19 Oct 2020

பொண்ணு சொன்னது!

பொண்ணு சொன்னது!

செய்யு - 599

            செய்யு பேச ஆரம்பிச்சா.

            "நாட்டுல குடிகாரனுங்க இருக்கானுங்க. பொண்டாட்டிய இழுத்துப் போட்டு அடிக்காத குடிகாரனுங்க கம்மி. ஒரு வேள சம்பாதிக்க வக்கத்த ஆம்பிளைங்களும் இருக்காங்க. அவுங்களயும் சொமந்துகிட்டு குடும்பத்தையும் பாத்துக்கிட்டு இன்னும் பொம்பளைங்க நாட்டுல இருக்கத்தாஞ் செய்யுறாங்க. பொம்பளெ பின்னாடிச் சுத்திட்டுக் குடும்பதெ கழட்டி வுட்ட ஆளுகளும் இருக்காங்க. அவுங்க கழட்டி வுட்டாலும் கட்டுன திருமாங்கல்யத்தெ உசுரா நெனைச்சி வாழாவெட்டியா வாழுற பொம்பளைகளும் ஊரு ஒலகத்துல இருக்கத்தாம் செய்யுறாங்க. நம்மள கட்டிக் கொடுத்த புருஷங்கார்ரேம் குடிகாரனோ, சம்பாதிக்க வக்கில்லாத ஆளோ, பொம்பளெ பொறுக்கியோ யில்ல. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத ஆளு. டாக்கடரு. அரசாங்கத்து சம்பளத்தெ ஒரு கையில கை நெறைய வாங்குனாருன்னா, தனியா கிளினிக்க வெச்சி இன்னொரு கையில கை நெறையா வைத்தியம் பாத்துச் சம்பாதிக்கிறாரு. அதுலல்லாம் எந்தக் கொறையும் நம்மால சொல்ல முடியா.

            “குடிகார்ரங் கூட அடிக்கிற நேரத்துலத்தாம் ஆத்திரமா, ஆவேசமா இருப்பாம். எம் புருஷன் குடிக்கிறதில்ல, ஒரு பாக்குக் கூட போடுறதில்லெ. பெறவு ஏம் ஆத்திரமாவுறாரு? ஆவேசமாவுறாரு? சமயத்துல ன்னா காரணத்துக்காக நம்மளப் போட்டு அடிக்கிறாரு? அடிச்சிப் போட்டுக் கதவெச் சாத்தி வூட்டுக்கு வெளியில தள்ளுறாரு? எம் புருஷன் ஒருவேள அப்பிடிக் குடிச்சிட்டு வந்து அடிச்சால்லாம் அதெ தாங்கிக்கிடாம எஞ்ஞ அப்பங்காரரு வூட்டுல உக்காந்துக்கிட மாட்டேம். அத்தனெ அடியையும் வாங்கிக்கிட்டுத்தாம் குடித்தனம் நடத்துவேம். 

            “ஒரு வேள எம் புருஷனுக்குச் சம்பாதிக்க வக்கில்லன்னாலும் நாம்ம நாலு வூட்டுக்குப் போயி பத்து பாத்திரம் தேய்ச்சாவது சாப்பாட்டெ போடுவேம் எம் புருஷனுக்கு. அதெ வெளியில சொல்லிட்டுத் திரிய மாட்டேம். நாலு வூட்டுல போயி வேலைக்காரியா நிக்குறதுக்கு வெக்கம்லாம் பட மாட்டேம். ஆன்னா ஏம் புருஷம் நாம்ம வூட்டுல சாப்பாட்ட சமைச்சி வெச்சிருந்தா ஏம் ஓட்டல்லப் போயி சாப்பாட்ட எடுத்துட்டு வர்றாரு? அதெ நாம்ம சமைச்ச சாப்பாட்டெ கண்ணு மின்னாடி வைக்கச் சொல்லிட்டெ ஏம் ஓட்டலு சாப்பாட்டச் சாப்புடுற சொல்லுறாரு?

            “கலியாணம் கட்டிக்கிட்ட அத்தனெ பேத்துக்கும் வாழ்க்கெ நல்லா அமைஞ்சிடும்ன்னு நாம்ம சொல்ல வாரல. நல்லா அமையாட்டியும் ‍அதெ சகிச்சிக்கிட்டுத்தாம் வாழணுங்றது நமக்குத் தெரியும். கட்டுனவ ஒருத்தி இருக்க ஒட்டிட்டு வந்த ஒருத்தியோட குடித்தனம் பண்ணுற எத்தனையோ ஆம்பளைங்கள வுட்டுப்புட்டு எந்த பொம்பைளயும் ஓடிப் போயிடுறதுல. கொஞ்ச நாளு சொல்லிப் பாத்து கேக்கலன்னதும் அதெயும் பொறுத்துக்கிட்டு வாழ்ந்துகிட்டுத்தாங் இருக்காங்க. அப்பிடி எதாச்சும் எம் புருஷனுக்கு இருந்தாலும் அதெ தலையெழுத்துன்னு  சக்களத்தியோட பொறுத்துக்கிட்டுக் கூட நாம்ம குடித்தனம் பண்ண தயாராத்தாம் இருக்கேம். சக்களத்தின்னா ஒரு பொம்பளையா இருந்தா பொறுத்துக்கிடலாம். அத்து ஒரு ஆம்பளையா இருந்தா எப்பிடிப் பொறுத்துக்கிட முடியும்? அதெ ஏம் பொறுத்துக்கணும்?

            “கலியாணம்ன்னு ஒரு ஆம்பளைக்குக் கட்டி வைக்கிறது ஒரு பொம்பளையோட குடித்தனம் நடத்துறதுக்குத்தாம். அதெ போல ஒரு பொம்பளைக்குக் கட்டி வைக்கறது ஒரு ஆம்பளையோட குடித்தனம் நடத்ததாம். ஆம்பளெ ஆம்பளெயோட குடித்தனம் நடத்துறதோ, பொம்பளெ பொம்பளெயோட குடித்தனம் நடத்துறதோ நாம்ம கேள்விப்படாத அதிசயமுங்க. எத்தனெ நாளுக்கு ஒரு பொண்ணு அதெ பொறுத்துக்கிட முடியும். நாம்ம சொல்றது ஒஞ்ஞளுக்குப் புரியாம இருக்கலாம், கேள்விப்படாததா இருக்கலாம். ஆன்னா ஆம்பளையோட ஆம்பளெ குடித்தனம் பண்ணுற மனுஷங்க நாட்டுல இருக்காங்க. அத்துல ஒருத்தர்ரா எம் புருஷம் இருந்தா அதெ எப்பிடி சகிச்சிக்கிட்டு வாழ்றதுன்னு நீஞ்ஞத்தாம் சொல்லணும்?"ன்னு செய்யு சொல்ல, "இந்தாருடி குட்டி சேந்து வாழணும்ன்னு நெனைச்சா அதுக்கேத்தாப்புல பேசு. இப்பிடியில்லாம் பேசிட்டுப் பெறவு சேந்து வாழ முடியும்ன்னு மட்டும் நெனைச்சிப்புடாதே!"ன்னுச்சு லாலு மாமா விசுக்குன்னு.

            "ஒப்புரானே வுட்டேம் வுட்டேம்! அந்தப் பொண்ணு பேசி முடிக்கல. அதுக்குள்ள ஊடல பூந்து ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிப்புட்டு. இந்தாருங்க வாத்தியார்ரே நீஞ்ஞ பேசுறதெல்லாம் மெரட்டுறதாத்தாம் இருக்கு. நீஞ்ஞ பேயாம இருந்தா மேக்கோண்டு கேக்கேம். ல்லன்னா கெளம்புவேம். இந்தப் பஞ்சாயத்தும் வாணாம். ஒரு மண்ணும் வாணாம்!"ன்னு சின்னுவோட அப்பா கடிஞ்சாப்புல சொன்னதும் லாலு மாமா அடங்கி, வெறிச்சாப்புல பாத்துச்சு.

            “நீயி சொல்ல வேண்டியதெ சொல்லி முடிச்சிடும்மா!”ன்னு பரமுவோட அப்பா சொன்னதும் மேக்கொண்டு செய்யு சொல்ல ஆரம்பிச்சா.

            "இதெல்லாம் சொல்றதால நாம்ம எம் புருஷனெ கொறெ சொல்றதா நெனைச்சிப்புட முடியாது. பஞ்சாயத்து வரைக்கு வர்ற அளவுக்கு ன்னா பெரச்சனெங்றது ஒஞ்ஞளுக்குப் புரியணும்ன்ங்றதுக்குத்தாம் சொல்றேம். வெளியிலேந்து பாக்குறவங்களுக்கு இத்தெல்லாம் புரியாது. உள்ளார அனுபவப்பட்டுகிட்டுக் கெடக்குறவங்களுக்குத்தாம் இந்த செருமம் தெரியும். வெசயம் இவ்ளோ மட்டுமில்லெ. இன்னும் நெறைய யிருக்கு. அதெச் சொல்லியெல்லாம் நாம்ம அசிங்கப்படுத்த விரும்பல. இதெ தவுர அவரு டாக்கடருங்றதுக்காக என்னென்னவோ மருந்து மாத்திரைகளெ வேற கொடுத்துப் போட்டுக்கச் சொல்லுறாரு. ஒரு மனுஷி ஒடம்பு ந்நல்லா யில்லாம இருந்தா அந்த மருந்து மாத்திரைகளெ போட்டுக்கிறது ஞாயந்தாம். நல்லா இருக்குற மனுஷி எதுக்குக் கண்டதையும் கழியதையும் போட்டுக்கிடணும்ன்னு நமக்குப் புரியல. ஆன்னா நாம்ம எப்பிடி இருந்தாலும் அதெ போட்டுக்கிடணும். அதெ போடாம யிருந்தா அதுக்கு ஒரு கோவம் வந்துப்புடும்.

            “மருந்து மாத்திரைகளப் போட்டுக்கிட்டா நமக்குத் தூக்கம் தூக்கமா வருதுன்னு எத்தனையோ மொறெ சொல்லிட்டேம். அதெ கேக்குறாப்புல யில்ல. நாம்ம மருந்து மாத்திரைகள சாப்புடலன்னு தெரிஞ்சா போதும், அதெ வாயில்ல கொண்டாந்து திணிச்சி வுட்டு தண்ணிய ஊத்தி வுடுறது. மாத்திரைய முழுங்கிட்டன்னா இல்லியாங்றதெ வாயிக்குள்ள கைய வேற வுட்டுப் பாக்குறது. இப்பிடியா ஒரு மனுஷம் பொண்டாட்டிய நம்பாம இருப்பாம்? எல்லாத்துக்கும் மேல நம்ம மேல சந்தேகம் வேற.

            “தமக்கொரு ஆம்பளெ புள்ள பொறக்கலேன்னு எம் மேல பாசமா இருக்குறது தேன்காட்டுச் சித்தி. சித்தியோட மவனுங்க ரண்டு பேத்துக்கும் ஒரு அக்காவோ, தங்காச்சியோ யில்லங்ற ஏக்கத்துல ரண்டு பேத்தும் அக்கான்னு நம்ம மேல வெச்சிருக்குற பாசத்தெ கூட தப்பா பாக்குற ஆளு எம் புருஷம். தேன்காட்டுச் சித்தியோட மூத்த மவ்வேம் வேலுமணிக்கு நம்மட கலியாணம் நடக்குறப்போ வர்ற முடியாத ஒரு நெல. அதுக்காக கலியாணம் முடிஞ்சி சென்னைப் பட்டணத்துல குடித்தனம் வெச்சப் பெறவு அஞ்ஞ ஒரு நாளு வந்தாம். அன்னிக்கு இந்த ஆளு படுத்துன பாடு இருக்கே. எம் போன பிடுங்கி வெச்சிக்கிட்டு ஒந் தம்பி ஏம் இத்தனெ தடவெ போன அடிச்சிருக்காம்? அவ்வேம் வாட்ஸாப்புல அனுப்புனதையெல்லாம் அழிச்சிப்புட்டீயா ன்னா? அவ்வேம் ஏம் இஞ்ஞ தனியா இருக்குற ஒன்னையப் பாக்க வர்றாம்?ன்னு கேள்வி மேல கேள்வி.

            “ஆம்பளைக்குச் சந்தேகக் கொணம் இருக்கலாம். இருக்கக் கூடாதுன்னு சொல்ல வாரல. யாரோட எப்பிடிச் சந்தேகம் வாரணுங்றதுக்குக் கூட ஒரு கணக்கு யில்லன்னா எப்பிடி? பக்கத்து வூட்டுக்காரனோட தொடர்பெ வெச்சிருக்கீயா? லவ்வு பண்ண எவனாச்சும் வெச்சிருக்கீயா?ன்னு சொல்லிக் கேளு, சந்தேகப்படு, அடி. அதெ வுட்டுப்புட்டு தம்பி மொறைக்கு வர்ற ஒருத்தனையா நம்மளோட சேத்து வெச்சிப் பேசணும் எம் புருஷன்? நம்மட சித்தி மவ்வேன் வேலுமணின்னு தெரிஞ்சும் சேத்து வெச்சிப் பேசுனுச்சுப் பாருங்க நம்மட புருஷன், அன்னிக்கு மனசளவுல வெறுத்துப் போன ஆளுதாம்.

            “அத்தோட நிக்கல கதெ. எஞ்ஞ அத்தான். சந்தானம் அத்தான். யித்தொ நிக்குறாகளே. அவுகளுக்குக் கலியாணம் கட்டி வைக்குற வயசுல ஒரு பொண்ணு இருக்கு. அதெயும் நம்மளயும் சேத்து வெச்சு வேற பேசுறது. வக்கனையா பேசுறதெ எல்லாத்தையும் பேசிப்புட்டு சண்டெ வெச்சி, நம்மள அழ வெச்சி, அழாம அழுத்தமா உக்காந்திருந்தா அடிச்சிப் போட்டாவது அழ வெச்சி, பெறவு சமாதானம் பண்ணுறது, எப்பிடின்னா ச்சும்மா வெளையாட்டுக்குச் சோன்னேம்ன்னு. எதெ வெளையாட்டாப் பேசுறதுன்னு கணக்கில்ல.

            “பொட்டச்சிக்கா நாஞ்ஞ நாலு வூட்டுக் கதெயெப் பத்தி பொரணிப் பேசுறது உண்டு, இல்லாததையும் பொல்லாததையும் திரிச்சி வுடுறது உண்டு. ஆம்பளைங்களுக்கு இந்தப் புத்தியெல்லாம் கெடையாதுன்னுத்தாம் நாம்ம ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்தேம். நமக்குக் கலியாணம் ஆவுற வரைக்கும் அப்பிடித்தாம் ஒரு நெனைப்பு நமக்கு இருந்துச்சு. என்னிக்கு நமக்குக் கலியாணம் ஆயி எம் புருஷங்கார்ரேம் வந்துச்சோ அன்னிக்கே அந்த நெனைப்புல மண்ணு வுழுந்ததுதாங் மிச்சம். எம் புருஷனெ போல பொரணிப் பேசுறதுல, பொல்லாங்கு செய்யுறதுல ஒரு ஆளெ இந்த ஒலகத்துல பாக்க முடியா.

            “நாம்ம எந் தம்பிககிட்டெ பேச கூடாதுன்னு நெனைக்கற இந்த ஆம்பளெ, அவுக வகையில வர்ற அத்தனெ பொம்பளைககிட்டெயும் நெதமும் போனப் போட்டு பேசுறதப் பாக்கணுமே. வூட்டுல நடந்த ஒரு சின்ன வெசயத்தக் கூட பெரிசு பண்ணிப் பேசுனாத்தாம் தூக்கம் வரும் அந்த ஆளுக்கு. வூட்டுல சின்னதா குசு வுட்டாலும் அதெ சொன்னத்தாம் திருப்திப்படும். இப்பிடி ஒண்ணு கெடக்க ஒண்ணச் சொல்லி, யில்லாததையும் பொல்லாததையும் கலந்துக் கட்டி வுட்டு, நம்மளப் பத்தின பேரையே அவுங்க வகையில கெடுத்து வெச்சிருக்காவோ. என்னத்தெ சொல்றது? அவுகளோட இருந்த வரைக்கும் நாம்ம இன்னிக்கு ன்னா உள்பாவட கட்டுறங்ற வரைக்கும் சொல்லுறதுன்னா பாத்துக்கோங்க. அதாங் புத்தின்னு நெனைச்சிட்டுத்தாம் அதெயும் பொறுத்துட்டுப் போனேம். 

            “ஒரு சில வெசயங்கள வெச்சிப் பண்ணுற ரோதனையும் நொம்பலமும் இருக்குப் பாருங்க. செத்துடலாங்ற மாதிரிக்கி இருககும். அதெயும் நம்மளா செய்ய வைக்குறாப்புல செய்ய வெச்சி அதெ ஏம் செஞ்சோம்ன்னு நெனைச்சி நெனைச்சி நொந்துப் போவுற அளவுக்குப் பண்ணி வுடுறது. இப்பிடித்தாம் எம்மட சிநேகிதி ஒருத்தியோட தங்காச்சி படிப்புக்காக பணத்தெ கொடுத்துப்புட்டு, நம்மளப் போட்டு பாடா படுத்தி, நாம்ம அடம் பண்ணிக் கொடுக்கச் சொன்னதா ஒரு ஆளு பாக்கி வுடாம எல்லாத்துக்கிட்டெயும் சொல்ல வெச்சிட்டாக. அதுல யாத்தா வரைக்கும் இவ்வே ன்னா கலியாணம் கட்டிட்டு வந்து ரண்டு மாசம் கூட ஆவலே, அதுக்குள்ள புருஷங்கார்ரேம் பணத்தெ தங் கையில கொண்டு வர்ற நெனைக்குறாளேங்ற எண்ணத்தெ உண்டு பண்ணிட்டாக. அவுகளும் இதெ இப்பிடியே வுடக் கூடாதுன்னு, இந்த மாதிரிக்கிப் பண்ணிட்டு இருக்குறதால ஒன்னய வாழ வைக்குறதா? இல்லியாங்றதெயே யோஜனெ பண்ணுறாப்புல இருக்குன்னுச் சொல்லி நம்மள மனசொடிய வெச்சி செத்துப் போனா கூட தேவலாங்ற அளவுக்கு ஒரு சூழ்நெலைய உண்டு பண்ணிப்புட்டாக. அதுலத்தாம் நொந்து நொம்பலமாயி நாம்ம தொங்கப் போனது. கடவுளு அதுக்கும் அதிர்ஷ்டத்தக் கொடுக்காம காப்பாத்தி இப்பிடி மறுக்கா மறுக்கா நொந்து நொம்பலப்படுன்னு இப்பிடி பஞ்சாயத்தாரு மின்னாடி நிப்பாட்டிப்புட்டாரு. இதாங் நடந்தது. வேறென்னத்த சொல்ல சொல்லுங்க.

            “நம்மள அவுகக் கூட அனுப்பி வெச்சா நாம்ம உசுரோட இருப்பனாங்றதுக்குல்லாம் எந்த உத்திரவாதமும் கெடையாது. அதெ நெனைக்க பயமாத்தாம் இருக்கு. ஒருவேள உசுரோட இருந்தாலும் நடைப்பொணமாத்தாம் இருப்பேனே தவுர உசுருள்ள உணர்ச்சியுள்ள ஒரு மனுஷியா நிச்சயம் இருக்க மாட்டேம்! ஆன்னா ன்னா பண்ணுவேம். கழுத்துல தாலி தொங்குது. எத்தனெ நாளுக்கு நாம்ம இஞ்ஞ இருப்பேம்? அத்து முடியாது. அஞ்ஞ போறதுன்னாலும் இப்ப முடியாது!"ன்னு சொல்லி முடிச்சா செய்யு. அவ்வே கண்ணுலேந்து கண்ணுத் தண்ணி பொல பொலன்னு கொட்டுனுச்சு. அதெப் பாக்க எல்லாத்துக்கும் சங்கடமாத்தாம் இருந்துச்சு. அவளோட நெலமெ எல்லாத்துக்கும் புரிஞ்சிருந்தாலும், "முடிவா புருஷங் கூட போறதா? எப்பிடி? அதெப் பத்தி வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு ஒரு பதிலெச் சொல்லு!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "நாம்ம யிப்போ மன உளைச்சல்ல இருக்கேம். அத்தோட ஒடம்புக்கு நமக்கு ஏத்தோ பண்ணுது. அத்தெ என்னான்னு நமக்குச் சொல்லத் தெரியல. நிச்சயமா நாம்ம எம் புருஷனோட சேந்துதாம் வாழணும். யப்பாவும் செரி, யண்ணனும் செரி அந்த அளவுக்குச் சிலவெ பண்ணி கலியாணத்த முடிச்சிருக்காங்க. ஆன்னா யிப்போ நமக்கும் கொஞ்சம் இதுலேந்து ஒதுங்கி நிம்மதியா இருக்கணும்ன்னு தோணுது. நம்மள கொஞ்சம் ஆசுவாசம் பண்ணிக்கிட வேண்டிக் கெடக்கு. வூட்டுக்கு வந்த கொஞ்ச நாளாத்தாம் மனசுல தெளிவா இருக்கேம். அதெ இன்னும் தெளிவு பண்ணிக்கிட்டு மனசுல ஒரு தெகிரியத்தோட போயித்தாம் நாம்ம அஞ்ஞ குடித்தனத்தெ பண்ட முடியும். நமக்கு ஒரு ரண்டு மாசமாவது எஞ்ஞ யப்பாவோட வூட்டுல இருக்குறாப்புல ஒரு ஏற்பாட்ட பண்டி வுடுங்க!"ன்னா செய்யு கண்ண தொடைச்சிக்கிட்டு.

            "பொண்டு பேசுனதெ எல்லாம் காதுல வாங்கிட்டீயளா? இதுலேந்து தெரிய வர்ற ஒண்ணு என்னான்னா கொஞ்ச நாளு பொண்ணு இஞ்ஞ இருந்தாகணுங்றதுதாம். சேந்து வாழுறதுல எந்தக் கருத்து மாறுபாடும் பொண்ணுக்கியில்ல. இருந்தாலும் பையனெப் பத்தி பொண்டு சொல்ற சில வெசயங்க உறுத்தலா இருக்கு. இதெ பஞ்சாயத்துல கலந்துக்கிட்டுதாங் நாம்ம ஒரு முடிவுக்கு வார்ற முடியும். அதுக்கு மின்னாடி புள்ளையாண்டாங்கிட்டெயும் கேக்க வேண்டியதெ கேட்டுப்புட்டா சோலி முடிஞ்சிடும்!"ன்னாரு சின்னுவோட அப்பா. அதெ கேட்டதும் லாலு மாமாவோட மொகமும் சித்துவீரனோட மொகமும் கடுகடுன்னு ஆனுச்சு. சந்தானம் அத்தானுக்கோ பாலாமணி பண்ணுன காரியத்தெ நெனைச்சுக் கோவத்தால மொகம் செவந்து போயிருந்துச்சு.

பொண்ண கேட்டு முடிச்சதும் அடுத்ததா பாலாமணிகிட்டெ கேட்குறதுக்காக பன்னீரு வூட்டுப் பக்கமா போனாக ஆறு பேத்தும். அப்பிடிப் போறப்பவே சித்துவீரன் கொஞ்சம் ஓரமா ஒதுங்கிப் பாலாமணிக்குப் போனப் போட்டு செய்யு இஞ்ஞ சொன்னதெப் பத்தியல்லாம் குசுகுசுன்னு சொல்லிக்கிட்டேப் போனுச்சு. அத்து எதெப் பத்தி யாருகிட்டெ என்னத்தெ பேசுதுன்னு மித்தவங்களுக்குத் தெரியாததால அவுங்கவுங்கப் பாட்டுக்குப் போனாங்க பன்னீரு வூட்டுக்கு வந்து உக்காந்திருக்குற பாலாமணியிட்டெ கேக்குறதுக்காக.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...