸ்திரம் அப்பிடி. அதெ செரிய கடைபிடிச்சி நிக்குற ஆளு நாம்ம. ஒருத்தியக் கட்டுனா அவளெத்தாம் கடெசீ வரைக்கும் நெனைக்கணுங்ற சாஸ்திரத்துல முழுசா நிக்குறேம். அதுக்குத்தாம் இந்தப் பஞ்சாயத்துக்காக ஆயிரத்தெட்டு சோலிகளப் போட்டுட்டு வந்திருக்கேம் .இன்னிக்கு வந்த முக்கியமான ரண்டு அப்பாய்ன்ட்மெண்டுகளக் கூட கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேம். அந்த வகையில யிப்போ இஞ்ஞ உக்காந்திருக்கிறதால நமக்குப் பத்தாயிரம் போயிடுச்சு. அதெ நாம்ம பெரிசா நெனைக்கல. குடும்பம் செரியான்னா போதும்ன்னு காசு பணத்தெ பாக்காம இஞ்ஞ வந்து நிக்குதேம்.

            “அய்யா! பெரியவங்களே! நமக்கு இருக்குற காசிப் பணத்துக்கு நாலு பொண்டாட்டி, நாப்பது கூத்தியாள கூட வெச்சிக்கிடலாம். ஆன்னா அப்பிடிப்பட்ட ஆளு நாம்ம கெடையாது. ராமனெ மாதிரிக்கி. கட்டுனதும் ஒட்டுனதும் கண்டதும் கொண்டதும் ஒரே பொண்ணுன்னு வாழ்ந்துட்டுப் போயிடணும்ன்னு பாக்குதேம். ஆயிரத்தெட்டு கொறை யிருந்தாலும் செரித்தாம், டாக்கடர்ரான நமக்கு ஏத்த பொண்ணா யில்லாட்டாலும் செரித்தாம், அந்தப் பொண்ணோடத்தாம் வாழணுன்னு, நாம்ம வந்துக் கூப்புட்டுப் பாத்தாலும் வர்ற மாட்டாங்றா. போன்னப் போட்டு என்னத்தெ கெஞ்சுனாலும் மசிய மாட்டாங்றா. கால்ல வுழுவாத கொறைத்தாம். அதெயும் பண்ணணும்ன்னாலும் பண்ணத் தயாராத்தாம் வந்திருக்கேம். நீஞ்சல்லாம் ஒத்த வார்த்தெ சொல்லுங்க. அதெயும் செய்யுறேம். ஏன்னா நமக்குக் குடும்ப முக்கியம்ன்னு இப்பவும் நெனைக்கிறேம். நம்ம குடித்தனத்துக்காக நாம்ம எறங்கிப் போறதுல எந்தத் தப்பும் இல்லேங்ற முடிவுலத்தாம் இப்ப வரைக்கும் இருக்கேம்.

            “எஞ்ஞ வகையில சொந்தப் பந்தங்களும் வூடு தேடி வந்து கூப்புட்டுப் பாத்தாச்சு. அழைச்சிட்டு வந்தவங்கத்தாம் கொண்டாந்து வுடணுங்றது ஒரு மொறெ. அந்த மொறையல்லாம் நாம்ம பாக்கல. யிப்போ யிந்த நொடி அழைச்சிட்டுப் போன்னு சொன்னாலும் அழைச்சிட்டுப் போவ தயாரா இருக்கேம். யப்புறம் பணங்காசி, நகெ நட்டுப் பத்தியல்லாம் சொன்னதா கேள்விப்பட்டேம். அந்தப் பணங்காசில்ல ஒத்தப் பைசா நம்மகிட்டெ கெடையாது. நமக்கும் யாருக்கும் சம்பந்தமில்லாம பாங்கிக்கார்ரேம்ந்தாம் அந்தப் பணத்தெ வெச்சிருக்காம். அவுக செஞ்சி வுட்ட நகெயெ கூட நாம்ம செரியா பாக்கலங்க. பேங்கோட லாக்கருதாம் அதெ பாத்துக்கிட்டு இருக்கு. நாமளும் ரண்டுப் பொண்ணுங்கள நம்மட தங்காச்சிகளக் கட்டித்தாம் கொடுத்திருக்கேம்.  இப்பிடியெல்லாம் காசிப்பணம், நகெ நட்டுன்னு ஒரு வார்த்தெ கேட்டதில்லே. அதுக்குப் பொறுப்பான ரண்டு பேத்தும் கூட இஞ்ஞத்தாம் இருக்காங்க. சந்தேகம்ன்னா கேட்டுப் பாத்துக்கிடுங்க.

            “அவ்வே துப்புக் கெட்டவளா இருந்தாலும் தொடைச்சி வெச்சிக்கிறேம். வெவஸ்தை கெட்டவளா இருந்தாலும் வெளக்கி வெச்சிக்கிறேம். மானங் கெட்டவளா இருந்தாலும் அதாங் தலையெழுத்துன்னு வெச்சிக்கிறேம். ஊரு மேயுற கழுதெயா இருந்தாலும் விசயம் வெளியில கசிஞ்சிக்கிடாம வெச்சிக்கிறேம். அவ்வளவுதாங் நம்மாலயே பண்ட முடியும் பாத்துக்குங்க. நாட்டுல நல்ல பொண்டுக்கு நல்ல வாழ்க்கெ அமைய மாட்டேங்குது. பஜாரி நாயிகளுக்குத்தாம் பாந்தமான வாழ்க்கெ கெடைக்குது. அதெ கூட பிடிச்சிக்கிட்டு வாழத் தெரிய மாட்டேங்குது அந்த நாய்களுக்குன்னா என்னத்தெ பண்டுறது?

            “ஒரு கெட்டப் பழக்கம் நம்மகிட்டெ இருக்குதுன்னா அதெ அந்தப் பொண்ணு வாயால, பொண்ணு வூட்டுக்கார்ரேம் வாயால சொல்லுங்க, இந்த எடத்துலயே நாண்டுகிட்டுச் செத்துடுறேம். அப்பிடில்லாம் இருக்குற நாம்ம, பொண்டு எப்பிடி இருக்கணும்ன்னு எதிர்பாக்குறதுல ன்னா தப்பு இருக்குச் சொல்லுங்க? யிப்போ அந்த எதிர்பார்ப்புல்லாம் கூட வாணாம். வந்து இருந்து குடித்தனத்தெ பண்டச் சொல்லுங்க. நாம்ம இனுமே எதையும் கண்டுக்கிடுறாப்புல யில்ல. அத்து இஷ்டத்துக்கு எப்பிடியே நடந்துக்கிடட்டும். அதுவா திருந்துனா திருந்தட்டும்! திருந்தாட்டியும் தேவிடியா சிறுக்கி எப்பிடியோ போவட்டும்.

            “அவ்வே கூட காலேஜூ படிச்சச் சிநேகிதி ஒருத்திக்குப் பத்தாயிரம் பணம் வேணும்ன்னு திடீர்ன்னு ஒரு நாளு பாடாப் படுத்திப் போட்டா. என்னத்தாம் நாம்ம டாக்கடர்ரா யிருந்தாலும் பத்தாயிரங்றதெ ஒடனே எப்பிடித் பொரட்ட முடியும் சொல்லுங்க. நாம்ம சொல்றேம், பத்தாயிரம் கொடுக்குறதுல்லாம் ஓவரு. ஏத்தோ நூறு எரநூறுன்னு கொடுத்துட்டு அத்தோட வுட்டுப்புடு, அதாங் நம்ம குடும்பத்துக்கு நல்லதுன்னு. அதெ கேக்கணும்மில்ல. ஒடனே ஓடிட்டு ரூமெ சாத்திக்கிட்டுப் பிளேடால கையக் கிழிச்சிக்கப் போறா. ஒடனே நாம்ம கதவெ தட்டிச் சத்தத்தெப் போட்டு, ஒடனே போயி பாங்கியிலேந்து பணத்தெ எடுத்து அனுப்பி வுட்டுப்புடுறேம்ன்னு சொன்ன பெற்பாடுதாங் கதவு தொறக்குது. வெளியில வந்தவ்வே நாம்ம ஆஸ்பிட்டலு போற வேல இருக்குறதெ தெரிஞ்சிக்கிட்டும், பணத்தெ அவளோடு சிநேகிதிக்கு அனுப்புற வேலைய மொதல்லப் பண்ணிட்டுப் பெறவு மாசச்சம்பளம் தர்ற வேலையப் பாக்கச் சொன்னா பாருங்க. அதெயுந்தாம் செஞ்சேம். அந்தப் பணம் போயிச் சேந்தது நெசமான சிநேகிதிக்கா? யில்ல காலேஜூல கெடைச்ச சிநேகிதினுக்காங்றதெல்லாம் நமக்குத் தெரியாது. அதெப் பத்தி நாம்ம சொல்ல விரும்பல. அதெ ஆராயவும் விரும்பல. நடந்தது நடந்துடுச்சு. அம்புட்டுத்தாம்.

            “செரி! ஆம்படையானுக்கிட்டெ சொல்லி பணத்தெ அனுப்புனெ. பண வெவகாராமே இருக்கே. கொஞ்சம் கமுக்கமா இருக்கணுமா இல்லியா? அதெ ஒடனே எஞ்ஞ யம்மா உட்பட ஆளாளுக்குப் போன போட்டுச் சொன்னதுல, இவ்வே ன்னா கலியாணம் ஆயி மஞ்சக் கயிறு காயிறதுக்கு மின்னாடியே புருஷங்காரனோட சம்பளத்தெ கையில போட்டுகிட்டு அங்க இங்கன்னு செலவு பண்றாங்ற பேச்சு உண்டாயிப் போச்சுங்க. இதெப் பத்தி விசயம் தெரிஞ்சா நாலு பேத்து நாலு வெதமா பேசத்தானே செய்யுவாங்க. அதெப் பத்திதாங்க எஞ்ஞட யம்மாக்காரி போனப் போட்டு, இந்த மாதிரிக்கில்லாம் பணத்தெ வாங்கிக் கொடுத்துப்புட்டு, அதெ வெளியில சொல்லிட்டு இருக்காதே. பெறவு சொந்தப் பந்தங்க ன்னா நெனைச்சுக்கும்ன்னா நமக்குச் செய்ய மாட்டேங்றானே டாக்கடரு! ஆன்னா அவ்வேம் பொண்டாட்டிச் சொன்னாக்க யாரு யாருக்கோ செய்யுறாம்ன்னு பேரு ஆயிப் போயி சொந்தப் பந்தத்துல மதிப்பு யில்லாமப் போயிடும்ன்னு பதனமாத்தாம் சொல்லிருக்கு. அதெ கேட்டுக்கிட்டு எந்தப் பொண்ணாவது தொங்குறதுக்கு ஓடுமா? இத்து தொங்குறதுக்கு ஓடிப் போயி ரண்டு குடும்பத்துக்கும் எடையில ஒரு பெரிய பெரச்சனைய உண்டு பண்ணி வெச்சிருக்குங்க.

            “தங்காச்சிக்காரிகளுக்கு ஒரு அஞ்சோ பத்தோ செய்ய யோசிக்கிற நாம்ம இவ்வே சொல்லிப்புட்டாங்றதுக்காக ஒடனே பணத்தெயெல்லாம் அனுப்புனேம். ஒதவியெல்லாம் செய்யுறேம். அதுக்கான விசுவாசம், நன்றிங்றது கொஞ்சம் கூட கெடையாது. நாம்ம யாருக்காகச் சம்பாதிக்கிறேம். பொண்டுக, குட்டிகளுக்காககத்தானேன்னு நாம்ம நெனைச்ச எல்லாம் தப்பா போனதுதாம் மிச்சம். விசயங்க அவ்வளவுத்தாம்ன்னு மட்டும் நெனைச்சுப்புடாதீங்க. நெறைய நெறைய யின்னும் நெறைய யிருக்கு. சொன்னா நெஞ்சுத்தாம் வெடிக்கும். எந்நெஞ்சு யில்ல, ஒஞ்ஞ நெஞ்சுத்தாம். என்னோட நெஞ்சு வெடிச்சித்தாம் நாளாயிடுச்சே. எத்தனெ தடவெ ஒரு நெஞ்சு வெடிச்சுக்கிட்டெக் கெடக்குங்றேம்? இவ்வே கூட வாழ்ந்த ஒவ்வொரு நாளும் முள்ளு மேல படுக்கெதாம். நமக்கு அப்பிடின்னு எழுதிருந்தா அதெத்தானே நாம்ம வாழ்ந்தவாணும். ஒரு இந்துவா ஒரு சம்சாரியா அவ்வே விபச்சாரின்னாலும் அவ்வே கூட வாழ்றது, அத்தானே ஒருத்தனோட இந்து மதத் தர்மம் இல்லியா?

            “எல்லா கஷ்ட நஷ்டத்தையும் ஏத்துக்கிடறேம்ன்னுத்தானே அக்கினி சாட்சியா தாலியக் கட்டி கையப் பிடிக்கிறேம்.  நல்லவளோ, கெட்டவளோ, பத்தினியியோ, அவ்சாரியோ அதெல்லாம் கலியாணம் கட்டுற மின்னாடித்தாம் பாக்கணும். கட்டுன பிற்பாடு அவ்வே எப்பிடி யிருந்தாலும் அவ்வே கூடத்தாம் வாழ்ந்தாவணும். அவ்வே நமக்கு ஆயிரம் துரோகம் பண்ணாலும் நாம்ம அவளுக்கு ஒரு சின்ன தொந்தரவு கூட கொடுக்க மாட்டேம். ஏன்னா நாம்ம ஆயுர்வேத டாக்கடருங்றதால சாத்வீகமாத்தாம் இருக்குணுங்றது எஞ்ஞளுக்குச் சொல்லப்பட்ட பாடம். எவ்வளவு கஷ்டம் வாணாலும் அவ்வே கொடுக்கட்டும். கொன்னு வாணும்ன்னாலும் போடட்டும். நம்ம வாழ்க்கெ இனுமே அவ்வே கையிலத்தாம். ஏன்னா அவ்வே எம் பொண்டாட்டி? அவளுக்கு நம்மள எதெ வாணும்ன்னாலும் பண்ணுற உரிமெயும், அதிகாரமும் இருக்கு.

            “பொண்ணோட வாழணுங்றதுக்குத்தாம் இன்னிக்கு வெட்கத்தெ வுட்டு, மானத்தெ வுட்டு, சூடு சோரனையே வுட்டு, ரோஷத்தெ வுட்டுட்டு வந்து நிக்கேம். பெரியவங்க நீஞ்ஞல்லாம் பாத்து ஒரு நல்ல முடிவெ பண்டி வுடுங்க!"ன்னாம் பாலாமணி ஒரே மூச்சுல. அதெ சொல்லி முடிச்சதும் அவ்வேம் முகம் ஒரு யோக்கியனப் போல இருந்துச்சு. அத்தோட மொக பாவம் பாவமாவும், பரிதாபமாவும் இருந்துச்சு. கேட்டவங்க அப்பிடியே கிறுகிறுத்துப் போனாங்க.

*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...