14 Oct 2020

ஆட்டோவுல வந்த அக்கப்போருக!

ஆட்டோவுல வந்த அக்கப்போருக!

செய்யு - 594

            விகடு நேரா போயி லஸ்கர்ரு செல்வராசு வூட்டுலேந்து, கொஞ்சம் வூட்டுக்கு வந்துட்டுப் போவணும்ன்னு சொல்லி அவரெ அழைச்சாந்துட்டாம். பாலாமணி இதெ எதிர்பாக்கலெ. ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி தலையில மௌகா அரைச்சிப்புட்டுப் போயிடலாம்ன்னு பாத்தா, இவனுங்க ஆதாரத்தக் கொண்டாந்து நாதாரித்தனம் பண்ணுறானுவோளேன்னு நெனைச்சிருப்பாம் போலருக்கு. லஸ்கர்ர கொண்டாந்து வெச்சி, அவர்ர கேட்டா தமக்கும் சித்துவீரனுக்கும் பேச்சு வார்த்தையே கெடையாது, அவுங்க வூட்டுப் பக்கமே அ‍டியெடுத்து வெச்சது கெடையாதுன்னு தலையில அடிச்சிச் சொல்லாத கொறையா சொல்றாரு. அப்பிடிச் சொல்லிக்கிட்டே அப்பிடில்லாம் நாம்ம யாருகிட்டெயும் சொல்லவும் யில்ல, அப்பிடி எந்தச் சேதியையும் வாத்தியாரு நம்மகிட்டெ சொல்ல, அவர்ரேப் பாத்ததெ ஒஞ்ஞ தங்காச்சிக் கலியாணத்தப்பத்தாம்ன்னு சொல்லி பாலாமணி தலையில ஓங்கி அடிச்சி சத்தியமும் பண்ணிட்டாரு. அவரு சொல்ல சொல்ல அவரு சொன்னதாத்தாம் சித்துவீரனும், சுந்தரியும் சொன்னதா சொல்றாம் பாலாமணி. கொஞ்ச நேரம் அசமடங்குனாப்புலத்தாம் பதிலச் சொல்லிப் பாத்தாரு லஸ்கரு. ஒரு கட்டத்துக்கு மேல எரிச்சலாயிப் பேச ஆரம்பிச்சிட்டாரு.

            "யோவ் ஒந் தங்காச்சி, மச்சாங்கார்ரேம் குடும்பத்தெப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேமொயோழிய நாம்ம அவுங்க கூடல்லாம் பேசுனதில்லையா. நாம்ம உண்டு, நம்ம வேல உண்டுன்னு போயிட்டு இருக்குற ஆளப் பத்தி ஏம்யா இப்பிடி யிப்பிடி யில்லாததும் பொல்லாததும் சொல்றே. இதாங் நீயிப் படிச்ச டாக்கடருப் படிப்புக்குண்டான லட்சணமா? என்னவோ வாத்தியாரு மருமவனாச்சே! அவர்ரப் போல வாக்குச் சுத்தம், காரியச் சுத்தத்தோட இருப்பேன்னு பாத்தா ஒண்ணுஞ் சொல்லாத நம்மளப் பத்தி ஏதேதோ சொன்னதா வெச்சி வத்தி வெச்சிட்டுப் போறீயோ? ஏம்யா ஒமக்கு இந்தப் பொறாமெ பொச்சரிப்பு? நாமளும் வாத்தியாரும் நல்ல வெதமா பழகுறது ஒங் கண்ணுக்கு ஏம்யா உறுத்துது? இப்பிடிப் பொட்டாட்டம் கோளு சொல்ற ஆளா இருக்கீயே! ச்சைய்!"ன்னு வெசனக் கடுப்பெடுத்து பேச ஆரம்பிச்சிட்டாரு லஸ்கர்ரு செல்வராசு.

            லஸ்கர்ரு வயசான ஆளு. வேலையிலேந்து ரிட்டையர்டு ஆயி பத்துப் பாஞ்சு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. தானுண்டு, தன்னோட வேலையுண்டுன்னு அவரு பாட்டுக்கு இருக்குற ஆளு. ஓய்வூதியர் சங்கத்து வேலைகளப் பாக்குறதுக்குத்தாம் ஆளெ வெளியில பாக்க முடியும். ரொம்ப பதிவிசான ஆளு. அதே நேரத்துல குண்டக்க மண்டக்கப் பேசுனா வெசனக் கடுப்பெடுத்து பேசுற ஆளு.

            "செரித்தாம்யா! ஒந் தங்காச்சிப் பத்தி யப்பிடி ன்னய்யா ரகசியம் இருக்கு? அதயாச்சியும் சொல்லு! வந்ததுக்கு நாமளும் தெரிஞ்சிக்கிட்டுப் போறேம்! ன்னா வாத்தியார்ரே யிப்பவாச்சும் அப்பிடியென்ன ரகசியம்ன்னு மருமவனெ வெச்சிட்டுச் சொல்லுங்க. வேணுன்னா கேட்டுக்கிட்டுப் போயி அந்த வூட்டுலச் சொல்லிட்டு வர்றேம். ஒஞ்ஞ டாக்கடர்ரு சொல்றதெ ஏம் பொய்யாக்கணும்? நீஞ்ஞ சொன்னதாவே இருக்கட்டும்? நாம்ம அதெப் போயி கேட்டுக்கிட்டுச் சொன்னதாவே இருக்கட்டும். யிப்போ நீஞ்ஞ சொல்றதுக்கு ஒஞ்ஞ மருமவ்வனே சாட்சியாப் போயிடும்ல யில்லீயா?"ன்னு லஸ்கர்ரு அவரு பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாரு.

அதே கேட்டதும், “அதெல்லாம் ஒண்ணுமில்ல பெரியவரே! நீஞ்ஞ கௌம்புங்க!”றாம் பாலாமணி. “அதெல்லாம் முடியா. ஒந் தங்காச்சி ரகசியம் ன்னா? அதெச் சொல்லு மொதல்ல. அப்பத்தாம் கௌம்புவேம்!”ன்னு பாலாமணிகிட்டெ ஒத்த கால்ல மல்லுக்கு நிக்குறாரு லஸ்கர்ரு. “தயவு பண்ணி மொதல்ல இந்த வயசானவர்ர எதாச்சிம் சொல்லி கௌப்புங்க!”ன்னு விகடுவையும் சுப்பு வாத்தியாரையும் பாத்துக் கையெடுத்துக் கும்புட்டாம் பாலாமணி. “ஏம்யா டாக்கடர்ரரு! நீயி சொல்லாமலா அவுங்க நம்மாள கொண்டாந்தாங்க? யிப்போ என்னவோ கௌப்பி வுடுன்னு கையெடுத்துக் கும்புடுறே? நீயி குத்தம் சொன்னா கொண்டாரணும். இல்லன்னா ஒடனே ஓட வுட்டு அடிக்கணும். ந்நல்லா இருக்குடாப்பா ஒந் ஞாயம்?”ன்னு மேலுக்கு மேல நிக்க ஆரம்பிச்சிட்டாரு லஸ்கரு. அவரெ சமாதானம் பண்ணி திரும்பவும் வூட்டுல கொண்டுட்டுப் போயி வுட்டுட்டு வந்தாம் விகடு. அப்போ லஸ்கர்ரு சொன்னாரு, "ஒஞ்ஞ யப்பா மொகத்துக்காக வந்தேம். ஒஞ்ஞ யப்பா மொகத்துக்காகத்தாம் வுட்டுப்புட்டு வந்தேம். யில்லன்னா நடக்குறதே வேற? நாம்ம யாருய்யா? அவ்வேம் யாருய்யா? நம்மள யாருன்னே தெரியாத ஒரு கம்முனாட்டிப் பயெ ஏம் எம் பெயர்ர எடுத்து அசிங்கம் பண்ணிட்டுக் கெடக்குறாம்? டாக்கடர்ன்னா கொம்பா மொளைச்சிருக்கு? டாக்கடர்ன்னா டாக்கடர்ரா இருக்கணும். ல்லன்னா அசிங்கமாப் போயிடும். போவும் போது ஒம்மட மச்சாங்கிட்டெ சொல்லி வையி!"ன்னாரு லஸ்கரு.

            விகடு திரும்பி வந்தப்போ பாலாமணியோட முகம் தொங்கிப் போயிருந்துச்சு. அவனால சமாளிக்க முடியல. "இவரு யில்லன்னு நெனைக்கிறேம். வேற யாரோன்னு பேர்ர நாம்ம மாத்திச் சொல்லிட்டமா ன்னான்னு தெரியலே?"ன்னாம் பாலாமணி.

            "அதெப்படி பேரு மாறும்? திட்டையில செல்வராசுன்னு நாலு பேத்து இருந்தாலும் லஸ்கர்ரு செல்வராசுங்றது ஒருத்தர்தாம். அவரும் சாதாரணப் பட்ட ஆளில்ல. ஊருக்கே தெரிஞ்ச ஆளு. யாரு யாரோ சொல்லி ஆடுதியளோங்ற சந்தேகம் நமக்கு வருது. நீஞ்ஞ பேசுறதுலேந்து நடந்துக்கிடறது வரைக்கும் எல்லாம் தப்புத் தப்பாவே யிருக்கு. ஒஞ்ஞளுக்கு ஒஞ்ஞ குடும்பத்தெ நடத்தணும்ன்னா ஒஞ்ஞ மனசு சொல்றதெ மட்டும் கேளுங்க. அடுத்தவங்க சொல்றதெயல்லாம் கேட்டுக்கிட்டு நடக்க வாணாம். அவுங்கவுங்க சொல்றதெ சொல்லிட்டு அவுங்கவுங்க வாழ்க்கையெ நல்ல வெதமா வாழ்ந்துட்டு இருப்பாங்க, ஒஞ்ஞளோட வாழ்க்கெய நாசாமாக்கிடுவாங்க. யிப்பவே நீஞ்ஞ சொன்னதெல்லாம், நீஞ்ஞ கேட்டதெல்லாம் தப்புங்றதெ கண்ணு மின்னாடி நிரூபிச்சாச்சு. இதுக்கு மேல நாம்ம வெறென்னத்தப் பண்ணுறது?"ன்னாம் விகடு.

            "அதெ வுடுங்க மச்சாம்! நாம்ம நம்மடப் பொண்டாட்டிய அழைச்சிட்டுப் போவலாம்ன்னுத்தாம் வந்தேம்!"ன்னாம் பாலாமணி.

            அதுக்குச் சுப்பு வாத்தியாரு, "தாராளமா அழைச்சிட்டுப் போவலாம். அதுக்கான உரிமெ யிருக்கு! யிப்பயே அழைச்சிட்டுப் போவலாம்!"ன்னு சொல்ல, செய்யு அரண்டுப் போயிட்டா. விகடு அதுக்கு மேல அரண்டுப் போயிட்டாம். ஆனா அதுக்குப் பாலாமணி சொன்னாம், "யிப்போ யில்ல மாமா! அடுத்த ஞாயித்துக் கெழமெ நாம்ம வந்து அழைச்சிட்டுப் போறேம். அது வரைக்கும் இஞ்ஞ இருக்கட்டும்! கட்டாயம் அன்னிக்கு வந்து அழைச்சிட்டுப் போவேம். யாரு தடுத்தாலும் செரித்தாம் வந்து அழைச்சிட்டுப் போவேம்!"ன்னு.

            "ஒஞ்ஞப் பொண்டாட்டி நீஞ்ஞ அழைச்சிட்டுப் போறீயே! இதெ யாரு தடுக்கப் போறா? வர்றப்போ பொண்ணுக்குன்னு போட்ட நகையில அஞ்சாறு பவுனையாச்சிம் எடுத்துட்டு வாஞ்ஞ. அவ்வே ஒடம்புல நகென்னுப் பாத்தா ரொம்ப தேறாது போலருக்கே. போட்ட நகெ அம்புட்டையும் போடலன்னாலும் கொஞ்சமாச்சும் போடணமில்லையா? அடுத்த மொறெ வர்றப்போ அதெ கொஞ்சம் எடுத்தாந்து போட்டு வுட்டுட்டு அழைச்சிட்டுப் போங்க. அதெ நாஞ்ஞ கொஞ்சம் எதிர்பாக்குறேம்! இன்னொண்ணுத்தையும் சொல்லிக்கிட நாம்ம கடமெ பட்டிருக்கோம். நாமளா போயி யாரு வூட்டுலயும் இந்த நாளு வரைக்கும் எதையும் பேசுனதுமில்ல. நாம்ம கலியாணத்துக்குப் பெறவு அப்பிடி வெளியில கெளம்புறதுக்கும் நேரமில்ல. ச்சும்மா அப்பிடி அவுங்ககிட்டெப் பேசுனேம், இவுங்ககிட்டெ இப்பிடிப் பேசுனேம்ன்னு பேசுறதுக்கு சுத்தமா நேரமும் யில்ல நமக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            அதுக்கும் மேல ஒண்ணும் சொல்ல முடியாம, மேக்கொண்டு உக்காரவும் முடியாம, "எல்லாத்துக்கும் கெளம்புறேம்!"ன்னு கும்புட்டுட்டுக் கெளம்புனாம் பாலாமணி.

            "வூடு வரைக்கும் வந்துட்டுச் சாப்புடாம கெளம்புதீயளே?"ன்னு வெங்கு மருகுனாப்புல சொன்னுச்சு.

            "செய்யுவ அழைக்க வார்றேம்லா! அன்னிக்கு நாம்ம விருந்தே சாப்புடுதேம். அன்னிக்குச் செஞ்சி வையுங்க தடபுடலா. வந்து ஒரு பிடியப் பிடிக்கிறேம்!"ன்னு சொல்லிட்டுச் சுந்தரியோட மவனெ அழைச்சிட்டுக் கெளம்புனவேம்தான் பாலாமணி. அதுக்குப் பெறவு பல ஞாயித்துக் கெழமைக வந்துட்டுப் போனுச்சு. அவ்வேம் மட்டும் வாரல.

            அவ்வேம் கெளம்புன பெற்பாடு, "ன்னாப்பா! நீஞ்ஞப் பாட்டுக்கு ஒடனே அழைச்சிட்டுப் போன்னு சொல்லிட்டீயளே? நமக்கு அப்பிடியே வெடவெடன்னு ஆயிடுச்சு. நல்ல வேளையா யிப்போ அழைச்சிட்டுப் போவலன்னு அவ்வேம் சொன்னதுந்தாம் நமக்கு உசுரே வந்துச்சு. செரித்தாம்ன்னு அத்தோட வுடாம நாளு கொடுக்குறாப்புல அடுத்த ஞாயித்துக் கெழமெ வந்து அழைச்சிட்டுப் போன்னு சொல்லிட்டீயளே? அவ்வேம் அப்பிடி வந்தாக்கா எப்பிடி அவனெ நம்பி அனுப்புறது?"ன்னாம் விகடு.

            "அட போடாம்பீ! அவனெப் பத்தி நீஞ்ஞ புரிஞ்சிக்கிட்டது அம்புட்டுத்தாம். அழைச்சிட்டுப் போன்னாலும் அந்தப் பயெ அழைச்சிட்டுப் போவ மாட்டாம். இன்ன கெழமெக்கு அழைச்சிட்டுப் போன்னாலும் அன்ன கெழமெக்கு அந்தப் பயெ வர்ற மாட்டாம். ச்சும்மா வந்து மேக்கரிச்சாப்புல பேசிட்டுப் போறாம். அவ்வேம் எவ்ளோ தகிடுதித்தம் பிடிச்சவேங்றதெ லஸ்கர்ரு வெசயத்த வெச்சி ஒரு பொய்யச் சொன்னதிலேந்து தெரியலையா? ஒருவேள அவ்வேம் வாரணும்ன்னு நெனைச்சாலும் பவுனெ கொஞ்சம் எடுத்துட்டு வாரணும்ன்னுலா சொல்லிருக்கேம். அவனால அதெ எடுத்து வார்ற முடியாது. அதெ எடுக்க மனசு வாராது. பணங்காசியில பேராச பிடிச்சப் பயலுவோ! அப்பிடியே வந்தா அதெப் பத்தி அப்போ யோஜிக்கலாம். ஏன் சொல்றேம்ன்னா அப்பிடி வர்றப் போற பயெ கெடையாது அவ்வேம். அதால அதெப் பத்தி யோஜிக்கவே வேண்டியதில்ல. இதெ வாணாலும் ஒரு தாள்ல எழுதி வெச்சிக்கடா மவனே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. எப்பிடி அவரு அவ்வளவு துல்லியமா பாலாமணியப் பத்தி கணிச்சார்ன்னு இப்போ நெனைக்கிறப்போ கூட ஆச்சரியமாத்தாம் இருக்கு. இதெ கொஞ்சம் முங்கூட்டி கலியாணம் நடக்குறப்பவே கணிச்சிருந்தார்ன்னா ரொம்ப நல்லா இருந்திருக்கும். என்னத்தெப் பண்ணுறது? மண்டெ முடியெல்லாம் கொட்டுன்ன பெற்பாடுதாங் சீப்பு வாங்க காசி வந்து சேருது மனுஷம் கையில.

            பாலாமணி வந்துட்டுப் போன இந்தச் சம்பவத்துக்கு இடையில சரசு ஆத்தா தொரக்குடி கோயிலுக்கு வந்துட்டு ஏதோ வேண்டிட்டுப் போனதாவும் ஒரு சங்கதி தெரிய வந்துச்சு. பாக்குக்கோட்டையிலேந்து வடவாதி முருகு மாமா வூட்டுக்கு வந்து அப்பிடியே ஆட்டோவ எடுத்துக்கிட்டுத் தொரக்குடி போனதா தகவல். வடவாதியிலேந்து தொரக்குடி போறதுன்னா திட்டை வழியாத்தாம் போவணும். அப்பிடிப் போற வழியில மருமவ்வே எப்பிடி இருக்கான்னு ஒரு பார்வெ பாத்துட்டுப் போவக் கூடாதான்னு வெங்கு நெனைச்சி நெனைச்சி அதெப் பத்தி சொல்லிக்கிட்டுக் கெடந்துச்சு. "அந்தப் பயலுவோளு அழைச்சிட்டுப் பேறா நெனைப்பு கெடையாதுடாம்பீ! ச்சும்மா நாம்மப் போயி அழைச்சேம். அவ்வேம் வூட்டுல அனுப்புலங்றதுக்குக் கதெ கட்டி வுடுறதுக்குப் பண்ணுறானுவோடாம்பீ! அவனுவோளா கழட்டிக்கிட்டதா தெரியக் கூடாதுன்னு, நாமளா கழண்டுக்கிடணும்ன்னு திட்டம் பண்ணி வேலையப் பாக்குதானுவோ! நாம்ம கூப்புட்டுக் கூப்புட்டுப் பாத்தேம். அவுக அனுப்பவே யில்லன்னு பேர்ர பண்ணப் பாக்குறானுவோ படவா ராஸ்கோலுக! அதுக்காகத்தாம் நாமளும் அவனுவோ மாரியே அனுப்புறேம் அனுப்புறேம்ன்னு பேசிட்டு இருக்கேம்|"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            அவரு அப்பிடிச் சொல்லி ரண்டு நாளு ஆவல. ஒரு நாளு பொழுது மசங்குற நேரத்துல ஆட்டோவுல லாலு மாமா, லாலு மாமவோட பொண்ணு ஈஸ்வரி, முருகு மாமான்னு மூணு பேத்தும் வந்து எறங்குனுச்சுங்க. வேக வேகமா வந்து எறங்கி வூட்டுக்குள்ள தடாலடியா நொழைஞ்சதுங்க. அவுங்களக் கூப்புட்டு உக்கார வெச்சாம் விகடு. ஒவ்வொண்ணும் மூஞ்சே முறுக்கிக்கிட்டு உக்காந்திருச்சுங்க. பார்வையிலயே சண்டெ போடுறதுக்கு அச்சாரம் போட்டதெ போல இருந்துச்சு. அத்தோட டிவியெஸ்ஸூ எக்செல்ல தனியா பஞ்சு மாமாவோட மவ்வேம் ஆனந்தனும் வந்து உக்காந்தாம்.

            அதுல லாலு மாமா மட்டும், "நாம்ம ஒண்ணும் உக்கார வாரலடா?"ன்னு வீறாப்பா நின்னுச்சு. செரித்தாம் நின்னுத் தொலைன்னு வுட்டுத் தொலைச்சிட்டாம் விகடு. அதுக்குள்ள வூட்டுச் சனங்க எல்லாமும் கூடத்துல வந்து குமிஞ்சதுங்க.

            "ன்னா நெனைச்சிக்கிட்டு இருக்குறே நீயி? குடும்பம் நடத்த வேண்டிய பொண்ண நீயிப் பாட்டுக்குக் கொண்டாந்து வெச்சிட்டீன்னா ன்னா அர்த்தம்? அழைச்சிக் கொண்டாந்த நீயித்தாம் அழைச்சிக் கொண்டுப் போயி வுடணும். ஒம்மடப் பொண்ண வாழ வெக்கணும்ன்னு ஆசெ இருக்கா? யில்ல வாழாவெட்டியா வூட்டுல வெச்சிக்கணும்ன்னு நெனைப்பு இருக்கா?"ன்னுச்சு லாலு மாமா.

            "அப்பிடில்லாம் யில்ல மாமா! ஒடம்புக்குக் கொஞ்சம் மிடியலன்னு கொண்டாந்ததுதாம். ஒடம்பு கொஞ்சம் சரியானதும் கொண்டாந்து வுட்டுப்புடுறேம்!"ன்னுச்சு வெங்கு.

            "நீயி ன்னா டாக்கடர்ரா? ஒடம்புக்கு மிடியலன்னா வூட்டுக்குக் கொண்டு வந்துப் பாக்க? ஒம்மட வூடு ன்னா ஆஸ்பிட்டல்லா கேக்குறேம்? அறிவுக்கெட்ட தனமா பேசுனீன்னா நமக்குக் கெட்ட கோவம் வந்துப்புடும் பாரு. அவ்வேம் புருஷம் ஒரு டாக்கடரு. அவனுக்குத் தெரியாத வைத்தியமா? அவ்வேம் பாத்துக்கிட மாட்டானா? அவ்வேங்கிட்டெ எத்தனெ பேரு வைத்தியம் பாக்க வரிசெயில நிக்காம் தெரியுமா? நீஞ்ஞ யிப்பிடிப் பொண்ணக் கொண்டாந்து வெச்சி ஒடம்ப சரி பண்ணுறேன்னு சொல்லி அவனெ அசிங்கம் பண்ணுதீயளா?"ன்னுச்சு லாலு மாமா.

            "இந்தாரு மாமா! நாஞ்ஞ அனுப்பு முடியாதுன்னுல்லாம் சொல்லல. எப்ப வாணாலும் அனுப்புதேம்ன்னுத்தாம் சொல்லுதேம்!"ன்னுச்சு வெங்கு.

            "யப்பிடின்னா யிப்பவோ யின்னிக்கே அனுப்பு!"ன்னுச்சு லாலு மாமா.

            "அனுப்புறதெப் பத்தி ஒண்ணுமில்ல. மாப்ளே வர்றதா சொல்லி, வந்து அழைச்சிட்டுப் போறதா சொல்லி ரொம்ப நாளா ஆயிடுச்சே. ஏம் வந்து அழைச்சிட்டுப் போவலன்னு காரணத்தெ சொன்னா அனுப்பி வுடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இப்போ.

            "அவனுக்குப் பல சோலிங்க. வர்ற முடியாம இருந்திருக்கும். டாக்கடர்ரா இருக்காம்ல!"ன்னுச்சு லாலு மாமா.

            "இருக்கட்டும். அதெயும் ஒத்துக்கிடறேம். அதெ ஒரு போன் பண்ணிச் சொன்னா என்னத்தெ கொறைஞ்சிப் போயிடுதுன்னு கேக்குதேம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இந்தாரு வெங்கு! நீயி ஒம் பொண்ண அனுப்பக் கூடாதுன்னு ஒம்மட வூட்டுக்காரரோட முடிவெப் பண்ணிருந்தா அதுக்கு நாம்ம ஒண்ணுத்தையும் பண்ண முடியா. இத்தெல்லாம் நல்லா யில்ல பாத்துக்கோ. நமக்கொண்ணும் அவ்சியமில்லே யிப்பிடி ஒம்மட வூட்டுல வந்து உக்காந்துட்டுப் பேசிட்டு இருக்கணும்ன்னு. எல்லாம் ஒம்மட பொண்ணு நல்லதுக்காகத்தாம் செஞ்சிட்டு இருக்கேம்ங்றதெ புரிஞ்சிக்கோ!"ன்னுச்சு ஈஸ்வரி.

            "யம்மாடி நாம்ம ஒண்ணும் அனுப்பலன்னு சொல்லடியம்மா! ஒடம்புக்கு முடியல, இஞ்ஞ ஒரு வேலன்னுத்தாம் அழைச்சாந்தேம்!"ன்னுச்சு வெங்கு.

            "யிப்போ ஒடம்பு சரியாயிட்டுல்ல. வேல முடிஞ்சிட்டுல்ல. அனுப்பு வைக்குறதுக்கு ன்னா?"ன்னுச்சு அதெ கேட்டுப்புட்டு ஈஸ்வரி. அது அப்படி பேசி முடிக்கல, ஒடனே, "ன்னா மசுத்துக்கு நீயி வந்து எம்மட வூட்டுப் பொண்ண வந்து அழைச்சிட்டு வந்தே? எந்த மசுரு ஊர்ல மாமியாக்காரிப் போயி மாப்ள வூட்டுல உக்காந்திருக்கா? இந்த அதிசய மசுருல்லாம் இஞ்ஞத்தாம் நடக்குது!"ன்னுச்சு முருகு மாமா.

            "இந்த மசுரு கிசுருன்னு பேசுற பேச்செல்லாம் இஞ்ஞப் பேசக் கூடாது. ஒழுங்கு மருவாதியாப் பேசணும் யார்ர யிருந்தாலும்! பேச வந்திருக்கிறதப் பாத்ததா சமாதானம் பேச வந்தாப்புல தெரியல. சண்டெய வளக்க வந்தாப்புலத்தாம் தெரியுது. நீஞ்ஞ பேசுற ஒவ்வொரு பேச்சப் பாக்குறப்ப பொண்ண அழைக்கவே நீஞ்ஞ வாரல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெகுண்டாப்புல. விகடுவுக்கும் முருகு மாமா பேசுனதெ எரிச்சலா இருந்துச்சு. அவனும் "பெரியவங்க பெரியவங்க மாதிரிக்கிப் பேசுனா நல்லா இருக்கும்!"ன்னாம்.

            "யிந்தாரு வெங்கு! நீயி ஒம் பொண்ண வெச்சிக்கிடணும்ன்னா தாராளமா வெச்சிக்கோ. அதுக்கி மின்னாடி அதெ அத்து வுட்டுட்டு வெச்சிக்கோ. அதெ வுட்டுப்புட்டு நீயிப் பாட்டுக்குக் கொண்டாந்து வெச்சிக்கிட்டீன்னா ன்னா அர்த்தம்?"ன்னுச்சு ஈஸ்வரி.

            "யிப்பதாம்டி தெரியுது நீயி எதுக்குப் பேச வந்திருக்கேன்னு? இம்புட்டு நேரமா அதெச் சொல்லத்தாம் வெத வெதமா சுத்திட்டுப் பேசிட்டு நின்னீயா?"ன்னுச்சு வெங்கு.

            "இந்த மசுருப் பயெ வூட்டுல நமக்கு என்னத்தெப் பேச்சுங்றேம். இதெ எஞ்ஞ வெச்சி பேசி நாறடிக்கணுமோ அஞ்ஞ வெச்சிப் பேசுனா எல்லா வழிக்கு வந்துப்புடும்!"ன்னு பேசிட்டு ஆவேசமா வெளியில கெளம்புனுச்சு முருகு மாமா.

            "பஞ்சாயத்தெ வெச்சி மானத்த வாங்குனாத்தாம் இந்த ஆளும், இந்தக் குடும்பமும் செரிபட்டு வரும். அதெ செய்யாம மொறெ வெச்சிப் பேச வந்தேம் பாரு. அதாங் தப்பு!"ன்னு சத்தத்தெப் போட்டுட்டு லாலு மாமாவும் தாம்தூம்ன்னு குதிச்சிக்கிட்டெ வெளியில கெளம்புனுச்சு.

            "இந்தாரு வெங்கு! நீயிப் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லாயில்ல. நீயே ஒம்மட பொண்ணு வாழ்க்கெயெ கெடுத்துட்டு இருக்கே. ஆயால கெட்டா பொண்ணுன்னு பேர்ரு வருதா இல்லியான்னுப் பாரு!"ன்னு சொல்லிட்டு ஈஸ்வரியும் வெளியில கெளம்புனுச்சு. எல்லாம் வேக வேகமாப் போயி ஆட்டோவுல ஏறி கெளம்புனுச்சுங்க. எல்லாரும் கெளம்புன பெற்பாடு ஒண்ணும் பேயாம வந்து அமைதியா உக்காந்திருந்த ஆனந்தனும் கெளம்பிப் போயி வண்டிய எடுத்தாம். எல்லாத்துக்கும் கெளம்பிப் போறதெ தடுத்து நிறுத்திப் பேசுவாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் போல. சுப்பு வாத்தியாரு குடும்பத்துலேந்து யாரும் பேச்சுக்குக் கூட நில்லுங்கன்னு சொல்லாததால இன்னும் வேகமாயி கெளம்பிப் போனுச்சுங்க.

            அந்தச் சனங்க எல்லாரும் போன பிற்பாடு ஆயி வெங்குவக் கேட்டா, "ன்னா யத்தே! அந்தப் பொண்ணு ஈஸ்வரி ஒஞ்ஞளோட வயசு ரொம்ப கம்மி. எம் மின்னாடியே ஒஞ்ஞள பேர்ரச் சொல்லிச் சொல்லிப் பேசுது. நமக்குக் கோவம் கோவமா வந்துச்சு யத்தே!"ன்னுச்சு.

            "ஆம்மா இதெப் போயி நீயிக் கேளு. நீயி ஒரு ஆளு. எல்லாம் ஆட்டோவுல வந்துட்டுப் போற அக்கப்போருக!"ன்னாரு சலிப்பா சுப்பு வாத்தியாரு ஆயியப் பாத்து.

            "அவ்வேம் குடும்பத்துலேந்து யாரும் நம்பள மதிக்க மாட்டானுவோ யங்கச்சி! யிப்பிடித்தாம் பேர்ரச் சொல்லிக் கூப்புடுவானுவோ. வாண்டுகளா வளர்றப்பயிலேந்து பண்ணுன பழக்கம். மாறுமா சொல்லு?"ன்னுச்சு வெங்கு.

            ஆவேசமா பேசிட்டுக் கெளம்பிப் போன அவுங்க மறுநாளே திட்டெ கிராமப் பஞ்சாயத்துல மனு ஒண்ணு கொடுத்தாங்க.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...