ஆண்மைக்கான சோதனைக்குத் தயாரு!
செய்யு - 597
பெருமாள்சாமி பண்ணுன கலாட்டாவுல அவரெ அனுப்பி
வெச்சிப்புட்டுத்தாம் மேக்கொண்டு பஞ்சாயத்தப் பேசலாங்ற நெலமெ உண்டாயிடுச்சு. அவரு
பாட்டுக்கு வடவாதி பக்கம் வந்துப்புடுவீயா? கிழிச்சிப்புடுவேம்! பேத்துப்புடுவேம்ன்னு
வாய்க்கு வந்தப்படி பேச ஆரம்பிச்சிட்டாரு. அதெப்படிடா நம்ம ஊருக்கே வந்து நம்ம ஊரு
ஆளையே கண்டபடி ஒரு ஆளு பேசலாம்ன்னு ஊருக்கார ஆளுக திருப்பிச் சத்தம் போட்டதுல பெருமாள்சாமிய
அப்பிடியே கப்சிப் ஆக்கி, குண்டுகட்டா கட்டி தூக்கி வீசுறாப்புல அந்தாண்ட அனுப்பிச்சி
வுட்டாக. இந்தக் கூச்சலையும் கொழப்பத்தையும் சரிபண்ணிட்டு மறுபடியும் பஞ்சாயத்துல பேச்சு
ஆரம்பிச்சப்ப, "ஏம் பையேம் ஆம்பள இல்லன்னும், ஆண்மெ இல்லன்னும் சொன்னா அதெ நிரூபிக்க
டெஸ்ட்டுக்கு நாஞ்ஞ தயாரு. அதெப் போல அந்தப் பொண்ண பொம்பளெ இல்லன்னும், அதுக்குக்
கொழந்தெ பெத்துக்க தெராணி இல்லன்னும் நாம்ம சொன்னா அதெ டெஸ்ட்டுப் பண்ணிக்க அந்தப்
பக்கம் தயாரா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
பஞ்சாயத்தோடு பேசுமொற தெச மாறிப் போறதப்
பாத்துட்டு, "பொண்ண அழைச்சிட்டுப் போறதெப் பத்தித்தாங் பஞ்சாயத்தெ. அனுப்பி
வுட மாட்டாங்றாங்கன்னு நீஞ்ஞ சொல்லுதீயே! கொஞ்சம் ஒடம்பெ தேத்தி அனுப்பிச்சு வுடுறோங்றது
இஞ்ஞ சொல்லுறது. இதெப் பத்தித்தாங் பேசணும். சம்பந்தம் சம்பந்தம் இல்லாம ஆளாளுக்குப்
பேசி கொழப்பத்தெ உண்டு பண்ணி எதெப் பேச வந்தோமோ அதெ வுட்டு தப்பித் தவறி பேச்சு
போயிட்டு இருக்கு!"ன்னாரு பரமுவோட அப்பா.
"பொண்ண ஒடனே அனுப்பணும். அதுவும்
இன்னிக்கே அனுப்பணும்ன்னா அதுக்கு ன்னா பெரச்சனென்னு கேட்டுச் சொல்லுங்க!"ன்னாரு
பாக்குக்கோட்டையிலேந்து ராசாமணி தாத்தாவோட தொடுப்புப் பிடிச்சிட்டு வந்த ஆளு ஒருத்தரு.
"பொண்ணு அங்க இருக்கணுங்றது செரித்தாம்!
அது நல்ல வெதமா இருக்கணும்ன்னு பொண்ணு வூட்டுக்காரவுக நெனைக்குறதுல்லா ஒண்ணும் குத்தமில்லே.
அதுல அவுங்களுக்கு ன்னா மனக்கொறைன்னு கேட்டுப்புட்டா வெசயம் முடிஞ்சிடுச்சு. இதுக்குப்
போயி ஆளாளுக்குச் சம்பந்தம் இல்லாமப் பேசுனா எப்பிடி? ன்னா வாத்தியார்ரே! ஒஞ்ஞ கருத்தெ
சொல்லுங்க! மனசுல உள்ளதெ ஒளிக்காம கொள்ளாம சொல்லிப்புடுங்க!"ன்னாரு சின்னுவோட
அப்பா.
"நமக்கொண்ணும் அனுப்புறதுல எல்லாம்
பெரச்சனெ யில்ல. பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டிச்சுல்லா. அதுக்கு ன்னா காரணம் ன்னான்னு
அவுங்களச் சொல்லச் சொல்லுங்க. அத்து ஒண்ணு. அஞ்ஞ எம் பொண்ணுக்குக் கொடுமெ நடக்கலங்றதெ
நாம்ம எப்பிடி நம்புறது. அதெ உறுதிப் பண்ணச் சொல்லுங்க. ரண்டு. இனுமே கொண்டுப் போயி
வெச்சிக்கிடுறப்ப எம் பொண்ணு உசுருக்கு எந்த பங்கமும் வர்றாதுங்றதெ உறுதிப் பண்ணிச்
சொல்லுங்க. அத்து மூணு! இதாங் நாம்ம எதிர்பாக்குறது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு
ரொம்ப அழுத்தமா.
"பொண்ணு எஞ்ஞ எடத்துல தூக்க மாட்டிக்கிடலெ.
மாட்டிக்கிட்டது அவுங்க வூட்டுலங்றதால ன்னா பெரச்சனெ அவுங்களுக்குள்ளங்றதெ அவுங்கத்தாம்
சொல்லியாவணும். அந்தப் பொண்ணுக்கு எந்தக் கொடுமெயும் நடக்கலங்றதெ எஞ்ஞ வாணாலும்
சூடத்தெ கொளுத்தி சத்தியம் பண்ணுவேம். அதாங் எஞ்ஞளோட தரப்பு வாக்குமூலம். அதுல சந்தேவம்ன்னா
வெச்சுக்கோங்க, வேணும்ன்னா அந்தப் பொண்ணயே இஞ்ஞ பஞ்சாயத்துக்கு கொண்டாந்து வெச்சி
வெசாரிங்க!"ன்னுச்சு லாலு மாமா ஒரு குத்துக் குத்தி விட்டதெப் போல.
"அதெப்படி அவுங்க மாப்ளப் பையனா கொண்டாராம
நம்மப் பொண்ணெ மட்டும் கொண்டாந்து பஞ்சாயத்துல வெசாரிங்கன்னா அதுக்கு ன்னா அர்த்தம்ங்றேம்?
அவுங்க வூட்டுப் புள்ளே மட்டும் வந்து பஞ்சாயத்து நிக்கக் கூடாது? எஞ்ஞ ஊருப் பொண்ணு
மட்டும் வந்து பஞ்சாயத்துல பேசணுங்றது எந்த வெதத்துல ஞாயம்ங்றேம்? பெரியவங்கன்னா பெரியவங்க
மாதிரிக்கிப் பேசணும்! இந்த ஊரு வழக்கப்படி பொம்பளைங்கள சபெ மின்னாடி கொண்டாந்து
வெசாரிக்கிற வழக்கம் கெடையாதுங்க. எதாச்சிம் வெசாரிக்கணும்ன்னா நாலு ஊருப் பெரிசுங்க
வூட்டுலப் போயித்தாம் வெசாரிப்பாங்க. அதாங் இதுவரைக்கும் காலா காலமா கடைபிடிச்சிட்டு
வர்ற நடைமொறை!"ன்னாரு பரமுவோட அப்பா நறுக்குன்னு பதிலுக்குக் கடிச்சு வெச்சாப்புல.
இதுல பஞ்சாயத்து கொஞ்சம் அமைதியானுச்சு. அடுத்ததா என்னத்தெ பேசறதுன்னு எல்லாத்துக்கும்
யோசனெ. அந்த அமைதியையும் யோஜனையையும் கெடுக்குறாப்புல, "இப்பிடியே ஆளாளுக்குப்
பேசிட்டுப் போனா ன்னா முடிவுங்றேம்?"ன்னாம் பட்டறைக்கார பட்டாமணி.
"பஞ்சாயத்து எம் பொண்ணோட உசுருக்கு
உத்திரவாதம் பண்ணி பஞ்சாயத்துல நாலு பேத்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா நாம்ம
எம்மடப் பொண்ணே யிப்பவே கையோட அனுப்பி வைக்கிறேம்! இனுமே இதெப் பத்தி வேறெதும் பேசிக்கிட்டு
ஒஞ்ஞ நேரம், எஞ்ஞ நேரம்ன்னு யாரோட நேரத்தயும் வீணடிக்க வாணாம்!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு முடிவா பேசுறாப்புல.
"ந்நல்லா பேசுறீங்கய்யா பேச்சு! நாம்ம
பாட்டுக்கு ஊருக்குள்ள நாலு பேத்து கையெழுத்தப் போட்டுக் கொடுத்துப்புட்டு நாளைக்கி
ஒண்ணு கெடக்க ஒண்ணு ஒஞ்ஞ பொண்ணுக்கு ஆச்சுன்னா யாரு வந்து பதிலெச் சொல்லுறது? இதெல்லாம்
பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தரு நம்பிக்கெயில பண்ணிக்கிட வேண்டியது. நாளைக்கி ஏடாகூடமா
எதாச்சிம் நடந்து அதுக்குல்லாம் பஞ்சாயத்துல பதிலெச் சொல்லிட்டு இருக்க முடியாது!"ன்னாரு
சொட்டெ கண்ணுராசு கொஞ்சம் கோவப்பட்டாப்புல.
"யிப்போ பஞ்சாயத்தால ஏம் நம்பி அனுப்ப
முடியாதுன்னு கைய விரிக்குதீயே? ஒஞ்ஞளுக்கு இருக்குற பயந்தானே பொண்ணப் பெத்து வெச்ச
நமக்கு இருக்கு? இன்னிக்குப் பொண்ணு உசுரோட இருக்குறதால வந்து பஞ்சாயத்துப் பேசுறானுவோ!
அன்னிக்கே தூக்குல உசுரு பிரிஞ்சிருந்தா என்னாத்தெ பண்ணுவானுவோ? இந்நேரத்துக்கு இன்னொரு
கலியாணத்தப் பண்ணி வுட்டுப்புட்டு, அந்தப் பொண்ணு என்னவோ அவுங்கக் குடும்பப் பெரச்சனையில
தொங்கிட்டுன்னுதானே கதெ அளப்பானுவோ. யிப்போ ன்னா நடந்துச்சுங்றதுக்கு ஆதாரமா பொண்ணு
இருக்கு. அதோட வாக்குமூலம் எஞ்ஞயும் நிக்கும்! விசயம் இதாங். பொண்ணு அனுப்புறதுக்கு
அதாங் அந்த அத்தாட்சியத்தாம் நாம்ம எதிர்பாக்குறது. அத்தோட காரு வாங்கன்னு பத்து லட்சம்
கொடுத்திருக்கேம். ஆன்னா காரு வாங்கலே. நகெ நட்டுன்னு நூத்துப் பவுனெ போட்டிருக்கேம்.
அதுல ஒரு குண்டுமணி கூட எம் பொண்ணுகிட்டெ யில்ல. அந்தப் பத்து லட்சத்துப் பணத்தெ எம்
பொண்ணு பேர்ல டிபாசிட்டுப் பண்ணிட்டு, நகெ நெட்டுக் கொண்டாந்து போட்டு அழைச்சிட்டுப்
பேறாதுன்னா அனுப்புறேம். ல்லன்னா மிடியாது. இதுக்கெல்லாம் என்னா ஏதுன்னு கேட்டுச் சொல்லுங்க!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு மின்ன வுட இன்னும் அழுத்தமா. மறுபடியும் சின்னதா ஒரு அமைதி உண்டாச்சு.
அதெ நல்லா உள்வாங்கிக்கிட்டாப்புல, "பொண்ணு வூட்டுத் தரப்புல சொல்ல வேண்டியதெ
யிப்போ சொல்லிட்டாங்க வெட்டு ஒண்ணு துண்ட ரண்டுன்னு! இனுமே மாப்புள வூட்டுத் தரப்புலத்தாம்
சொல்லணும்!"ன்னாரு பரமுவோட அப்பா. இதுக்குச் சட்டுன்னு ஒரு பதில சொல்லியாவ வேண்டிய
நெல. ராசாமணி தாத்தாவா, லாலு மாமாவா யாரு பேசப் போறாங்கன்னு கூட்டத்துல ஒரே எதிர்பார்ப்பு.
"காருக்குக் காசி வாங்குனதுல்லாம்
நெசந்தாம். அந்தப் பணம் பத்திரமா பாங்கியிலத்தாம் இருக்கு. நகெ நட்டும் பத்திரமா பாங்கியில
லாக்கர்லத்தாம் இருக்கு. அதெ செஞ்சி வுடுறதுல எந்தப் பெரச்சனையும் எஞ்ஞளுக்கு யில்ல.
பொண்ணு உசுரப் பத்தி அவுங்க சொல்றதெ வுட எஞ்ஞளுக்கு ரொம்பப் பயமிருக்கு. எஞ்ஞ குடும்பத்துல
பெரச்சனெ நடந்து அதால ஒண்ணுகெடக்க ஒண்ணு நடந்தா அதெப் பத்தின தப்பெ நாஞ்ஞ ஏத்துக்கிடலாம்.
அதுல ஒரு ஞாயம் இருக்கு. ஆன்னா இஞ்ஞ பேசுற பேச்சுல ன்னா ஞாயம் இருக்கு? ஆக இதுல நம்ம
தரப்புல நாஞ்ஞ சொல்றது ன்னான்னா எஞ்ஞ மச்சாம் சொன்னாப்புல அந்தப் பொண்ணே எஞ்ஞ வூட்டுல
இருக்குறதுக்கு எஞ்ஞளுக்கு அப்பிடி ஒரு உத்திரவாதம், அதாச்சி மின்னாடி தூக்குப் போட்டுக்கிட்டதுக்கு
எஞ்ஞ குடும்பத்துச் சார்பா எந்த வகெயிலயும் காரணமில்லன்னு சொல்லி, அதுக்குக் காரணம்
அவுங்க குடம்ப வெவகாரந்தாம்ன்னு எழுதி கையெழுத்துக் கட்டயாம் வேணும். இல்லன்னா நாஞ்ஞளும்
அழைச்சிட்டப் போவ மிடியாது. இதெ பஞ்சாயத்துல கொஞ்சம் மனசல வெச்சிக்கிடணும்!"ன்னுச்சு
ராசாமணி தாத்தா. என்னடா இத்து அஞ்ஞ சுத்தி இஞ்ஞ சுத்தி பழைய எடத்துலயே கடெசியில எல்லாம்
வந்து நிக்குதேன்னு ஆச்சுப் பஞ்சாயத்தார்களுக்கு. இப்பிடியே பழயக் குருடி கதவெத் தெறடின்னா
ன்னாத்த பண்ணுறதுன்னு ஆளாளுக்கு யோசிக்க ஆரம்பிச்சாங்க.
"எஞ்ஞப் போனாலும் சுத்தி சுத்தி
ஒரே எடத்துல வந்து நிக்குறது நல்லதில்ல. நீஞ்ஞல்லாம் சொல்றதெப் பாக்குறப்ப பொண்ணு
மாப்புள்ளைய கேட்டாத்தாம் சில சங்கதிங்க வெளங்கும் போலருக்கு. பெரியவங்க நாமளா இதெப்
பத்தி எதோ பேசிட்டு இருக்குறதுல அர்த்தம் இல்ல. நாலு சுவத்துக்குள்ள நடந்த குடித்தனத்தெப்
பத்தி அவுங்களுக்குத்தாம் தெரியும் பெரச்சனெ இருந்துச்சா? ல்லியாங்றது? ரண்டு பேருமெ
இஞ்ஞ பஞ்சாயத்துல யில்லாம அதெப் பத்தி நாஞ்ஞ முடிவுக்கு வந்து எதுவும் சொல்ல மிடியாது!"ன்னாரு
சொட்டெ கண்ணுராசு. இப்போ பஞ்சாயத்து வேற ஒரு தெசயில போறதெப் போல இருந்துச்சு. அதுக்குப்
பதிலச் சொல்றாப்புல ரண்டு தரப்புல யாராச்சும் ஒருத்தரு பேச வெண்டிய நெல.
"நம்ம பையேம் இஞ்ஞ வடவாதியிலத்தாம்
தங்காச்சி வூட்டுல இருக்காம். வேணும்ன்னா சொல்லுங்க. யிப்பவே வர்றச் சொல்றேம். ஒரு
போன அடிச்சாப் போதும். அடுத்த நிமிஷத்துல வந்து நிப்பாம். பெரியவங்களாப் பாத்து பேசி
வுடுவீங்கற நம்பிக்கையிலத்தாம் சின்ன புள்ளைங்க அதெ ஏங் கொண்டாரணும்ன்னு நெனைச்சிக்
கொண்டாரல. இந்தப் பஞ்சாயத்த நாம்ம எஞ்ஞ ஊர்ல வெச்சி எப்பிடிப் பண்ணணுமோ அப்பிடிப்
பண்ணிருப்பேம். அத்து மொறையா இருக்காதுன்னுத்தாம் பொண்ணோட ஊர்லயே பஞ்சாயத்துப் பண்ணி
வையுங்கன்னு மொறையீடு பண்ணிருக்கேம்! சொல்லுங்க பையனெ வார்றச் சொல்லவா! வர்ற சொல்றேம்.
அப்பிடின்னா அஞ்ஞப் பக்கம் பொண்ணும் இஞ்ஞ வந்து நின்னாவணும் பாத்துக்கிடுங்க!"ன்னுச்சு
ராசாமணி தாத்தா ஒரு நமுட்டுச் சிரிப்போட. யிப்போ இதுக்குப் பதிலச் சொல்லியாவ வேண்டிய
நெல.
"அய்யா! மணி யிப்பவே ஒம்போது ஆவுது.
இந்த நேரத்துக்கு நீஞ்ஞ பையன வாரச் சொல்லி, நாஞ்ஞ பொண்ண இஞ்ஞ யிப்போ வார்றச் சொல்ல
மிடியாது. ராத்திரி நேரத்துல பொண்ண கொண்டாந்து வெசாரிச்சாத நாளிக்கு ஒரு பேச்சு உண்டாயி
கெட்டப் பேரா போயிடும். ஒரு சில விசயங்க பொண்ணு புள்ளைய வெசாரிச்சத்தாம் தெரியுங்ற
நெலமையில, இன்னியப் பஞ்சாயத்தெ இத்தோட நிறுத்தி, ஒஞ்ஞளுக்குத் தோதுபட்ட ஒரு நாள சொன்னீயன்னா,
அதுவும் பகல்ல பண்ணுறாப்புல சொன்னீயன்னா மேக்கொண்டு அடுத்ததெ பேசி முடிச்சிப்புடலாம்!
அதாங் யிப்போ இருக்குற நெலயில சரியா இருக்கும்ன்னு நெனைக்கிறேம். இதல்லாம் அவ்சரப்பட்டு
ஒரு முடிவுல வந்து நிக்க மிடியாது. பொறுமெத்தாம் வேணும்."ன்னாரு சொட்டெ கண்ணுராசு.
மறுபஞ்சாயத்துக்கான தேதிய சொல்ல வேண்டிய நெலயில, "வாத்தியாரே! ஒஞ்ஞளுக்கு ஏத்தாப்புல
தேதி ஒண்ணுத்தெ சொல்லுங்க. ஒஞ்ஞ சொந்தக்கார சனங்க யாராச்சும் வாரணும்ன்னாலும் வாரச்
சொல்லிப்புடுங்க. இதுக்கு மேல திரும்ப திரும்பப் பஞ்சாயத்த பண்ணி வுட்டுக்கக் கூடாது.
அடுத்தப் பஞ்சாயத்துல ஒரு மொறைப்பாடு வந்துப்புடணும்!"ன்னாரு பரமுவோட அப்பா.
"நமக்குப் பஞ்சாயத்து நிச்சயம் பண்ணுற
எந்தத் தேதின்னாலும் சம்மதந்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொஞ்சம் கூட யோசிக்காம.
"அப்ப பொண்ணு வூட்டுல சொல்லிப்புட்டாங்க.
மாப்ளே வூட்டுல தேதியப் பத்தி எதாச்சும் சொல்லணும்ன்னா தேதிய நிச்சயம் பண்ணிப்புடலாம்!"ன்னாரு
சின்னுவோட அப்பா மொல்லமா.
"ஞாயித்துக் கெழமெதாம் எல்லாரும்
வந்துட்டுப் போவ தோதுபடும்! மவனும் சென்னைக்கி இன்னிக்கிக் கெளம்பிடுவாம். அவனும்
லீவு போடாம கொள்ளாம வந்துட்டுப் போவ செளரியமா இருக்கும்!"ன்னுச்சு ராசாமணி
தாத்தா தலையச் சொரிஞ்சிக்கிட்டெ.
பஞ்சாயத்துப் பெரிசுங்க தங்களுக்கு ஒண்ணுக்குள்ள
ஒண்ணு கலந்துக்கிடுச்சுங்க. கலந்துகிட்டு முடிச்சதும், சொட்டெ கண்ணுராசு சொன்னாரு,
"வர்ற ஞாயித்துக் கெழமெ பகல்ல பத்து மணிக்கு மறுபஞ்சாயத்து. அதுல வெச்சி வாத்தியாரு
பொண்ணு வெவகாரத்தெப் பேசி முடிச்சிடுறது! பஞ்சாயத்துங்றது சேத்து வைக்கத்தாம் பாக்கும்.
அதுல முடியலன்னா ரண்டு தரப்பையும் பிரிச்சி வைக்குற வேலையல்லாம் பஞ்சாயத்துல மிடியாது.
அதுக்குன்னு போவ வேண்டிய எடத்துக்குப் போயிக்கிட வேண்டியதுதாம். நம்ம வரசித்தி விநாயகரு
ஆலயத்துல உக்காந்து பேசுறதால அந்த கதிக்குல்லாம் ஆளாவாம நல்ல வெதமாவே அடுத்தப் பஞ்சாயத்துல
நல்ல வெதமான மொறைப்பாடு வந்துப்புடும்ன்னு நம்புறேம். இத்துதாம் இன்னிக்கு நடந்தப்
பஞ்சாயத்துல எடுத்த முடிவு. இந்த முடிவுக்கு எல்லாம் கட்டுப்படணும்ன்னு எதிர்பாக்குறேம்.
யாருக்காச்சும் மாத்துக் கருத்தா யிருந்தா சொல்லிப்புடணும். பெறவு இஞ்ஞ நடந்ததெ வெச்சி
அந்தாண்ட இந்தாண்ட இதெப் பத்தி யாரும் எதையும் பேயக் கூடாது. இஞ்ஞயே பேசி முடிச்சிக்கிடணும்.
மறுபஞ்சாயத்து நடக்குற வரைக்கும் ரண்டு குடும்பத்தாரும் இத்துச் சம்பந்தமா எதையும்
பேசிக்குறதோ, இந்தப் பஞ்சாயத்துல நடந்ததெப் பத்தி குதர்க்கமா சொல்றதையோ பஞ்சாயத்து
விரும்பலங்றதையும் சொல்லிக்கிடுறேம். இதுக்குச் சம்பந்தப்பட்டு ரண்டு குடும்பத்துச்
சார்பா பஞ்சாயத்து நோட்டுல கையெழுத்துப் போட்டுத் தந்துட்டு இத்தோட கெளம்புணும்ன்னு
கேட்டக்கிடறேம்!"ன்னு. அதுதாங் சரிங்ற மாரிக்கு ஆளாளுக்குத் தலைய ஆட்டுனாங்க.
அதெ அப்பிடியே நோட்டுல எழுதி பஞ்சாயத்துல சுப்பு வாத்தியாருகிட்டெ கையெழுத்துக் கேட்டாங்க.
அவரு ஒரு மொறை நோட்டப் படிச்சிப் பாத்துட்டு கையெழுத்தப் போட்டாரு. போட்டுட்டு அஞ்ஞ
என்னத்தெ நிக்குறதுன்னு அடியெடுத்து வூட்டெ நோக்கி நடக்க ஆரம்பிச்சாரு.
"நாஞ்ஞ பஞ்சாயத்தெ நம்புறேம். எஞ்ஞ
வூட்டுப் பொண்ண எஞ்ஞ வூட்டுக்கு அனுப்பி வெச்சிப்புடணும். வேற எதையும் நாஞ்ஞ கேக்கல.
நல்ல எடமா புள்ளையாரு கோயில்லத்தாம் வெச்சிப் பேசிருக்கீயே! நல்லது நடக்கும்ன்னு நம்புறேம்!"ன்னு
சொல்லி ராசாமணி தாத்தா, லாலு மாமா, முருகு மாமா, சித்துவீரன் எல்லாம் கையெழுத்துப்
போட்டுச்சுங்க. போட்டு முடிச்சிட்டு, "ஆன்னா ஒண்ணுங்க! எம் மாப்ளே மட்டும் வந்து
இந்தப் பஞ்சாயத்துல்லாம் வாணாம். வூட்டுக்கு வான்னு ஒரு வார்த்தெ சொல்லிருந்தா வூட்டுலப்
போயித்தாம் இதெ பேசிருப்பேம். இந்த அளவுக்கு வர வெச்சதுக்குக் காரணம் எம் மாப்ளேதாம்!"ன்னுச்சு
ராசாமணி தாத்தா சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
கெளம்பி கொஞ்ச தூரம் வந்துட்ட சுப்பு
வாத்தியாரு, அதெ கேட்டுட்டுக் "பஞ்சாயத்துப் பேசுறதுக்கு முச்சந்தி வரைக்கு வர்ற
முடிஞ்சவளுக்கு வூடு வர்றதுக்கு எம்மாம் தூரம் இருக்கு? வூட்டுக்கு வர்றதெ யாரு தடுத்தா?
எஞ்ஞ வூடு எப்பயும் தொறந்துதாம் இருக்கு. யாரும் எப்ப வந்து வாணாலும் பேசலாம். அதுக்கு
கூட வர்ற முடியாம ஆளெ வெச்சி வூட்டுக்கு அனுப்புனா ன்னா அர்த்தமட்? பஞ்சாயத்துக்கு
பிராத கொடுத்ததும், மொதல்ல வந்ததும் நாமளா? அவுகளா? பஞ்சாயத்துன்னு வந்தப் பெறவு நாம்ம
எப்பிடி வந்து கால்ல வுழுந்தா வூட்டுக்கு வாஞ்ஞன்னு கூப்புடறது?"ன்னாரு பதிலுக்கு.
பஞ்சாயத்தெ ஒரு வழியா முடிச்ச பெற்பாடு இப்படி பேச்சு வளர்றதப் பாத்துட்டு, "பஞ்சாயத்து
முடிஞ்சாச்சு. யாரும் இனுமே இதெப் பத்தி மறுபஞ்சாயத்து வர்ற வரைக்கும் வாயத் தொறக்கக்
கூடாதுன்னும் சொல்லியாச்சு! மொதல்ல எடத்தெ காலி பண்டுங்க!"ன்னாரு பரமுவோட அப்பா.
"நாம்ம மொதல்ல வாயெத் தொறக்கல.
நாம்ம எடத்தெ காலி பண்ணிட்டும் தூரமா வந்தாச்சு. நம்ம காதுல கேக்குறப்ப சொல்றப்போ
அதுக்குப் பதிலெச் சொல்லித்தாம் ஆவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு காட்டமா.
"பேச்சே ஆவாது. பேச வேண்டிய நேரமெல்லாம்
முடிஞ்சாச்சு. பெரியவரே ஒண்ணுத்தையும் பேசிட்டு நிக்காதீயே! கெளம்புங்க. எத்தா இருந்தாலும்
நேரமிருக்கு. நல்லா யோஜனெ பண்ணிட்டு ஞாயித்துக் கெழமெ காக்க வைக்காம பத்து மணிக்கு
டாண்ணு வந்துப்புடுங்க. வந்து நின்னு நீஞ்ஞ எம்மாம் வேணும்ன்னாலும் பேசுங்க. யாரும்
ஒண்ணுத்தையும் சொல்லப் போறதில்ல!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு கையெழுத்துப் போட்டும்
அங்கயே நின்னுகிட்டு இருநத் ராசாமணி தாத்தாவ கௌப்பி வுடுறாப்புல.
"இன்னியப் பஞ்சாயத்துக்கும் நாம்மத்தாம்
டாண்ணு நீஞ்ஞ சொன்ன நேரத்துக்கு வந்தாச்சு. அவுகத்தானே நேரத்துக்கு வாராம நேரத்தெ
கடத்துனாக!"ன்னுச்சு ராசாமணி தாத்தா அதுக்கு டக்குன்னு ஒரு பதிலச் சொல்றாப்புல.
"அவுங்க ஒண்ணும் நேரத்தெ கடத்தல.
நாஞ்ஞ வந்து கூப்புடறப்பா வந்தா போதும்ன்னு சொன்னதால கூப்புட்ட ஒடனே வந்தாங்க! அடுத்தப்
பஞ்சாயத்துல யாருக்கும் அந்த மாதிரிக்கி அழைப்புல்லாம் கெடையாது. பத்து மணிக்கு வந்துப்புட
வேண்டித்தாம்! அதுக்குத்தாம் எழுதி கையெழுத்தல்லாம வாங்கியிருக்கு. அதால அடுத்ததுல
நேரத்துக்கு வந்துப் பேசி முடிச்சி கதெயே கட்டிப்புட வேண்டியதுதாங்!"ன்னாரு சின்னுவோட
அப்பா.
*****
No comments:
Post a Comment