13 Oct 2020

நாயிக்கு ஊத்துற கஞ்சியில கொஞ்சம் ஊத்து!

நாயிக்கு ஊத்துற கஞ்சியில கொஞ்சம் ஊத்து!

செய்யு - 593

            தினசரித் தாள்ல எவ்வளவோ நாரசமானதப் பத்தின சேதிங்க வருதுதாம். அதெல்லாம் ஒட்டுமொத்தமாச் சேந்தாப்புல நம்ம சொந்தத்துல நடக்கும்ன்னு எதிர்பாக்கல விகடு. செய்யு சொன்ன கதெ வூடு முழுக்க எல்லாருக்கும் தெரிஞ்ச பெற்பாடு இதுக்கு மேல பொண்ண என்னத்தெ அனுப்புறதுங்ற பயம் எல்லாத்துக்கும் வந்துடுச்சு. கலியாணம் ஆயி நாலு மாசம் கூட முடியாத நெலையில இத்தனையும் நடக்குணுமான்னு எல்லாத்துக்கும் அலமலப்பா இருந்துச்சு. பொண்ண எத்தனெ நாளு இப்பிடியே வூட்டுல வெச்சிக்க முடியும்? அனுப்பி வுடுறதுன்னாலும் அதெயும் எப்பிடிச் செய்ய முடியும்? ஒட்டுமொத்த குடும்பமே இப்போ சுப்பு வாத்தியாரு எடுக்கப் போற முடிவுக்காகக் காத்துகிட்டு இருந்துச்சு.

            சுப்பு வாத்தியாருக்கு மின்னாடி ரண்டு வெதமான கேள்விங்க நின்னுச்சு. ஒண்ணு வாழ வைக்கிறதா? இல்லன்னா இத்தோட அத்து வுடுறதா? ஆமா அல்லது இல்லங்றதுதாம் அந்தக் கேள்விக்கான பதிலுங்க. அரசாங்க வேலைக்கான பரீட்சையில கேக்குறாப்புல நால்ல ஒண்ண தேர்ந்தெடுக்குற கஷ்டத்த கூட கொடுக்காம காலம் ரண்டே ரண்டு பதிலேந்து ஒண்ணுத்த மட்டுந்தாம் தேர்ந்‍தெடுக்கச் சொன்னிச்சு. வாழ வைக்குறதுன்னு முடிவெடுத்தா பொண்ணோ உசுருக்கு ன்னா உத்திரவாதம்ன்னு யோஜிக்க ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. ஒருவேள பொண்ணு கலியாணமாயி வாழாமப் போனாலும் தன்னோட பொண்ணுங்ற அளவுக்காகவது உசுரோட இருக்கும். கலியாணம் பண்ணியாச்சுங்றதுக்காக பாலாமணியோடப் பொண்டாட்டின்னு அனுப்பி வெச்சா நிச்சயமா பொணமாத்தாம் திரும்புவாங்றதுல சுப்பு வாத்தியாரு இப்போ நடந்த சம்பவங்கள கேள்விபட்ட பெறவு தெளிவா இருந்தாரு. அப்பிடி ஒருவேள நடக்கலன்னாலும் தன்னோட பொண்ண பைத்தியக்காரியாக்கிக் கொண்டாந்து தன்னோட தலையில கட்டிப்புடுவான்னு நெனைச்சாரு. அப்பிடி பைத்தியக்காரியாக்கி நம்மட தலையிலத்தாம் கட்டுவானுவோன்னும் நிச்சயம் கெடையாது. கேரளாவுக்குக் கொண்டுப் போயி எங்காச்சும் ஒரு ஆஸ்பத்திரியில சேத்து வுட்டுட்டு கண்டும் காணாம வந்தாலும் வந்ததுதாம். பெறவு பொண்ண சென்மத்துக்கும் பாக்க முடியாதுன்னு அவரோட நெனைப்பு வெத வெதமாப் போனுச்சு.

எந்தப் பாவத்துக்கும் அஞ்சாத பாவியோத்தாம் பாக்குக்கோட்டையானுவோ. அவனுகளுக்கு ன்னா இந்தப் பொண்ணு போனா இன்னொரு பொண்ணுன்னு அடுத்தப் பொண்ணத் தேடி கலியாணங் காட்சிய முடிச்சிட்டுப் போயிட்டே இருப்பானுவோ. ஆக பொண்ணு நமக்கு வேணும்ன்னா, அத்து உசுரோட இருக்கணும்ன்னா வேற வழியில்ல, நம்ம கூடத்தாம் வெச்சிருந்து ஆவணும்ங்றது சுப்பு வாத்தியாருக்குப் புரிஞ்சது.

            மவனெ கூப்புட்டு சுப்பு வாத்தியாரு ஒரு கேள்வியக் கேட்டாரு, "ஏம்டாம்பீ! வூட்டுல ஒரு நாயெ வளத்தா அதுக்குப் பொங்கற சோத்துல கொஞ்சம் போட்டுட மாட்டீயாடாம்பீ?"ன்னு. ஏம் அப்பிடி அப்பங்காரரு திடுதிப்புன்னு இப்பிடிக் கேக்குறார்ன்னு நெனைச்ச விகடு, "ஏம்ப்பா திடிர்ன்னு இப்பிடி?"ன்னாம். "அதுக்கில்லடாம்பீ! அப்பிடி நெனைச்சிக்கிட்டு கடெசீ வரைக்கும் ஒந் தங்காச்சிக்குக கொஞ்சம் வடிச்சிக் கஞ்சியில ஊத்திப் போடு. ஏத்தோ உசுரப் பிடிச்சிக்கிட்டு கடெசீ வரைக்கும் ஒரு நாயேப் போல நம்ம வூட்டுலயே கெடந்துட்டுப் போவட்டும். அவ்வேங்கிட்ட இனுமே அனுப்பி பொண்ணு உசுரோட திரும்புங்றதெ நம்பிக்கையெ நாம்ம எழந்திட்டோம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதெ சொல்றப்ப அவரோட கொரலு ஒடைஞ்சிப் போயி ஒரு கேவல் வெடிச்சிக் கௌம்புனுச்சு. அதெ கேக்க விகடுவுக்குக் கண்ணுலேந்து தண்ணித் தண்ணியா வந்துச்சு. "ன்னப்பா இப்பிடிச் சொல்லிப்புட்டீயே? வூட்டுல நெதம் வடிக்குற சோத்துலயே எவ்வளவோ மிஞ்சுது. இதுக்கு ஏம்ப்பா நாயிக்கு ஊத்துற கஞ்சிய எல்லாம் இழுத்து வெச்சிப் பேசுதீயே?"ன்னாம்.

            "மனுஷம் மனசு சரியிருந்தாத்தாம் தாம் தன்னோட துணிமணியத் தொவைச்சிக்கிட்டு, தன்னோட சூத்த அலம்பிக்கிட்டாவது நடமாடிட்டு இருக்க முடியும். மனசு சரியில்லாமப் போயி மனநெல பாதிச்சிட்டுன்னு வெச்சிக்கோ, பெறவு நாம்மத்தாம்டாம்பீ சொமக்க வேண்டிக் கெடக்கும். எத்தனெ நாளு சொமக்க முடியும் சொல்லு! அத்துவும் பொம்பளெ புள்ளே! ஆம்பளெ புள்ளன்னாலும் செரித்தாம் போ பைத்தியமா சட்டையக் கிழிச்சிக்கிட்டுப் போயி தெருவுல கெடன்னு வுட்டுப்புடலாம். பொம்பளப் புள்ளைய அப்பிடி எப்பிடாம்பீ வுட முடியும் சொல்லு. அதாலத்தாம்டாம்பீ சொல்லுதேம். இப்ப நல்ல நெனவுல்லாம் இருக்கு. கொஞ்சமாத்தாம் புத்தி பெசவுனாப்புல தெரியுது. கொஞ்சம் மெனக்கெட்டேம்ன்னா இதெ சரிபண்ணிப்புடலாம். அவ்வேங்கிட்டெ அனுப்புனா இன்னும் மனச்சோர்வும், மனஅழுத்தமும் அதிகமாயி மனநலம் பாதிக்கப்பட்டு போயிடுவா ஒந் தங்காச்சி. பெறவு அடிச்சாலும் புடிச்சாலும் வாராது. அந்தப் பயலும் ரொம்ப சுலுவா மனநலம் பாதிக்கப்பட்டுப் போச்சு மனைவிக்குன்னு வெவாகரத்த வாங்கிட்டுப் போயிட்டே யிருந்தாலும் இருப்பாம். அந்த நெலையில ஒரு பொம்பளப் புள்ளயெ வெச்சி யாராலும் சொமக்க முடியாது. ரொம்ப செருமமாப் போயிடும். அதால புத்திப் பெசாகாக இருக்குற இந்த நெலையிலயே இவளெ வெச்சிக் காபந்துப் பண்ணிப்புடணும். ஆன்னா ஊருல நாலு பேத்து நாலு வெதமாத்தாம் பேசுவாம். அதெ பாத்தேம்ன்னா வெச்சுக்கோ அதெ விட பேரு ரொம்ப நாறிப் போயிடும். அதாலத்தாம் சொல்லுதேம் தங்காச்சிய இஞ்ஞயே இருந்துட்டுப் போவட்டும். அதாங் செரியான முடிவு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஏம்ப்பா அவனுவோ வந்து எஞ்ஞ வூட்டுப் பொண்ண அனுப்பி வுடுன்னு கேட்டாக்கா என்னத்தெ பண்ணுறது?"ன்னாம் விகடு.

            "அதெ கேக்குறப்ப பாத்துக்கிடுவேம். நிச்சயம் கழிச்சிக் கட்டத்தாம் பாப்பானுவோ. அதெ நேரடியா பண்ணாம அழைச்சிட்டுப் போறேம் அனுப்பி வையுங்கன்னு வெளிப்பார்வைக்குத் தெரியுறாப்புல பண்ணிக்கிட்டு நாம்ம அனுப்பி வுடாம இருக்கு என்னனென்ன செஞ்சி வைக்கணுமோ அத்தனையும் செஞ்சி வைப்பானுவோ. அதால ‍அதெப் பத்தி நாம்ம ஒண்ணும் கவலெப்பட வேண்டியதில்லா! நாமளா வெட்டி வுட்டாப்புல ஒரு காரியத்தெ என்னிக்கும் செய்ய மாட்டேம்! அதெ போல அந்தப் பயலுவோளோட அனுப்பி வைக்குற காரியத்தையும் ஒரு போதும் பண்ண மாட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            தெனந்தோறும் இதெப் பத்தியே பல வெதமா யோசிக்கிறதும், பேசிக்கிறதும்ன்னு ஒரு மாச காலம் ஓடிட்டு இருந்துச்சு. இதுக்கு இடையில பாலாமணிதாம் செய்யுவுக்குப் போன அடிச்சி சம்பந்தம் சம்பந்தம் யில்லாம ஒளறிக்கிட்டு இருந்தாம். எல்லாம் செய்யுவோட தப்புதான்னும், அவ்வேம் ரொம்ப சரியாத்தாம் போவுறதாவும் சொன்னாம். இதுக்கு இடையில ராசாமணி தாத்தாவும் விகடுவுக்குப் போன அடிச்சி, "அழைச்சிட்டுப் போன தங்காச்சிய என்னிக்குக் கொண்டாந்து வுடுறே? அழைச்சிட்டுப் போனது நீயி! அதால நீயாத்தாம் கொண்டாந்து வுடணும். நாம்மல்லாம் வந்து அழைச்சிட்டுப் போவ மாட்டேம்!"ன்னு அடிச்சிச் சொன்னுச்சு.

            அதுக்கு விகடுவும் வெட்டி வுடுறாப்புல பதிலெச் சொல்லல. "கொஞ்சம் யிப்போ ஒடம்புக்கு மிடியல தாத்தா. ஒடம்பெல்லாம் சரியாவட்டும் ரண்டு மூணு மாசம் கழிச்சிக் கொண்டாந்து வுடுறேம்!"ன்னாம்.

            "மூணு மாசம் யில்ல. முப்பது வருஷம் ஆனாலும் நீயே வெச்சுக்க. அதெப் பத்தி நமக்கு ஒண்ணுமில்ல. அழைச்சாந்துப் போன நீயி கூடிய சீக்கிரமே கொண்டாந்து வுடுறதுதாம் ஒமக்கு நல்லது. எம்மாம் நீயி தாமசம் பண்ணுதீயே அந்த அளவுக்கு ஒந் தங்காச்சியா நீயி அவளெ ஒம்மட வூட்டுலயே வெச்சிக்கிடுற மாதிரி ஆவுமே தவுர எம் மவ்வேனுக்குப் பொண்டாட்டியா நீயி நெனைக்குறப்ப கொண்டாந்து நிப்பாட்டிப் புடலாம்ன்னு நெனைச்சிக்கிட்டு இருக்காதே! இஞ்ஞ இருந்தாத்தாம் ஒந் தங்காச்சி எம் மவனுக்குப் பொண்டாட்டி. அஞ்ஞ இருந்தான்னா வெச்சுக்கோ அவளுக்குப் பேரு பொண்டாட்டி யில்ல, வாழாவெட்டிப் பாத்துக்கோ"ன்னு ராசாமணி தாத்தா சொன்னதும் விகடு சட்டுன்னு பேசிட்டு இருந்த போனைக் கட் பண்ணாம். விகடுவுக்குக் கோவம் கோவமா வந்துச்சு. போனை டக்குன்னு கட் பண்ணதும் ராசாமணி தாத்தா திரும்ப திரும்ப போன அடிச்சிது. இவனும் திரும்ப திரும்ப கட் பண்ணாம். ராசாமணி தாத்தா திரும்ப திரும்ப அடிச்சி வெறுத்துப் போவுற அளவுக்கு கட் பண்ணிட்டே இருந்தாம் விகடு. அடுத்தடுத்த நாள்கள்லயும் ராசாமணி தாத்தா விகடுவுக்குப் போன அடிச்சிட்டெ கெடந்துச்சு. விகடு போன எடுக்கவே யில்ல. என்னா ஆனாலும் செரித்தாம், ஒரு வயசான மனுஷன் எப்போ வாழ வைக்கணும்ங்ற நெனைப்பு யில்லாம பேசுனானோன்னோ அன்னிலேந்து அவ்வேம் பேசுற போனையெல்லாம் எடுக்கக் கூடாதுங்ற முடிவுக்கு வந்திருந்தாம் விகடு. அத்தோட அப்பங்காரரு எடுத்த முடிவு அவனோட மனசுல ஆணியப் போல பதிஞ்சிருந்துச்சு. என்னா நடந்தாலும் நடக்கட்டும், அதெயும் ஒரு பார்வெ பாப்பேம்ங்ற முடிவுக்கு வந்தாம்.

            இந்தப் போனுக்குப் பெறவு ஒரு வாரம் கழிச்சி ஒரு ஞாயித்துக் கெழமெ மத்தியானமா பாலாமணி போன அடிச்சாம் விகடுவுக்கு. அவ்வேம் சுந்தரி வூட்டுக்கு வந்திருக்கிறதாவும், செய்யுவப் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கறதாவும், கொஞ்சம் கொண்டாந்து வுடுன்னும் சொன்னாம். விகடு போன்லயே அதுக்கு சில கேள்விகளக் கேட்டாம், "வடவாதியிலேந்து திட்டை எம்மாம் தூரம்? வந்துட்டுப் பாத்துட்டுப் போறதுல ன்னா செருமம்ன்னு தெரியலயே. நீஞ்ஞ தாலி கட்டுன பொண்டாட்டி. ஒடம்புக்கும் மனசுக்கும் முடியாம கெடக்கறா. மனசுல பாக்கணும்ன்னு எண்ணம் இருந்தா வந்துப் பாத்துட்டுப் போங்க. இல்லாட்டி ஒஞ்ஞ வழியப் பாத்துட்டு வந்த வழியே போஞ்ஞ. நாம்ம இஞ்ஞ கொஞ்சம் வேலையா இருக்கேம். யிப்போ கொண்டாந்து வுடல்லாம் நேரமில்ல!"ன்னாம் விகடு. அவ்வளவுதாம் போன வெச்சிட்டாம்.

            கொஞ்ச நேரம் கழிச்சி பாலாமணி போன அடிச்சாம். "நாம்ம வூட்டுக்கு வர்றதப் பத்தி ஒண்ணுமில்லே. ஆன்னா யாரும் நம்மள எதுவும் சொல்லிடக் கூடாது. அதுக்குப் பயந்துதாங் நாம்ம வரலேன்னோம். ஒருவேள நாம்ம வந்து யாராச்சும் எதாச்சும் சொன்னாக்க வெச்சுக்கோ பெறவு நாம்ம எதுவும் சொல்ல மாட்டேம். நாம்ம பாட்டுக்கு எழுந்து வந்துப்புடுவேம். அத்தோட நாம்ம அஞ்ஞ வந்த கடெசீப் பயணமா அதுவாத்தாம் இருக்கும்!"ன்னாம் பாலாமணி.

            "தாராளமா வாஞ்ஞ! ஒஞ்ஞ பொண்டாட்டியத்தானே பாக்க வாரீயே? அப்பிடி யாராச்சும் எதாச்சும் சொன்னா அதெ நாம்ம பாத்துக்கிடுறேம். நீஞ்ஞ கலியாணம் ஆனதிலேந்து இஞ்ஞ வாரதே யில்லன்னுத்தாம் கொறையா இருக்கு!"ன்னாம் விகடு.

            "இத்தோ யிப்பவே வர்றேம்!"ன்னாம் பாலாமணி.

            "எப்ப வாணாலும் வரலாம். வூடு தொறந்துதாம் இருக்கு. யாரும் வெளியில ரண்டு கேட்டப் பூட்டி, உள்ள உள்கதவெ பூட்டி வெச்சிக்கிட்டு உள்ளார உக்காந்திருக்கல!"ன்னாம் விகடு.

            "மச்சாம் கோவத்துல இருக்குறாப்புல. நாம்ம வந்து சில உண்மைகளச் சொல்றேம்!"ன்னாம் பாலாமணி.

            "வர்லாம்! வர்லறாம்! வூட்டுலத்தாம் இருக்கேம்!"ன்னாம் விகடு.

            ஒரு பத்து நிமிஷத்துல பாலாமணி ஒரு பழைய ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர்ல வந்து எறங்குனாம். பின்னாடி சுந்தரியோட மவ்வனெ பிடிச்சிப் போட்டுட்டு வந்தாம். அவ்வேம் பேண்ட், சட்டையெல்லாம் போட்டுகிட்டு டக் இன் பண்ணிட்டுத்தாம் வந்தாம். ஆனா விகடுவுக்குத்தாம் அவ்வேம் என்னவோ பொடவெ கட்டிட்டு வர்றதாப் பட்டுச்சு. வந்தவனெ கூப்புட்டு நடுக்கூடத்துல உக்கார வெச்சானுச்சு. மத்தியான நேரமா இருந்ததால தண்ணியக் கொடுத்துச் சாப்புட சொன்னா, சுந்தரியோட வூட்டுலயே சாப்புட்டு வந்ததாவும், யிப்போ சாப்புட மாட்டேம்ன்னாம் பாலாமணி. செரின்னு டீத்தண்ணியப் போட்டுக் கொண்டாந்து, ஒரு தட்டுல கொஞ்சம் பிஸ்கோத்துகளக் கொண்டாந்து வெச்சு ஆனுச்சு. வூட்டுல எல்லாரும் யிப்போ நடுக்கூடத்துல வந்தாங்க.

            "ன்னா இருந்தாலும் நீஞ்ஞப் பண்ணுறது தப்பு! பொண்ண அழைச்சாந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுது. யின்னும் கொண்டாந்து வுடலயே. நம்ம மேல எதாச்சும் கோவம் யிருந்தா பேசித் தீத்துக்கிடலாம்!"ன்னாம் பாலாமணி ரொம்ப நேரடியா ரொம்ப நல்லவனெப் போல.

            "கொண்டாந்து வுடக் கூடாதுன்னுல்லாம் யில்ல. பொண்ணுக்கு ஒடம்புக்குச் சரியில்ல. அதெ சொன்னாலும்தாம் பொண்டாட்டிக்கு இப்படியான்னு துடிச்சிட்டு வந்துப் பாக்குற புருஷங்கார்ரனாப் பாத்து நாம்ம நம்மட பொண்ணுக்குக் கட்டி வைக்கலீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "மாமா! அப்பிடில்லாம் பேயக் கூடாது. அப்பிடில்லாம் மாமா பேயக் கூடாது!"ன்னு எழும்பி வந்து பாலாமணி சுப்பு வாத்தியாரோட வாயப் பொத்துனாம்.

            "வேற நாம்ம எப்பிடிப் பேசுறது? பொண்ணு தூக்குல தொங்குனா. பாக்க வரலே. நாமளும் யிப்போ வார வாணாம்ன்னு சொன்னேம் செரித்தாம். இஞ்ஞ சுந்தரிப் பொண்ணுக்கு பொறந்த நாளுன்னா யப்போ கூட வடவாதி வரைக்கும் வந்துட்டு இஞ்ஞ வந்துட்டுப் போவக் கூடாதோ? நாஞ்ஞத்தாம் அஞ்ஞ அழைச்சாந்து வுடணுமோ? செரி அழைச்சாந்து வுடுறேம். குடும்பத்துக்குள்ள எப்பிடி யிருக்கு? வம்பும் சண்டையுமா இருக்குல்லா. அப்பிடி இருக்குறப்போ இதெ சாக்கா வெச்சி ரண்டு குடும்பத்தையும் வார வெச்சு சேத்துல்லா வைக்கணும். என்னவோ நாமளும் வர்றேம், எம் மவ்வேனும் வர்றேம் கொண்டாந்து வுட, அழைச்சிட்டு வாரன்னு. ஒருத்தரும் நம்மள ஒண்ணுத்தையுமே கேக்கலயே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம இஞ்ஞ வாரலன்னா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு. அதுல ஒண்ணுத்துக்குக் கூட ஒஞ்ஞளால பதிலச் சொல்ல முடியாது. ஏன்னா நாம்ம எல்லாத்தையும் ஆதாரத்தோடத்தாம் பேசுவேம். மொட்டையா எதையும் பேச மாட்டேம்!"ன்னு சொல்லி நிறுத்துனாம் பாலாமணி.

            "ஆயிரம் காரணத்துல ஒண்ணுத்தெ சொல்லலாமே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இஞ்ஞ மெயின் ரோட்டுல லஸ்கரு செல்வராசு இருக்காரா இல்லியா?"ன்னாம் பாலாமணி.

            "ஆம்மாம் இருக்காரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அவரோட பேசுறது உண்டா? இல்லியா?"ன்னாம் பாலாமணி.

            "எப்பவாச்சும் பாக்குறப்போ பேசுறதுதாங். ன்னா வாத்தியாரேன்னா ன்னா, ஏம் வாத்தியாரேன்னா ஏம்?"அவ்வளவுதாங் பேச்சு. அவர்ரப் பாத்தும் ரண்டு மூணு மாசத்துக்கு மேல ஆச்சிது. கலியணத்தப்போ பாத்ததுதாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "லஸ்கரு செல்வராசுகிட்டெ எந் தங்காச்சிக் குடும்பத்தெ பத்தி யில்லாததையும், பொல்லாததையும் மாமா சொன்னதுண்டா? யில்லியா? யில்லன்னு மட்டும் பொய்யச் சொல்ல வாண்டாம். ஏன்னா இதெ லஸ்கர்ரு செல்வராசுவே எந் தங்காச்சி வூட்டுக்கு வந்து நீஞ்ஞ கண்டமேனிக்கு சகட்டுமேனிக்குப் பேசுனதா அஞ்ஞ சித்துகிட்டெ சொல்லிருக்காரு. இதெ மறுக்க முடியுமா? எந் தங்காச்சி வூட்டப் பத்தி கேவலமா பேசிட்டு, பெறவு அதெ தங்காச்சி வூட்டுக்கு ஒஞ்ஞள அழைக்கலன்னா கேட்டாக்கா எப்பிடி? மொறைப்படி நாம்ம கோவப்பட்டு ஒஞ்ஞ மேல கேள்வி கேட்டுருக்கணும். இஞ்ஞ எல்லாம் மாறி நடக்குது!"ன்னு சொல்லிட்டு எதையோ ஜெயித்திட்டவேம் போல ஒரு வெத்துச் சிரிப்ப சிரிச்சாம் பாலாமணி.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...