15 Oct 2020

பிராதும் பஞ்சாயத்தார்களும்

பிராதும் பஞ்சாயத்தார்களும்

செய்யு - 595

            ஏப்ரல் மாசத்துல பள்ளியோடம் நிறைவடையப் போற கடைசி வாரத்துல விகடு பள்ளியோடம் கெளம்பிட்டு இருந்தாம். வூட்டுக்குள்ளார பரமுவோட அப்பா, காயிலாங்கடெ சொட்டை கண்ணுராசு, சின்னுவோட அப்பா, பரமுவோட அப்பா, பட்டறைக்காரரு பட்டாமணி எல்லாம் கூட்டா வந்தாங்க. பரமுவோட அப்பாதாம் சொன்னாரு, "பஞ்சாயத்துக்கு ஒரு விசயம் வந்திருக்கு. அது சம்பந்தமா யப்பாகிட்டெ பேசணும்!"ன்னு. விகடு கொல்லையில இருந்த அப்பங்காரரை அழைச்சிட்டு வந்தாம். எல்லாம் கூடத்துல வந்து உக்காந்தாங்க.

            "ஒண்ணுமில்ல வாத்தியாரே! ஒண்ணும் தப்பா நெனைச்சுக்காதீயே! பஞ்சாயத்துக்கு ஒஞ்ஞ மவ்வெச் சம்பந்தமா பிராது வந்திருக்கு. அதெ கொடுத்தது யாருன்னா ஒஞ்ஞ சம்பந்தித்தாம். இந்தப் பிரச்சனையெ பேசித் தீத்து வைக்கணும்ன்னு காயிதம் கொடுத்திருக்காப்புல. இந்தாங் காயிதம். இதெப் பாருங்க!"ன்னாரு பரமுவோட அப்பா.

            சுப்பு வாத்தியாரு அதெ வாங்கிப் படிச்சிப் பாத்தாரு. அந்தக் காயிதத்துல ராசாமணி தாத்தா இப்பிடி எழுதியிருந்துச்சு :

            திட்டை கிராம பஞ்சாயத்து முக்கியஸ்தர்களுக்கு, நெ. 999, சாமிப்பாளையம், பாக்குக்கோட்டை என்ற முகவரியில் வசித்து வரும் நாரணமணி பத்தரின் மகனாகிய சோதிட சிகாமணி சிவஸ்ரீ ராசமாணிக்கம் புகார் தெரிவித்து எழுதிக் கொள்வதாவது. எனது மகனும் ஆயுர்வேத டாக்டருமான பாலாமணிக்கும், தங்கள் கிராமத்தில் வசிக்கும் சாமிநாதம் ஆச்சாரியின் மகனாகிய சுப்பு வாத்தியார் என்பாரின் மகளுமான செய்யுவுக்கும் பெரியோர் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு, மேற்படித் திருமணம் பாக்குக்கோட்டை, மாடடிக்குமுளையில் இருக்கும் வைரம் திருமண மஹாலில் நடந்தது கிராமத்தார் யாவரும் அறிந்ததே.

            திருமணமாகி சென்னையில் மகிழ்ச்சியுடன் மணமக்கள் வாழ்ந்து வந்த நிலையில் பிப்ரவரி மாதம் 12 ஆம் நாள் 2015 வருஷம் நில ரிஜிஸ்தர் சம்பந்தமாக எனது மகன் பாலாமணியின் மனைவியும், எனது மருமகளுமான செய்யுவை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதாகக் காரணத்தைக் கூறி இக்கிராமத்திற்குச் சுப்பு வாத்தியார் அழைத்து வந்தார். அவர் அழைத்து வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தனது மகளை தனது வீட்டிலேயே வைத்துள்ளார். இது சம்பந்தமாக பல முறை போன் மூலம் கேட்டுப் பார்த்தும், நேரில் வந்து விசாரித்தும் அலட்சியமான பதில்களையே சுப்பு வாத்தியார் சொல்லி வந்திருக்கிறார். இது பொருட்டு எனது மகன் பாலாமணி கடந்த மார்ச் மாதத்தில் நேரில் வந்து தனது மனைவியை அழைத்துச் செல்ல மன்றாடியுள்ளார். ஆனால் சுப்பு வாத்தியார் தனது மகளை அனுப்ப முடியாதென்று கூறியதோடு, மனைவியை அழைக்க வந்த எனது மகனையும் தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார். இதனால் மனம் வெறுத்துப் போய் வீடு திரும்பிய எனது மகன் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளானான்.

            இருப்பினும் நாங்கள் அதைப் பெரிதுபடுத்தாது எனது மச்சான்களும், சுப்பு வாத்தியாரின் மனைவிக்கு தாய்மாமன்களும் ஆகிய முருகு ஆச்சாரி, லாலு வாத்தியார் ஆகியோரை அனுப்பி மத்தியஸ்தம் செய்ய முற்பட்ட போதும் சுப்பு வாத்தியாரின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், தகாத வார்த்தைகளால் திட்டியும் மேலும் அவர்களைத் தாக்க முயன்றும் அத்துடன் வீட்டை விட்டே துரத்தி அடித்து உள்ளனர். பல மாதங்களாக தனது மனைவி இல்லாமல் தனித்து இருப்பதன் காரணமாக எனது மகனான பாலாமணி மிகுந்த மன பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளான். எனது மருமகள் இல்லாமல் எனது வீடும் கலை இழந்துள்ளது.

            எங்கள் குடும்பத்தாருக்கும், சுப்பு வாத்தியாரின் குடும்பத்தாருக்கும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாத நிலையில், அப்பிடிப் பிரச்சனைகள் இருப்பது போல சில விசயங்களைத் திரித்துக் கொண்டு அவராக ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு தேவையில்லாத சண்டைச் சச்சரவுகளைத் தங்களது கிராமத்தில் வசித்து வரும்  சுப்பு வாத்தியார் வளர்த்துக் கொண்டு வருகிறார்.

            நிற்க, அவரது மனதில் எப்படிப்பட்ட விரோத குரோத எண்ணங்கள் இருந்தாலும் அதைத் தீர்த்து வைக்கவும், அவருக்கு ஏற்றாற் போல நடந்து கொள்ளவும் எங்கள் குடும்பத்தார் எப்போதும் தயாராகவே உள்ளோம். சமாதானத்தோடு போகவும், சமரசமாகவும் இருக்க முனையும் நிலையில் சுப்பு வாத்தியாரின் பேச்சும், போக்கும் விசித்திரமாக இருக்கிறது. அவருக்கு ஏதேனும் மனநல பாதிப்புகள் இருந்தாலும் ஒரு டாக்டர் என்ற முறையில் அதை சரிசெய்ய எனது மகனும் அவரது மருமகனுமான பாலாமணி தயாராகவே இருக்கிறான் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் செய்யும் தவறுக்கு அவரது மகளும், எங்களது குடும்பத்தின் மருமகளுமான செய்யுவைத் தண்டிக்க நாங்கள் விரும்பவில்லை. எவ்வளவு பிரச்சனைகள் தந்த போதும் சேர்ந்து வாழ வைக்கவே விரும்புகிறோம்.

            தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தப் பிறகும் பொறுப்பற்ற முறையில் தனது வீட்டில் வைத்துக் கொண்டு அனுப்ப முடியாதென்று சண்டை பிடித்துக் கொண்டு வீண் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கும் தங்கள் கிராமத்தின் சுப்பு வாத்தியாருக்குத் தகுந்த புத்திமதிகள் கூறி, கிராமப் பஞ்சாயத்தார்கள் மேற்படி விசயத்துக்கு ஏற்றபடி சமரசம் பண்ணி எனது பேத்தியும் குடும்பத்தின் மருமகளுமான செய்யுவை எங்களுடன் அனுப்பி வைக்குமாறு கிராமச் சமூகத்தாரைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

சோதிட சிகாமணி சிவஸ்ரீ ராசாமணி,

999, சாமிப்பாளையம்,

பாக்குக்கோட்டை.

            அந்தப் பிராதைப் படிச்சு முடிச்சதும், "இவுங்க பிராதுல எழுதியிருக்காப்புல எந்த விசயமும் நடக்கல. யாரும் யாரையும் அடிக்கல கொள்ளல. வீம்புக்கும் யாரும் எதெயும் பண்ணல. அப்பிடி ஒண்ணு நடந்திருந்தா கிராமத்துல இருக்குறவங்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும். இத்து என்னா டவுனா? பக்கத்து வூட்டுல நடக்குறது அடுத்த வூட்டுக்குத் தெரியாம இருக்குறதுக்கு? பெரும்பாலான விசயமுங்க ஒஞ்ஞ எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதாங். நாம்ம கிராமப் பஞ்சாயத்துக்குக் கட்டுபடுறேம். பஞ்சாயத்து வைக்க வாணாங்றது எஞ்ஞளோட தனிப்பட்ட கருத்து. ஏன்னா பஞ்சாயத்துல்லாம் வெச்சி எஞ்ஞளோட பொண்ண நாஞ்ஞ அனுப்ப முடியாது. அப்பிடி எந்தக் குத்தமும் நாஞ்ஞளும் செய்யல. இதெத் தாண்டி பஞ்சாயத்து வைக்கணும்ன்னா அதுக்கும் நாம்ம கட்டுப்படுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இத்து ஒஞ்ஞ குடும்ப விசயந்தாம். ல்லன்னே சொல்லல. பஞ்சாயத்துல வெச்சு தீக்குற அளவுக்கும் இதுல விசயம் ஒண்ணுமில்ல. ஒஞ்ஞளுக்குள்ளப் பேசி ஒத்துப் போயிட்டா நாஞ்ஞ இதுல தலையிடப் போறதில்ல. அதுக்கு மின்னாடி நீஞ்ஞ அவுங்கக் கூட பேசிப் பாக்கறதுன்னாலும் பேசிப் பாருங்க. நாஞ்ஞ வாணாம்ன்னு சொல்லல!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "நம்மள கேட்டா பஞ்சாயத்துக்குப் பிராது கொடுத்தாங்க? கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணி, பஞ்சாயத்தெ வைக்கணும்ன்னு ஆசைப்படுறவங்க அவுங்க. எப்போ இப்பிடி ஒரு முடிவுக்கு அவுங்க வந்துட்டாங்களோ அதுக்குப் பெறவு அவுங்ககிட்டெ போயி நிக்குறதுல அர்த்தமில்ல. நீஞ்ஞளே சொல்லுதீங்க, இத்துக் குடும்பத்துக்குள்ளேயே பேசித் தீத்துக்கிற விசயந்தான்னு. அதெத் தாண்டி அவுங்க எப்போ பஞ்சாயத்துன்னு வந்துப்புட்டாங்களோ, இனுமே இதெ குடும்பத்துல இருக்குற பெரியவங்கள வெச்சித் தீக்குறதுக்கும் ஒண்ணுமில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒஞ்ஞ குடும்பம் சம்பந்தமா சில பல காரணங்கள் இருக்கலாம் வாத்தியாரே. அதனோட காரணமாவும் நீஞ்ஞ பொண்ண அழைச்சாந்து அனுப்பாம இருக்கலாம். அதுக்குள்ளார நாஞ்ஞ வர்ற மாட்டோம். ஆன்னா பஞ்சாயத்துன்னு வந்தா அத்து எல்லாத்தையும் வெச்சி வெசாரிக்குற மாரிக்குத்தாம் இருக்கும். ஆன்னா அதே நேரத்துல கிராமம் ஒஞ்ஞப் பக்கந்தாம் சப்போர்ட்டா இருக்கும் வாத்தியார்ரே!"ன்னாரு காயலாங்கடை சொட்டை கண்ணுராசு.

            "பஞ்சாயத்துக்கு ஒஞ்ஞ சம்பந்தமா ஒஞ்ஞ குடும்பத்துப் பெரியவங்க யாராச்சும் வாரணும்ன்னா வாரச் சொல்லிடுங்க. ஏன்னா இன்னிக்கு ராத்திரியே பஞ்சாயத்தெ வெச்சி முடிச்சிப்புடலாம்ன்னு நெனைக்குறேம்!"ன்னாரு பட்டறைக்காரரு பட்டாமணி.

            "எஞ்ஞ குடும்பத்துச் சார்பா நாம்ம மட்டுந்தாம் வருவேம். எம் மவ்வேம் கூட வார மாட்டாம்! எம்மட பொண்ணையும் கொண்டாந்து பஞ்சாயத்துல நிறுத்த முடியாது. வேணும்ன்னா நீஞ்ஞ வூட்டுல வந்து எதெ வெசாரிக்கணும்ன்னா வெசாரிச்சுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நம்ம தெருவுல இருக்குற நம்ம கிராமத்துப் பொண்ண அப்பிடில்லாம் பஞ்சாயத்துல நிறுத்தி அசிங்கம் பண்ணிட மாட்டோம் வாத்தியார்ரே!"ன்னாரு பரமுவோட அப்பா.

            குடும்பப் பிரச்சனைகளெ பெரும்பாலும் குடும்பத்துக்குள்ளதாம் தீத்துக்கிறது. ரண்டு குடும்பத்துப் பிரச்சனைகளா இருந்து, ரண்டு பக்கத்துல அடிச்சிக்கிட்டாலும் ரண்டு பக்கத்துலயும் சமாதானம் பண்ண ஆளுங்க இருப்பாங்க. அட நீயி கொஞ்சம் தணிஞ்சிப் போ, நீயி சித்தெ பேயாம கெடன்னு சொல்லி எப்பிடியும் பேசி சரிபண்ணி வுட்டுப்புடுவாங்க. ரண்டு மூணு நாளைக்கு பேசுறாப்புல இருந்தாலும் அதெ பேசித் தீத்து விட்டுப்புடுவாங்க. அதெ பஞ்சாயத்து வரைக்கும் யாரும் கொண்டுப் போறதில்ல. அக்கம் பக்கத்து வூட்டுச் சண்டைக, நிலப் பிரச்சனைக, அடிதடிப் பிரச்சனை இதுகத்தாம் பஞ்சாயத்து வரைக்கும் போவும். ஒரு பிரச்சனெ பஞ்சாயத்துக்குன்னுப் போயிட்டா ஆளாளுக்கு ஒண்ணு பேசுறதும், ஊரு முழுக்க இதெ பேச்சு டமுக்கு டுமுக்குன்ன ஆவுறதும் சகஜம்.

            பஞ்சாயத்துன்னு வந்தப் பெறவு ஒவ்வொருத்தரும் தாம் யாருன்னு காட்ட கோதாவுல எறங்கி, எதுக்காக அந்தப் பெரச்சனங்ற மொகமே மாறிப் போயிடறதும் உண்டு. திட்டைப் பஞ்சாயத்தப் பொருத்த வரைக்கும் இது மாதிரி மாப்புள்ள பொண்ணு பெரச்சனை பஞ்சாயத்து வரைக்கும் வந்ததில்ல. பெரும்பாலும் வேலிச் சண்டைகத்தாம், வரப்புத் தகராறுத்தாம் வரும். அதையும் கூட அவுங்களுக்குள்ளார பேசித் தீத்துக்கிறதும் உண்டு. செரித்தாம் போ அவ்வேம் அப்பிடித்தாம் வேலி நவுத்துறப் பயெ, வரப்ப நவுத்துறப் பயென்னு கண்டுக்கிடாம போறவங்களும் உண்டு. விகடுவுக்கும் நெனைவு தெரிஞ்ச நாள்லேந்து பொண்ணு மாப்புள பெரச்சனெ சம்பந்தமா பஞ்சாயத்து நடந்ததா ஞாபவம் இல்ல. ஒருவேள அவ்வேம் நெனவு தெரியாத வயசுலயோ, அவ்வேம் அறியாமலயோ நடந்திருக்கலாம். குடும்பத்துக்குள்ள அப்பிடி இப்பிடின்னு பெரச்சனெ நடக்குறதுதாம். அதெ பஞ்சாயத்துல பிராது பண்ணில்லாம் வெசாரிச்சது கெடையாது. அந்தச் சண்டெ அப்பிடியே பெரிசா போனாலும் தெருவுல போற ஊருக்கார பெரிசுங்கப் போயி சமாதானம் பண்ணி வுட்டுப்புட்டு டீத்தண்ணியக் குடிச்சிட்டு வந்துப்புடும்ங்க.

            சுப்பு வாத்தியாரு மவ்வே செய்யுவுக்குப் பஞ்சாயத்தெ பண்ணப் போறாங்ற விசயம் கிராமம் முழுக்க தெரிய யாரும் தமுக்குக் கட்டியெல்லாம் அடிக்கல. அந்த விசயமே தமுக்கு அடிச்சிக்கிட்டாப்புல ஊரு பூரா இதெ பேச்சா கெடந்துச்சு. "யிப்பிடி ஒரு நெல நம்ம ஊரு பொண்ணுக்கு வாரணுமா? ஊருல இருக்குற எடம் தெரியாம கெடக்குற சுப்பு வாத்திக்குத்தாம் யிப்பிடி ஒரு நெல வாரணுமா? அப்பிடி என்னத்தாம் அந்தப் பொண்ணுக்கும் பையனுக்கும் பெரச்சனென்னு புரிபட மாட்டாங்கேது. சுப்பு வாத்தி வூட்டுல பொண்ணு தூக்கு மாட்டுன ஒடனேயே அத்தெ அத்து வுட்டுருக்கணும். அவுங்க சமாதானம் பண்ணிக் கொண்டு போயி வுட்டது தப்புதாங். அதாங் அந்தப் பயலுவோளுக்கு ஏறிப் போயிடுச்சு கொழுப்பு. யிப்போ கொழுப்பெடுத்து யாரு மேல பாயுறதுன்னு தெரியாம பாயுறாம்! இத்தெ கொண்டாந்து நம்ம ஊரு பஞ்சாயத்துலயா தீக்கணும். இவுனுக இதெ பெருநெருப்பா ஆத்தி வுடுவானுவோளெ தவுர அணைச்சி வுட மாட்டானுவோளே!"ன்னு சனங்க ஆளாளுக்குப் பேச ஆரம்பிச்சதுங்க.

            ஊரு சனத்தோட வாய்களுக்கு மெல்ல நல்ல அவுலு கெடைச்சாப்புல ஆயிடுச்சு. ஆளாளுக்கு ஒவ்வொரு வெதமா பேசுனாங்க. இப்பிடி ஊருல பேச வெச்சு அசிங்கப்படட்டும்ன்னுத்தாம் ராசாமணி தாத்தா அந்தப் பிராதுவே அனுப்பிச்சோ என்னவோ தெரியல.

            அன்னிக்கு ராத்திரியே பஞ்சாயத்து நடந்துச்சு.

            "குடும்ப விசயத்தெ இந்த மாதிரிக்கிப் பஞ்சாயத்துல கொண்டுப் போயி நிறுத்துறவனுக்குப் பொண்ணு கூட வாழ விருப்பமில்லங்றதுதாம் அர்த்தம். அதெ நேரடியா சொல்லிட்டுப் போவ வேண்டித்தானே. அதெ வுட்டுப்புட்டு பஞ்சாயத்து கிஞ்சாயத்துன்னு வெச்சி அசிங்கம் பண்ணிட்டு இருக்காம்!"ன்னு சொல்லிட்டுதாங் சுப்பு வாத்தியாரு பஞ்சாயத்துக்குக் கெளம்புனாரு.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...